Friday, February 3, 2023

ஈரான் இஸ்லாமிய புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை

The Iranian Islamic Revolution was a major turning point in world history


தொகுப்பு - முகமது ஜவாத் கோர்பி

ஒரு சம்பவம் நடந்து சுமார் அரை நூற்றாண்டை நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்றளவிலும் ஆராயப்பட்டுக்கொண்டு இருக்குமாயின் நிச்சயமாக அது ஈரான் இஸ்லாமிய புரட்சியாகும்.

நவீன உலகில் இதுபோன்ற ஒரு புரட்சி, அதுவும் ஒரு மதத்தை முன்னிலைப் படுத்தி, ஆயுதம் ஏந்தா மாக்களால், ஒரு தலைமைத்துவத்தால் வழிநடத்தப்பட்டு, வெற்றிபெற்ற ஒரு புரட்சி இதுவாகவே இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

1978 இல், இமாம் கொமெய்னி தலைமையிலான ஈரானிய மக்களின் இஸ்லாமிய இயக்கம் உச்சக்கட்டத்தை எட்டியபோது, இமாம் கொமெய்னி யுடன் சமரசம் செய்துகொள்வதில் ஏமாற்றமடைந்த ஷாவின் ஆட்சி, அவரது நடவடிக்கைகளை மட்டுப்படுத்த அல்லது தஞ்சமடைந்திருந்த அவரை ஈராக்கிலிருந்து நாடு கடத்த சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நியூயார்க்கில் நடந்த ஈரான் மற்றும் ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இமாம் கொமெய்னியை ஈராக்கில் இருந்து நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. 24 செப்டம்பர் 1978 அன்று, ஈராக் துருப்புக்கள் நஜாப்பில் உள்ள இமாம் கொமெய்னியின் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை பற்றிய செய்தி ஈரான், ஈராக் மற்றும் பிற நாடுகளில் உள்ள முஸ்லிம்களை கோபப்படுத்தியது. இமாம் கொமெய்னி  அவர்களை சந்தித்த ஈராக் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான தலைவர், இமாம் ஈராக்கில் தங்க விரும்பினால் அவர் ஷாவுக்கு எதிரான தனது செயற்பாடுகளையும் அரசியலையும் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு இமாம் அவர்கள், முஸ்லிம் உம்மா மீது அவருக்கு இருந்த பொறுப்பு காரணமாக, அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அமைதியாக இருக்க அல்லது ஷாவுடன் சமரசம் செய்ய ஒருபோதும் அவர் தயாராக இருக்கவில்லை.

இமாம் கொமெய்னி, எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிட தயாராய் இருக்கவில்லை, போராட்டத்தைத் தொடர தீர்மானித்தார், ஈராக்கை விட்டு சிரியாவுக்குச் செல்ல முடிவு செய்தார், ஆனால் ஈராக்-சிரிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் விமான சேவைகள் இடம்பெறவில்லை. ஆகவே அவர் குவைத் ஊடாக சிரியா செல்ல முடிவு செய்தார். அவர் குவைத்துக்கு வருவதற்கு விசா வழங்கப்பட்ட நிலையில் கூட, குவைத் அதிகாரிகள் அவர் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பித்தனர்.

அன்றிரவு இரவு இமாம் பாஸ்ராவில் தங்கி  (ஈரானியர்கள் விசா இன்றி பிரான்ஸ் செல்லக்கூடிய ஏற்பாடு அப்போது நடைமுறையில் இருந்ததால்) பாரிஸுக்கு பறக்க முடிவு செய்தார். ஈரான் நாட்டு மக்களுக்கு அப்போது அவர் அனுப்பிய செய்தியில், தான் பிரான்ஸ் செல்வதற்கான காரணங்களை குறிப்பிட்டார். “இப்போது நான் இமாம் அலியின் (அலை) அருகாமையை  விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், மேலும் வெளிநாட்டவர்களாலும் அவர்களுடன் தொடர்புடையவர்களாலும் தாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய இஸ்லாமிய பிரதேசங்களில் எனக்கு சுதந்திரம் இல்லை. மேலும் எனக்கு விசா வழங்கப்பட்டிருந்தும் கூட குவைத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நான் பிரான்ஸ் செல்கிறேன், நான் எங்கிருந்தாலும், எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனது தெய்வீக கடமை மற்றும் இஸ்லாம் அதனூடாக முஸ்லிம்களின் உயர் நலன்களை நிறைவேற்றுவதுதான். இப்போது இஸ்லாமிய இயக்கம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதால் நீங்களும் நானும் பெரும் பொறுப்பொன்றை சுமந்தவர்களாக இருக்கின்றோம்; நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது”, என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இமாமும் அவரது தோழர்கள் சிலரும் அக்டோபர் 6, 1978 இல் பாக்தாத்துக்குச் சென்று, அடுத்த நாள் அவர் பிரான்ஸுக்கான பயணத்தைத் தொடங்கினார், அதன் பிறகு சிறிது காலம் தலைநகர் பாரிஸில் தங்கிய அவர் Neauphle-le-Château எனும் கிராமத்திற்கு தனது இருப்பிடத்தை மாற்றினார்.

'இமாம் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்ற பிரெஞ்சு ஜனாதிபதியின் கருத்தை எலிசி மாளிகை அதிகாரிகள் இமாமிடம் தெரிவித்தனர். அதற்கு இமாமின் கூர்மையான எதிர்வினை மற்றும் பதில் என்னவென்றால், அத்தகைய வரம்பு ஜனநாயகத்திற்கான பிரான்சின் கொள்கைக்கு முரணானது, மேலும் அவர் தனது நோக்கத்தை விட்டுக்கொடுப்பதை விட விமான நிலையங்களுக்கு இடையில், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சஞ்சரிப்பதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஷாவின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக, பாரிஸில் இமாம் தங்கியிருப்பது புரட்சியின் வேகத்தை துரிதப்படுத்தியது மற்றும் பல நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாளும் இமாமின் இருப்பிடத்திற்குப் படையெடுத்தனர், மேலும் அந்த சிறிய கிராமம் உலக செய்திகளின் மையமாக மாறியது. அந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இமாம் நாடுதிரும்ப விரும்பினார். இமாம் நாட்டுக்குத் திரும்புவதை அப்போதைய ஈரானிய அரசு தடைசெய்திருந்த நிலையில் பல விமான நிறுவனங்கள் அவரை ஏற்றிவர தயக்கம் காட்டின. இமாம் கொமெய்னி நாட்டில் இருந்து வெளியேறினால் போதும் என்ற நிலையில் இருந்த பிரான்ஸ் அரசு அவரின் பயணத்துக்காக விமானம் ஒன்றை வழங்கியது. பல்லாண்டுகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு இமாம் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தெஹ்ரானை வந்தடைந்தார்.

அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த கிஸ்கார்ட் டி எஸ்டாயிங், இமாமை பிரான்சில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவு பிறப்பித்ததாக தனது நினைவுக் குறிப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில், அந்த நாட்களில் நம்பிக்கையிழந்திருந்த ஷாவின் இராஜதந்திர பிரதிநிதிகள், மக்களின் ஒரு தீவிரமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத எதிர்வினை ஆபத்தை Giscard d'Estaing க்கு அறிவுறுத்தினர், ஐரோப்பாவிலும் ஈரானிலும் ஏற்படக்கூடிய இத்தகைய எதிர்வினையின் பின்விளைவுகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டதாக அறிவித்தனர். பி

ரான்ஸில் இமாம் கொமெய்னி  நான்கு மாதங்கள் தங்கியிருந்த போது, Neauphle-le-Château உலகின் மிக முக்கியமான செய்தி மையமாக மாறி இருந்தது. இமாம் கொமெய்னி யின் பல்வேறு நேர்காணல்கள் இஸ்லாமிய அரசாங்கம் பற்றிய அவரது கருத்துக்கள் மற்றும் அவரது இயக்கத்தின் எதிர்கால நோக்கங்கள் அவரது குறிக்கோளை உலகிற்கு வெளிப்படுத்தியது.

இவற்றினூடாக பெரும் எண்ணிக்கையிலான உலக மக்கள் இமாமின் சிந்தனை மற்றும் அவரது எழுச்சியைப் பற்றி நன்கு அறிந்துக்கொண்டனர், மேலும் இந்த நிலையத்திலிருந்துதான் அவர் ஈரானில் இஸ்லாமிய புரட்சி இயக்கத்தின் மிக முக்கியமான காலகட்டத்தை வழிநடத்தினார்.

ஷாவினால் நியமிக்கப்பட்ட ஷெரீப்-இமாமியின் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. அதன் பிறகு ஷா ராணுவ அதிகாரியான அஸாரியாவை பிரதமராக நியமித்து ராணுவ சட்டத்தை பிறப்பித்தார்.

இந்த நடவடிக்கைகள் மூலமாக மக்கள் எழுச்சியைப் கட்டுப்படுத்த முடியவில்லை, ராணுவத்தால் கொலைகள் அதிகரித்தன. விரக்தியடைந்த ஷா அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களின் உதவியை நாடினர், ஆனால் அவர்களின் திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை.

"ஷாவின் முடியாட்சிக்கு எதிரான மக்களின் முறைசாரா வாக்கெடுப்பு" என்று அழைக்கப்படும் ஷா-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கானவர்களின் பங்கேற்றனர், தாஸுஆ மற்றும் அஷுரா (மொஹரம் 9 மற்றும் 10) நிகழ்வுகளில் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஷாபுர் பக்தியார், தேசிய முன்னணியின் முக்கிய நபர், அமெரிக்காவின் கடைசி பகடை, பிரதமராக ஷாவினால்   அறிமுகப்படுத்தப்பட்டார். குவாடலூப்பில் நகரில் நான்கு தொழில்துறை நாடுகளின் தலைவர்கள் பக்தியாருக்கு ஆதரவாக தங்கள் கூட்டுக் கருத்துக்களை தெரிவித்தனர்.

இவ்வாறு நடந்துகொண்டிருந்ததைத் தொடர்ந்து, நேட்டோவின் துணைத் தளபதியான ஜெனரல் ஹுய்சர் ஈரானுக்கு ஓர் இரண்டு மாத இரகசிய பயணத்தை மேற்கொண்டார். 1953 இல் முஹம்மத் முசத்தேக் ஆட்சியைக் கலைத்து, ஷாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது போலவே, இந்த அரசாங்கத்தை ஒழுங்கமைக்கவும், வேலைநிறுத்தங்களை முறியடிக்கவும், ஷாவை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சதித்திட்டத்தை நிறைவேற்றம் செய்யவும், பக்தியருக்கு இராணுவப் படைகளின் ஆதரவைப் பெறுவதே தனது நோக்கம் என்பதை அவர் பின்னர் தனது கருத்துக்களில் வெளிப்படுத்தினார். ஆனால், போராட்டங்களைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இமாம் கொமெய்னியின் செய்திகள், ஹுய்சரின் அனைத்துத் திட்டங்களையும் சிதறடித்தன.

டிசம்பர் 1978 இல், இமாம் கொமெய்னி  தாம் அஞ்ஞாதவாசத்தில் இருக்கும் நிலையிலேயே புரட்சிகர சபையை நிறுவினார். ஷா ஜனவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறினார், இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்தியாரின் அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாட்சி கவுன்சில் கூடியது. ஷா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி தெஹ்ரானில் உள்ள மக்களை மகிழ்வித்தது, பின்னர் நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் குவிந்து, அவர் வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடினர். அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஷாவின் இராணுவத்தின் ஜெனரல்களுடன் ஹூய்சரின் வழக்கமான சந்திப்புகளால் வேலைநிறுத்தங்களை அடக்குவதற்கும் மக்களின் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பக்தியாருக்கு உதவ முடியவில்லை.

இஸ்லாமிய புரட்சி மகத்தான வெற்றி பெற்றது. "கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாம் ஒன்றே எமக்கு வேண்டும்" என்பதே போராட்டத்தின் அடிநாதமாக இருந்தது. இமாம் கொமெய்னி நாடு திரும்பி பத்து நாட்களில் அதாவது, 1979 பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இஸ்லாமிய அரசொன்றை நிறுவினார்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இஸ்லாமிய அரசை எவ்விதத்திலாவது வீழ்த்தியே ஆகவேண்டும் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தது. புரட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் ஈராக்கின் சதாம் ஹுசைனை அமெரிக்கா தூண்டியது மட்டுமல்லாமல் தீவிரமாக ஆதரித்தது. ஆனால் எட்டு வருட போருக்குப் பிறகு, சதாம் போர்நிறுத்தத்தை ஏற்க வேண்டியிருந்தது மற்றும் சதாம் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் அமெரிக்க வெளியுறவு செயலாளராகவும், ஜனாதிபதிகள் ரிச்சர்ட் நிக்சனின் கீழ் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகவும் இருந்த Alexander Meigs Haig Jr இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

ஜனாதிபதி கார்ட்டர் ஈரானுக்கு எதிரான போரை ஃபஹ்த் மூலம் தொடங்க ஈராக்கியர்களுக்கு பச்சை விளக்கு காட்டினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹெய்க்கின் தகவலின்படி, சவூதி இளவரசர் ஃபஹ்த் (பின்னர் மன்னர் ஃபஹ்த்) மத்திய கிழக்கில் அமெரிக்க கையை வலுப்படுத்த வேண்டும் என்று நம்புவதாகவும், தடைப்பட்ட பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு, சதாமின் படையெடுப்பிற்கு அனுமதி வழங்கினார். உண்மை என்னவென்றால், ஜிம்மி கார்ட்டர், சமாதானம் செய்பவர் போல் காட்டிக்கொண்டு போரை ஊக்குவித்தார்.

59வது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அலெக்சாண்டர் ஹெய்க் வெளியிட்டுள்ள அறிக்கை, ஈரான் மீது படையெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டர் சதாம் ஹுசைனுக்கு பச்சை சமிக்ஞை கொடுத்ததைக் குறிக்கிறது.

http://echoofislam.itfjournals.com/article_1738_0.html

 

No comments:

Post a Comment