Thursday, June 3, 2021

"ஈரானே அழிந்தாலும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க முடியாது." - இமாம் கொமெய்னி

 "Even if Iran is destroyed, Islam cannot be abandoned."

- Imam Khomeini


நேர்வழி சென்ற ஸஹாபாக்களின் ஆட்சிக்குப் பிறகு அதிகாரத்தில் அமர்ந்த ஆட்சியாளர்கள் தமது அதிகார எல்லையை விஸ்தரிப்பதில் கூடிய அக்கறை செலுத்தினார்களே அன்றி றசூலுல்லாஹ் காட்டித்தந்த அரசியல் முறையை அமுல்படுத்தாது, அதில் இருந்து படிப்படியாக விலகிச்சென்றனர்.

அழகான பள்ளிவாசல்களை கட்டினர், புனித குர்'ஆனை அழகிய முறையில் அச்சிட்டனர் ஆயினும் தமது வாழ்க்கையில் முழுமையாக இஸ்லாத்தை கடைபிடிக்கத் தவறினர் என்பதை கவலையுடன் கூறியாக வேண்டும்.

புனித இஸ்லாத்தின் போதனையில் இருந்து விலகிச்சென்ற அவர்கள் தமது தவறுகளை நியாயப்படுத்த, அரசியலுக்கும் மார்க்கத்திற்கும் தொடர்பில்லை என்றும் இஸ்லாம் வேறு அரசியல் வேறு என்று காரணம் கற்பித்தனர். அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் மனதில் இதனை ஆழப் பதித்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் இறுதி கால் பகுதியில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ஈரானில் இஸ்லாத்தின் அடிப்படையில் ஓர் ஆட்சியை நிறுவும் வரை இதே நிலை தொடர்ந்தது.

பரம்பரை மன்னராட்சி முறையில் திளைத்துப் போயிருந்த முஸ்லிம் உலகிற்கு இஸ்லாமிய புரட்சி, இஸ்லாமிய அரசியல் என்ற சொற்களே புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் தோன்றின.

அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் நாடுகளில் ஆட்சிபீடத்தை அலங்கரித்துக்கொண்டிருந்த சிலர் ஈரானில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்துவதற்கு பல சூழ்ச்சிகளை செய்தனர். என்பது மட்டுமல்லாமல், அந்த ஆட்சியை ஒழிக்க யுத்தங்களையும் திணித்தனர்; அதன் முன்னேற்றத்தில் பல தடைகளையும் ஏற்படுத்தினர். அல்லாஹ்வின் உதவியால், அனைத்து சதித்திட்டங்களையும் முறியடித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு இன்று உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இமாம் கொமெய்னியும் சூபிஸமும்

இஸ்லாமிய புரட்சியை வழிநடத்திய இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் சூபிஸத்தில் அதிக நாட்டமும் ஈடுபாடும் கொண்டவராய் இருந்தார் என்பதை அவருடன் இருந்த பலர் அறிவார்கள். சூபிகள் என்றால் உலக விடயங்கள் அனைத்தையும் துறந்து, எல்லா நேரத்திலும் தியானத்தில் திளைத்தவராக தனிமையில்  இருக்க வேண்டும் என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இந்த கருத்தை இமாம் அவர்கள் முறியடித்து, உண்மையான சூபிசம் என்றால், எமக்காக எல்லாவற்றையும் இறைவன் செய்து தருவான் என்று நம்பிக்கொண்டு இருப்பதல்லாமல், இறைவனில் முழு நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்க வேண்டும் என்று உணர்த்தினார்.

இமாம் கொமைனியிடம், புரட்சி நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில், ஒருவர் "பாரசீக வலைகுடாவில் அமெரிக்காவின் போலீஸ் காரனாய், அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள அதி நவீன, சக்திவாய்ந்த ஆயுதங்களை கொண்டுள்ள ஷா மன்னனை எதிர்த்து உங்களால் வெற்றி பெற முடியுமா...? என்று வினவினார். அதற்கு மறைந்த இமாம் அவர்கள் "நன்மையை ஏவி தீமைக்கெதிராகப் போராடும் கடமை எமக்கு உண்டல்லவா; நாம் எமது கடமையைச் செய்கிறோம்; அதற்கான கூலியை அல்லாஹ்விடம் விட்டுவிடுவோம்" என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தான். அல்லாஹ்வை மட்டுமே நம்பி போராடுபவர்களுக்கு, நிச்சயமாக, அல்லாஹ்வே போதுமானவன். இதுவே உண்மையான சூபிகளின் வழிமுறையாக இருக்க வேண்டும்.

இமாமின் இஸ்லாமிய அறிவு

இமாம் என்ற அந்தஸ்துக்கு ஒருவர் உயர்வதற்கு, அதுவும் மாபெரும் உலமாக்களால் இமாம் என்று அங்கீகாரம் பெறுவதற்கு அவர், மற்ற எல்லோரையும் விட அறிவில், ஆற்றலில் சிறந்தவராய் இருக்க வேண்டும் என்பது நியதி. இமாம் கொமெய்னி அவ்வாறான ஒருவராய் இருந்தார். இமாமைப் பற்றி மறைந்த அஹ்மத் டீடாத் குறிப்பிடுகையில் அவர் ஒரு குர்'ஆன் கொம்பியூட்டர் என்று வர்ணித்தார். இமாமைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரது புத்தகங்களை, குறிப்பாக 40 ஹதீஸ் விளக்கங்களை வாசித்தாலே இஸ்லாத்தில் அவருக்கிருந்த அறிவின் ஆழத்தை புரிந்துகொள்ளலாம்.

இமாம் ரூஹுல்லாஹ் மூஸவி கொமைனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 03-06-2020 அன்று இவ்வுலகைப் பிரிந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.  இவ்வளவு நீண்ட காலம் கழிந்த பிறகும் கூட, உலகின் பல பாகங்களிலும் மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் நினைவுகூர்கின்றனர், அவரின் வாழ்வம்சங்களை ஆராய மாநாடுகள் நடத்துகின்றனர்  என்றால் அவர் உலகில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த உள்ளார் என்பது சொல்லி புரிய வேண்டியதில்லை.

இமாம் கொமெய்னி, சமூகத்தில் உயர்ந்த மனித விழுமியங்களை பரப்பி, இஸ்லாம் விரும்பும் குறிப்பிட்ட மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் முற்றிலும் ஆன்மீக போதனைகளின் அடிப்படையில் மட்டுமே அதனை உருவாக்க முடியாது என்றும் இஸ்லாமிய புரட்சி ஒன்றினால் மட்டுமே அம்மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் உறுதியாக நம்பியது மட்டுமல்லாது, செயல் ரீதியாகவும் அதை நிரூபித்துக் காட்டினார்.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சி

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். எமக்கு வேண்டிய விதத்தில் இஸ்லாமிய உலகைத் துண்டாடி எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லிம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில், மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில், திடீரென ஒரு புரட்சி வெடிக்கிறது. அதுவும் இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் இஸ்லாமிய புரட்சியாக வெடிக்கிறது. 'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமென்றே போதும்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது. ஈற்றில், 1979ம் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று, ஈரானில் இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிறுவப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலுமே எமது பாதுகாப்பு என்று அரபு ஆட்சியாளர்கள் அவர்களிடம் மண்டியிட்டிருந்த காலகட்டத்தில், இஸ்லாமொன்றே எமக்கு பாதுகாப்பளிக்க வல்லது என்று உறுதியாய் இருந்து, அதனை செயலில் காட்டி, உலக முஸ்லிம்களுக்கு கண்ணியம் சேர்த்த பெருந்தகை, யுகப்புருஷர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள்.

