Contributors

Saturday, June 9, 2018

ஈரானில் 5,200 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பெண்ணாதிக்க சமூகத்தின் மர்மமான தடயங்கள்

Shahr-e Sukhteh

City in Iran

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூச்சிஸ்தான் சமவெளிக்கு கீழே புதைந்துள்ள 5,200 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு புகழ்பெற்ற, பெண்ணாதிக்க சமூகத்தின் மர்மமான தடயங்கள். 
இந்நகர நிர்மாணம் கி.மு. 3200 ஆண்டுகளில், ஹெல்மாண்ட் ஆற்றங்கரையில், (தற்போதைய சாஹிதான்-சபோல் செல்லும் வழியில்) அமையப்பெற்றுள்ளது. எனினும் அதற்கு 1000 வருடங்களுக்குப் பின், நான்கு புறநகர் அமைக்கப்பட்ட நிலையில், அறியப்படாத எதோ ஒரு காரணத்தினால் இந்நகரம் கைவிடப்பட்டுள்ளது.
பாரசீக மொழியில் "ஷஹரே சுக்தேஹ்" (எறிந்த நகரம்) என்று அழைக்கப்பட்டு, பாரிய தீ ஒன்றின் விளைவாகவே இந்நகரம் கைவிடப்பட்டுள்ளது போன்ற ஒரு கருத்தை தந்தபோதிலும், உண்மை அதுவன்று.  அங்கு ஆங்காங்கே காணப்படும் சாம்பல் திட்டுக்கள் காரணமாகவே கடந்த 300 ஆண்டுகளாக இவ்விடம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அந்த சாம்பல் தடயங்கள் அந்நகரவாசிகளினால் பயன்படுத்தப்பட்ட அடுப்புகளினால் ஏற்பட்டது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது "உலக பாரம்பரிய தளம்" என யுனெஸ்கோ அமைப்பினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி காரணமாக நகரம் கைவிடப்பட்டதாக சில கோட்பாடுகள் தெரிவித்தபோதும் இந்த நாகரிகத்தின் அழிவுக்கான உண்மையான காரணங்கள் இன்னமும் மர்மமாகவே உள்ளன.
புராதன மெசொப்பொத்தேமிய நாகரீகத்தில் இருந்து சுயாதீனமான, பிரசித்தி பெற்ற நாகரீகமொன்று கிழக்கு பாரசீகத்தில் இருந்துள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை, வெண்கல காலத்திய நகர்ப்புற குடியேற்றம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம்  பெறலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இந்நகரம் மெசொபொத்தேமியா மற்றும் ஈரானுக்கும் இடையில், முக்கிய வர்த்தக பாதையாகவும் இந்திய மற்றும் சீன நாகரிக இணைப்பு சந்தியாவும் இருந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
நகரம் களிமண் மற்றும் செங்கற்களால் ஆன, சிக்கலான வடிவமைப்பையும், கட்டமைப்புகளையும் கொண்டுள்ள இந்நகரம் ஒரு பெரிய அரண்மனை, குடியிருப்புத் தேவைகளுக்காக தனித்தனி சுற்றுப்புறங்கள், தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் பொருட்களின் உற்பத்தி போன்றவற்றுக்கான பிரத்தியேக இடங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மகத்தான நாகரிகம்

151 ஹெக்டயர் நிலப்பரப்பைக்கொண்ட இவ்விடத்தில் 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன. இதுவரை இந்த நகரம் அமைந்துள்ள இடத்தின் 4 வீதமே தொல்லியல் ஆய்வுக்குற்பத்தப்பட்டுள்ள போதும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள புராதன வஸ்துக்கள் இந்த நாகரீகம் தொடர்பான வியக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டதாய் இருக்கின்றன.
இந்த நகரத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றாக நெசவு இருந்துள்ளது என்பதையும் இங்கு வாழ்ந்த மக்கள் தரைவிப்பு, கூடை போன்ற பல்வேறு வகையான நெய்த பொருட்கள் தயாரித்துள்ளனர் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
மண்பாண்டம் நகரில் ஒரு பெரிய அளவிலான உற்பத்தி என்பதை பாரிய அளவில் சிதறிக்கிடக்கும் பண்டைய மட்பாண்ட பாத்திரங்களின் சிதைவுகள் காட்டுகின்றன.
படம்: உலகின் முதல் அறியப்பட்ட அசையும் சித்திரம் பொறிக்கப்பட்டுள்ள ஒரு பாத்திரம். ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூச்சிஸ்தானில் இந்த பாத்திரம்  கண்டுபிடிக்கப்பட்டது, தற்போது அது ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள  தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் இருந்து அனிமேஷன் சித்திரம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். படத்தில் காணப்படும் இந்தக் குவளை சுழலும்போது ஓர் ஆடு குதித்து, மேய்வது போன்று அச்சித்திரம் அமைந்துள்ளது. தற்போது இக்குவளை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது அனிமேஷன் சித்திரமாக இது கருதப்படுகிறது.
பிற கண்டுபிடிப்புகளில் உலகில் முதல் அறியப்பட்ட விளையாட்டுப் பலகை, அரை மில்லிமீட்டர் துல்லியம் கொண்ட ஓர் அளவுகோல் மற்றும் அங்கு வாழ்ந்தவர்கள்  கட்டிடக்கலை, கணிதம், அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதைக் காட்டும் ஆச்சரியப்படத்தக்க பல கருவிகளையும் கண்டெடுத்துள்ளனர்.

பெண்ணாதிக்க சமூகம் 
இந்த நகரத்தில் வாழ்ந்தோர் உலகில் அரிதாக அறியப்படும் பெண்ணாதிக்க சமூகமாக வாழ்ந்துள்ளனர் என்பதைக் காட்டும் பல அத்தாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குடும்பம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் பலவும் கிடைத்துள்ளன. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில்  குறிப்பாக பெண்களின் கல்லறைகளில் உரிமைசாண்று முத்திரைகள் இருந்ததை இதற்கு ஆதாரமாகக் கருதுகின்றனர். உற்பத்திகள் மற்றும் உணவு வழங்கல் ஆகியவற்றின் கட்டுப்பாடு பெண்கள் வசம் இருந்திருப்பதும் இதிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது என்றும் புதைபொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரத்தின் புகழ்பெற்ற மாதர்கள் என்று கருதப்பட்டோரின் கல்லறைகளில் அடையாள முத்திரைகள் பத்திக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சில தொல்மானிடவியலாளர்கள், பெண்கள் தமது மதிப்புமிக்க ஆவணங்களை பிரத்தியேக முத்திரை பதிப்பதன் ஊடாக தத்தமது உயர் சமூக அந்தஸ்தை குறிக்க பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மருத்துவ அறிவு

தொல்பொருள் ஆய்வாளர்கள் 2006ம் ஆண்டில் வியக்கத்தக்க கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டனர். 4800 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட செயற்கை கண்விழி தான் அது. 32-36 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கு அது சொந்தமானது. அரைக்கோள வடிவக் கண்;  2.5 சென்டிமீட்டர் அளவுக்கு விட்டம் கொண்டதுடன், மிக மென்மையான பிற்றுமின் பொருளினால் ஆக்கப்பட்டுள்ளது. கண்விழியினை சுற்றி தங்க நூலினால் இழைக்கப் பட்டுமிருந்தது.
இது ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் பலூச்சிஸ்தான் பிரதேசத்தின்  எரிந்த நகரில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை கண்விழியுடன் கூடிய  ஒரு பெண்ணின் எலும்புக்கூடு, 4800 வருடங்கள் பழைமையானது.

4,000 ஆண்டுகளுக்கு முன்னர் நகரில் மூளை அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளதற்கான தடயங்களையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 12-13 வயதான பெண் எலும்புக்கூடு ஒன்றின் மண்டை ஓட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து அப்பெண் மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, அறுவை சிகிச்சையின் பின்னர் ஒன்பது மாதங்களுக்கு உயிர்வாழ்ந்துள்ளார் என்பதையும் காட்டுவதாகக் கூறுகின்றனர்.

பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமம்
நகரின் மேற்கில், 25-ஹெக்டயர் நிலப்பரப்பில், பெரிய மயான பூமி ஒன்றுள்ளது. 10 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான 25,000 கல்லறைகள் இங்கு உள்ளன. இது இப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்திருப்பதையும் அவர்கள் பல கலாச்சார பின்னணிகளைக்கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் சகவாழ்வு மற்றும் பல்வேறு கலாசாரங்கள் சங்கமித்ததற்கான சாத்தியக்கூறுகளை குறிப்பதாகவும் உள்ளன.
இறந்த உடல்களை உள்ளடக்கிய கல்லறைகள் பொதுவாக அரைவளைவு கொண்டவையாகும். சில கல்லறைகளின் நுழைவாயிலில் சீல்வைத்து மூடப்பட்ட  அறைகளில், அக்காலத்தில் பெறுமதியானதாக கருதப்பட்ட சில பொருட்களும்  காணப்பட்டன.
கல்லறைகள் மண்ணைக்கொண்டு நிரப்பப்படாத காரணத்தால், அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகளும் அவற்றுக்குரிய பொருட்களும் அதிகம் சிதைவடையாது காணப்படுகின்றன.
சில கல்லறைகள் புனரமைக்கப்பட்டு, இந்த மயானபூமிக்கு மிக அருகில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தோண்டப்பட்ட கல்லறைகள் சிலவற்றில் எலும்புக்கூடுகள் நேராகவன்றி, வளைந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. ஒரு மனிதன் - ஆணோ, பெண்ணோ - கருவாக, தாயின் கர்ப்பத்தில் எந்த நிலையில் இருந்திருப்பரோ அதையொத்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. மனிதன் உலகுக்கு வந்த நிலையிலேயே உலகைவிட்டுப் பிரியவேண்டும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாய் இருந்திருக்கக் கூடும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சடலங்கள் இவ்வாறு அடக்கம் செய்யப்படிருக்கலாம். கல்லறைகளின் மற்றுமொரு விசேட தன்மை என்னவென்றால் மனைவியும் கணவனும் ஒரே கல்லறையில், எதிரெதிரே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகும்.
அகழ்வாராய்ச்சியின்போது பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், 5,000 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய மேம்பட்ட நாகரீகம் எவ்வாறு தோன்றியது, அதன் பிறகு அந்த நாகரீகத்துக்கு என்ன ஆனது? அவர்கள் கொண்டிருந்த அறிவு எவ்வாறு தொலைந்தது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியாதுள்ளது.


Thursday, June 7, 2018

ஈரான் - இலங்கை உறவு ‘பொருளாதாரத்தையும் தாண்டிய ஒத்துழைப்பு’

Sri Lankan-Iran relations and the Middle East - the Iranian official explanation.
An interview with Dr. Hosain Amirabdullahian

இலங்கை-ஈரான் தொடர்பு மற்றும் மத்தியகிழக்கு நிலை - ஈரானிய அதிகாரி விளக்கம்.

  • இலங்கையின் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஈரான் நிதியுதவி வழங்கி வருகின்றது
  • இன்னும் ஒரு சில வருடங்களில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
  • முப்பது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சமாக இருந்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை இன்று 45 இலட்சமாக உள்ளது.
  • எமது விஞ்ஞானிகளில் அநேகரின் சராசரி வயது 27
  • பொருளாதாரத்தடைகள் இன்னுமின்னும் எம்மை வலுவடையச் செய்யும் 

சந்திப்பு:  தாஹா முஸம்மில் - முஸ்டீன் இஸ்மாயீல் 

மத்தியகிழக்குக்கான முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் சபாநாயகரின் சர்வதேச விவகாரத்துக்கான தற்போதையை சிரேஷ்ட ஆலோசகருமான டாக்டர் ஹொசைன் அமீரப்துல்லாஹியான் உடன் சிறிது நேரம்  உரையாடும் சந்தர்ப்பம்  கிடைத்தது. இச்சந்திப்பு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. எமது கேள்விகள் அனைத்துக்கும் மிகவும் விரிவாக பதிலளித்தார் அதன் சுருக்கமான தொகுப்பே இதுவாகும்.

இலங்கை விஜயத்துக்கான நோக்கம்

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு நீண்ட கால சரித்திரத்திரத்தைக்   கொண்டதாகும். அண்மைக் காலமாக இத்தொடர்பு கலை, கலாசார ரீதியிலும் பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர ரீதியாகவும் மேலும் பலமடைந்து வருகிறது. வணிக ரீதியிலும் தனியார் துறையினர் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்கின்றனர். இன்னும் இதுபோன்ற வாய்ப்புகளை கண்டறிவதும் இவ்விஜயத்துக்கான நோக்கங்களில் ஒன்று. இலங்கையின் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கும்  ஈரான் நிதியுதவி வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கட்டது. இந்தவிஜயம் பொருளாதார இணக்கப்பாடுகளுக்குமப்பால் பரஸ்பர புரிதலையும் மேம்பட்ட ஒத்துழைப்பையும்  ஏற்படுத்திக்கொள்ளவும் உறுதிசெய்துகொள்ளவும் சிறந்த வாய்ப்பாகவும் அமையும். ஏனெனில் இலங்கை பலவிடயங்களை எதிர்பார்க்கின்றது, இன்னும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றது, சிறந்த வாய்ப்புகளை பரஸ்பரம் உருவாக்கிக் கொள்ளவும் இன்னும் சில விடயங்களை இறுதிப்படுத்திக்கொள்ளவும் இந்த விஜயம் துணை செய்யும்.

மத்தியகிழக்கின் தற்போதைய நிலை

மத்தியகிழக்கின் தற்போதைய பிரச்சினைகளுக்கான மூல காரணம் அமெரிக்காவும் இஸ்ரேலும் என்பது பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயம். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இவர்கள் அநாவசியமாக தலையிடுவதினாலேயே மத்தியகிழக்கு இன்று கொந்தளிப்பு நிலையில் இருக்கிறது. அத்தகையதொரு கொந்தளிப்பு நிலை அவர்களுக்கும் அவசியமாகவுள்ளது. அமெரிக்க சியோனிச அழுத்தங்கள் வெறுமனே மேலோட்டமாகப் பார்க்கமுடியாதவை. ஏனெனில் அதன் செயற்பாடுகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் பலவிடயங்கள் மிகவும் ஆபத்தானவை.
சிரியாவில் இவர்களது திட்டம் படு பயங்கரமானது. உலகெங்குமுள்ள தீவிர எண்ணம் கொண்ட முஸ்லீம் இளைஞர்களை சிரியாவில் ஒன்று திரட்டி, அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவதே இவர்களது நோக்கமாகும். அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற தற்போதைய ஊடகந்தான் ISIS. இது போன்று அவர்களுடைய தேவைக்கேற்ப பல்வேறுபயங்கரவாதக் குழுக்களை உருவாக்குவார்கள். அதன் மூலம் அவர்கள் அடைய நினைப்பதை அடைந்துகொள்ள முயற்சிப்பார்கள்.  ஆப்ஃகானிஸ்தானில் இவர்கள் செய்துவரும் அதே செயல்முறைதான் இங்கும் செய்யப்படுகின்றது. இவர்களது சதிவலையில் சவூதி அரேபியாவும் சிக்கியுள்ளது துரதிர்ஷ்டமாகும். 

இந்த சியோனிஸ்ட்டுகளின் நோக்கம் சிரியாவுடன் நின்றுவிடப் போவதில்லை; எதிர்காலத்தில் அது சவுதியிலுமும் பாதகமான பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் இவர்களுக்கு எத்தனையோ முறை  எடுத்துக்கூறியுள்ளோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் நேரடியாக மிகத் தெளிவாக அதைப் பற்றி அறிவுறுத்தியிருக்கின்றேன். ஏனோ தெரியவில்லை அவர்கள் ஒருவித முரட்டுப்பிடிவாதத்துடன் இருக்கின்றனர். ஆயினும் சவூதி அரேபியாவை எப்போதும் நாம் எமது சகோதர முஸ்லீம் நாடாகவே கருதுகிறோம். அதற்குப் பாதகம் ஏற்படுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை.

யெமன் விவகாரத்திலும் நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினோம்; யெமனின் உள்நாட்டு பிரச்சினையில் நாம் தலையிட வேண்டியதில்லை, அவர்கள் அதனை தீர்த்துக்கொள்ள விடுங்கள் என்று எடுத்துக்கூறினோம். அரசியல் முரண்பாடுகளை ஒரு போதும் இராணுவ நடவடிக்கையால் தீர்த்து வைக்க முடியாது என்றும் இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வாகாது என்றும் மிகவும் வலியுறுத்தினோம். எமது ஆலோசனையிலோ பேச்சிலோ அவர்கள் கரிசனை கொள்ளவில்லை, மாற்றமாகக் கோபப்பட்டார்கள்; 'அரபுக்கள் விடயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகின்றீர்கள்' என்ற அடிப்படையில் பகிரங்கமாக, மிகக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். அப்போது நீங்கள் பெருந் தவறொன்றைச் செய்யப் போகின்றீர்கள் என்று முன்கூட்டியே எச்சரித்தோம். அதைக் கூட கண்டுகொள்ளாமல்  அதற்கு அவர்கள் அளித்த பதில் 'நாம் மூன்று வாரங்களில் யெமன் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டிவிடுவோம்' என்பதுதான். பின்னர் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை ஆரம்பித்தார்கள் ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது? இப்போது மூன்றாண்டுகளாகிவிட்டன,  எந்த முடிவையும் இதுவரைக் காணவில்லை.

எகிப்து ஒரு முஸ்லிம் நாடு அத்துடன் எமக்கு மிகவும் முக்கியமான நாடும் கூட. அதனுடன் நாம் நெருங்கிய உறவைப் பேணவே விரும்புகிறோம். எகிப்திய மக்கள் உணர்வுபூர்வமாக எம்மை விரும்புவோராக  இருக்கின்றனர். இப்போதுள்ள அரசாங்கம் மக்கள் மனம் வைத்துத் தேர்வு செய்தது அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அதனால் வலுவான உறவு தற்போதைய நிலையில் இல்லை. ஆனால் ஜனாதிபதியாக முர்சி இருந்த காலத்தில் மிக நெருக்கமான உறவு பேணப்பட்டிருந்தது.  பலஸ்தீன் விவகாரத்தில் எமது நிலைப்பாட்டை அவர்களை மிகவும் மதிக்கின்றனர்.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் எகிப்தில் அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தக்க வைத்துக் கொள்வதில் முர்சி மூன்று முக்கியமான பிழைகளை விட்டார். அனைத்து அரசியற் கட்சிகளையும் அரவனைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய தருணம் அப்போது இருந்தது, முரண்பாடுகளுக்கு அப்பால் அதைச் சாத்தியப்படுத்தவேண்டிய அவசியம் இருந்தது, அதைத் தவறவிட்டார், அடுத்தது கிடைத்தவாய்ப்பை இஹ்வான்கள் ஊடாகவேப் பயன்படுத்தத் தலைப்பட்டார். அது அவருக்கான ஒத்தழைப்பு மையங்களை உருவாக்கத் தவறிவிட்டது. எதிப்தில் ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்த முன்னர் பலரைத் திருப்திப்படுத்த எடுத்த முயற்சிகள் இறுதியில் அவருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டது.    இந்தத் திருப்திப்படுத்த முனைந்த முயற்சிகளை  எதிரிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். அதன்விளைவுகளை நாம் பார்த்தோம். பல கட்டங்களில் நான் நேரடியாகச் சந்தித்து இது குறித்து எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். ஏனெனில் அங்கு ஒரு புரட்சி வெற்றிபெற்றிருந்தது. மாணவர்கள் பெரிதும் பங்கெடுத்திருந்தார்கள். புரட்சி பல மாற்றங்களை உருவாக்கிவிட்டது. அது பல்வேறு புதிய செய்திகளை முஸ்லிம் உலகுக்குச் சொன்னது. முர்சி ஆட்சிபீடமேறியபோது மிக முக்கியமான ஒரு அம்சமாக விளங்கியது நீண்ட காலத்துக்குப் பின்னர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அதிபராக அவர் இருந்தமைதான்.  ஈரானில் புரட்சி வெற்றிபெற்றபோது நான் சிறியவன், பத்திரிகைகள் சிலபடங்களைப் பிரசுரித்து இஸ்லாத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்று எழுதியிருந்தன. இமாம் கொமெய்னி கீழ்மட்டக் கட்டமைப்பில் அதிகம் கவனஞ்செலுத்தியிருந்தார். முர்சி ஆட்சீபீடமேறியதும் நான் கெய்ரோவுக்கு விஜயஞ் செய்தேன். பல்வேறு விடயங்கள் குறித்தும் உரையாடியிருந்தேன். ஆயினும் பல்கலைக்கழக மாணவர்கள் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி இந்தப் புரட்சிக்கு உரமூட்டினார்கள் என்பதற்கு அப்பால் அந்தப் புரட்சியை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது கவலையான விடயமாகும். மாணவர்களைக் கட்டமைப்பது என்ற விடயத்தில் புதிய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாம் அதை மிக வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பில் பல்வேறு கட்டங்களாக செயற்படுத்துகின்றோம். அவர்களை எதிர்காலத்திற்காக வலுப்படுத்துகின்றோம். ஆனால் எகிப்து இப்போது பிர்அவ்னிய பாதையை நோக்கி நகர்வது போன்றுதான் தென்படுகின்றது. 


பலஸ்தீன், பலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ் போன்ற இயக்கங்களுக்கான எமது ஆதரவு இதனடிப்படையிலேயே ஆகும். பலஸ்தீன், இஸ்ரேலுக்கு தாரை வார்க்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.  இதுவே எமது நிலைப்பாடு. இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஹிஸ்புல்லாஹ் காட்டும் வெளிப்படைத் தன்மைக்கு எமது உதவிகள் நிச்சயம் அதற்கு அவசியமானது. அது பலஸ்தீனத்தின் பாதுகாப்புக்கும் துணைசெய்யத் தக்கது. ஹிஸ்புல்லாஹ் அமைப்பு அமெரிக்க இஸ்ரேலிய அடைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகுந்த சவாலை வெளிப்படுத்துகின்றமையால் அதன் ஸ்திரப்பாட்டுக்கு நாம் உதவுவது முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் நிமித்தமாகவே இருக்கும். 

