Saturday, March 4, 2023

பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படாத ஐந்து இரவுகளில் ஒன்று "பராஅத்"

 The 15th of Sha’ban - A Night for Asking Forgiveness

ஷாப்-ஏ-பராஅத், பராஅத் இரவு, செராக்--பராஅத், பராஅத் காண்டிலி, அல்லது நிஸ்பு ஷ'பான் ஷாப்-ஏ-பராஅத் என அழைக்கப்படும் ஷ'பான் 15 ஆம் இரவு பல தெற்காசிய, மத்திய ஆசிய, தென்கிழக்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் ஒரு கலாச்சார நிகழ்ச்சியாகும். ஷ'பான் மாதம், இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமாகும். இவ்வருடம் பராஅத் இரவு இலங்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய் கிழமை சூரிய அஸ்தமனதில் இருந்து தொடங்குகிறது.

நாம் இப்போது அருள்மிகு ரமழான் மாத்திற்கு முந்திய ஷ'பான் மாதத்தில் இருக்கின்றோம். இந்த மாதமானது ரசூலுல்லாஹ் சந்திரனைப் பிளந்து அற்புதத்தை செய்து காட்டிய மாதம், தொழுகையின் போது முன்னோக்கும் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து புனித க'பாவிற்கு மாற்றப்பட்ட மாதம், "இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்" إِنَّ ٱللَّهَ وَمَلاَئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّ يٰأَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً என்ற குர் ஆன் வசனம் இறங்கிய மாதம் போன்ற பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஷா'பான் மாதத்திலேயே ஜைனப் பின்த் அலியின் பிறப்பு, ஹுசைன் இப்னு அலியின் பிறப்பு, அப்பாஸ் இப்னு அலியின் பிறப்பு, அலி இபின் ஹுசைன் ஸைன் அல்-அபிதின் பிறப்பு, அலி அல்-அக்பர் இபின் ஹுசைனின் பிறப்பு, காசிம் இப்னு ஹசனின் பிறப்பு, ருக்கையா பின்த் ஹுசைனின் பிறப்பு ஆகியவை நிகழ்ந்தன. லைலத்-அல்-பராஅத்தும் இம்மாத நடுப்பகுதியிலேயே வருகிறது.

ஆகவே முஸ்லிம்களான நாம் அனைவரும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும் அவரின் புனித குடும்பத்தவர் மீதும் அதிகமதிகம் ஸலவாத் சொல்லி இவ்விரவை சிறப்புறச் செய்வோம்.

எமது ஷீஆ சகோதரர்களின் கூற்றுப்படி, இறுதி இமாமான முஹம்மது அல்-மஹ்தி (அலை) 15 ஷபான் அன்று பிறந்தார். ஷியாக்கள் அந்த நாளில் முஹம்மது அல்-மஹ்தி (அலை)யின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் மற்றும் முஹம்மது அல்-மஹ்தி (அலை)விரைவாக தோன்றுவதற்கான பிரார்த்தனைகள், நோன்பு மற்றும் வழிபாடு போன்ற மதச் செயல்களைச் செய்கிறார்கள். ஈரானிய நகரங்கள் மத்திய ஷபானின் இரவில் அலங்கரிக்கப்பட்டு மக்கள் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இந்த ஆண்டு மார்ச் 7, 2023 (மக்ரிப் தொடக்கம்) லைலத் அல்-பராஅஹ், லைலத் அல்-நிஸ்ஃப் மின் ஷபான் மற்றும் ஷப்-இ-பராஅத் என்றும் குறிப்பிடப்படும் ஷாபானின் 15-ஆம் தேதி இரவு அனுஷ்டிக்கப்படும்.

ஷ’பானின் 15வது இரவின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் மத்தியில் விவாதப் பொருளாக இருந்தபோதிலும் சிலர் இந்த இரவை சிறப்புத் தொழுகைகளுடன் அனுஷ்டித்து, மறுநாள் நோன்பு நோற்கிறார்கள்,

ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் 15வது ஷ’பான் பற்றிய ஹதீஸ்களை ஸஹீஹ் மற்றும் ஹஸன் எனக் கருதும் அதேவேளை மற்றும் சில ஆய்வாளர்கள் அதை ழஈப் என்று கருதுகின்றனர். இருப்பினும், பலவீனம் கடுமையாக இல்லாததாலும், இந்த இரவின் அறம் சகல அறிஞர்களாலும் வணக்க வழிபாடுகளுக்காக பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கின்றது அவ்விரவை அனுஷ்டித்தல் சிறந்தது என்பதுவே பொதுவான கருத்தாகும்.

ஷாபானின் 15 வது இரவின் சிறப்பைப் பற்றி பல ஹதீஸ்களும் அறிவிப்புகளும் உள்ளன, இந்த இரவு சில நல்லொழுக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்று இப்னு தைமியா (ரஹ்) கூறுகிறார், இதுவே இந்த இரவு தொடர்பான அறிஞர்களின் கருத்தாகும்.

எனவே 15வது ஷ’பானின் சிசேட தன்மை என்ன, அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்:

அல்லாஹ் சுபுஹானஹு வ த'ஆலா தனது அடியார்களின்  பாவங்களை இந்த இரவில் மன்னிக்கிறான்

இந்த இரவின் முக்கிய ஆசீர்வாதம் என்னவென்றால், அல்லாஹ் தனது கருணையையும் மன்னிப்பையும் மக்ரிப் முதல் ஃபஜ்ர் வரை பூமியில் சொறிகின்றான். இத்தினம் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிப்பின் அளவை பல வசனங்களில் நிச்சயப்படுத்தி விவரித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஷ’பானின் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தனது படைப்பை உற்று நோக்குகிறான், பின்னர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் மற்றும் தங்கள் சக முஸ்லிம்களிடம் வெறுப்பு கொண்ட இரண்டு வகையான மக்களைத் தவிர மற்ற அனைத்து நல்லடியார்களை மன்னிப்பான்: [முஸ்னத் அஹ்மத்]

வேறு சில ஹதீஸ்களில் மன்னிக்கப்படாத நபர்களில் உறவினர் உடனான உறவுகளைத் துண்டித்தவர்கள் மற்றும் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள் உட்பட இன்னும் பல வகையானவர்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மு'மின்களின் அன்னை ஹஸரத் ஆயிஷா (ரலி) பின்வருமாறு கூறுகின்றார்:  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இரவில் நீண்ட நேரம் சஜ்தாவில் தரித்திருப்பார்கள், அவர் (மரணித்துவிட்டார்களோ) என்று பயந்து, அவர் இன்னும் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரது பாதத்தைத் சுரண்டியதாகவும் அப்போது ரஸூலுல்லாஹி (ஸல்) தனது பாதத்தை அசைத்து, பின்வரும் துஆவை ஓதுவதை கேட்டதாக குறிப்பிடுகின்றார்.

யா அல்லாஹ், உனது கோபத்திலிருந்து பாதுகாப்பை வேண்டுகிறேன், உனது மகிழ்ச்சியை நாடுகிறேன், உனது தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு உனது மன்னிப்பிலும் நான் பாதுகாவல் தேடுகிறேன். என்னால் உன்னை போதுமான அளவு புகழ முடியாது. நீ உன்னைப் புகழ்ந்தபடியே இருக்கிறாய்.

குறிப்பு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷபான் 15 ஆம் நாள் இரவு தொழுகையின் போது ஸஜ்தாவிலும், வித்ர் தொழுகைக்குப் பின்னரும் இந்த துஆவை ஓதுவார்கள் என்று கூறப்படும் இந்த ஹதீஸ் இமாம் பைஹக்கீ தொகுப்பில் உள்ளது, அறிஞர்களால் சஹீ என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள், "அல்லாஹ் ஷ’பானின் நடு இரவில் அடி வானத்திற்கு இறங்குகிறான், மேலும் அவன் பனூ கல்பின் (அரபு இனத்தைச் சேர்ந்த) பெரிய செம்மறி ஆடுகளின் ரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக (அதிக எண்ணிக்கையிலான பாவங்களை) மன்னிக்கிறான். [இப்னு மாஜா மற்றும் பலர்]

"ஷபான் 15 ஆம் தேதி, இரவில் விழிப்பு-தொழுகையைக் கடைப்பிடிக்கவும், பகலில் நோன்பு நோற்கவும் (பரிந்துரைக்கின்றேன்), ஏனென்றால் அல்லாஹ் அந்தி வேளையில் இருந்து விடியற்காலை சூரியன் உதிக்கும் வரை அருகிலுள்ள வானத்திற்கு இறங்குகிறான்: நான் அவரை மன்னிப்பதற்காக எவராவது மன்னிப்பு தேடுகிறார்களா? நான் அவருக்கு வழங்குவதற்காக எவராவது வாழ்வாதாரம் தேடுகிறார்களா? நான் அவரைக் காப்பாற்றுவதற்காக எவராவது இன்னல்களை எதிர்கொள்கிறார்களா? (அறிவிப்பவர் இமாம் இப்னு மாஜா).

எனவே, ஷ’பானின் 15வது இரவில் மன்னிப்புக்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள். உங்கள் இறை தியானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள், குறிப்பாக அல்லாஹ்விடம் மன்னிப்பு, கருணை, துன்பத்திலிருந்து நிவாரணம் மற்றும் வாழ்வாதாரங்களை அதிகரிக்கக் கேளுங்கள். நீங்கள் வெறுப்பு கொண்டுள்ளவர்களை மன்னியுங்கள், குறிப்பாக அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவர்களுடன் உங்கள் பிணக்குகளை, தீர்க்க மறவாதீர்கள், அல்லாஹ் நிச்சயமாக உங்களை மன்னிப்பான் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.

மேலும், ஷ’பானின் போது நமது நபிலான நோன்புகளை அதிகரிப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்து வரும் விடயமாகும், ஏனெனில் அல்லாஹ்விடம் நற்செயல்கள் உயர்த்தப்படும் மாதம் இது:

பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படாத ஐந்து இரவுகள்: வெள்ளிக்கிழமை இரவு (வியாழன் இரவு), ரஜப் மாதத்தின் முதல் இரவு, நிஸ்ஃபு ஷபானின் (15 ஆம் இரவு), இரண்டு ஈத் இரவுகள் - ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அல்ஹா). என்று இமாம் அல்-பைஹகி விவரிக்கின்றார்.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் றஸூலுல்லஹ்விடம் 'நீங்கள் ஷ'பான் மாதத்தைப் போல் வேறு எந்த மாதத்திலும்  இந்தளவு நோன்பிருப்பதைக் கண்டதில்லை' என்று சொன்னதற்கு ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்

ரஜப் மற்றும் ரமலான் மாதங்களுக்கு இடையே (வரும் இம்மாதம்) மக்கள் (அறியாமையால்) புறக்கணிக்கும் மாதம் இது. இது இறைவனிடம் செயல்களை உயர்த்தும் மாதமாகும், மேலும் நான் நோன்பிருக்கும் போது (எனது நற்செயல்கள்) உயர்த்தபடுவதை விரும்புகிறேன்என்று கூறினார்கள். - (அன்-நஸயீ)

இந்த இரவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகள்

இருப்பினும், அதன் ஆசீர்வாதங்களிலிருந்து பயனடைய இந்த இரவில் நீங்கள் நஃப்ல் (தன்னார்வ) தொழுகைகளை இன்னும் அதிகமாக செய்யலாம். ‘இறையச்சம் கொண்ட சில முன்னோர்கள் இந்த இரவை (ஷாபான் 15ஆம் நாள்) தொழுகைக்காக சிறப்பாக அர்ப்பணித்தனர்', என்று இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.

எனவே, இந்த இரவில் நமது இபாதத்தை அதிகரிக்கவும், அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் கோருவதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த இரவில் அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்காக, நமது சக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அல்லது குரோதம் போன்றவற்றை நம் இதயங்களிலிருந்து அகற்றவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள்: ஷஃபான் என்பது நமது வருடாந்திர செயல்களை அல்லாஹ்விடம் உயர்த்தும் மாதம் - மேலும் ஷபான் 15 ஆம் தேதி பராஅத் இரவு நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நாம் ரமழானுக்குள் நுழைவதற்கான சரியான வாய்ப்பாகும், இன் ஷா அல்லாஹ்!

ரமலான் மாதத்தில் நமது வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், நமது பேரன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாகக் காட்டியபடி, இந்த ஷ’பான் மாதத்தில் பாவமன்னிப்பு கோரல் மற்றும் வணக்க வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று நமது அறிஞர்கள் நினைவூட்டியுள்ளனர்.

இந்த இரவின் அருட்கொடைகளை அல்லாஹ் நமக்கு பூரணமாக வழங்குவானாக. அவன் எம்முடைய பாவங்களை மன்னித்து, எமது வாழ்வாதார வசதிகளை அதிகப்படுத்தி, கஷ்டங்களிலிருந்து நம்மை விடுவிக்க பிரார்த்திப்போம். அல்லாஹ் ஷ'அபானில் நம்மை ஆசீர்வதித்து ரமழானை அடைய உதவுவானாக, ஆமீன்.

- தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment