Saturday, August 17, 2019

உலக புகழ்பெற்ற கவிஞர் உமர் கய்யாம் கணிதத்தில் கெப்ளருக்கும் நியூட்டனுக்கும் சமமானவர்.


The world famous poet Omar Khayyam was equal to Kepler and Newton in mathematics.

உமர் கய்யாம் ஒரு வானியலாளர், மருத்துவர், தத்துவவாதி மற்றும் கணிதவியலாளர்: அவர் இயற்கணிதத்தில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அவரது கவிதை வேறு எந்த மேற்கத்திய சாரா கவிஞரையும் விட மேற்கில் நன்கு அறியப்பட்டிருக்கிறது.

கி.பி 1072 ஆம் ஆண்டில், உமர் கய்யாம் இதுவரை கணக்கிடப்பட்ட மிக துல்லியமான ஆண்டு நீளத்தை ஆவணப்படுத்தினார் - நவீன உலகில் பெரும்பாலான நோக்கங்களுக்காக துல்லியமான ஒரு கணக்கீடாக இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.

ஆரம்பம்
உமர் கய்யாம் 1048 மே 18 அன்று வடக்கு பாரசீகத்தின் நைஷாபூரில் ஒரு பெரிய வர்த்தக நகரத்தில் பிறந்தார். இன்று நகரம் ஈரானில் உள்ளது. உமரின்  தந்தை இப்ராஹிம் கய்யாமி, ஒரு செல்வந்த  மருத்துவர். உமரின் தாயின் பெயர் தெரியவில்லை. கய்யாமி என்றால் கூடாரம் கட்டுபவர் என்று பொருள்படும் என்பதால் உமரின் தந்தை கூடாரங்களை அமைப்பவராக இருந்தார் என்று சில ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும், பல ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஸ்மித் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொல்லர்களாக இருப்பதில்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்குலக இலக்கியத்தில் ஒமர் கய்யாமின் தாக்கம்
பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் மற்றும் கவிஞர் உமர் கய்யாம் 1048 இல் நைஷாபூரில் (கோராசான் ராஸாவி மாகாணத்தில் உள்ள ஒரு நகரம்) பிறந்தார். ஷேக் முகமது மன்சூரி என்ற அறிஞரிடமிருந்து தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர்  இயற்கணிதம் மற்றும் வடிவியலைக் கற்பிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

உமர் கய்யாமின் மிகவும் பிரபலமான இயற்கணித  சிக்கல்களுக்கான தீர்வு' என்ற படைப்பை அவர் 1070 இல் நிறைவு செய்தார், இதில் அடிப்படை இயற்கணிதக் கொள்கைகளை வகுத்திருந்தார். 1077 ஆம் ஆண்டில் கயாம் எழுதிய மற்றொரு பெரிய படைப்பு, ‘ஷார்ஹ் மா அஷ்கலா மின் முசாதராத் கிதாப் உக்லிடிஸ்அதாவது யூக்லிட்டின் போஸ்டுலேட்டுகளில் உள்ள சிரமங்களின் விளக்கங்கள்என்ற நூலாகும். 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜியோர்டானோ விட்டேல் என்ற ஒரு இத்தாலிய கணிதவியலாளர் கய்யாமின் கோட்பாட்டில் மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். எண்கணித சிக்கல்கள்என அழைக்கப்படும் கய்யாமின் மற்ற புத்தகம், இசை மற்றும் இயற்கணிதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நன்கு அறியப்பட்ட அக்கால வானியலாளராக இருந்தார். பாரசீக ஜலாலி நாட்காட்டியில் பல சீர்திருத்தங்களையும் செய்தார். ஜலாலி நாட்காட்டி ஏனைய நாட்காட்டிகளுக்கு அடித்தளமாக மாறியது. மேலும் கிரிகோரியன் காலெண்டரை விட இது மிகவும் துல்லியமானது என்றும் அறியப்படுகிறது. ஒரு சிறந்த கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என்பதற்கும் அப்பால், மேற்கில் அவரது புகழ் அவரது ருபையாத்கவிதைகளின் தொகுப்பால் ஏற்படுகிறது.

மஷ்ஹத் நகரிலுள்ள இமாம் ரிஸா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியர் டாக்டர் மரியம் கோஹெஸ்தானி இஸ்னா (ஈரானிய செய்தி நிறுவனம்) வுக்கு அளித்த பேட்டியில் உமர் கய்யாம் பற்றி குறிப்பிடுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ருபையாத்அல்லது வசனங்களைத் தந்த ஒரு சிறந்த கவிஞர் என்று குறிப்பிட்டார். இவரது கவிதைகள் 70க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவித்துவத்துக்கு அப்பால் உமர் கய்யாம் ஒரு திறமையான தத்துவஞானியூமாவார். இவரது சிந்தனைப் பள்ளியில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு மொழிகளில் அவரது படைப்புகளின் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல், தனது இளம் வயதிலேயே மருத்துவம் கற்ற  உமர் கய்யாம் மருத்துவ அறிவியலை நன்கு அறிந்திருந்தார். இப்னு சினாவின் ஆக்கங்களை ஆர்வத்துடன் கற்றார். அவற்றின் தாக்கம் அவரில் நிறைய இருந்தது. இதை அவரே குறிப்பிட்டிருந்தார்.

உமர் கய்யாம் தனது வாழ்நாளில் எந்த கவிதையையும் வெளியிடவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியாகவும் தத்துவஞானியாவுமே நன்கு அறியப்பட்டவர். இன்று ருபையாத் எனும் அவரது  படைப்பு உலகில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
உமர் கய்யாமின் ஆக்கங்களை ஆராய்ந்த முதல் ஆங்கில அறிஞர், தாமஸ் ஹைட் (1636-1703), கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளுக்கு சிறிது இடத்தை அர்ப்பணித்தார், மேலும் கய்யாமின் 'ருபை' எனும் நாலடிப்பாடல்களை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்

சர் கோர் ஒஸ்லி (Sir Gore Ouseley 1770 -1844) ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர், மொழியியலாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர் பாரசீக மொழியை நன்கு அறிந்தவர் மற்றும் ஈரானிய புத்தகங்களின் பல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாரசீக இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஃபிட்ஸ் ஜெரால்ட் உமர் கய்யாமின் ருபையாத்'தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், (FitzGerald) மொழிபெயர்த்த ருபையாத்தின் புகழ் பிரிட்டனில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பரவியது. ஃபிட்ஸ் ஜெரால்ட் தனது மொழிபெயர்ப்பை பல முறை மாற்றியமைத்தார் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத், நான்காவது ஆங்கில பதிப்பு 1879 இல் வெளியிடப்பட்டது, மற்றும் ஐந்தாவது பதிப்பும் (கடைசி பதிப்பு) அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

ஃபிட்ஸ் ஜெரால்டின் பதிப்பின் ஊடாக ஐரோப்பாவில் (மேற்கு) கய்யாம் நன்கு அறியப்பட்டாலும், எட்வர்ட் ஹென்றி வின்ஃபீல்ட் (1836-1922)  எனும் பாரசீக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் கய்யாமின் ருபையாத்தினது துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்கினார். இவர் உமர் கய்யாமின் 500 ருபையாத்களை மொழிபெயர்த்தார்.  ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்தது 101 ருபையாத்கள் மட்டுமே. இந்த இரண்டு படைப்புகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில், வின்ஃபீல்ட் பாரசீக கவிதை மரபு பிசகாமல் மொழிபெயர்த்திருந்தார் என்பதாகும்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் விக்டோரியன் ரொமாண்டிஸத்துடன் ஒத்துப்போகும்படி அசல் "ரூபாயத்"தை கணிசமாக சிதைத்தார். கய்யாமின் தத்துவ வசனங்களுக்கு பதிலாக காதல் வசங்களை உட்புகுத்தியதன் காரணமாக ருபையாத் கவிதையை ஒரு காதல் பாடலாக சிலர் கருத வழிவகுத்தது.

1892 ஆம் ஆண்டில் கய்யாம் சங்கம்லண்டனில் நிறுவப்பட்டது. இது பிரிட்டிஷ் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் ஒன்றுகூடும் மையமாக இருந்தது. விக்டோரியன் எழுத்தாளர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத்தை  நினைவுகூரும் வகையில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது. லண்டனில் கய்யாம் சங்கத்தின் வெற்றி ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் கய்யாம் சங்கங்களை நிறுவ வழிவகுத்தது. ருபையாத்தை நினைவுகூரும் வகையில் கய்யாம் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் லண்டன் சங்கத்தில் ஒன்றுகூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் கய்யாம் மேற்கத்திய இசையிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். கிரான்வில்லே பான்டோக் என்ற ஒரு பிரிட்டிஷ் இசைக்கலைஞர், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு உமர் கய்யாம்ஆல்பத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் சிறந்த கணிதவியலாளர் வில்லியம் எட்வர்ட் ஸ்டோரி என்பவர் உமர் கய்யாம் கெப்லருக்கும் நியூட்டனுக்கும் சமம் என்று நம்பினார்.

பாரசீக கவிதைகள் குறித்த தனது "இலக்கியம் மற்றும் சமூக நோக்கங்கள்" என்ற கட்டுரையில் கய்யாம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் ரால்ப் வால்டோ எமர்சன் சுட்டிக்காட்டுகின்றார்.

அமெரிக்க எழுத்தாளர்களான மார்க் ட்வைன் மற்றும் டி.எஸ். எலியட் ஆகியோரில் உமர் கய்யாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். கய்யாமின் எண்ணங்களுக்கு ஏற்ப இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலின் கதையைச் சொல்லும் தனது "தி வுல்ப்  ஆஃப் தி சீ" (The Wolf of the Sea) நாவலில் அமெரிக்க நாவலாசிரியரான ஜாக் லண்டனையும் அவர் ஈர்த்திருந்தார்.

உமர் கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை கருவாகக் கொண்டு பல படங்களை ஹாலிவுட் உருவாக்கியுள்ளது. "தி கீப்பர்: தி லெஜண்ட் ஆஃப் உமர் கய்யாம்" (The Keeper: The Legend of Omar Khayyam) 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் சமீபத்திய திரைப்படமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜீன்-பாப்டிஸ்ட் நிக்கோலாய் கய்யாமின் ருபையாத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தபோது பிரெஞ்சு மக்கள் கய்யாமின் ருபையாத்துடன் நன்கு பரிச்சயமாகினர்.

பிரெஞ்சு கவிஞரும் நாடக ஆசிரியருமான மோரிஸ் புஷெர் "ட்ரீம் ஆஃப் கய்யாம்" (Dream of Khayyam) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை வழங்கினார், அதில் அவர் "நான் கய்யாமை  பின்பற்றுபவர்களில் ஒருவன்" என்று கூறினார்.

தவிர, ஜீன் லாகூர் கய்யாமின் தத்துவத்தின் அடிப்படையில் "மாயை" (Illusion) என்ற புத்தகத்தை எழுதினார்.

கய்யாம் ஒரு புதிரான மனிதராக இருக்கிறார். அவரைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர். ஆயினும் அவர் ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment