Contributors

Thursday, February 14, 2019

ஒரு புதிய சகாப்தத்தின் வருகையை இஸ்லாமிய புரட்சி கட்டியம் கூறியது


Imam’s ‘Strategic’ Statement on 40th Anniversary
ஈரான் புரட்சிகர கொள்கைகளிலிருந்து பின்வாங்க கூடாது
இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40ஆண்டு நிறைவை முன்னிட்டு இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் விடுத்துள்ள "இஸ்லாமிய புரட்சின் இரண்டாம் கட்டம்" என்ற செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாமியப் புரட்சியானது  ஈரானின் பாதுகாப்பு, உறுதிப்பாடு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஈரான் தனது தேசிய மற்றும் புரட்சிகர பெருமானங்களில் இருந்தும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்றும் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும், ஒரு சில நாடுகளே புரட்சியின் ஊடாக மாற்றங்களை மேற்கொண்டன. எழுச்சிபெற்ற அவ்வாறான நாடுகளில் ஒரு சில நாடுகளே தம் இலக்கை அடைவதற்கு இறுதிவரை போராடி, ஆட்சி மாற்றத்துக்கு அப்பால், தமது புரட்சி பெறுமானங்களை காத்துக்கொண்டுள்ளன.
இருப்பினும், ஈரானிய தேசத்தின் புனிதமிக்க இஸ்லாமிய புரட்சியானது - இந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் அனைத்திலும் மக்கள்மயப்பட்ட ஒரே புரட்சியாகும் - நாற்பது ஆண்டுகளாக பெருமையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே புரட்சி, அதனது பெறுமானங்களையும் கண்ணியத்தையும் துரோகிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டுள்ளது; மேலும் அது அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து, அதன் கண்ணியம் மற்றும் புரட்சியின் அசல் நோக்கங்களையும் பாதுகாத்துள்ளது.
இனி நாம் புரட்சியின் இரண்டாவது கட்டமாக சுய வளர்ச்சி சமூகம்-செயலாக்கம் மற்றும் நாகரிகத்தை கட்டியெழுப்புதல் என்பதற்குள் நுழையவேண்டும்.
உலகு சடவாதத்தின் அடிப்படையில் கிழக்கெனவும் மேற்கெனவும் பிளவுபட்டு இருந்தவேளை, எவரும் எதிர்பாரா வண்ணம் இஸ்லாத்தின் அடிப்படையிலான மகோன்னத புரட்சி வலிமையுடன் களத்தில் நுழைந்தது; ஏற்கனவே போடப்பட்டிருந்த கட்டமைப்பை உடைத்தெறிந்து, காலாவதியான பழைமைவாத சிந்தனையை கிழித்தெறிந்தது. பொருள்முதல்வாதத்துக்கும் சன்மார்க்கத்துக்கும் இடையில் ஓரிணைப்பை ஏற்படுத்தி, ஒரு புதிய சகாப்தத்தின் வருகையை இஸ்லாமிய புரட்சி கட்டியம் கூறியது.
இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40 ஆண்டு விழாவைக்  கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதன் மீது விரோத போக்குக்கொண்டிருந்த இரண்டு மையங்களில் ஒரு மையம் ஏற்கனவே சரிந்து விட்டது; இரண்டாவது மையமும் மீள முடியாத சிக்கல்களின் ஊடாக சீக்கிரமே சரியக்கூடிய அடையாளங்களை வெளிக்காட்டி வருகின்றது. இந்நிலையில் இஸ்லாமிய புரட்சி அதனது கோர்ப்பாடுகளைத் தக்கவைத்துக்கொண்டு, குறிக்கோளை நோக்கி துரிதமாக  முன்னேறி வருகிறது.
புரட்சியின் குறிக்கோள்களான சுதந்திரம், அறநெறி, ஆன்மீகம், நீதி, கண்ணியம், பகுத்தறிதல் மற்றும் சகோதரத்துவம் ஆகிய எதுவும் காலாவதியாவது கிடையாது. காலவோட்டத்தில் எழுச்சிப்பெரும் அல்லது வீழ்ச்சியடையும் சமூகத்துக்கோ அல்லது தலைமுறைக்கோ அது மட்டுப்படுத்தப்பட்டதும் அல்ல. மக்கள் இந்தப் பெறுமானங்களை  அசட்டை செய்வர் என்று கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.
தொடங்கியதில் இருந்தே, இந்த புரட்சி மூர்க்கத்தனமானதாகவோ அல்லது இரத்தத்தை ஓட்டுவதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை; அது செயலூக்கமற்றதாகவோ அல்லது தயக்கம் கொண்டதாகவோ இருந்ததில்லை; சண்டித்தனத்துக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ அஞ்சாது அடக்கி ஒடுக்கப்பட்டவர்களை காப்பதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றது.

