Monday, July 9, 2018

சவூதி அரேபியா குறித்து அறியவேண்டிய 10 குறிப்புக்கள்

10 Points one should know about Saudi

1. சவூதி அரேபியா தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகவும், ஷரீஆவை அமூல்படுத்தி வரும் நாடாகவும், முஸ்லிம் உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாகவும் நீண்டகாலமாக காட்சிப்படுத்துவதில் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த அடையாளக் காட்சிப்படுத்தலை அரங்கேற்றுவதற்கு அது பயன்படுத்தி வரும் மிக முக்கிய கருவிதான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை நடைமுறைப்படுவதாகும். சவூதி அரேபியா இப்னு சவூதின் வம்சாவழி
ஆட்சியைத் தக்கவைக்க பாடுபடும் வெறும் மன்னராட்சி மட்டுமே என்றிருந்தாலும்கூட அது உருவாக்கம் பெற்ற நாள் முதல் தனது போலியை மறைப்பதற்கு இஸ்லாமிய போர்வையை போர்த்திக் கொண்டது என்பதே உண்மை. எனவே மன்னராட்சியை தக்கவைப்பதே அதன் முழு முதல் இலக்கு. ஏனைய அனைத்தும் அதற்கான அலங்காரங்கள் மட்டுமே. அதனால்தான் எதிர்க்கருத்துக்கள் அங்கே அனுசரிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சவூதி அரேபியாயை ஒரு சர்வாதிகார மன்னராட்சி என்றே அழைக்கலாம்.

2. சவூதியைப்பொருத்தவரையில் அது தனது பல்வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இஸ்லாத்தை வசதியாகப் பயன்படுத்துகிறது. உலகில் பல பாகங்களில் மஸ்ஜித்களை நிர்மாணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தனக்கு இஸ்லாமியச் சாயத்தைப் பூசிக் கொள்ளும் சவூதி, இஸ்லாத்தின் வாழ்வா-சாவா போராட்டங்கள், நெருக்கடிகள் என்று வருகின்றபோது நேர் எதிரான திசையில் பயணிப்பதை எவரும் அவதானிக்கலாம். தன்னை ஒரு இஸ்லாமிய தேசமாகக்கோரும் சவூதி, இதுவரையில் குறைந்தது ஒடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சமூகத்திற்காகவேனும் உண்மையாக உதவி அவர்களின் விடுதலைக்காக உழைத்தது கிடையாது. சியோனிச இஸ்ரேலின் விவகாரமாகட்டும், ஈராக் ஆக்கிரமிப்பாகட்டும், சோவித் ஆப்கானிய ஆக்கிரமிப்பாகட்டும், மேற்குலகின் தேவையை பூர்த்தி செய்யும் நிலஎண்ணெய் உற்பத்தி பராமரிப்பாகட்டும் இவை அனைத்திலும் மேற்குலகுக்கு சேவகம் செய்வதையே தனது குறிக்கோளாக் கொண்டு சவூதி இயங்கியிருக்கின்றது. மேலும் சில முஸ்லிம் உம்மத்தின் முக்கிய விவகாரங்களிலும், அது சந்தித்த மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் அவையெல்லாம் ஏதோ இஸ்லாத்தின் கடப்பாட்டுடன் சம்பந்தப்படாத விடயங்கள் மாதிரி கணித்து தனது தேசிய நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு தன் கண்களை இறுக மூடியபடியே சவூதி செயற்பட்டு வருகின்றது.
பலஸ்தீனப்பிரச்சனை, ரொஹிங்கா முஸ்லிம்களின் அவலம், சிரியாவின் கொடூர யுத்தம் போன்றவற்றினால் சொல்லொண்ணா துயரத்தில் கதறும் முஸ்லிம்களை மீட்கும் ஆளுமை சவூதிக்கு இருந்தாலும் அதனை தனது
கடமையாக ஒரு கணமும் சவூதி கருதியது கிடையாது. எனினும் தனது எல்லை என்று வருகின்றபோது, தனது தேசிய நலன் என்று வருகின்றபோது யெமனிலும், பஹ்ரேனிலும் களத்தில் நேரடியாக குதிப்பதற்கு சவூதி ஒரு கணமும் தாமதிக்கவில்லை. இத்தகைய உதாரணங்கள் ஏனைய நாடுகளைப்போன்று சவூதியும் வெறும் தேசியவாத நாடே என்பதற்கு சான்றாகும்.
3. சவூதி அரேபியா, உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் தனது நியாயாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தன்னை சுன்னி முஸ்லிம்கள் மீது ஷிஆக் கொள்கையைத் திணிக்க எத்தணிக்கும் ஈரானின் சதிமுயற்சிக்கு எதிராக போராடும் முக்கிய போராளியாக காட்ட முற்படுகிறது. குண்டுவெடிப்புக்கள், கிளர்ச்சிகள் என எது இடம்பெற்றாலும் அவற்றை ஈரானியச் சதி என்றே அது காட்சிப்படுத்துகிறது. ஈரானும், சவூதியும் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை நிறுவதற்காக இஸ்லாத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி களங்கப் படுத்துகின்றனவே தவிர அவர்கள் முழுக்க முழுக்க தேசிய நலன்களை குறிக்கோளாக் கொண்டவர்களே. உதாரணமாக அரபு வசந்தம் பஹ்ரேனில் வீசத்தொடங்க சவூதி நேரடியாக தனது இராணுவச் சப்பாத்துக்களை அங்கே பதித்தது. பெரும்பான்மையான
ஷியாக்களைக்கொண்ட பஹ்ரேனில் சிறுபான்மை சுன்னி முடியாட்சி நிலைநாட்டிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வீதிக்கு வந்த மக்களின் போராட்டமாக அதனை சவூதி ஒரு வினாடியும் அணுக முற்படவில்லை. மாறாக ஈரானின் சதி என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அனைத்தையும் அடக்கி, நேரடியாக களமிறங்கி, தனது தேசிய, இராஜ தந்திர நலனை அது முதன்மைப்படுத்திமை அதன் தேசியவாத யதார்த்தத்திற்கு சிறந்த சான்றாகும்.
4. சவூதியின் வெளிநாட்டுக்கொள்கை அதன் எஜமானர்களான மேற்குலகின் நலன் தழுவியது. அது மேற்குலக வெளிநாட்டுக்கொள்கைக்கு அடிபணிந்தது. சவூதி அரேபியா மேற்கின் முன்னெடுப்புகள் அனைத்துக்கும், அது ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தபோதிலும், அதற்கு முழுமையாக ஆதரவளித்து வருகிறது. அது பலஸ்தீனத்தின் மீதான யூத சியோனிச ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொண்டதுடன் மாத்திரமல்லாமல் அதனை சுமூக நிலைப்படுத்துவதற்காக
இஸ்ரேலுக்கும் அதனைச்சூழவுள்ள நாடுகளுக்குமிடையே பேச்சுக்களை முன்னின்று நடத்தியது. சவூதியின் வெளிநாட்டுக்கொள்கைளை சாராம்சப் படுத்தினால் அது வரலாற்று ரீதியாக பிரித்தானியாவின் நேரடி முகவராக தொழிற்பட்டதுடன் சில சதாப்தங்களாக அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கைக்கும் - பிரித்தானியாவுக்குமிடையே சிக்குண்டிருந்து, தற்போது ஒப்பீட்டளவில் அமெரிக்க சார்பு முகவராக முன்னின்று தொழிற்பட்டு வருகின்றது.
5. சவூதி அரேபியா தனதாட்சியை மனிதச் சட்டங்களைக்கொண்டும், ஷரீஆச் சட்டங்களைக்கொண்டும் தொகுக்கப்பட்ட ஒருவகையான கலவையைக் கொண்டு மேற்கொண்டு வருகிறது. சவூதியின் அரசியலமைப்பு தொடர்பான அரபு நூலொன்றிலே நூலாசிரியர் இந்த பித்தலாட்டம் தொடர்பாக இவ்வாறு விபரிக்கிறார். “சட்டம்(கானூன்) அல்லது சட்டவாக்கம்(தஸ்ரீஃ) போன்ற பதங்கள் இஸ்லாமிய ஷரீஆவிலிருந்து பெறப்பட்ட சட்டங்களுக்கு மாத்திரம்தான் பிரயோகிக்கப்படுகின்றன. மனிதச்சட்டங்களால் தீர்மானிக்கப்படும் முறைமைகள்(அன்திமாஹ்) அல்லது அறிவுறுத்தல்கள்(தஃலீமாத்) அல்லது அரசாணைகள்(அவாமிர்) போன்றவற்றிற்கு அப்பதங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை...”.
6. சவூதியில் காணப்படும் சமய கட்டமைப்புக்கள் அனைத்தும் சவூதி முடியாட்சிக்கு நியாயாதிக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், அதன் முடிவுகளை நியாயப் படுத்துவதற்காகவுமே இயங்குகின்றன. வஹ்ஹாபி மத்ஹபின் ஸ்தாபகா,; பதின்னெட்டாம் நூற்றாண்டு அறிஞர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் வழித்தோன்றல்கள் சவூதி மன்னர்
பரம்பரைக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வருவதன் ஊடாக சவூதி மன்னராட்சியை சட்டபூர்வமாக்குகின்றனர். அதியுயர் ஆன்மீகத் தலைமைப்பதவிகள் சவூதின் குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய, பெரும்பாலும் திருமண பந்தங்களினூடாக தொடர்புபட்;ட நபர்களுக்கே வழங்கப்படுகின்றன. இவ்வாறு உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அறிஞர்கள் உலகின் பல பாகங்களில் மஸ்ஜித்களை நிறுவுதல் போன்ற செய்கைகளை மேற்கோள் காட்டி சவூதியை இஸ்லாத்தின் காவலனாக சித்தரிக்கும் பணியை கச்சிதமாக செய்து வருகின்றனர். சில பொழுதுகளில் அரச குடும்பம் கடைப்பிடிக்கும் சில கொள்கைகள் தொடர்பாக மக்களிடமிருந்து எழும் நியாயமான அதிருப்த்திகளை இந்த செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் அறிஞர்களே தமது பத்வாக்களைக் கொண்டு சாந்தப்படுத்துகின்றனர். சவூதியின் உயர் முப்தி அரபுலகெங்கும் புரட்சிகள் வெடித்த காலகட்டத்தில் எதிர்ப்பு மனுக்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிராக பத்வா வழங்கியமையும் இந்தத் தரத்தில்தான் சாரும்.
7. சவூதி நீதித்துறை நீண்டகாலமாக சந்தேகத்திற்குரியதாகவே தொழிற்பட்டுவருகிறது. அது முரண்பாடுகள் நிறைந்ததும் சவூத் குடும்பத்தின் மன்னராட்சிக்கு எதிராகத் தோன்றும் எதிர்ப்பலைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவுமே பயன்பட்டு வந்துள்ளது. அங்கே நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளில் பாதிக்கும் மேலானவைகளை மிக குறுகலான சட்டவுரிமையைப்பெற்றுள்ள பிற நாட்டுக் குடியேறிகளுக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு குடியேறி ஒரு குற்றச்செயலுக்காக சந்தேகிக்கப்பட்டவுடனேயே அவர் ஆரம்பத்திலிருந்தே தவறாக நடத்தப்படுவதுடன் இறுதியாக சட்டத்தின் பிடியிலும் மோசமாக கையாளப்படுகிறார். அவர்களுக்கு இருக்கின்ற குறுகலான சட்ட உரிமைகள் காரணமாக தம்மை நீதியின் முன் முறையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலையை குடியேறிகள் சந்திக்கின்றனர். போதுமான சட்ட உதவிகள் பெறமுடியாத நிலையில் நியாயப்படுத்த முடியாத குற்றத்தின் உண்மை நிலைக்கு சமமற்ற
தண்டனைகளால் குடியேறிகள் பலர் மிகக்கடுமையாகத் தண்டிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு பல நீதிமன்றத் தீர்ப்புகள் சந்தேகத்திற்குரியவை. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 வயதே நிரம்பிய ஒரு இளம் யுவதி வன்மையான கூட்டுப்பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டபோது அந்தப்பெண்ணுக்கே 200 கசையடிகளும், ஆறு மாத சிறைவாசமும் விதித்த சவூதி நீதிமன்றம் அதற்கான காரணமாக அந்தப்பெண் மஹ்ரமான ஆண் துணையின்றி இருந்ததற்கான தண்டனையே இது என்று தீர்ப்பளித்தமை இதற்கொரு உதாரணம். அதே சவூதி அரேபியா மஹ்ரமின்றிய நிலையில் பல்லாயிரக்கணக்கான வேற்று நாட்டுப் வீட்டுப்பணிப்பெண்களை சவூதிக்குள் அனுமதித்து அவர்கள் சவூதி இல்லங்களில் விதம் விதமாக வதைப்படுவதை சவூதி எந்த முகத்துடன் அனுமதிக்கிறது என்ற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா?
8. இன்று ஷேய்ஹ் நிம்ரின் மரண தண்டனை குறித்து உலக ஊடகங்கள் அதிகம் பேசுகின்றன. அவர் அரபுலகப் புரட்சிகளைத் தொடர்ந்து 2011 இல் சவூதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர். மக்கள் நல புரக்கணிப்புகள், ஒடுக்குமுறைகள், தெளிவான பாரபட்சங்கள் என்பவற்றின் விளைவால் எழுந்த மக்களின் அபிலாசைகளுக்கான கோரிக்கைகளாக இந்த ஆர்ப்பாட்டங்களை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ரெஹ்ரானிலிருந்து இயக்கப்பட்ட சதிவேலை என்று அதனை முழுமையாக மூடிமறைத்து ஷியா-சுன்னி குறுங்குழுவாத முரண்பாட்டை முன்வைத்து அதனை அடக்கியது சவூதி. சோம்பேறித்தனமான ஊடகவியலாளர்களும் உண்மை நிலைபற்றியும் மக்கள் கோரிக்கைகளின் பல்பரிமாணங்கள் பற்றியும் கருத்திற்கொள்ளாது வெறும் ஷியா-சுன்னி குறுங்குழுவாதத்தை அடிப்படையாக வைத்தே இது குறித்து அதிகம் எழுதினார்கள்.
இஸ்லாத்தை முரண்பாடுகளும், உரசல்களும் நிறைந்த ஒன்றாக சித்தரித்து, ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை கொச்சைப்படுத்தி, அதனூடாக மதஒதுக்கல் சிந்தனையும், மேற்குலக தலையீட்டையும் நியாயப்படுத்தும் சிலரின் நிகழ்ச்சி நிரலும் இதன் பின்னால் இருக்கின்றது.
9. அல் கையிதா உறுப்பினர்கள், மற்றும் அரசுக்கெதிராக சதி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அதே சவூதிதான் அல்கையிதா மற்றும் ஏனைய பல ஜிஹாதிய குழுக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. அவற்றை தமது இராஜதந்திர நகர்வுகளுக்காக உருவாக்கியதிலிருந்து ஆயுத உதவி, நதியுதவி போன்ற வளங்களை வழங்கியும் ஒத்துழைத்து வந்தது. வருகிறது. அல்கையிதாவுடன் இணைவதற்காக சென்ற பல இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி வழங்குவதில் சவூதி மிக முக்கிய பங்காற்றியது. ஆனால் ஆப்கான் ஜிஹாதிற்கு பின்னரான காலத்தில் அவ்வாறு சென்ற இளைஞர்கள் சவூதியின் உண்மை நிலையை உணரத்தொடங்கினர். அது வெறுமனவே சவூதியின் தேசியநலனில் மாத்திரம்தான், இன்னும் சொல்லப்போனால் மன்னர்
குடும்பத்தின் நலனில் மாத்திரம்தான் அக்கறையுடையது என்ற யாதார்த்தம் அவர்களுக்கு வெளிச்சமானது. மேலும் சவூதி தனது இருப்புக்காக முழுக்க முழுக்க மேற்குலக நலன்களைத் தழுவியே இயங்கி வருகிறது என்ற உண்மை அவர்களுக்கு ஐயமறப் புலப்பட்டது. விளைவு, அவர்கள் சவூதி மன்னராட்சிக்கு எதிராக தமது ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கி தற்போது வரை அப்போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
10. சவூதி தன்னகத்தே அதிகளவான கனிய வளங்களையும், இராணுவ வளங்களையும் கொண்டிருந்தாலும் உலகத்தின் அதன் செல்வாக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அது உலகில் கொண்டுள்ள செல்வாக்கு முஸ்லிம்களின் முக்கிய புனிதஸ்தளங்களான மக்கா-மதீனாவை தனதெல்லைக்குள் வைத்திருக்கிறது என்ற அடையாள ரீதியான செல்வாக்குடன் மட்டுப்படுத்தபட்டது. பிராந்தியத்தைப் பொருத்தவரையில் பலஸ்தீனுக்கான இரு-அரசுத் தீர்வினை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களை நடத்துவதில் முன்னின்றமை, அமெரிக்க இராணுவத்தளங்களை அமைக்க தனது எல்லையைத் திறந்து விட்டமை போன்ற ஒரு சிலவற்றைச் சொல்லலாம். சுருங்கக் கூறின் சவூதின் அரச குடும்பத்தினரிடையே அதிகார சமநிலையைப் பேணிக்கொண்டு, மக்கள் மீதும் அவர்களின் முழுமையான வளங்களின் மீதும் உரிமை கொண்டாடிக்கொண்டு, மக்கா-மதீனாவைக் காட்டி உம்மத்தை தொடாந்து ஏமாற்றலாம் என கனவு கண்டுகொண்டு, தனது சொந்த இருப்புக்காக மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்துக்கொண்டு இயங்குகின்ற மிகக்குறுகிய மனப்பான்மை கொண்ட அரசே சவூதி அரேபியா.சர்வாதிகார நாடு. .

No comments:

Post a Comment