Thursday, January 30, 2025

"செயலற்ற முஸ்லிம் பெண்" என்ற மேற்கத்திய மாயையை சுக்குநூறாக்கிய காஸா பெண்கள்

 Women of Gaza shatter Western cliché of "passive Muslim woman"

By Zahra Shafei, cultural researcher

பல ஆண்டுகளாக, உலகம் மேற்கத்திய அரசாங்கத்தின் கருத்தியல் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்த முஸ்லிம் பெண்களின் கதையையே முன்வைத்தது. இந்த விவரிப்பில், முஸ்லிம் பெண் அதிகாரமற்றவராகவும், ஒடுக்கப்பட்டவராகவும், தனக்கென அடையாளம் இல்லாதவராகவும், ஆணாதிக்க அமைப்பில் சிறைவைக்கப்பட்டவராகவும், மத நம்பிக்கைகளால் விலங்கிடப்பட்டவராகவும் சித்தரிக்கப்பட்டார். முஸ்லிம் சமூகங்களில் பெண்களின் முகமையை மறுப்பதன் மூலம் இந்த திரிக்கப்பட்ட கேலிச்சித்திரம், மேற்கின் தலையீட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்த உதவியது. ஆனால், காஸாவில் இந்த பிம்பம் நொறுங்குகிறது. இங்குதான் முஸ்லிம் பெண்கள் சியோனிச ஆட்சியின் கொடூரமான ஆக்கிரமிப்புகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராக நிற்பது மட்டுமல்லாமல், மேற்கத்திய சக்திகளின் இழிவான கதையாடல்களுக்கும் சவால் விடுகிறார்கள்.

கடந்த 15 மாதங்களில், இந்த பெண்கள் தைரியம், உறுதியான தன்மை மற்றும் சத்தியத்தின் மீதான நம்பிக்கையின் அடையாளமாக மாறிவிட்டனர் என்பதை உலகறியச் செய்துவிட்டனர்..

அக்டோபர் 7 க்குப் பின்னர் சியோனிச ஆட்சியால் காஸா மீது திணிக்கப்பட்ட இரத்தக்களரி போரின் போது, முந்தைய ஆக்கிரமிப்பு ஆண்டுகளில் போலவே, காஸாவின் முஸ்லிம் பெண்கள் துன்பம் மற்றும் அழிவு என்ற குழப்பமான அரங்கில் மற்றும் இடைவிடாத கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர்ப்பணியின் உண்மைக்கு தொடர்ந்து சாட்சியாக உள்ளனர்.

இந்தப் பெண்களின் துணிச்சல் வெறும் தோட்டாக்கள் மற்றும் குண்டுகளுக்கு எதிரான ஒரு பதிலடி மட்டுமல்ல; அவர்களை பலவீனமானவர்களாகவும், தோற்கடிக்கப்பட்டவர்களாகவும், நிழல்களில் மறைந்திருந்தவர்களாகவும் சித்தரித்த பொய்கள், திரிபுகள் மற்றும் கதைகளுக்கு எதிரான மறுக்க முடியாத அத்தாட்சியாகவும் அது இருந்தது..

மேற்கில் மேலாதிக்கம் செலுத்தும் கதையாடல் முஸ்லிம் பெண்களை நிரந்தர ஒடுக்குமுறைக்கு பலியானவர்களாக வரையறுக்க முற்படும் கீழைத்தேயவாத கற்பனைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த கூற்றின் படி, இந்த பெண்கள் எந்த அதிகாரமும் இல்லாதவர்கள் மற்றும் ஒரு மத சமூகத்தில் ஆண்களால் ஒடுக்கப்படுகிறார்கள். இத்தகைய சித்தரிப்புகள் போர் பிரச்சாரத்திற்கு வழி வகுக்கின்றன மற்றும் "விடுதலை" என்ற போர்வையின் கீழ் காலனித்துவ தலையீடுகளுக்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குகின்றன. கசப்பான முரண்நகை என்னவென்றால், இந்த விடுதலை என்று அழைக்கப்படுவது எப்போதும் குண்டுகள், பொருளாதாரத் தடைகள், அழிவு மற்றும் நாடுகளின் பேரழிவு ஆகியவற்றுடன் சேர்ந்தே வருகிறது என்பதாகும்.

ஆயினும்கூட, காஸாவின் பெண்களின் யதார்த்தம் என்னவென்றால், அவர்கள் காஸாவின் எதிர்ப்பு மற்றும் உயிர்வாழ்வின் தூண்களாக இருக்கிறார்கள் - தங்கள் குழந்தைகளை தங்கள் சொந்த உடல்களால் பாதுகாப்பதன் மூலம் வான்வழித் தாக்குதல்களின் போது, அல்லது பஞ்சம் மற்றும் அழிவுக்கு மத்தியில் பராமரிப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட தங்கள் சமூகங்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆறுதல் செய்திகளை வழங்குவதன் மூலம், அல்லது அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பிறகு "அல்லாஹு அக்பர்" மற்றும் "ஹஸ்பி அல்லாஹ்" என்று கோஷமிட்டனர். இது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பொறுமைக்கு ஒரு சான்றாக இருந்தது.

மேற்கத்திய கதைகளில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் அவர்களின் கேலிச்சித்திரங்கள் மற்றும் நியாயமற்ற விதத்தில் அடக்குமுறையாளர்களாகவும் மற்றும் வன்முறையாளர்களாகவும்  எப்போதும் தவறாக சித்தரிக்கப்படும் அவர்களின் சகோதரர்கள் மற்றும் துணைவர்களுடன் இணைந்து மன உறுதியுடன் போராடினர். இந்த நம்பிக்கையும் அமைதியும்தான் காஸா குழந்தைகளின் சுதந்திரம், ஆக்கிரமிப்பாளரின் அழிவு, அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் வாழ்க்கையின் தொடர்ச்சி பற்றிய கனவுகளை வளர்த்தது.

வரலாற்றில் குழந்தைகளின் மிகப்பெரிய படுகொலையின் வலியைத் தாங்கிக் கொண்ட இந்த பெண்கள், இணையற்ற தைரியத்துடன் தொடர்ந்து அறிவிக்கின்றனர்: "நாங்கள் பொறுமையாக இருப்போம், எதிர்ப்பின் தலைவர்கள் எங்களைக் கேட்கும் வரை நாங்கள் விடாமுயற்சியுடன் இருப்போம்."

காஸாவின் பெண்களின் வலிமையின் அடிப்படை ஆதாரமாக இறை நம்பிக்கை இருந்தது. விசுவாசம் அவர்களுக்கு ஒற்றுமையையும் நோக்கத்தையும் கொடுத்தது.

குழுக்களாக குர்ஆனை மனப்பாடம் செய்தல் மற்றும் ஓதுதல், அகதி முகாம்கள் அல்லது அழிக்கப்பட்ட வீடுகளில் குர்ஆன் வகுப்புகளை ஏற்பாடு செய்தல், குண்டுவெடிப்புகளின் போது பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை முணுமுணுத்தல் மற்றும் கூடாரங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக மசூதிகளில் கூடுதல் ஆகியவை அவர்களின் ஈமானை பலப்படுத்தின.

கஷ்டங்களை எதிர்கொள்ளும் பொறுமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு போன்ற இஸ்லாமிய விழுமியங்கள் காஸாவின் பெண்களுக்கு ஆக்கிரமிப்பின் வன்முறையைத் தாங்கவும், ஓரங்கட்டப்படுவதன் உளவியல் பாதிப்பை சகிக்கவும் மனவுறுதியை அளித்தன. இமாம் காமனேயி கூறியது போல, இந்த பொறுமையின் மூலம், காஸா பெண்களாலும் மக்களாலும் "மனித மனசாட்சியை உலுக்க" முடிந்தது.

