Contributors

Friday, March 10, 2023

கொலம்பஸுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் முஸ்லிம்கள்

 Muslims lived in the Americas centuries before Columbus

Time To Abandon Colonial Geography

Zafar Bangash

காலனித்துவவாதிகள் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட சமூகங்களில் பல்வேறு வழிகளில் ஆழமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தாம் ஆக்கிரமித்த நாடுகளின் வளங்களைத் கொள்ளையடிப்பது முதல் நன்கு நிறுவப்பட்ட பாரம்பரிய சமூகங்களின் மீது அந்நிய கல்வி மற்றும் மொழிகளின் அமைப்புகளை திணிப்பது வரை நீண்டு சென்றது. காலனித்துவ தாக்கம் ஒரு சரிசெய்ய முடியாத பேரழிவாக உள்ளது.

காலனித்துவப் படுத்தப்பட்ட  மக்கள் தங்கள் கலாச்சாரம், உடை மற்றும் உள்ளூர் மொழிகளை தாங்களாகவே வெறுக்கக் கற்பிக்கப்பட்டனர். காலனித்துவ ஆட்சியின் கீழ், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தொழில் பெற வேண்டுமாயின் மேற்கத்திய கல்வியைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக யாராக இருந்தாலும் அவர்களின் காலனித்துவ எஜமானரின் மொழியைக் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு, பிளெமிஷ் (டச்சு மொழியின் பெல்ஜியம் பதிப்பு), ஸ்பானிஷ் அல்லது போர்த்துகீசியம் கூட காலனித்துவப் படுத்தப்பட்ட மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட மொழிகள் தான்.

கோட்பாட்டளவில், காலனித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது, என்றாலும் காலனித்துவப்படுத்த பட்டிருந்த ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மாநிலங்கள் உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டன என்று கருத முடியவில்லை. இந்தச் சமூகங்களில் உள்ள உயரடுக்குகள் தங்கள் சொந்த வறிய மக்களை விட ஐரோப்பாவில் உள்ள காலனித்துவ எஜமானர்களுடன் இணைவதை, அவர்களுக்கு சேவை செய்வதை இன்றளவிலும் கௌரவமாகக் கருதுகின்றனர். இந்தச் சமூக தலைமைகள் தங்களின் முன்நாள் காலனித்துவ எஜமானர்களை இன்றும் சார்ந்து இருக்கின்றன என்பது ரகசியமல்ல. தனக்குப் பின்னால் அமேரிக்கா இருக்கிறது, பிரித்தானியா இருக்கிறது, பிரான்ஸ் இருக்கிறது என்று கூறுவது கூட தலைவர்களாக இருப்பதற்கான தகுதி எனக் கருதுவது மட்டுமல்லாமல் மக்களையும் அவ்வாறே சிந்திக்க வைத்தும் உள்ளன.

காலனித்துவம், அல்லது குறிப்பாக பிரிட்டிஷ் காலனித்துவம், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு பெயரிட்டது என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு பகுதி உள்ளது. உதாரணமாக, பெரும்பாலான மக்கள் 'மத்திய கிழக்கு' அல்லது 'தூர கிழக்கு' போன்ற சொல்லாடல்களை நன்கு அறிந்திருக்கிறார்கள். உடனடியாக மனதில் தோன்றும் கேள்வி என்னவென்றால், 'மத்திய' அல்லது 'தூர' என்பது எந்த மையப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது? என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பிராந்தியத்திற்கு ஒரு குறிப்பிட்ட பெயரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் தொடக்கப் புள்ளி என்ன?

இங்கிலாந்து என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு சிறிய தீவு, இதைச் சுற்றித்தான் அனைத்தும் உள்ளது என்ற ஒரு மாயை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆரம்பப் புள்ளி பிரிட்டன் என்று கருதப்படுகிறது; அதனால்தான் அது தன்னை 'மகா' பிரிட்டன் என்று ஆடம்பரமாக அழைக்கிறது என்பது சிந்தித்தால் தெளிவாகத் தெரியும். இதில் மகத்துவம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அதன் ஆதிக்க நாட்களில் - பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் - அது ஒரு இராணுவ சக்தியாக இருந்திருக்கலாம், அப்போதிருந்த அதன் கடற்படை வலிமையின் காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அது நடுத்தர சக்திகளின் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. ஆயினும்கூட, அதன் பேரழிவு மரபு உலகத்தை இன்றளவிலும் தொடர்ந்து ஆட்டிப்படைக்கிறது.

இந்த பூகோளத்தின் மையம் பிரிட்டன் என்ற கட்டுக்கதையை ஆங்கிலேயர்கள் தொடர்ந்து எண்ணிக்கொண்டு இருந்தாலும் உண்மை அதுவல்ல என்பது தெளிவாகிறது.

எனினும், ஆங்கிலேயர்கள் பெருமைப்படக்கூடிய ஒரு பகுதி உள்ளது. அது தான் ஆங்கில மொழி. ஆங்கிலம் உலகளாவிய மொழியாகக் கருதப்படுகிறது. இன்று வேறு எந்த மொழியும் அந்த நிலையை அடையவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதற்கான காரணம் எளிமையானது. பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் உலகின் பல பகுதிகளில் காலனித்துவப் படுத்தப்பட்ட வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளான இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் எஜமானர்களாக குடியேறினர். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பழங்குடியின மக்களை இனப்படுகொலை செய்தனர்.

வட அமெரிக்க குடியேற்றம் மற்றொரு கட்டுக்கதையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது. அதாவது இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ் தான் அமெரிக்காவை 'கண்டுபிடித்தார்' என்ற கட்டுக்கதை தான் அது.

அமெரிக்கக் கண்டம் மக்கள் வாழா பிராந்தியமல்ல. வட அமெரிக்கா ஏற்கனவே பழங்குடி செவ்விந்திய மக்களால் நிரம்பி இருந்தது, அவர்கள் தங்களுக்கென்று நன்கு நிறுவப்பட்ட ஒரு கலாசாரத்தையும் கொண்டிருந்தனர். உண்மையில், கொலம்பஸுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் அரபு எழுத்துக்களைத் தாங்கிய கல்வெட்டுக்கள் சான்றுகளாக இன்றளவிலும் அமெரிக்காவில் காணக்கூடியதாக உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு ஈடுசெய்ய முடியாத கேடு விளைவித்த ஐரோப்பிய குடியேற்றங்களைப் போலல்லாமல் பழங்குடி மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஐரோப்பிய குடியேற்றவாசிகள் பழங்குடி மக்களை படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், வட அமெரிக்காவில் உள்ள பூர்வீக மக்கள் தொகை இன்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வலுவாக இருந்திருக்கும். இனப்படுகொலை காரணமாகவே அவர்கள் இன்று ஒரு சில மில்லியன்களாக தொலைதூர இடங்களில் சிதறி வாழ்கின்றனர். காலனித்துவ வாதிகள் எந்தளவு மனித படுகொலைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது இதிலிருந்து புலனாகிறது.

தம் இஷ்டப்படி எவ்வாறாயினும், காலனித்துவம் தம் இஷ்டப்படி பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு தவறாக பெயரிடப்பட்டது என்பதை நோக்குவோம். மேற்கு ஆசியாவிற்கு 'மத்திய கிழக்கு' என்பது எவ்வளவு அபத்தமானது; மேற்கு ஆசியா என்று அழைப்பது மிகவும் துல்லியமானது. அதுபோல் நாங்கள் ஏற்கனவே மத்திய ஆசியா என்று அழைத்த ஒரு பிரதேசத்தை 'தூர கிழக்கு' என்று பெயரிட்டது. அதன் சரியான பெயரான தென்கிழக்கு ஆசியா என்று தான் அழைக்கப்பட வேண்டும்.

இவர்களின் சமன்பாட்டை இவ்வாறு தலைகீழாக மாற்றி பார்ப்போம். முஸ்லிம் உலகின் மையப்பகுதியை உலகின் மையமாக எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில், வட அமெரிக்காவை 'தூர மேற்கு' என்றும், ஐரோப்பாவை 'மத்திய மேற்கு' என்றும் அழைத்தால் எப்படி இருக்கும்…? மேலும் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ‘ஃபார் சவுத்’ என்று தான் அழைக்கப்பட வேண்டும். இங்கிலாந்து என்பது தனியாக குறிப்பிடப்படுவதற்கே அறுகதையற்ற குட்டி நாடாகும்.