எதிர்காலம்: இளைஞர்களுக்கு ஒரு செய்தி
மகோன்னதமான இஸ்லாமிய ஈரானை கட்டியெழுப்பும் பொறுப்பு இளைஞர்களிடமே உள்ளது. அவர்கள் தான் கடந்த தலைமுறையின் அனுபவங்களில் பாடம்பெற்று தமது சொந்த அனுபவங்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல வேண்டும்.
எதிர்வரும் காலம் உங்களுடையது. உங்களது புரட்சியை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். நீங்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் உள்ளீர்கள். புரட்சியின் உயர்ந்த இலட்சியத்தை வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டியது உங்களது கடமை. இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையை எதிர்நோக்கி ஒரு நவீன இஸ்லாமிய நாகரீகத்தை தோற்றுவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றிய நல்ல அறிவை வளர்த்து, அதன் மூலம் படிப்பினைப் பெற வேண்டும். இந்த மூலோபாயம் புறக்கணிக்கப்பட்டால், சத்தியத்தின் இடத்தை பொய்மை ஆக்கிரமித்துவிடும் மேலும் எதிர்காலத்தில் அடையாளம் காணமுடியா அச்சுறுத்தல்களினால் அவதியுற நேர்ந்திடும். புரட்சியின் எதிரிகள், கடந்த காலத்தில் செய்து வந்தது போல், இன்றும் கூட பணம் மற்றும் தங்கள் வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி, எமக்கு எதிராக பொய்களை பரப்பும் அவர்க்களது முயற்சிகளில் உத்வேகம் கொண்டுள்ளனர்.
இஸ்லாமியப் புரட்சி நாட்டினுடைய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்துள்ளதுடன் பல முனைகளில் முன்னேற்றத்திற்கான "இயந்திரம்" என செயல்பட்டதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளது.
தேர்தல்களிலும் நாட்டின் ஏனைய அரசியல் விவகாரங்களிலும் மக்களது பங்களிப்பை ஊக்குவித்து, தொண்டு நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற சமூக விடயங்களில் ஈடுபாடுகொள்ளச் செய்துள்ளது புரட்சியின் மற்றுமொரு முக்கிய சாதனையாகும்.
இன்னும், மேற்குலகினது  குறிப்பாக அமெரிக்காவினது குற்றச் செயல்கள், பலஸ்தீன் விவகார பின்னணி, பாலஸ்தீனிய தேசத்தின் வரலாற்று அடக்குமுறை, யுத்தவெறி நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு போன்ற அனைத்து தீயவற்றையும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள்.
எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களால் கருத்தில்கொள்ளப்பட  வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் நாம் இயற்கை மற்றும் மனித வளங்களின் அடிப்படையில் தனித்துவமான நாடொன்றில் வாழ்கிறோம் என்பதாகும். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இந்த வளங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாது உள்ளன அல்லது சிறிதளவே பயன்படுத்தப்படுகின்றன. துடிப்புள்ள இளைஞர்களின் புரட்சிகர முயற்சியினால் இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் ஒழுக்க முன்னேற்றத்தை முன்னோக்கி ஒரு உண்மையான பாய்ச்சலைக் ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் தீங்காகவே அமையும்
புரட்சியின் முதல் நாளுக்கும் இன்றைக்கும் இடையிலான ஒரு ஒப்புவமை வரைந்து  காட்டிய இமாம், எமது சுதந்திர வேற்கையின் உறுதிப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் அமெரிக்காவினதும் ஈரானின் ஏனைய எதிரிகளினதும் எதிர்ப்புக்களைத் தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போலவே, இறையாண்மை கொண்ட ஈரான் திமிர் பிடித்த ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்கிறது. இன்று அந்த எதிர்ப்பில் சில அர்த்தமுள்ள  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்காலத்தில் வெளிநாட்டு முகவர்களின் ஊடுருவலை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக அல்லது தெஹ்ரானில் சியோனிச ஆட்சியின் தூதரகம் மூடப்படுதல் காரணமாக, அல்லது அமெரிக்க உளவு மையம்  (தெஹ்ரானில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம்) அம்பலப்படுத்தப்படுதல் காரணமாக அமெரிக்கர்கள் எம்மை எதிர்த்து வந்தனர்.   இன்று அவர்களது கோபத்துக்கான காரணம் மாறியுள்ளது. சியோனிச அரசின் எல்லையில் இஸ்லாமிய ஈரானின் சக்திவாய்ந்த பிரசன்னம்மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களின் இதயத்திலேயே பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பிற்கான இஸ்லாமிய குடியரசின் ஆதரவு மற்றும் இந்த பிராந்தியம் முழுவதும் சியோனிஸ எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் வானுயர பறக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் கொடி என்று காரணங்கள் மாறியுள்ளன.
அந்நாட்களில், ஒரு சில ஈரானிய நயவஞ்சகர்களின் உதவியோடும் சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைக் கொண்டு இஸ்லாமிய ஈரானை வெற்றிகொண்டுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இன்று அதற்காக பல நாடுகளின் துணை அவசியம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். அல்லாஹ்வின் உதவியால் இதிலும் அவர்கள் நிச்சயமாக தோல்வியடைவர்.
வாஷிங்டனுடனான உரையாடல் எந்தவொரு பயனும் தராது மேலும் ஐரோப்பிய நாடுகளில் பல ஏமாற்றுப்பனவாகவும் நம்பத்தகாததாகவும் உள்ளன.
புரட்சியின் பெறுமானங்களை பாதுகாத்துக்கொண்டு, அந்த அரசாங்கங்களுடன் "தீர்க்கக்கூடிய" பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க முயற்சியுங்கள்; அவர்களுடைய வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் உறுதியுடன் செயல்படுங்கள் என்று இமாமவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அமெரிக்காவுடனான எந்த பிரச்சினையையும் பேச்சுவார்தைகளினூடாக தீர்க்கமுடியாததாக இருப்பதோடு, அவ்வாறான பேச்சுவார்த்தை எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமேயன்றி, பயனளிக்கப்போவதில்லை.
பலஸ்தீனுக்கான இஸ்லாமிய குடியரசின் ஆதரவும்  பிராந்தியத்தில் அதனது சக்திவாய்ந்த பிரசன்னமுமே அமெரிக்காவின் பிரதான பிரச்சினை.
(சியோனிஸ) எதிர்ப்பு சக்திகளுக்கு அதி சக்திவாய்ந்த நவீன ஈரானிய ஆயுதங்கள் சென்றடைவதைத் தடுப்பதில் வாஷிங்டன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
அரசியல் ரீதியாக ஈரானை எதிர்கொள்வதற்கு மற்ற நாடுகளின் ஆதரவு தேவை என்று வாஷிங்டன் கருதுகிறது. ஆயினும் இஸ்லாமிய ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் எந்த முயற்சியும், அல்லாஹ்வின் உதவியால், தோல்வியிலேயே முடியும்.
அல்லாஹ்வின் அருளால் உலகில் இஸ்லாமிய குடியரசு இன்று ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்த அடைவுக்காக இஸ்லாமிய புரட்சிக்கே நன்றி சொல்ல வேண்டும். தேசிய முன்னேற்றத்தை துரிதப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஈரானிய இளைஞர்களை கேட்டுக்கொண்டதோடு பிப்ரவரி 11 ம் தேதி இஸ்லாமியப் புரட்சியின் 40 வது ஆண்டு நிறைவை குறிக்கும் பேரணிகளில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக ஈரானியர்களுக்கு ஆயத்துல்லாஹ் காமனெய்  நன்றி தெரிவித்தார்.

