Contributors

Sunday, September 2, 2018

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - அலி ரஜாய் மற்றும் பஹோனர்

Ali Rajai and Javad Bahonar

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - 
அலி ரஜாய் மற்றும் பஹோனர்

முஹம்மது அலி ராஜாய் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 30 ஆம் திகதி வரை ஈரானின் இரண்டாவது ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்தவர். அதற்கு முன் அவர் ஈரானின் பிரதமராக பணியாற்றினார். அவர் பிரதமராக இருந்த அதேசமயத்தில் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி பிரதம மந்திரியாக இருந்த முஹம்மத் ஜவாத் பஹோனருடன் இவரும்; பயங்கரவாதியின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை 

முகம்மது-அலி ரஜாய் ஜூன் 15, 1933 இல் ஈரானின் கஸ்வின் நகரில் பிறந்தார். அவரது தந்தை அப்துல்ஸமத் ஆவார். அலி ரஜாய் 4 வயதை கடக்கும்போது தந்தையை இழந்தார். அதன்பிறகு அவர் தனது தாயோடும் சகோதரனுடனும் வாழ்ந்து வந்தார். கஸ்வினில் வளர்ந்த அலி ரஜாய் 1946 ஆம் ஆண்டில் தெஹ்ரானுக்கு குடிபெயர்ந்தார். தெஹ்ரானுக்கு சென்ற பிறகு ஷா எதிர்ப்பு குழுக்களுடனும் கட்சிகளுடனும் அவர் நெருக்கமான வளர்த்துக்கொண்டார். ஆயதுல்லாஹ் மஹ்மூத் தலகானி அவர்களுடன் நெருக்கமாக செயல்பட்ட அவர் 1958 ஆம் ஆண்டில் தர்பிய்யத் மு'அல்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஷாவின் படைகள் அவரது எதிர்த்தரப்பு நடவடிக்கைகளுக்காக மூன்று முறை கைது செய்தன. இறுதியாக அலி ராஜாய் 1974 மே மாதத்தில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார்.

இஸ்லாமிய புரட்சிக்கு முன்

தெஹ்ரானுக்குப் பயணித்த அவர் விமானப்படையில் இணைந்து பணியாற்றினார். ஒரு வருடம் கழித்து அவர் விமானப்படையில் இருந்து ராஜினாமா செய்தார். அக்காலகட்டத்தில் அவர் ஆயதுல்லா தலகானி அவர்களுடன் நெருங்கி செயல்பட்டார். 1955 ஆம் ஆண்டில் பிஜார் நகரில் கணித ஆசிரியராக சேவையாற்றினார்.  அதன் பின் அவர் தெஹ்ரானில் மேற் படிப்பைத் தொடர்ந்தார், 1959 இல் கணிதத்தில் தனது கல்வியை நிறைவு செய்தார். அதன்போது அவர் மெஹ்தி பஸர்கான் மற்றும் சஹாபி ஆகிய முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களுடன் நன்கு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அவர் தெஹ்ரானில் கல்விப் பணியாற்றிய அதேவேளை புள்ளியியல் துறையில் முதுமாணி பட்டத்துக்காக கல்வியையும் தொடர்ந்தார். 1962 இல் ஈரான் சுதந்திர இயக்கத்தின் உறுப்பினராக இணைந்த அவர் 1962 ல் கைது செய்யப்பட்டார் மற்றும் ஷாவின் 'சவாக்' ரகசிய படையினால் ஐம்பது நாட்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார். 

சிறையிலிருந்து விடுதலையான பிறகு, முஹம்மத் ஜவாத் பஹோனார் மற்றும் ஜலாலுத்தீன் அல் பார்ஸி ஆகியோருடன் சேர்ந்து, அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் கூடுதல் அக்கறை காட்டினார். ஷா எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக அவர் மீண்டும் 1972 ஆம் ஆண்டு  கைதுசெய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். இறுதியாக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, 1979 ல் ஈரானிய இஸ்லாமிய புரட்சி வெற்றிபெறும் தருவாயில் விடுவிக்கப்பட்டார். 

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு

அவர் இஸ்லாமிய புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலாசார தாக்கங்களின் பாதிப்பை ஈரானிய பல்கலைக்கழகங்களிலிருந்து  அகற்றுவதற்கான இயக்கத்தில் ஒரு தலைவராக செயல்பட்டார், அது பின்னர் கலாச்சாரப் புரட்சி என்று அழைக்கப்பட்டது.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் பின்வரும் முக்கியமான பதவிகளுக்கு ராஜாய் நியமிக்கப்பட்டார்.

  • கல்வி அமைச்சர் 
  • இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் வேட்பாளர் 
  • பிரதம மந்திரி
  • ஜனாதிபதி

கல்வி அமைச்சு

மெஹ்தி பசர்க்கன் தலைமையிலான புரட்சிகர இடைக்கால அரசாங்கத்தில் ரஜாய் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்போது அவர் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார். இஸ்லாத்தை முன்னிலைப் படுத்தி பாடத்திட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்தார். ஆசிரிய கல்வி மையங்களை சீர்திருத்துதல், முஸ்லீம் சமுதாயத்திற்கான பொருத்தமான ஆசிரியர் கல்வி முறை ஒன்றை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இஸ்லாமிய நெறிமுறைகளை வளர்த்தல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உருவாக்குதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான உறவை வளர்த்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினார். இந்த இலக்குகள் ராஜாயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பட்டன.  அவற்றை அடைந்துகொள்ள பெரும் முயற்சிகளில் அர்ப்பணத்துடன் செயற்பட்டார். பஸர்கானின் அமைச்சரவை ராஜினாமா செய்யும் வரை அவர் ஒன்பது மாதங்களுக்கு கல்வி அமைச்சரக இருந்தார்.

பிரதமராக நியமனம்.

பஸர்கனின் அமைச்சரவையின் ராஜினாமாவைத் தொடர்ந்து அலி ரஜாய் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டார். இவரது இந்த பதவியின் போதே சதாம் ஹீசைன், அமெரிக்காவினதும் அறபு நாடுகளினதும் தூண்டுதலின் பேரில் ஈரான் மீது பாரிய ஆக்கிரமிப்பு யுத்தமொன்றைத் தொடுத்தார். ஈரானிய அரசின் கவனம் முழுமையாக யுத்தத்தின் பக்கம்  திருப்பப்பட்டது.  நாட்டின் பாதுகாப்பு முன்னுரிமைப் பெற்றது. இவ்வாறிருக்கையிலேயே நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், உண்மையில் ஒரு சீ.ஐ.ஏ. உளவாளி என்பது கண்டறியப்பட்டடு, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

(ஈரானில் ஏற்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில், ஈரானிய மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ராஜதந்திரிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த காலம் அது. தூதரகத்தில் இருந்த ஆவணங்களை பரிசீலித்த மாணவர்கள், அமெரிக்காவின் சூழ்ச்சியை மட்டுமல்லாது, நாட்டில் ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், உண்மையில் ஒரு சீ.ஐ.ஏ. உளவாளி என்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பனீஸத்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பெண் வேடமணிந்து, நாட்டைவிட்டு தப்பித்து சென்றார்.)

இதனைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக நிர்வாக சபைக்கு ஆயத்துல்லாஹ் பெஹெஷ்தி தலைமையில் 6 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் அலி ராஜாயியும் ஒருவர். இதன் பிறகு 1981 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அலி ரஜாய் 91 சதவிகித மக்கள் வாக்குகளால் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அத்தோடு அவர் முஹம்மத் ஜவாத் பஹோனரை பிரதமராக நியமித்தார். இந்த நியமனத்தை ஈரானிய நாடாளுமன்றமும் உறுதி செய்ததைத் தொடர்ந்து ஒரு புதிய அரசாங்கம் உருவானது.

படுகொலை

1981 ஆகஸ்ட் 30 அன்று, ஜனாதிபதி ரஜாய் மற்றும் பிரதம மந்திரி முகமது ஜவாத் பஹோனருடன் ஈரானின் உச்ச பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கையில் ஒரு நம்பகமான உதவியாளர் மாநாட்டிற்குள் பெட்டி ஒன்றைக் கொண்டுவந்து, இரண்டு தலைவர்களுக்குமிடையில் வைத்துவிட்டுச் சென்றார் என்று சாட்சியாளர்கள் பின்னர் குறிப்பிட்டனர்;.

சிறிது நேரத்தில் அப்பெட்டியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்;பட இன்னும் சிலரும் ஷஹீதாகினார். இச்சம்பவம் இடம்பெறுகையில், இவர்கள் இருவரும் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. இந்த பயங்கர செயலைச் செய்தவன் முனாஃபிக்கீன்கள் என்று ஈரானிய மக்களால் அறியப்பட்ட முஜாஹிதீன் கல்க் அமைப்பை சேர்ந்த  மசூத் காஷ்மீரி என்பவனாகும் என்று விசாரணையின் மூலம் தெரியவந்தது. 

ஷஹீதானோரின் உடல்கள் பெஹெஸ்த்தி ஸஹ்ராவில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

========================================================

முஹம்மத் ஜவாத் பஹோனர்

முஹம்மத் ஜவாத் பஹோனர் ஒரு ஈரானிய இறையியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் பிரதமராக ஆகஸ்ட் 1981 இல் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்துக்கே பணியாற்றினார். பஹோனார் மற்றும் முகம்மது-அலி ரஜாயின் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முனாபிகீன்கள் என்று அடைக்கப்பட்ட முஜாகிதீன்-இ-கல்க் இயக்கத்தினரால் 1981 ஆம் ஆண்டு ஆகஸட் மாதம் 30ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

ஆரம்ப வாழ்க்கை 

முகமது ஜவாத் பஹோனர் செப்டம்பர் 3, 1933 அன்று ஈரான், கெர்மான் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு எளிமையான வியாபாரி, கெர்மானில் சிறிய கடை ஒன்றை நடத்திவந்தார். அவரது ஒன்பது பிள்ளைகளில் பஹோனர் இரண்டாவது பிள்ளையாகும். அவரது குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருந்தது. பஹோனர் சிறுவனாக இருக்கையில்  உள்ளூர் பெண் ஒருவர் மூலம் புனித குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டார். அதேவேளை அங்கேயே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். அதன் பின் ஆயதுல்லாஹ் ஹகீகியின் வழிநடத்தலில் ம'சூமா சன்மார்க்கப் பள்ளியில் ஆரம்ப கல்வியை நிறைவு செய்தார். 1953 ஆம் ஆண்டில் அவர் 'கும'; சன்மார்க்கக் கல்விக்கூடத்தில் சேர்ந்த  இஸ்லாமிய புரட்சியின் தலைவரான றூஹுல்லாஹ் கொமெய்னி அவர்களின் வகுப்பில் சேர்ந்து கற்கலானார். அதன் பிறகு தெஹ்ரானின் பல்கலைக்கழகத்தில் இறையியலில் டாக்டர் பட்டம் பெற்றார். மேலும், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய குழாம் உறுப்பினராக இருந்த அவர் இறையியல் கற்பித்தும் வந்தார்.

இஸ்லாமிய புரட்சிக்கு முன் பஹானர் பஹ்லவி பரம்பரை ஆட்சிக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டதுடன் 1963 ஆம் ஆண்டு ஷாவின் 'வெண்புரட்சி' என்ற கண்துடைப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். இமாம் கொமெய்னி ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்த காலகட்டத்தில், அவரைப் பின்பற்றுவோரில் செல்வாக்கு மிகுந்தவராக பஹோனர் காணப்பட்டார். இவரின் உரையென்றால் {ஹஸைனியே இர்ஷாத் மண்டபம் மாணவர்களால் நிறைந்து காணப்படும் அளவுக்கு ஆக்ரோஷமாக உரையாற்றுவார்.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் 

புரட்சிக்குப் பிறகு பஹோனார் இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும் ஈரான் புரட்சியின் கவுன்சிலின் ஆரம்பகால உறுப்பினராகவும் ஆனார். 1981 மார்ச்சில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் வல்லுநர்களின் கவுன்சிலின் உறுப்பினராகவும்
இருந்தார். பஹோனார், முஹம்மத் அலி ரஜாய் அவர்களுடன் இணைந்து ஈரானிய பல்கலைக்கழகங்களை மேற்கத்திய கலாச்சார பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து காக்கும் பணியில் அயராது உழைத்தார். 1981 ஜூன் 28 இல் ஆயத்துல்லாஹ் முகம்மது பெஹெஷ்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவர் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், மார்ச் 1981 முதல் ஆகஸ்ட் 1981 வரை முகமட் அலி ரஜாயின் பிரதம அமைச்சரின் கீழ் பஹோனார் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டலின் அமைச்சராகவும் பணியாற்றினார். 1981 ஆகஸ்ட் 5 இல் ரஜாய் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் பஹோனரை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுத்தார்.

படுகொலை

1981 ஆகஸ்ட் 30 ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள இஸலாமிய குடியரசு கட்சியின் அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, ராஜாய் மற்றும் பஹோனர் உடன் இஸ்லாமிய குடியரசுக் கட்சியினர் இதர உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்து குண்டுவெடிப்பு, இஸ்லாமிய குடியரசுக் கட்சியில் ஒரு பாதுகாப்பு அதிகாரியாய்  இருந்த  மாஸூத் கஷ்மிரி என்பவனால்  நடத்தப்பட்டது. 

ராஜாயி அவரது அமைச்சரவையை இமாம் கொமெய்னிக்கு அறிமுகப்படுத்த வந்தபோது இந்த கஷ்மிரி என்பவன் பாதுகாப்பு அதிகாரியாக கூடவந்துள்ளான் என்றும் அவன் ஒரு சூட்கேஸை கையில் கொண்டுவந்ததன் காரணமா உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் இமாம் கொமெய்னியின் மகனான அஹ்மத் கொமெய்னி பிறகு குறிப்பிட்டார். சதாம் ஹூசேன் ஈரான் மீது யுத்தம் தொடுத்திருந்த காலமது. இந்த காஷ்மிரி என்பவன் சதாம் ஹூசேனின் கைக்கூலியாக செயற்பட்டு வந்துள்ளான் என்ற சங்கதி பிறகு அறியவந்தது.


Tuesday, August 28, 2018

ஈரான் எரிமலை "தமாவாந்"


Mount Damavand 
ஈரான் எரிமலை "தமாவாந்"  
ஈரான் இஸ்லாமியக் குடியரசில் மலைகளுக்குப் பஞ்சமில்லை. தலைநகர் தெஹ்ரானைச் சுற்றி அல்போர்ஸ் மலைத்தொடரைக் காணலாம். எப்போதும் பனிபடர்ந்து காணப்படும் மலை முகடு, காண்பதற்கு கண்கொள்ளா காட்சி. குளிர் காலத்தில் வெண்பஞ்சு போர்த்தப்பட்டது போன்று நகர் முழுவதும்  அழகாக காட்சியளிக்கும்.

