Monday, March 18, 2019

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷீஆவா சுன்னியா...?


Was Prophet Muhammad a Shia, a Sunni - BY EJAZ NAQVI, MD

முஸ்லிம் உலகம் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது, ஒவ்வொன்றும் தாம் தான் நேர்வழியில் இருப்பதாகக் கூறுகின்றது.


முஸ்லிம்கள் தங்களை ஷியாக்கள் என்றும் சுன்னிகள் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் இவ்விரண்டு தரப்பினருமே ரஸூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுபவர் என்று  கூறிக்கொள்ளவும் செய்கிறார்கள்: அப்படியாயின் அவர் ஒரு ஷீஆவா சுன்னியா...?, அல்லது இரண்டுமா?

சுன்னிகள் மற்றும் ஷியாக்களின் தோற்றம் பற்றி விவாதத்துக்கு செல்வதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். ஆனால் சுன்னி என்ற சொல் பொதுவாக முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னத்தை (பாரம்பரியம்) பின்பற்றுபவர்களை குறிப்பிடுகிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஷியா என்ற சொல்  'பின்பற்றுபவர்' என்று பொருள்படும் மற்றும் அலீ (ரழி) அவர்களையும் அவரைத்தொடர்ந்து வந்த அஹ்லுல்பத்துக்களான இமாம்களையும் பின்பற்றுபவர்கள் என்பது பொதுவான அர்த்தம். முஸ்லிம்களில் பெரும்பான்மையினரான அஹ்லுல் சுன்னாஹ்வைச் சேர்ந்தோர் ஹஸரத் அபூபக்கர் (ரழி) அவர்களை முதல் கலீபாவாக ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை அஹ்லுல் ஷீ'ஆ பிரிவைச் சேர்ந்தோர், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வாழ்நாளில் ஹஸரத் அலீ (ரழி) அவர்களை தனது வாரிசாக (வலி)யாக, இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும் வழியில், கதீர்கும் என்ற இடத்தில் வைத்து நியமித்தார்கள் என்று நம்புகின்றனர்.

ஒரே உம்மத்தாக இருக்கும் நாம், இந்த பிரச்சினையில், 1400 ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, பிரிந்திருக்கிறோம். நாம் பெரும்பாலும் சுன்னி அல்லது ஷியா என்பதை முதன்மைபடுத்துவதிலேயே குறியாக இருக்கின்றோம்.

முதலில், இந்த இரண்டு சொற்களுமே தவறானவை என்பதை புரிந்துகொள்தல் அவசியமாகும். உண்மையில் சுன்னிகள் (குறைந்தபட்சம் அவர்களில் பெரும்பான்மையினர்) ஹஸரத் அலீ (ரழி) அவர்கள் மீது அன்பு வைத்து, அவரைப் பின்பற்றுவோராக உள்ளனர்; மேலும் அவரை நேர்வழி சென்ற உன்னத கலீபாக்களில்  (குலாஃபா-ஈ-ரஷீதின்) ஒருவராக நம்புகின்றனர். அதே சமயம், ஷியாக்களும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சுன்னத்தையே பின்பற்றுகின்றனர்.

நம் இரு தரப்பினருமே ஒரே இறைவனை நம்புகிறோம், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை இறுதித் தூதராகவும் புனித குர்'ஆனை இறுதி வேத நூலாகவும் மற்றும் நியாயத் தீர்ப்பு நாளையும், மயக்கமோ, தயக்கமோ இன்றி, முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம். அந்த விசுவாசத்துடன், நாம் இரு தரப்பினரும், கீழ் தரப்பட்டுள்ள புனித குர் ஆன் வசனத்தின் படி, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தவர் மீதும் அளவிலா அன்பும் வைத்துள்ளோம்.
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!”….. (42/23)

'சுன்னி மற்றும் ஷியா அறிஞர்கள் இருவருக்கும் அஹ்லுல்பைத் எனப்படுபவோர் ரஸூலுல்லாஹ்வின் நெருங்கிய உறவினர்கள் 'அவருடைய குடும்பம் - மகள் பாத்திமா (அலை), அவரது மருமகன்  அலீ (அலை) மற்றும் அவருடைய பேரர்களான ஹஸன்  (அலை) மற்றும் ஹுசைன்  (அலை)  ஆகியோரைக் குறிக்கிறது என்பதில் பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. எனவே, சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இவர்கள் மீது அன்பு வைத்தல் கடமையாகிறது; இதனை இருதரப்பினரும் செய்கிறோம்.

இந்த விசுவாசத்தின் அடிப்படைகள் எம்மை ஒன்றாக இணைக்க போதுமானதாக இல்லையா...? நம்மில் பலர் பல மதத்தவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விரும்புகின்றனர் (நிச்சயமாக நல்ல விடயம்), ஆனால் எமக்குள் இருக்கும் பிரிவினருடன் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாரில்லை என்பது வியப்பளிக்கிறது. சில இஸ்லாமிய அறிஞர்கள் இவ்விடயத்தை அணுகவே விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் இதனை ஓர் உணர்வுபூர்வமான விடயமாகக் கருதுகின்றனர்; இல்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். நான் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: நாம் ஒன்றாக அமர்ந்து இது விடயமாக கலந்துரையாடாது இருப்பதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா...?

நிச்சயமாக எமக்குள் சித்தாந்தங்களில், சில சடங்குகளில் சில வித்தியாசங்கள் உள்ளன என்பது மறுப்பதற்கில்லை - இவற்றுள் இமாமத் எனும் கோட்பாடு பெரியதாக இருக்கிறது. எவ்வாறாயினும், நாம் கடைபிடிக்கும் குர்ஆன்நாம் பிரிக்கப்படாத, ஓர் உம்மாவாக இருப்பதையே வலியுறுத்துகிறது ; இது மிகவும் தெளிவானது.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; ….. (3/103)

அல்லாஹ் ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லும்போது, அதற்கு மாற்றமாக செயல்படுகையில் ஏற்படக்கூடிய விளைவையும், அதனைத் தொடர்ந்து வசனத்தில், கூறுவதை குர் ஆனின் பல இடங்களில் காண முடியும்.
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (3/105)

நாங்கள் மட்டுமே சரியான பாதையில் இருக்கின்றோம் என்று கூறிக்கொண்டு பிரிந்திருப்பதில் பிரச்சினையில்லை என்று அல்லாஹ் கூறவில்லை. பிரிந்துவிடாதீர்கள்என்றும் பிரிந்திருப்பதால் ஏற்படும் விளைவையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றான். 

"நாமே சரியான பாதையில் இருக்கின்றோம், நீங்கள் வழிகேடர்கள்" என்று கூறுவது எமது நம்பிக்கையில் நோய் இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும். 

குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது: "அல்லாஹ் மட்டுமே இறுதி நியாயாதிபதியாக இருக்கின்றான், மேலும் 'நீங்கள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை தீர்மானிப்பவனாகவும் அவனே இருக்கின்றான்'. இது, முஸ்லிம்களுக்கும் வேதத்தை உடையோருக்கும் இடையிலான புரிந்துனர்வை அதிகரிக்க கூறப்பட்டதாயினும் சுன்னி - ஷீ'ஆ பிரிவினருக்கும் பொருந்தக்கூடியதே.

றஸூலுல்லாஹ்வின் வாழ்வே புனித குர் ஆனுக்கான விளக்கம் என்பதில் எம் இருதரப்பினருக்கும் இடையில் அபிப்பிராயபேதம் கிடையாது. 

நான் இப்போது எனது தலைப்பு கேள்விக்கு வருகிறேன்: "ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் யார்... ஷீ ஆவா சுன்னியா...?"

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஷியாவும் அல்ல சுன்னியும் அல்ல என்று சிலர் வாதிடலாம். இன்னும் சிலர், அலீயின் மீது அன்பு வைத்திருந்ததனாலும் தனது வழிமுறையின் மூலம் குர்ஆனுக்கும் விளக்கம் காட்டிச் சென்றதனாலும்,  அவர் ஒரு ஷீ ஆவும்தான் சுன்னியும்தான் என்று நம்புகின்றனர்.


ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ரசூலுல்லாஹ் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக்கொண்டுள்ள  எமக்கு அல்லாஹ்வே இட்டுள்ள பெயர் முஸ்லிம். ஆகவே நாம் அனைவரும் முஸ்லிம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம்.

(இந்தக்கட்டுரை இஜாஸ் நக்வி அவர்களது ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது)


பார்க்க 



No comments:

Post a Comment