From Karbala to Gaza: A rallying cry against injustice that won't be silenced
பதினான்கு
நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்பலாவின் பாலைவன சமவெளியில் எதிர்ப்பையும் தார்மீக தைரியத்தையும்
மறுவரையறை செய்த 'தியாகிகளின் தலைவரை' கௌரவிப்பதற்காக உண்மை மற்றும் நீதியின் குரல்கள்,
இனம், பிரிவு மற்றும் சித்தாந்தத்தின் கோட்பாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு எழும் ஆண்டின்
அந்த தருணம் இது.
யஸீதின்
கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஹிஜ்ரி 61 இல் (கி.பி. 680) இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள்
நடத்திய எழுச்சி, மனித வரலாற்றில் இணையற்ற மற்றும் உலகெங்கிலும் உண்மை மற்றும் நீதியின்
பிரச்சாரகர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து உந்துதல் அளிக்கும் ஒரு சிறந்த தமைத்துவமாகும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் அன்புப் பேரன் ஹுஸைன் இப்னு அலீ (அலை) அவர்கள் அதிகாரத்திற்காகவோ,
பதவிக்காகவோ அல்லது சலுகைக்காகவோ போராடவில்லை. உண்மை மற்றும் பொய்மை, நீதி மற்றும்
கொடுங்கோல் ஆட்சி, கண்ணியம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றின் முனையில் நின்று, வரலாற்றின்
சத்திய பாதையில் பயணிக்க முடிவு செய்தார்.
பாரசீக
கவிஞன் இக்பால் லஹோரியின் பிரபல கூற்றை போல், "ஹுஸைன் (அலை) அவர்கள் சுதந்திரத்தின்
வறண்ட தோட்டத்தை தனது இரத்த அலையால் ஈரலிப்பாக்கி, சர்வாதிகாரத்தை வேரோடு பிடுங்கி,
துயிலில் இருந்த முஸ்லீம் தேசத்தை எழுப்பினார்."
கர்பலா
போர் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது இரத்தத்திற்கும் வாளுக்கும் இடையிலான மோதல்.
ஹுஸைன் (அலை) அவர்கள், 71 விசுவாசமான தோழர்களுடன், 30,000 பேர் கொண்ட இராணுவத்தை எதிர்த்து
நின்றார். அவரது தெரிவு தெளிவாக இருந்தது, நோக்கம் ஆன்மீக நியமங்களை அடிப்படையாகக்
கொண்டது.
மதீனாவின்
ஆளுநர் வலீத் இப்னு உக்பா, ஹுஸைன் (அலை) அவர்களை யஸீதுக்கு விசுவாசியாக உறுதிமொழி எடுக்க
அழைத்தபோது, ஹுஸைன் (அலை) அவர்கள், காலத்தின் அடிவாரங்களில் இன்னும் எதிரொலிக்கும்
ஒரு பிரகடனத்துடன் பதிலளித்தார்: "என்னைப் போன்ற ஒரு மனிதன் அவரைப் போன்ற ஒரு
மனிதனுக்கு விசுவாசத்தை உறுதிமொழி எடுக்க முடியாது."
ஒவ்வொரு
ஆண்டும், முஹர்ரம் மாதத்தில், விசுவாசிகள் கர்பலாவின் நடவடிக்கைகள் மூலம் ஹுஸைன் (அலை)
அவர்களின் நித்திய கொள்கைகளுக்கு தங்கள் உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்.
இந்த வருடாந்த நினைவுகூரல்கள் துக்கத்தை மையமாகக் கொண்ட சடங்குகள் அல்ல, இவை எதிர்ப்பின்
சக்திவாய்ந்த செயல்களாகும், மற்றும் அதிகாரத்திற்கு உண்மையைப் பேசுவதற்கான உறுதியை
மீண்டும் தூண்டுகிற செயல்களாகும், கர்பலாவில் ஹுஸைன் (அலை) அவர்கள் தனது இரத்தத்தின்
மூலம் செய்ததைப் போல, அவரது சகோதரி ஸைனப் பின்த் அலீ (ரலி) அவர்கள் கர்பலாவுக்குப்
பிறகு தனது வார்த்தைகளால் செய்தார்.
கர்பலாவின்
செய்தி காலத்தால் அழியாதது. ஸியாரத் அஷுராவில், நம்பிக்கையாளர்கள் துஆ பிரார்த்தனை
செய்கிறார்கள்: "யா அல்லாஹ், நீதிக்காக எழுந்து நிற்க எங்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக..."
இது எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் கர்பலாவின் இலட்சியத்தை முன்னெடுத்துச்
செல்வோம் என்ற உறுதிமொழியின் வெளிப்பாடாகும்.
காஸா
இன்றைய கர்பலா என்று சொன்னால் அது மிகையாகாது. ஊழல் மற்றும் கொடுங்கோலன் உமய்யாத் ஆட்சிக்கு
எதிராக ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சி, கடந்த காலத்திலிருந்த ஒரு அத்தியாயம் மட்டுமல்ல,
அது நிகழ்காலம் வரை உயர்த்திப் போற்றப்பட்ட ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.
"ஒவ்வொரு
நாளும் ஆஷுரா, ஒவ்வொரு நிலமும் கர்பலா" என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படும்
சொற்றொடர் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு மறு கூற்றாக தோன்றலாம், ஆனால் அதன் உள்ளார்த்தம்
மிகவும் பொருத்தமானது. உரிமைக்கும் வலிமைக்கும் இடையிலான போராட்டம் காலம் அல்லது புவியியலால்
மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது - நேற்று கர்பலா, இன்று காஸா.
அக்டோபர்
2023 முதல் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள்,
ஒரு காலத்தில் கர்பலா சமவெளியில் இருந்து எழுந்த ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல்களை
எதிரொலிக்கின்றன. பயங்கரமும் கொடுங்கோலும் பல முகங்களை அணிந்து பல கொடிகளை பறக்கவிடுகின்றன,
ஆனால் அவற்றின் தன்மை மாறவில்லை. நம் காலத்து யஸீதை இனங்கண்டு ஹுஸைன் (அலை) அவர்கள்
நமக்கு போதித்தபடி பதிலளிப்பது நமது கடமையாகும்.
"அவமானத்துடன்
வாழ்வதை விட கண்ணியத்துடன் கூடிய மரணம் சிறந்தது" என்று சவால்களின் தலைவர் கூறினார்.
ஒரு நிறவெறி ஆட்சி, 76 ஆண்டுகளாக, பாலஸ்தீனிய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, குடும்பங்களை
இடம்பெயர்த்துள்ளது, வீடுகளைக் கொள்ளையடிக்கிறது, எதிர்ப்பின் தீயை அணைக்க முயன்றுள்ளது.
அக்டோபர்
2023 முதல், காசாவில் 56,000 க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும்
பெண்கள், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு குடும்பத்தின்
கர்பலா ஆகிவிட்டது.
உயிரற்ற
குழந்தைகளை தொட்டிலில் போடும் தாய்மார்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இடிபாடுகளை
தோண்டும் தந்தைகள், முழு அண்டை பகுதிகளும் சல்லடை கண்ணாக தூளாகிவிட்டதை, மருத்துவமனைகள்
மற்றும் பள்ளிகள் ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமின்றி குண்டுவீசித் தகர்க்கப்படுவதை,
அகதி முகாம்கள் இலக்கு வைக்கப்படுவதை நாம் காண்கிறோம். இது ஒடுக்குமுறையாளரின் எல்லையில்லா
கொடுமையை உணர்வுபூர்வமாக காட்டுகிறது.
ஆனாலும்
பாலஸ்தீன மக்கள் மண்டியிட மறுத்துவிட்டனர். தங்கள் மன உறுதியையும் நேர்மையையும் தவிர
வேறெதுவும் இல்லாத நிலையில், உலக வல்லரசுகளின் ஆதரவுடன் மிகவும் கொடூரமான இராணுவ இயந்திரங்களில்
ஒன்றை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பு ஹுஸைனி உணர்வை; "மரணம்
வரை, எந்த சரணடைதலும் இல்லை." என்பதை பிரதிபலிக்கிறது.
கர்பலாவில்
தாகத்தால் தவித்த ஒரு குழந்தை அம்பினால் தாக்கப்பட்டது. வீரம் செறிந்த இளைஞன் ஒருவன்
போர்வீரனைப் போல போரிட்டான். கொடி ஏந்தியவர் தண்ணீர் எடுக்க அணிவகுத்துச் சென்றவர்
திரும்பி வரவேயில்லை. அதே தியாகத் தன்மையே இன்று பாலஸ்தீனியர்களின் நரம்புகளில் ஓடுகிறது,
அவர்கள் தங்கள் எதிர்ப்பை அசாதாரண தைரியத்துடன் சுமக்கிறார்கள்.
"எனக்கு
உதவ யாராவது இருக்கிறார்களா?" என்ற ஹுஸைன் (அலை) அவர்களின் கூக்குரல் யஸீதின்
இராணுவத்திற்கான ஒரு வேண்டுகோள் அல்ல. இது மனிதகுலத்தின் மனசாட்சிக்கு காலமற்ற அழைப்பு.
ஒவ்வொரு ஆண்டும், நஜாஃபிலிருந்து கர்பலாவுக்கு அர்பீனில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்துச்
செல்லும்போது, அவர்கள் பதிலளிக்கிறார்கள்: லப்பைக் யா ஹுஸைன் - "இதோ நான் இருக்கிறேன்,
ஹுஸைனே!"
ஹுஸைன்
(அலை) அவர்களின் தீபத்தை ஏந்துபவர்கள் ஒருபோதும் வஞ்சகத்துக்கும் பொய்க்கும் அடிபணிய
மாட்டார்கள். அது எவ்வளவு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தாலும் சரி, எவ்வளவு வன்முறையான
எதிர்வினையாக இருந்தாலும் சரி, அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறார்கள்.
இன்று,
பாலஸ்தீனியர்கள் அதே புனிதமான மறுப்பைப் பிரதிபலிக்கிறார்கள். ஆக்கிரமிப்புக்கும்,
உடைமை பறிப்புக்கும், அவமானத்துக்கும் தலைவணங்க மறுக்கிறார்கள். அதனால்தான் முஹர்ரம்
என்பது வெறுமனே ஒரு துக்க மாதம் அல்ல - அது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட
ஆன்மாவுடனும் ஒருமைப்பாட்டின் கீதமாகும்.
டாக்டர்
அலி ஷரியாதி நமக்கு நினைவூட்டுவது போல், மனித வரலாறு என்பது "இறைவனின் துருவங்களுக்கும்
ஷைத்தானுக்கும் இடையிலான நித்திய மோதலின் வெளிப்பாடு", பெயர்களும் முகங்களும்
மட்டுமே மாறுபடும் ஒரு போராட்டம். இன்று ஹுஸைன் (அலை) அவர்களின் வெற்றியையும், யஸீதின்
அவமானத்தையும் வரலாறு பதிவு செய்கிறது.
டாக்டர்
ஷரியாதி மேலும் கூறுகிறார், ஒவ்வொரு புரட்சிக்கும் இரண்டு முகங்கள் உள்ளன: இரத்தம்
மற்றும் செய்தி. ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது தோழர்கள் தங்கள் இரத்தத்தைக் கொடுத்தனர்;
"கர்பலாவின் இரட்சகர்" ஸைனப் (ரலி) அவர்கள் அந்தச் செய்தியை எடுத்துச் சென்றார்கள்.
நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.
நம்
காலத்தின் யாஸிதுகளின் பெயரைச் சொல்லி அவமானப்படுத்துவதும், அவர்களின் கொடுங்கோல் தன்மையை
அம்பலப்படுத்துவதும், அசைக்க முடியாத உறுதியுடனும் தைரியத்துடனும் ஒடுக்கப்பட்டவர்களுடன்
நிற்பதும் ஆஸாதாரியின் (துக்கம்) பணியாகும். வெறுமனே வார்த்தைகளால் மட்டுமல்ல, செயலாலும்,
உறுதியாலும், மனசாட்சியாலும் ஆகும்.
ஆஸாதாரியின்
பாரம்பரியம் கர்பலாவின் கைதிகளான சையதா ஸைனப் (ரலி) அவர்கள், உம்மு குல்சூம் (ரலி)
அவர்கள், மற்றும் இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ஆகியோருடன் தொடங்கியது. அவர்களின்
சொற்பொழிவுகள் யஸீதின் வலிமைமிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்தன. பேசப்பட்ட
வார்த்தையும் எழுதப்பட்ட வார்த்தையும் ஒடுக்குபவனுக்கு எதிரான ஆயுதங்களாயின.
மதீனாவில்
கர்பலாவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் கூட்டங்கள் பற்றி யஸீதுக்குத் தெரிவிக்கப்பட்டபோது,
அவர் பீதியடைந்து, கிளர்ச்சிக்கு பயந்து இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களை மீண்டும்
கைது செய்தார். ஆனாலும் எதிர்ப்புணர்வு ஏற்கெனவே வேரூன்றி விட்டது. ஆஸாதாரி விரைவில்
பரவினார் – பாக்தாத்திலிருந்து கூஃபா வரை, ஈரானிலிருந்து இந்தியா வரை.
இமாம்
ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ஆஸாதாரி நிறுவனத்தை நிறுவனமயமாக்கினார்கள். தியாகிகளின்
நினைவை உயிரோட்டத்துடன் வைத்திருக்க கவிஞர்கள் அழைக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் கலீபா
ஹிஷாம் அவர்களின் படைகளால் கைது செய்யப்பட்ட புகழ்பெற்ற கவிஞர் ஃபராஸ்டாக் ஆவார்.
இமாம்
முஹம்மத் பக்கீர் (அலை) மற்றும் இமாம் ஜாபர் சாதிக் (அலை) ஆகியோர் தங்கள் காலத்தில்
ஆஸாதாரிக்கு மேலும் உத்வேகம் அளித்தனர். அவை கர்பலாவின் தத்துவத்தைப் பற்றிய புரிதலை
மக்களிடையே ஆழப்படுத்தின. இமாம் மூஸா காசிம் (அலை) அவர்கள் கவிஞர்களை தங்கள் தாய்மொழிகளில்
எழுத ஊக்குவித்தார், இது எல்லையை விரிவுபடுத்தியது.
பதினான்கு
நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்பலாவின் கூக்குரலை யஸீதுகளால் அடக்க முடியாததை போலவே,
இன்றைய யஸீதுகளாலும் உண்மையை மௌனமாக்க முடியவில்லை. ஹுஸைன் (அலை) அவர்களின் இரத்தம்
இன்னும் பேசுகிறது. ஸைனப் (ரலி) அவர்களின் தூதுக்குழு இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
ஏனெனில்,
கர்பலா என்பது வெறும் இடம் அல்ல. உண்மை நசுக்கப்படும் ஒவ்வொரு நிலமும் கர்பலா தான்.
ஆஷுரா என்பது ஒரு நாள் மட்டுமல்ல. அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக யாராவது ஒருவர்
நிற்கும் ஒவ்வொரு கணமும் ஆஷுரா தான்.
அடக்குமுறையாளர்கள்
இருக்கும் வரை கர்பலாக்கள் இருப்பார்கள். ஹுசைனிகள் இருக்கும் வரை அநீதிக்கு எதிர்ப்பு
இருக்கும். இறுதியில், அதிகாரம் மறைந்துவிடும், அதே நேரத்தில் சத்தியம் நிலைத்திருக்கும்.
ஆக்கம்:
சையத் ஸபர் மஹ்தி
தமிழில்
மஹ்ஜுபா முஸம்மில்
No comments:
Post a Comment