Jalaluddin Rumi
ஜலாலுத்தீன் முகம்மது
பல்கி என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் பரவலாக மௌலானா ரூமி என்றும்
அறியப்படுபவர் 1207ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 30ம் திகதி பாரசீக சாம்ராஜ்ஜியத்துக்கு
உட்பட்ட கொராஸான் மாகாணத்தின் போல்க் பிரதேசத்தில் பிறந்தார். இவர் பாரசீக
மொழியில் “இறைவனுக்காக பணியாற்றுபவர்” என்ற பொருள்கொண்ட 'மௌலவி'
என்றும்
அழைக்கப்படுகின்றார்.
அவரின் தந்தையார்
பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க சூபி ஞானியாகத் திகழ்ந்தார்கள். போல்கின் பெரும்
பகுதி அப்போது பாரசீக கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக சூபிசம்
வளர்ந்து, வேரூன்றியிருந்தது.
சூபிசம் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்கு பெரும்
பங்குண்டு.
மௌலானா அவர்களுக்கு 11
வயதாக இருந்தபோது, அடிக்கடி நிகழ்ந்த மங்கோலிய படையெடுப்புகளின் காரணமாக அவரது
குடும்பம் கொராஸானை விட்டு வெளியேறி, பக்தாதுக்கும் மக்காவுக்கும் டமஸ்கஸுக்கும் குடிபெயர்ந்து, சில ஆண்டுகளில் துருக்கியில் உள்ள கொன்யா
பிரதேசத்தின் 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறி, நீண்ட காலம் அங்கேயே வாழ்ந்துவந்தது. இதன்
காரணமாக அவர் ' மௌலானா ரூமி' என்று அழைக்கப்பட்டார்.
ரூமி, அக்காலத்தில் ஏனைய முஸ்லிம்கள் போலவே அரபுமொழி, குர்ஆன்,
இறையியல், சட்டம்,
அஹதீத் (நபி முஹம்மத் (ஸல்) நபிமொழிகள்), வரலாறு, தத்துவம்,
கணிதம் மற்றும் வானியல்
ஆகியவற்றை கற்றுவந்தார்கள்.
அவர் மற்றும் அவரது தந்தை
இருவரும் குர்ஆனின் வெளிப்பாடுகளில் உறுதியான விசுவாசிகளாக இருந்தனர், ஆனால் அந்த காலகட்டத்தில்
குர்'ஆனின் உள்ளார்ந்த அர்த்தங்களில் கவனம் கொள்ளாது, வெளிவாரியான அர்த்தத்தில் மட்டும் கவனம் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு
வந்த சடங்கு சம்பிரதாயங்களை விமர்சித்துவந்தனர். குருட்டுத்தனமான பின்பற்றலையும்
எதிர்த்து வந்தனர். இவர்களது ஆரம்ப கால கவிதைகள், இது தொடர்பாக, மக்களை விழிப்பூட்டுவதாக அமைந்திருந்தன.
அவரது தந்தையின்
மரணத்தின் போது, அவர் ஒரு சிறந்த கல்விமானாகி, 24 வயதில் நாட்டின் மிக உயர்ந்த அறிஞர்களில் ஒருவராக தனது தந்தையைப்போன்று
அந்தஸ்தில் உயர்ந்தார். தனது நேரத்தை கற்பித்தல் மற்றும் பொது மக்களுக்கு மார்க்க விரிவுரைகளை வழங்குவதில் செலவிட்டார். 35
வயது வரை அவரது வாழ்க்கை இவ்வாறே கழிந்தது.
1244 ஆம் ஆண்டில், ரூமி, ஷம்ஸ் என்று (அல்லது ஷாம்ஸி தப்ரிஸி) என்று அழைக்கப்பட்ட
ஒரு சூபி ஞானியை சந்தித்தார். இவர்கள் இருவரும் வெகு சீக்கிரமே உற்ற நண்பர்களாக
ஆயினர். அப்போது ரூமி, ஷம்ஸிடம் எதோ ஒரு விசேட
தன்மை இருப்பதை அறிந்துகொண்டார். அதன் பிறகு ரூமியினது வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது. அதிகமதிகம் தனிமையை விரும்பினார்; சமூகத்தில் இருந்து ஒதுங்கலானார்; முன்பு போன்று வாத விவாதங்களில் கலந்துகொள்வதையும்
தவிர்த்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgemMOO50xmq88NCWsFywvlZIEXEQpYPMoqfbQXRN8XtiQ1nbXXfFlWmV7TRrJVBABnkBZL4zpyu7tV2aTQxkW7w79T_Fb_oQfD36bUE4zGr6cqykdTfvbhpqyMxKHDxhfaBpZmYcElGS2n/s400/Rumi.jpg)
இந்த நூல் 40,000-க்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த "கஸல்" கவிதைகள், வெளித்தோற்றத்தில், ஷம்ஸ் தப்ரிசியை விளித்துப் பாடப்பட்டது போன்று
தோன்றினாலும் உண்மையில் அவை இறை காதலை விவரிக்கும் கவிதைகளாக இருப்பதை உணர்ந்துகொள்வது
கடினமல்ல. இது பாரசீக மொழியில் எழுதப்பட்ட மற்றும் பாரசீக இலக்கியத்தின்
மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இதனை "திவானே கபீர்" என்றுமழைப்பர். இதன்
மூலப்பிரதியில், பல்வேறு வடிவங்களில் 44,282 கவிதை வரிகள் உள்ளன. ரூமியின் படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே
எழுதப்பட்டிருக்கின்றன,
ஆனால் சில சமயங்களில்
அவர் துருக்கிய, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
ஜலாலுத்தீன் ரூமி மீது ஷாம்ஸி
தப்ரிஸி தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது வாஸ்த்தவமே என்றாலும், அவர் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த பற்று,
இறை காதலாக பிரவாகிக்க ஷம்ஸ் ஒரு தூண்டுகோலாய்
இருந்துள்ளார் என்பதுவே உண்மை. அதுவே ரூமியின் உள்ளிருந்து ஆத்மாவாக வெளிவந்தது.
ரூமி அரிதாகவே தனது சொந்த
கவிதைகளை எழுதினார். அவரின் மற்றுமொரு புகழ்பெற்ற படைப்பான “மஸ்னவி”யில் உள்ள ஆறு கவிதை
புனைவை, அவர் பாடப்பாட அவரது மாணவர் ஹுசாம் சுலாபியை எழுதப் பணித்தார்.
ரூமி கவிதை வரிகளை,
நடனம் ஆடுவதுபோன்று சுழன்று சுழன்று வரும்
நிலையிலேயே பாடுவார். இந்த நடனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பினை ஏற்படுத்துவதாக
நம்பப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijqUyj0MgPbuFWWQnS1DoKXm_LvHPkzNdIZpzbGwiMo_y5QiybOTav5ZaQVO4_baQ1bYYtv_M0AwrlEXmAR0CJYuuGdBxHR4-8ZbPRlkBfoLYKEFiEBeFJRXELzZ6XFt5tLfdrwa6p3qRt/s320/Rum.jpeg)
அவரது கவிதைகளின் கருத்தாழத்தை
அறியவேண்டுமாயின் நவீன பாரசீக மொழியில் சிறந்த அறிவுடன் இறைத் தூதரின் வாழ்க்கை மற்றும் குர்'ஆணிய போதனை ஆகியவற்றில் நன்கு பரிச்சயம் உடையோரால் மட்டுமே
முடியும்.
A.J. Arberry தன்னுடைய 'Rumi,
Poet and Mystic' என்ற புத்தகத்தில் ரூமி
பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
"மௌலானா ரூமி பாரஸீகத்து
மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த
காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே
பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே
தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம்,
மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக
உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள
ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர்.
"
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி
அவர்களின் கவிதைகள் உலகின் அனைத்து பிரதான மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
என்பதும் யுனெஸ்கோ 2007ம் ஆண்டை ரூமி ஆண்டாக
பிரகடனப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கத்து.
ரூமியின் கவிதை தொடர்ச்சியான ஆன்மீக அனுபவங்களின் தொடர் - இயற்கை அழகின் பிரதிபலிப்பு, ஒரு பாடல், ஒரு நடனம், ஒரு சிந்தனை, ஓர் உணர்வு ... நம்மை மனிதனாக உருவாக்கும் எதையும், திறந்த அல்லது மூடிய கண்களூடாக பார்க்க முடிகின்ற ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கிறது.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment