Saturday, October 30, 2021

தலிபான் பொதுமக்கள் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டது

 The Taliban have failed to protect civilian lives


ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான்  புதன்கிழமையன்று ஆப்கானிஸ்தான் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஈரானின் பல-நிலை முன்மொழிவை விவரித்தார், இதில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது, பாதுகாப்பு தொடர்பான தலிபானின் பொறுப்புகள் மற்றும் நாட்டில் மனிதாபிமான உதவிகள் விநியோகம் ஆகியவை அடங்கும்.  

தெஹ்ரானில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டாவது கூட்டத்தில் பேசிய அமிர் அப்துல்லாஹியான், இந்த சந்திப்பு பாகிஸ்தானினால் முன்மொழியப்பட்ட முயற்சியின் இரண்டாவது நாவடிக்கை என்று கூறினார்.

தற்போதைய சந்திப்பு ஆப்கானிஸ்தான் தொடர்பான உண்மைகள் மற்றும் அந்நாட்டில் இடம்பெறும் சம்பவங்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளின் எதிர்பார்ப்புகள் பற்றிய தெளிவான படத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வழங்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நெருக்கடியை தீர்க்க ஈரான் பின்வரும் விடயங்களை முன்மொழிகிறது

முன்மொழிவின் முதல் விடயமாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முன்னிலைப்படுத்தப்பட்ட, வெளிநாடுகளின்  தலையீடு இல்லாமல், ஆப்கானிஸ்தான் உள்ளார்ந்த உரையாடல் மூலம் அனைத்து இன மற்றும் மத குழுக்களையும் உரிய முறையில் பிரதிநிதித்துவப்படுத்தி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, தலிபான்களுக்கு சகல மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், பெண்கள் உட்பட அனைத்து குழுக்களின் உரிமைகளைக் கவனித்தல், ஆப்கானிஸ்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குதல், மற்றும் இன மற்றும் மத அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என  நிராகரிக்க முடியாத கடமைகள் உள்ளன. சகல குழுக்களின் உரிமைகளை காத்தல், ஆபஃஹானியர் நாடு துறத்தலை தடுத்தல் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கொள்கைகளை கடைபிடித்தல்.

மூன்றாவதாக, உணவு, மருந்து, மற்றும் கோவிட்-19 தடுப்பூசி உட்பட ஆப்கானிஸ்தான் மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிடுகையில், மனிதாபிமான உதவிகள் நியாயமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை என்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு முன்மொழிகிறது என்று கூறினார்.

நான்காவதாக, பிராந்திய நாடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உளவுத்துறை-பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறையை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் எதிர்கால அரசாங்கத்தின் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் நல்ல ஆலோசனைகளையும் ஆப்கானியக் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த அதன் மத்தியஸ்தத்தையும் நாடுமாறு வெளியுறவு அமைச்சர் பரிந்துரைத்தார்.

ஆப்கானிஸ்தானில் நெருக்கடியின் வேர்கள்

ஈரானின் முன்மொழிவை முன்வைக்கும் முன்னதாக, ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையின் வேர்களை அமிர் அப்துல்லாஹியான் தொட்டுகாட்டி, ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளையும் கவலையடையச் செய்த நெருக்கடியானது அடக்குமுறை சக்திகளின் முறையற்ற தலையீடுகளின் மரபினால் ஏற்பட்டது என்று கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது என்ற சாக்குப்போக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது, அதைத் தொடர்ந்து, மேலும் ஸ்திரமற்ற தன்மை, போர் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை தொடர்ந்து நீடித்தது, அதன் தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னத்தால் மீண்டும் அதே நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, வாஷிங்டன் பொறுப்பற்ற விதத்தில்  விட்டோடியது. இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தியதும் அதுவே என்று அமீர் அப்துல்லாஹியான் விமர்சித்தார்,

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள், சூழவுள்ள பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச அரங்கிலும் அந்நாட்டிற்குள் ஒருமித்த கருத்தோ அல்லது சகிப்புத்தன்மையோ  இல்லாததே தற்போதைய நெருக்கடியின் ஆணிவேர் என்பதை நன்கு அறிந்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பாக அண்டை நாடுகள் கொண்டுள்ள ஆழமான புரிதலின் காரணமாக ஆப்கானிஸ்தான் விடயத்தில் பிராந்திய நாடுகள் பெரும்பாலும் ஓர் உடன்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார், ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையேயான தொடர்புகளை புறக்கணிக்கும் போது, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்பதை ஆப்கானிஸ்தானின் வரலாறு காட்டுகிறது., சமூக மற்றும் இன சமத்துவத்தை கருத்தில் கொள்ளாமல் ஆப்கானிஸ்தானில் எந்த பொறிமுறையும் செயல்படாது என்று அமீர் அப்துல்லாஹியான்  விளக்கினார்.

வறுமை, குறைந்த தனிநபர் வருமானம், உயர் கல்வியறிவின்மை மற்றும் தொழில்முறை திறன் இல்லாமை ஆகியவை தனிநபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடவும் மற்றும் பயங்கரவாத குழுக்களில் சேருவதற்கும் தூண்டுதலாக அமைந்துள்ளன, நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பை வழங்கக்கூடிய முழு அளவிலான நிர்வாகத் திறன் இல்லாததன் காரணமாகவே ஆப்கானிஸ்தானுக்குள் அவர்கள்  தங்கள் செயல்பாட்டு மையங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்திய வாரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் செயல்படும் திறனையும் புவியியல் அமைப்பையும் பெற்றுள்ளது. தலிபான் அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று அமீர் அப்துல்லாஹியான் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் வளர்ச்சியின்மை காரணமாக குற்றவியல் மற்றும் பயங்கரவாத குழுக்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை, இதனால் பிராந்தியத்தில் பயங்கரவாதம் விரிவடையும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

https://en.irna.ir/news/84520031/Iran-puts-forward-concrete-proposal-to-solve-Afghanistan-crisis


Thursday, October 28, 2021

புதிய இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்குதல் இஸ்லாமியக் குடியரசின் குறிக்கோள்களில் ஒன்று

Creating a new Islamic civilization is one of the goals of the Islamic Republic


புனித நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) மற்றும் இமாம் சாதிக் (அலை) ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 35 வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுககர்கள் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் கமேனியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.


இவர்கள் மத்தியில் உரையாற்றிய இஸ்லாமியப் புரட்சித் தலைவர், இந்தப் புனிதத்தினமாது மனித வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக விளங்குகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்து மனிதகுலத்தின் படைப்பு முழுவதும் தனித்துவமானது என்று அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் இதயத்தில் புனித குர்ஆன் இறங்கியதை பற்றி, இமாம் கமேனி "மகத்துவமிக்க இறைவன், புனித குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் புனித இதயத்திற்கு வெளிப்படுத்தினான், அதை அவரது தூய நாவால் ஒப்புவித்தார்கள், எல்லாம் வல்ல இறைவன் மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்கான திட்டத்தை முழுவதுமாகக் கொண்டு, இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரை றஸூலாக நியமித்தான்" என்று கூறினார்.

"இஸ்லாமிய தூதை சுமந்த நபி (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்களான நாம் மற்றும் விசுவாசிகள் அனைவரும் செய்ய வேண்டிய கடமை என்ன? ஒன்று இஸ்லாத்தை சம்பூரணமாக செயல்படுத்துவது, மற்றொன்று முஸ்லிம் உம்மாவை ஒன்றுபடுத்துவது ஆகும். இந்த இரண்டு விடயங்களும் நம் வாழ் நாளின் மிக முக்கியமான விடயங்களாகும்," என்றார்.

இஸ்லாத்தினது எதிரிகளின் முயற்சிகளை விளக்கி அவர் அரசியல் மற்றும் உலகாயத சக்திகள் இஸ்லாத்தை பிரத்தியேக செயல்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுப்படுத்த வலியுறுத்துகின்றன. மேலும் இந்த நம்பிக்கையை மக்களிடையே திணிக்கவும் முயற்சிக்கின்றனர் என்று இஸ்லாம் விரோத சக்திகளின் செயல்களை விவரித்த அவர், “இந்த சக்திகளின் பார்வையில், வாழ்க்கை மற்றும் சமூக உறவுகளின் முக்கிய பகுதிகள் இஸ்லாத்தின் தலையீட்டிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதாகும். சமூக நிர்வாகத்தைப் பொறுத்தவரை, நாகரீகத்தை கட்டியெழுப்புதல் என்பது, அரசியல் மற்றும் வெளித்தோற்றமான அறிவார்ந்த போக்குக்கு ஏற்ப, மனித நாகரீகத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாத்திற்கு எந்தப் பங்கும் இல்லை, அதற்கு எந்தக் கடமையும் இல்லை, அதனால் உதவி செய்யும் சாத்தியமும் இல்லை,"

இஸ்லாத்தை சமூக மற்றும் அரசியல் துறைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற இத்தகைய வலியுறுத்தலுக்கான காரணம் உலகில் உள்ள பெரிய அரசியல் சக்திகளின் இஸ்லாம் விரோத மனப்பான்மை ஆகும்; மற்றும் இது அவர்களின் இலக்குகளில் வேரூன்றியுள்ளது என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் கூறினார். இஸ்லாமிய நூல்கள் இந்த நம்பிக்கையை வெளிப்படையாக நிராகரிக்கின்றன என்றும் அவர் கூறினார். இஸ்லாம் பற்றிய கண்ணோட்டத்தையும் அது வழங்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றியும் நாம் தெளிவுபடுத்த வேண்டும்.


இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்த மார்க்கத்தின் குறிக்கோள்கள் அனைத்தும் மனித உணர்வுகள் முதல் சமூக, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் வரை மனித வாழ்க்கையின் அனைத்துமே ஆகும். அனைத்து மனிதகுலம் தொடர்பான பிரச்சினைகளும் இதில் அடங்கும்.

மனித சமூக வாழ்வின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் இஸ்லாம் குறிப்பிடும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் குர்ஆனில் ஆர்வம் கொண்டவர், குர்ஆனை நன்கு அறிந்தவர், குர்ஆனின் விதிகளைப் புரிந்து கொண்டவர். இதுதான் குர்ஆன் அறிமுகப்படுத்தும் இஸ்லாம் என்பதை அறிந்துகொள்வார். என்று இமாம் கமேனி குறிப்பிட்டார்.

இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் "இமாம்" என்ற கருத்தை கமேனி விளக்கினார். இஸ்லாமிய அரசாங்கத்தின் பிரச்சினையை ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறு முஸ்லிம் அறிஞர்களைக் கேட்டுக் கொண்டார். இரண்டாவது விடயமாக இஸ்லாமிய ஒற்றுமையைப் பொறுத்தவரை, இஸ்லாமிய ஒற்றுமைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். அவர் இமாம் கொமைனியின் (ரஹ்) அவர்களின் முயற்சிகளை நினைவு கூர்ந்தார், மேலும் அவர் “முஸ்லிம்களின் ஒற்றுமை நிச்சயமாக குர்ஆன் விதித்துள்ள கடமையாகும். அதை ஏன் வெறும் தார்மீகப் பிரச்சினையாக மாற்றப் பார்க்கிறோம்? இது ஒரு கட்டளை மற்றும் ஆணை."

முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது ஒரு அடிப்படை விடயம் என்றும் தந்திரோபாயப் பிரச்சினை அல்ல என்றும் அவர் விவரித்தார், “முஸ்லிம்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார். முஸ்லிமல்லாதவர்களுடன் உறவு வைத்துக்கொளவதில் ஆர்வமுள்ளவர்களும் தாராளமாக அதை செய்யலாம், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆர்வம் இல்லாதவர்களும் கூட, முழுக்க முழுக்க இத்தகைய தொடர்புகளில் ஈடுபட வேண்டும். இந்த ஒத்துழைப்பு நிலை இருக்கும்போதே ஒற்றுமை ஏற்படும்என்றார்.

இஸ்லாமியக் குடியரசு ஒற்றுமை என்ற விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம், முஸ்லிம் சிந்தனைப்பிரிவுகளுக்கு இடையே நிலவும் பிரிவினையும், முரண்பாடுகளை உருவாக்க எதிரிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியும்தான் என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் கூறினார். ஷியா மற்றும் சன்னி வெளிப்பாடுகள் அமெரிக்க அரசியலின் இலக்கியத்தில் நுழைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், “இஸ்லாமிய ஒற்றுமையை நாங்கள் வலியுறுத்துவதற்கு இதுவே காரணம். அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மைகள் தங்களால் இயன்ற இடங்களில் இஸ்லாமிய உலகில் முரண்பாடுகளை உருவாக்குகின்றன என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

ஆப்கானிஸ்தானிய ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றி இமாம் கமேனி குறிப்பிடுகையில், “கடந்த இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள் தொழுகையின் போது மஸ்ஜிதுகளில் குண்டுகள் வெடிக்கச் செய்த சோகமான சம்பவங்கள் மிக அண்மைய உதாரணம்.என்றார். இவற்றை வெடிக்கச் செய்தது யார்? தாயெஷ் ISIS. இந்த தாயெஷ் என்பவர்கள் யார்? தாயெஷ் என்பது 'நாங்கள் உருவாக்கிய ஆயுத குருவாகும்' என்று அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் தெளிவாகக் கூறினர். அவர்கள் தற்போது இதை மறுக்கிறார்கள்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆப்கானிஸ்தான் ஷியா முஸ்லிம்கள் +மீதான தாக்குதல் பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைத்தார். இஸ்லாமிய உலகில் எங்கும் ஒற்றுமை என்ற இலக்கிற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்றார். "உதாரணமாக ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, திட்டங்களை வகுக்க வேண்டும். இந்தத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான ஒரு வழி, தற்போதைய, மதிப்பிற்குரிய ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தாங்களாகவே ஷீஆ அமஸ்ஜிதுகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவது அல்லது சன்னி சகோதரர்களை இந்த மையங்களில் தொழுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்என்று ஆலோசனை வழங்கினார்.

