Sri Lankan-Iran relations and the Middle East - the Iranian official explanation.
An interview with Dr. Hosain Amirabdullahian
இலங்கை-ஈரான் தொடர்பு மற்றும் மத்தியகிழக்கு நிலை - ஈரானிய அதிகாரி விளக்கம்.
An interview with Dr. Hosain Amirabdullahian
இலங்கை-ஈரான் தொடர்பு மற்றும் மத்தியகிழக்கு நிலை - ஈரானிய அதிகாரி விளக்கம்.
- இலங்கையின் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஈரான் நிதியுதவி வழங்கி வருகின்றது
- இன்னும் ஒரு சில வருடங்களில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
- முப்பது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சமாக இருந்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை இன்று 45 இலட்சமாக உள்ளது.
- எமது விஞ்ஞானிகளில் அநேகரின் சராசரி வயது 27
- பொருளாதாரத்தடைகள் இன்னுமின்னும் எம்மை வலுவடையச் செய்யும்
சந்திப்பு: தாஹா முஸம்மில் - முஸ்டீன் இஸ்மாயீல்
மத்தியகிழக்குக்கான முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் சபாநாயகரின் சர்வதேச விவகாரத்துக்கான தற்போதையை சிரேஷ்ட ஆலோசகருமான டாக்டர் ஹொசைன் அமீரப்துல்லாஹியான் உடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இச்சந்திப்பு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. எமது கேள்விகள் அனைத்துக்கும் மிகவும் விரிவாக பதிலளித்தார் அதன் சுருக்கமான தொகுப்பே இதுவாகும்.
இலங்கை விஜயத்துக்கான நோக்கம்

மத்தியகிழக்கின் தற்போதைய நிலை
மத்தியகிழக்கின் தற்போதைய பிரச்சினைகளுக்கான மூல காரணம் அமெரிக்காவும் இஸ்ரேலும் என்பது பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயம். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இவர்கள் அநாவசியமாக தலையிடுவதினாலேயே மத்தியகிழக்கு இன்று கொந்தளிப்பு நிலையில் இருக்கிறது. அத்தகையதொரு கொந்தளிப்பு நிலை அவர்களுக்கும் அவசியமாகவுள்ளது. அமெரிக்க சியோனிச அழுத்தங்கள் வெறுமனே மேலோட்டமாகப் பார்க்கமுடியாதவை. ஏனெனில் அதன் செயற்பாடுகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் பலவிடயங்கள் மிகவும் ஆபத்தானவை.
சிரியாவில் இவர்களது திட்டம் படு பயங்கரமானது. உலகெங்குமுள்ள தீவிர எண்ணம் கொண்ட முஸ்லீம் இளைஞர்களை சிரியாவில் ஒன்று திரட்டி, அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவதே இவர்களது நோக்கமாகும். அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற தற்போதைய ஊடகந்தான் ISIS. இது போன்று அவர்களுடைய தேவைக்கேற்ப பல்வேறுபயங்கரவாதக் குழுக்களை உருவாக்குவார்கள். அதன் மூலம் அவர்கள் அடைய நினைப்பதை அடைந்துகொள்ள முயற்சிப்பார்கள். ஆப்ஃகானிஸ்தானில் இவர்கள் செய்துவரும் அதே செயல்முறைதான் இங்கும் செய்யப்படுகின்றது. இவர்களது சதிவலையில் சவூதி அரேபியாவும் சிக்கியுள்ளது துரதிர்ஷ்டமாகும்.
இந்த சியோனிஸ்ட்டுகளின் நோக்கம் சிரியாவுடன் நின்றுவிடப் போவதில்லை; எதிர்காலத்தில் அது சவுதியிலுமும் பாதகமான பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் இவர்களுக்கு எத்தனையோ முறை எடுத்துக்கூறியுள்ளோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் நேரடியாக மிகத் தெளிவாக அதைப் பற்றி அறிவுறுத்தியிருக்கின்றேன். ஏனோ தெரியவில்லை அவர்கள் ஒருவித முரட்டுப்பிடிவாதத்துடன் இருக்கின்றனர். ஆயினும் சவூதி அரேபியாவை எப்போதும் நாம் எமது சகோதர முஸ்லீம் நாடாகவே கருதுகிறோம். அதற்குப் பாதகம் ஏற்படுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை.
யெமன் விவகாரத்திலும் நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினோம்; யெமனின் உள்நாட்டு பிரச்சினையில் நாம் தலையிட வேண்டியதில்லை, அவர்கள் அதனை தீர்த்துக்கொள்ள விடுங்கள் என்று எடுத்துக்கூறினோம். அரசியல் முரண்பாடுகளை ஒரு போதும் இராணுவ நடவடிக்கையால் தீர்த்து வைக்க முடியாது என்றும் இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வாகாது என்றும் மிகவும் வலியுறுத்தினோம். எமது ஆலோசனையிலோ பேச்சிலோ அவர்கள் கரிசனை கொள்ளவில்லை, மாற்றமாகக் கோபப்பட்டார்கள்; 'அரபுக்கள் விடயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகின்றீர்கள்' என்ற அடிப்படையில் பகிரங்கமாக, மிகக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். அப்போது நீங்கள் பெருந் தவறொன்றைச் செய்யப் போகின்றீர்கள் என்று முன்கூட்டியே எச்சரித்தோம். அதைக் கூட கண்டுகொள்ளாமல் அதற்கு அவர்கள் அளித்த பதில் 'நாம் மூன்று வாரங்களில் யெமன் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டிவிடுவோம்' என்பதுதான். பின்னர் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை ஆரம்பித்தார்கள் ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது? இப்போது மூன்றாண்டுகளாகிவிட்டன, எந்த முடிவையும் இதுவரைக் காணவில்லை.
எகிப்து ஒரு முஸ்லிம் நாடு அத்துடன் எமக்கு மிகவும் முக்கியமான நாடும் கூட. அதனுடன் நாம் நெருங்கிய உறவைப் பேணவே விரும்புகிறோம். எகிப்திய மக்கள் உணர்வுபூர்வமாக எம்மை விரும்புவோராக இருக்கின்றனர். இப்போதுள்ள அரசாங்கம் மக்கள் மனம் வைத்துத் தேர்வு செய்தது அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அதனால் வலுவான உறவு தற்போதைய நிலையில் இல்லை. ஆனால் ஜனாதிபதியாக முர்சி இருந்த காலத்தில் மிக நெருக்கமான உறவு பேணப்பட்டிருந்தது. பலஸ்தீன் விவகாரத்தில் எமது நிலைப்பாட்டை அவர்களை மிகவும் மதிக்கின்றனர்.

பலஸ்தீன், பலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ் போன்ற இயக்கங்களுக்கான எமது ஆதரவு இதனடிப்படையிலேயே ஆகும். பலஸ்தீன், இஸ்ரேலுக்கு தாரை வார்க்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இதுவே எமது நிலைப்பாடு. இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஹிஸ்புல்லாஹ் காட்டும் வெளிப்படைத் தன்மைக்கு எமது உதவிகள் நிச்சயம் அதற்கு அவசியமானது. அது பலஸ்தீனத்தின் பாதுகாப்புக்கும் துணைசெய்யத் தக்கது. ஹிஸ்புல்லாஹ் அமைப்பு அமெரிக்க இஸ்ரேலிய அடைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகுந்த சவாலை வெளிப்படுத்துகின்றமையால் அதன் ஸ்திரப்பாட்டுக்கு நாம் உதவுவது முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் நிமித்தமாகவே இருக்கும்.
துருக்கி எமது சகோதர நாடு என்பதன் காரணமாக நாம் அதனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றோம். முக்கியமான இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளில் நாம் இருந்தாலும் எமக்கிடையேயான உறவு காத்திரமாக இருக்கின்றது. அதாவது இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் அதனுடான உறவுகள் குறித்த கொள்கை, மற்றது சிரியா பற்றிய நிலைப்பாடு. சிரியா தொடர்பான அவர்களது நிலைப்பாட்டில் இன்னும் தெளிவில்லாத ஒருவித மயக்க நிலையே காணப்படுகிறது. இருந்தும், துருக்கியுடன் பல துறைகளில் வலுவான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் மேம்பட்ட இனக்கமான போக்குகளுடன் கூடியது.
மேலும், பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுடனும் நாம் சகோதரத்துவ ரீதியில் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம். எம்மத்தியில், ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலம் நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கை. வெளிநாட்டு தலையீடுகளை நாம் அறவே வெறுக்கின்றோம். குறிப்பாக சிரியா மற்றும் ஈராக்கிய விடயத்தில் அமெரிக்க இஸ்ரேலிய நலன்களைத் தவிர்த்து துருக்கி, சவுதிஅரேபியா, ஈரான் ஆகிய மூன்றும் ஒருமித்த நிலைப்பாடுகளுடன் இருப்பது பிராந்திய ஸ்திரப்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று நாம் கருதுகின்றோம். யெமன் விடயத்தில் பின்பற்றப்படுகின்ற போக்குகள் போன்றதல்ல. அங்கு தினமும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மிசைல்கள் ஏவப்படுகின்றது. அன்மையில் ஒரே பாடசாலை 12 முறை தாக்கப்பட்டது. சவுதி அரேபியா நினைத்தால் பிராந்தியத்தில் விதைக்கப்படும் பயங்கரவாத வேர்களை அடியோடு அழித்து விடமுடியும். சவுதியின் உளவுத்துறைக்கு அது நன்கு தெரியும். அதற்கான வரைபுகளை ஈரான் தயாரித்திருந்தது, துருக்கியுடன் இணைந்து அதைச் சாத்தியப்படுத்தலாம். சிரியாவை வீழ்த்துவதற்குப் போடப்பட்டுள்ள மிக மோசமான பயங்கரவாதத்தின் அடிப்படையிலான திட்டத்தை நாம் இணைந்து இலகுவாக முறியடிக்க முடியும். ரஸ்யாவுடன் நாம் பேசுவதற்கு ஒரு நாளைக்கு முன்னால் மத்தியகிழக்கு விவகாரங்களுக்கான ரஸ்யப் பிரதிநிதியை சவுதி சந்தித்தது. ஆனால் பிரச்சினையை வேறு மாதிரி கையாளவே சவுதி விரும்புகின்றது.
துருக்கியை மையப்படுத்தி நகர்த்தத்திட்டமிட்டிருந்த எல்லா விடயங்களையும் நாம் அறிவோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள துருக்கி முனைந்திருக்கும் நிலையில் சிரியாவை வீழ்த்துவதற்குப் போடப்பட்டுள்ள பயங்கரத்திட்டங்களின் பின்னால் உள்ள அழிவுகளைப் புரிந்துகொண்டபடி அடுத்த கட்டம் நோக்கி நகரவேண்டும். உருவாக்கப்படுகின்ற உலகப் பயங்கரவாதம் துருக்கியை கபளீகரம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப்பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான வரைபை நாம் துருக்கி மற்றும் சவுதியோடு இணைந்து மேற்கொள்வதற்காக முன்வைத்தோம் ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சவுதி இருக்கவில்லை. அமெரிக்க இஸ்ரேல் படைவளத்தில் தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை இது இன்னும் சிக்கலான கருதுகோள்களுக்கு இட்டுச் செல்கின்றது. பிராந்தியத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது சிரியாவில் ஈரானியத் துருப்புகள் நிலைகொண்டிருக்கவில்லை; ஆனால் எமது ராணுவ ஆலோசகர்கள் அங்கிருக்கின்றனர் என்பதை மறுக்கவில்லை. இவர்களும் சிரிய அரசின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளனர். சிரியாவுக்கு எதிராகத் திட்டமிட்டு நகர்த்தப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்று நம்புகின்றோம்.
இன்றைய ஈரான்
ஈரான் பல தசாப்த்தங்களாகவே மேற்குலக பொருளாதார தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இதனால் எமக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டபோதும் அதனை நாம் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டோம். இந்தத் தடைகள் எமக்கு ஒரு மறைமுக அருளாகவே அமைந்தது எனலாம். எமது தேவைகளை நாமே அடைந்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம்.

முப்பது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சமாக இருந்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை இன்று 45 இலட்சமாக உள்ளது. உலகின் பல பாகங்களில் இருந்தும், உயர் கல்விக்காக, ஈரானிய பல்கலைக்கழகங்களை நாடிவருவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
எமது விஞ்ஞானத் தொழிநுட்பக் கட்டமைப்பு மிகவும் வலுவாகவே உள்ளது. நீங்கள் ஈரானுக்கு வந்தால் அவற்றைக் கண்டு கொள்ள முடியும். ஏனெனில் எதிர்கால விஞ்ஞான தொழிநுட்ப மேம்பாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இளைஞர்களை மையப்படுத்தி நகரக்கூடியது. அதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கின்றோம். இந்தச் செய்தியைச் சுமந்துகொண்டு அநேகமான முஸ்லிம் நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.
ஆறு நாடுகள் ஒருபக்கம் நின்று எமது அணுச் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கையில் நாம் ஒற்றையாக இருந்து அவற்றை எதிர்கொண்டோம். நேர்பட்ட வழியில் எமது மாணவர்களைத் தயார்படுத்த எமக்கு நன்கு தெரியும் என்பதை அல்பராதி போன்றவர்களுக்குப் புரிய வைத்திருக்கின்றோம். எமது விடயத்தில் எதிரிகளின் பிரச்சாரம் நிச்சயம் வெற்றியளிக்கப் போவதில்லை. எமது அரசியல் அத்திவாரம் மிகவும் பலமாகவும் தெளிவானதாகவும் இருக்கின்றது. அதனால் ஆட்டங்காணச் செய்வது மிகவும் கடிணமானது. பொருளாதாரத்தடைகள் இன்னுமின்னும் எம்மை மேம்பட்ட நிலைக்கே இட்டுச் செல்லும் என்ற அளவுக்கு அதை எதிர்கொள்ள எம்மால் முடியும். இதைத்தான் அமெரிக்க இஸ்ரேலிய நலன்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதையும் நாம் தெளிவாகவே விளங்கியிருக்கின்றோம்.
No comments:
Post a Comment