https://www.presstv.com/Detail/2019/02/13/588466/Iran-Leader-Statement-Islamic-Revolution-Second-Step


Monday, February 11, 2019

இஸ்லாத்தினால் ஈரானுக்கு பெருமை ஈரானினால் முஸ்லிம்களுக்கு பெருமை...!!

The Achievements of Islamic Revolution


இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று வெறும் கிரியைகளுக்கும் அனுஷ்டானங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதுமட்டுமே இஸ்லாம் என முஸ்லிம்கள் நம்பவைக்கப்பட்ட காலகட்டத்தில், அல்லாஹ்வின் இறைமை, ஆட்சி அதிகாரம், சட்டமியற்றும் அதிகாரம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவிடாது, அற்பவிடயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிகளில் உலமாக்களை முடக்கிவைத்திருந்த காலகட்டத்தில் வெடித்ததே ஈரானில் இஸ்லாமிய புரட்சி; அதுவும் உலமாக்களின் தலைமையில்.

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். இஸ்லாமிய உலகைத் துண்டாடி, எமக்கு வேண்டிய விதத்தில் எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லிம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில், மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் வெடித்த இந்த புரட்சி ஏகாதிபத்தியவாதிகளை திக்குமுக்காட வைக்கிறது.

'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமொன்றே போதும்; அல்லாஹு அக்பர்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது.


அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு ஆள முடியும்…? நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் முஸ்லிம் ஆட்சியாளர்களே கேலி செய்தனர். இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர்.

அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 40 ஆண்டுகளை கடந்துகொண்டிருக்கிறது. இந்த 40 ஆண்டுகளில் இஸ்லாமிய ஈரான் கண்டுள்ள வளர்ச்சி கண்டு இஸ்லாத்தின் எதிரிகள் மிரண்டுப்போயுள்ளனர்.

இவர்களால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், உள்நாட்டு கலவரங்கள், யுத்தம், பொருளாதாரத்தடை எல்லாவற்றையும் தாண்டி இஸ்லாமிய ஈரான் அடைந்துவரும் முன்னேற்றம் இவர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இஸ்லாமிய புரட்சியினூடாக, வியத்தகு சாதனைகளை படைத்து வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசு.... அதன் மீது யுத்தம் ஒன்று திணிக்கப்படாதிருந்திருந்தால், பொருளாரத்தடை விதிக்கப்படாதிருந்தால், இஸ்லாம் விரோத அரபு ஆட்சியாளர்கள் நெருக்குவாரங்களை கொடுக்காதிருந்திருந்தால்...??? இன்று இஸ்லாமிய ஈரான் எங்கோ சென்றிருக்கும்.

இஸ்லாமிய புரட்சியின் பயனாக ஈரான் பெற்றுள்ள வெற்றிகளில் சில:

பாதுகாப்புத் துறையில் ஈரான் பிராந்தியத்தில் வல்லரசு என்றே கூறுமளவுக்கு வளர்ந்துள்ளது. தனது பாதுகாப்புத் தேவையில் 85% ஈரான் சுயமாக உற்பத்திசெய்கிறது. ஏவுகணைகள், யுத்த விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ரேடார்கள், யுத்த டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் அவசியமான யுத்தத் தளபாடங்கள் அனைத்தையும்  தாமே உற்பத்தி செய்து, தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

இது ஈரான் இஸ்லாமிய குடியரசின் சுய தயாரிப்புகளில் ஒன்று. மூன்று வருடங்களுக்குமுன் காட்சிப்படுத்தப்பட்டது.

கல்வித்துறையில் ஈரான்

கல்வித்துறையில் ஈரான்தான் இப்பிராந்தியத்தில் மத்திய ஸ்தானமாகும். கலை, மருத்துவம், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்குவதால் பிராந்தியத்தில் மாணவர்கள் ஈரானிய பல்கலைக்கழகங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

ரோபோக்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. வாகன உற்பத்தியிலும் ஈரான் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சைக்காக ஈரான் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.




விண்வெளி ஆய்வு

விண்வெளி ஆய்வுத் துறையில் ஈரான் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. தனது முயற்சியில் ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், கொஞ்சமும் தாளராது பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சிலவருடங்களுக்கு முன் ஈரான் குரங்கொன்றை விண்ணுக்கு அனுப்பியும் ஆய்வுகளை நடத்தியது. விண்வெளி ஆய்வுத் துறை உலகில் வல்லமைக் கொண்ட 9 நாடுகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசும் ஒன்று.











அணு ஆய்வு

அணு ஆய்வுத்துறையில் ஈரான் அடைந்துவரும் முன்னேற்றம் வல்லரசுகளையும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் பொறாமைக் கொள்ளச் செய்துள்ளது. அணு சக்திகொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்து பாகிஸ்தான், ஈராக் மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளுக்கும் ஈரான் ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல (ஹராம்) என்று இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் பத்வாவே வழங்கியுள்ளார். 

ஆக, அணு சக்தியை மனித தேவைக்காக மட்டுமே அன்றி, ராணுவ தேவைக்காக பயன்படுத்துவதில்லை என்று ஈரான் மிக உறுதியாக இருக்கிறது.

மருத்துவத் துறை

ஈரான் தமக்கு அவசியமான மருந்து வகைகளில் 90% த்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

ஈரானிய மருத்துவ மனைகளில் சர்வதேச தரத்திலான வைத்திய சேவைகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எந்த ஓர் ஈரானியத் தலைவரும் வைத்தியம் பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை என்பதில் இருந்து இதனை புரிந்துகொள்ளலாம்.

அறிவியல் ரீதியாக இஸ்லாமிய ஈரான் பிராந்தியத்தில் கொடிகட்டிப்பறக்கிறது.  அல்லாஹ் அந்த நாட்டுக்கு இன்னும் இன்னும் அருள்புரியவேண்டும்.




============
தாஹா முஸம்மில் 

Thursday, February 7, 2019

வல்லரசுகளையே அதிரவைத்த "அல்லாஹு அக்பர்" என்ற கோஷம்...! (இஸ்லாமிய புரட்சி - ஒரு சுருக்கமான வரலாறு)


Islamic Revolution in Iran - That shook the world



2500 ஆண்டுகால முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பஹ்லவி ஆட்சியின் 50 ஆண்டுகால கொடுங்கோன்மையை முற்றிலுமாக இல்லாதொழித்து, ஈரானில் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது. இதற்காக ஈரானிய மக்கள் செய்த தியாகம் கொஞ்சமல்ல சுமார் 60,000 பேர் தங்கள் இன்னுயிரை இந்த இஸ்லாமிய போராட்டத்தில் அர்ப்பணித்தனர். அவர்களது நீண்டகால போராட்டம், இறுதியில், இறையருளால் வெற்றிபெற்றது.

மன்னர் ஷா, ஈரானிய மக்களை ஏமாற்ற பல கபட நாடகங்களை ஆடினார். அதிலொன்றுதான் 1962 ஆம் கொண்டுவரப்பட்ட மாநில மற்றும் மாகாண சபைகளுக்கான சட்ட அங்கீகார மசோதா. இதற்கு ரீஸா பாஹலவி, ஷாஹ்வினதும் மக்களினதும் 'வெள்ளைப் புரட்சி' என்று பெயர் வைத்தார். இந்த சட்டத்தின் மூலம் ஷா பல இஸ்லாமிய மரபுகளை மீறினார்;. புனித குர்'ஆனில் சத்தியம் செய்து பதவி ஏற்கும் முறை நீக்கப்பட்டு, இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகள், வெள்ளைப் புரட்சி என்ற பெயரில் சட்டமாக்கப்பட்டது.
ஈரானிய மக்களை இஸ்லாத்தில் இருந்து தூரப்படுத்தும் சதி முயற்சியாக இதனை அறிந்துகொண்ட உலமாக்கள், ஆயத்துல்லாஹ் கொமைனியின் தலைமையில் வெகுண்டெழுந்தனர். வன்மையாக எதிர்த்தனர். 1963 ஆம் ஆண்டு ஈரானிய உலமாக்கள் அவ்வாண்டின் புதுவருடத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க மக்கள் அதற்கு அமோக ஆதரவு வழங்கினார். கும் நகரில் அமைந்துள்ள பாயிஸியே மதரஸாவில் துக்க தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் மீது ஷாவின் சவாக் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் உலமாக்களையும் மக்களையும் மேலும் கொதிப்படையச் செய்தது. அவ்வாண்டு ஜூன் மாத ஆஷூரா நிகழ்ச்சிகளில் உரையாற்றிய இமாம் கொமைனி, ஷாவின் இஸ்லாம் விரோத போக்கைக் கண்டித்தது மட்டுமல்லாமல் ஈரானில் அமெரிக்க மற்றும் இரேலிய தலையீடுகளையும் வண்மையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து 1963 ஜூன் மாதம் 5 ஆம் திகதி இமாமவர்கள் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தி காட்டுத் தீ போன்று ஈரான் முழுவதும் பரவியது. இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஷா தனது இரும்புக்கரம் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்கலானார்; இதனால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர், காயப்பட்டனர். ஈரானில் இஸ்லாமிய இயக்கம் உயிர்பெற்றது இதிலிருந்தான் என்று சொல்லவேண்டும். நாட்டு மக்கள் தொடர்ச்சியாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக இமாம் கொமைனி 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட அவர் ஷாவின் இஸ்லாம் விரோத கொள்கையை இன்னும் அதிகமாக விமர்சித்தார். கும் நகரின் பள்ளிவாயலொன்றில் உரையாற்றிய இமாமவர்கள் நாட்டையும் மக்களையும் அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் சதித்திட்டத்தை வன்மையாகக் கண்டித்தார். இதற்கான ஒரே தீர்வு இறைவனை முன்னிறுத்திய இஸ்லாமிய எழுச்சியே என்றும் குறிப்பிட்டார்.
இமாமவர்களின் தொடர் போராட்டத்தை சமாளிக்க முடியாத ஷா, அவரை மீண்டும் கைது செய்து 1964 நவம்பர் 4, இல் துருக்கியிற்கு நாடு கடத்தினார். சுமார் ஒரு வருடத்துக்கு பிறகு இமாம் கொமைனி நஜாப்பில் இருந்த தன்னுடைய மகன் ஆயத்துல்லாஹ் முஸ்தபா கொமைனியுடன் இணைந்து கொள்கிறார்.
இமாமின் மகன் ஆயத்துல்லாஹ் முஸ்தபா கொமைனி 1977 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஷாவின் கூலிப்படையினால் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து ஈரானிய மக்கள் கொதித்தெழுகின்றனர். நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்ட அலை எழுகிறது. 2500 வருடகால முடியாட்சியினது அஸ்தமனத்தின் ஆரம்பம் அதுவே எனலாம்.
ஈரானிய ஊடகங்களில் இமாமுக்கு எதிரான துர் பிரசாரங்கள், அதிகாரத்தில் உள்ளோரினால் முடுக்கிவிடப்படுகின்றன. 1978 ஜனவரி மாதம் 6ம் திகதி இமாமுக்கு எதிராக, கீழ்த்தரமான முறையில் கட்டுரையொன்று 'இத்திலாஅத்' பத்திரிகையில் பிரசுரமானது. இதனையடுத்து கும் நகரில், உலமாக்களின் தலைமையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கினர்; மக்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
ஷா மன்னர் இதனை தன் இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டார். பல உயிர்கள் பறிக்கப்பட்டன. இருந்தும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஓயவில்லை. நாடு முவதுமாகப் பரவியது. கொல்லப்பட்டவர்களின் 40வது தினத்தை நாடுமுழுவதும் அனுஷ்டிக்குமாறு உலமாக்கள் கோரிக்கை விடுத்தனர். தப்ரிஸ் நகரில் இவ்வாறு அனுஷ்டித்த பலரை ஷாவின் படை 1978 பெப்ரவரி 18ம் திகதி கொண்றுகுவித்தது. அவ்வாண்டும் புதுவருடத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்குமாறு ஈரானிய உலமாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது யஸ்த் நகரில் பலர் கொல்லப்பட்டனர். அரசுக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் அதிகரித்தது.
1978ம் ஆண்டு செப்டம்பர் 4 ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டனர். ஷாவுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டம் மூன்று நாட்களையும் தாண்டி தொடர்ந்தது. இதனையடுத்து ஷாவின் அரசு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தது. இதனை அறியாது வெளியில் வந்த மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இக்காலகட்டத்தில், ஈராக்கில் இருந்த இமாம் கொமைனிக்கு நெருக்குவாரங்கள் அதிகரித்தன் நாட்டில் இருந்து வெளியேறும்படி ஈராக்கிய அரசு உத்தரவிட்டது. அங்கிருந்து இமாம் குவைத்துக்கு சென்றார்... குவைத் எல்லையில் வைத்தே இமாம், அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பியனுப்பப்படுகிறார். இமாமவர்கள் வேறு வழியின்றி, 1978ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி பிரான்ஸின் புறநகரான நௌபெலே ஷட்டோவுக்கு குடிபெயர்கிறார். முழு உலகின் கவனமும் நௌபெலே ஷட்டோ பக்கம் திரும்புகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் அவ்விடம் நோக்கி படையெடுக்கின்றனர்.
ஈரானிய மக்கள் இமாமின் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். ஈரானிய ஊடகங்களில் இமாமின் செய்திகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது. இதனை முறியடிக்கும் விதத்தில், இமாமின் சகாக்கள் ஓர் உத்தியை கையாள்கின்றனர். இமாம் கொமைனியின் செய்திகளை சூட்சுமமான முறையில் பதிவு செய்து, அந்த ஒலிப்பதிவு நாடாக்களை மக்கள் மத்தியில் சென்றடையச் செய்தனர்.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்; எரிபொருள் விநியோகம், தொலைத்தொடர்புகள், வங்கிகள், நீர்வழங்கல் போன்ற அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைகின்றன் தொலைக்காட்சி மற்றும் வானொலியும் இணைந்துகொள்கின்றன... போராட்டம் மேலும் விரிவடைகிறது.
1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஷாவின் அரசு சர்வதேச கண்டங்களுக்கு உள்ளாகிறது.
மன்னராட்சி முறையைப் பாதுகாத்துக்கொண்டு, மக்களை சாந்தப்படுத்தும் முறையில், அதிகார அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இருந்தும் மக்கள் ஏமாற்றவில்லை.
இதற்கிடையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று சில ரஷ்ய சார்பு இடதுசாரி கொள்கையுடையோர் திட்டமிட்டனர். ஆனால் மக்களின் கோஷம் 'லா ஷர்க்கிய்யா, லா கர்பிய்யா, ஜூம்ஹூரிய்யா இஸ்லாமிய்யா' (கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாமிய குடியரசே வேண்டும் என்பதாகவே இருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ஷாவின் ராணுவம் நடுநிலை கடைபிடிக்கப்போவதாக அறிவிக்கின்றது. மன்னராட்சியின் மரணம் நெருங்கிவிட்டது என்று அறிந்த ஷா, 1979 ஜனவரி 16ம் திகதி ஆட்சிப்பொறுப்பை ஷாபூர் பக்தியாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறுகிறார்.
இமாம் கொமைனி நாடு திரும்புவதாக அறிவிக்கின்றார். இதற்கிடையில், இமாம் கொமைனியை ஏற்றிவரும் எந்த விமானத்துக்கும் தரையிறங்க அனுமதி மறுக்கப்படும் என்று பக்தியார் அரசு அறிவிக்கின்றது. இதனால் இமாமின் வருகை ஒரு வார காலம் தடைப்படுகிறது.
1979ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி இமாம் கொமைனி 15 வருடகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு, பிரான்சிலிருந்து நாடு திரும்புகிறார். பல மில்லியன் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இமாமை வரவேற்கின்றனர். 'அல்லாஹு அக்பர்' என்ற கோஷமும் ஸலவாத்தும் வின்னைப் பிழக்கிறது. இமாமவர்கள் விமான நிலையத்தில் இருந்து நேராக பெஹெஸ்த்தி ஸஹ்ரா அடக்கஸ்தலத்துக்கு சென்று, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். அங்கு உரை நிகழ்த்திய இமாமவர்கள் ஷாபூர் பக்தியாரின் ஆட்சி சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்துகிறார்.
அதே பிப்ரவரி மாதம் 5ம் திகதி இமாம் கொமைனியவர்கள் மெஹ்தி பஸர்கான் தலைமையில் தற்காலிக அரசொன்றை நிறுவுகின்றார். 8ம் திகதி விமானப்படையினர் இமாமிடம் விசுவாச பிரமாணம் செய்கின்றனர்.
இவ்வாறிருக்கையில் பிப்ரவரி 10ம் திகதி ராணுவனத்தின் சில பிரிவினர் அதிகாரத்தை தாம் கைப்பற்றியுள்ளதாகவும், ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கின்றனர். இதற்கு இமாமவர்கள், இந்த உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டாம்' வீடுகளில் இருந்து வெளியே வாருங்கள் 'அல்லாஹு அக்பர்' என்று உரத்து கோஷமிடுங்கள் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.
ராணுவ உத்தரவை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ராணுவ முகாம்கள், போலீஸ், வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தையும் மக்கள் சூழ்ந்து கொண்டனர் 'அல்லாஹு அக்பர்' கோஷத்தோடு.


ஷாவினால் அமர்த்தப்பட்ட ஷாபூர் பக்தியார் நாட்டைவிட்டு வெளியேறினார். அடக்குமுறையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளும் வெளியேறினர்.
ஈற்றில் 1979 பிப்ரவரி மாதம் 11ம் திகதி இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றது.
புரட்சியை வழிநடத்திய இமாம் கொமைனியினது நாமம் இஸ்லாமியர் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

வெற்றியின் ரகசியம்:

  • ஓர் உறுதியான கொள்கை 
  • அதில் ஈமான் கொண்ட மக்கள் கூட்டம் 
  • இறைவனையன்றி வேறு எதற்கும் அஞ்சா தலைமைத்துவம் 



- தாஹா முஸம்மில்