Tuesday, February 7, 2023

மாறிவரும் உலக ஒழுங்கில் ஈரான் வகிக்கும் முக்கிய பங்கு

 Iran plays a key role in the changing world order


By Elham Abedini, journalist and researcher in the field of international relations
 

ஈரானில் அண்மையில் நிகழ்ந்த அமைதியின்மை குறித்து கட்டுரைகள் எழுதாத, அதைப் பற்றி விரிவாகப் பேசாத ஊடகங்களையோ, சிந்தனையாளர்களையோ காண்பது அரிது. ஆனால் இந்த அவதானம் அல்லது அதன் மீதான ஊடக ஆக்கிரமிப்பு, குறிப்பிட்ட இந்த பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் குறைந்தது மூன்று கோணங்களில் இருந்து "ஈரான்" பிரச்சினைக்கு சிறப்பு கவனம் செலுத்தின எனலாம்.

முதலாவதாக, குறைந்தபட்ச இழப்புகளுடன் அதிகபட்ச சலுகைகளைப் பெறுவதற்காக JCPOA இன் மீள்கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானைக் கட்டாயப்படுத்த முடியும் என்ற மேற்கு நாடுகளின் நம்பிக்கைகள் அனைத்தும் ஈரான் கீறிய அதன் சிவப்புக் கோடுகளில் இருந்து பின்வாங்க மறுத்ததால் தோல்வியடைந்தது. இதன் விளைவாக, மேற்கத்திய ஆய்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமீபத்திய மாதங்களில் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற விரும்புவதாகக் கூறி பிரச்சினையை எழுப்ப முயற்சிக்கின்றனர். அவர்கள் இதற்காக தங்கள் ஊடகங்களையும், மனித உரிமைப் பிரச்சினையையும் நெம்புகோலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஈரானின் அணுசக்தி அமைப்பு (AEOI), IAEA ஆளுநர்கள் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஃபோர்டோ செறிவூட்டல் ஆலையில் 60% யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கியது. ஈரானின் பாதுகாப்பு உத்திகளில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்று ஈரானிய அதிகாரிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தாலும், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் கமேனி கூட இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் அணு மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து ஆணையிட்டுள்ளார் என்றாலும் கூட மேற்குலகம் இந்தப் பிரச்சினையை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.

காலப்போக்கில், அன்றைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் வார்த்தைகள், அந்நாட்டின் உறுதியான கொள்கையாக வெளிப்பட்டது, "ஈரான் அவர்களின் அணுசக்தி திட்டத்தின் ஒவ்வொரு நட் மற்றும் போல்ட்டையும் அகற்றும் ஒரு விருப்பத்தை நாம் உருவாக்கினால் ... நான் அதை வரவேற்கிறேன்," என்று கூறியிருந்தார். பல ஆண்டுகளாக அனைத்துவிதமான தடைகளுக்கும், அழுத்தங்களுக்கும் இலக்காகி வரும் நாடான ஈரான், இப்போது தனது சொந்த விஞ்ஞானிகளையும் அறிவையும் நம்பி இவ்வளவு சிக்கலான தொழில்நுட்பத்தை அடைய முடிகிறது என்பது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு யதார்த்தமாகும். 

இதற்கிடையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் போன்ற அரசியல்வாதிகள் ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரானவர்களாக கருதும் நபர்களை அதிகாரப்பூர்வமாக சந்திக்கின்றனர். மற்றொரு பிரச்சினை, ஈரானில் சிக்கலான, இன்னோரன்ன கலவரங்களை முன்னெடுப்பதற்கு ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் மனித உரிமைகள் தடைகள் உட்பட பல்வேறு கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய அதிகாரிகள் தங்கள் முன்னெடுப்புகளில் பிழைகளைச் செய்த விதம் மற்றும் இந்த விரைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் தொடர்பாக மற்றொரு விரிவான கட்டுரை எழுதப்பட வேண்டும் என்றாலும், இந்த அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன என்பதை சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். முதல் காரணம், இந்த அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களில் தீவிரமாக இருக்கும் பரப்புரையின் அழுத்தத்தின் கீழ், ஈரானில் நடப்பன பற்றி தவறான பகுப்பாய்வு செய்தார்கள். இரண்டாவது காரணம் என்னவென்றால், அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் ஹாஸ் போன்ற பல ஆய்வாளர்களின் கூற்றுப்படியும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தின்படியும் ஈரான் சர்வதேச அரங்கில் குறைந்தபட்சம் ஒரு சக்தியாக கருதப்படுகிறது. மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் சேர்ந்து, மேற்கு நாடுகளுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஈரான் பலவீனமாக்கப்பட்டால் , வளமிக்க பிராந்திய நாடுகளைச் சுரண்டுவதற்கு இந்த நாடுகள் பிராந்தியத்தில் கால் பதிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, ஈரானை உள்நாட்டுப் பிரச்சினைகளால் மூழ்கடிப்பது, பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது, சர்வதேச அளவில் மனித உரிமைப் பிரச்சினைகளை எழுப்புவது, அதையும் தாண்டி ஈரானை உள்நாட்டுப் போருக்குள் சிக்கவைத்து சிதைப்பது போன்றவை பிராந்தியத்தில் மேற்குலகின் நலன்களைப் பாதுகாக்க உதவும் கைங்கரியங்களாகும்.

சமீப காலமாக மேற்கத்திய முக்கிய ஊடகங்களின் செயல்பாடும், ஈரானுக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதற்கு அவர்கள் அணிவகுத்து நிற்கும் விதம், நம்பத்தகுந்த ஊடகங்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் ஊடகங்கள் போலிச் செய்திகளைக் கூட வெளியிடத் தயங்காமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், அதே சமயம் சிந்திக்கத் தூண்டுவதாகவும் உள்ளது. ஈரானில் உண்மை நிலையை மறைப்பதற்கு தயாரிக்கப்பட்ட செய்திகளின் எண்ணிக்கை சாதாரண அளவை விட அதிகமாக உள்ளது, மேலும் இது ஒரு பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையாகவும் மாறியுள்ளது. 

இசுலாமியப் புரட்சித் தலைவர் உடல்நலம் கெட்டு இருப்பதாகவும், அவரது பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட போலிச் செய்தி இதற்கு மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்றாகும். மறுநாள் ஈரான் முழுவதிலும் இருந்து மாணவர் பிரதிநிதிகளை அவர் சந்தித்தபோது இது பொய் என விரைவாக அம்பலமானது. அதன்பிறகு, சிஎன்என் போன்ற பிற ஊடகங்களும் ஈரானில் நடந்த கலவரங்கள் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு, கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு இந்த முயற்சியில் இணைந்தன. 

இஸ்லாமியப் புரட்சித் தலைவர் இஸ்பஹான் மக்களுடனான சந்திப்பில், “இஸ்லாமியக் குடியரசுடன் மேற்கத்திய நாடுகளும் திமிர்பிடித்த சக்திகளும் கொண்டுள்ள பிரச்சனைக்குக் காரணம், இஸ்லாமியக் குடியரசு சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவது தான். அது செழித்து வளர்கிறது. முழு உலகமும் இந்த முன்னேற்றத்தைக் கண்டு அதை ஒப்புக்கொண்டுள்ளது. இதை மேற்குலகால் சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் அதை பொறுத்துக்கொள்ள தயாராக இல்லை. அங்குதான் பிரச்சினை இருக்கிறது. நாம் எந்த முன்னேற்றமும் அடையாமல் இருந்திருந்தால், அப்பிராந்தியத்தில் வலுவான இருப்பை வெளிப்படுத்தத் தவறியிருந்தால், அமெரிக்கா மற்றும் திமிர்பிடித்த சக்திகளின் முன் நமது குரல் நடுங்கினால், அவர்களின் ஆக்ரோஷமான, நிர்ப்பந்தமான நடத்தையை ஏற்க நாங்கள் தயாராக இருந்திருந்தால், எம்மீது செலுத்தப்படும் அழுத்த குறைந்ததாக இருந்திருக்கும். நிச்சயமாக, அவர்கள் வந்து எங்களை ஆதிக்கம் செலுத்தியிருப்பார்கள், எனினும் குறைவான தடைகள் மற்றும் இந்த வகையான அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்திருக்கும்.

ஈரானின் அணு ஆயுதங்களை நோக்கி பயணிக்கிறது அல்லது பிராந்தியத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் ஈரானில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு அப்பாற்பட்டது என்பது இந்த அறிக்கைகளிலிருந்தும் தெளிவாகிறது. சவூதி அரேபியாவில் அல் சவூத் மற்றும் பஹ்ரைனில் அல் கலீஃபா, பாலஸ்தீனில் சியோனிச ஆட்சியின் இனச்சுத்திகரிப்பு மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் கண்காணிக்கப்படாமல் செல்லும் அந்த ஆட்சியின் அணு ஆயுதங்கள் ஆகியவற்றில் மேற்குலகின் இரட்டைத் தரநிலைகள் மிகத்தெளிவாக காணப்படுகின்றன.

புதிய நிர்வாகம் ஈரானில் பதவியேற்றது முதல், அது "செயல்திறன், ஆற்றல்மிக்க இராஜதந்திரம்" மற்றும் "அண்டை நாடுகளுடன் உறவு" கொள்கைகளை அதன் நிகழ்ச்சி நிரலில் வைத்துள்ளது. இந்த சில மாதங்களில், ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பல வர்த்தக, மூலோபாய ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாகியுள்ளன, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஈரான் மாறியுள்ளது, மேலும் ஈரானுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர வருகைகள் அதிகரித்துள்ளன. மேற்கின் கொள்கை ஈரானை "தனிமைப்படுத்துவது" என்றாலும், ஈரான் இப்போது அதன் அண்டை நாடுகளிடையே புதிய மூலோபாய பங்காளிகளைத் தேடுகிறது. அதே சமயம், ஈரான் மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறவும் இல்லை. இது இஸ்லாமிய குடியரசின் புதிய நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பாத கடுமையான நிர்வாகம் என்ற மேற்குலகின் பிரச்சாரம் பொய் என்பதை நிரூபித்துள்ளது. 

வெளியுறவுக் கொள்கை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஈரானின் நடவடிக்கைகள் மேற்கின் அனைத்து தத்துவார்த்த மற்றும் நடைமுறை முயற்சிகளுக்கும் எதிர் திசையில் உள்ளன. எனவே, ஈரானில் குழப்பத்தைத் தூண்டுவதற்கும் "பலவீனமான ஈரானை" உருவாக்குவதற்கும் அவர்களின் முழு முயற்சியையும் இந்த கட்டமைப்பில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. இப்போது, முன்னெப்போதையும் விட, உலகம் ஒரு புதிய ஒழுங்கிற்கு மாறுவதையும், மேற்கிலிருந்து கிழக்கிற்கு அதிகாரம் மாறி வருவதையும் உணர்ந்து வருகிறது. இந்த செயல்பாட்டில், ஈரான் செல்வாக்கு மிக்க பங்கை வகித்து வருகிறது. சிரியா, ஈராக் மற்றும் அமெரிக்கர்களின் கொல்லைப்புறத்தில் உள்ள வெனிசுலாவில் கூட மாறிவரும் சமன்பாடுகளில் இதற்கான எடுத்துக்காட்டுகளைக் காணலாம். எனவே, ஈரானை எதிர்கொள்வது என்பது சர்வதேச சக்தியின் மாறிவரும் வடிவவியலின் செயல்முறையின் வேகத்தை குறைந்தபட்சம் குறைப்பது மேற்கத்திய நாடுகளின் முக்கிய தந்திரங்களில் ஒன்றாகும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

https://english.khamenei.ir/news/9346/Islamic-Revolution-s-dynamism-has-triggered-maximum-aggression

No comments:

Post a Comment