Saturday, June 15, 2019

அலி-சதர் எனும் அற்புத நீர் குகை

Ali Sadr and Katale Khor Caves

அலி-சதர் எனும் அற்புத நீர் குகை உலகின் மிகப்பெரிய நீர் குகை ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உல்லாச பிரயாணிகளை ஈர்க்கிறது.  

மேற்கு ஈரானின் ஹமதானுக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அலி சதர் கபுடராஹங் மாகாணத்தில் அலி சதர் கிராமத்தின் தெற்கு பகுதியில் இந்த குகை அமைந்துள்ளது.  

ஹமதான் போன்ற பெரிய நகரங்களுக்கு அருகாமையில் குகை அமைந்து இருப்பதால், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படும் இடமாகும்.

அலி சத்ர் உலகின் மிகப்பெரிய நீர் குகை ஆகும், குகைக்குள் ஒரு படகில் சென்று பார்வை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'சாரி கியே' என்ற மலையின் ஒரு பகுதியில் இந்த குகைக்கு செல்லும்  நுழைவாயில் அமைந்துள்ளது.  

இம்மலையில் இதுபோன்ற இன்னும் இரண்டு குகைகள் அமைந்துள்ளன. அதிலொன்று அலிசாத்ர் குகையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'சரப்' குகையாகும், மற்றது 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'சவ்பாஷி'  ஆகும். அலிசத்ர் குகைக்கான நீர் 'சரப்' குகையில் இருந்து ஊற்றெடுப்பதாக நம்பப்படுகிறது.

அலி சதர் குகை ஹமதான், தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய பெரிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது என்பதால், இது ஈரானிய பிரயாணிகள் பிரபலமான தரிப்பிடமாக அமைகிறது.

2001ம் ஆண்டில்  அலிஸத்ர் குகையை ஆய்வு செய்த ஜெர்மன் / பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் அது 11 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது என்று கண்டறிந்தனர். இந்த குகைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இக்குகையின் பிரதான அறை 100 மீட்டர் 50 மீட்டர் மற்றும் 40 மீட்டர் உயரம் கொண்டது. இது பல பெரிய, ஆழமான ஏரிகளைக் கொண்டுள்ளது.

குகையின் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கலைப்படைப்புகளையும் மட்பாண்டங்களையும் குடங்கள் மற்றும் குவளைகளையும் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தன.  

விலங்குகள், வேட்டை காட்சிகள் மற்றும் வில் மற்றும் அம்புகள் போன்றவற்றின் சித்தரிப்புகள் குகையில் இருந்து வெளியேறும் பிரிவின் சுவர்களில் காணக்கூடியதாக உள்ளன.  

இந்த சித்திரங்கள் பழங்கால மனிதன் இக் குகைகளை தங்களது வாழ்விடமாகப் பயன்படுத்தியுள்ளதை சான்று பகர்கின்றன.  

டேரியஸ் I (கிமு 521-485) ஆட்சிக் காலத்திலேயே இந்த குகை அறியப்பட்டுள்ளது என்பதை இந்த சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள ஒரு பழைய கல்வெட்டு மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இருப்பினும், ஈரானிய மலையேறுபவர்களால் 1963 இல் கண்டுபிடிக்கப்படும் வரை, 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த குகை இருப்பதைப் பற்றிய அறிவு எவ்வாறு இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

அலிசாத்ர் குகைக்குள் இறங்குமிட நுழைவாயில் கீழிறங்கி செல்வதற்கான இயற்கையான படிக்கட்டுகளால்  அமைந்துள்ளது.  பிரயாணிகள் வசதிக்காக கான்கிரீட்டினால் ஆன நடைபாதை  ஒன்றும் தேநீர் மற்றும் சிற்றுண்டி சாலையும் இப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குகைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இரு நுழைவாயில்களிலிருந்தும் வரும் நடைபாதைகள் அலிசத்ர் குகையின் நீர் நிரம்பிய பத்திகளின் தொடக்கத்தில் இணைகின்றன. அங்கு தான் குகை வழியாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு துறையும் அமைந்துள்ளது.

இதற்குள் இயந்திர படகுகள் அனுமதிக்கப்படுவதில்லை. சுற்றுலாப் பயணிகள் 'பெட்லோஸ்' எனப்படும் பிளாஸ்டிக்கினால் ஆன மிதி உந்து மற்றும் துடுப்பு படகுகளில் குகை வழியாக, பயிற்றப்பட்டோரால் வழிநடத்தப்படுகிறார்கள்.

அலி சத்ர் குகை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கட்டாலே கோர் நீர் குகை
கட்டாலே கோர் என்பது ஈரானின் சன்ஜான் மாகாணத்தில் அமைந்துள்ள அலிசாத்ர் போன்ற நீர் ஒரு குகையாகும்.  

இது சன்ஜான் நகரிலிருந்து தெற்கே 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. (தெஹ்ரானில் இருந்து சுமார் 410 கிமீ).  

கட்டாலே கோர் என்ற பெயர் "சூரிய மலை" என்று பொருள்படும். 1984 இல் புவியியல் ஆய்வுகள் இதன் உருவாக்கம் ஜுராசிக் காலத்திற்கு முந்தியது என்பதைக் காட்டியது. இந்த குகை ஹமதான் மாகாணத்தில் அமைந்துள்ள அலி சதர் குகையுடன், எதோ ஒரு வகையில் இணைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கட்டாலே கோர் குகைசன்ஜானின் மலைகளில் மறைக்கப்பட்ட சொர்க்கம் எனலாம்.

சன்ஜான் மாகாணத்தில் அமைந்துள்ள 'கட்டாலே கோர்' குகையானது ஈரானில் மிகவும் பிரமிப்பூட்டும் குகைகளில் ஒன்றாகும். அடுக்கடுக்காக அமைந்துள்ள குகை உருவாக்கம், ஏராளமான படிங்கள் அதனை எழில்கொஞ்சும் இயற்கையாக ஆக்கியுள்ளது. இவற்றின் அடிப்படையில் மிகவும் அழகான குகை எனக் 'கட்டாலே கோர்' குகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment