Thursday, May 26, 2022

"அறிவை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையே முழுமையான இறை அருள்."

“The most complete gift of God is a life based on knowledge”.


விசுவாசிகளின் தளபதியும், இறையச்சமுடையோரின் தலைவருமான “ஞானத்தின் நுழைவாயில்” இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமக்கு வழங்கிய ஞானத்தின் சிகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம்) அவர்களால் அலீ (அலை) அவர்கள் குறித்து வழங்கிய அடைமொழிகளில் இதுவும் ஒன்றாகும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது கலீபாவின் தகுதியைப் பற்றி மற்றொரு பிரபலமான ஹதீஸில் இவ்வாறு வெளிப்படுத்தினார்: "நான் அறிவின் பட்டணம் மற்றும் அலி அதன் நுழைவாயில்; இந்த பட்டணத்தில் நுழைய விரும்புபவர் நுழைவாயில் ஊடாக வரவேண்டும்".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன எதுவும் பிழைப்பதில்லை, அவர் தனது மனோ இச்சையின் படி பேசுவதுமில்லை, சூரா நஜ்மின் முதல் சில வசனங்கள் சொல்வது போல் அவருடைய வார்த்தைகள் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை (வஹீ) ஆகும்.

இவ்வாறு, வரலாறு முழுவதும், சர்வவல்லமையுள்ள இறைவனின் கொடையான அறிவைத் தேடுவதில் தங்கள் வாழ்க்கையைக் கழித்தவர்கள், ஞானத்தின் நகரத்திற்குள் சரியான முறையில், அதாவது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய அதன் நுழைவாயில் வழியாக நுழைவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டனர்.

இஸ்லாத்தின் புனித தீர்க்கதரிசியின் கூற்றுப்படி, இமாம் அலி (அலை) உண்மையை அங்கீகரிப்பதற்கான அளவுகோலாகும்.

அமீருல் முஃமினீன் இமாம் அலி (அலை) அவர்களின் பாத்திரம் பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை விதிவிலக்கானது. அவர் கஅபாவிற்குள் பிறந்தார் - அதற்கு முன்னும் சரி, அதற்கு பின்னும் சரி இவ்வாறு நிகழவில்லை - மேலும் அவர் மஸ்ஜிதில் தொழுகையின் போது வீரமரணம் அடைந்தார்.

அமீருல் முஃமினீன் அலி (அலை) அவர்கள் (பிறப்பு - இறப்பு) இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஜிஹாத், இறைவனுக்காக பொறுமை காத்தல், அறிவு மற்றும் நுண்ணறிவைப் பெறுதல் மற்றும் இறை திருப்தியின் பாதையில் நகர்தல் ஆகியவற்றில் தனது எல்லா நேரத்தையும் கழித்தார்.

அவரது குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில், அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களை பராமரிக்கும் பொறுப்பு நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபிதாலிபின் வீட்டிலிருந்து அவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களுக்கு ஆறு வயதுதான். இறை நம்பிக்கையாளர்களின் தளபதி (அலை) அவர்கள் சிறுவயதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கல்வி கற்றவர். அவர் தனது சிறுவயதிலேயே நபிகள் நாயகம் (ஸல்) மீது தனது நம்பிக்கையை அறிவித்தார். அவர் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக பிரார்த்தனை செய்தார். அவர் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக ஜிஹாதில் ஈடுபட்டார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக தியாகம் செய்தார். அவர் தனது வாழ்நாளில், புனித நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன்னும் பின்னும் நீதி வழங்கவும், இஸ்லாத்தை மேம்படுத்தவும், இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

நபி (ஸல்) அவர்களின் கண்ணோட்டத்தில், உண்மை மற்றும் நீதிக்கான அளவுகோல் விசுவாசிகளின் தளபதி அமீருல் முஃமினீன் அலி (அலை) (அலை) ஆவார். ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் புனித நபியை மேற்கோள் காட்டி, "அலி உண்மையுடன் இருக்கிறார், உண்மை அலியுடன் உள்ளது. உண்மை அவர் எங்கிருந்தாலும் அவரைச் சுற்றி வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருந்தது.

இமாம் அலி (அலை) அவர்கள் இறைவனின் முன் வைத்திருக்கும் உயர்ந்த அந்தஸ்து அவரது தன்னலமற்ற முயற்சி மற்றும் பக்தியின் காரணமாகும்... இமாம் அலி (அலை) மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டிருந்த பாசத்தைப் பற்றி சன்னி முஸ்லிம்கள் மேற்கோள் காட்டிய மரபுகளில் சில முக்கிய விடயங்கள் உள்ளன. இந்த விடயங்கள் அனைத்து முஸ்லிம்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