முஸ்லிம் நாடுகள் காலனித்துவத்தின் அரசியல் புவியியலைக் கைவிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளை விவரிக்க மிகவும் துல்லியமான வெளிப்பாடுகளைப் பயன்படுத்த வேண்டிய காலம் இது.

உலகின் புவியியல் மொழியை மறுசீரமைத்து, காலனித்துவவாதிகள் ஏனையோருக்கு வழங்கிய மருந்தை அவர்களுக்கு திருப்பிக் கொடுத்தால் எப்படி இருக்கும்.?

ஆசியா உலகின் மிகப்பெரிய கண்டமாகும். அது தன்னை மேலும் வலுவடையச் செய்ய வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளை சரியான, மிகவும் துல்லியமான பெயரால் குறிப்பிடுவது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

?https://crescent.icit-digital.org/articles/time-to-abandon-colonial-geography

Saturday, March 4, 2023

பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படாத ஐந்து இரவுகளில் ஒன்று "பராஅத்"

 The 15th of Sha’ban - A Night for Asking Forgiveness

ஷாப்-ஏ-பராஅத், பராஅத் இரவு, செராக்--பராஅத், பராஅத் காண்டிலி, அல்லது நிஸ்பு ஷ'பான் ஷாப்-ஏ-பராஅத் என அழைக்கப்படும் ஷ'பான் 15 ஆம் இரவு பல தெற்காசிய, மத்திய ஆசிய, தென்கிழக்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் ஒரு கலாச்சார நிகழ்ச்சியாகும். ஷ'பான் மாதம், இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமாகும். இவ்வருடம் பராஅத் இரவு இலங்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய் கிழமை சூரிய அஸ்தமனதில் இருந்து தொடங்குகிறது.

நாம் இப்போது அருள்மிகு ரமழான் மாத்திற்கு முந்திய ஷ'பான் மாதத்தில் இருக்கின்றோம். இந்த மாதமானது ரசூலுல்லாஹ் சந்திரனைப் பிளந்து அற்புதத்தை செய்து காட்டிய மாதம், தொழுகையின் போது முன்னோக்கும் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து புனித க'பாவிற்கு மாற்றப்பட்ட மாதம், "இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்" إِنَّ ٱللَّهَ وَمَلاَئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّ يٰأَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً என்ற குர் ஆன் வசனம் இறங்கிய மாதம் போன்ற பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஷா'பான் மாதத்திலேயே ஜைனப் பின்த் அலியின் பிறப்பு, ஹுசைன் இப்னு அலியின் பிறப்பு, அப்பாஸ் இப்னு அலியின் பிறப்பு, அலி இபின் ஹுசைன் ஸைன் அல்-அபிதின் பிறப்பு, அலி அல்-அக்பர் இபின் ஹுசைனின் பிறப்பு, காசிம் இப்னு ஹசனின் பிறப்பு, ருக்கையா பின்த் ஹுசைனின் பிறப்பு ஆகியவை நிகழ்ந்தன. லைலத்-அல்-பராஅத்தும் இம்மாத நடுப்பகுதியிலேயே வருகிறது.

ஆகவே முஸ்லிம்களான நாம் அனைவரும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும் அவரின் புனித குடும்பத்தவர் மீதும் அதிகமதிகம் ஸலவாத் சொல்லி இவ்விரவை சிறப்புறச் செய்வோம்.

எமது ஷீஆ சகோதரர்களின் கூற்றுப்படி, இறுதி இமாமான முஹம்மது அல்-மஹ்தி (அலை) 15 ஷபான் அன்று பிறந்தார். ஷியாக்கள் அந்த நாளில் முஹம்மது அல்-மஹ்தி (அலை)யின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் மற்றும் முஹம்மது அல்-மஹ்தி (அலை)விரைவாக தோன்றுவதற்கான பிரார்த்தனைகள், நோன்பு மற்றும் வழிபாடு போன்ற மதச் செயல்களைச் செய்கிறார்கள். ஈரானிய நகரங்கள் மத்திய ஷபானின் இரவில் அலங்கரிக்கப்பட்டு மக்கள் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இந்த ஆண்டு மார்ச் 7, 2023 (மக்ரிப் தொடக்கம்) லைலத் அல்-பராஅஹ், லைலத் அல்-நிஸ்ஃப் மின் ஷபான் மற்றும் ஷப்-இ-பராஅத் என்றும் குறிப்பிடப்படும் ஷாபானின் 15-ஆம் தேதி இரவு அனுஷ்டிக்கப்படும்.

ஷ’பானின் 15வது இரவின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் மத்தியில் விவாதப் பொருளாக இருந்தபோதிலும் சிலர் இந்த இரவை சிறப்புத் தொழுகைகளுடன் அனுஷ்டித்து, மறுநாள் நோன்பு நோற்கிறார்கள்,

ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் 15வது ஷ’பான் பற்றிய ஹதீஸ்களை ஸஹீஹ் மற்றும் ஹஸன் எனக் கருதும் அதேவேளை மற்றும் சில ஆய்வாளர்கள் அதை ழஈப் என்று கருதுகின்றனர். இருப்பினும், பலவீனம் கடுமையாக இல்லாததாலும், இந்த இரவின் அறம் சகல அறிஞர்களாலும் வணக்க வழிபாடுகளுக்காக பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கின்றது அவ்விரவை அனுஷ்டித்தல் சிறந்தது என்பதுவே பொதுவான கருத்தாகும்.

ஷாபானின் 15 வது இரவின் சிறப்பைப் பற்றி பல ஹதீஸ்களும் அறிவிப்புகளும் உள்ளன, இந்த இரவு சில நல்லொழுக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்று இப்னு தைமியா (ரஹ்) கூறுகிறார், இதுவே இந்த இரவு தொடர்பான அறிஞர்களின் கருத்தாகும்.

எனவே 15வது ஷ’பானின் சிசேட தன்மை என்ன, அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்:

அல்லாஹ் சுபுஹானஹு வ த'ஆலா தனது அடியார்களின்  பாவங்களை இந்த இரவில் மன்னிக்கிறான்

இந்த இரவின் முக்கிய ஆசீர்வாதம் என்னவென்றால், அல்லாஹ் தனது கருணையையும் மன்னிப்பையும் மக்ரிப் முதல் ஃபஜ்ர் வரை பூமியில் சொறிகின்றான். இத்தினம் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிப்பின் அளவை பல வசனங்களில் நிச்சயப்படுத்தி விவரித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஷ’பானின் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தனது படைப்பை உற்று நோக்குகிறான், பின்னர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் மற்றும் தங்கள் சக முஸ்லிம்களிடம் வெறுப்பு கொண்ட இரண்டு வகையான மக்களைத் தவிர மற்ற அனைத்து நல்லடியார்களை மன்னிப்பான்: [முஸ்னத் அஹ்மத்]

வேறு சில ஹதீஸ்களில் மன்னிக்கப்படாத நபர்களில் உறவினர் உடனான உறவுகளைத் துண்டித்தவர்கள் மற்றும் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள் உட்பட இன்னும் பல வகையானவர்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மு'மின்களின் அன்னை ஹஸரத் ஆயிஷா (ரலி) பின்வருமாறு கூறுகின்றார்:  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இரவில் நீண்ட நேரம் சஜ்தாவில் தரித்திருப்பார்கள், அவர் (மரணித்துவிட்டார்களோ) என்று பயந்து, அவர் இன்னும் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரது பாதத்தைத் சுரண்டியதாகவும் அப்போது ரஸூலுல்லாஹி (ஸல்) தனது பாதத்தை அசைத்து, பின்வரும் துஆவை ஓதுவதை கேட்டதாக குறிப்பிடுகின்றார்.

யா அல்லாஹ், உனது கோபத்திலிருந்து பாதுகாப்பை வேண்டுகிறேன், உனது மகிழ்ச்சியை நாடுகிறேன், உனது தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு உனது மன்னிப்பிலும் நான் பாதுகாவல் தேடுகிறேன். என்னால் உன்னை போதுமான அளவு புகழ முடியாது. நீ உன்னைப் புகழ்ந்தபடியே இருக்கிறாய்.

குறிப்பு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷபான் 15 ஆம் நாள் இரவு தொழுகையின் போது ஸஜ்தாவிலும், வித்ர் தொழுகைக்குப் பின்னரும் இந்த துஆவை ஓதுவார்கள் என்று கூறப்படும் இந்த ஹதீஸ் இமாம் பைஹக்கீ தொகுப்பில் உள்ளது, அறிஞர்களால் சஹீ என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள், "அல்லாஹ் ஷ’பானின் நடு இரவில் அடி வானத்திற்கு இறங்குகிறான், மேலும் அவன் பனூ கல்பின் (அரபு இனத்தைச் சேர்ந்த) பெரிய செம்மறி ஆடுகளின் ரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக (அதிக எண்ணிக்கையிலான பாவங்களை) மன்னிக்கிறான். [இப்னு மாஜா மற்றும் பலர்]

"ஷபான் 15 ஆம் தேதி, இரவில் விழிப்பு-தொழுகையைக் கடைப்பிடிக்கவும், பகலில் நோன்பு நோற்கவும் (பரிந்துரைக்கின்றேன்), ஏனென்றால் அல்லாஹ் அந்தி வேளையில் இருந்து விடியற்காலை சூரியன் உதிக்கும் வரை அருகிலுள்ள வானத்திற்கு இறங்குகிறான்: நான் அவரை மன்னிப்பதற்காக எவராவது மன்னிப்பு தேடுகிறார்களா? நான் அவருக்கு வழங்குவதற்காக எவராவது வாழ்வாதாரம் தேடுகிறார்களா? நான் அவரைக் காப்பாற்றுவதற்காக எவராவது இன்னல்களை எதிர்கொள்கிறார்களா? (அறிவிப்பவர் இமாம் இப்னு மாஜா).

எனவே, ஷ’பானின் 15வது இரவில் மன்னிப்புக்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள். உங்கள் இறை தியானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள், குறிப்பாக அல்லாஹ்விடம் மன்னிப்பு, கருணை, துன்பத்திலிருந்து நிவாரணம் மற்றும் வாழ்வாதாரங்களை அதிகரிக்கக் கேளுங்கள். நீங்கள் வெறுப்பு கொண்டுள்ளவர்களை மன்னியுங்கள், குறிப்பாக அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவர்களுடன் உங்கள் பிணக்குகளை, தீர்க்க மறவாதீர்கள், அல்லாஹ் நிச்சயமாக உங்களை மன்னிப்பான் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.

மேலும், ஷ’பானின் போது நமது நபிலான நோன்புகளை அதிகரிப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்து வரும் விடயமாகும், ஏனெனில் அல்லாஹ்விடம் நற்செயல்கள் உயர்த்தப்படும் மாதம் இது:

பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படாத ஐந்து இரவுகள்: வெள்ளிக்கிழமை இரவு (வியாழன் இரவு), ரஜப் மாதத்தின் முதல் இரவு, நிஸ்ஃபு ஷபானின் (15 ஆம் இரவு), இரண்டு ஈத் இரவுகள் - ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அல்ஹா). என்று இமாம் அல்-பைஹகி விவரிக்கின்றார்.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் றஸூலுல்லஹ்விடம் 'நீங்கள் ஷ'பான் மாதத்தைப் போல் வேறு எந்த மாதத்திலும்  இந்தளவு நோன்பிருப்பதைக் கண்டதில்லை' என்று சொன்னதற்கு ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்

ரஜப் மற்றும் ரமலான் மாதங்களுக்கு இடையே (வரும் இம்மாதம்) மக்கள் (அறியாமையால்) புறக்கணிக்கும் மாதம் இது. இது இறைவனிடம் செயல்களை உயர்த்தும் மாதமாகும், மேலும் நான் நோன்பிருக்கும் போது (எனது நற்செயல்கள்) உயர்த்தபடுவதை விரும்புகிறேன்என்று கூறினார்கள். - (அன்-நஸயீ)

இந்த இரவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகள்

இருப்பினும், அதன் ஆசீர்வாதங்களிலிருந்து பயனடைய இந்த இரவில் நீங்கள் நஃப்ல் (தன்னார்வ) தொழுகைகளை இன்னும் அதிகமாக செய்யலாம். ‘இறையச்சம் கொண்ட சில முன்னோர்கள் இந்த இரவை (ஷாபான் 15ஆம் நாள்) தொழுகைக்காக சிறப்பாக அர்ப்பணித்தனர்', என்று இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.

எனவே, இந்த இரவில் நமது இபாதத்தை அதிகரிக்கவும், அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் கோருவதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த இரவில் அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்காக, நமது சக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அல்லது குரோதம் போன்றவற்றை நம் இதயங்களிலிருந்து அகற்றவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள்: ஷஃபான் என்பது நமது வருடாந்திர செயல்களை அல்லாஹ்விடம் உயர்த்தும் மாதம் - மேலும் ஷபான் 15 ஆம் தேதி பராஅத் இரவு நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் நாம் ரமழானுக்குள் நுழைவதற்கான சரியான வாய்ப்பாகும், இன் ஷா அல்லாஹ்!

ரமலான் மாதத்தில் நமது வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், நமது பேரன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாகக் காட்டியபடி, இந்த ஷ’பான் மாதத்தில் பாவமன்னிப்பு கோரல் மற்றும் வணக்க வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று நமது அறிஞர்கள் நினைவூட்டியுள்ளனர்.

இந்த இரவின் அருட்கொடைகளை அல்லாஹ் நமக்கு பூரணமாக வழங்குவானாக. அவன் எம்முடைய பாவங்களை மன்னித்து, எமது வாழ்வாதார வசதிகளை அதிகப்படுத்தி, கஷ்டங்களிலிருந்து நம்மை விடுவிக்க பிரார்த்திப்போம். அல்லாஹ் ஷ'அபானில் நம்மை ஆசீர்வதித்து ரமழானை அடைய உதவுவானாக, ஆமீன்.

- தாஹா முஸம்மில் 

Wednesday, March 1, 2023

அமெரிக்காவுக்கோ அல்லது அதன் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கோ "ஈரானின் மனித உரிமைகள் பற்றி பேச எந்த தார்மீக தகுதியும் இல்லை"

Iran Roasts Rights Bodies in Geneva Address

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் திங்களன்று அமெரிக்கா மற்றும் வாஷிங்டன் தலைமையிலான "சில நாடுகள்" தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப மனித உரிமைகள் என்ற கருத்தை கையாள்வதை கடுமையாக விமர்சித்தார்.

"ஐ.நா மனித உரிமைகள் வழிமுறைகளினால் உண்மையான உரையாடல், ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் திறனை வளர்க்கும் மரியாதைக்குரிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பங்களிக்க முடியும்," என்று சுவிஸ் நகரில் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வில் அமீர்-அப்துல்லாஹியான் கூறினார்.

"மனித உரிமை சபை உட்பட மனித உரிமை நிறுவனங்கள், வருந்தத்தக்க வகையில் அமெரிக்கா தலைமையிலான ஒரு சில நாடுகளின் வெளியுறவுக் கொள்கையின் கருவியாக மாற்றப்பட்டுள்ளன."

சம உரிமைகள் மற்றும் மக்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே உறவுகளை மனித உரிமை சபை ஊக்குவிக்க வேண்டும், எனினும் "நடைமுறையில், மனித உரிமை கவுன்சில் சில சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது, அவை நாடுகளிடையே நட்புறவு கொள்கைகளுக்கோ அல்லது அத்தகைய நோக்கங்களுக்கோ ஒருபோதும் சேவையும் செய்யாது, பங்களிப்பும் செய்யாது." என்று அமீர்-அப்துல்லாஹியான் குறிப்பிட்டார்.

"உறுப்பு நாடுகளிடையே 'ஒத்துழைப்பு மற்றும் உண்மையான உரையாடல் கொள்கைகளை' நிலைநிறுத்துவதன் மூலம் மனித உரிமை கவுன்சில் அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகள் அவற்றுடன் ஒத்துப்போகாத மற்ற நாடுகளுக்கு எதிராக முற்றிலும் அரசியல் அடிப்படையில் விதித்துள்ள ஒருதலைப்பட்ச தடைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சட்டவிரோதமானவை மற்றும் மனிதாபிமானமற்றவை, அவை இலக்கு வைக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகவும் அப்பட்டமாகவும் மீறுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் தொடர்ச்சியான நிர்வாகங்கள் அவை செய்த அட்டூழியக் குற்றங்களுக்காக பொறுப்புக் கூற வேண்டும். அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இணங்கும் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள் குற்றத்தில் பங்காளிகளாக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும், ”என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கோ அல்லது அதன் மிருகத்தனமான கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கோ "ஈரானின் மனித உரிமைகள் பற்றி பேச எந்த தார்மீக தகுதியும் இல்லை" என்று அமீர்-அப்துல்லாஹியான் கூறினார்.

"ஈரானிய மக்களின் மருத்துவ உரிமை, கல்வி மற்றும் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளை பறித்துக்கொண்டு, ஈரானியர்களின் மனித உரிமைகளுக்காக குரல் எழுப்புவதாக கூப்பாடு போடுவது ஒரு சுத்த பாசாங்குத்தனமாகும்." என்று அவர் கூறினார்.

Iranian FM meets with UN Secretary General Antonio Guterres

"இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் தலையீடுகள், சதியின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதால், முறையான மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா மட்டுமே பொறுப்பாகும்."

பயங்கரவாதம் பற்றி பேசுகையில் "உலகெங்கிலும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் தோற்றம் தற்போதைய சகாப்தத்தின் முக்கிய சவால்களில் ஒன்றாகும் என்று அமீர்-அப்துல்லாஹியான் குறிப்பிட்டார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ளது. தாயேஷ் பயங்கரவாதத்திற்கு எதிராக ஜெனரல் சுலைமானியின் தியாகத்தையும் போராட்டத்தையும் மறந்துவிடலாகாது. பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்துவிட்டோரை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த ஈரான் இஸ்லாமிய குடியரசு எந்த முயற்சிகளையும் எடுக்க தயங்காது".

"எனது நாட்டில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஈரான்-எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களின் பங்கு தெளிவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

"சில ஐரோப்பிய நாடுகள் இரட்டைத் தரங்களைப் பயன்படுத்தி 'பயங்கரவாதத்தை சுத்தப்படுத்துவதில்' ஈடுபட்டன. ஈரானில் அமைதியின்மையின் போது வன்முறை மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு கணிசமான நிதி மற்றும் தளவாட வசதிகளை அவை வழங்கின".

ஈரானில் சமீபத்திய கலவரங்களின் போது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பல பாரசீக மொழி தொலைக்காட்சி ஊடகங்கள் வெறுப்பைத் தூண்டுபவையாகவும் வன்முறையைப் பரப்புபவையாகவும் செயல்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் உரிமைகள் பற்றி பேசுகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசில் பெண்களை ஒடுக்குவது குறித்த மேற்கத்திய ஊடகங்களின் பிரச்சாரத்தை மறுத்த அமீர்-அப்துல்லாஹியான், “இந்த ஆண்டுகளில், நமது பெண்கள், அறிவியல் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவம், சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் பிறர் பொறாமைப்படும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர், மேலும் சாதனைகளை பதிவு செய்துள்ளனர். அரசியல், சர்வதேச, சமூக, அறிவியல் விடயங்களிலும் தொழில்நுட்ப மற்றும் வணிகப் துறைகளிலும் ஈரானியப் பெண்களின் திறமையான மற்றும் ஆற்றல்மிக்க உருவத்தை உலகிற்குச் சித்தரித்துள்ளது.

"எங்களைப் பொறுத்தவரை, 'மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு' மதிப்பளித்தல் என்பது நமது தேசிய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, நமது மத நம்பிக்கைகளில் ஆழமாக உட்பொதிக்கப்பட்ட ஒரு முக்கிய மதிப்புமாகும். மேலும் சிறந்த பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் அயராது பணியாற்றி வருகிறோம். எங்களுடைய நீண்ட வரலாற்றில் நாம் மனச்சோர்வடையவோ அல்லது முரண்பாடுகளால் திசைதிருப்பப்படவோ கூடாது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம், என்றும் அவர் தெரிவித்தார்.

https://kayhan.ir/en/news/112898/iran-roasts-rights-bodies-in-geneva-address