Monday, November 9, 2020

உண்மையின் உறைவிடமாய் விளங்கிய இமாம் ஜஃபர் சாதிக் (அலை)

 Imam Ja’far Sadiq (AS) the embodiment of truth

"நான் கனதியான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கின்றேன், அவற்றை உறுதியாக பற்றிப் பிடித்திருக்கும் காலம் வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள்; முதலாவது அல்லாஹ்வின் கலாமாகிய திருக்குர்'ஆன் மற்றது என்னுடைய அஹ்லுபைத்" என்பது றஸூலுல்லாஹ்வின் ஹதீஸ்.

இதனடிப்படையில் ரசூலுல்லாஹ்வின் புனித குடும்பத்துக்கு இஸ்லாத்தில் விசேட அந்தஸ்து உள்ளது.

ஷியாக்களின் நம்பிக்கையின் படி இப்புனித குடும்பத்தில் இருந்து 12 இமாம்கள் தோன்றுவர். அவர்களில் முதலாமவர் இமாம் அலீ (அலை) அவர்கள், இறுதியானவர் இமாம் மஹ்தி (அலை) அவர்களாகும். இந்த வரிசையில் ஆறாவதாகத் தோன்றியவர்தான் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்களாகும்.

பிறப்பு & சிறப்பு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். (ரசூலுல்லாஹ்வின் பிறந்த தினமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 ஆகும் என்பது ஷியாக்களின் நம்பிக்கை).

குடும்பம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் அன்பு பேரன் ஹுஸைன் (அலை) அவர்களின் மகனார் அலி ஜெயினுல் ஆப்தீன் (அலை) அவர்களது மகனார் பாக்கிர் (அலை) அவர்களது மகன் இமாம் ஜாபர் சாதிக் (அலை) ஆவார்கள்.

தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தையாம் இமாம் அலிஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களை வேண்டி நின்றனர்கள் முஹம்மது பாகிர் (அலை) அவர்கள். அக் குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப்பெயரோடு சாதிக் என்னும் (உண்மையாளர்) என்ற பெயரும் ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் அப்பெயர் நிலை பெற்றது.

கல்வி

தம்முடைய சிறு வயதில் தம் அருமை பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களிடமே இறைவனின் திருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்கள். இவர்களுக்கு சுமார் 12 வயது பூர்த்தியாகும் நிலையில் இவர்களின் பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மறைந்தார்கள். பின்பு இவர்களுக்கு இவர்கள் தந்தை முஹம்மது பாகிர் (அலை)யே இறைஞான அறிவை வழங்கினார். அவரின் மறைவுக்குக்குப் பின் தமது 31வது வயதில் ஹிஜ்ரி 114ல் இமாமின் பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவர்களிடம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்வி பயின்றனர்.

ஹனபி மத்ஹபின் இமாமான அபு ஹனிபா (ரஹ்), "இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) அவர்களின் கீழ் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றிருக்காவிட்டால் நான் அழிந்தே போயிருப்பேன்" என்று ஒப்புக்கொள்கிறார். அதே நேரத்தில் மாலிகி மத்ஹபின் இமாமான  மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) அவர்களின் மாணவரே. இமாமாம் அவர்களிடம் இருந்து ஹதீஸ்களை அறிவிக்கும் போது "திகா (சத்தியமான) ஜாஃபர் இப்னு முஹம்மது அவர்களே என்னிடம் சொன்னார்..." என்று கூறுபவராக இருந்தார்கள்.

மாலிக் பின் அனஸின் (ரஹ்) அவர்களின் மாணவராக ஷாபி மத்ஹபின் இமாமான முகமது பின் இத்ரிஸ் ஷபீ (ரஹ்), அவர்களும் அவரின் மாணவராக அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களினதும் இருந்ததால், இந்த இரண்டு சுன்னி நீதித்துறை பள்ளிகளின் நிறுவனர்களும் இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) இன் மறைமுக மாணவர்கள் என்று அழைக்கப்படலாம்). அதேவேளை இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) முதஸிலா சிந்தனை பள்ளியின் நிறுவனர் வசில் இப்னு அத்தாவின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்கள்.

அறிவுத் துறைகளில், இமாம் இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளான ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கற்றலுக்காக வந்திருந்த மாணவர்களுக்கு அறிவியலை புகட்டினார் - நீதித்துறை, ஹதீஸ், நெறிமுறைகள், இறையியல், சொல்லாட்சி மற்றும் புனித குர்ஆனின் விரிவாக்கம் இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், கணிதம், தாவரவியல் போன்ற இயற்கை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைக் கற்பித்தார். இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) அவர்களது புகழ்பெற்ற மதீனா  சன்மார்க்கக் கல்விக்கூடத்தில் 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்டனர். இதில் வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஜாபிர் இப்னு ஹையானும் ஒருவராகும்.

இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அன்னவர்களை அணுகி அறிவுரை பெற்று ஆன்மீகப் பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்தானுல் ஆரிபீன் அபா யஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்களும் ஒருவர். நான் நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மீகக் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர் சாதிக் (அலை) அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகியே இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.

இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளனர். கனவு விளக்கம் பற்றி ஒரு நூலும் தொகுத்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் இவர்கள் கவிஞராகவும் விளங்கினார்கள்.

மாணவர்களுக்கு அறிவுரை

இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் தம் மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தியுடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப் பேசக் கூடிய சன்மார்க்க பிரசாகர்களாகவும் திகழுங்கள்’ என்று கூறினார்.

அதற்கு மாணவர்கள், சுருக்கமாக கூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்று கேட்டனர். அதற்கு இமாம் அவர்கள்’ நீங்கள் இறைகட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. உங்களின் செயலே பெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும் பிரகாசமாகிவிடும்’. என்று மறுமொழி கூறினார்.

இனிய பண்பும் வாய்க்கப் பெற்ற இவர்கள் தமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும் பண்பு பெற்று விளங்கினார்.

தம் உறவினர் ஒருவர் தம்மை இழிவாகப் பேசிய போதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்தனார்.

ஒருவர் வந்து தங்கள் சிறிய தந்தையின் மகன் தங்களை கண்டபடி ஏசுகிறான் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்து விட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்துவிடுவாயாக! என்று வேண்டினர்கள். இதுகண்டு அந்த நண்பருக்கு வியப்பு ஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர் ஏசிவிடின் அதற்கு நாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்க வேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசி விடக் கூடாது. அதற்கு நற் காரணம் ஒன்றையேனும் நாம் காணவிடில் அதற்கு ஏதேனும் நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று அருள்மொழி கூறினார்.

நாத்தீகனுடன் ...

ஒருநாள் இமாம் அவர்கள் கப்பலோட்டி (நாத்தீகன்) ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற்பிரயாணத்தில் எப்போதாவது சிக்கியுள்ளாயா? என்று வினவினர். அதற்கு அவன் ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கிவிட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட நான் மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்று விரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்த கப்பல் மூழ்கியபோது, நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்த போது, எவரேனும் காப்பாற்றினால்தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா? என்று வினவினார். அவ்விதமே நம்பினேன் என்று அவன் மறுமொழி பகர்ந்தான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘அந் நம்பிக்கை உனக்கு எதன் மீது இருந்தது? உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்று வினவினர்.  பதில் சொல்லமுடியாமல் வாய்மூடி இருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எதன் மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன்தான் அல்லாஹ்! அவனே உன்னைக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்ல அவன் அவர்கள் கரம்பிடித்து மாணவனாக இணைந்து கொண்டார்.

பாதிரியார்களிடம்

ஒரு முறை ஹஜ்ரத். இமாம் ஜாபர் சாதிக் (அலை) அவர்கள் ஒரு ஊருக்கு போய்க்கொண்டு இருந்த போது, கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டு இருந்தது.

