Wednesday, February 27, 2019

குர்'ஆன் வழங்கும் மனித உரிமைகள்

Holy Qur'an and Human Rights




உலகம் முழுவதும் வாழும் சுமார் இரண்டு பில்லியன் அளவிலான  முஸ்லிம்களின் வாழ்வில் புனித குர்ஆன் மையஸ்தானத்தில் இருக்கின்றது.

அதே நேரம் முஸ்லிம்கள் தம் வாழ்வின் ஆதாரமாகக் கருதும் இந்தக் குர்ஆனை, உலகில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிக்கும் ஒரு நூலாக காட்டுவதற்கு நூற்றாண்டு காலமாக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். கடந்த நூற்றாண்டில் இந்தப்பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

மனித உரிமை மீறலில் மிக மோசமான மீறல் என்னவென்றால் மக்களை அடிமைப்படுத்துவதாகும். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய மக்களை கொடுங்கோலன் ஷாவிடம் இருந்து விடுவித்து, அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் என்னவென்று உணரச்செய்தார் மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள். இறைவன் அருளால் ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக, இஸ்லாமிய மனங்கமழும் உன்னத காற்றை சுவாசிக்கின்றனர்.

'இஸ்லாத்தை இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக எழுவதற்கு  முடியாதவாறு முதுகெலும்பை முறித்துவிட்டோம்' என்று எண்ணியிருந்த காலனித்துவ சக்திகள் ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தலைமையில் வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு கண்டு அச்சம் கொள்ளத் தொடங்கின.

இஸ்லாமிய நாடுகளில் தங்களது முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மன்னர்களும் அமீர்களும் ஷேக்குகளும் சுல்தான்களும் வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிந்திக்கும் இந்த சக்திகள் கதிகலங்கி போயுள்ளன.

உலகின் வளங்கள் அனைத்தும் வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம் என்ற வெளிப்படையான ரகசிய திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி வரும் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவினாலும், உலகின் சக்தி வளங்களை பாரிய அளவில் கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆட்சி அதிகாரம் தம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஈரானில் ஏற்பட்டதுபோன்ற ஓர் இஸ்லாமிய புரட்சி சவுதியிலும் ஏற்படுமாயின், அவ்விரு நாடுகளும் கொள்கையளவில் ஒன்றுபடுமாயின், அதன் விளைவு என்னவாய் இருக்கும் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கவும் முடியாது. இதன் காரணமாகவே இவ்விரு இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றையொன்று பகைக்கும் நாடுகளாக எப்போதும் வைத்திருக்கும் முயற்சியில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தீவிரமாக இறங்கியுள்ளன.


"ஷீஆக்களை எதிர்ப்பதற்கு தீவிரவாத சுன்னிகளுக்கு அமேரிக்காவும் சுன்னிகளை எதிர்ப்பதற்கு தீவிரவாத ஷீஆக்களுக்கு பிரிட்டனும் உதவி வருகின்றன" என்று இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் பலமுறை கூறியுள்ளார். 

இவர்களது இந்த பிரித்தாளும் கொள்கையினை வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் உணரத்தலைப்பட்டுள்ளது. இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய உயிரோட்டமுள்ள மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் எதிரிகளும் அறிவர். இவர்களது துர்பிரச்சாரங்களையும் மீறி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியுள்ளதானது இவர்களை இன்னும் கிலிகொள்ளச் செய்துள்ளது.

இஸ்லாம் மூர்க்கத்தனமானது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது; அது மனித உரிமையினை மதிக்காத மதம் என்றெல்லாம் தொடர்ச்ச்சியாக இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை ஆராய்ந்து, அதன் பொய்த்தன்மையை உணர்ந்த மக்களே இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாகும்.
இஸ்லாம் மூர்க்கத்தனமானதா? பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதா? அது மனித உரிமையினை மதிக்காத மதமா? என்பதை குர்ஆன் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

புனித குர் ஆனை ஆராய்பவர்கள் அது உலக மக்களை இயற்கை நியதிக்கு முரணான பாரம்பரியம், சர்வாதிகாரம், பழங்குடிவாதம், இனவெறி, பாலியல் அடிமைத்தனம் போன்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, மனிதனை உண்மையான சுதந்திரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதை அறிந்துகொள்வர்.

புனித குர் ஆன் அனைத்து மனிதர்கர்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. இந்த உரிமைகள் அனைத்தும் மனிதம் என்பதில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இவற்றை மறுப்பதென்பது அல்லது அவற்றை மீறுவதென்பது மனிதத்தை மதியாதிருப்பதற்கு ஒப்பாகும்.

இஸ்லாம் என்பது தூய்மையான, மிகப் பரந்த, இயற்கையுடன் இணைந்து செல்லக்கூடிய உன்னத மார்க்கம். ஆதி மனிதர் ஹஸரத் ஆதம் (அலை) தொடக்கம் இறுதி நாள் வரை அதுவே இயற்கை மார்க்கம். காலத்துக்குக் காலம் சட்டங்கள் மாறலாம் ஆனால் மார்க்கத்தின் இலக்கு மாறுவதில்லை.

இறைவன் மனிதர்களுக்கு சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளான். ஆனால், தமது கருத்து மட்டுமே சரியானது, அதையே சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவோ அல்லது அக்கருத்தை மற்றவர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கவோ எவருக்கும் உரிமைக் கிடையாது.

"நீங்கள் சிந்திக்க வேண்டாமா..?," "ஆராய வேண்டாமா...?" என்று அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து புனித குர்'ஆன் மூலம் சிந்தனையைத் தூண்டி விடுகின்றான்.

ஆக, ஒருவரின் கருத்துச் சொல்லும் உரிமையை மதிக்க வேண்டும். அக்கருத்தை சிலர் ஏற்றுக் கொள்ளலாம், சிலர் நிராகரிக்கலாம்; இது அவரவர் சுதந்திரம்.

குர் ஆன் வழங்கும் இந்த உரிமைகள் அனைத்துமே மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது. (53/42) என்ற குறிப்பிட்ட ஓரிலக்கை நோக்கியே மனிதனை நகர்த்துகின்றன. 

"குர்ஆனின் நோக்கில், இறைவன் மனிதனை படைக்கையிலேயே இந்த உரிமைகளை வழங்கிவிட்டான். ஆக அந்த உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டவையாகும். இந்த உரிமைகள் மனிதர்களிடம் உள்ள உள்ளார்ந்த திறமைகளை பயன்படுத்தி, வளங்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மட்டுமல்லாமல், இறைவனின் விருப்பத்துக்கமைய மனிதன் வாழ்வது எவ்வாறு என்றும் மரணிப்பது எவ்வாறு என்றும் கற்றுத்தருகிறான்", என்று லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் றிபாத் ஹசன் குறிப்பிடுகின்றார்.

"மேலும், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட உரிமைகளை ஆட்சியாளரோ அல்லது மனிதனால் அமைக்கப்பட்ட அமைப்போ அகற்ற முடியாது. மற்றும் இந்த மாறுபடாத நித்திய உரிமைகள் மனிதனால் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இறைவன் எதனையும் தக்க காரணம் இன்றி படைக்கவில்லை. இறைவனின் செயல்கள் அனைத்துக்கும் நியாமான நோக்கம் இருக்கின்றது" என்று பேராசிரியர் றிபாத் ஹசன் மேலும் தெரிவிக்கின்றார்.

பின்வரும் புனித குர்ஆன் வசனங்கள் அடிப்படை மனித உரிமையினை இஸ்லாம் எந்தளவு உயர்வாகக் கருதுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

உயிர்வாழும் உரிமை

மனித உயிரின் புனிதமும் அதனது முழுமையான மதிப்பும்  குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்…..” (5/32)
 “….. அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான். (6/151)

சுயமரியாதைக்கான உரிமை

மனிதர்கள் கண்ணியத்துக்குரியவர்கள், ஏனென்றால் எல்லா படைப்புகளிலும், அவர்கள் மட்டுமே இறைவன் வழங்கிய பொறுப்பை சுமக்க முன்வந்தார்கள்.

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன; அதைப் பற்றி அவை அஞ்சின; ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்..." (33/72)
“(நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.) (அல்-குர்ஆன் 17:70).

மனிதன், எல்லாவற்றுக்கும் மேலாக, ஏனைய படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபடுகின்ற பகுத்தறிவைக் கொண்டிருப்பதால், அவன் சுதந்திரமாக சிந்திக்கக்கூடியவனாக இருக்கின்றான். சர்வ வல்லமையுள்ள இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

இறைவன் வானவர்களை நோக்கி “…. நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறினான்…..” (2/30)
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவனின் தீய செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. (95/4-6)

மனிதர்களால் சிந்திக்க முடியும்; சரி எது, பிழை எது என்று அவர்களால் பகுத்தறிய முடியும்; நல்லதை தெரிந்து தீயதை தவிர்க்க முடியும். தவறு செய்பவனாயினும் ஒருநாள் தம் தவறை உணர்ந்து திருந்தக்கூடிய வாய்ப்பு அவனுக்குண்டு. ஒரு கைதியாயினும் அவனை மிருகத்தனமாக நடத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. எனவே, மனிதன் (பூமியில் இறைவனின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவன் என்பதன் காரணமாக) எல்லா சந்தர்ப்பங்களிலும் மனித கண்ணியத்துக்கு உரியவனாவான்.

நீதிக்கான உரிமை.

எல்லா சந்தர்ப்பங்களிலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. நீதி கோரும் உரிமையினை எவராலும் மறுக்க முடியாது. பாரபட்சமின்றி, நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள் என்று என்று குர்ஆன் அழுத்தமாக வலியுறுத்துகிறது:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.” (5/8)
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (4/135)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16/90)

நீதி விசாரணையின்போது, இரண்டு தரப்பினரின் கூற்றுகளும், எந்த பாரபட்சமும் இன்றி, சமமாக கருதப்பட வேண்டும்.

நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.” (2/177)

- தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment