Monday, June 29, 2020

இஸ்லாத்தை முன்வைத்து ஆட்சியமைத்ததற்காக ஈரான் கொடுத்த விலை அளப்பரியது.

What do we mean by saying Iran is a victim of terrorism?

 

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் மூர்க்கம், உலகில் வேறு எந்த புரட்சியிலும் முன்னோடியில்லாத வகையில் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி மக்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதும், புரட்சிக்கு ஆதரவளித்த மக்களை பழிவாங்குவதும், இஸ்லாமிய புரட்சி மற்றும் இஸ்லாமிய குடியரசின் கருத்தியல் சூத்திரதாரிகளை கொன்றொழிப்பதும் ஆகும்.

பயங்கரவாதம் என்பது ஈரானிய தேசத்திற்கு நன்கு பரிச்சயமான ஒரு சொல்லாகும். ஈரானில் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி மற்றும் நாட்டில் அமெரிக்காவின் அதிகார விரிவாக்கத் திட்டங்கள் தோல்வியடைந்த பின்னர், ஈரானுக்கு எதிராக யுத்தம் நடத்த அமேரிக்கா சதாம் ஹுசைனுக்கு பச்சை விளக்கு காட்டியது. அதே நேரத்தில் நிகழ்ந்த மற்றொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எதிராக பாரிய பயங்கரவாத தாக்குதல்களைத் தொடங்குவதாகும்.

மக்கள் மீது பழிவாங்குதல்

இஸ்லாமிய புரட்சியின் வெற்றி பல மேற்கத்திய ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்பாராத ஒன்றாகும். அதன் அனைத்து பரிமாணங்களையும் சரியாக புரிந்து கொள்ளவும் கணிக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்ற மறுநாளே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இஸ்லாம் விரோத சக்திகள் அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதற்கு எதிரான சதி மற்றும் தலையீட்டின் ஊடாக புரட்சியை முறியடிக்க முயற்சித்தன. இஸ்லாமிய புரட்சியை முறியடிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளால் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் ஒன்றாகும். இந்த கண்ணோட்டத்தில், குறிப்பிட்ட இந்த  பயங்கரவாத தாக்குதல்கள் இஸ்லாமிய அரசை அகற்ற அவர்கள் பயன்படுத்தியது மிகப் பழமையான மற்றும் அவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட கருவி எனலாம்.

படுகொலை செய்யப்பட்ட 17,000 பேர்

ஈரானில் இஸ்லாமிய புரட்சியை எதிர்ப்பவர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்தலாம்: மார்க்சிச இயக்கங்கள் (மிக முக்கியமாக, துடே கட்சி), தேசியவாத இயக்கங்கள் (அவற்றில் முதன்மையானது சுதந்திர இயக்கம்) மற்றும் பிற இயக்கங்கள் (MEK மற்றும் தி ஃபோர்கான் குழு அவற்றில் மிக முக்கியமானது). புரட்சியின் ஆரம்பத்தில் நடந்த படுகொலைகளில் பெரும்பான்மையானவை முனாபிகீன் (எம்.இ.கே) மற்றும் ஃபோர்கான் குழுமத்தால் நடத்தப்பட்டன என்பதை வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்துகின்றன.

ஷஹீத் யதுல்லா முதஹ்ஹரி

ஏப்ரல் 23, 1979 இல் ஈரானிய இராணுவத்தின் முதல் தலைமைப் பணியாளரான வலியுல்லா கரானி படுகொலை செய்யப்பட்டார்; மே 1, 1979 இல் இஸ்லாமிய புரட்சி கவுன்சிலின் தலைவரும் இஸ்லாமிய புரட்சியின் சூத்திரதாரிகளில் ஒருவருமான யதுல்லா முதஹ்ஹரி படுகொலை செய்யப்பட்டார்; மே 25, 1979 இல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹாஷிமி ரப்சஞ்சனி மீது படுகொலை முயற்சி தோல்வியுற்றது; ஆகஸ்ட் 13, 1979 இல் ஹஜ் மெஹ்தி அராகியின் படுகொலை; நவம்பர் 2, 1979 இல் ஆயதுல்லா காஸி தபதபாய் படுகொலை; டிசம்பர் 18, 1979 இல் ஆயதுல்லா மொஃபத்தே படுகொலை; ஜூன் 27, 1981 இல் ஆயதுல்லா கமேனி மீது படுகொலை முயற்சி தோல்வியுற்றது; ஜூன் 28, 1981 இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் தலைமையகத்தின் மீது குண்டுவெடிப்பு மற்றும் ஷஹீத் பெஹெஷ்தியுடன் இமாம் கொமெய்னி அவர்களின் சகாக்கள் 72 பேர் கொல்லப்பட்டது

ஷஹீத் பெஹெஷ்தி

ஜூன் 29, 1981 இல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹக்கானி படுகொலை; ஆகஸ்ட் 30, 1981 இல் பிரதம மந்திரி அலுவலகத்தின் மீது குண்டுவெடிப்பு மற்றும் ஷஹித் ராஜாய் மற்றும் ஷஹித் பஹோனார் படுகொலை; 

ஷஹித் ராஜாய் மற்றும் ஷஹித் பஹோனார்

செப்டம்பர் 05, 1981 இல் ஆயதுல்லா குதுஸியின் படுகொலை; செப்டம்பர் 11, 1981 இல் ஆயதுல்லா மதனி படுகொலை; செப்டம்பர் 29, 1981 இல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹாஷெமினெஜாட் படுகொலை; டிசம்பர் 11, 1981 இல் ஆயதுல்லா தஸ்தகீப் படுகொலை; ஜூலை 2, 1982 இல் ஆயதுல்லா சாதுகி படுகொலை; அக்டோபர் 15, 1982 இல் ஆயதுல்லா அஷ்ரஃபி எஸ்பஹானி படுகொலை. இவை அனைத்தும் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பின்னர் ஆரம்ப ஆண்டுகளில் இரு குழுக்களால் நடத்தப்பட்ட மிக மோசமான  பயங்கரவாத தாக்குதல்கள் ஆகும். இந்த படுகொலைகளைத் தவிர, 17,000 க்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்களும் இந்த பயங்கரவாத குழுக்களால் குறிவைக்கப்பட்டனர். இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் தலைமையகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மீது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 1981ல் பயங்கரவாத செயல்கள் மேலும் அதிகரித்தன. இதன் விளைவாக பல மூத்த புரட்சிகர நபர்கள் மற்றும் பல உயர் அரசு அதிகாரிகள் உயிரிழந்தனர். அதன் பிறகு நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் பயங்கரவாத தாக்குதல்கள் முற்றுமுழுதாக முடிவுக்கு வரவில்லை. உதாரணமாக, செப்டம்பர் 1, 1998 இல் அஸதுல்லா லஜவர்தி படுகொலை செய்யப்பட்டார், லெப்டினன்ட் ஜெனரல் சயாத் ஷிராஸி ஏப்ரல் 10, 1999 அன்று படுகொலை செய்யப்பட்டார்.


மாம் ரீஸா (அலை) அவர்களது அடக்கஸ்தலத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மிகவும் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த பயங்கரவாத தாக்குதலின் விளைவாக 27 பேர் உயிர் தியாகியாகினர், மேலும் 300 பேர் படுகாயமடைந்தனர். 1984 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரமான 14:26 மணிக்கு, இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட ஆஷூரா தின துக்கம் அனுஷ்டிக்கக் கூடியிருந்த மக்கள் மீது  நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு பயங்கரவாதத்தின் உச்சம் எனலாம். அந்த தாக்குதலில், நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.

புரட்சியைத் தடுக்க பயங்கரவாத தாக்குதல்கள்

எழும் முக்கிய கேள்விகள்: இந்த பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் என்ன? இந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதில் எதிரிகளின் தொடரும் இலக்குகள் என்ன? இஸ்லாமிய புரட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த ஈரானின் எதிரிகள் பயங்கரவாதம் எனும் இந்தக் கருவியை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

இந்த தாக்குதல்களுக்கான மிக முக்கியமான காரணம் இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் சித்தாந்தத்தையும் இஸ்லாமிய குடியரசு முறைமையையும் மற்றும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய புரட்சியையும் தடுப்பதாகும். இஸ்லாமியப் புரட்சியைத் தடுக்கத் தவறினால், அது அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் வியாபிப்பது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள அனைத்து சுதந்திர நாடுகளிலும் கூட பின்பற்றப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்காது என்பதை புரட்சியின் எதிரிகள்  முழுமையாக அறிவார்கள். எனவே, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய புரட்சியின் போக்கை தடுத்து நிறுத்தி சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள்.



புரட்சித் தலைவர் இமாம் காமெனெய் இவ்வருடம் ஜூன் மாதம் 3ம் திகதி இடம்பெற்ற இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், இந்த பயங்கரவாத தாக்குதல்கள் இஸ்லாமிய புரட்சியின் பாதையில் தடைகளை உருவாக்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகளில் ஒன்றாகும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “பயங்கரவாத குழுக்களைத் உருவாக்கி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடத் தூண்டுவதும் அவர்களது திட்டத்தில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். இதை ஈராக்கில் செய்தார்கள். ஆப்கானிஸ்தானில் செய்தார்கள். பிராந்தியத்தின் சில அரபு நாடுகளில் செய்தார்கள். நம் நாட்டிலும் அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அவர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி சில முக்கியஸ்தர்களை படுகொலை செய்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் உள்ள விஞ்ஞானிகளை குறிவைத்தனர். அவர்கள் எமது அணுசக்தி நிபுணர்களை குறிவைத்து கொலை செய்தனர். அதற்கு முன்னர், அவர்கள் அரசியல் தலைவர்கள், உயர் கலைஞர்கள், விஞ்ஞான பிரமுகர்கள் மற்றும் மதத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோரை குறிவைத்தனர். அமெரிக்க அனுசரணை மற்றும் பாதுகாப்பின் கீழ் இந்த பயங்கரவாதிகள் அதிகரித்துள்ளனர், அவர்களில் சிலர் அமெரிக்காவிற்கு சேவை செய்பவர்களாக அமெரிக்கர்களாலேயே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளனர். இன்று, முனாபிகீன் அமைப்பு அமெரிக்காவின் கைகளில் உள்ளது. அமெரிக்க காங்கிரஸ் குழுக்களின் பல்வேறு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஈரானில் சாதாரண மக்கள், முக்கிய நபர்கள், மத அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளைக் கொன்ற அதே MEK கூறுகள், இங்குள்ள குண்டுவெடிப்பிற்கு காரணமான அதே கூறுகள் - இன்று, அமெரிக்கர்களுடன் இருக்கிறார்கள்.”

பயங்கரவாத தாக்குதல்கள்: அரசியல்வாதிகளிடமிருந்து இப்போது விஞ்ஞானிகள் பக்கம் திரும்பியுள்ளது

2010 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2012 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை இருந்த பயங்கரவாத தாக்குதல்களின் தன்மையும் நோக்குநிலையும் மாறியது. இஸ்லாமிய குடியரசில் உயர்மட்ட அரசியல்வாதிகளை ஒழிக்கும் நோக்கத்துடன் முன்னர் "அரசியல் படுகொலைகளை" மேற்கொண்ட எதிரிகள், இந்த காலகட்டத்தில் "விஞ்ஞானிகளின் படுகொலைக்கு" தங்கள் கவனத்தைத் திருப்பி பல ஈரானிய அணு விஞ்ஞானிகளை கொன்றனர்.

2010 ஆம் ஆண்டில் டாக்டர் மஜித் ஷஹ்ரியாரி மற்றும் டாக்டர் ஃபெரிடான் அப்பாஸி ஆகியோரின் படுகொலை முயற்சிகளுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்னர், ஜான் சாவர்ஸ் (பிரிட்டிஷ் உளவு நிறுவனமான MI6 இன் தலைவர்) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்றும் "அணு பரவலை நிறுத்துவதை வழக்கமான இராஜதந்திரத்துடன் தீர்க்க முடியாது; ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளை நாங்கள் தொடர வேண்டும்" என்றும்  வெளிப்படையாக அறிவித்தார்.

டாக்டர் அலி முகமதி மற்றும் டாக்டர் மஜித் ஷஹ்ரியாரி படுகொலை செய்யப்பட்ட பின்னர், நம் நாட்டில் உள்ள மற்ற இரண்டு அணு விஞ்ஞானிகள் - அதாவது, தரியூஷ் ரெஸாயிநஜாத் மற்றும் முஸ்தபா அஹ்மதி ரோஷன் - ஆகியோர் குறிவைக்கப்பட்டு, மேற்குடன் இணைந்த குழுக்களால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

ஆனால் இது சம்பந்தமாக முக்கியமான கேள்வி என்னவென்றால், “ஈரானுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் ஏன் விஞ்ஞானிகளின் படுகொலைக்கு மாறியது? இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? ”

ஆதிக்க சக்திகளின் தலைமையிலான இஸ்லாம் விரோதக் குழுக்களின் முதன்மை குறிக்கோள் இஸ்லாமியப் புரட்சியை முடிந்தவரை கட்டுப்படுத்துவதாகும். எனவே, இஸ்லாமியப் புரட்சி முன்னேறி ஒரு முன்மாதிரியாக மாற உதவும் எதையும் அகற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். நாட்டின் துரித முன்னேற்றத்திற்குப் பிறகு, அறிவை உருவாக்கும் பாதையில் அதற்குப் பின்னால் உள்ள உந்து சக்திகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பதை ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் உணர்ந்தன. இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார், “நாட்டின் முன்னேற்றம் முதன்மையாக இரண்டு காரணிகளைப் பொறுத்தது: ஒன்று அறிவியல் மற்றொன்று உற்பத்தி. அறிவியல் இல்லாத நிலையில், உற்பத்தி தடைபடும். விஞ்ஞானம் தான் நாடு முன்னேற உதவும்.”

எனவே, அணு விஞ்ஞானிகளின் படுகொலை ஒருபுறம் அணு விஞ்ஞானத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான நாட்டின் முயற்சிகளைத் தடுக்கவும்; மறுபுறம், ஈரானின் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான பாதையில் போராடி வந்த பல்லாயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர்களின் இதயங்களில் அது ஒரு பயத்தை உண்டாக்கலாம் என்றும் அவை எண்ணின. நிச்சயமாக, இது அவர்களின் பிழையான கணிப்பீடாகும். உண்மையில் இந்த படுகொலைகள், புரட்சிகர இளைஞர்களை அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் தங்கள் கல்வியைத் தொடர இன்னும் அதிகமாக ஈர்க்கின்றன. இதன் விளைவாக ஈரானின் அறிவியல் முன்னேற்ற விகிதம் விஞ்ஞான முன்னேற்றத்தின் சராசரி சர்வதேச விகிதத்தின் 13 மடங்காக மாறியது என்று மதிப்புமிக்க சர்வதேச அமைப்புகள் ஒப்புக் கொள்கின்றன.

இஸ்லாமியப் புரட்சியை அவர்களுடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி எதிர்கொள்ள முடியாது என்பது எதிரிகளுக்கு இப்போது நன்கு நிரூபிக்கப் பட்டுள்ளது.


படுகொலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாமியப் புரட்சியின் எதிரிகள் அவர்களின்  மோதல்களில் பகுத்தறிவு இல்லாத தன்மையை இந்த முயற்சிகள் காட்டுகின்றன என்றார். மேலும் நீங்கள் எங்கள் புத்திஜீவிகளை இரவின் இருளில் படுகொலை செய்வது உங்கள் விரக்தியையே காட்டுகிறது. நீங்கள் பகுத்தறிவு இல்லாதவர். நீங்கள் பகுத்தறிவுடையவராக இருந்தால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள், விவாதிப்பீர்கள். இருப்பினும், நீங்கள் பகுத்தறிவு அற்றவர்கள் என்பதால் உங்கள் அறிவு படுகொலைகளுக்குத் தூண்டுகிறது. இஸ்லாத்தின் தர்க்கம் படுகொலைகளை நிராகரிக்கிறது. இஸ்லாம் பகுத்தறிவுள்ள மார்க்கம். எங்கள் சிறந்த ஆளுமைகளை கொல்வதன் மூலம் நீங்கள் அதை அழித்துவிடலாம் என்று கற்பனை செய்கிறீர்கள்; ஆனால், இந்த படுகொலைகள் எமது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகிறது." என்றும் இமாம் கொமெய்னி (ரஹ்) கூறினார்கள்.

https://english.khamenei.ir/news/7640/What-do-we-mean-by-saying-Iran-is-a-victim-of-terrorism

Wednesday, June 24, 2020

அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சாவுமணியடிக்கும் பலம் குன்றிய நாடுகள்

Iran, Venezuela, China, Russia should show alternatives to US hegemony

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதை உலகுக்குக் காட்டுவதற்கு ஈரான், வெனிசுலா, அல்லது ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறுவது முக்கியம்,  என்று புவிசார் அரசியல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

அமெரிக்க அச்சறுத்தல்களுக்கு அஞ்சாது, ஈரான் கடந்த மாதம் சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலை வெனிசுலாவுக்கு அனுப்பிய பின்னர், எரிபொருள் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிற்கு பெட்ரோல் ஏற்றுமதியைத் தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எரிபொருள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவை நோக்கி ஈரானிய-கொடி பறக்கும் எண்ணெய்த்தாங்கி கப்பல் தற்போது செல்கிறது. அதேவேளை அதன் செயலற்று முடங்கிக்கிடக்கும் தினசரி 1.3 மில்லியன் பேரல்கள் சுத்திகரிப்பு ஆற்றல் கொண்ட வலையமைப்பை மறுதொடக்கம் செய்ய வும் ஈரான் உதவுகிறது என்று எண்ணெய் தொழில் தரவு வழங்குநர் TankerTrackers.com கூறுகிறது.

மேலும், ஈரானின் இந்த துணிச்சலான நடவடிக்கையைத் தொடர்ந்து, மெக்ஸிகோவும் வெனிசுலாவின் தேவைக்கேற்ப எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது.

சர்வதேச ஒழுங்கில் வாஷிங்டனின் தலையீட்டால் சோர்வடைந்துள்ள அதன் நட்பு நாடுகள் உட்பட - அமெரிக்காவின் ஒற்றை துருவ கொள்கைகளுக்கு எதிரான இத்தகைய தைரியமான நகர்வுகள் - அதன் நீண்டகால மேலாதிக்கத்திலிருந்து விலகிச் செல்வதை விரைவுபடுத்துகின்றன என்பதை காண்கிறோம்.

இந்த விஷயத்தில் மேலும் தெளிவுக்காக, நாங்கள் பாங்காக்கை தளமாகக் கொண்ட அமெரிக்கரான புவிசார் அரசியல் ஆராய்ச்சியாளர் அந்தோனி கார்டலூச்சி (Anthony Cartalucci)யை 'மெஹர்' செய்தி நிறுவனம் அணுகியது.

அவரது நேர்காணலின் முழு விபரம் இங்கே:

இந்த முக்கியமான காலகட்டத்தில் மற்றும் உலக எரிசக்தி விவகாரங்களில் வாஷிங்டனின் தலையீட்டிற்கு மத்தியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிரான இத்தகைய நகர்வுகள்  உலகுக்கு சொல்லும் செய்தி என்ன...?

அமெரிக்கா அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள நிதி, இராணுவ வலிமை மற்றும் வளங்களை கட்டுப்படுத்துவதில் கட்டப்பட்ட ஒரு நவீனகால பேரரசாகும். அமெரிக்காவின் இந்த அவசியமற்ற அதிகார அழுத்தங்களுக்கு நாடுகள் தொடர்ந்தும் அடிபணிய போவதில்லை என்ற செய்தியையே அது உலகுக்கு எடுத்துரைக்கிறது. எல்லா நாடுகளும் அதன் திட்டத்தின் அடியில் பொருந்த வேண்டும் என்ற அமெரிக்காவின் "சர்வதேச ஒழுங்கை" விட தேசிய இறையாண்மையை மதிக்கும் பல்துருவ உலகம் ஒன்றையே நாடுகள் விரும்புகின்றன.

முன்னர் அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணிந்த நாடுகள் உட்பட அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக, நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு பெருகுவதற்கான ஒரு காரணியும் உள்ளது. காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை, அது மாறிக்கொண்டே இருக்கும் என்ற யதார்த்தத்தை அமேரிக்கா உணரவேண்டும். உலக நாடுகளுடனான அதன் உறவுகளை தொடர்ந்தும் பேண வேண்டுமாயின், அமெரிக்கா தன்னுள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தியையும் அது தெரிவிக்கிறது.

ஈரானின் - பின்னர் மெக்ஸிகோவின் - அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத துணிச்சல், சில ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்திற்கான விருப்பத்துடன், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் என்ற ஆயுதத்தை காலப்போக்கில் பலம் இழக்கச்செய்யுமா..?  குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய நாடுகளுக்கான பிரான்ஸின் சமீபத்திய அழைப்பு மற்றும் வாஷிங்டனின் நோர்ட் ஸ்ட்ரீம் 2’ தடை குறித்து ஜெர்மனியின் விமர்சனங்களுக்குப் பிறகு? (நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்பது பால்டிக் கடல் ஊடாக ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் புதிய குழாய் ஆகும்).

ஈரான், மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனி அனைத்தும் அமெரிக்க தலையீட்டிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க மேலாதிக்கத்தை பின்னுக்குத் தள்ளி, அதிகார சமநிலையின் மத்தியில் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவது, தொடர்ச்சியான மற்றும் நீண்ட செயல்முறையின் மற்றொரு படியாகும்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டின் ஆதரவில் தங்கியிருப்பதை குறைப்பதற்காக பிரான்ஸ் அழைப்பு விடுப்பது உலகளாவிய சக்தி சமநிலையை உருவாக்குவதன் ஒரு பகுதியாகும். நாடுகள் சமநிலையை அடையும்போது, அரை நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவரும் வாஷிங்டனின் மேலாதிக்கக் கொள்கைகளுக்கு அவை இரையாகும் வாய்ப்பு குறைவு. அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து வருவதால், அது வெறுமனே மற்றொரு தவறான மேலாதிக்கத்தால் மாற்றீடு செய்யப்படாதிருப்பது முக்கியம். நாடுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை என்பதே முக்கியமானது.

ஈரானும் வெனிசுலாவும் அமெரிக்காவினால் அன்றி,   சர்வதேசத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகள் அல்ல என்பதாலும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தெஹ்ரானின் அண்மைய பதிலடியின் அடிப்படையில் நோக்குகையில் வாஷிங்டனின் எந்தவொரு விரோத நடவடிக்கைக்கு சாத்தியம் ஏதேனும் உள்ளதா?

இலக்கு வைக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக வாஷிங்டன் வழக்கமாகப் வன்முறையை பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கும்போது எதுவும் நிராகரிக்க முடியாது அல்லது நிராகரிக்கப்படக்கூடாது. வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக - மற்றும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக கூட பலத்தைப் பிரயோகிப்பது தொடர்பாக வாஷிங்டனில் தினசரி உரையாடல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளும், மாதமும், ஒரு வருடமும் கடக்கும்போது, உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க திறன் தற்போது முன்பை விட பலவீனமான நிலையில் உள்ளது.

இருந்தாலும், அமெரிக்கா விரக்தியடைந்த நிலையில், மேலாதிக்க நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. எவ்வாறாயினும், தோல்வியினால் ஏற்படும் பாரிய இழப்பையும் வெற்றியினால் பெறக்கூடிய சிறிய லாபத்தையும் அமெரிக்கா ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஈரான் அல்லது வெனிசுலாவுக்கு எதிராக இராணுவ சக்தியைப் அமெரிக்கா பயன்படுத்துமானால், அது ஒரு சிறிய வெற்றியாகவே அமையும். அதனை அடைய சிறிய நாடுகளை கொடுமைப்படுத்தும் வல்லரசு என்ற இழிசொல்லுக்கு ஆளாகும். இருப்பினும் அது தோல்வியைத் தழுவும் பட்சத்தில் - சிறிய நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட வல்லரசு என்றும் அமெரிக்கா வீழ்ச்சியின் எல்லையில் உள்ளது என்று பலரின் மனதில் பதிந்துவிடும்.

அவ்வாறு நடைபெறுமாயின் அது அமெரிக்காவிற்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்?

ஒரே நேரத்தில் பல முனைகளில் அமெரிக்கா நெருக்கப்படுகிறது. ஈரான்  வெனிசுலா ஆகிய இரு நாடுகளும் அவற்றுக்கு எதிரான அமெரிக்காவின் ஆட்சி மாற்ற முயற்சிகளையும், அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தையும் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஐரோப்பாவிலும் அமெரிக்கா இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, அங்கு அதன் நெருங்கிய "நட்பு நாடுகள்" கூட அதனுடன் ஒத்துழைக்க தயாராய் இல்லை, குறிப்பாக நோர்ட் ஸ்ட்ரீம் 2 எனும் ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் ஊடாக ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் புதிய குழாய் திட்டம் விடயத்தில். மேலும், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை சீனா தொடர்ந்து முறியடித்து வருகிறது என்பது கண்கூடு.

ஈரான், வெனிசுலா, அல்லது ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறுவது முக்கியமாகும்; அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதை அது உலகிற்குக் காட்டுகின்றன, மேலும் இந்த மாற்றுகள் பெருவணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் முதல் சுற்றியுள்ள சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் சிறந்த நன்மை பயக்கும். இது தொடரும் வரை, யுத்தத்தின் மூலம் அதை மாற்றுவதற்கான அமெரிக்க முயற்சிகள் பல துருவமுனைப்புக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும் - அமெரிக்கா திட்டமிட்ட "ஒழுங்கு" இனியும் செல்லுபடியாகாது என்பது மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கு அது ஆபத்து விளைவைக்கக்கூடியது.

உலக சக்திவள ஆற்றலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க பிரயாசைகளை சமீபத்திய முன்னேற்ற நிகழ்வுகள் எவ்வாறு சீர்குலைக்கும்?

அமெரிக்கா தனது "ஷேல் ஆயில்" தொழிற்துறையை ஊக்குவிப்பதன் மூலம் சக்திவள ஆற்றலில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. இருப்பினும், இந்த வகையான சக்திவளங்கள் அகழ்ந்தெடுப்பது என்பது மிகவும் அதிகரித்த செலவைக்கொண்டது, பின்னர் ரஷ்ய இயற்கை எரிவாயு போன்ற பிற ஹைட்ரோகார்பன்களை விட இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான செலவும் அதிகமாகும்.

அமெரிக்காவின் ஷேல் நிறுவனம் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கு, அமெரிக்கா - புதுமைக்குத் திரும்புவதற்குப் பதிலாக - பொருளாதாரத் தடைகள், மோதல்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பிற சீர்குலைக்கும் நடத்தை ஆகியவற்றின் மூலம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நாசப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் - விலைகள் மிக அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், அமெரிக்க ஷேலின் அதிக விலை போட்டித்தன்மையுடன் இருக்கும் என்றும் நம்பியது. நிச்சயமாக, இது தற்காலிக வெற்றியைக் கொடுத்தாலும் அது நிலையானது அல்ல, இதற்காக அமேரிக்கா ஏராளமான நிதியினை ஒதுக்கி இருந்தபோதிலும், அது விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் இந்த திட்டங்களுக்கு எதிராக நிரந்தர தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் நாடுகள் இந்த இடையூறுகளில் இருந்து மீண்டு வரும் வழிகளைக் கண்டுபிடித்திருப்பது அமெரிக்கா எதிர்பாராத ஒன்று. ஆகவே எதிர்காலத்தில் இந்த தந்திரத்தை தொடர இயலாது என்பதையும் அவை உணர்த்தியுள்ளன. ஆகவே இது உலக சக்திவள ஆற்றலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், பொதுவாக அமெரிக்க மேலாதிக்கத்தின் கருத்துக்கு இது மற்றொரு பின்னடைவாகும்.

மெஹர் செய்தி நிறுவனத்துக்காக நேர்காணல்: பேமான் யஸ்தானி மற்றும் முதஸா ரஹ்மானி

https://en.mehrnews.com/news/159907/Iran-Venezuela-China-Russia-should-show-alternatives-to-US