இஸ்லாமியக் குடியரசின் குறிக்கோள்களில் ஒன்று புதிய இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்குவதாகக் கூறிய இமாம் கமேனி, ஷியா மற்றும் சுன்னிகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும், அது இல்லாமல் இது சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். முஸ்லிம்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்கு பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு முக்கியக் குறிகாட்டியாக புரட்சித் தலைவர் கருதுகிறார். “பாலஸ்தீன பிரச்னைக்கு முஸ்லிம்களின் ஒற்றுமை அவசியம் என்று உணரப்பட்டால், பாலஸ்தீனப் பிரச்சினை நிச்சயமாக சிறந்த முறையில் தீர்க்கப்படும். பாலஸ்தீன தேசத்தின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக பாலஸ்தீன விவகாரத்தில் நாம் எவ்வளவு தீவிரம் காட்டுகிறோமோ, அந்தளவுக்கு முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமையை அடைவதற்கு நெருக்கமாக இருப்போம் என்று அவர் விளக்கினார்,

இஸ்ரேலுடனான உறவை சீராக்குவதில் சில அரசுகள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த அவர், “துரதிர்ஷ்டவசமாக சில அரசுகள் பெரிய தவறு செய்துவிட்டார்கள். அபகரிக்கும், சர்வாதிகார சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் அவர்கள் பாவம் செய்துள்ளனர், இந்த நடவடிக்கை இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது. அவர்கள் இந்தப் பாதையை விட்டு விலகி, இந்த மாபெரும் தவறுக்கு ஈடுசெய்ய வேண்டும்என்று வலியுறுத்தினார்.

இமாம் கமேனி தனது உரையின் முடிவில் ஈரானிய மக்களுக்கு உரையாற்றுகையில், இஸ்லாத்தின் உன்னத நபியைப் பின்பற்றுவது, என்பது குறிப்பாக பொறுமை, நீதி மற்றும் நெறிமுறை ஆகிய மூன்று விஷயங்களில் அவருடைய முன்மாதிரியைப் சம்பூரணமாக பின்பற்றுவதை சார்ந்துள்ளது என்று கூறினார். இன்று எல்லாவற்றையும் விட நமக்கு ஸ்திரத்தன்மை அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், அவர் அரசாங்க அதிகாரிகளிடம் "நீங்கள் உறுதியுடனும், எதிர்ப்பாற்றலுடனும், சகிப்புத்தன்மையுடனும் இந்த பாதையில் தொடர வேண்டும், நீங்கள் ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது" என்றார்.

மேலும் அவர் நீதி என்பது தீர்க்கதரிசிகளின் மிக முக்கியமான இடைநிலை இலக்கு என்று விவரித்தார், "பகைவர்களுடைய விஷயத்தில் கூட நீதி வழங்குவது அவசியம் என்று புனித குர்ஆன் கருதுகிறது. நியாயமான முறையில் நடந்து கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருடன் ஒத்துப் போகாத சூழ்நிலையில் இருந்தாலும், அவதூறு, பொய், [பொல்லாங்குகளால் நம் எதிர்ப்பைக் கறைப்படுத்தக் கூடாதுஎன்று குறிப்பிட்டார்.

தலைவர் கடைசியாக நபிகள் நாயகத்தைப் போல் நடந்து கொள்ளவேண்டும் என்றார். மேலும் அவர் “இஸ்லாமிய நெறிமுறைகள் என்றால் பணிவு, மன்னிப்பு, மென்மையான நடத்தை, மற்றவர்களுக்கு நல்லது செய்தல் மற்றும் பிற முஸ்லிம்களைப் பற்றி பொய்கள், அவதூறுகள் மற்றும் சந்தேகங்களைத் தவிர்த்தல் அவசியமாகும், இந்த விடயங்களை எப்போதும் நிரந்தர வழிகாட்டுதல்களாக நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்," என்றும் குறிப்பிட்டார்.

"நாங்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய குடியரசின் பிரதிநிதிகள் என்று கூறும்போது, இந்த நடவடிக்கையுடன் இருக்க வேண்டும். நமது செயல்களில், நாம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்" என்றும் இமாம் கமேனி வலியுறுத்தினார்,

https://english.khamenei.ir/news/8739/Muslims-unity-necessary-for-realization-of-new-Islamic-Civilization 

Monday, October 25, 2021

இஸ்லாமிய ஒற்றுமை, காலத்தின் அத்தியாவசிய தேவை

 Islamic Unity, the Crying Need of the Hour


இன்று
, உலக முஸ்லிம்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, அதை அடைந்து கொள்வதற்காக நேர்மையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்  உம்மத்தின் எதிரிகள் முஸ்லிம்கள் அந்த இலக்கை அடைந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்; முஸ்லிம்களை பிரித்துவைப்பதற்காக எல்லா சூழ்ச்சிகளையும் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர், இதற்காக கோடிக்கணக்காண டாலர்களையும் செலவுசெய்கின்றனர். இவர்களது இந்த சதி வலையில் சில பிற்போக்குவாத அரபு ஆட்சியாளர்கள் சிக்கியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

உம்மா அதன் வரலாற்றின் முக்கியமான, சவால்கள் நிறைந்த காலமொன்றைக் கடந்து செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சவால்களுக்கு முகங்கொடுக்க இஸ்லாமிய ஒற்றுமையினால் மட்டுமே முடியும் என்பதையும் அறிந்து வைத்துள்ளோம். எனினும், முஸ்லிம் தேசங்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ள அல்லது அமர்த்தப்பட்டுள்ள சிலர், இஸ்லாத்தின் எதிரிகளுடன் இணைந்து முஸ்லிம் உம்மாவை பிரித்துவைப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளை உருவாக்கி, இஸ்லாம் என்ற பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, இஸ்லாமோபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான வெறுப்புணர்வுக்கு வழிவகுத்துள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

என்றாலும், இஸ்லாமிய ஒற்றுமை உலகம் முழுவதும் நிலவும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று உறுதியாக நம்புவோம். ஏனெனில், இஸ்லாமிய ஒற்றுமையை நிலைநாட்ட அல்லும் பகலும் ஓயாது உழைக்கும் அர்ப்பணமிக்க ஒரு குழுவினர் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். எதிரிகளின் திட்டங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்பது உறுதி.

"(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை." (புனித குர்ஆன் 21: 107)

றஸூலுல்லாஹ்வின் பிறந்த தினமாக கருதப்படும் ரபி அல்-அவ்வல் மாதத்தின் இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளியைக் குறைப்பதில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தொலைநோக்கு அனைத்து பிரிவினரையும் ஒரே தளத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆற்றல்மிக்க நடவடிக்கை எனலாம்.

ஒரே இறைவனின் பிரிக்க முடியாத ஒற்றுமை (ஏகத்துவம்) மீது முஸ்லிம்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர், புனித கபாவை நோக்கியே அனைத்து முஸ்லிம்களும் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகையை நிறைவேற்றுகின்றனர், ஒரே புனித குர்ஆனை இறைவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக எந்த சந்தேகமும் இன்றி ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு, தில்-ஹிஜ்ஜா மாதத்தின் குறிப்பிட்ட அதே நாட்களில் ஹஜ் செய்கின்றனர், மறுமை நாளை நம்புகின்றனர், மேலும் மறுமை நாளைக்கு முன்பு றஸூலுல்லாஹ்வின் சந்ததியில் இருந்து மஹ்தி (அலை) அவர்கள் தோன்றி அமைதி, செழிப்பு மற்றும் நீதியின் உலகளாவிய அரசாங்கத்தை நிறுவுவார் என்றும் நம்புகின்றனர்.

நபித் தோழர்களது அறிவித்தல்களின் அடிப்படையில் ரபீ அல்-அவ்வல் 12ம் தினம் சுன்னி முஸ்லிம்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தினமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஷியா முஸ்லிம்கள் நபியின் குடும்பத்தவர்களின் அறிவிப்பில் இருந்து ரபி அல்-அல்வல் 17 வது நாளை சர்வவல்ல இறைவனின் கடைசி மற்றும் உன்னத தூதரின் பிறந்த தேதியாக கருதி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒற்றுமையை வளர்ப்பதில் எந்த வித முயற்சிகளையும் விட்டுவைக்க வில்லை. பல்வேறு சிந்தனை பள்ளிகளின் அறிஞர்களிடையே நடைமுறை தொடர்புகளை ஊக்குவித்தல், மாநாடுகளை நடத்துதல், கூட்டு ஜமாஅத் தொழுகை நடத்துதல் மற்றும் ஒற்றுமையை குழைக்கும் காரணிகளைத் தடை செய்தல் போன்ற அனைத்தையும் தொடர்ச்சியாக செய்துவருகிறது.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் மற்றும் அவரது தகுதிவாய்ந்த கொள்கை வாரிசான இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவர் ஆயதுல்லாஹ் செயத் அலி கமேனி ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் கொள்கைகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளால் வெறுக்கப்படுவதற்கும் உலகளாவிய ஆணவ சக்திகளும் அதன் வாடிக்கையாளர்களும் இஸ்லாமிய ஈரானின் மீது கோபத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் இஸ்லாமிய ஈரானின் இந்த ஒற்றுமை கோஷமாகும் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், முஹம்மது நபியின் (ஸல்) அவர்களது ஆளுமை மிக்க பார்வையில் இஸ்லாத்தின் எதிரிகளின் முயற்சிகள் தோல்வியடையும், ஈரான் இஸ்லாமிய குடியரசின் முயற்சி நிச்சயம் ஒருநாள் வெற்றியடையும்,

சூரா அஹ்ஸாப்பின் 21 வது வசனத்தில் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21).

உண்மையில், குறைஷி பிரபுக்கும் கருப்பு ஆப்பிரிக்க அடிமைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறி, அனைத்து இன, மொழி, நிற மற்றும் வர்க்க தடைகளையும் நபிகள் (ஸல்) அவர்கள் நீக்கினார்கள்

இந்த அரேபியரல்லாத பிலால் (ரலி) எனும் முஸ்லிமான அபிசீனியரை, சில அரபு எழுத்துக்களை அவரால் சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும் கூட, முஅஸ்ஸினாக அல்லது தினசரி தொழுகைக்கு அழைப்பாளராக அதிகாரப்பூர்வ நியமித்தார்கள்.

ரோமானியாவில் இருந்து அகதியாய் வந்த சுஹைப் (ரலி) பாரசீகத்தை சேர்ந்த சல்மான் (ரலி) அவர்களை துணையாக ஏற்று அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவர்என்று புகழ்ந்தார்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அடுத்து தனது நெருங்கிய தோழர்களில் 740 பேரில் சகோதரத்துவப் பிணைப்புகளை ஏற்படுத்தினார்கள், அவர்களை இருவர் இருவராக, அவர்களின் குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிணைத்தார்,

மேலும் நபி (ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி (ரலி) மற்றும் அபுஸார் க்ஃபாரி (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக இணைத்தார்கள் அவ்வாறே மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) மற்றும் 'அம்மார் இப்னு யாசிர்.(ரலி) ஆகிய இருவரையும் இணைத்தார்கள்.

அதேபோல், சுபைர் (ரலி) உடன் தல்ஹா (ரலி) அவர்களையும், அபு பக்கர் (ரலி) உடன் உமர் இப்னு கதாப் (ரலி) அவர்களையும், உத்மான் இப்னு அஃபான் (ரலி) உடன் அப்துர்-ரஹ்மான் இப்னு அவுஃப் (ரலி) அவர்களையும் இணைத்தார்கள். அதுபோல் ஏனையோரையும் ஜோடி ஜோடியாக இணைத்தார்கள். இவர்களுக்கிடையே சகோதரத்துவ உணர்வு மிகவும் உறுதியானது; அத்தகைய ஜோடி ஒரு புனித போரில் வீரமரணம் அடைந்தபோது, இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஜோடி இணைப்பு முடிந்த பிறகு, அவர் தனது உறவினர் இமாம் அலி இப்னு அபி அலிப் (அலை) அவர்களது கையை தனது கைகளில் பிடித்து, இவர் இந்த உலகிலும் மற்றும் மறுமையிலும் எனது சகோதரராக இருப்பார் என்று அறிவித்தார்.

பிறகு பல வருடங்கள் கழித்து, தனது 23 வருட பணியை முடித்த பிறகு, இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன், இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முக்கியமான அறிவுறுத்தலை உரைத்தார்கள்:

நான் உங்களிடையே கனதியான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; இறைவனின் ஒன்று கலாம் (புனித குர்ஆன்) மற்றும் எனது சந்ததியான அஹ்ல்-பைத் ஆகியவையே அவை; அவற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள், ஏனெனில் இவ்விரண்டும் (தீர்ப்பு நாளில் கவுதரின்) தடாகத்தில் என்னிடம் திரும்பும் வரை ஒன்றையொன்று பிரிய மாட்டா, என்றார்கள்.

இவ்விடயங்கள் அனைத்தும் சுன்னி - ஷீஆ கிரந்தங்களில் தாராளமாகவே பதியப்பட்டுள்ளன. இவை போன்ற எண்ணற்ற விடயங்கள் எம் இரு சகோதரர்களுக்கிடையில் பொதுவாக உள்ளன. அதன்பால் ஒன்றுபடுவோம்.

நபிகளார் (ஸல்) அவர்கள் எவ்வளவு அற்புதமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்கள்! சில உண்மையான ஆன்மாவைத் தேடுவோம், நமது நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளுக்கு நாம் விசுவாசமாக இருப்போம்; இல்லையென்றால், புனித குர்ஆனிலிருந்தோ அல்லது புனிதர்களான அஹ்ல் அல் பைத்களிடம் இருந்தோ நம்மை தூரப்படுத்தியுள்ளது எது என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகளை எடுப்போம். அதற்கான காலம் இதுவே.

சயீத் அலி ஷஹ்பாஸ் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.




Monday, October 11, 2021

இஸ்லாத்தில் ஒற்றுமையின் முக்கியத்துவம்

 Importance of Unity in Islam




வாழ்க்கையை மாற்ற ஒற்றுமையின் சக்தியைப் பயன்படுத்துவோம்

பரஸ்பர அன்பினால் நாம் ஒன்றிணைவதன் மூலம் நிறைய பெறுபேறுகளை அடைய முடியும். எங்கள் நபி (ஸல்) ஒற்றுமையை எங்கும் எப்போதும் வலியுறுத்தினார். அவர் சென்ற இடமெல்லாம் அன்பையும் தயவையும் பரப்புவதை உறுதி செய்தார், அவரின் இந்த நற்பண்பு, மில்லியன் கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்தது; அவர்களை ஏகத்துவ மார்க்கத்தில் இணைக்க வழிவகுத்தது என்றால் மிகையாகாது.

ஒற்றுமையின் சக்தி அளப்பரியது, ஒன்றிணைவதன் மூலம் நாம் எமது நிலையை மட்டுமல்லாது எம் சமூக வாழ்க்கையையம் மாற்றியமைக்க முடியும். மனச்சோர்வடைந்து காணப்படும் சமூகத்திற்கு உட்சாகம் ஊட்டமுடியும், வீழ்ந்துகிடக்கும் சமூகத்தை தூக்கி நிமிர்த்த முடியும், மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் தனிமையை உணர்கிறவர்களுக்கு நாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்த முடியும்.

சமுகத்தை மேம்படுத்துவதற்கும் மற்றவர்களுடனான நமது தொடர்புகளை வளர்ப்பதற்கும் மூல கூரான ஒற்றுமையை நாம் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கான சில வழிகளை இங்கே ஆராய்வோம்.

ஒற்றுமை நமக்கு பொதுநலத்தை கற்றுக்கொடுக்கிறது

"தான் நேசிப்பதை அவன் தன் சகோதரனுக்கும் நேசிக்காத வரை ஒருவர் நம்பிக்கை கொண்டவராக ஆக்கமாட்டார்" [அல்-புகாரி]

இந்த ஹதீஸில் சகோதரத்துவத்தை பேணுவது தொடர்பாக எவ்வளவு அழகாக சொல்லப்பட்டுள்ளது என்பதை அவதானியுங்கள். முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவரையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது. இமாம் அன்-நவவி (ரஹ்) இங்கு, நம்முடைய உத்தம நபி (ஸல்) அவர்கள் சத்தியத் தூதை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது பற்றி நமக்கு வழிகாட்டுகிறார் என்றும், ஒரு விசுவாசி எப்படி ஒரு இஸ்லாமியரை எப்படி நேசிக்கிறாரோ அவ்வாறான நேசத்துடன் மற்றவரை நேசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் அவர் “இந்த காரணத்திற்காக, அவர் ஹிதாயத் எனும் நேர்வழியை அடைய பிரார்த்தனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, இந்த வகையான அன்பு மிகவும் அலாதியானது. ஒரு நண்பரை நீங்கள் விரும்புவதன் காரணமாக அவரை வீட்டிற்கு அழைத்து உங்கள் வசதிக்கு ஏற்றவாறு, எவ்வாறு உபசரிப்பீர்களோ அவ்வாறே, அதே மனநிலையுடன், நாம் அவர்களுக்கு நல்லதை விரும்புவதன் காரணமாக அன்பை வெளிப்படுத்துகிறோம் என்பதற்கு அது ஓர் எடடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இதுவே ஒற்றுமையின் சாராம்சம், அன்பும் மரியாதையும் மக்கள் மனங்களை பிணைக்கிறது.

நாம் ஒரு அமைப்பு போன்றவர்கள் என்பதை அறிதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், "உண்மையாக, விசுவாசிகள் ஒரு கட்டமைப்பைப் போன்றவர்கள், ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றை வலுப்படுத்துகிறது" என்று சொல்லிவிட்டு தனது விரல்களை ஒன்றாகக் இணைத்துக் காட்டினார்கள் . [அல்-புகாரி]

இந்த ஹதீஸ் அவசியமான நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், நேர்மையாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இறைவன் அருளிய வாய்ப்பாகவும் அதை பார்ப்பது இதில் அடங்கும்.

இது மக்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் செயலாகும். நீங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு நாட்டில், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத, எதோ ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு உதவி செய்தாலும், அவர் உள்ளத்தளவில் இயல்பாகவே ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்; அவர் உங்களுக்காக, உங்கள் உடல் நலத்துக்காக, அமைதிக்காக துஆ செய்பவராக இருப்பார் என்பது நிச்சயம்.

எனவே ஒற்றுமையை அடையும் செயல்பாடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மேலும், ஒரு கட்டமைப்பை உருவாக்க ஒன்றாக இணைந்திருக்கும் செங்கற்களாக விசுவாசிகளைப் பார்ப்பதன் மூலம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் நிலைமைகளை அறிந்து கொள்வதன் மூலம் எவ்வளவு நன்மைகள் அடைய முடியும் என்பதை புரிந்துகொள்ளவும்.

உறவுகளை உருவாக்குவதன் மூலம் ஒன்றிணைத்தல்

ஒற்றுமை முக்கியம், ஆனால் அது ஒவ்வொரு நபரின் முயற்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். புனித குர்ஆனில் அல்லாஹ் சுபுஹானஹு தஆலா குறிப்பிப்பிடுவதை பாருங்கள்

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். 3:103.

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் வாழ்வதற்கு நமது நபி (ஸல்) அவர்களே உண்மையான உதாரணமாகும். தலைமைப் பதவியில் இருந்த போதிலும் அவர் மீது கற்கள் வீசப்பட்டன,, அழுக்குகளும் வீசப்பட்டன மேலும் அவரது உயிருக்கு கூட பல முறை ஆபத்து ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பெரும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். ஆயினும், நம் நபி (ஸல்) தனது எதிரிகளுக்கு தயவையும் மரியாதையையும் தவிர வேறு எதையும் காட்டவில்லை. அவர் உலகை மாற்றவும், இன்றும் நம்முடன் வாழும் மரபுகளை உருவாக்கவும் தயவைப் பயன்படுத்தினார். புனித குர்ஆன் வசனமும் றஸூலுல்லாஹ்வின் கருணை கொண்ட பார்வையுமே மோசமான எதிரிகளில் ஒருவராக இருந்த உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது; றஸூலுல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறினார்.

கருணையின் சக்தி அத்தகையது, மேலும் அதன் மூலம் அன்பை வெகுதூரம் பரப்பலாம் என்பதை ரசூலுல்லாஹ் தனது வாழ்க்கையின் மூலம் காட்டித் தந்தார்..

தான தர்மத்தின் மூலம் ஒற்றுமை

ஒரு முஸ்லிம் தனது இதயத்தில் வைத்திருக்கும் அன்பு மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், அது அவரை கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வைக்கிறது. அவர் மற்றொரு நபரின் வலியை உணர்கிறார், மேலும் அவர் அன்பான விதத்தில் எதிர்வினையாற்றுகிறார். இது இயற்கையாகவே மற்றவர்களிடம் பாசத்தையும், பரிவையும், கருணையையும் உருவாக்குகிறது.

மோதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டும் தடைகளை எதிர் கொண்டிருக்கும் ஒரு கடினமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் தேவையுடையவர்களுக்கு உதவுமாறு அல்லாஹ் எங்களுக்கு கட்டளையிடுகின்றான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றிணைந்து, வீழ்ந்துகிடப்போரை உயர்த்தி, உலகிற்கு நல்ல செய்தியை வழங்க முடியும். நன்மையில் ஒன்றிணைவதற்கு அன்பைப் பரப்புவது மிக முக்கியமாகும்.

நாம் ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும்.

ஒற்றுமையின் மூலம்  நிறைய சாதிக்க முடியும். ஒற்றுமை மக்களை ஒன்றிணைக்கிறது, அவர்களுக்கு இடையே அன்பு, நல்லிணக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை உருவாக்குகிறது.

விசுவாசிகளாகிய நாம் ஒற்றுமையைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் கருணையைப் பரப்புவோம், அத்துடன் நமது ஆன்மீக வளர்ச்சியை அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்தலாம்.

எனவே, ஒற்றுமையின் நற்பண்புகளைப் பற்றி சிந்திப்போம், நம் குடும்பம், நண்பர்கள், மற்றும் நாம் வாழும் அபாயகரமான உலகத்திற்கு நேர்மையான தயவை, உண்மையான மனிதநேயத்தை பரப்புவோம். நாம் இதைச் செய்யக்கூடிய ஒரு வழி, பாதிப்புக்குள்ளான மக்களை, இன, மத பேதமின்றி வறுமையில் வாடுபவர்களையும் காப்பாற்ற, வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் சிறந்த மனிதாபிமான திட்டங்களுக்கு எம்மால் முடிந்தளவு உதவுவோம்.

இஸ்லாமிய பண்புகளான நன்மை, அன்பு மற்றும் தாராள மனப்பான்மையின் பால் ஒன்று சேர அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

-         -  தாஹா முஸம்மில்