Saturday, June 30, 2018

ஜலாலுத்தீன் ரூமி - மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பை ஏற்படுத்திய மெஞ்ஞானி

Jalaluddin Rumi

லாலுத்தீன் முகம்மது பல்கி என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் 1207ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதி பாரசீக சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட கொராஸான் மாகாணத்தின் போல்க் பிரதேசத்தில் பிறந்தார். இவர் பாரசீக மொழியில் இறைவனுக்காக பணியாற்றுபவர் என்ற பொருள்கொண்ட 'மௌலவி' என்றும் அழைக்கப்படுகின்றார்.

அவரின் தந்தையார் பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க சூபி ஞானியாகத் திகழ்ந்தார்கள். போல்கின் பெரும் பகுதி அப்போது பாரசீக கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக சூபிசம் வளர்ந்து, வேரூன்றியிருந்தது. சூபிசம் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்கு பெரும் பங்குண்டு.
 
மௌலானா அவர்களுக்கு 11 வயதாக இருந்தபோது, அடிக்கடி நிகழ்ந்த மங்கோலிய படையெடுப்புகளின் காரணமாக அவரது குடும்பம் கொராஸானை விட்டு வெளியேறி, பக்தாதுக்கும் மக்காவுக்கும் டமஸ்கஸுக்கும் குடிபெயர்ந்து, சில ஆண்டுகளில் துருக்கியில் உள்ள கொன்யா பிரதேசத்தின் 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறி, நீண்ட காலம் அங்கேயே வாழ்ந்துவந்தது. இதன் காரணமாக அவர் ' மௌலானா ரூமி' என்று அழைக்கப்பட்டார்.


ரூமி, அக்காலத்தில் ஏனைய முஸ்லிம்கள் போலவே அரபுமொழி, குர்ஆன், இறையியல், சட்டம், அஹதீத் (நபி முஹம்மத் (ஸல்) நபிமொழிகள்), வரலாறு, தத்துவம், கணிதம் மற்றும் வானியல் ஆகியவற்றை கற்றுவந்தார்கள்.

அவர் மற்றும் அவரது தந்தை இருவரும் குர்ஆனின் வெளிப்பாடுகளில் உறுதியான விசுவாசிகளாக இருந்தனர்,  ஆனால் அந்த காலகட்டத்தில் குர்'ஆனின் உள்ளார்ந்த அர்த்தங்களில் கவனம் கொள்ளாது, வெளிவாரியான அர்த்தத்தில் மட்டும் கவனம் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களை விமர்சித்துவந்தனர். குருட்டுத்தனமான பின்பற்றலையும் எதிர்த்து வந்தனர். இவர்களது ஆரம்ப கால கவிதைகள், இது தொடர்பாக, மக்களை விழிப்பூட்டுவதாக அமைந்திருந்தன.

அவரது தந்தையின் மரணத்தின் போது, அவர் ஒரு சிறந்த கல்விமானாகி, 24 வயதில் நாட்டின் மிக உயர்ந்த அறிஞர்களில் ஒருவராக தனது தந்தையைப்போன்று அந்தஸ்தில் உயர்ந்தார். தனது நேரத்தை கற்பித்தல் மற்றும் பொது மக்களுக்கு மார்க்க விரிவுரைகளை வழங்குவதில் செலவிட்டார். 35 வயது வரை அவரது வாழ்க்கை இவ்வாறே கழிந்தது.

1244 ஆம் ஆண்டில், ரூமி, ஷம்ஸ் என்று (அல்லது ஷாம்ஸி தப்ரிஸி) என்று அழைக்கப்பட்ட ஒரு சூபி ஞானியை சந்தித்தார். இவர்கள் இருவரும் வெகு சீக்கிரமே உற்ற நண்பர்களாக ஆயினர். அப்போது ரூமி, ஷம்ஸிடம் எதோ ஒரு விசேட தன்மை இருப்பதை அறிந்துகொண்டார். அதன் பிறகு ரூமியினது வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது. அதிகமதிகம் தனிமையை விரும்பினார்; சமூகத்தில் இருந்து ஒதுங்கலானார்; முன்பு போன்று வாத விவாதங்களில் கலந்துகொள்வதையும் தவிர்த்தார்.

இவர்கள் இருவருக்குமிடையிலான உறவு அவரது குடும்பத்தாரிலும் ஷம்ஸின் ஏனைய மாணவர்களிடத்திலும் பொறாமையை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் இவ்வுறவு தொடர்ந்தது. அதன் பிறகு ஒருநாள் ஷம்ஸ் தப்ரிஸி யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று எவருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வேலை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரின் சீடர்கள் கருதினர். ஆயினும் ரூமி அதனை நம்ப மறுத்தார். அவர் தனது நண்பரைத் தேடி பல ஆண்டுகளாக, பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்தார். நண்பரின் இழப்பை ரூமியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  இந்த இழப்பே அவரது கவிதையின் மூலம் அவரது ஆத்துமாவின் வெளிப்பாட்டிற்கு வழிவகுத்தது. "திவானே ஷம்ஸே - தப்ரிஸி" என்ற நூலாகப் பெயர் பெற்றது.

இந்த நூல் 40,000-க்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த "கஸல்" கவிதைகள், வெளித்தோற்றத்தில், ஷம்ஸ் தப்ரிசியை விளித்துப் பாடப்பட்டது போன்று தோன்றினாலும் உண்மையில் அவை இறை காதலை விவரிக்கும் கவிதைகளாக இருப்பதை உணர்ந்துகொள்வது கடினமல்ல. இது பாரசீக மொழியில் எழுதப்பட்ட மற்றும் பாரசீக இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இதனை "திவானே கபீர்" என்றுமழைப்பர். இதன் மூலப்பிரதியில், பல்வேறு வடிவங்களில் 44,282 கவிதை வரிகள் உள்ளன. ரூமியின் படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன, ஆனால் சில சமயங்களில் அவர் துருக்கிய, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும்  பயன்படுத்தி உள்ளார்.

ஜலாலுத்தீன் ரூமி மீது ஷாம்ஸி தப்ரிஸி தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது வாஸ்த்தவமே என்றாலும், அவர் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த பற்று, இறை காதலாக பிரவாகிக்க ஷம்ஸ் ஒரு தூண்டுகோலாய் இருந்துள்ளார் என்பதுவே உண்மை. அதுவே ரூமியின் உள்ளிருந்து  ஆத்மாவாக வெளிவந்தது.

ரூமி அரிதாகவே தனது சொந்த கவிதைகளை எழுதினார். அவரின் மற்றுமொரு புகழ்பெற்ற படைப்பான  மஸ்னவியில் உள்ள ஆறு கவிதை புனைவை, அவர் பாடப்பாட  அவரது மாணவர் ஹுசாம் சுலாபியை எழுதப் பணித்தார்.

ரூமி கவிதை வரிகளை, நடனம் ஆடுவதுபோன்று சுழன்று சுழன்று வரும் நிலையிலேயே பாடுவார். இந்த  நடனம் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பினை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

மஸ்னவியின் ஆறு பாகங்களில் மொத்தம் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் 1273ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதியன்று (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள்) இறையடி சேர்ந்தார். "மஸ்னவி" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், எந்தக்குறையுமின்றி பூரணமானதாகவே அது காணப்படுகின்றது.

அவரது கவிதைகளின் கருத்தாழத்தை அறியவேண்டுமாயின் நவீன பாரசீக மொழியில் சிறந்த அறிவுடன் இறைத் தூதரின் வாழ்க்கை மற்றும் குர்'ஆணிய போதனை ஆகியவற்றில் நன்கு பரிச்சயம் உடையோரால் மட்டுமே முடியும்.

A.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' என்ற புத்தகத்தில் ரூமி பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
"மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம், மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர். "

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் கவிதைகள் உலகின் அனைத்து பிரதான மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் யுனெஸ்கோ 2007ம் ஆண்டை ரூமி ஆண்டாக பிரகடனப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கத்து.

ரூமியின் கவிதை தொடர்ச்சியான ஆன்மீக அனுபவங்களின் தொடர் - இயற்கை அழகின் பிரதிபலிப்பு, ஒரு பாடல், ஒரு நடனம், ஒரு சிந்தனை, ஓர் உணர்வு ... நம்மை மனிதனாக உருவாக்கும் எதையும், திறந்த அல்லது மூடிய கண்களூடாக பார்க்க முடிகின்ற ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கிறது.


- தாஹா முஸம்மில் 

Saturday, June 23, 2018

தறுதலை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தோம் - ஜவாத் ஸரீப்

Iran will not hold negotiations with US as 'rogue' state: Zarif
சர்வதேச சட்டத்தை பலமுறையும் மீறுவதன் மூலம் அமெரிக்கா ஒரு "தறுதலை" அரசாக மாறியுள்ளது. தனது வார்த்தைகளை மீறும்பலதரப்பு உடன்படிக்கைகளை மதிக்கத்தவறிசெயலிழக்க சதிசெய்யும் ஒரு நாட்டுடன் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது”- 
புதனன்று (20/06/2018) ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட "அமெரிக்க வெளியுறவு கொள்கை நெருக்கடி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில்தற்போதுள்ள பன்னாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வாஷிங்டன் வாபஸ்  பெற்ற பின்னர் ஈரானுடனான "புதிய" உடன்படிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்போவால் சமீபத்தில் முன்வைக்கப்பட்ட  ஒரு  12 அம்ச நிபந்தனைக்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முஹம்மத் ஜவாத் ஸரீப் பதிலளித்தார்.
"சில சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வாபஸ் வாங்குவது என்பது மற்றவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, சர்வதேச அமைப்புகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளோடு சேர்ந்துஅமெரிக்க அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு உதாரணங்களாக உள்ளன. அவை சர்வதேச ஒழுங்கை துரதிருஷ்டவசமாகஇருண்டதாகிவிட்டனஎன்று குறிப்பிட்டுள்ளார்.

"வெளிப்படையாகஅத்தகைய கொள்கைகளை தொடர்வது சர்வதேச சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்கா ஒரு தறுதலைத்தனமான அரசாகவும் சர்வதேச சட்டங்களை மதிக்காத ஒரு நாடாகவும் மாற்றிவிடும்" என்றும் தெரிவித்துள்ளார்.
விரிவான கூட்டு திட்டம் (JCPOA) என்று அழைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமேரிக்கா தன்னிச்சையாக வெளியேறியதானது அது பன்முக உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறிய மூன்றாவது முறையாகும். வாஷிங்டனின் இந்த மீறலானது பன்னாட்டு ஒப்பந்தங்களைச் சிக்கலாக்கி சர்வதேச இராஜதந்திரத்திற்கான வாய்ப்புகளையும் கணிசமாக பாதிப்பதாக உள்ளது. இதற்கு முன் அது வெளியேறிய NAFTA, உலகளாவிய வர்த்தக அமைப்புமற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில பகுதிகளும் அடங்கும் என்றும் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க வெளிவிவகார அலுவலர்கள் பங்கு பற்றிநூற்றுக்கணக்கான மணிநேர இருதரப்பு இருதரப்பு பேச்சுவார்த்தைகள்பலதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆகிவற்றைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்பாட்டில்அமெரிக்காவினால் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுசாசனத்தின்  25 வது பிரிவின் கீழ்  ஒரு சர்வதேச உறுதிப்பாடாக  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாகவும் அனாவசியமாகவும் வெளியேறுவதாயின்மற்றொரு சுற்று தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தை நம்பகமான தரப்பாக எவ்வாறு  கருத முடியும்? " என்றும் ஜவாத் ஸரீப் கேள்வி எழுப்பினார்.
அதன் வார்த்தையினதும் கையொப்பத்தினதும் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது அமெரிக்க அரசாங்கத்திடமே அன்றி ஒத்துழைப்பு வழங்கி உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படும் மற்ற தரப்பு அல்ல என்பதை திரு. பாம்போ மறந்துவிட்டார் என்று ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டார்.
தெஹ்ரான் அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ள மறுத்தால்இஸ்லாமியக் குடிரேசின்ன் மீது "வரலாற்றில் வலுவான பொருளாதாரத் தடைகளை" திணிப்பதன் மூலம் வாஷிங்டன் ஈரான் மீது நிதி அழுத்தத்தை அதிகரிக்கும் என்று மே 21 ம் தேதி பாம்போ கூறினார்.
ஈரான் பிரதான சக்திகளுடன் கையெழுத்திட்டுள்ள அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களுக்கு பின்னர்தெஹ்ரானுடனான "புதிய உடன்படிக்கைக்கு" 12 கடுமையான நிபந்தனைகளை பாம்போ விதித்தார்.
அவரது நிபந்தனைகளில் ஒன்றுசிரியாவில் பெரும்பாலும் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய மற்றும் பிராந்திய கூட்டாளிகள் உதவுகின்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு உதவி வரும் ஈரான் அதன் இராணுவ ஆலோசகர்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுவும் ஒன்றாகும்.
கடந்த 17 மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் "உளறல்களும்  மற்றும் அறிவுக்கொவ்வாத முடிவுகளும் நடத்தைகளும்" வாஷிங்டனின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கிய காரணியாகிவிட்டது என்று ஜவாத் ஸரீப் கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளில் அனைத்து அமெரிக்க நிர்வாகங்களும் ஈரானிய நாட்டினரை நம்பிக்கை இலக்கச்செய்துஅவர்களுக்கு எதிராக மேற்கொண்ட அநீதிவன்முறைபயங்கரவாதம்போர் ஆகியவற்றிற்கும் மேற்கு ஆசியாவில் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தியதற்காகவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளை மீறியதற்காகவும் பொறுப்பு கூறவேண்டும் என்ற வாதத்தையும் ஜவாத் ஸரீப் முன்வைத்தார்.
இதற்கு பதிலாகஅமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஈரானின் நியாமான  கோரிக்கைகளின் விரிவான பட்டியலை ஜரிஃப் முன்வைத்தார். வாஷிங்டன் அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துதல் என்ற அதன் கொள்கையை கைவிட்டுஉடனடியாக JCPOA உடன்படிக்கை மீறல்களை நிறுத்திகடந்த தசாப்தங்களில் ஈரான் மக்களுக்கு எதிரான அதன் தேவையற்ற மற்றும் சட்டவிரோத செயல்களை ஒப்புக் கொள்ளுவதுடன் அணுவாயுதங்களில் தங்கியிருத்தலையும் மரபு மீறிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் கோட்பாட்டையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பவை முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சிலவாகும்.
ஈரானிய வெளியுறவு மந்திரி பாரசீக வளைகுடாவில் பிராந்திய நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் வெளிநாட்டு குறுக்கீடு இல்லாமல் வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் இலக்காகக்கொண்ட ஒரு "பிராந்திய உரையாடல் கருத்துக்களம்" உருவாக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
"பிராந்திய நாடுகளின் இறைமை சமத்துவம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில், பிராந்திய நாடுகளை நெருக்கமாக பிணைத்து நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்; அச்சுறுத்தல்களைத் தவிர்த்து சர்ச்சைகளுக்கு சமாதான தீர்வு, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச எல்லைகளை மீறாமலும் மற்றவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிப்போம் என்றும் ஜவாத் ஸரீப் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, June 17, 2018

சவால்களை முறியடித்து நாற்பது ஆண்டுகளைக் கடக்கும் ஈரான்...!

Forward march of Iran through forty years of revolution
இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் இஸ்லாமிய புரட்சி வெடிக்கிறது. 
'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமென்றே போதும்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. 
அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது. 

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். எமக்கு வேண்டிய விதத்தில் இஸ்லாமிய உலகைத் துண்டாடி எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லீம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில் மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் திடீரென ஒரு புரட்சி வெடிக்கிறது. 
அதுவும் இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் இஸ்லாமிய புரட்சியாக வெடிக்கிறது. 'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமென்றே போதும்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது. ஈற்றில், 1979ம் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று, ஈரானில் இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிறுவப்படுகிறது. 

அப்போது அவர்கள், அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கேலி செய்தனர். இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர். அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 40 ஆண்டுகளை கடந்துகொண்டிருக்கிறது.

இந்த நான்கு தசாப்த காலத்தில் ஈரான் சந்தித்த சவால்களோ எண்ணிலடங்கா. சதாம் ஹுசைனைக்கொண்டு யுத்தமொன்றைத் திணித்தனர், பொருளாதாரத் தடைகளை விதித்தனர், அடங்கிப்போகாவிட்டால் அணுகுண்டை போட்டு அழித்துவிடுவோம் என்று அச்சுறுத்தினர். தொடரும் இவ்வச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் இன்று எல்லா துறைகளிலும் வீறுநடை போட்டுவருகிறது என்பது கண்கூடு.

மேற்கின் சதித்திட்டங்களை அடையாளம்காணல்

மேற்குலகம் வரையறுத்த பூகோளமயமாக்கல் என்ற இந்த சர்வதேச வர்த்தக கொள்கையின்; விரிவாக்கத்தின் ஊடாக, சர்வதேச முதலீட்டின் (வெளிநாட்டு முதலீட்டின்) வளர்ச்சியை துரிதப்படுத்தலும், நாடுகளுக்கு இடையே நுகர்வு தொழில்நுட்பத்தை அதிகரித்து, உலகை தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுமாகும். இது அடிமைப்படுத்தலின் நவீன வடிவமாகும் என்பதை ஈரான் நன்கு புரிந்துகொண்டது.

பொருளாதார பயங்கரவாதம்

இந்த பூகோளமயமாக்கலின் காரணமாக நம்முடைய தேசிய வளங்கள்மூலம் பெறப்படும் பாரிய செல்வம் நமது சொந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுவதற்குப் பதிலாக வளர்ந்த நாடுகளில், அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறன. ஈற்றில் செல்வந்த நாடுகள் அவற்றின் செல்வத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றன, அதற்கு நாமே அறிந்தோ அறியாமலோ உடந்தையாகியும் விடுகின்றோம். எம்மவர்களால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தையே இங்கு கொண்டுவந்து எங்
கள் நாடுகளில் முதலீடு செய்கின்றனர்; என்பதை பலர் அறியாதுள்ளனர்,

முதலீடு செய்யப்படும் நாடுகளில் தமக்கு சாதகமான சூழல் இருக்கும் வரை இவர்கள் பிரச்சினை எதனையும் படுத்துவதில்லை. ஆனால், தமது நலனுக்கு, இலாப நோக்கத்துக்கு பாதிப்பு ஏதாவது ஏற்படுமானால் அவர்கள் பொருளாதார பயங்கரவாத்தில் ஈடுபட்டுவிடுவர். திடீரென தங்கள் முதலீட்டை வாபஸ் வாங்கிக்கொண்டு எமது பொருளாதாரத்தை சீர்குலைத்து எம்மை வறுமையில் தள்ளி, இறுதியில் அவர்களிடமே மண்டியிடச்செய்வர் என்பதும் ஈரானுக்குத் தெரியும். 

1997ம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இந்த பொருளாதார பயங்கரவாதத்தை இவர்கள் செய்தனர் என்பது ஞாபகம் இருக்கும். பொருளாதாரத்தை ஒரே இரவில் தலைகீழாக புரட்டிவிட்டனர்;. இதன் காரணமாக, தாய்லாந்து கோடீஸ்வரர்கள் பாதை ஓரத்தில் சேன்ட்விச் (ளுயனெறiஉர்) விற்கும் நிலையும் ஏற்பட்டது என்பதையும் நாம் அறிவோம். 

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யமாட்டோம், மீன்களை இறக்குமதி செய்யமாட்டோம், ஜி.எஸ்.டி. (புளுவு) சலுகையை நிறுத்திவிடுவோம் என்றெல்லாம் வந்த மிரட்டல்களை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. எல்லா வறிய நாடுகளின்; நிலையும் இதுதான். இந்த மேற்குலக அரசுகள் அவற்றின் உத்தரவுகளுக்கமைய வறிய நாடுகள் செயற்படாவிட்டால் அவை நடந்துகொள்ளும் விதமே வேறு. 

பல நாடுகள் தமது பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதை பெருமையாக கருதுகின்றன. தமது தேசிய சுதந்திரம் வெளிநாட்டவருக்கு அடகு வைக்கப்படுகிறது என்பதும் கல்வியில் பின்தங்கியுள்ள எமது பரிதாபகரமான நிலையை அவர்கள் லாவகமாக பயன்படுத்தி, எம்மையே அடிமையாக்கி வைக்கின்றனர் என்பதும் எமக்கு எதிராகவே அவற்றை பயன்படுத்துகின்றனர் என்பதும்; தலைவர்களுக்குப் புரிவதில்லை. சொந்த நாட்டின் இயற்கை வளங்களை அந்தந்த நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துவதற்குக் கூட லாயக்கற்றவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இந்த நிலை அறபு நாடுகளுக்கு மிகவும் பொருந்தும். இந்த விடயத்தில் ஈரான், பல இன்னல்களை சந்தித்தபோதும், மிகவும் சாதுர்யமாக, திட்டமிட்டு செயற்பட்டது என்பதை அதன் எதிரிகளும் இன்று ஏற்றுக்கொள்கின்றனர்.

அறபுலகின் நிலை வேறு. அங்கு ஆட்சியாளர்கள், தமக்கு உலகெங்கிலும் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் அவர்களது செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்காக, வெளி அச்சுறுத்தல்களில் இருந்து தமது ஆட்சி அதிகாரத்தை மேற்குலகு பாதுகாக்கும் என்றும் வெகுளித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். அதற்காக, தேசிய செல்வத்தை எதிரிகளின் காலடியிலேயே கொட்டிக்கொண்டுமிருக்கின்றனர். 

நவீன காலனித்துவம்

வலிமை வாய்ந்த நாடுகள் இப்போதெல்லாம் ராணுவ பலத்தால் ஒரு நாட்டை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதை விட வேறு வழிகளையே கையாளுகின்றன. பூகோளமயமாக்கல் என்ற கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாணய வர்த்தகத்தின் ஊடாக நாடுகளை கட்டுப்படுத்தி இதே விளைவுகளை அவை பெற்றுக்கொள்கின்றன. இலங்கை போன்ற வறிய நாடுகள் மீது கடன் சுமையை அதிகரிப்பதன் மூலம் அந்நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.  ராணுவ வீரர்களின் உயிர்களை பலியிடாமலேயே 'காலனித்துவத்தின்' இந்த வடிவத்தை அடைய முடியும் என்பதை அந்த சக்திகள் நன்றாக அறிந்து வைத்துள்ளன. 

ஒரு நாடு ஏழ்மை நிலை அடைந்துவிட்டால், அது அரசியலளவில் உறுதியற்றதாக இருக்கும், அங்கு அதிகாரப் போராட்டம் ஏற்படும். இதன் விளைவாக, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். உலக வல்லரசுக்கு அடிபணியத் தயாராக உள்ள ஒரு வேட்பாளர் அடையாளம் காணப்பட்டு, பதவியில் அமர்த்தப்படும் வரை இந்நிலை தொடரும். அவர்களது இந்த சதித்திட்டத்துக்கு ஜனநாயகம் என்றும் பெயர் வைப்பர். இவர்களின் இந்த திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், செல்வந்த நாடுகள், அவற்றின் செல்வத்தையும் தொழில்நுட்பத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளும்; என்று நம்பச்செய்வர். ஆனால், பூகோளமயமாக்கலானது, அவர்களின் பெரிய மூலதனத்தையும் அதிநவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஏழை நாடுகளின் வளங்களை எவ்வாறு சுரண்டமுடியும் என்பதிலேயே குறியாய் இருக்கும் என்பதை பலர் அறியார்.

அறபு வசந்தம் 

அறபு வசந்தம் என்ற சொற்றொடரை மறந்திருக்க மாட்டீர்கள். வளங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்று அவர்கள் பட்டியலிட்டுள்ள அறபு நாடுகளில் தமது அடியாட்களைக்கொண்டு கலகங்களை ஏற்படுத்தி, அவர்களே அதற்கு 'அறபு வசந்தம்' என்று பெயரிட்டு அவர்களது ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அறபு நாடுகளில் ஏதோ பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்று முஸ்லிம்களையும் உலக மக்களையும் நம்பச் செய்தனர். இப்படி வசந்தம் வீசிய எந்த நாட்டிலாவது இஸ்லாம் மறுமலர்ச்சி பெறவில்லை. மாறாக இறைமையை எதிரிகளிடம் பறிகொடுத்தது தான் மிச்சம். எமது முட்டாள்தனத்தை எதிரிகள் நன்றாகப் பயன்படுத்தி, அவர்களது திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டனர். இப்போது அறபு வசந்தம் என்ற சொல்லையே உச்சரிப்பதில்லை.

இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்கையிலும், சடவாதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான ஒரு சமநிலையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. மேற்குலகில் ஆன்மீக பெருமானங்களின்  மதிப்பிழப்பு தடையற்ற சடவாதத்தை நோக்கி உலக நாடுகள் விரைந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் மிக முக்கியமான விடயமாக பணமே கருதப்படுகிறது. இதன் விளைவாக, பணம் என்பது, இலக்கை அடையும் ஓர் ஊடகம் என்றல்லாமல் அது மட்டுமே இலக்காக மாறியுள்ளது. அதற்குத் தடையாக எதனையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. மனிதாபிமானம், மனித உரிமை எல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே. மனித விழுமியங்கள் எதுவும் அவர்களுக்கு பொருட்டே அல்ல. பணத்துக்காகவும் வள சுரண்டலுக்காகவே இவர்களால் நாடுகள் அழிக்கப்படுவதையும் அப்பாவி மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் நாமும் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆயுத உற்பத்தியில் முழுமூச்சாக ஈடபட்டுள்ள நாடுகள் அவற்றை சந்தைப்படுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் சண்டைகளை மூட்டிவிடுவதற்கும் தயங்குவதில்லை. இந்த அனைத்து அநியாயங்களையும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைக் கொண்டு நியாயப்படுத்தி;, உலக மக்களையும் நம்பச்செய்வர்.

அபிவிருத்தி என்ற மாயை

இந்த நவகாலனித்துவ வாதிகள் 'புர்ஜ் கலீபா' போன்ற வானுயர் கட்டிடங்கள் கட்டுவதற்கு உதவுவார்கள், அதுவே அபிவிருத்தி என்று மூளை சலவையும் செய்வார்கள். இவர்கள் ஒருபோதும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது எமது ஆட்சியாளர்களுக்கு புரிவதில்லை. இந்தக் கட்டிடங்கள் எல்லாம் அவர்கள் வைத்துள்ள நவீன ஆயுதங்களுக்குத் தாக்குப்பிடிக்காது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 

இவர்களது இந்த சதித்திட்டத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயதுல்லாஹ் கொமைனி புரட்சியின் ஆரம்ப காலத்திலேயே புரிந்து கொண்டு, ஈரானை சரியான பாதையில் வழிநடாத்தினார். எதற்கும் எவரிலும் தங்கியிருக்காத நிலையினை உருவாக்கினர். கல்விக்கு முன்னுரிமை வழங்கினார். ஈரானை வெளிநாட்டு கடனற்ற நாடாக மாற்றினார். இதனால்தான் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்த நிற்கும் நாடாக இன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு மிளிர்கிறது.

காலனித்துவ வாதிகள் அவர்களின் அடக்கியாளும் கொள்கையினை கைவிட்டுவிட்டனர் என்று ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இப்போதும் நாம் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும்;. காலனித்துவத்துக்கு உள்ளாகியிருந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து எவ்வாறு போராடினோமோ அதுபோல் இன்றும் ஒன்றுபட்டு போராடவேண்டிய காலகட்டத்திலேயே இருக்கின்றோம்;. 

- தாஹா முஸம்மில்

Sunday, June 10, 2018

உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி, தமிழிலும் படம் எடுக்கிறார்

Majid Majidi to direct Tamil film

உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி, தமிழிலும் படம் எடுக்கிறார் – திரை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதி தற்போது இயக்கிவரும் “பியாண்ட் த க்ளவுட்ஸ்” என்ற படம் தமிழிலும் தயாராகிறது.
1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக்(Baduk) என்ற ஈரானியப் படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து சில்ரன் ஆஃப் ஹெவன்,(Children of Heaven) த கலர் ஆஃப் பாரடைஸ்,( The Color Of Paradise) பாரன்,( Baran) த வில்லோ ட்ரீ, ( The Willow Tree) த சாங் ஆஃப் ஸ்பாரோஸ், (The Song of Sparrows) மொஹமத் தமெசன்ஜர் ஆஃப் காட் (Muhammad The Messenger of God). ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் அறிவார்ந்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்த படைப்பாளி.
இவர் தற்போது பியாண்ட் த க்ளவுட்ஸ் (Beyond The Clouds) என்ற பெயரில் இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் மஜித் மஜிதி.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் இந்தப்படம், தமிழிலும் தயாராகிறது. ஒரே சமயத்தில் மும்மொழி (தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம்) களில் தயாராகி வருவதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
உலகளவில் இந்தப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதில் இந்தியின் முன்னணி நடிகரான ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் கதையின் நாயகனாகவும், மாளவிகா மோகனன் என்ற மலையாள தேசத்து மங்கை கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகையான ஜி வி சாரதா நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழில் தயாராகி வருவதற்கான விளக்கத்தை படக்குழு தெரிவிக்கும் போது, ‘இக்கதையில் மூன்று மொழிகள் இயல்பாகவே இடம்பெறுகிறது. அதனால் மூன்று மொழிகளுக்கான மூல அடையாளங்களை நில மற்றும் ஏனைய பின்னணிகளுடன் அதன் பாரம்பரிய தன்மை மாறாமல் படமாக்கி வருகிறோம். ஏனைய திரைப்படங்களைப் போல் நடிகர்களை மட்டும் இடம் மாற்றி , வசனங்களை அந்தந்த மொழிக்கேற்றவாறு சாதாரணமுறையில் மொழிபெயர்ப்பு செய்து, பேச வைத்து படமாக்கவில்லை ’ என்று தெரிவித்துள்ளது.
படத்தைத் தயாரிக்கும் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டீ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனங்கள் படம் குறித்து மேலும் தெரிவிக்கும் போது,‘ மஜித் மஜிதிக்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் இருக்கிறார்கள்.

அத்துடன் அவருடைய படைப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் நடைமுறை வாழ்வில் யதார்த்தமாக இருப்பதை பிரதிபலிப்பவையே. அதே போல இந்தப் படத்தின் திரைக்கதையிலும், உள்ளடக்கத்திலும் மூன்று மொழிகளுக்கான கூறுகள் உள்ளன. அதனால் தான் இந்த மூன்று மொழிகளைச் சார்ந்த கலைஞர்களை அதன் மரபு மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு திரைக்கதையில் தமிழக நகரம் இடம்பெற்றிருந்தால், அவர் தமிழக நகரத்திற்கு வந்து தமிழ் பேசும் மக்களின் பின்னணியில் தான் அந்தக் காட்சியைப் படமாக்குகிறார். இதன் மூலம் தன்னுடைய படைப்பிற்கான நேர்மையை வழங்குவதில் தன்னிகரற்றுத் திகழ்கிறார் மஜித் மஜிதி’ என்று பெருமிதத்துடன் சொல்கிறது.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டி ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த”பியாண்ட் த க்ளவுட்ஸ்” அண்ணன் தங்கை இடையேயான உறவை மையப்படுத்திய கதையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ziad Mohamed