துருக்கி எமது சகோதர நாடு என்பதன் காரணமாக நாம் அதனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றோம். முக்கியமான இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளில் நாம் இருந்தாலும் எமக்கிடையேயான உறவு காத்திரமாக இருக்கின்றது. அதாவது இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் அதனுடான உறவுகள் குறித்த கொள்கை, மற்றது சிரியா பற்றிய நிலைப்பாடு. சிரியா தொடர்பான அவர்களது நிலைப்பாட்டில் இன்னும்  தெளிவில்லாத ஒருவித மயக்க நிலையே காணப்படுகிறது. இருந்தும், துருக்கியுடன் பல துறைகளில் வலுவான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் மேம்பட்ட இனக்கமான போக்குகளுடன் கூடியது. 

மேலும், பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுடனும் நாம் சகோதரத்துவ ரீதியில் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம். எம்மத்தியில், ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலம் நாமே  தீர்த்துக்கொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கை. வெளிநாட்டு தலையீடுகளை நாம்  அறவே வெறுக்கின்றோம். குறிப்பாக சிரியா மற்றும் ஈராக்கிய விடயத்தில்  அமெரிக்க இஸ்ரேலிய நலன்களைத் தவிர்த்து துருக்கி, சவுதிஅரேபியா, ஈரான் ஆகிய மூன்றும் ஒருமித்த நிலைப்பாடுகளுடன் இருப்பது பிராந்திய ஸ்திரப்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று நாம் கருதுகின்றோம். யெமன் விடயத்தில் பின்பற்றப்படுகின்ற போக்குகள் போன்றதல்ல. அங்கு தினமும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மிசைல்கள் ஏவப்படுகின்றது. அன்மையில் ஒரே பாடசாலை 12 முறை தாக்கப்பட்டது.  சவுதி அரேபியா நினைத்தால் பிராந்தியத்தில் விதைக்கப்படும் பயங்கரவாத வேர்களை அடியோடு அழித்து விடமுடியும். சவுதியின் உளவுத்துறைக்கு அது நன்கு தெரியும். அதற்கான வரைபுகளை ஈரான் தயாரித்திருந்தது, துருக்கியுடன் இணைந்து அதைச் சாத்தியப்படுத்தலாம். சிரியாவை வீழ்த்துவதற்குப் போடப்பட்டுள்ள மிக மோசமான பயங்கரவாதத்தின் அடிப்படையிலான திட்டத்தை நாம் இணைந்து இலகுவாக முறியடிக்க முடியும். ரஸ்யாவுடன் நாம் பேசுவதற்கு ஒரு நாளைக்கு முன்னால் மத்தியகிழக்கு விவகாரங்களுக்கான ரஸ்யப் பிரதிநிதியை சவுதி சந்தித்தது. ஆனால் பிரச்சினையை வேறு மாதிரி கையாளவே சவுதி விரும்புகின்றது.

துருக்கியை மையப்படுத்தி நகர்த்தத்திட்டமிட்டிருந்த எல்லா விடயங்களையும் நாம் அறிவோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள துருக்கி முனைந்திருக்கும் நிலையில் சிரியாவை வீழ்த்துவதற்குப் போடப்பட்டுள்ள பயங்கரத்திட்டங்களின் பின்னால் உள்ள அழிவுகளைப் புரிந்துகொண்டபடி அடுத்த கட்டம் நோக்கி நகரவேண்டும். உருவாக்கப்படுகின்ற உலகப் பயங்கரவாதம் துருக்கியை கபளீகரம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப்பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான வரைபை நாம் துருக்கி மற்றும் சவுதியோடு இணைந்து மேற்கொள்வதற்காக முன்வைத்தோம்  ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சவுதி இருக்கவில்லை. அமெரிக்க இஸ்ரேல் படைவளத்தில் தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை இது இன்னும் சிக்கலான கருதுகோள்களுக்கு இட்டுச் செல்கின்றது. பிராந்தியத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

இப்போது சிரியாவில்  ஈரானியத் துருப்புகள் நிலைகொண்டிருக்கவில்லை; ஆனால் எமது ராணுவ ஆலோசகர்கள் அங்கிருக்கின்றனர் என்பதை மறுக்கவில்லை.  இவர்களும் சிரிய அரசின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளனர். சிரியாவுக்கு எதிராகத் திட்டமிட்டு நகர்த்தப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது  என்று நம்புகின்றோம்.

இன்றைய ஈரான்

ஈரான் பல தசாப்த்தங்களாகவே மேற்குலக பொருளாதார தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இதனால் எமக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டபோதும் அதனை நாம் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டோம். இந்தத் தடைகள் எமக்கு ஒரு மறைமுக அருளாகவே அமைந்தது எனலாம். எமது தேவைகளை நாமே அடைந்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம். 

Image result for map of iranஇப்போது நாம் ராணுவத்துறையில், பிறர் எம்மீது கைவைக்கப் பயப்படும் அளவுக்கு, வளர்ச்சியடைந்துள்ளோம். மருத்துவத்துறையில் 90 வீதம் தன்னிறைவடைந்துள்ளோம். கடந்த காலங்களில் ஈரான் செய்மதிகளை விண்ணுக்கு ஏவியதை அறிந்திருப்பீர்கள்; இன்னும் ஒரு சில வருடங்களில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அணு ஆராய்ச்சித் துறையிலும் நாம் பாரிய வளர்ச்சி கண்டுள்ளோம். எமது விஞ்ஞானிகளில் அநேகரின் சராசரி வயது 27  என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஆக அதிமானவர்கள் இளம் விஞ்ஞானிகள் என்று வைத்துக் கொள்வோமே.  எமது இளைஞர்களை இத்தகையதொரு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு வலுப்படுத்தி நகர்த்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். 

முப்பது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சமாக இருந்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை இன்று 45 இலட்சமாக உள்ளது. உலகின் பல பாகங்களில் இருந்தும், உயர் கல்விக்காக, ஈரானிய பல்கலைக்கழகங்களை நாடிவருவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 

எமது விஞ்ஞானத் தொழிநுட்பக் கட்டமைப்பு மிகவும் வலுவாகவே உள்ளது. நீங்கள் ஈரானுக்கு வந்தால் அவற்றைக் கண்டு கொள்ள முடியும். ஏனெனில் எதிர்கால விஞ்ஞான தொழிநுட்ப மேம்பாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இளைஞர்களை மையப்படுத்தி நகரக்கூடியது. அதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கின்றோம். இந்தச் செய்தியைச் சுமந்துகொண்டு அநேகமான முஸ்லிம் நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.

ஆறு நாடுகள் ஒருபக்கம் நின்று எமது அணுச் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கையில் நாம் ஒற்றையாக இருந்து அவற்றை எதிர்கொண்டோம். நேர்பட்ட வழியில் எமது மாணவர்களைத் தயார்படுத்த எமக்கு நன்கு தெரியும் என்பதை அல்பராதி போன்றவர்களுக்குப் புரிய வைத்திருக்கின்றோம்.  எமது விடயத்தில் எதிரிகளின் பிரச்சாரம் நிச்சயம் வெற்றியளிக்கப் போவதில்லை. எமது அரசியல் அத்திவாரம் மிகவும் பலமாகவும் தெளிவானதாகவும் இருக்கின்றது. அதனால் ஆட்டங்காணச் செய்வது மிகவும் கடிணமானது. பொருளாதாரத்தடைகள் இன்னுமின்னும் எம்மை மேம்பட்ட நிலைக்கே இட்டுச் செல்லும் என்ற அளவுக்கு அதை எதிர்கொள்ள எம்மால் முடியும். இதைத்தான் அமெரிக்க இஸ்ரேலிய நலன்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதையும் நாம் தெளிவாகவே விளங்கியிருக்கின்றோம்.

Friday, June 1, 2018

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி (ரஹ்)

Imam Khomeini, 
the Great Leader and the Founder of Islamic Republic 

ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 29வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு சில குறிப்புக்கள்

அறிமுகம்:

இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமெய்னி ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும் மர்ஜா எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக் கூடிய ஒரு மேதையாகவும் வாழ்ந்தவர். 

ஈரானில் நிலவிய பஹ்லவி ஆட்சி பீடத்தின் கடைசி ஷா மன்னராக இருந்த மெஹமட் றெஸா பஹ்லவியை ஆட்சியில் இருந்து கவிழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின் அரசியல் தலைவராகத் திகழ்ந்தவரும் இவரே ஆவார். 

இந்தப் புரட்சியைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி ஈரானின் பெரும் தலைவரானார். புதிய இஸ்லாமியக் குடியரசில் மிக முக்கிய நிலையில் கருதப்பட்ட இந்தப் பதவியை அவர் தனது வாழ்நாளின் கடைசி வரை வகித்தார்.

பல முஸ்லிம்களுக்கு அவர் ஒரு 'மர்ஜா'வாக (பின்பற்றக் கூடிய தலைவராக) இருந்தார். ஈரானில் அவர் பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக உத்தியோகப்பூர்வமாக இமாம் என்றே அழைக்கப்பட்டார். அரது ஆதரவாளர்கள் இந்த மரபை பின்பற்றினர். 

இமாம் கொமய்னி மிக உயர்ந்த செல்வாக்கு கொண்ட புதுமையான இஸ்லாமிய தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். இந்தத் துறையில் அவரது மிக உன்னதமான படைப்பாக நீதித்துறை கோட்பாடுகள் பற்றி அவர் எழுதிய புதிய தத்துவங்களைக் கொண்ட 'வெலாயத் ஏ பக்கிஹ்' அமைந்துள்ளது.

குடும்பமும் ஆரம்ப காலமும்:

றூஹுல்லாஹ் மூசவி, ஆயத்துல்லாஹ் செய்யித் மொஸ்தபா மூசவி மற்றும் ஹாஜியா ஹகா கானூம் ஆகியோருக்கு பிள்ளையாக ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தெற்காக சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கொமயின் என்ற இடத்தில் பிறந்தார். (இவர் 17 மே 1900 அல்லது 24 செப்டம்பர் 1902ல் பிறந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன). 

இந்தக் குடும்பம் முஹம்மத் நபி அவர்களின் வழித்தோன்றலில் வரும் செய்யித் வம்சத்தைச் சேர்ந்தது. அவரின் தந்தை வழி பாட்டனார் செய்யித் அஹமத் மூசவி. அவரின் மூன்றாவது மனைவி ஷகீனாவுக்கு 1856ல் பிறந்தவர்தான் இமாமின் தந்தை மொஸ்தபா. 

இமாம் கொமய்னியின் தாய் வழி பாட்டன் மிர்ஸா அஹமத் மெஜ்தஹேத் ஏ கொன்ஸாரி ஆவார். இவர் ஈரானின் மத்திய பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க சமயத் தலைவாகத் திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் ஷா மன்னர் பரம்பரையால் பிரிட்டிஷ் கம்பனி ஒன்றுக்கு புகையிலை உற்பத்திக்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்த புகையிலை உற்பத்திகளைப் பயன்படுத்துவதை தடை செய்து பகிரங்கமாக மார்க்கத் தீர்ப்பு 'பத்வா' அளித்தவர். இதன் விளைவாக அந்த சலுகையை இரத்துச் செய்ய வேண்டியதாயிற்று.

இமாம் கொமய்னி ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே அவரின் தந்தை கொலை செய்யப்பட்டார். அவருடைய தாயும் அத்தை ஒருவரும் தான் அவரை வளர்த்தனர். பிறகு இமாமுக்கு 15 வயதாக இருக்கும் போது ஒரே ஆண்டில் தாயும் அத்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். 

இமாம் தனது ஆறாவது வயதில் இருந்தே புனித வேத நூலான குர்ஆனை கற்கலானார். ஆரம்ப கல்வியை அவர் வீட்டிலும் உள்ளுர் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார். 18 வயது வரைக்கும் அவர் தனது மூத்த சகோதரரின் பாதுகாப்பில் இருந்தார். பிறகு எஷ்பஹான் மாநிலத்தில் உள்ள சமயக் கற்கை நிலையத்தில் அவர் மேலதிக கல்வியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவர் அராக்கில் உள்ள சமயப் பாடசாலையையே விரும்பினார். அந்தக் காலத்தில் கல்விப் புலமைக்கு மிகவும் பெயர் போன ஒரு இடமாக அது இருந்தமையே இதற்கு காரணம்.

1921ல் இமாம் அராக்கில் கல்வியைத் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டு அராக் சமயப் பாடசாலை கொம் நகரில் உள்ள சமயக் கல்விக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. அராக் மாணவர்கள் அங்கு செல்லுமாறு கேற்கப்பட்டனர். இமாம் அவர்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அங்கு சென்றார். அங்கு பட்டம் பெற்ற பின்னர் அதே சமயக் கல்விக் கூடத்தில் அவர் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் (ஷரீஆ) இஸ்லாமிய நீதி நிர்வாகம்,மெய்யியல் ஆகிய பாடங்களை பல வருடங்கள் போதித்தார். இந்த விடயங்களில் அவர் பல நூல்களையும் எழுதி உள்ளார்.

கல்வித்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த காலப்பகுதியில் இமாம் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஆனால் சமயத் தலைவர்கள் தீவிர அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் உறுதியாகக் கொண்டிருந்தார் என்பதையே அவரது கல்விப் போதனைகள், எழுத்துக்கள் மற்றும் உரைகள் என்பன உணர்த்தி நின்றன. இதற்கு ஆதரவாக மூன்று முக்கிய காரணங்களையும் முன்வைக்கலாம். முதலில் இஸ்லாமிய கற்கைகளில் அவருக்கு இருந்த ஆர்வம் பாரம்பரியமான இஸ்லாமிய சட்ட விதிகள், நீதித்துறை மற்றும் கொள்கைகள் என்பனவற்றின் எல்லைகளைத் தாண்டி நின்றதை காண முடிந்தது. அவர் தத்துவஞானத்திலும் நெறிமுறையியலிலும் ஆகக் கூடிய அக்கறை காட்டினார். இரண்டாவதாக அவரின் கற்பித்தல் முறை சமயச் செயல்பாடுகளோடு மட்டும் மட்டுப்படாமல் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டியஅம்சங்களை வலியுறுத்துவதாகவும் காணப்பட்டது. மூன்றாவதாக ஈரானில் 1940களில் பெரும் பரவலாகவும் பகிரங்கமாகவும் பேசப்பட்ட மதச்சார்பற்ற போக்கிற்கு எதிராக குரல் கொடுத்த முதலாவது ஈரானின் சமயத் தலைவாகவும் அவர் காணப்பட்டார். அவர் தனது கருததுக்களை முன்வைத்து துறைசார் நூல்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டார். அவர் கொம்மில் இருந்து டெஹ்ரானுக்கு விஜயம் செய்து அன்றைய ஈரான் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவி மடுத்தார்.

இமாம் கொமய்னி 1963ல் மர்ஜா ஆனார். அன்றைய பெரும் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹுசேன் பொருஜேர்தியின் மறைவை அடுத்து அவர் இந்த நிலையை அடைந்தார்.

ஆரம்பகால அரசியல் செயற்பாடு:

1961ல் ஆயத்துல்லாஹ் பொருஜேர்தியின் மரணமும், 1962ல் ஆயத்துல்லாஹ் அபுல் காஸெம் கஷானியின் மரணமம் ஷீஆ ஆன்மிகத் தலைமையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்த காலம் அது. இமாம் கொமய்னிக்கு தலைமைத்துவத்துக்கான கதவுகளை இது திறந்து விட்டது. தனது 60வது வயதில் இமாம் அவர்கள் மிக உன்னதமான ஒரு நிலையை அடைந்திருந்தார்கள். 1920கள் முதலே ஈரானில் பஹ்லவி மன்னரின் சமயச் சார்பற்ற மற்றும் சமயத் தலைவர்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டையே சமயப் பிரிவுத் தலைவர்கள் கொண்டிருந்தனர். 1960களில் சமயத்துக்கு எதிரான மன்னராட்சியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் உச்சத்தில் காணப்பட்டன. இது அன்றைய காலகட்டத்தில் 'வெள்ளைப் புரட்சி' என்று அழைக்கப்பட்டது.

வெள்ளைப் புரட்சிக்கு எதிர்ப்பு:

1962 முதல் தான் இமாம் கொமய்னி அரசியல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கினார். ஷாவின் ஆட்சியால் ஈரானில் பிரகடனம் செய்யப்பட்ட வெள்ளைப் புரட்சி காணிச் சீர்திருத்தம், காடுகளைத் தேசிய மயமாக்கல், அரச நிறுவனங்களை தனியார் நலன்களுக்காக விற்றல், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில் தேர்தல் மாற்றம், தொழில்துறையில் இலாபப் பகிர்வு, பாடசாலைகளில் எழுத்தறிவு இன்மைக்கு எதிரான பிரசாரம் என பல விடயங்களை உள்ளடக்கி இருந்தது. பாரம்பரிய வாதிகளால் இவற்றுள் பல விடயங்கள் ஆபத்தானவையாகவும் மேலைத்தேச மனோபாவம் கொண்டவையாகவும் நோக்கப்பட்டன. குறிப்பாக சக்தியும் சிறப்பும் மிக்க சமயக் கல்விமான்கள் (உலமாக்கள்) இதை பெரும் அச்சுறுத்தலாகக் கருதினர். இதனால் உலமாக்கள் நாடு முழவதும் அரச எதிர்ப்பு கலவரங்களுக்குத் தூபமிட்டனர். மன்னர் மொஹமட் ரெஸா ஷா பஹ்லவி தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதரவைத் திரட்டும் ஒரு மூலோபாயமாகவே வெள்ளைப் புரட்சியை அவர்கள் பார்த்தனர். ஷா தன்னை ஒரு புரட்சிகர சிந்தனைக் கொண்ட ஒருவராக் வெளிக்காட்டிக் கொள்ளவே தேசியவாதம் நவீனத்துவம் போன்ற சொற்களை ஒரு மாயையாகக் கையாண்டு வருகின்றார் என்று அவர்கள் கருதினர்.

1963ல் வெள்ளைப் புரட்சியின் ஆறு அம்ச மறுசீரமைப்புத் திட்டத்தை ஷா அறிவித்தார். தனது ஆட்சிக்கு தாராளவாத மற்றும் முன்னேற்றவாத முகப்பை அளிக்கும் வகையில் அமெரிக்க செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு பொதியாக இந்தத் திட்டங்கள் காணப்பட்டன. இமாம் கொமய்னி தனது ஏனைய அயத்துல்லாஹ் சகாக்களை கொம் நகருக்கு அழைத்து இந்தத் திட்டத்தின் தீய நோக்கங்கள் பற்றி விரிவான விளக்கமளித்து, ஷாவின் இந்த நயவஞ்சகத் திட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தனது வெள்ளைப் புரட்சித் திட்டத்துக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் மன்னர் ஷா திட்டமிட்டிருந்த சர்வஜன வாக்கெடுப்பை எதிர் கொள்ள வேண்டிய விதம் அதை தோல்லிவயுறச் செய்ய வேண்டியதன் அவசியம் என்பன பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. 

1963 ஜனவரி 22ல் மிகவும் கண்டிப்பான வார்த்தைகளைக் கொண்ட ஒரு பிரகடனத்தை இமாம் கொமய்னி வெளியிட்டார். அதில் அவர் தனது திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி இரு தினங்களில் ஷா வின் ஆயுதப் படை அணி ஒன்று கொம் நகர் நோக்கி அனுப்பப்பட்டது. அத்தோடு உலமாக்களை ஒரு தனி வர்க்கமாக வகைப்படுத்தி அவர்களைக் கண்டித்து உரை ஒன்றையும் ஷா நிகழ்த்தினார். ஆனால் இமாம் அசரவில்லை. ஷா வின் அராஜகத்துக்கு எதிரான அவரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஏனைய எட்டு சிரேஷ்ட கல்விமான்களின் கையொப்பத்தோடு ஷா வின் திட்டங்களைக் கண்டித்து விஞ்ஞாபனம் ஒன்றையும் இமாம் வெளியிட்டார். ஷா, ஈரானின் அரசியல் யாப்பை என்ன என்ன வகையில் மீறி உள்ளார் என அதில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அத்தோடு ஷா ஆட்சியின் ஊழல் பற்றிய விவரங்களும் அதில் அடங்கி இருந்தன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முழுமையாக சேவகம் புரியும் ஒரு மன்னரே ஷா என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய வருடத்தின் (1963 மார்ச் 21) பாரசீக புதுவருடமான நௌரூஸ் புத்தாண்டு நிகழ்வுகளை ஷா வின் அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்கள் கைவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

1963 ஜுன் 3ம் திகதி புனித ஆஷுரா தினத்தின் மாலை வேளையில் இமாம் நிகழ்த்திய உரையில் கொடுங்கோல் ஆட்சியாளன் யஸீத்துக்கும் ஷாவுக்கும் இடையிலான சமாந்தரங்களை அவர் மக்களுக்குத் தெளிவு படுத்தினார். ஷா தனது நிலைப்பாடுகளையும் வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் மக்களால் நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்படும் காலம் வரும் என்று உறுதியான எச்சரிக்கையையும் தனது உரையில் இமாம் விடுத்தார்.

இமாமின் பொதுவான மிக உறுதியான இந்தக் கண்டனங்களை அடுத்து மன்னர் ஷா மிக மோசமான பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் விளைவு இமாம் ஷாவின் படைகளால் கைது செய்யப்பட்டார். 1963 ஜுன் 5ல் இமாம் கொமய்னி கைது செய்யப்பட்டார். இதனால் மக்கள் திரண்டெழுந்தனர். இதனால் ஈரான் முழுவதும் பாரிய அளவிலான கலவரங்கள் வெடித்து 400க்கும் அதிகமான உயிர்களைக் காவு கொண்டது. இமாம் எட்டு மாத காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு 1964ல் விடுதலை செய்யப்பட்டார்.

இமாமின் அரசியல் கண்ணோட்டப் பாதையில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமயத்தையும் சமய நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஈரானின் ஷீஆ உலமாக்களினால் காலாகாலமாக விடுக்கப்பட்டு வரும் வேண்டுகோள்கள் மற்றும் அறிவுரைகள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் ஈரானிய முடியாட்சியை ஒரு நவீன சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் திட்டங்களை ஷா முன்னெடுத்து வந்தார். இந்த நடைமுறைகளால் ஈரானிய மக்களின் சமய ரீதியான வாழ்வு முறை அச்சுறுத்தலுக்கு ஆளானது. அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமயத் தலைவர்கள் ஆட்சியின் எதிரிகளாகப் பார்க்கப்பட்டனர். இதன் விளைவாக சமயத் தலைவர்களை ஒன்றிணைத்த இமாம் ஈரானின் முடியாட்சிக்கு எதிரான சமய விழுமியங்களுடன் கூடிய ஒரு அரசை அந்த நாட்டில் ஸ்தாபிப்தற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

சரணாகதிக்கு எதிர்ப்பு:

அமெரிக்க இராணுவத்தினருக்கு ஈரானில் முழுமையான இராஜதந்திர விடுபாட்டு உரிமையை வழங்கும் தீர்மானத்தை ஷா அரசு மேற்கொண்டபோது 1964 நவம்பரில் இமாம் அவர்கள் அதை முழுமையாகவும் கண்டிப்பாகவும் எதிர்த்தார். இதை ஒட்டு மொத்த சரணாகதி என வர்ணித்த இமாம் மிகக் கடுமையாக அதை எதிர்த்தார். இதன் விளைவாக 1964 நவம்பரில் இமாம் மீண்டும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அஞ்ஞாதவாச வாழ்வு:

இமாம் கொமய்னி 14 வருடங்கள் அஞ்ஞாதவாசம் இருந்தார். அதில் பெரும் பகுதியை அவர் ஈராக்கின் நஜாப் நகரில் கழித்தார். 1964 நவம்பர் 4ல் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் முதலில் துருக்கிக்கு சென்றார். அங்கு பர்ஸா நகரில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தை அவர் கழித்தார். 1965 அக்டோபரில் தான் அவர் அங்கிருந்து ஈராக்கின் நஜாப் நகரில் குடியேறினார். 1978ல் ஈராக்கின் அன்றைய உப ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுசேனால் அங்கிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரை இமாம் அங்கு தான் வாழ்ந்தார். அங்கிருந்து வெளியேறிய இமாம் பிரான்ஸின் வட மத்திய பகுதியில் உள்ள நேபள் லி சட்டோ என்ற இடத்தில் குடியேறினார்.

இமாம் கொமய்னி ஈரானின் அன்றைய அரசியல் யாப்பை முழுமையாக நிராகரித்தார். அது பெல்ஜியத்தில் இருந்து தருவிக்கப்பட்ட அந்நிய மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே ஆரம்பம் முதல் அவரின் நிலைப்பாடாக இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டபூர்வமான நிறுவனங்களை உள்ளடக்கிய, உயர் மட்ட சமயத் தலைமைத்துவ அதிகாங்களைக் கொண்டதாக, முஸ்லிம் சமூகம் ஆன்மிக ரீதியாகவும், உலகியல் பாதுகாப்பைக் கொண்டதாகவும் ஆளப்பட வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.

தன்னுடைய இந்த இஸ்லாமிய அரசு குறித்த சிந்தனைகளை உள்ளடக்கிய தொடர் விரிவுரைகளை 1970களில் அவர் நஜாப்பில் இருக்கும் போதே நிகழ்த்தி வந்தார். பின்னர் இந்த சிந்தனைகள் உள்ளடங்கிய விரிவுரைகளின் தொகுப்பு 'வெலாயத் ஏ பக்கி' எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. ஆட்சி முறை பற்றிய அவரின் மிகச் சிறந்த மிகவும் பிரபலமான கிரந்தமாக அது அமைந்தது.

ஈரானில் இமாம் கொமய்னி தலைமையிலான அதிகாரத்தின் போது இந்த முறைகள் முற்றாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டு, அதில் அவர் தெரிவித்திருந்த பாதுகாப்பாளர் அல்லது பெருந்தலைவர் என்ற பதவியையும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தனது மரணம் வரை அவரே வகித்தார்.

பிரான்ஸில் இருந்து அவர் நிகழ்த்திய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் என்பன ஷா வை மிக வன்மையாகச் சாடும் வகையில் அமைந்திருந்தன. ஷா ஒரு யூத முகவர் என்றும், அவர் ஒரு அமெரிக்கப் பாம்பு. அதன் தலை மக்களால் கல்லெறிந்து கொய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் அதில் அமைந்திருந்தன். இவை தனது இஸ்லாமிய வலையமைப்புக்குள் இருந்த எதிர்ப்பாளர்களுக்கு வெளியே பகிரப்படக் கூடாது என இமாம் விரும்பிய போதிலும் அதையும் மீறி ஈரானிய சந்தைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகக் கிடைக்கும் வகையில் இந்த உரைகள் அடங்கிய கெஸட்டுக்கள் அமைந்தன. இது மக்கள் மத்தியில் ஷாவின் ஆட்சியின் அதிகாரம் மற்றும் கௌரவம் என்பனவற்றை மேலும் தரம் தாழ்த்தியது. இதனால் ஷாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வேகமாக மங்கத் தொடங்கியதோடு இமாமை நோக்கி பல்வேறு தரப்பட்ட மக்களும் நேசக் கரம் நீட்டத் தொடங்கினர். தமது ஆன்மிகத் தலைவரின் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட உரைகளை மேலும் மேலும் கேற்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கியது.

பெருந் தலைவர் இஸ்லாமியக் குடியரசுக்கு திரும்பி வரல்:

இமாமின் சிந்தனைகளால் உந்தப்பட்டு மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மன்னர் ஷா தனது பரிவாரங்களுடன் 1979 ஜனவரி 16ல் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். வெற்றிவாகையோடு ஷா எதிர்ப்பு சக்திகளின் அழைப்பை ஏற்று இமாம் கொமய்னி 1979 பெப்பரவரி 1ல் நாடு திரும்பினார். இமாமை வரவேற்க சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டதாக சில தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு வந்திருந்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர் இமாமிடம் இது பற்றி எப்படி உணருகின்றீர்கள்? என்று கேட்ட போது, சகலரும் அதிர்ச்சி அடையும் வகையில் எதுவும் இல்லை என்று இமாம் பதில் அளித்தார்.

தாயகம் திரும்பிய முதலாவது தினத்தில் மக்கள் மத்தியில்; உரை நிகழ்த்திய இமாம் ஷாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஷபூர் பக்தியாரின் அரசையும் வன்மையாகக் கண்டித்தார். இந்த அரசின் பற்களை உடைப்பேன் என்று முழங்கிய இமாம் அமையவுள்ள இஸ்லாமிய அரசின் நன்மைகள் பற்றிய வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கினார். அந்த அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பிரபலமான ஒரு அரசாக இருக்கும் என்றும் கூறினார்.

புதிய அரசை ஸ்தாபிததல்:

பெப்ரவரி 11ல் இமாம் இடைக்கால அரசொன்றை பிரகடனம் செய்தார். 1979 மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அந்த இடைக்கால அரசு மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா தரப்பினருக்கும் அதில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புதிய அரசின் வடிவமாகவும் அரசியல் யாப்பாகவும் இஸ்லாமியக் குடியரசை ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதுதான் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட கேள்வி. முடியாட்சியை நீக்கி இஸ்லாமிய குடியரசு முறையை ஆட்சி அமைப்பதாக ஏற்றுக் கொள்வதாக அந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 98 வீதமானவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து புதிய அரசியல் யாப்பின் அங்கீகாரத்துக்கான தேர்தல்களும் நடத்தப்பட்டன.  பெருந்தலைவர் பதவிக்கு அப்பால் மக்களால் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நியதியும் அதில் காணப்பட்டது. அந்த ஜனாதிபதி பதவிக்கு பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே போட்டியிடவும் முடியும். 

இமாம் கொமய்னி ஆயுற்கால பெருந் தலைவரானார். அத்தோடு அவரே புரட்சியின் தலைவர் என்றும் உத்தியோகப்பூர்வமாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு இஸ்லாம் ஈரானின் புதிய அரசியல் யாப்பின் அடிநாதம் ஆனது. இஸ்லாமிய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அடிப்படை கடமையாகியது.

இமாம் தனது ஆயுள் காலத்தில் இஸ்லாமிய உலகை ஒன்றிணைப்பதற்கான பல வழிமுறைகளையும் காட்டித் தந்துள்ளார். இறைதூதர் மஹம்மது நபி பிறந்த மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் முதல் 17ம் நாள் வரையான வாரத்தை ஐக்கிய வாரமாக பிரகடனம் செய்தார். அதேபோல் புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக 'சர்வதேச குத்ஸ்' தினமாகப் பிரகடனம் செய்தார். இன்று உலகம் முழவதும் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.

பெர்லின் மதில் உடைக்கப்பட முன்பே 1988 டிசம்பரில் அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி மிக்கயல் கொர்பச்சேவுக்கு கம்யூனியஸம் உலகில் இருந்து விரைவில் வீழ்ச்சி அடைந்து விடும் என எதிர்வு கூறி கடிதம் ஒன்றை எழுதியதோடு இஸ்லாத்தைக் கற்று ஆய்வு செய்ய முன்வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தார். கம்யூனிஸம் என்பது விரைவில் உலக அரசியல் சரித்திர நூதனசாலையில் வைக்கப்படும் ஒரு விடயமாகி விடும் என்று இமாம் அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளில் அது நடந்து இன்று அது யதார்த்தமாகி உள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

இமாம் கொமய்னியின் ஆட்சியின் கீழ் சகல துறைகளிலும் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுலுக்கு வந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஆடை விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளும் பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய முறையில் பாராளுமன்றத்திலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. ஷீஆ முஸ்லிம்களும் சுன்னாஹ் முஸ்லிம்களும் ஐக்கியப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இறுதியில் நோய்வாய்ப்பட்ட இமாம் சுமார் 11 தினங்ள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 1989 ஜுன் 3ல் தனது 89வது வயதில் காலமானார். ஈரானிய நகரங்கள் அனைத்தினதும் மத்திய பகுதிகளில் மக்கள் கூடி தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர். பல தினங்கள் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாகக் காணப்பட்டனர். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் ஒரு தலைவரின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆகக் கூடுதலான மக்கள் தொகை இன்று வரை இதுவேயாகும்.


ஈரானில் ரமழான் கலாசாரம்


Ramadhan Culture in Iran

Image result for mosques in iranரமழான் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாம் மாதமாகும். இக்காலக்கட்டத்தில் முஸ்லிம்களும் வைகரையிலிலிருந்து இருட்டின் ஆரம்பம் வரை உண்ணாது, பருகாது நோன்பிருப்பர். இது பசியடக்குதல், பொறுமைகாத்தல் போன்றனவற்றுக்கு நல்லதொரு பயிற்சியாகும். அதேவேளை, வசதி படைத்தோர் வறியோரின் கஷ்டங்களை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்புமாகும். ரமழான் மாதமென்றால் சிறியோர் பெரியோர் வித்தியாசமின்றி, எல்லா முஸ்லிம்கள் மனதிலும், ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி, சந்தோசம், குதூகலம் ஏற்படுவதைக் காணலாம். பசி பட்டினியுடன் தம்மை வருத்திக்கொள்ளும் ஒரு சன்மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் ஏன் இந்த அளவு உற்சாகமாக இருக்கின்றனர் என்பது முஸ்லிமல்லாதோருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஏனையவை விசுவாச பிரகடனம், தினசரி ஐவேளைத் தொழுகை, ஏழை வரி மற்றும் வாழ்விலொருமுறை மக்காவுக்கான புனித யாத்திரை ஆகும்.
ரமழான் மாதம் ஆரம்பித்தவுடன் முஸ்லிம்கள் தமக்கிடையில் ரமழான் கரீம், ‘ரமழான் முபாரக் போன்ற வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். பள்ளிவாசல்கள் விசேடமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
உலகில் எல்லா நாடுகளிலும் புனித ரமழான் மாதத்துக்கே உரிய சிறப்பு சடங்கு சம்பிரதாயங்கள் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளன. சில ஈரானிய இனக்குழுக்கள் மத்தியில் உள்ளவற்றை இங்கு கொஞ்சம் ஆராய்வோம்.

ந்தரான்
Image result for Mazandaran in ramadanந்தரான் என்பது ஈரானின் வடக்கில் உள்ள ஒரு நகரமாகும். இங்குள்ள முஸ்லிம்கள் புனித ரமழானை, அதற்கு முன்னைய மாதமான ஷ'பானின் இறுதியில், மூன்று நாட்கள் நோன்பிருந்து வரவேற்பர். ஷ'பானும் இஸ்லாம் போற்றும் மாதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள் நோன்பு திறப்பதற்கு முன் சூரா அன்- ஆம்’ (புனித குர்'ஆனின் 6வது சூரா) சூராவை கூட்டாக ஓதுவார்.  இதனை அவர்கள் கதம் ஏ அன்-ஆம் என்பர்.

கிழக்கு அசர்பைஜான்

Image result for Mazandaran in ramadanகிழக்கு அஜர்பைஜானிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பெண்கள் ஒன்றிணைந்து, ரமழானில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஒரு பையைத் தைத்துக்கொள்வார்கள். இதற்கு "பரக்கத் கிசாசி" (அதிர்ஷ்டப் பை) என்று பெயர். அந்தப் பையில் கொஞ்சம் பணத்தை போட்டு அடுத்த ரமலான் வரை பத்திரப்படுத்தி வைப்பார்கள். இவ்வாறு செய்வதால் தமது குடும்பத்தை வறுமை தாக்காது என்பது அவர்களது நம்பிக்கை. 
ஷீராஸ்
Image result for Ladies Prayers in iran masjid இங்குள்ள மக்கள் ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் கூடிவிடுவார்கள். இத்தினத்தை "ஜூம்மேஹ் அல்வதாயி" என்று ழைப்பார்கள். இத்தினம் முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். இளம் பெண்கள் தமக்கு நல்ல வரன் அமையவேண்டும் என்றும், பிள்ளைகளற்றோர் பிள்ளை வரம் வேண்டியும் பிரார்த்திப்பார்கள்; கற்பினித் தாய்மார்கள் தமக்கு கிடைக்கவுள்ள பிள்ளைக்கான முதலாவது சட்டையை அந்த பள்ளிவாசலிலேயே தைத்துக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் தமது வாழ்க்கையில் சுபீட்சமுண்டாகும் என்பது அவர்களது நம்பிக்கை.

துருக்மான்
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் வசிக்கும் துர்க்மான் மக்கள் மத்தியில் பல ரமழான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. அதிலொன்றுதான் "யா ரமழான்" சடங்கு. யாரி ரமழான் (ரமழான் நடுப்பகுதி) என்ற சொல்லில் இருந்து மருவியது. ரமழானின் 14ம்-15ம் இரவுகளில் சமயப்பெரியார் ஒருவர் மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு பைத்துகளை ஓதிக்கொண்டு வீதிவலம் வருவார். ரமளானின் முதல் பாதியை சிறப்பாக முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்தும் அதுபோல் அடுத்த பாதியையும் சிறப்பாக முடிப்பதற்கு ஆர்வமூட்டும் விதத்திலும் அந்த பைத்துகள் அமைந்திருக்கும். இவர்கள் வரும்போது வீட்டில் உள்ளவர்கள் அன்பளிப்புகளை வழங்குவர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அன்பளிப்புகள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுடன் பகிர்ந்துகொள்வர்.