Wednesday, March 27, 2019

இஸ்லாமிய குடியரசினால் எந்த எதிரியையும் தோற்கடிக்க முடியும் – இமாம் காமனே


Islamic Republic can defeat any enemy - Imam Khamene'i

"அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள் முதல் தர முட்டாள்கள்; அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஈரானிய மக்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி, அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். 2019 ஆம் ஆண்டை தெஹ்ரானில் கொண்டாடுவோம் என்று கிறுக்குத்தனமாக உளறிக் கொட்டினார்கள் அமெரிக்க அதிகாரிகள். ஈரானுக்கு எதிரான திட்டங்கள் அனைத்திலும் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது" என்று கூறினார் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே.
பாரசீக புத்தாண்டையொட்டி இம்மாதம் 21ம் திகதி மஷ்ஹத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இமாம் காமனே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் இந்த ஆண்டு அச்சுறுத்தல்களுக்கும் சோதனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய ஆண்டு என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.  ஆனால் நான் அவ்வாறு நம்பவில்லை. கடந்த ஆண்டும் இவ்வாறே கூறினர். அது பொய்த்துப் போனது. நிச்சயமாக இவ்வாண்டு வாய்ப்புகளுக்குரிய ஆண்டாகவும் அல்லாஹ்வின் அருளால் உற்பத்தி பெருகி, வெற்றிக்குரிய ஆண்டாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்”, என்று தெரிவித்தார்.

எதிரிகளின் பிரச்சாரத்தால் பாதிப்புக்கு உள்ளாகி, எதிர்மறையாகப் பேசும் உள்நாட்டவர் சிலரும் இருக்கவே செய்கின்றனர். ஏதோ விபரீதம் நடக்கவுள்ளது போன்று அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோஅவர்கள் எதிரிகளின் பிரச்சாரத்தின் செல்வாக்குக்கு ஆளாகி உள்ளனர். இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான சக்திகள், அவர்கள் செய்யும் மற்ற காரியங்களுக்கு மேலதிகமாக, ஒரு உளவியல் போரிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதான் அவர்களது வழிமுறை. ஈரானிய மக்களை அச்சுறுத்த கடந்த ஆண்டும் இதைத்தான் செய்தனர்.
அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள் முதல் தர முட்டாள்கள்; அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஈரானிய மக்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். 2019ம் ஆண்டை தெஹ்ரானில் கொண்டாடுவோம் என்று கிறுக்குத்தனமாக உளறிக்கொட்டினார்கள் அமெரிக்க அதிகாரிகள். ஈரானுக்கு எதிரான திட்டங்கள் அனைத்திலும் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது”, என்றும் இமாம் காமனே தெரிவித்தார்.

ஈரானின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா அளித்த தவறான பகுப்பாய்வை இமாம் காமனே சுட்டிக்காட்டியதோடு, இந்த மோசமான பகுப்பாய்விற்கு காரணம் பற்றி விரிவாக விளக்கினார்: உண்மையிலேயே பகுப்பாய்வு செய்த அவர்களுக்கு பிராந்தியத்தினதும் எமது நாட்டினதும் நடப்புகள் பற்றிய அறிவில்லையா? இத்தகைய பகுப்பாய்வுகளை அவர்கள் தீவிரமாக கருதுகிறார்களா அல்லது இது அவர்களின் முட்டாள்தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடா? அல்லது இந்த பகுப்பாய்வுகள் உலகளவிலான அவர்களது உளவியல் போரின் ஒரு பகுதியா? அல்லது உலகம் முழுவதுமான அவர்களது இந்த தீய பிரச்சாரம் வன்மத்தின் வெளிப்பாடா? என்பது எனக்குப் புரியவில்லை. இது முட்டாள்தனம் வன்மம் ஆகிய இரண்டாகவும் இருக்கலாம்.
இன்று, இஸ்லாமிய குடியரசினால் எந்த எதிரியையும் எதிர்த்துப் போராடி, அவர்களை தோல்வியுறச் செய்ய முடியும் என்பதை நமது எதிரிகள்  அறிவார்கள்.

இமாமவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக தொடரும்  பொருளாதார மற்றும் உளவியல் போர்களை பற்றி விளக்குகையில்: இன்று எமது எதிரிகள் எமக்கு எதிராக ஒரு பொருளாதார போரில் ஈடுபட்டிருக்கின்றனர். எதிரிகள் எமக்கு ஏதிராக போர் தொடுத்துள்ளனர் என்பது  இப்போது அனைவருக்கும் தெரியும்; எமது அதிகாரிகளும் அதனை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.  ஆயுதங்களைக் கொண்டுதான் யுத்தங்கள் இடம்பெற வேண்டும் என்பதில்லை. போர் பொருளாதார விவகாரங்களிளிலும்  காணப்படலாம். அறிவார்ந்த மோதலும் ஒரு போர் தான். இந்த வகையான போர் சில நேரங்களில் இராணுவப் போரைவிட ஆபத்தானது. இந்த யுத்தத்தில் எதிரிகளை நாம் தோற்கடிக்க வேண்டும்; அல்லாஹ்வின் கிருபையால் அவர்களை நாம் நிச்சயம் தோற்கடிப்போம். ஆனால் இது போதாது. அரச அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் பொது துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்  எதிரிகளின் சதித்திட்டங்களை தோற்கடிப்பது மட்டுமல்லாது, எதிரிகளை நெருங்கவிடாது விரட்டியடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பர், என்றும் தெரிவித்தார்.

எதிரிகள் எமது நாட்டின் பொருளாதாரத்தைத் சீர்குலைக்க முடியாதவாறு ஈரான் ஒரு தடுப்பு நிலையை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது எம்மால் முடியும். நாம் ராணுவத்துறையில் பலம் பெற்றது போன்று இதுவும் சாத்தியமே. எதிரி எமது நகரங்களை குண்டு வீசி தாக்கும்போது எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது நாம் எமக்கு அவசியமான சாதனங்களை உருவாக்கியுள்ளோம்; எமது எதிரியை இலக்கு தவறாமல், துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை கொண்டுள்ளோம் என்பது எமது எதிரிகளுக்கும் தெரியும்.
சவுதி அரேபியாவின் நிலை பற்றி குறிப்பிடுகையில் இம்மாமவர்கள் சவுதியைப் போன்ற ஒரு மோசமான அரசு முழு பிராந்தியத்திலும் இருக்க முடியாது; முழு உலகத்திலேயும் இருக்குமா என்பது சந்தேகமே. அது ஒரு கொடுங்கோன்மைமிக்க,  சர்வாதிகார, ஊழல் மிகுந்த ஒட்டுண்ணி அரசு. அந்த அரசுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கப் போகிறார்களாம்; அணு உலை ஒன்றை அமைக்கப் போகிறார்களாம். சவுதி அணு உலை உருவாக்குவது பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை. சவூதி அரசு மிக குறுகிய காலத்தில் வீழ்ச்சிடையும் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் ஏவுகணை உற்பத்தி பிரிவுகளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களது ஆட்சியின் நீட்சியே ஆயுதங்களில் தான் தங்கியுள்ளது. இவை பற்றியெல்லாம் நான் கவலைப்படமாட்டேன், ஏனென்றால் மிக விரைவில் அந்த நாடு, அல்லாஹ்வின் உதவியால், இஸ்லாமிய வீரர்களின் கைகளில் வீழும் என்று எனக்குத் தெரியும்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அண்மையில் நியூஸிலண்ட் கிறைஸ்ட்சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட பயங்கவாத தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், மேற்கத்தேய ஊடகங்களின் இரட்டை வேடத்தை கண்டித்தார். பல முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயலாக இந்த ஊடகங்களுக்குத் தெரியவில்லையா...? என்றும் கேள்வி எழுப்பினார். எந்தவோர் ஐரோப்பிய அரசியல்வாதியும் சரி அவர்களது ஊடகங்களும் சரி இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கூற வில்லை. அவர்கள் அதற்கு பதிலாக அவர்கள் ஓர் ஆயுத தாக்குதல் என்றுதான் குறிப்பிட்டனர். மேற்குலகு ஆதரிக்கும் எவருக்காவது ஏதும் நேர்ந்தால், அதனை எதிர்த்து, பயங்கவாதம், மனித உரிமை என்றெல்லாம் கூக்குரலிடுவார்கள். அவர்கள் இப்படித்தான்என்றும் தெரிவித்தார் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே.

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் ஐ.நா.பாதுகாப்பது சபை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட அணு செரிவாக்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் அமேரிக்கா வெளியேறியது தொடர்பாக ஐரோப்ப்பிய நாடுகள் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தை மதிக்கவேண்டிய கடமை, ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் இந்த ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கடமையை சரியாகச் செய்ய தவறிவிட்டன என்றும் இமாம் குறிப்பிட்டார். 

