Sunday, November 12, 2023

சியோனிஸ்ட் மற்றும் அமெரிக்க கிரிமினல் தலைவர்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் ஒரு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவ வேண்டும் - இப்ராஹிம் ரயீஸி

The speech of Dr. Ebrahim Raisi president of Islamic Republic of Iran at the joint meeting of the OIC and Arab League regarding Gaza:

காஸா தொடர்பாக ஓ.ஐ.சி மற்றும் அரபு லீக்கின் கூட்டுக் கூட்டத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் டாக்டர் இப்ராஹிம் ரயீஸி 2023 நவம்பர் 11 அன்று ஆற்றிய உரை

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற காஸா பிரச்சினையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அரபு லீக் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சையத் இப்ராஹிம் ரயீஸி, சமீபத்திய வாரங்களில் சியோனிச ஆட்சியின் குற்றங்கள் ஒழுக்கம், சட்டம் மற்றும் மனிதநேயத்திற்கு ஒரு வரலாற்று அவமானம் என்று குறிப்பிட்டார். அத்துடன் இந்த குற்றங்களில் அமெரிக்காவின் முக்கிய பங்கையும் எடுத்துக்கூறினார். பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களின்
பிரச்சினையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பொறுப்பை நினைவூட்டுவதுடன், 10 அவசரத் தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை முன்மொழிந்தார்:

§ பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பொறுப்பை நினைவூட்டுவது,

§  "காசா மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துதல்" உட்பட,

§  "காசாவின் மனித முற்றுகையை முழுமையாக நீக்குதல்",

§  "இந்த பிராந்தியத்தில் இருந்து சியோனிச ஆட்சியின் உடனடி இராணுவ விலகல்",

§  "இஸ்லாமிய நாடுகளால் சியோனிச ஆட்சியுடனான எந்தவொரு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளையும் முறித்தல்",

§  "ம்சியோனிஸ்ட் மற்றும் அமெரிக்க கிரிமினல் தலைவர்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் ஒரு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவுதல்",

§  "இஸ்லாமிய நாடுகளின் ஒப்புதலுடன் காஸாவின் உடனடி புனரமைப்புக்கான சிறப்பு நிதியத்தை நிறுவுதல்"

§  "இஸ்லாமிய நாடுகளில் இருந்து பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புதல்"

மகத்துவமிக்க குத்ஸ் மீது ஸலாம் உண்டாவதாக, காஸா மீதும் அதன் குழந்தைகள் மீதும் சாந்தி உண்டாவதாக, பாலஸ்தீனத்தின் மீதும் அதன் அநியாயமாக சிந்திய இரத்தத்தின் மீதும் அமைதி உண்டாவதாக, மனித மரியாதையின் அளவுகோலாக உள்ள பாலஸ்தீனம் மற்றும் இன்று, பாலஸ்தீனம் இஸ்லாமிய மற்றும் லெபனானின் புனித போராட்டத்தின் மீது அருள் உண்டாவதாக

சபை தலைவர் அவர்களே,

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அரபு லீக்கின் இந்த முக்கியமான கூட்டு உச்சிமாநாட்டை பிராந்தியத்தின்  தற்போதைய சூழ்நிலை= மற்றும் முக்கியமான காலகட்டத்தில் ஏற்பாடு செய்து நடத்தியதற்காக சவூதி அரசாங்கத்திற்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று, இந்த அவசர உச்சிமாநாட்டில், இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான பாலஸ்தீன பிரச்சினை, மனித வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றாக மாறியிருக்கும் வீரமிக்க காஸா மக்கள் பொறுமை ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க, இவற்றுக்கு தீர்வாக வரலாற்று மற்றும் சங்கடமான முடிவுகளை எடுக்க நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.

இஸ்லாமிய உலகின் அனைத்து பிரச்சினைகளும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் தீர்க்கப்படக்கூடியவை. சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வும் அவனது பரிபூரண சக்தியையும் நம்புவதும், இஸ்லாமிய உலகின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை நம்புவதும் இஸ்லாமிய உம்மத்தைக் காப்பாற்றுவதற்கான வழியாகும், மேலும் எம்மைக் கட்டுப்படுத்தும் மற்றும் மேலாதிக்க சக்திகளை நம்பக்கூடாது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு நல்ல அண்டை நாடுகள் மற்றும் நல்லிணக்கக் கொள்கையைப் பின்பற்றி, அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் சகோதரத்துவம் மற்றும் நட்புக்கான கதவுகளைத் திறந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்கள் விடுத்த கூக்குரலுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று நாம் இங்கு கூடியுள்ளோம்,

இன்று அல்லாஹ்வும் அவனுடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களுமே பாலஸ்தீன தேசத்திற்கு ஆறுதலைத் தருவோராக இருக்கின்றார்கள்.

இன்று இஸ்லாத்தின் நபிகள் நாயகம் தம் உம்மத்திடம் எதிர்பார்ப்பது என்ன? இன்று, இஸ்லாமிய தேசம் அதன் தலைவர்களிடமிருந்தும் அரசாங்கங்களிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கிறது?

