Tuesday, June 18, 2024

அமெரிக்க முகமூடி கிழிந்தது, இஸ்ரேலுக்காக அமெரிக்கா தன்னைத் தானே சீரழிக்கிறது

The American mask is torn, America is degenerating itself  for Israel

- பேராசிரியர் ஹொசைன் அஸ்கரி

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் இஸ்ரேலிய நலன்களுக்காகவே சேவை செய்கிறார்கள், அமெரிக்க நலன்களுக்கு அல்லஜூலை 24 க்கு முன் அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்

அமெரிக்கா நீண்டகாலமாக இஸ்ரேலை ஆதரித்து வந்துள்ளது.: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள இஸ்ரேல் நாட்டிற்கு $320 பில்லியன் நிதி உதவியை நாங்கள் அனுப்பியுள்ளோம்; எங்களின் பெரும் அழிவுகரமான ஆயுதங்களை இஸ்ரேலுக்குக் கொடுத்துள்ளோம்; நாங்கள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்டோம் மற்றும் இஸ்ரேலை அதன் குற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், அதிகரித்து வரும் உலகளாவிய குற்றச் சாட்டு மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து பாதுகாக்கவும் ஐ.நா.விலும் மற்றும்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பலமுறை வீட்டோக்களை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு அரசியல் ஆதரவுடன் வழங்கினோம்; அச்சு, அலைக்கற்றைகள், இணையம் மற்றும் பொழுதுபோக்குத் துறை போன்றவற்றின் மூலம் இஸ்ரேலிய எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்காக நாங்கள் பெரும் ஊடக ஆதரவை வழங்கியுள்ளோம்.

இந்த அமோக ஆதரவிற்கான பொது நியாயம் என்னவென்றால், இஸ்ரேல் மத்திய கிழக்கின் ஒரே ஜனநாயகம் மற்றும் நமது தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று அமெரிக்கா கூறிவருகிறது. இந்த நியாயப்படுத்தல்கள் மிகவும் அபத்தமானவை, பல உலகளாவிய பார்வையாளர்கள் இஸ்ரேலை ஒரு இனவெறி நாடாக வகைப்படுத்துகிறார்கள், அந்தஸ்தைப் பொறுத்து வெவ்வேறு சட்டங்களைக் கொண்டே இஸ்ரேலிய யூதர்கள், இஸ்ரேலிய அரேபியர்கள் நடத்தப்படுவர். இஸ்ரேலியல்லாத அரேபியர்கள் இஷ்டப்படி துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது ரகசியமல்ல.

இன்று இஸ்ரேலுக்குள், பேச்சு சுதந்திரம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. பாலஸ்தீனியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பேசுபவர்கள் வெளிப்படையாகத் தண்டிக்கப்படுகிறார்கள்.

இஸ்ரேலை ஒரு உறுதியான அமெரிக்க நட்பு நாடாகவும் வகைப்படுத்த முடியாது - அது 1967 இல் (SS Liberty) எனும் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது, இத்தாக்குதல் காரணமாக 34 அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 171 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்,  ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு ஆதரவளிக்கவும் இஸ்ரேல் மறுத்தது, காஸா விடயத்திலும் எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்தது.

இஸ்ரேலுடனான எங்கள் பிரிக்க முடியாத பிணைப்பு, அதன் செயல்கள் எதுவாக இருந்தாலும், நமது தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. இஸ்ரேலுக்கான எங்களின் ஆதரவை உலகின் பெரும்பகுதியினர் கண்டிக்கின்றனர், குறிப்பாக இஸ்ரேலை ஒரு முரட்டு காலனித்துவ குடியேற்ற நாடாகக் கருதும் உலகளாவிய தெற்கு இஸ்ரேலுக்கு நாம் ஆதரவளிப்பதற்கு ஒரே நம்பகமான காரணம் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய லாபியின் பலம்தான் என்று நம்புகின்றனர்.

பல முறைகேடான அரபு ஆட்சியாளர்கள் பாலஸ்தீனிய மோதலையும், பாலஸ்தீன விடுதலை போராட்ட குழுக்களையும் எரிச்சலூட்டுபவையாகவும், தங்கள் ஆட்சிக்கு ஆபத்தாகவும் பார்க்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், அரேபிய பொதுமக்களும் உலகில் உள்ள இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் பெரும் பாலஸ்தீனிய ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த வருந்தத்தக்க நிகழ்வுகளில் இருந்து, இஸ்ரேலுக்கான நமது ஆதரவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் அமெரிக்காவிற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் அபாயத்தில் உள்ளது. ஆம், நாங்கள் 2,000 பவுண்டு பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் (bunker buster bombs) இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளோம், இவை 37.000 பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லவும் மற்றும் ஐ.நா மற்றும் பிற உதவி ஊழியர்களை கொல்லவும் இஸ்ரேலுக்கு உதவியது. இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோதமாக குடியேறிய யூதக் குடியேற்றக்காரர்களும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்று சிறையில் அடைத்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள காஸா மக்களுக்கு உணவு வழங்குவதையும் கூட இஸ்ரேல் தடை செய்துள்ளது, மேலும் பஞ்சம் நிலவி வரும் காஸாவில் கூடுதலான உணவு லாரிகளை அனுமதிக்கவும் அவற்றின் விநியோகத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்காவால் அதன் "நட்பு நாடான" இஸ்ரேலை வற்புறுத்த முடியவில்லை.

இவையனைத்தும் மனிதாபிமான பேரழிவாகும், இதற்கு உடந்தையாக அமெரிக்கா இருப்பதாக உலகின் பெரும்பாலான நாடுகளால்  கருதப்படுகிறது. சர்வதேச நீதிமன்றங்களில் நடந்தவை மற்றும் அவற்றுக்கான அமெரிக்காவின் விடையிருப்பு அமெரிக்காவிற்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலாவதாக, ஜனவரி 26, 2024 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ), காஸா படுகொலை தொடர்பாக தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியது. அனைத்து இனப்படுகொலை செயல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அது இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. பொதுவாக, இந்த தீர்ப்புக்கு அமைய இஸ்ரேல் காஸாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனினும் இந்த வழக்கு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது. இது சர்வதேச சட்டத்தின் ஆட்சிக்கு அமெரிக்காவின் அவமானகரமான எதிர்ப்பாகும். ஆம், அமெரிக்கா சட்டத்தின் ஆட்சியை நம்புவதாகக் கூறுகிறது, ஆனால் அதன் இஸ்ரேல் சார்பு நடவடிக்கை காரணமாக உலகின் பெரும்பாலானவர்களின் பார்வையில் பாரபட்சமாக இருக்கிறது. இது போலித்தனமானது, மேலும் அமெரிக்காவின் உலகளாவிய நிலையை கடுமையாக பாதிக்கிறது.

இரண்டாவதாக, மே 20, 2024 அன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் யஹ்யா சின்வார், இஸ்மாயில் ஹனியே (ஹமாஸ் அரசியல் தலைவர்) மற்றும் முகமது டெய்ஃப் (அல் காசிம் படைப்பிரிவின் தலைவர்) ஆகியோருக்கு கைது வாரண்டுகளை கோரினார்.

சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கும் ரோம் சட்டங்களில் அமெரிக்கா கையொப்பமிடவில்லை (இஸ்ரேலும் தான்) என்றாலும், புடின் போன்றவர்களுக்கான முந்தைய கைது வாரண்டுகளை அமெரிக்கா ஆதரித்து பாராட்டியுள்ளது, ஆனால் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் என்று வரும்போது அவ்வாறு செய்ய மறுக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் அதன் தலைமை வழக்கறிஞரை அச்சுறுத்துகிறது. அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் ICC யை பொருளாதாரத் தடைகள் விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளனர். சர்வதேச சட்டத்தை அமெரிக்கா எந்தளவு துச்சமாக மதிக்கிறது என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

இப்போது, ​​அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன், உலகெங்கிலும் உள்ள பலரால் போர்க் குற்றவாளியாகப் பார்க்கப்படும் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜூலை 24 அன்று சபையின் கூட்டு அமர்வில் உரையாற்ற அழைத்துள்ளார். இந்த மரியாதையானது மதிப்பிற்குரிய உலகளாவிய ஹீரோக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று. சில செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமர்வைத் பகிஸ்கரிக்கலாம் என்றாலும், நெதன்யாகு பலரின் கரவொலிகளுடன் கூடிய வரவேற்பைப் பெறுவார் என்பது நிச்சயம்.

இந்தக் காட்சியை உலகம் எப்படிப் பார்க்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆயிரக்கணக்கான அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் ஒரு போர்க்குற்றவாளியை அமெரிக்கா கண்ணியப்படுத்தி ஆதரிக்கிறதா, அவனைப் பாராட்டி உலகையே வியக்க வைக்கப் போகிறதா? இந்த அசிங்கம் நமது எதிரிகளால் உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் மற்றும் நமது தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் அவமானத்தையும் மற்றும் நீண்ட கால அழிவையும் கொண்டுவரும் என்பது திண்ணம்.

நாம் ஏன் நமது உலகளாவிய நிலையை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்? இதற்கு அமெரிக்காவில் இஸ்ரேலிய லாபியின் சக்திக்கு நாம் அடிபணிந்துள்ளோம் என்பது மட்டுமே தகுந்த விளக்கமாக இருக்க முடியும்.

இஸ்ரேல் தனது வெறித்தனத்தைத் தொடர்ந்தால், அமெரிக்கா வழங்கிவரும் ஆயுதங்களுடனும் மற்றும் அரசியல் ஆதரவுடன் நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளை நாங்கள் ஆதரித்தால், ICJ மற்றும் ICC மீதான எங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தால், ஜூலை 24 அன்று எங்கள் சாத்தியமான காதல் விழாவை நாம் முன்னெடுத்தால், நிச்சயமாக வரும் அமெரிக்க தலைமுறை ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டி நேரிடும் என்பது திண்ணம்.

ஹொசைன் அஸ்கரி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான உயர் பேராசிரியர் ஆவார்.

https://www.tehrantimes.com/news/499986/American-lawmakers-are-serving-Israeli-interests-and-not-America-s

Thursday, June 13, 2024

ஹஜ் என்பது ஓர் உல்லாச பயணமல்ல - இமாம் கொமெய்னி (ரஹ்)

Hajj is not a leisure journey - Imam Khomeini (RA)

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்த புனித யாத்திரையின் உண்மை நோக்கம் என்ன என்பதையும் ஹஜ்ஜை நிலைநிறுத்த தங்கள் பொருள் மற்றும் ஆன்மீக வாழ்வின் ஒரு பகுதியை ஏன் செலவிட வேண்டும் என்பதையும் கண்டறிவதாகும்.

இவற்றை ஆய்ந்தறியாத நபர்களால் அல்லது பக்கச்சார்பான ஆய்வாளர்களால் இதுவரை ஹஜ் யாத்திரையின் தத்துவமாக வரையப்பட்டிருப்பது என்னவென்றால், இது ஒரு கூட்டு வழிபாடு மற்றும் ஒரு யாத்திரையுடனான ஒரு சுற்றுலா பயணம்.

ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு புனித போராட்டத்தில் ஈடுபட வேண்டும், முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றுக்கும் ஹஜ் யாத்திரைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்களின் உரிமைகளையும், அடக்கி ஆள்பவரிடமிருந்து நலிந்தவர்களையும் பாதுகாப்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்கள் மீது செலுத்தப்படும் உளரீதியான மற்றும் உடல்ரீதியான  அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது...? முஸ்லிம்கள் தங்களை ஒரு பெரிய சக்தியாகவும், மூன்றாவது உலகளாவிய சக்தியாகவும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஹஜ் யாத்திரைக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா...? மாறாக, ஹஜ் யாத்திரை என்பது 'கஃபா' மற்றும் மதீனா நகரத்தைப் பார்வையிடும் ஒரு பயணமாக மட்டுமே இருக்க வேண்டுமா...? போன்ற கேள்விகள் எம்முள் எழ வேண்டும்.

வரலாறு முழுவதும் இஸ்லாமிய சமூகங்களின் உணர்வுகளை மழுங்கடித்து, அவர்களை கட்டிப்போட்டுள்ள ஆபத்துகளில் ஒன்று ஹஜ் யாத்திரையின் யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் அந்த உபரிகளையே ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகும்.

இவர்களால் கொடுக்கப்படும் இந்த தவறான விளக்கங்கள் இந்த வழிபாட்டுச் செயலின் யதார்த்தங்கள், போதனைகள் மற்றும் ஞான அறிவு ஆகியவற்றை அறியாமையுடன் கலக்கச் செய்து முஸ்லிம்களில் மந்தநிலை, மூடநம்பிக்கை போன்றவற்றை ஏற்படுத்தி அவர்களில் உள்ள மாற்றத்தை உருவாக்கும் திறனை பயன்படுத்த விடாது, பின்தங்கியிருக்க காரணமாகின்றன.

ஹஜ் எனும் இந்த முக்கியமான இஸ்லாமிய கடமையின் போது  அனைத்து முஸ்லிம்களையும் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டி, ஒரு பாரிய இஸ்லாமிய மாநாட்டு வடிவத்தில், சமூக மற்றும் அரசியல் விளைவுகளை உணரச் செய்ய பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு சுற்றுலா பயணம் போல் கருதச் செய்துள்ளனர்.

முஸ்லிம்களை மகிழ்விக்கவும், களிப்புறச் செய்யவும், அங்குள்ள  கட்டிடங்கள் மற்றும் மக்களைப் பார்த்துவிட்டு, விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பவும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் ஹஜ் யாத்திரை செய்ய வேண்டும் என்றா இஸ்லாம் கோருகிறது...?

இமாம் கொமெய்னி அவர்களின் பார்வையில், ஹஜ் தொடர்பான இந்த தவறான விளக்கங்கள் இரண்டு குழுக்களால் முன்வைக்கப்பட்டு தொடர்கின்றன.

முதல் குழு, அறியாமையில் உள்ளவர்கள்: இஸ்லாமிய சமூகங்களின் உண்மையான தேவை தொடர்பான புரிதலும் அறிவும் இல்லாத காரணத்தால், ஹஜ் யாத்திரையை சில இடங்களை தரிசிப்பதற்காகவும் மற்றும் அதன் முக்கியத்துவத்தை சில சடங்குகளுக்குள் சுருக்கி, வரையறுத்து கட்டுப்படுத்துகிறார்கள். இவர்களது இந்த அறியாமை, புனித ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதனால் ஏற்படுத்தக்கூடிய சமூக மற்றும் அரசியல் தாக்கத்தையும் அதன் கருத்தியல் மற்றும் ஆன்மீக நோக்கங்களுடன் புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.

இரண்டாவது குழு தமது பொருளாதார மற்றும் அரசியல் நலன் காரணங்களுக்காக ஹஜ் யாத்திரையை பயன்படுத்த முயற்சிக்கும் பக்கச்சார்பான ஆய்வாளர்கள் ஆகும். இந்த குழு யாத்ரீகர்கள்  ஹஜ்ஜின் உண்மையான நலன்களையும் அபிலாஷைகளையும் அடையவிடாது, அல்லது விரும்பிய மற்றும் வளமான முறையில் அதன் தாத்பரியத்தை  உணரவிடாது இந்த மாபெரும் இறை வழிபாட்டை அவர்கள் தங்கள் மார்க்கப் பிரிவினரின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப விளக்குகிறார்கள். இந்த ஆய்வாளர்கள், இன்றும்கூட, மதத்தின் பெயரில் இஸ்லாமிய போர்வை போர்த்திக்கொண்டு, பொதுமக்களின் கருத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் பின்னர் ஹஜ் யாத்திரையின் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை எதிர்க்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதே நபர்கள்தான். இன்றும், அவர்கள் காலத்தின் கட்டாயமான முஸ்லிம் ஒற்றுமையை எதிர்ப்பவர்களாகவும் இஸ்லாமிய பிரிவுகளின் அடிப்படை நெருக்கத்தை மறைப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தான் புனித ஹஜ்ஜை சடங்குகளுக்கு முடக்கி சில இடங்களை தரிசிக்கும் பொழுதுபோக்கு பயணம் போல் நம்பச் செய்துள்ளார்கள்.

இந்த இரு குழுக்களும் நம்பமுடியாத அனுமானங்களையும் விளக்கங்களையும் வழங்குவதன் மூலம், ஹஜ் யாத்திரைக்கும் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற கூற்றை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இவர்களுக்கு முஸ்லிம்கள் உலகளாவிய அதிகாரத்தை அடைவதோ, திமிர்பிடித்த உலக சக்திகளுக்கு எதிரான புனித போராட்டத்தில் ஈடுபடுவதோ அல்லது தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதோ அவசியமில்லை. அவர்களின் பார்வையில், இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகளுக்கு எதிராக போராடுவது ஒரு தவறான செயலாகும்.

உண்மையான ஹஜ் யாத்திரையில் மறைந்திருக்கும் உண்மைகள்

ஹஜ் யாத்திரைக்கு கொடுக்கப்பட்டு வரும் மேற்கூறப்பட்ட  தவறான விளக்கங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரித்த உடனேயே, இமாம் கொமெய்னி இந்த மாபெரும் வழிபாட்டின் மகத்துவம் பற்றி குறிப்பிடுகிறார்:

"... ஹஜ் யாத்திரை என்பது மனிதர்கள் நெருங்கி வந்து கஃபா எனும் புனித இல்லத்தின் உரிமையாளனுடன் இணைவதுதான் ... மேலும் ஹஜ் யாத்திரை என்பது வெறுமனே கிரியைகள், சம்பிரதாயங்கள் மற்றும் ஜெப சொற்களின் தொடர் அல்ல. ஒரு நபர் இறைவனை சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் இறுகிய இயக்கம் போன்றவற்றின் ஊடாக அடைவதில்லை. தெய்வீக போதனைகளின் மையத்தில் ஹஜ் யாத்திரை உள்ளது. அதில் இருந்து இஸ்லாத்தின் கொள்கையின் உள்ளடக்கத்தை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நாம் தேட வேண்டும். ஹஜ் யாத்திரை என்பது பொருள் மற்றும் எண்ணங்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு முக்கிய கடமையாகும்; மேலும் அது ஒரு நபரில் மற்றும் உலகில் அன்பை உருவாக்கும் ஒரு முழுமையான சமூக வாழ்க்கையின் அனைத்து காட்சிகளின் வெளிப்பாடும் ஆகும்.

இன்னும் ஹஜ் யாத்திரையில் உள்ளவை உண்மை வாழ்க்கையுடன் தொடர்புபட்ட  சடங்குகளாகும்... மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் "உம்மா" எனும் உலகளாவிய சமூக சபையுடன் இணைவதற்கு, எந்தவொரு இனத்திலிருந்தும் தேசத்திலிருந்தும் வந்தபோதும், இப்ராஹிம் (அலை) அவர்களின் “கவ்ம்” எனும் வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆகவே, "உம்மா" என்ற ஒன்றுபட்ட சக்தியாக மாறி, இந்த ஏகத்துவ வாழ்க்கையின் பயனை அடைவதற்கு ஹஜ் யாத்திரை எம்மை தயார் படுத்துகிறது, அதற்கான பயிற்சியை வழங்குகிறது. அதற்கான ஒத்திகையே இந்த புனித கடமையாகும்.

ஹஜ் யாத்திரை என்பது குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்களின் பொருள் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் மற்றும் திறன்களை பிரதிபலிக்கும் அற்புத காட்சி; மேலும் அது அனைவரும் பயனடையக்கூடிய ஆசீர்வதிக்கப்பட்ட குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

சன்மார்க்க சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய தேசமான "உம்மா" வின் நிலையினை நன்கு அறிந்தவர்கள் ஹஜ்ஜின் கடமையில் புதைந்து கிடைக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களை அடைந்துகொள்வதற்கு, ஞானக் கடலில் மூழ்கவேண்டும், சுழியோட வேண்டும். அவ்வாறன்றி அவற்றை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

ஹஜ் யாத்திரையின் தத்துவம் மற்றும் விளைவுகள் பற்றி  இந்த விளக்கங்களில், இமாம் கொமெய்னி (ரஹ்) விவரிக்கிறார். இந்த பெரிய இறை வழிபாட்டுச் செயலையும் அதன் விளைவுகள் மற்றும் அறுவடைகளின் மகத்துவத்தையும் இலகுவான, புரியும் மொழியில்  தெளிவுபடுத்துகின்றார்.

உண்மையான ஹஜ் யாத்திரையை விளக்கிய பின்னர், இமாம் கொமெய்னி (ரஹ்) மகத்தான சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்ட இந்த மாபெரும் வழிபாட்டுச் செயல் எவ்வாறு அதன் இயல்பு தன்மையில் இருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளது, வெறும் சரித்திர கதையாக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார்.

புனித குர்ஆனில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை நாம் புரியாதுள்ளது போன்றே ஹஜ்ஜின் தாத்பரியங்களையும்  அறியாதிருக்கிறோம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

உயிர்த்துடிப்புள்ள குர்’ஆன் வசனங்களின் அர்த்தத்தை எந்தளவு மறைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஹஜ்ஜின் மகத்துவமும் வக்கிர சிந்தனையின் மண்ணின் கீழ் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது ...

புனித குர்ஆனின் வழிகாட்டுதல், வாழ்வொழுங்கு மற்றும் வாழ்க்கையை உருவாக்கும் தத்துவத்தின் மொழி எவ்வாறு திகில், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மொழியாக தரம் குறைக்கப்பட்டுள்ளதோ, ஹஜ் யாத்திரை அதே கதியை அனுபவிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது…

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவுக்குச் சென்று, இஸ்லாத்தின் புனித ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் மற்றும் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள்  கால்தடங்களில் கால் பதிக்கின்றனர். இருப்பினும், இப்ராஹிம் (அலை) யார், முகமது (ஸல்) யார், அவர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் நோக்கம் மற்றும் குறிக்கோள் என்ன; அவர்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நாம் கேள்வியெழுப்புவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.

நிச்சயமாக, ஒர் உயிர் துடிப்பற்ற ஹஜ், இயக்கம் அற்ற ஹஜ், ஒற்றுமையை வெளிப்படுத்தாத ஹஜ் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளை அழிக்க அழைப்பு விடுக்காத ஹஜ் உண்மையான ஹஜ் யாத்திரை அல்ல.

சுருக்கமாக கூறின், அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியங்களின்பால் கவனம் செலுத்த வேண்டும், குர்ஆன் போதனைகளை வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் இவை இரண்டும் உயிரோட்டம் பெற வேண்டும்.

ஹஜ் யாத்திரையின் சரியான மற்றும் உண்மையான தத்துவத்தை, விளக்கங்களை முன்வைப்பதன் மூலம், ஆஸ்த்தான ஆலிம்களின், மத அறிஞர்களின் தன்னிச்சையான அனைத்து மூடநம்பிக்கைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிதைவுகளிலிருந்து விடுபட வேண்டும்.

குர்ஆன் உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கை புத்தகம் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் மட்டுமல்ல, இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் நியதிகள் மற்றும் கொள்கைகளுடன் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். அதன் போதனைகளின் உலகளாவிய தன்மையையும், வாழ்க்கையை உருவாக்கும் நியதிகளையும் கொண்ட சத்தியத்தின் சிறந்த புத்தகமான குர்ஆன் இன்று மரணித்தவர்கள் ஆன்மாக்களுக்கான பாராயண புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது பெரும் கவலைக்குரிய விடயமாகும். அதுபோல் இந்த மகத்தான ஹஜ் கடமையில் இருந்து சமூக மற்றும் அரசியல் தத்துவங்கள் தூரப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த வேதனையையும் துக்கத்தையும் தெரிவித்திருந்தார்கள்.