Friday, March 22, 2019

இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் பாரசீக புத்தாண்டு "நொவ்ரூஸ்"


International Day of Nowruz


பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தன; அதிலொன்றுதான் வசந்த காலத்தின் முல் நாளைக் கொண்டாடும் நொவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் 'தனித்துவமான ஈரானிய பண்புகளுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன.


மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால்  "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக ஒரு பூர்வீக பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மற்றும்  நாடுகளுக்கு இடையேயான சமாதானம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

featured-image-index un.org

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின் வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள், பசும் புல், கோதுமை பண்டம், சிவப்பு வகை பெர்ரி,  பூண்டு,  விணாகிரி மற்றும் நாணயம் அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர் ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.


"சால்-தஹ்வில்" எனும் புது வருடம் பிறக்கும் உரிய தருணத்தில், ஒன்றுகூடியுள்ள குடும்பத்தவர்கள் இஸ்லாமிய முறைப்படி முசாபஹா (ஆரத்தழுவுதல்) செய்துகொள்வர். வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்வர். மூத்தவர்கள் இளையவர்களுக்கு கைவிசேடமும் பரிசில்களும் கொடுத்து மகிழ்வர்.

புதிய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் கோதுமை அல்லது பயறை புத்தாண்டன்று கழுவி ஒரு தட்டில் உலர்த்த வைப்பர். புது வருடத்தின் 13ம் நாளன்று தட்டில் முளைவிட்டிருக்கும் பயறை முற்றத்தில் கொட்டிவிடுவர். ஒரு சில நேரங்களில் பொன் மீன்கள் (மிக எளிதாக கிடைக்கக்கூடிய விலங்கு) ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும். பண்டிகை கால முடிவில் சிலர் அம்மீன்களை நதியில் விட்டுவிடுவர்; சிலர் அலங்கார மீன் தொட்டிகளில் இட்டு வளர்ப்பர்.



வீட்டு வைபவங்கள் நிறைவடைந்ததும் ஆரம்ப சில நாட்களில்  குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது வீடுகளுக்குச் சென்று அன்பை பரிமாறிக்கொள்வர். வீட்டிலுள்ள சிறுவர்களுக்காக பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து குதூகலிப்பார்கள். சிறப்பு உணவு மற்றும் "ஆஜில்" (திராட்சைகள் பாதாம் பிஸ்தா போன்ற பல்வேறு விதைகள் மற்றும் பிற இனிப்பு பொருட்களை கொண்ட ஒரு கலவை) பரிமாறப்படும். நிறைய பழங்கள் சாப்பிடுவார்கள். மாதுளைக்கு முக்கிய இடமுண்டு.

புத்தாண்டுக்கு முன் இரவில், புகையூட்டிய மற்றும் புதிதாக வறுத்த மீனுடன் பரிமாறப்படும் "சப்ஸி போலோ மஹி" - புதிய மூலிகைகளுடன்  சமைக்கப்படும் சோறு - ஈரானியர்களுக்கு ஒரு சிறப்பு உணவாகும். அது அவர்களின் பாரம்பரியமுமாகும். இடத்துக்கிடம் இந்த பாரம்பரியம் மாறக்கூடும். பிராந்திய வேறுபாடுகளும் உள்ளன. ஆயினும் மிகவும் வண்ணமயமான விழாக்கள் எங்கும் காணப்படும்.


புதிய ஆண்டின் 13 வது நாள் "சிஸ்தாஹ்  பெடார்" என்று அழைக்கப்படுகிறது. ஈரானியர்கள் இத்தினத்தை பெரும்பாலும் வெளிப்புறங்களில் மற்றும் சுற்றுலாக்களில் கழிப்பர். ஒரு உற்சாகமான உல்லாச பொழுதுபோக்குக்காக பூங்காக்களுக்கு அல்லது உள்ளூர் சமவெளிகளில் நாளைக் கழிக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்வார்கள். இயற்கையுடன் காலத்தை செலவழிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.


இந்த சிஸ்தாஹ் பெடாருக்காக, சிறுவர்கள் ஏங்கிக்கிடப்பார்கள். விடுமுறை நாட்களில் மிகவும் பிரபலமான நாள் இந்த நாளாகும். இந்நாளில் சிறுவர்களின் குதூகலத்துக்குக் குறைவே இருக்காது!



- - தாஹா முஸம்மில் 

Monday, March 18, 2019

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷீஆவா சுன்னியா...?


Was Prophet Muhammad a Shia, a Sunni - BY EJAZ NAQVI, MD

முஸ்லிம் உலகம் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது, ஒவ்வொன்றும் தாம் தான் நேர்வழியில் இருப்பதாகக் கூறுகின்றது.


முஸ்லிம்கள் தங்களை ஷியாக்கள் என்றும் சுன்னிகள் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் இவ்விரண்டு தரப்பினருமே ரஸூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுபவர் என்று  கூறிக்கொள்ளவும் செய்கிறார்கள்: அப்படியாயின் அவர் ஒரு ஷீஆவா சுன்னியா...?, அல்லது இரண்டுமா?

சுன்னிகள் மற்றும் ஷியாக்களின் தோற்றம் பற்றி விவாதத்துக்கு செல்வதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். ஆனால் சுன்னி என்ற சொல் பொதுவாக முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னத்தை (பாரம்பரியம்) பின்பற்றுபவர்களை குறிப்பிடுகிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஷியா என்ற சொல்  'பின்பற்றுபவர்' என்று பொருள்படும் மற்றும் அலீ (ரழி) அவர்களையும் அவரைத்தொடர்ந்து வந்த அஹ்லுல்பத்துக்களான இமாம்களையும் பின்பற்றுபவர்கள் என்பது பொதுவான அர்த்தம். முஸ்லிம்களில் பெரும்பான்மையினரான அஹ்லுல் சுன்னாஹ்வைச் சேர்ந்தோர் ஹஸரத் அபூபக்கர் (ரழி) அவர்களை முதல் கலீபாவாக ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை அஹ்லுல் ஷீ'ஆ பிரிவைச் சேர்ந்தோர், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வாழ்நாளில் ஹஸரத் அலீ (ரழி) அவர்களை தனது வாரிசாக (வலி)யாக, இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும் வழியில், கதீர்கும் என்ற இடத்தில் வைத்து நியமித்தார்கள் என்று நம்புகின்றனர்.

ஒரே உம்மத்தாக இருக்கும் நாம், இந்த பிரச்சினையில், 1400 ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, பிரிந்திருக்கிறோம். நாம் பெரும்பாலும் சுன்னி அல்லது ஷியா என்பதை முதன்மைபடுத்துவதிலேயே குறியாக இருக்கின்றோம்.

முதலில், இந்த இரண்டு சொற்களுமே தவறானவை என்பதை புரிந்துகொள்தல் அவசியமாகும். உண்மையில் சுன்னிகள் (குறைந்தபட்சம் அவர்களில் பெரும்பான்மையினர்) ஹஸரத் அலீ (ரழி) அவர்கள் மீது அன்பு வைத்து, அவரைப் பின்பற்றுவோராக உள்ளனர்; மேலும் அவரை நேர்வழி சென்ற உன்னத கலீபாக்களில்  (குலாஃபா-ஈ-ரஷீதின்) ஒருவராக நம்புகின்றனர். அதே சமயம், ஷியாக்களும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சுன்னத்தையே பின்பற்றுகின்றனர்.

நம் இரு தரப்பினருமே ஒரே இறைவனை நம்புகிறோம், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை இறுதித் தூதராகவும் புனித குர்'ஆனை இறுதி வேத நூலாகவும் மற்றும் நியாயத் தீர்ப்பு நாளையும், மயக்கமோ, தயக்கமோ இன்றி, முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம். அந்த விசுவாசத்துடன், நாம் இரு தரப்பினரும், கீழ் தரப்பட்டுள்ள புனித குர் ஆன் வசனத்தின் படி, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தவர் மீதும் அளவிலா அன்பும் வைத்துள்ளோம்.
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!”….. (42/23)

'சுன்னி மற்றும் ஷியா அறிஞர்கள் இருவருக்கும் அஹ்லுல்பைத் எனப்படுபவோர் ரஸூலுல்லாஹ்வின் நெருங்கிய உறவினர்கள் 'அவருடைய குடும்பம் - மகள் பாத்திமா (அலை), அவரது மருமகன்  அலீ (அலை) மற்றும் அவருடைய பேரர்களான ஹஸன்  (அலை) மற்றும் ஹுசைன்  (அலை)  ஆகியோரைக் குறிக்கிறது என்பதில் பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. எனவே, சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இவர்கள் மீது அன்பு வைத்தல் கடமையாகிறது; இதனை இருதரப்பினரும் செய்கிறோம்.

இந்த விசுவாசத்தின் அடிப்படைகள் எம்மை ஒன்றாக இணைக்க போதுமானதாக இல்லையா...? நம்மில் பலர் பல மதத்தவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விரும்புகின்றனர் (நிச்சயமாக நல்ல விடயம்), ஆனால் எமக்குள் இருக்கும் பிரிவினருடன் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாரில்லை என்பது வியப்பளிக்கிறது. சில இஸ்லாமிய அறிஞர்கள் இவ்விடயத்தை அணுகவே விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் இதனை ஓர் உணர்வுபூர்வமான விடயமாகக் கருதுகின்றனர்; இல்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். நான் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: நாம் ஒன்றாக அமர்ந்து இது விடயமாக கலந்துரையாடாது இருப்பதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா...?

நிச்சயமாக எமக்குள் சித்தாந்தங்களில், சில சடங்குகளில் சில வித்தியாசங்கள் உள்ளன என்பது மறுப்பதற்கில்லை - இவற்றுள் இமாமத் எனும் கோட்பாடு பெரியதாக இருக்கிறது. எவ்வாறாயினும், நாம் கடைபிடிக்கும் குர்ஆன்நாம் பிரிக்கப்படாத, ஓர் உம்மாவாக இருப்பதையே வலியுறுத்துகிறது ; இது மிகவும் தெளிவானது.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; ….. (3/103)

அல்லாஹ் ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லும்போது, அதற்கு மாற்றமாக செயல்படுகையில் ஏற்படக்கூடிய விளைவையும், அதனைத் தொடர்ந்து வசனத்தில், கூறுவதை குர் ஆனின் பல இடங்களில் காண முடியும்.
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (3/105)

நாங்கள் மட்டுமே சரியான பாதையில் இருக்கின்றோம் என்று கூறிக்கொண்டு பிரிந்திருப்பதில் பிரச்சினையில்லை என்று அல்லாஹ் கூறவில்லை. பிரிந்துவிடாதீர்கள்என்றும் பிரிந்திருப்பதால் ஏற்படும் விளைவையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றான். 

"நாமே சரியான பாதையில் இருக்கின்றோம், நீங்கள் வழிகேடர்கள்" என்று கூறுவது எமது நம்பிக்கையில் நோய் இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும். 

குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது: "அல்லாஹ் மட்டுமே இறுதி நியாயாதிபதியாக இருக்கின்றான், மேலும் 'நீங்கள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை தீர்மானிப்பவனாகவும் அவனே இருக்கின்றான்'. இது, முஸ்லிம்களுக்கும் வேதத்தை உடையோருக்கும் இடையிலான புரிந்துனர்வை அதிகரிக்க கூறப்பட்டதாயினும் சுன்னி - ஷீ'ஆ பிரிவினருக்கும் பொருந்தக்கூடியதே.

றஸூலுல்லாஹ்வின் வாழ்வே புனித குர் ஆனுக்கான விளக்கம் என்பதில் எம் இருதரப்பினருக்கும் இடையில் அபிப்பிராயபேதம் கிடையாது. 

நான் இப்போது எனது தலைப்பு கேள்விக்கு வருகிறேன்: "ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் யார்... ஷீ ஆவா சுன்னியா...?"

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷியாவும் அல்ல சுன்னியும் அல்ல என்று சிலர் வாதிடலாம். இன்னும் சிலர், அலீயின் மீது அன்பு வைத்திருந்ததனாலும் தனது வழிமுறையின் மூலம் குர்ஆனுக்கும் விளக்கம் காட்டிச் சென்றதனாலும்,  அவர் ஒரு ஷீ ஆவும்தான் சுன்னியும்தான் என்று நம்புகின்றனர்.


ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ரசூலுல்லாஹ் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக்கொண்டுள்ள  எமக்கு அல்லாஹ்வே இட்டுள்ள பெயர் முஸ்லிம். ஆகவே நாம் அனைவரும் முஸ்லிம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம்.

(இந்தக்கட்டுரை இஜாஸ் நக்வி அவர்களது ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது)


பார்க்க