இந்த மலைத்தொடருக்கு மத்தியில் "தமாவாந்" என்ற எரிமலை (உயரம்: 5,671 மீ) கம்பீரமாக காட்சியளிக்கும். தெஹ்ரான் நகரிலிருந்து வடகிழக்கில் 66 கிலோமீட்டர் (41 மைல்) தூரத்தில் உள்ள மஸந்தரான் மாகாணத்தில், காஸ்பியன் கடலின் தென் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. ஈரானின் அதி உயர்ந்த மலையும் ஆசியாவில் மிகவும் உயர்ந்த எரிமலையும் இதுவேயாகும். பாரசீக புராண மற்றும் நாட்டுப்புற கதைகளில்  தமவாந்துக்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது.
"தமாவாந்" செயல்படும் ஒரு சக்திவாய்ந்த எரிமலையாகும். இருந்தபோதும், அது கடைசியாக வெடித்தது கி.மு. 5300 ஆண்டளவிலாகும். (அதாவது இப்போதிருந்து 7300 ஆண்டுகளுக்கு முன்). அதன் பின் பல்லாயிரம் வருட வரலாற்றில் வெடிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. என்றாலும், எரிமலை அடிவாரத்திலும், பக்கவாட்டிலும், மற்றும் உச்சிக்கு அருகில் சூடான நீரூற்றுகள் மலைக்கு கீழே சூடான மாக்மா உள்ளதைக் குறிக்கின்றன. மலை, இடைக்கிடையே, கந்தகத்தைக் கக்குவதால் தீவிர செயற்பாட்டைக்கொண்ட எரிமலை என கருதப்படுகிறது. இதன் இவ்வாறான செயற்பாடு, 2007 ஜூலை மாதத்தில் இடம்பெற்றது பதிவாகியுள்ளது.  
"தமாவாந்" என்ற எரிமலை உலகிலேயே மிக முக்கியமான சிகரங்களில் 12 வது சிகரமாகும். ஆசியாவில் எவரெஸ்ட் சிகரத்திற்குப் பிறகு இது இரண்டாவது மிக முக்கியமானதாகும். இது ஆசியாவில் அதிக உயரமான எரிமலையாகும்.
"தமாவாந்"  எரிமலை பாரசீக கவிதை இலக்கியத்தில் மற்றும் புராணங்களில் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு அடங்காமை மற்றும் வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு எதிரான ஈரானிய எதிர்ப்பின் அடையாளமாகவும் உள்ளது.
இந்த மலைக்குள்ளே மூன்று தலைகள் கொண்ட ஓர் அரக்கன் விலங்கிடங்கிடப் பட்டுள்ளான் என்றும் உலகின் இறுதி வரை அவன் அவ்வாறே இருப்பான் என்றும் சொராஸ்ட்ரிய நூல்களிலும் மற்றும் புராணங்களிலும் குறிப்புகளைக்  காணக்கூடியதாக உள்ளது. அதே புராணத்தின் ஒரு பதிப்பில், கொடுங்கோலனான ஸஹ்ஹாக் என்பவன்   காவேஹ் மற்றும் பெரிதூன் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சங்கிலியால் பிணைக்கப்பட்டு "தமாவாந்" மலையின் ஏதோ ஒரு குகைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளான் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற பாரசீக கவிஞரான பிர்தவ்ஸியும் இந்த நிகழ்வை அவரது தலைசிறந்த காவியமான ஷானாமாவில்  சித்தரிக்கிறார், அத்தோடு இந்த மலைக்கு ஓர் அற்புத சக்தி உண்டெனவும் அதில் குறிப்பிடுகின்றார்.
"தமாவாந்"  என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்றாலும் சில முக்கிய ஆராய்ச்சியாளர்கள், "புகை மற்றும் சாம்பல் கக்கும் மலை" என்று பொருள்படும் என்று ஊகித்துள்ளனர்.
இந்த எரிமலை உச்சியில் உள்ள ஒரு பள்ளத்தில் கந்தக படிமங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் வாயு வெளியேறும் துளைகள், கனிம படிமங்கள் மற்றும் வெந்நீரூற்றுக்கள் என்பனவும் உள்ளன.
கனிம வெப்ப நீரூற்றுகள் முக்கியமாக எரிமலையின் முகட்டுப்பகுதியிலும்  மலையடிவாரத்தும் அமைந்துள்ளன, ஒப்பீட்டளவில் பூமியின் மேற்பரப்பிற்கு அருகே அதிகரித்த எரிமலை வெப்பம் உள்ளது.
இந்த வெந்நீரூற்றுக்களில் மிகவும் முக்கியமானவை லாரிஜான் மாவட்டத்தில் லார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. இந்த நீர், மருத்துவ குணம் கொண்டது எனவும்   நாள்பட்ட காயங்கள் மற்றும் சருமநோய் கண்டவர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நீரூற்றுகளுக்கு அருகே, மக்கள் வசதிக்காக, பொது குளியல் குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மலை ஏறுவோருக்கும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவோருக்கும் இது ஒரு சொர்க்கபுரியாகும்.
மலையுச்சிக்கு செல்வதற்க்கு அறியப்பட்ட 16 வழிகள் உள்ளன, சில பல்வேறு சிரமங்களைக் கொண்டுள்ள பாதைகள்; அவற்றில் சில ஆபத்தானவையும் கூட.
மிகவும் பிரபலமான வழி, ஏறுவதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்ட தெற்கு வழியாகும். இடைநடுவே ஓய்வெடுப்பதற்கு வசதியாக, 4220 மீட்டர் உயரத்தில் ஒரு மண்டபமும் அமைக்கப் பட்டுள்ளது. ஆயினும், சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசிக்க நாடுவோர் மேற்குத் திசை வழியை நாடுவர். அவ்வழியில் 4100 மீட்டர் உயரத்தில் இரண்டடுக்கு ஓய்வுமண்டபம் ஒன்று புதிதாக  அமைக்கப் பட்டுள்ளது.
ஏறும் வழியில், 5100 மீட்டர் உயரத்தில், 12 மீட்டர் உயரம் கொண்ட எழில்மிகு  உறைபனி நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. ஈரானிலும் மத்தியகிழக்கிலும் மிக உயரத்தில் உள்ள நீர்வீழ்ச்சி இதுவேயாகும்.

ஈரானுக்கு சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக தவறவிடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.


Tuesday, August 21, 2018

ஐக்கியத்தின் சின்னம் "ஹஜ்"

Haj Message by Ayatullah Sayyid Ali Hosseini Khamene'i 1439


ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் மேதகு தலைவர் சங்கைக்குரிய ஆயதுல்லாஹ் செய்யித் அலீ காமெனெயி, புனித இறையில்லத்தில் ஒன்று கூடியுள்ள பல லட்சக் கணக்கான ஹாஜிகளுக்கு விடுத்துள்ள செய்தி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனது தூதர் முஹம்மது முஸ்தபா நாயகம் மீதும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர், கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும் சலவாத் பொழிவதாக.



மகா கருணையாளனான அல்லாஹ் அருளுகின்றான்.:
“மக்கள் மத்தியில் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் கால் நடையாகவும் மெலிந்த ஒட்டகை மீதாயினும் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் உம்மை நோக்கி திரளுவார்கள். அவர்களுக்குரிய நலன்களை அடைந்துகொள்வார்கள். குறிக்கப்பட்ட நாட்களில் இறைவனின் திருப் பெயரை நினைவு கூர்வார்கள்.”

இந்த அர்ஷின் அழைப்பானது இன்று வரையும் இதயங்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. பல நூற்றாண்டுகளையும் யுகங்களையும் கடந்தும் மனித இனத்தை ஏகத்துவத்தின் மையப் புள்ளியை நோக்கி அழைப்பு விடுக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் இந்த இப்ராஹீமிய அழைப்பில் விளிக்கப் படுவதோடு அதனால் கண்ணியம் பெறுகின்றான். காதுகள் அதனை செவிமடுக்காது போகலாம். அறியாமை மற்றும் அசட்டுத் தனத்தால் இதயங்கள் அதனை இழந்து விடலாம். இந்த உலகளாவிய நித்திய இறை விருந்தில் பங்கேற்கும் தகுதியை சிலர் வளர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம். அல்லது எதோ ஒரு காரணத்தால் அதனை அடையும் பாக்கியத்தை தவர விடலாம்.


தாங்களோ இந்த அருட்பாக்கியத்தைப் பெற்றவராக தெய்வீக விருந்தின் அபய பூமியில் பாதம் பதித்துள்ளீர்கள். 

அரபாவும் முஸ்தலிபாவும் மினாவும் ஸபாவும் மர்வாவும் இறையில்லமும் மஸ்ஜிதுல் ஹராமும் மஸ்ஜிதுன் நபியும் இந்த புனிதக் கடமையின் கிரியைகளோடு தொடர்பான ஒவ்வோர் இடமும் ஆன்மீக சங்கிலியின் ஒவ்வொரு பிணைப்பும் ஹஜ் நிறைவேற்றுவோரின் ஆன்மீக உயர்வுக்கு உந்துதலும் ஆகும். இந்த அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொண்டவர்களாக தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களுக்காக நற்பேறுகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

எல்லா மனிதர்களுக்கும் எல்லாப் பரம்பரையினருக்கும் எல்லாக் காலங்களிலும் ஒன்று கூடுவதற்கான நிரந்தரமாக ஓர் இடமும் நாளும் குறிக்கப் பட்டுள்ளமை சிந்தனை செய்யும் ஒவ்வொரு மனிதனையும் குலுக்கி விட்டு ஆர்வத்தைத் தூண்டும் முக்கிய அம்சமாகும். இடமும் காலமும் ஒன்றாய் அமைந்திருப்பது ஹஜ் கடமையின் அடிப்படை அகமியங்களுள் ஒன்று. ஐயமின்றி, இறையில்லத்தின் அருகில் ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டு தோறும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வது, 'தமக்குரிய நலன்களை அடைந்து கொள்வார்கள்’ என்பதன் யதார்த்தமான பிரதிபலிப்பாகும். இதுவே இஸ்லாமிய ஐக்கியத்தின் சின்னமும் இஸ்லாத்தின் சமூகவாக்கத்தின் அடையாளமும் ஆகும். ஏனெனில் அது கட்டாயமாக இறையில்லத்தின் நிழலில் நிகழ வேண்டியதாகும். இறையில்லம் எல்லோருக்கும் உரித்தானது. ‘.. அங்கு வாழ்வோராயினும் மற்றும் வருவோராயினும் சரியே.’

வரையறுக்கப் பட்ட காலத்தில், குறிக்கப்பட்ட இந்த இடத்தில் இடம் பெறும் ஹஜ் முஸ்லிம்களை எப்போதும் ஒவ்வொரு ஆண்டிலும் எல்லாக் கால கட்டத்திலும் நயம் மிகு மொழியில் தெளிவான தர்க்கத்தினூடே ஒற்றுமையின் பால்அழைக்கிறது. இது இஸ்லாமின் எதிரிகளின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் முரணானதாகும். ஏனெனில் அவர்கள் எப்போதுமே எல்லாக் காலகட்டங்களிலும் குறிப்பாக சமகாலத்தில் முஸ்லிம்களை தமக்குள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ள தூண்டி வருகின்றனர். அகங்காரம் கொண்ட கொடிய அமெரிக்காவின் தற்போதைய செயல்களை அவதானியுங்கள். முஸ்லிம்களின் விவகாரத்தில் அதன் பிரதான கொள்கை மோதல்களை மூட்டி விடுவதே. முஸ்லிம்களின் கையாலேயே முஸ்லிம்களைக் கொன்றொழிப்பது தான் அதன் அசிங்கமான நோக்கம். அநியாயக் காரர்களை அப்பாவிகள் மீது ஏவி விடுவது, அநியாயக்காரனை ஆதரித்து பலப்படுத்தி அவர் கைகளாலேயே அப்பாவிகளை ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பது, இந்த பயங்கர கொடூரத்தின் தீயை தீவிரப்படுத்துதல் போன்ற சாத்தானிய கொள்கைகளை முறியடிப்பதில் முஸ்லிம்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். ஹஜ்ஜின் போது ‘முஷ்ரிகீன்களில் இருந்தும் கொடுங்கோன்மையில் இருந்தும் விலகிக் கொள்வது’ இதனையே குறிக்கிறது.

இறை தியானமே ஹஜ்ஜின் உயிர். அனைத்து நிலைமைகளிலும் நமது உள்ளங்களை இந்த அருள் மழையில் உயிர் பெறச் செய்வோம். இறைவன் மீது நம்பிக்கை வைப்பதை நம் இதயத்தில் வேரூன்றச் செய்வோம். அதுவே பலம், மகிமை, நீதி மற்றும் அழகின் ஊற்றுக் கண்ணாகும். அப்போது தான் எதிரிகளின் சதிகளை முறியடித்து நாம்வெற்றி கொள்ள முடியும்.

அன்புக்குரிய ஹாஜிகளே, இஸ்லாமிய உம்மத்துக்காக பிரார்த்திப்பதையும் சிரியா, இராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், யமன், பஹ்ரைன், லிபியா, பாகிஸ்தான், காஷ்மீர், மியான்மார் மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த ஒடுக்கப் பட்ட மக்களை உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்வதையும் மறக்க வேண்டாம். அமெரிக்கா முதலான அநியாய சக்திகளினதும் அவர்களது அடிவருடிகளதும் கரங்கள் துண்டிக்கப் பட இறையோனைப் பிரார்த்தியுங்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.

செய்யித் அலீ காமெனெயி
7 துல்ஹஜ்1439

Sunday, August 19, 2018

இஸ்லாமிய புரட்சியின் வித்து - பெஹெஷ்தி

Shahid Mohammad Beheshti


அஷ்-ஷஹீத் ஆயதுல்லாஹ் முஹம்மத் பெஹெஷ்தி

செய்யத் முஹம்மத் ஹொசேனி பெஹெஷ்தி (24 அக்டோபர் 1928 - 28 ஜூன் 1981) ஒரு ஈரானிய நீதிபதி, தத்துவவாதி, போதகர் மற்றும் அரசியல்வாதியாக இருந்தார், அவர் புரட்சியின் பின்னர் ஈரான் அரசியல் வரிசைப்பாட்டில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கு அடுத்தபடியான அந்தஸ்தில் இருந்தார்.

டாக்டர் பெஹெஷ்தி ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்குப் பிந்தைய அரசியலமைப்பின் பிரதான வடிவமைப்பாளராகவும், இஸ்லாமி; குடியரசின் பிரதான நிர்வாக கட்டமைப்பாளராகவும் கருதப்படுகின்றார். இஸ்லாமியக் குடியரசில் இந்நாள் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி, முன்னாள் ஜனாதிபதி முகம்மது காதமி, அலி அக்பர் வெலாயத்தி, முகமது ஜவாத் லரிஜானி, அலி பலாஹியான், மற்றும் முஸ்தபா பூர்முஹம்மதி போன்ற பல முக்கிய அரசியல்வாதிகள், பெஹெஷ்தியின் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட முக்கியஸ்தர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராகும்.

பெஹெஷ்தி இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றினார், ஈரானிய நீதித்துறை அமைப்பின் தலைவராகவும் இருந்தார். மேலும் அவர் இஸ்லாமிய புரட்சிக் கவுன்சில் மற்றும் நிபுணர்களின் சபை ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். பெஹெஷ்தி தத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் பிற மொழிகளான அறபு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளை சரளமாக பேசக்கூடியவராயும் இருந்தார்.

பெஹெஷ்தி 1928 இல் இஸ்ஃபஹானில் பிறந்தார். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம்பெற்றார். கும்மில் உள்ள சன்மார்க்கப் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். கும்மில் கற்கும்போது அவர் பேரறிஞர் அல்லாமா தபதபாயி அவர்களின் திறமைமிக்க மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

1965 க்கும் 1970 க்கும் இடையில், ஜெர்மன் ஹம்பர்க் நகரிலுள்ள இஸ்லாமிய நிலையத்தை  அவர் வழிநடத்திச் சென்றார். ஜேர்மனியிலும், மேற்கு ஐரோப்பாவிலும் கல்வி கற்கும் ஈரானிய மாணவர்களின் ஆன்மீக துறையின் பொறுப்பாளராக இருந்தார். ஹம்பர்க் இஸ்லாமிய நிலைய நிர்வாகத்தில், முகம்மது காதமியும் இவருடன் இணைந்து பணிபுரிந்தார்.

1960 களின் ஆரபத்தில் இருந்தே ஷாவின் முடியாட்சிக்கு எதிராக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி, ஷாவின் இரகசியப் பொலிசாரால் (SAVAK) பல முறை கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். பெஹெஷ்தி விடுதலையான பிறகு, நாடு கடத்தப்பட்டு, ஈராக்கில் அஞ்ஞாதவாசத்தில் இருந்த இமாம் கொமெய்னி அவர்களுடன் இணைந்து, இமாமின் புரட்சி திட்டத்திற்கு பக்கபலமாகவும் இருந்தார்.

இஸ்லாமிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி, இமாம் கொமெய்னியினால் ஈரான் புரட்சியின் கவுன்சிலின் ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக 'வெலாயத்-இ-பக்கீஹ்' கொள்கையை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்காற்றினார். மேற்கத்தேய கட்டுப்பாடற்ற கலாசாரத்தையும் பொருளாதார முறைமையையும் அடியோடு வெறுத்தார். அனைத்தையும் உடனடியாகவே இஸ்லாமியமயப் படுத்தவேண்டும் என்று முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தார்.

புரட்சிக்குப் பிந்திய முதலாவது புரட்சிகர ஈரானிய பாராளுமன்றத்தில், அவர், ஹாஷிமி ராப்சஞ்சானியுடன் இணைந்து, இஸ்லாமிய குடியரசுக் கட்சியை வழிநடத்தினார். பெஹெஷ்தி இஸ்லாமிய குடியரசு கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், முதல் பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சத்தாம் ஹுஸைன் அறபு ஆட்சியாளர்களின் துணையுடனும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனும் ஈரான் மீது யுத்தமொன்றை திணித்திருந்த காலம்; அமெரிக்க பொருளாதாரத்தடை அப்போதும் இருந்தது. அக்காலகட்டத்தில் இஸ்லாமிய புரட்சிக்கு எதிரான அனைத்து ஊடகங்களும், குறிப்பாக மேற்கத்தேய ஊடகங்கள், ஆயதுல்லாஹ் பெஹெஷ்தியை குறிவைத்துத் தாக்கின.

இறுதியில், 1981 ஜூன் 28 இல் இஸ்லாமிய குடியரசு கட்சியின் மாநாடு ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், இஸ்லாம் விரோத அமைப்பொன்றினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி ஷஹீதாக்கப்பட்டார்;. இவருடன் சேர்த்து இஸ்லாமிய குடியரசு கட்சியைச் சேர்ந்த 70க்கும் அதிகமானோர் ஷஹீதாகினார். ஷஹீதானவர்களில் பல உயர் உலமாக்களும் புரட்சியின் தலைவர்களும் அடங்கியிருந்தனர்.  (முஜாஹிதீன் கல்க் என்ற பயங்கவாத அமைப்பே இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று விசாணையின் மூலம் பிறகு அறியவந்தது). இவர்களின் மரணத்தால் இமாம் ஆயதுல்லாஹ் கொமெய்னி அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள், பெஹெஷ்தி ஒரு தனிநபரல்ல, “எமக்கு அவர் ஒரு தேசம்'” என்று இமாமவர்கள் வர்ணித்தார்கள்.

உலக நாடுகள் மத்தியில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவர்கள் அனைவரினதும் தியாகமே காரணம் எனலாம்.