சுன்னி முஸ்லிம்களின் ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சுனன் அல்-திர்மிதியில், உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்: "எல்லா மனிதர்களிலும், புனித நபியை விட அலிக்கு பிரியமானவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை." மற்றொரு ஹதீஸில், ஹன்பலி சிந்தனைப் பள்ளியின் ஃபிக்ஹ் நிறுவனர் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) - அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கூறியதாக மேற்கோள் காட்டுகிறார்: "ஒருமுறை புனித நபி இறைவனிடம் பிரார்த்தனை செய்து இவ்வாறு கூறினார்: "மூஸா (அலை) கேட்டது போலவே. அவரது கடமைகளில் அவருக்கு உதவ ஒரு மந்திரியை நீ நியமிக்க வேண்டும், மேலும் அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களை எனது மந்திரியாகவும், எனது கடமைகளுக்கு எனக்கு உதவுபவராகவும் நியமிக்கும்படி வேண்டுகிறேன்".

நமக்கான படிப்பினைகளும் அர்த்தங்களும் நிறைந்த அமீருல் முஃமினீன் (அலை) அவரது வாழ்க்கையில், அவரது நிகழ்ச்சி நிரலில் எதை முக்கியப்படுத்தினார் என்பதை இப்போது நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்று அவரது வாழ்க்கை முறையின் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றாகக் கூறப்படும் நீதி. மற்றது அடக்குமுறையாளர்களிடம் கடுமையாய் இருப்பது, ஒடுக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் காட்டுவது, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பெற உதவுவது போன்ற குணாதிசயங்கள் பல பகுதிகளில் தெளிவாகக் காணப்படுகின்றன - நஹ்ஜ் அல்-பலாகா.

விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களின் இந்த அர்த்தமுள்ள கருத்துக்களில் கவனம் செலுத்துங்கள்... இமாம் அலி (அலை) அவர்களின் கருத்துப்படி, உலகம் - உலக உடைமைகள் என்ற பொருளில் - முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவையும் கைவிடப்பட வேண்டியவையும் ஆகும்.

உலகத்தை நோக்கி, "போய் வேறொருவனை ஏமாற்று!" என்று முழக்கமிட்டார் அமீருல் முஃமினீன் (அலை) அவர்கள். உலக ஆசைகள் மற்றும் வாழ்க்கையின் பொருள் அழகு அவரை ஏமாற்ற முடியாது என்று அர்த்தப்பட்டும் விதத்திலேயே அவர் அவரை விட்டு சென்று ஏமாற்ற மற்றொருவரை கண்டுபிடிக்க கூறினார்.

அமீருல் முஃமினீன் அலி (அலை) என்ற மகத்துவம் மிக்க மனிதருக்கு மரியாதை காட்டுவது ஷியாக்களுக்கு அல்லது மற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய தனிப்பட்டது தனிப்பட்ட அல்ல. மாறாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து விடுதலை பெற்ற மக்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒன்று. முஸ்லிம்கள் அல்லாத அந்த ஆளுமைகள் கூட இந்த மகத்துவமிக்க மனிதருக்கு மரியாதை காட்டுவதை நீங்கள் காணலாம். அவரைப் பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்கள், கவிதைகள் எழுதுகிறார்கள். அனைத்து இஸ்லாமியர்களும், அனைத்து இஸ்லாமியப் பிரிவினரும் தங்கள் முழு மனதுடன் நேசிக்கும் மற்றும் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமை அந்த உன்னத மனிதர்.


Sunday, May 22, 2022

அரபு - இஸ்ரேலிய கூட்டணிக்கு எதிரான மகத்தான வெற்றி

 Islam’s Grand Victory Over Joint Arab-Israelite Army


மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்

இன்று ஷவ்வால் 17 ஆம் நாள் இஸ்லாம் மற்றும் மனிதகுல வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வின் ஆண்டு நிறைவாகும்.

எத்தனை பெரிய படைகள், வியூகக் கூட்டணிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் இருந்தாலும், சாத்தியவான்களின் வெற்றிக்கு உத்திரவாதம் அளித்துள்ளவன் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் என்பதால், சாத்தானியக் கூறுகளின் சதிகள் தற்போது அல்லது எதிர்காலத்தில் தோல்வியடையும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

அரேபியர்களும் இஸ்ரவேலர்களும் இஸ்லாத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்ததால், "அஹ்ஸாப் போர்" என்று அழைக்கப்படும் முக்கியமான "கந்தக் போர்" (அகழி யுத்தம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வெற்றியுடன் முடிவடைந்து.

முஸ்லிம்களில் உள்ள நயவஞ்சகர்களின் உதவியுடன் றஸூலுல்லாஹ்வைக் கொல்லவும், இஸ்லாத்தை ஒழிக்கவும் மதீனாவுக்கு அணிவகுத்துச் சென்ற 10,000 வீரர்கள் கொண்ட வலிமையான அரபு-இஸ்ரேல் கூட்டு இராணுவம் தோல்வியுடனும் அவமானத்துடனும் பின்வாங்கியது.

ஹிஜ்ரி 2 இல் பத்ரில் மக்காவின் காஃபிர்களால் நபிகள் நாயகத்தின் மீது சுமத்தப்பட்ட முதல் ஆயுத மோதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரேபியர்களும் இஸ்ரவேலர்களும் ஆவேசமடைந்து இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கான திட்டங்களை வகுத்தனர்.

இஸ்லாத்தின் பரம எதிரியான அபு சுஃப்யான், அரேபிய யூதரான கஅப் அல்-அஷ்ரஃப் உடன் இணைந்து இறுதி நபிக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டுப் படையைத் திரட்ட உறுதிபூண்டனர். சர்வவல்லமையுள்ள அல்லாஹ் சூரா அன்-நிஸாவின் ஆயா 53 இல் இந்த சதித்திட்டத்தை சுட்டிக்காட்டினார்:

"(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் (இஸ்லாத்தில்) நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்".

கஅபின் எதிர்பாரா மரணத்துடன், இவர்களால் கூட்டு சதியை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.  பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கும் தாகத்தில், உமையா வம்ச நிராகரிப்பாளரான அபு சுஃப்யான், ஹிஜ்ரி 4 இல் மதீனாவை நோக்கி அணிவகுத்துச் சென்றார், ஆனால் அவரது இலக்கை அடைய முடியவில்லை. அலி (அலை) அவர்களின் வீர வாள்வீச்சு காரணமாக நிராகரிப்பாளர்களால் றஸூலுல்லாஹ்வை அண்ட முடியவில்லை.

அடுத்த ஆண்டு ஹிஜ்ரி 5 இல், அபு சுஃப்யான் தன்னால் முடிந்த அளவு அரபு பழங்குடியினரைச் சேர்ந்த வீரர்களைக் கூட்டி, யூதர்களான பனூ நதீர் மற்றும் பனூ குரைதா (நபிக்கு நடுநிலைமை என்ற உறுதிமொழியை மீறி) உடன் இணைந்து மதீனாவை நோக்கி வந்தார். ஒரு வலுவான இராணுவத்துடன், மிகவும் மூர்க்கமானவன் என்று அறியப்பட்ட போர்வீரன் அம்ர் பின் அப்துவாத் என்பனும் படையில் அடங்கியிருந்தான்.

இஸ்லாத்திற்கு எதிரான அரபு-இஸ்ரேல் சதி பற்றி அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவின் பாதுகாப்பு திட்டத்தைத் தயாரித்தார்கள், அதன் இயற்கையான அரண்கள், உயரமான பாறைகள், அடர்ந்த ஈத்த தோப்புகளும் இருந்த இடத்தைத் தெரிவு செய்தார்கள், மேலும் அவரது பாரசீக தோழர் சல்மான் அல்-ஃபார்சியின் ஆலோசனையின் பேரில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடத்தில் ஆழமான (அகழி)பள்ளம் தோண்டப்பட்டது.

கடப்பாரை கொண்டு பள்ளம் தோண்டிய வேளை தீப்பொறிகள் உமிழும் பெரிய பாறைகளை அகற்றும் போது, நபியவர்கள் எதிர்காலத்தில் சிரியா, பாரசீகம் மற்றும் யேமன் விடுதலையைப் பற்றிய செய்திகளை வழங்கினார், அதில் அவரது தோழர்களில் இருந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை மற்றும் இந்த போரே இஸ்லாத்தின் முடிவாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தனர்.

நிராகரிப்பாளர்களின் கூட்டு இராணுவம் வந்தபோது, புதிதாக தோண்டப்பட்டிருந்த அகழி காரணமாக அதன் நுழைவு தடுக்கப்பட்டது.

பதினைந்து நாட்கள், அரபு-இஸ்ரேல் கூட்டு படைகள் சூழ்ச்சி செய்து, மறுபுறத்தில் உள்ள முஸ்லிம் பாதுகாவலர்களை நோக்கி அம்புகளை எய்தனர், ஆனால் முஸ்லிம்கள் இருந்த பகுதிக்குள் நுழைவதற்கு அவர்களால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்த அம்ர் பின் அப்துவாத், இன்னும் இரண்டு குதிரை வீரர்களுடன் சேர்ந்து அகழியின் மிகக் குறுகலான ஓர் இடத்தைக் கண்டுபிடித்து, ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தங்கள் குதிரைகளைத் தூண்டினர்.

ஷவ்வால் 17 ஆம் தேதி றஸூலுல்லாஹ்வின் கூடாரத்தின் மீது ஈட்டியை எறிந்த அம்ர், பாதுகாவலர்களை ஒற்றைப் போருக்கு சவால் விட்டார், அப்போது முஸ்லிம்கள் தரப்பில் சிலர் அச்சம்கொண்டு நடுங்கினர், அதே நேரத்தில் அவர்களில் நயவஞ்சகர்கள் நபியை பிடித்து எதிரிகளிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டனர்.

இறை தூதரின் புனிதத்தன்மையையும், அவரின் தூதையும் களங்கப்படுத்த துணிந்த எவரும் ஒரு மிருகத்தை விட மோசமானவர் என்றும் அவருக்கு மனிதகுலத்திற்கு அழியாத பாடத்தை வழங்குவதற்காக புனித தூதர் இவ்வாறு கூறினார்: “இந்த நாயை யார் எதிர்கொள்வார்கள்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார், மூன்று முறையும் யாரும் எழுந்திருக்கவில்லை, அவருடைய அன்புக்குரிய உறவினர், மருமகன் இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை.

உண்மையில் ஐந்தாம் படையாக செயற்பட்ட முஸ்லிம்களில் சிலர், நபிகளாரின் அழைப்புக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, விசுவாசிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அம்ர் பின் அப்துவாத்தின் வலிமையையும் உடல் சக்தியையும் சிலாகித்துப் பேச தொடங்கினர் - இன்று அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் சேவையில் இருக்கும் சுயபாணி முஸ்லிம்கள் செய்வது போலவே, சட்டவிரோதமான சியோனிச அமைப்பின் இராணுவ வலிமையையும், இஸ்லாமிய ஈரானுக்கு எதிராக இஸ்ரேலியர்களுடன் அரேபியர்கள் கூட்டணி வைப்பதையும் அரேபியர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள்.

அரேபிய-இஸ்ரேல் போர்த்தலைவரின் சவாலை எதிர்கொள்ள அலி (அலை) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள், "விசுவாசத்தின் உருவகம் துரோகத்தின் உருவகத்தை எதிர்த்துப் போராட தயாராக உள்ளது" என்று கூறினார்.

சுன்னி மற்றும் ஷியா அறிஞர்களால், அனைத்து ஹதீஸ் மற்றும் வரலாற்று புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இமாம் அலி (அலை) அவர்கள், சவால்விட்ட அம்ரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி  அழைப்புவிடுத்த பிறகு, மேலும் அவரது உயிரைப் பணயம் வைக்காமல் அமைதியாக வெளியேறிவிடு என்று சொன்னார் - திமிர்பிடித்த அவனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் மீது உமிழ்ந்தான், போரில் ஈடுபட்டு, இமாம் அலி (அலை) அவர்களின் வாளுக்கு இறையானான்.

ஸுல்பிகார் எனப்படும் அவரது புகழ்பெற்ற இரட்டைக் வாளினால், இமாம் அலி (அலை) அவர்கள் அரபு-இஸ்ரேல் படையின் கோழைத்தனமான பிரதிநிதி அம்ரை மறு உலகிற்கு அனுப்பினார்கள்.

"கந்தக் போரில் தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடம்கொடுக்காமல் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட்ட இந்த சாதனையை பாராட்டி அலியின் வாள்வீச்சு தக்கலைன் (மனித இனமும் ஜின்களும்) இணைந்து செய்யும் வணக்கத்தை விட மேலானது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறினார்கள்.

இந்த காட்சியை அகழியின் மறுபக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரபு-இஸ்ரேல் படை, அதிர்ந்துபோனது, மேலும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அவர்களின் முகாமை சீர்குலைக்க பலமான புயலை ஏவியதால், எதிரிகள் ஓட்டம் காண தொடங்கினர்.

இவ்வாறு, இமாம் அலி (அலை) அவர்கள் றஸூலுல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் இருந்தார்கள், மேலும் மீதமுள்ள முஸ்லிம்களையும் சண்டையிலிருந்து காப்பாற்றினார்கள்.

கந்தக் (அகழி) போரின் படிப்பினைகள் நமக்கு மிகவும் வெளிப்படையானவை, மேலும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வெற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாதையை உறுதியாகப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஆணவமானது மிருகத்தனமான சியோனிஸ்டுகள் மற்றும் பிற்போக்குவாத அரபு ஆட்சிகளின் கூட்டணியைக் கொண்டு, இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமையை குழைக்கும் நோக்கில் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி, மற்றும் பிற மனிதகுலத்திற்கு எதிரான கோழைத்தனமான குற்றங்கள் இளைத்துக்கொண்டிருக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், இமாம் அலி (அலை) மற்றும் பிற ஆசீர்வதிக்கப்பட்ட அஹ்ல் அல்-பைத் ஆகியோரை பின்தொடர்ந்து விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியத்தைக் குறிக்கிறது,

அரபு-இஸ்ரேல் படையின் மீது இஸ்லாம் பெற்ற இந்த மகத்தான வெற்றியின் நினைவாக, மதீனாவில் அகழி இருந்த இடத்திற்கு அருகில் மசூதிகள் கட்டப்பட்டன, அதாவது மஸ்ஜித் அல் ஃபத்ஹ் அல்லது வெற்றி மசூதி, மஸ்ஜித் இமாம் அலி (அலை), நபிகளாரின் அருமை மகள் ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை), மற்றும் மஸ்ஜித் சல்மான் ஃபார்ஸி ஆகியவை கட்டப்பட்டன. கடந்த 1400 வருடங்களாக யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் விசுவாசிகள் இந்த மசூதிகளில் இறைவணக்கம் புரிந்து வந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, சரித்திர சான்றுகளான இந்த மஸ்ஜிதுகள் அனைத்தும் இப்போது வஹ்ஹாபிகளால் அழிக்கப்பட்டுள்ளன, இவர்கள் தம்மை முஸ்லிம்கள் என்று அழைத்துக்கொண்டாலும், நிராகரிக்கும் அபு சுஃப்யானின் வாரிசுகள் மற்றும் இஸ்ரேலியர்களைப் பின்பற்றுவோராகும், இவர்களது இந்த இஸ்லாம் விரோத போக்கு இஸ்ரேல் என்று அழைக்கப்படும் சட்டவிரோத சியோனிச அமைப்புடன் வைத்துள்ள தொடர்பு பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், ஆகிய நாடுகளில் பகிரங்கமாகத் தெரிகிறது. மற்றும் மொராக்கோ, மற்றும் ரியாத் ஆட்சிக்கும் டெல் அவிவ் இடையேயான இரகசிய உறவுகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீண்டும் தோன்றி, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கொடுங்கோன்மையை முடிவுக்குக் கொண்டு வரவும், அநீதியை வேரோடு அகற்றவும், அமைதி, செழிப்பு மற்றும் நீதிக்கான உலகளாவிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

https://kayhan.ir/en/news/102749/islam%E2%80%99s-grand-victory-over-joint-arab-israelite-army

 

Saturday, May 14, 2022

யெமன் மாகாணங்களை இணைக்கும் சவுதி திட்டம் அம்பலம்

Saudi plan to annex Yemeni provinces exposed

அன்ஸாருல்லாஹ்: யெமனின் எழுச்சி எதிரிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது,

யெமன் தேசம் உண்மையான சுதந்திரம் மற்றும் எதிரிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்கான பாதையில் செல்கிறது என்று யெமனின் அன்ஸாருல்லாஹ் இயக்கத்தின் தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹௌதி கூறினார், எமது நாட்டின் மக்கள் எழுச்சி அந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.

"ஆக்கிரமிப்பாளர்களின் கூட்டணி தாக்குதல்கள் தொடர்ந்த போதிலும், கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களின்படி தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றன, நாட்டு மக்களின் போராட்ட உறுதிப்பாட்டிற்கு நன்றி" என்று அன்ஸாருல்லாஹ் தலைவர் மே 9, 2022 அன்று யெமன் சனாவின் மாணவர்களின் கோடைகால நடவடிக்கைகளைத் துவக்கி வைக்க நடைபெற்ற விழாவில் யெமன் தலைநகரில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில் கூறினார்.

யெமன் நாட்டின் மக்கள் எழுச்சி உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுப்பதையும் எதிரிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டது, அத்தகைய நோக்கங்களை அடைய மக்கள் யதார்த்தமான, பகுத்தறிவு மற்றும் நுண்ணறிவு அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இஸ்லாம் வழிகாட்டுதல் மற்றும் நுண்ணறிவின் மதம். உண்மையைக் கண்டறிவதும், வழிகேட்டில் இருந்து பாதுகாப்பாக இருப்பதும் மனித குலத்திற்கு நன்மை பயக்கும். முஸ்லிம் உம்மத் தவறான வழிகாட்டுதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பல தவறான கருத்துக்கள் அதில் பரவியுள்ளன, ”என்று அன்சாருல்லாஹ் தலைவர் மேலும் கூறினார்.

முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தவும் பிளவுபடுத்தவும் "எதிரிகள் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் அதற்காக பல செய்தி நிறுவனங்களையும் ஊருருவாக்கியுள்ளனர். அவற்றின் மூலம் உம்மத்தை தொடர்ந்து தவறாக வழிநடத்துகிறார்கள்" என்று அன்ஸாருல்லாஹ் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இளம் முஸ்லிம் தலைமுறைகள் மீது எதிரிகள் தங்கள் கண்களை வைத்திருக்கிறார்கள், தவறான பிரச்சாரங்கள் மூலம் அவர்களை வழிகெட செய்து அழிக்க முயல்வதாக கூறி, அதனால் இளைஞர்கள் நேர்மையான வழியைப் பின்பற்றாது சக்திவாய்ந்த நாடுகளாக காட்டிக்கொள்ளும் அவர்கள் காலடியில் வீழ்வர் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

சவூதி அரேபியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் தளவாட ஆதரவுடன் மார்ச் 2015 இல் யெமன் மீது பேரழிவுகரமான போரைத் தொடங்கியது.

யெமன் தேசத்திற்கு எதிரான எதிரிகளின் தவறான தகவல்களும் பிரச்சாரப் போரும் நாட்டின் விடுதலை மற்றும் நம்பிக்கையின் உணர்வைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று அல்-ஹௌதி குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா அமைதியில் அக்கறை காட்டவில்லை யெமன் மீது ஏழாண்டுகளுக்கும் மேலாக அழிவுகரமான போரை நடத்தி வரும் சவூதி அரேபியா, பல முக்கிய யெமன் மாகாணங்களை அதனுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக யெமன்  ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

Crater Skyயின் சமீபத்திய அறிக்கையின்படி, சவூதி அதிகாரி ஒருவர் யெமன் மாகாணங்களான ஹத்ரமவுத், ஷப்வா, அல்-மஹ்ரா மற்றும் அப்யான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலரைக் கொண்ட குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, சவூதி ராஜ்யம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்தார். அந்த மாகாணங்களில் உள்ள மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொண்டால் அவர்கள் சவூதி அரேபியாவுடன் இணைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். இது சவுதியின் தீய நோக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த முடிவு உறுதியானது, ஒருபோதும் அதை ரத்து செய்ய மாட்டோம் என்றும் சவூதி அதிகாரி அறிவித்ததாக ஏடன் சார்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கை வளங்கள் நிறைந்த குறிப்பிட்ட யெமன் மாகாணங்களை "சவூதி அரேபியாவின் அரபு தெற்கு" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளது ஈண்டு கவனிக்கத்தக்கது.

குறிப்பிட்ட அறிக்கையின்படி, இந்திய சமுத்திரத்தை அணுகுவதற்கான அதன் திட்டங்களின் ஒரு பகுதியாக சவூதி இராச்சியத்தின் இந்த முடிவு அமைந்துள்ளது.

அமெரிக்க சார்பு அப்த் ரப்புஹ் மன்சூர் ஹாடியின் ரியாத் நட்பு ஆட்சியை மீண்டும் நிறுவுவதும், அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் யெமனில் அரசு விவகாரங்களை நடத்தி வரும் அன்சாருல்லாஹ் இயக்கத்தை நசுக்குவதும் இதன் நோக்கமாக இருந்தது.

சவூதி தலைமையிலான கூட்டணி அதன் நோக்கங்களை வெற்றிகொள்ள தவறிய நிலையில், போர் நூறாயிரக்கணக்கான யெமனியர்களை கொன்றுள்ளதுடன் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிக்கு வித்திட்டுள்ளது.

அன்ஸாருல்லாஹ் ஆயுதப் படைகள் சவுதியின் கோரப்பிடியில் இருந்து தங்கள் நாட்டை விடுவிப்பதற்காக போராடி முன்னேறி வருவதால், சமீப மாதங்களில், குறிப்பாக முக்கிய மாரிப் மாகாணத்தில், சவுதி ஆதரவுப் படைகள் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், யெமன் மாகாணங்களை இணைக்கும் சவுதி திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

ரியாதின் ஏற்பாடு என்று கூறப்படும் மற்றொரு சதித்திட்டத்தின் கீழ், மன்சூர் ஹாடி கடந்த மாதம் தனது அதிகாரங்களை "ஜனாதிபதி தலைமை" சபைக்கு வழங்கியதாக அறிவித்தார் மற்றும் துணை ஜனாதிபதி அலி மொஹ்சென் அல்-அஹ்மரை பதவி நீக்கம் செய்ததாக அறிவிப்பு செய்தார்.

The Wall Street Journal யெமன் முன்னாள் ஜனாதிபதி மன்சூர் ஹாடியை பதவி விலகுமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) நிர்பந்தித்ததாக பின்னர் செய்தி வெளியிட்டது.

Rai al-Youm, அரபு மொழி டிஜிட்டல் செய்தி மற்றும் கருத்து இணையதளம், The Wall Street Journal அறிக்கையை உறுதிப்படுத்தியது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனின் சமீபத்திய ரியாத் விஜயத்தின் போது நடந்த ஹாடியுடனான தனிப்பட்ட சந்திப்பு முஹம்மத் பின் சல்மானின் திட்டத்திற்கு அமைய இடம்பெற்றிருந்தாக அது மேலும் தெரிவித்தது.

அமெரிக்க சார்பு மன்சூர் ஹாடி 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ஒருமுறை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அன்சாருல்லா இயக்கத்தின் தலைமையிலான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ரியாத்துக்குத் தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர், சவுதி அரேபியாவுக்கு வந்த பிறகு தனது ராஜினாமாவை ரத்து தாமே ஜனாதிபதி என்று மீண்டும் பிரகடனப்படுத்தி கொண்டார். இப்போது மறுபடியும் ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார்.

யெமன் என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஒரு வறிய, பலம் குன்றிய நாடு. இருந்தாலும் அம்மக்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அந்த அப்பாவி மக்களை கொண்று குவிக்க சவுதிக்கு எப்படித்தான் மனசு  வந்ததோ...?

- தாஹா முஸம்மில் 

Saturday, May 7, 2022

மேற்குலகின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்

Double standard of the West exposed

Photo: Aljazeera

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மூன்று மாதங்களாக தொடரும் நிலையில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பொதுவாக மேற்கு நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் பெருகி வருகிறது.

ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா பல மேற்குலக நாடுகளின் விரைவான கண்டனத்தையும் எதிர் நடவடிக்கைகளையும் சந்தித்து வருகிறது., ரஷ்ய வங்கிகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ ஏற்றுமதிகளைக் குறிவைத்து அமெரிக்காவும் மற்றும் பிற மேற்குலக நாடுகளும் உடனடி பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிலும் (UNSC) இது தொடர்பாக அவசர தொடர் சந்திப்புகளை நடத்தியுள்ளது.

ஆனால் இஸ்ரேலின் அடாவடித்தனம் தொடர்பாக இவர்கள் பாராமுகமாக இருந்து வருகின்றனர்.

பிராந்தியத்தில் இஸ்ரேலின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. எனினும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தாமே முன்னணியில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது.

இவர்களின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஈரான் இஸ்லாமிய குடிரசு ஆரம்பம் தொட்டே அம்பலப்படுத்தி வருகிறது. பலஸ்தீன் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தொடர்பாக அமேரிக்கா வெளிப்படையாகவே காட்டி வரும் நயவஞ்சகத்தனத்தையும் ஈரான் தன்னால் இயன்ற அளவு உலகறிய செய்து வருகிறது.

Iranian President Ebrahim Raisi

அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை பற்றி ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுத பரம்பல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான் அணு ஆயுத தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பிரயோகித்தல் போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டவையாக பலமுறை பிரகடனப்படுத்தியும் உள்ளது.

இவ்வாறிருக்க, ஈரான் இஸ்லாமிய குடிரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மேற்குலகம் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதை எல்லோரும் அறிவர்.

ஈரான் இஸ்லாமிய குடியசு அதனது பாதுகாப்பு தேவைக்காக செய்யும் சகல ஆராய்ச்சிகளையும் நிறுத்த வேண்டுமாம்..... குறிப்பாக ஏவுகணை ஆராய்ச்சியை கைவிட வேண்டுமாம்..... அணு ஆராய்ச்சியெல்லாம் இஸ்லாமிய நாடொன்றுக்கு உரியதல்லவாம்..... அது அமெக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கும் ஏகபோக உரிமையாம்..... அரபு நாடுகளைப் போல ஈரானும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டுமாம்..... பலஸ்தீன் விடுதலைக்கான எந்த உதவியும் ஈரான் செய்யக்கூடாதாம்..... இஸ்ரேல் அதிருப்தியுறும் விதத்தில் நடந்துகொள்ளக் கூடாதாம்..... அமெரிக்காவின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிய வேண்டுமாம்.

அதேவேளை, அணு ஆயுத பரம்பல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து, நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை தன்னகத்தே கொண்டுள்ள இஸ்ரேல் பற்றி மேற்குலகு எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது மட்டுமல்லாமல் அதற்கு எல்லாவித உதவிகளையும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்கிறது.

மஹ்மூத் அப்பாஸ்

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சுமார் 75 வருடகால இஸ்ரேலின் "குற்றங்களை" புறக்கணிக்கும் அதே வேளையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு தண்டனை வழங்குவதாக பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை மேற்கின் "இரட்டைத் தரங்களை" விமர்சித்தார்.

Palestinian President Mahmoud Abbas

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனிய ஜனாதிபதி இல்லத்தில் செய்தியாளர்களுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வருகைக்கு அப்பாஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

"ஐரோப்பாவில் தற்போதைய நிகழ்வுகள் அப்பட்டமான இரட்டைத் தரத்தைக் காட்டியுள்ளன," என்று அவர் பிளிங்கனிடம் கூறினார்.

"இஸ்ரேலின் தொடர் குற்றங்கள் மற்றும் அதன் இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப் பாகுபாடு போன்றவற்றை எவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இஸ்ரேல்  சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நாடாக நடந்து வருகிறது. மனித இனத்துக்கு எதிராக இஸ்ரேல் செய்துவரும் அட்டூழியங்களுக்காக அதைப்பொறுப்புகூறலுக்கு உற்படுத்தும் எவரையும் நாங்கள் காணவில்லை," என்று அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் பலஸ்தீன அதிகாரிகள் கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும் வலியுறுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளை எதிர்கொள்வதில் உள்ள பெரும் சவால்களில் ஒன்று, உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நெருக்கடிகளைக் கையாள்வதில் உள்ள அப்பட்டமான இரட்டைத் தரங்களுக்கு அவர்களின் கண்களைத் திறப்பதாகும்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அமைதியான அண்டை நாடு மீது அப்பட்டமான ஆக்கிரமிப்பு எனவும், சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் மற்றும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி சிந்தனையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்கிரமிப்பும் அதுபோன்ற ஒன்றே என்பதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.

இதனால்தான் இளவரசர் துர்கி அல்-ஃபைசலும் மேற்குலகின் பாசாங்குத்தனத்தை கண்டனம் செய்தார். (சவுதியின் இந்த நிலைப்பாடு எவரும் எதிர்பாராத ஒன்று, இருந்தாலும் பலஸ்தீன் தொடர்பாக மனமாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை வரவேற்போம்).

Sadi Arebia's Prince Turki Al-Faisal

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அநீதியான முறையில் தள்ளப்பட்டிருக்கும் இந்த நூற்றாண்டின் திறந்தவெளி சிறைச்சாலையின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய குண்டுவீச்சுகளில் ஏற்பட்ட இடிபாடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

உக்ரேனிய அகதிகள் போலந்திற்குள் நுழைவதை பார்க்கும்போது அமெரிக்க சியோனிச சக்திகளால் இன்னல்களுக்கு உள்ளான அப்பாவி பலஸ்தீன மக்கள், தாம் ஏனைய நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்வதை அவர்கள் ஞாபகத்தில் கொண்டு வருகிறார்கள். பாலஸ்தீனியர்கள் தங்கள் நக்பா அல்லது பேரழிவைப் பற்றி நினைக்கிறார்கள், 74 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் 70 சதவீத மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள்.

ஐரோப்பியர்கள் உக்ரேனியர்களை வரவேற்கும் போது அவர்களது இனவெறி நன்றாகவே வெளிப்படுகிறது, ஏனெனில் அவர்கள் "நம்மைப் போன்றவர்கள்" மஞ்சள் நிற முடி மற்றும் நீலக்கண்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது தமது கடமை என்று எண்ணுகிறார்கள்.

ரஷ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் தீவிரமும் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் வேகமும் கடினத்தன்மையும், எம்மை விழிபிதுங்கச்செய்கிறது, ஆனால் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு தண்டனைக்கு பதிலாக அவர்களது ஆதரவும் ஆசீர்வாதமும் இருந்து வருகிறது.

உக்ரைன் மீதான சமீபத்திய ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே மேற்குலகின் இரட்டை வேடம் தெளிவாக தெரிந்தது; 2014 இல் மாஸ்கோ மீது ஐரோப்பிய ஒன்றியம் கிரிமியா படையெடுப்பு மற்றும் இணைப்பின் போது ஒரு சில நாட்களுக்குள்ளேயே  பொருளாதாரத் தடைகளை விதித்தது.

மேற்கு நாடுகளும் இஸ்ரேல் போன்ற அதன் நண்பர்களும் ஏனைய நாடுகளை போலவே அதே விதிகளுக்கு தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொள்ள வேண்டும்; அதுவே நியாயமாகும்.

இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிப்பது, பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று கோருவது பல சந்தர்ப்பங்களில், குற்றமாக காணப்பட்டது.

கிழக்கு ஜெருசலேம், காசா பகுதி மற்றும் கோலன் குன்றுகள் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் 55 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு குடிமக்களை மாற்றியதாக ரஷ்யா மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது போல், இஸ்ரேல் 650,000க்கும் மேற்பட்ட யூத மக்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு மாற்றியுள்ளது.

ரஷ்யாவும் இஸ்ரேலும் முறையே உக்ரேனியர்களையும் பாலஸ்தீனியர்களையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றியுள்ளன, இது நான்காவது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

பல நொண்டி சாக்குகளை கூறி காசாவில் உள்ள பொதுமக்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக குண்டுவீசித் தாக்கி வருகிறது, ஆனால் அது எதையும் கவனத்தில் கொள்ளாமல் ரஷ்யா நொண்டி சாக்குகளை கூறி வருவதாக மேற்குலகு குற்றம்சாட்டுகிறது என்று லண்டனை தளமாகக் கொண்ட அரபு-பிரிட்டிஷ் புரிந்துணர்வு கவுன்சிலின் இயக்குநர் கிறிஸ் டொய்ல் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளுடன் இணைந்து அமேரிக்கா ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். அமெரிக்காவின் மிருகத்தனத்திற்கு ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்கள் இன்றும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோல் அமேரிக்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு கௌந்தனாமோ பே இன்றும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கிறது. 1950 இல் இருந்து முஸ்லிம் நாடுகளை கடித்து குதறுவதில், அமேரிக்கா முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதில் அலாதி பிரியத்தை காட்டி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நாடு, ரஷ்ய விடயத்தில், சர்வதேச சட்டம், ஜனநாயகம், மனித உரிமை என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது நயவஞ்சகத்தின் உச்சம் என்பதை காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். அவ்வாறன்றி உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துவதல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

-         - தாஹா முஸம்மில்