Emotional Interpretations Obscure True Message of Imam Hussein’s Uprising: Scholar Hojat-ol-Islam Hameed Qara'ati
இக்னா,
இஸ்லாமிய ஈரானின் ஒரு பிரபலமான ஊடகம், ஜூலை 14, 2025 வெளியிட்ட ஆக்கம் இது. இவ்வாக்கம்
புனித கர்பலாவின் தொனிப்பொருளை, விதிவிலக்காக, ஒரு புது கண்ணோட்டத்தில் நோக்குகிறது.
பொதுவாக முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து
தினங்களை உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் துக்க தினங்களாக
அனுஷ்டிக்கிறார்கள். பல்வேறு வழிகளில் தங்களது துயரத்தையும் துக்கத்தையும்
வெளிப்படுத்துகிறார்கள். 1300
வருடங்களுக்கு முன்பு ஈராக் தேசத்து கர்பலா மைதானத்தில் நபி (ஸல்) அவர்களின் பேரர் ஹுஸைன்
(அலை) அவர்கள் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக ஈந்ததை நினைவூட்டும்
சடங்காக இந்த துக்க தின அனுஷ்டித்தல்கள் அமைந்துவிட்டன. ஆனால் துக்கம்
அனுஷ்டிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோருக்கு ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர்த்
தியாகத்தின் தாத்பர்யமே தெரியாததுதான் விந்தை.
‘கர்பலா’
எனும் போதே உள்ளத்தில் எழுப்பப்படும் உணர்ச்சி, கவலையும் சோகத்தையும் கலந்த ஒரு உணர்வுசார்
நிகழ்வாகவே கருதப்படுவது, அதன் ஆழமான கருப்பொருளை வெளிக்கொணர்வதனை கடினமாக்கியுள்ளதாகவும்
அந்நிகழ்வில் புதைந்துள்ள தாத்பர்யமான ஆன்மீக கருத்தையும் மறைப்பதாகவும் இஸ்லாமிய ஈரானின்
பிரபல மார்க்க அறிஞர்கள் கவலையடைகிறார்கள். இக்னாவில் வெளியிட்டுள்ள இவ்வாக்கம் இதனையே
பின்வருமாறு கூறுகிறது;
ஈரானிய
அறிஞர்களில் ஒருவரான ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் வல்முஸ்லிமீன் ஹமீத் கராத்தி, இமாம் ஹுஸைன்
(அலை) அவர்களின் எழுச்சியின் உணர்ச்சிகரமான விளக்கங்கள் அவரது மரபைப் பற்றிய ஆழமான
புரிதலைத் தடுக்கின்றன என்றும், அவரது உதாரணத்தை மக்கள் அர்த்தமுள்ளதாக பின்பற்றுவதை
கடினமாக்கியுள்ளன என்றும் கூறுகிறார்.
இமாம்
ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சியில் இருந்து கற்றுக்கொள்வதற்கான தடைகள் குறித்து இக்னாவிடம்
பேசிய, பக்கீர் அல்-ஒலும் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் ஆசிரிய உறுப்பினருமான
இஸ்லாமிய அறிஞர் ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் வல்முஸ்லிமீன் ஹமீத் கராத்தி பல முக்கிய தடைகளை
அடையாளம் கண்டார். "இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன்
கலந்த தகவல்களின் வெளிப்பாட்டின் பற்றாக்குறை மற்றும் அறிவார்ந்த ஈடுபாடு இல்லாதது
முக்கிய தடைகளில் ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.
இமாம்
ஹுஸைன் (அலை) அவர்களின் புரட்சியை விளக்குவதில் நம்பகத்தன்மையற்ற தனிநபர்களின் தலையீடு
மற்றும் நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களின் பங்களிற்பிக்கு எதிராக அவர் எச்சரித்தார், அவை
இரண்டாவது பெரிய தடை என்று ஹமீத் கராத்தி சுட்டிக் காட்டினார். "மூன்றாவது சவால்,"
ஹமீத் கராத்தி தொடர்கையில், "ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் இமாம் ஹுஸைன்
(அலை) அவர்களின் எழுச்சியின் அகநிலை, அவர்களுடன் கர்பலா போரில் பங்கேற்ற அவர்களின்
குழு, பயன்படுத்திய உத்தி ஆகியவை பற்றிய பொறுப்பற்ற விளக்கங்கள் மற்றும் அவற்றின் பிரபலம்."
‘அதீத
உணர்ச்சிவசப்படுதல்’ மற்றொரு கடுமையான தடை என்று அவர் குறிப்பிட்டார்
– எங்கு உணர்வுகளும் பேரார்வமும் பகுத்தறிவை விட அதிகமாக இருக்குமோ அங்கு தெளிவு பிறப்பது
கடினமே. "உணர்ச்சி என்பது இன்பம் மற்றும் துன்பம் இரண்டிலும் இயற்கையான மனித வெளிப்பாடு,"
என்று அவர் விளக்கிய அவர் மேலும் கூறுவதாவது, "ஆனால் உணர்ச்சி, பகுத்தறிவு மற்றும்
சிந்தனைமிக்க பிரதிபலிப்பை மழுங்கச் செய்யக்கூடாது. பகுத்தறிவுதான் மனிதர்களை மற்ற
உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது" என்றார்.
உணர்ச்சிகள்
முக்கியமானவை மற்றும் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஆன்மீக புரிதல் உணர்ச்சியிலிருந்து
பகுத்தறிவை நோக்கி நகர வேண்டும், மாற்றமாக அல்ல என்று ஹமீத் கராத்தி வாதிட்டார்.
"நீண்ட காலமாக அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல் என்பது தனிப்பட்ட ரீதியாகவும்
சமூக ரீதியாகவும் மனிதகுலத்தின் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக மாறியிருக்கிறது,"
என்றும் ஹமீத் கராத்தி கூறினார்.
கி.பி
680 இல் கர்பலா போரில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது தோழர்கள் ஷஹீதாக்கப்பட்ட
இஸ்லாமிய மாதமான முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷுராவின் நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடுகையில்,
"இந்த நிகழ்வு சக்திவாய்ந்த மற்றும் மனதை இளக்குகிற காட்சிகளால் நிரம்பியுள்ளது,
ஆனால் அதைப் பற்றிய நமது பார்வை அதன் உணர்ச்சிகரமான அம்சங்களுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது."
என்று எச்சரித்தார்.
உணர்ச்சியின்
மூலம் மட்டுமே பெறப்படும் அறிவு தற்காலிகமானது என்று சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில்,
"சுவாரஸ்யமாக, நம்பகமான வரலாற்று ஆதாரங்கள் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் நடத்தை,
பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள் பெரும்பாலும் தர்க்கம் மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக்
கொண்டவை என்பதையும் வெளிப்படுத்தி காட்டுகின்றன. தன்னைப் பின்பற்றுபவர்களையும், எதிரிகளையும்
சிந்தித்து செயல்பட இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் நடத்தையால்
இன்னும் சிலர் வழிநடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், எதிரிகளை எதிர்கொண்டபோதும்
அவர்களுடன் கோபத்தோடு பேசாமல், இரக்கத்தோடு அணுகினார்கள்."
இந்த
பகுத்தறிவு மற்றும் கொள்கை அணுகுமுறை, மகாத்மா காந்தி போன்ற முஸ்லிம் அல்லாத தலைவர்கள்
கூட இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை உத்வேகத்தின் ஆதாரமாகப் பார்த்தார்கள் என்பதை விளக்குகிறது
என்று ஹமீத் கராத்தி கூறினார். "போரின் குழப்பத்திலும் இமாமின் பகுத்தறிவு தெளிவாகவும்
தனித்தும் நிற்கின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு
வரலாற்று நபரைப் பின்தொடரும்போது இரண்டு மட்டங்களில் பகுத்தறிவு தேவைப்படுகிறது என்று
கூறிய அவர், "முதலில், அந்த நபரின் வீர பண்புகளைத் தாண்டி அவரின் நிலையான மற்றும்
கொள்கை ரீதியான நடத்தைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக, வெவ்வேறு சவால்களுக்கு
அவர்களின் அணுகுமுறையை பகுப்பாய்வு செய்ய நமது சொந்த பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும்.
அப்போதுதான் நாம் பின்பற்றத் தகுந்த செயல் மற்றும் தர்க்கத்தின் மாதிரியைப் பிரித்தெடுக்க
முடியும்."
ஹமீத்
கராத்தியின் இக்கருத்துக்கு ஒப்பான கருத்தை ஈரானின் மற்றுமொரு அறிஞர் டாக்டர் நெமத்துல்லா
சஃபாரி ஃபோரோஷானி, ஆஷுரா என்பது ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, அது ஷியா இஸ்லாமின்
ஆன்மீக மற்றும் இறையியல் அடித்தளமாகும் என்று வலியுறுத்துகிறார். கும்மில் ஒரு அறிஞர்
அமர்வில் பேசிய அவர், வரலாற்று பகுப்பாய்வை மட்டுமே நம்பியிருப்பது மதச்சார்பற்றதாக
மாறும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, அஷுராவின் முக்கியத்துவத்தை
முழுமையாக புரிந்துகொள்ள ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டவியல்), இறையியல், சமூகவியல், மற்றும்
காவிய ஆய்வுகள் உள்ளிட்ட ஒரு பல்துறை அணுகுமுறைக்கு அவர் வாதிடுகிறார். அவரின் கருத்தில்
அடங்கியுள்ள முக்கிய கூறுகளாவன:
- ஆஷுரா என்பது
கடந்த கால அவலம் மட்டுமல்ல, அது ஷீஆ அடையாளத்தின் ஒரு அடிப்படைத் தருணம்.
- ஹதீஸ்,
இல்ம் அல்-ரிஜால் போன்ற இஸ்லாமிய அறிவியலை வரலாற்றாசிரியர்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.
- அறிவார்ந்த
ஈடுபாட்டின் நான்கு நிலைகளான பரிச்சயம், தேர்ச்சி, நிபுணத்துவம் மற்றும் வாழ்நாள்
முழுவதுமான இறை நம்பிக்கை ஆகியவற்றை அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.
- இமாம் ஹுஸைன்
(அலை) அவர்களின் தியாகம் ஒரு வரலாற்று சத்தியம் மட்டுமல்ல, எதிர்ப்பு மற்றும்
நீதியின் நிலைத்திருக்கும் மற்றும் தொடரும் அடையாளமாகும்.
ஈரானிய
அறிஞர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் நஜாஃப் லக்சாய் ஆகியோரும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின்
யஸீதுக்கு எதிரான எழுச்சி நவீனகால கொடுங்கோல் ஆட்சி மற்றும் அநீதியை எதிர்ப்பதற்கான
காலமற்ற வரைபடமாக செயல்படுகிறது என்று வாதிடுகிறார்கள். குர்ஆனிய ஆட்சி குறித்த ஆன்லைன்
கருத்தரங்கில் பேசிய லக்சாய், யஸீதின் ஆட்சியை ஃபிர்அவ்னின் அடக்குமுறை ஆட்சியுடன்
ஒப்பிடுகிறார், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் யஸீதின் தலைமையை சட்டவிரோதமானது மற்றும்
இஸ்லாத்திற்கு ஆபத்தானது என்று கருதுவதாகவும் வலியுறுத்துகிறார். அவர் தெரிவிப்பதாவது:
- இமாம் ஹுஸைன்
(அலை) அவர்கள் மதீனாவிலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்த குர்ஆன் வசனமான அல்-கசாஸ்
21 ஐ மேற்கோள் காட்டி, யஸீதுக்கு விசுவாசத்தை மறுத்தார்.
- யஸீதின்
சொந்த எழுத்துக்கள் மத விழுமியங்களை கேலி செய்தன, இது இவனை எதிர்க்க இமாமின் முடிவை
வலுப்படுத்தின.
- இமாம் ஹுஸைன்
(அலை) அவர்களின் மரபு உலகளாவிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்பைத்
தூண்டுகிறது என்றும், இன்றும் சத்தியத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்க மக்களை வலியுறுத்துகிறது
என்றும் அறிஞர் முடிக்கிறார்.
இக்கருத்துக்களை
திறம்பட புரிந்துகொண்டு கர்பலா என்பது வெறும் வரலாறு அல்ல - அது ஒரு தார்மீக திசைகாட்டி
என்பதை ஒரு கிளர்ச்சியூட்டும் நினைவூட்டலாக நோக்குவோம்.
No comments:
Post a Comment