என் ஈமானிய சகோதரர்களே!

இன்று சத்தியத்திற்கும் சத்தியத்திற்கும் இடையிலான மோதலின் நாள், இஸ்ரேல் எனும் இட்டுக்கட்டப்பட்ட நிறுவனம் நம் காலத்தின் பிர்அவ்னின் சின்னமாகவும் மற்றும் பூமியில் வாழும் அப்பாவிகளைக் கொல்லும் ஒரு சின்னமாக உள்ளது. மேலும் இந்த நாள் கூர் வாளை செங்குருதி வெற்றிகொண்ட நாள். உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் வலுவான ஆர்ப்பாட்டங்கள் பாலஸ்தீனிய பிரச்சினை அவர்களின் இதயங்களில் இருப்பதைக் குறிக்கிறது,

கடந்த 5 வாரங்களில் காஸா முனையில் நடந்தேறிவரும் சம்பவங்கள் வெட்கக்கேடானது மற்றும் ஒழுக்கம், நியாயம் மற்றும் மனிதநேயத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வரலாற்று அவமானமுமாகும்.

அனைத்து சர்வதேச விதிகளையும் மீறி, இனப்படுகொலையை நோக்கமாகக் கொண்டு கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி காஸா முனை மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கி, காஸா பகுதியின் பாதியை இடிபாடுகளின் மலையாக மாற்றியது. இன்று வரை, 11,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடிபாடுகளின் கீழ் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மருத்துவ ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் கொல்லப்படுவதும், மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சும் இந்த கொடூரமான குற்றங்களின் ஒரு பகுதியாகும். மிக மோசமான விஷயம் என்னவென்றால், சியோனிச ஆட்சியின் முற்றுகை காரணமாக மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்டவர்களின் பல உயிர்கள் இழக்கப்படலாம்.

காஸா முனையில் நடந்துவரும் நிகழ்வுகள் சத்தியத்திற்கு சத்தியத்திற்கும் இடையிலான மோதலாகும், மேலும் ஒவ்வொருவரும் இதில் எந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்க அரசாங்கம் இந்த அநியாயத்தில் பங்கேற்கும் முக்கிய குற்றவாளி மற்றும் சியோனிச ஆட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இன்றளவிலும் உடந்தையாக உள்ளது.

இஸ்ரேல் அமெரிக்காவின் முறைகேடான குழந்தை. ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளின் புனித வாழ்க்கையை விட அமெரிக்கா இந்த அரக்கர்களை ஆதரிப்பதையே விரும்புகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக தனது பாதுகாப்பு அமைச்சரவையை அமைத்ததன் மூலம், காஸாவின் ஆதரவற்ற மக்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சியோனிச ஆட்சியை அமெரிக்கா ஊக்குவித்தது மேலும் அதை சட்டபூர்வமான பாதுகாப்பு என்றும் அழைத்தது.

பாலஸ்தீனியர்களின் உரிமைகளை தொடர்ந்து மீறும் ஆக்கிரமிப்புப் படைகளின் அத்துமீறல்களை 'சட்டபூர்வமான பாதுகாப்பு' என கோருவது வரலாற்றின் கசப்பான பதிவுகளில் ஒன்றாகும், இது எந்தவொரு ஸ்தாபிக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் சர்வதேச தரங்களுடனும் ஒத்துப்போகவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்க போர்க்கப்பல் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டதானது, இஸ்ரேல் சார்பாக நேரடியாக அது போரில் நுழைந்தது என்பதையே காட்டுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சியோனிச ஆட்சிக்கு முழு ஆதரவும், காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடுப்பதும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமெரிக்காவின் மற்றொரு சேவையாகும், இது முன்னெப்போதையும் விட அதிகமாக போர்க்குற்றங்களை செய்ய அவர்களை அனுமதித்தது.

அமெரிக்காவின் மற்றொரு நடவடிக்கை சியோனிச ஆட்சிக்கு அனைத்து வகையான கொடிய ஆயுதங்களையும் வழங்கி ஆதரிப்பதும், இந்த ஆட்சியின் இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பில் உள்ள இஸ்ரேலின் ஆயுத கிடங்குகளை நிரப்புவதும் ஆகும். சியோனிச ஆட்சியின் போர் இயந்திரமும் அதன் எரிபொருளும் அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை. தினசரி கனரக ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன, சியோனிச எதிரி இதுவரை ஹிரோஷிமா குற்றத்தின் அளவில் ஏழு அணுகுண்டுகளுக்கு சமமான குண்டுகளை காஸா மக்கள் மீது வீசியுள்ளனர். அமெரிக்கா இக்குற்றத்தில் பங்கெடுத்துள்ளது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது., அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சர்வதேச அமைப்புகளால் கடுமையான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட வேண்டும்.

மிகவும் அழிவுகரமான பாத்திரம் அமெரிக்காவின் பாத்திரம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் பிற இஸ்லாமிய நாடுகள் உட்பட உலகில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பொறுப்புக்கூற வேண்டும். ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உலகை கட்டுப்படுத்தி, அனைத்து சர்வதேச அமைப்புகளையும் வளைத்துப்போடுவதன் மூலம் அமெரிக்கா இந்தப் போர்களைத் தூண்டுகிறது.

மதிப்பிற்குரிய இஸ்லாமிய அரசுகளே..!

இப்போது அமெரிக்காவின் செல்வாக்கின் கீழ் உள்ள சர்வதேச சபைகள் முடிவெடுக்கும் இயலாமை, தைரியமின்மை மற்றும் அடையாளமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாமே களம் இறங்க வேண்டும்.

பாலஸ்தீனத்தை விடுவிக்கும் எதிர்ப்பு போராட்டத்தை ஒரு விடுதலை இயக்கமாக ஈரான் இஸ்லாமியக் குடியரசு கருதுகிறது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். மேலும் காஸா பகுதி மக்களை கட்டாயமாக இடம்பெயர்க்கும் கொள்கையானது மீறல்களின் தொடர்ச்சியும் போர்க்குற்றமுமாகும். மஸ்ஜித் அல்-அக்ஸா மற்றும் பிற புனித இடங்களைப் பாதுகாப்பது ஒரு முக்கிய தேவையாகும்.

கடந்த ஆண்டுகளில் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விடயம் இப்போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களிடமிருந்து கேட்கிறது, மேலும் காஸா மக்களுடன் ஒருமைப்பாட்டைக் காட்டிய அனைத்து மக்களுக்கும் நான் இதன் மூலம் நன்றி கூறுகிறேன். இன்று காஸாவில் இஸ்ரேல் இழைத்துவரும் குற்றங்கள் உலக மக்கள் விழிப்புணர்வடைய ஒரு காரணம். எமது கவனம் இன்று மற்றொரு தலைப்பில் செலுத்தப்பட வேண்டும், இது இஸ்ரேலின் அணு ஆயுத பிரயோக அச்சுறுத்தல். உலகில் குழந்தைகளைக் கொல்வதை சட்டப்பூர்வமாக்கும் ஒரே இனவெறி ஆட்சியான இந்த சியோனிச ஆட்சி எந்த ஒரு சர்வதேச அமைப்பின் மேற்பார்வையிலும் இல்லை, மேலும் அணுகுண்டுகளை காட்டி அப்பாவி மக்களை அச்சுறுத்துகிறது.

பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாப்பதில் இஸ்லாமிய வீரர்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளனர், இது இஸ்லாமிய உம்மாவின் விழிப்புணர்வின் விளைவாகும் மற்றும் சியோனிச எதிரியின் ஆக்கிரமிப்பு, அதை ஆதரிக்கும் திமிர் பிடித்த நாடுகளின் மேலாதிக்கம் மற்றும் ஆணவத்தை எதிர்கொண்ட 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களின் விளைவாகும்.

  • காஸாவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தியாகிகள் மீது சாந்தி உண்டாவதாக.
  • காஸா அருகே திருக்குர்ஆனில் தஞ்சம் புகுந்து அதன் வசனங்களை ஓதுகின்ற குழந்தைகள் மீது ஸலாம் உண்டாவதாக.
  • அநீதி, பயம், அச்சுறுத்தல் ஆகியவற்றால் நடுங்கும் குழந்தைகள் மீது சாந்தி உண்டாவதாக.
  • காஸா முனையில் உள்ள என் அன்புக் குழந்தைகள் மீது ஸலாம் உண்டாவதாக
  • மிகவும் முன்னேறிய உலகளாவிய இராணுவங்கள் மற்றும் பூமியில் மிகவும் தீங்கிழைக்கும் மக்கள் மத்தியில் ஈமான் உறுதியின் மூலம் எதிர்ப்பிற்கு அர்த்தமளித்த உங்கள் மீது அமைதி உண்டாவதாக.
  • ஆக்கிரமிக்கும் சியோனிஸ்டுகளின் காட்டுமிராண்டித்தனத்தையும் மிருக வெறியையும் காட்டிய சிறிய கைகள் மற்றும் மெல்லிய உடல்கள் மீது சாந்தி உண்டாவதாக.
  • உனது இரத்தக் கறை படிந்த முகங்களும், சிதைந்த உடல்களும், அமெரிக்க குண்டுகளின் இடிபாடுகளுக்கு அடியில் உடைந்த எலும்புகளும், உனது உறுதியை உரக்கச் சொல்கின்றன.

எதிர்காலம் போராட்டத்திற்கு சொந்தமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, உண்மையான ஹீரோ நீங்கள் தான், உறுதியான மக்களே, நாங்கள் உங்களை கைவிட மாட்டோம். பாலஸ்தீனம் நிச்சயம் வெற்றி பெறும்.

அல்-குத்ஸ் நம்முடையது, வெற்றி நம்முடையது.

அல்லாஹ்வின் சாந்தியும், கருணையும், ஆசீர்வாதமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

---------------------------------------------------------------------

தமிழில்: தாஹா முஸம்மில் 


No comments:

Post a Comment