அன்னாரின் வழிநடத்தலில் உருவான ஈரான் இஸ்லாமிய குடியரசினால் நாமும் முஸ்லிம்கள் என்று பெருமையுடன் கூறக்கூடிய நிலையை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று ஆட்சி அதிகாரம் தம் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட பின்பும் கூட, எல்லா துன்புறுத்தல்களுக்கும், மோசமான நடத்தைகளுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகியபோதும், இமாம் கொமெய்னி தனது கொள்கையை ஊக்குவிக்க ஒருபோதும் பலாத்காரம் அல்லது விரும்பத்தகாத வழிகளைப் பயன்படுத்தவில்லை: அவரது சமூக இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, இஸ்லாம் ஈரானில் மாபெரும் சக்தியாக மாறியபோதும், பழிவாங்குவதை அவர் ஒருபோதும் கைக்கொள்ளவில்லை என்பதை வரலாறு சான்று பகர்கின்றது.

பலஸ்தீன் விஷயத்தில் மிகவும் உறுதியான கொள்கையைக் கொண்டிருந்த இமாமவர்கள்


இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து இஸ்ரேலுடன் ஷாவின் அரசாங்கம் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளையும் உடனடியாகவே துண்டித்து,  அங்கிருந்த இஸ்ரேலிய தூதரகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, அவ்விடத்தை பலஸ்தீன் தூரககமாக மாற்றினார். அதுமட்டுமல்லாமல், பைத்துல் முகத்தஸை விடுவிக்கும் முக்கியத்துவத்தை உலக முஸ்லிம்களுக்கு உணர்த்தும் முகமாக, புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை "சர்வதேச குத்ஸ் தினம்" என்றும் பிரகடனப்படுத்தினார்.

எதிரியை அழிப்பதற்கு அணுகுண்டு அவசியமில்லை...!

எமது இலக்கு இந்த சாத்தானிய ஸயோனிஸமும் மற்றும் அதனை நடைமுறைப் படுத்தும் இஸ்ரேலுமேயாகும்........... இவற்றை அழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பதே காலத்தின் தேவையாகும்...

"உலக முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரை இஸ்ரேலின் மீது ஊற்றினாலே போதும், அந்த நாடு இருந்த இடம் தெரியாது அழிந்து போய்விடும்" என்று இமாம் கொமெய்னி அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள்.

ஆகவே, எம்மத்தியில் உள்ள ஒற்றுமையின்மையை களைந்து செயல்படுவோமேயானால், எம் எதிரியை அழிப்பதற்கு அணுகுண்டு அவசியமில்லை; ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரே போதும்.

உலக முஸ்லிம்களின் ஒற்றுமை

இமாம் கொமெய்னி அவர்கள் எப்போதுமே உலக முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்துபவராக இருந்தார்கள். முஸ்லிம்கள் உலகில் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய ஒற்றுமையே தீர்வு என்று உறுதியாக நம்பினார்கள். இதற்காகவே ரசூலுல்லாஹ் பிறந்த ரபீயுல் அவ்வல் மாதத்தின் ஒரு வாரத்தை "இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" என்று பிரகடனப்படுத்தினார்.

இவர்தான் ஈரானில் இஸ்லாமிய புரட்சியை வழிநடத்திய இமாம் கொமெய்னி (ரஹ்) ஆகும்.

இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றத்தைத் தொடர்ந்து, ஈரானின் சர்வ அதிகாரமும் இவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மரணிக்கும்வரை இந்த அதிகாரம் அவர் வசமே இருந்தது. முன்னைய ஆட்சியாளர்கள் கட்டிய பளிங்கு மாளிகைகள் பல இருந்தும், அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை முறையினைத்தான் படத்தில் காண்கிறீர்கள்.




பொறுப்புக்கூறவேண்டும் என்ற இறையச்சம், கர்வமின்மை, டாம்பீகமின்மை, படாடோபமின்மை, தன்னலமின்மை. அதனால்தான் இந்த மகோன்னத மனிதர் கோடிக்கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்கிறார்.

 

இமாமின் மறைஞானம்

தான் விரும்பும் சிலருக்கு அல்லாஹ் அந்த மறைஞானத்தை வழங்குவான்...

சோவியத் ஒன்றியம் உடையப் போகிறது என்று ஒன்றியத்தின் தலைவராய் இருந்த கோர்பச்சேவுக்கு எப்போதோ சொன்னார் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள். இஸ்லாத்தின் தூதையும் எத்திவைத்தார்கள்.

கோர்பச்சேவும் அப்போது அதை கேலியாகத்தான் பார்த்தார். அதனை புரிந்துகொள்ளக்கூடிய ஞானம் அவருக்கே இருக்கவில்லை. இமாம் அவ்வாறு கூறி, அதிக காலம் செல்லுமுன் சோவியத் என்ற மாபெரும் சாம்ராஜ்யம் துண்டுதுண்டாக சிதறியது.

இஸ்லாமா அல்லது ஈரானா...???

இமாம் கொமெய்னி ரசூலுல்லாஹ்வின் மனைவியரை தூசித்த சல்மான் ருஷ்திக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இந்த தீர்ப்பை சவுதியும் வஹ்ஹாபிகளும்  கண்டித்தனர்.

கீழே தரப்படுவது இமாம் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கும் ஆயத்துல்லாஹ் அக்பர் ஹாஷெமி ரப்சஞ்சானி (ரஹ்) அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இது தொடர்பான முக்கியமான உரையாடல்.


இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ரசூலுல்லாஹ்வின் மனைவியரை இகழ்ந்து, இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் புத்தகம் எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அப்போது ஈரானின் ஜனாதிபதியாக இருந்த ஆயத்துல்லாஹ் ரப்சஞ்சாணி இமாம் கொமெய்னியிடம் சென்று "உங்கள் செயல் சர்வதேச கொள்கைகளுடன் உடன்படுவதாக இல்லை, சல்மான் ருஷ்டி ஒரு பிரித்தானிய பிரஜை, நீங்கள் இங்கிருந்து இவ்வாறான தீர்ப்பை வழங்குவது முறையல்ல;  அதனை வாபஸ் பெறுங்கள் அல்லது புத்தக பதிவாக மட்டும் அதனை வைத்திருங்கள்; ஊடகங்கள் மூலம் அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.

அது பகிரங்கப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்...? என்று இமாமவர்கள் கேட்டார்கள்.

நாம் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

அப்புறம் என்ன நடக்கும்?

நாம் புறக்கணிப்புகளுக்கு ஆளாவோம்; எம்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பர்.

மேலும் என்ன நடக்கும்...?

ஈரான் தாக்கப்படக்கூடும்.

இமாம் மீண்டும் கேட்டார்: வேறு என்ன... ?

அதனால் ஈரானில் அழிவுகள் ஏற்படக்கூடும் என்று ரப்சஞ்சானி பதிலளித்தார்.

பின்னர் இமாம் கொமேனி (ரஹ்) அவர்கள் "நமது நோக்கம் இஸ்லாத்தை தியாகம்செய்து ஈரானை காப்பதல்ல, இஸ்லாம் காக்கப்பட வேண்டும், அது ஈரானின் அழிவிலாயினும் சரியே. ருஷ்டி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியுள்ளான். இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும் போது வாய் மூடி மௌனியாய் இருந்துவிட்டு, ஈரான் தாக்கப்படும்போது மட்டும் பேச சொல்கிறீர்களா...? என்று கேள்வியெழுப்பினார்கள்.

இதுவே இமாமின் கொள்கையாகும்; இதுவே ஆஷூரா கொள்கையுமாகும். ஸையத் அல் ஷுஹாதா இமாம் ஹுசைன் (அலை) போன்றவர்கள் இஸ்லாத்துக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்றால், அனைத்தையும் இழக்கத் தயாரானார்கள் என்றால் இஸ்லாத்துக்கு முன் வேறு எதுவுமே முக்கியமல்ல என்பதை இமாமவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

இஸ்லாத்தைக் காப்பதற்கு அவசியமாயின் நாம் அனைத்தையும் தியாகம் செய்ய தயாராய் இருக்க வேண்டும்.

இதுவே இமாம் ஹுஸைன் கற்றுத்தரும் கர்பலா பாடமாகும்.

- தாஹா முஸம்மில் 


 

 

No comments:

Post a Comment