தலைமை பாதிரி, இமாம் அவர்களை அழைத்து இஸ்லாம் கூறும் சொர்க்கத்தின் அமைப்பில் தனக்கு மூன்று சந்தேகங்கள் இருப்பதாலும் அதனை இமாம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும்என்றும் கேட்டார். இமாம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

முதல்சந்தேகம்.:-

சொர்க்கத்தில் ஒரு மரம் இருப்பதையும் அதில் அனைத்து சொர்க்கவாசிகளும் எவ்வளவு கனிகளைப் பறித்தாலும் கனிகள் குறைவதே இல்லை என்று உங்கள் மதம் கூறுகிறதே அது நம்பும்படியாகவா இருக்கிறது…..? அல்லாஹ்வால் முடியம் என்று கூறாமல், புரியும்படியாக தகுந்த சாத்தியங்களுடன் பதில் கூறுங்கள் என்றார் பாதிரி..!

இமாம் அவர்கள் அமைதியாகக்கூறினார்கள், மிக எளிமையான பதில்தான்,, ஒருமெழுகுவர்த்தியில் எத்தனை மெழுகுவ்ர்த்திகளை ஒளி ஏற்றினாலும் முதல் மெழுகுவர்த்தியில் ஒளி குறைவதில்லையே,,, பாதிரியார் புன்முறுவலுடன் அதை ஏற்றுக் கொண்டார்….,

அடுத்த கேள்வி….,:- சொர்க்கத்தில் உள்ள சொர்க்கவாசிகள் எதை உண்டாலும் எவ்வளவு உண்டாலும் மலஜலம் கழிப்பதில்லையாமே அதெப்படி சாத்தியம்…? இமாம் அவர்கள், தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கப்படுகிறது அது மலஜலம் கழிக்கிறதா என்ன…? பதிலளித்தார்கள்.

உலக உதாரணங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுவதில் தலைமை பாதிரிக்கு திருப்தி…. முகத்தில் சந்தோஷம்…. சரி,,,

மூன்றாவது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்:- சொர்க்கத்தில் ஒரு சுனை இருக்கிறதாமே…., அதில் அறுசுவை நீரும் கிடைக்குமாமே ஒரே சுனையில் அதெப்படி முடியும்….,

இமாம் சொன்னார்கள்….. மனிதனின் பல இயல்புகளைக் கொண்ட கண்ணீர், உமிழ்நீர், சிறுநீர், மலம் போன்றன எப்படி ஒரே உடலில் சாத்தியமோ அப்படித்தான் இதுவும்….,

பதில்களைக்கேட்ட அத்தனை பாதிரிகளுக்கும் ஆச்சர்யம், திருப்தி,,, அவ்வளவுதான், அனைவரும் இமாம் அவர்களின் மாணவர்களாக இணைந்து கொண்டார்கள்.

மறைவு

ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15 தமக்கு நஞ்சு ஊட்டப்பட்ட உணவால் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமது மகன் மூஸா காஸிம் (அலை) அவர்களை அழைத்து ஹஜ் செய்தபோது அணிந்த இஹ்ராம் துணி மற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலி (அலை) அவர்களின் தலைப்பாகைத் துணியையும் கொண்டு அவர்களுக்கு கபனிட்டு ஜன்னத்துல் பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்வாறே செய்யப்பட்டார்கள்.

இஸ்லாத்தின் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலி வஸல்லம்  அவர்களின் வாரிசாக இமாம் ஜாஃபர் சாதிக் (அலை) தனது 34 ஆண்டு கால பயணத்தின் போது, "ஃபிக் அல்-ஜஃபரி" என்று அழைக்கப்படும் மத்ஹபை உண்மையைத் தேடுபவர்களுக்கு வழங்கினார். இது உண்மையில் நபிகள் நாயகத்தின் (ஸல்) தூய்மையான மற்றும் அழகிய ஷரியாவாகும். பல மில்லியன் முஸ்லிம் மக்கள் இவரின் ஜாபரி மத்ஹபை உலகளவில் இன்றளவிலும் பின்பற்றுகின்றனர்.

- தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment