Thursday, August 18, 2022

மதீனா சாசனம் மத சகிப்புத்தன்மையின் சிறந்த அடையாள சின்னம்

 The best symbol of tolerance towards another religion was the Covenant of Medina

பாகம் 2


மதீனா சாசனம் மத சகிப்புத்தன்மையின் மற்றொரு சிறந்த அடையாள சின்னம்

பிற மதங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய சகிப்புத்தன்மைக்கு சிறந்த உதாரணம், ஆரம்பகால வரலாற்றாசிரியர்களால் ‘ஸஹீபா’ என்று அழைக்கப்பட்ட மதீனா சாசனம் ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) மதீனாவுக்கு குடிபெயர்ந்தபோது, வெறும் மதத் தலைவராக அவரது பாத்திரம் முடிவுக்கு வந்தது: அவர் இப்போது இஸ்லாத்தின் கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவராக இருந்தார். முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பலதெய்வவாதிகளின் அமைதியான சகவாழ்வை உறுதிசெய்யும் வகையில், ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டு பல தசாப்த கால யுத்தத்தினால் நிலைகுலைந்த சமூகத்தில் நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்ய, தெளிவான நிர்வாகச் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று இந்த நிலைமை கோரியது. இதன் காரணமாக, மதீனாவில் வசிக்கும் அனைத்து தரப்பினரின் பொறுப்புகள், ஒருவருக்கொருவர் தங்கள் கடமைகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு ‘அரசியலமைப்பு’ நபிகள் வகுத்தார். (இதுவே மதீனா சாசனம் என்றும் உலகின் முதலாவது அரசியலமைப்பாகவும் அறியப்படுகிறது). அனைத்து தரப்பினரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதன் விதிகளை மீறுவது அரச விரோத செயலாகக் கருதப்பட்டது.


இமாம்களின் எடுத்துக்காட்டுகள்

நபி (ஸல்) அவர்களால் விவரிக்கப்பட்டுள்ள இரக்கம் மற்றும் மனிதாபிமான பழக்கவழக்கங்களின் பல எடுத்துக்காட்டுகள் இமாம்களால் கடைப்பிடிக்கப்பட்டன. இமாம்கள் என்போர் நபியின் உண்மையான அனந்தரகாரர்கள் மற்றும் தூய இஸ்லாத்தின் நடைமுறை வெளிப்பாடு எனலாம்.

இமாம் அலி (அலை) அவர்களின் ஆட்சியின் போது, தெருக்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு வயதான குருடனைக் கண்டார், இதைப் பார்த்த இமாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் இதுபோன்ற விஷயங்கள் எப்படி இருக்க முடியும் என்று அதிர்ச்சியடைந்தார் என்ற சம்பவம் வரலாறில் பதியப்பட்டுள்ளது. இவர் பற்றி விசாரிக்கையில், "இந்த நபர் ஒரு கிறிஸ்தவர்" என்று சொல்லப்பட்டது. அதன்போது இமாம் அலி (அலை) அவர்கள், "அந்த நபர் சக்தி வாய்ந்தவராக இருந்தபோது, நீங்கள் அவருடைய சக்தியைப் பயன்படுத்தினீர்கள், இப்போது அவர் பலவீனமாக இருப்பதால், நீங்கள் அவரைத் தனியாக விட்டுவிட்டீர்கள்!?" (இந்தச் செயல் நீதிக்கும் கருணைக்கும் எதிரானது.) பிறகு இமாம் அலி (அலை) அவர்கள், "முஸ்லிம்களின் பொதுப் பணத்திலிருந்து (பைத்துல்மாலில் இருந்து) அவருக்கு நன்கொடை அளியுங்கள்" -- அவர் சம்பாத்தியத்துக்காக ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்றார்கள்.

மற்றொரு சம்பவம், இமாம் சாதிக் (அலை) அவர்கள் ஒரு பயணத்தின் போது, ஒரு மூலையில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஒருவரைக் கண்டார்கள். அவர் தனது தோழர்களில் ஒருவரிடம், "இவருக்கு தாகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன், அவருக்கு தண்ணீர் கொண்டு வாருங்கள்" என்றார்கள். அவர் (தோழர்) சென்று, பின்னர் இமாம் சாதிக் (அலை) அவர்களிடம், "இவர் ஒரு யூதர், நான் அவருக்கு தண்ணீர் கொடுக்கவில்லை" என்று கூறினார். இமாம் சாதிக் (அலை) இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து, "அவரும் மனிதனல்லவா?" என்று வருத்தத்துடன் கூறினார்.


முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும்?                ஒரு குர்ஆனிய-நீதியியல் பார்வை,

குர்ஆனிய-சட்ட அடிப்படையில், முஸ்லிம் அல்லாதவர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்:

1.    திம்மி [பாதுகாக்கப்பட்ட நபர்கள்]: இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இஸ்லாமிய அரசாங்கம் அவர்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்: இந்த வரிகள் "ஜிஸ்யா" என்று அழைக்கப்படுகின்றன - அதாவது முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இஸ்லாமிய அரசாங்கம் பெறும் செலவு மற்றும் வெகுமதி.

2.             முஆஹித் [ஒப்பந்ததாரர்]: இஸ்லாமிய அரசாங்கத்துடன் நட்புறவு கொண்ட முஸ்லிமல்லாதவர்கள். அவர்கள் தூதர்கள், வணிக, பொருளாதார மற்றும் கலாச்சார ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்வோர் அல்லது சர்வதேச அமைப்புகளின் மூலம் ஒருவருக்கொருவர் உடன்படிக்கைகளில் ஈடுபடுவோர். இவை அனைத்தும் 'ஒப்பந்தம்' என்பதற்கு எடுத்துக்காட்டுகள்; எனவே, அவர்கள் இஸ்லாமிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளின் அடிப்படையில் - நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சர்வதேச அமைப்புகளின் ஊடாக - அவர்கள் கையாளப்பட வேண்டும் மற்றும் பரஸ்பரம் மதிக்கப்பட வேண்டும்.

3.   முஹாதீன் [அமைதியான; வன்முறையற்ற]: இஸ்லாமிய அரசாங்கத்துடன் போரிலும் ஈடுபடாத, தொடர்பு இல்லாத நாடுகள். அவர்கள் தூதர்களை பரிமாறிக் கொண்டவர்களா அல்லது அவர்களுக்கிடையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொண்டவர்களோ அல்ல. எவ்வித தொடர்பும் இல்லையாயினும் அவர்கள் ஒருவரையொருவர் தொந்தரவு செய்வதில்லை. அத்தகைய நாடுகளுடன் இஸ்லாமிய அரசாங்கம் அமைதியையும் பரஸ்பர மரியாதையையும் பேண வேண்டும்.

4.      முஹாரிப் [எதிரிகள்]: முஸ்லிம்களுடன் போரில் ஈடுபட்டுள்ள குழுக்கள் அல்லது நாடுகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நாசவேலைகளை செய்வோர் அல்லது அதற்கு உதவுவோர். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நாசவேலை அல்லது போர் தொடுக்கும்போது, இவர்களின் இந்த செயலை முறியடிக்க ஏனைய முஸ்லிம்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நான்கு குழுக்களில், திம்மிகள் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் வாழ்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு அவர்களை தேசத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது; மேலும், அவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளது.

சில இஸ்லாமிய அறிஞர்கள் அஹ்லுல் கிதாப்கள் மட்டுமே திம்மிகளாக கருதப்படுகிறார்கள் என்றும், ஏனையோரை திம்மிகளில் கருத முடியாது என்றும் நம்புகிறார்கள். இருப்பினும், இந்தக் கருத்து அனைத்து அறிஞர்களும் ஒப்புக்கொண்ட கருத்தல்ல. பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் திம்மியுடனான ஒப்பந்தம் என்பது அஹ்லுல் கிதாப் மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உட்பட எந்த முஸ்லிமல்லாத குழுவையும் உள்ளடக்கும் என்று நம்புகிறார்கள் - முஸ்லிம் அல்லாத அனைத்து மக்களும் ஒப்பந்தத்தின் மூலம் பயனடையலாம். (அஹ்லுல் கிதாப் என்போர் கிறிஸ்தவ, யூத மற்றும் சேபிய மதங்களை பின்பற்றுபவர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள்). குர்ஆனின் கண்ணோட்டத்தில், இந்த மதங்கள் இறைவனால் அருளப்பட்ட மதங்கள் மற்றும் அவற்றின் தூதர்கள் இஸ்லாத்தால் தூயவர்களாகக் கருதப்படுகிறார்கள்; எனவே, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். இருப்பினும், காலப்போக்கில், இந்த மதங்கள் சிலரின் தீய செய்கைகளினால் சில மாற்றங்களுக்கு உள்ளாகி சிதைவடைந்துள்ளன என்று இஸ்லாம் நம்புகிறது; எனவே, அந்த சிதைவுகளை சரிசெய்து இந்த மதங்களை முழுமைப்படுத்தவே இஸ்லாம் தோன்றியது. 

இஸ்லாத்தில் போர் - இஸ்லாத்தினால் தடை செய்யப்படாத ஒரே போரானது சுதந்திரத்தை அடைவதற்கும், ஒப்பந்தத்தை மீறுவதைத் தடுப்பதற்கும், இஸ்லாத்தை தர்க்கரீதியாக ஊக்குவிப்பதில் உள்ள தடைகளை நீக்குவதற்கும், இஸ்லாத்தைத் தழுவ விரும்புவோரை தடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராகும்.

மக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவ காலம் தொடங்கி 13 வருடங்களாக, போரில் ஈடுபடுவதற்கான எந்த உத்தரவும் இறை தூதருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. எதிரிகளை மன்னிப்புடன் நடத்துமாறு தான் அவர் இறைவனால் பணிக்கப்பட்டார்:

فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ‌ؕ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏

ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சாந்தி' என்று கூறிவிடும். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள். (43:89.)

குர்ஆனில் போரில் ஈடுபடுவதும் கொலை செய்வதும் தடை செய்யப்பட்ட வசனங்கள் ஏறக்குறைய எழுபது உள்ளன, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு, மதீனாவில் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டபோதே தற்காப்பு போர் ஏற்கத்தக்கதாக இருந்தது.

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (8:30).

அந்த நேரத்தில்தான் ஜிஹாத் பற்றிய வசனம் இறை தூதருக்கு அருளப்பட்டது, அதில் அவர் போரில் ஈடுபடுவதற்கான காரணமும் விளக்கப்பட்டது:

اُذِنَ لِلَّذِيْنَ يُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا‌ ؕ وَاِنَّ اللّٰهَ عَلٰى نَـصْرِهِمْ لَـقَدِيْرُ ۙ‏

போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (22:39).

اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ ؕ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ ؕ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (22:40).



No comments:

Post a Comment