மேற்கத்திய ஊடகங்கள் நம்பிக்கைக்கும் மனித நெகிழ்ச்சிக்கும் இடையிலான ஆழமான தொடர்பை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. முஸ்லிம் பெண்கள் தங்கள் மத மற்றும் கலாச்சார கட்டமைப்புகளுக்குள் இருப்பதை அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர், இந்த பெண்கள் தங்கள் சமூகங்களில் வகிக்கும் முக்கிய பங்கை புறக்கணிக்கின்றனர். ஏனென்றால் இதுபோன்றவொரு ஒப்புதல் "மேற்கத்திய மீட்பர்" என்ற ஊடகங்களின் கதையாடலுக்குப் பின்னால் உள்ள திட்டங்களை அம்பலப்படுத்தும். மேற்கத்திய பெண்ணியத்தின் பாசாங்குத்தனம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவில் தெளிவாகத் தெரிகிறது, அது காலனித்துவ நிகழ்ச்சி நிரல்களுடன் இணைந்தால் மட்டுமே அவற்றை ஆதரிக்கிறது.

காஸாவின் முஸ்லிம் பெண், ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கிறார், தனது குழந்தையை ஜிஹாதைத் தழுவி போராட வளர்க்கிறார், ஜிஹாத் பற்றிய குர்ஆன் வசனங்களுடன் தனது கணவரை போருக்கு அனுப்புகிறார், தானே ஆயுதம் ஏந்துகிறார், அல்லது நதியிலிருந்து கடல் வரை சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார், அவர் பெண்ணியத்தின் காலனிய சமன்பாடுகளைத் தலைகீழாக மாற்றுகிறார்.

மேற்குலகு முன்வைக்கும் பெண்ணியம் அத்தகைய உறுதியையும் நெகிழ்ச்சியையும் அங்கீகரிப்பதில்லை என்பது மட்டுமல்ல, அதை தீவிரவாதம், மூளைச் சலவையின் விளைவு அல்லது வன்முறையின் சான்று என்று கண்டிக்கிறது. மேற்கின் காலனித்துவ தரங்களில், மதச்சார்பற்ற மற்றும் மேற்கத்திய இலட்சியங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண் தனது குடும்பம், தாயகம் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கும் ஒரு மதப் பெண்ணை விட மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறார். காஸா பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்தக் கருத்துக்கு சவால் விடுத்து, மனித விழுமியங்களை ஐரோப்பிய மைய அளவுகோல்களால் அளவிட முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

காஸா பெண்கள் பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வெற்றியின் அடையாளங்களாக உள்ளனர். முற்றுகை, இடப்பெயர்வு மற்றும் படுகொலைகள் மூலம் அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்ற சியோனிச ஆட்சி முயற்சித்த போதிலும், அவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த உறுதியானது செயலற்றது அல்ல, ஆனால் ஒரு செயலில் உள்ள இயக்கம்: அவை எதிர்க்கின்றன, மீண்டும் கட்டியெழுப்புகின்றன, இதயங்களில் நம்பிக்கையை வளர்க்கின்றன. இது எதிரிக்கு எதிராகவும், மேற்கத்திய சொல்லாடல்களுக்கு எதிராகவும் வெற்றியின் உருவகம்.

பல ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகள் முஸ்லிம் பெண்களை அடிபணிந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் என்று வரையறுத்துள்ளன. ஆனாலும், இந்த மாயையை உடைத்தெறிவது காஸா பெண்கள்தான். தங்கள் இஸ்லாமிய அடையாளத்தை வைத்திருப்பதன் மூலம், அவர்கள் மேலோட்டமான கருத்துக்களை மீறும் வலிமை, சுதந்திரம் மற்றும் தங்கள் மதம் மற்றும் தாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். மேற்கத்திய அளவுகோல்களின் கீழ் வரையறுக்கப்பட்ட கீழைத்தேயவாத சட்டகங்களுக்குள் அவர்களின் இலட்சியங்களும் அடையாளங்களும் மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த கதையை எழுதியுள்ளனர் - நம்பிக்கை, கண்ணியம் மற்றும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பின் கதை.

காஸா பெண்களின் போராட்டம் கதையாடல்களின் சக்தியை நமக்கு நினைவூட்டுகிறது. ஊடகங்கள் காலனித்துவ சக்திகளின் கருவியாக செயல்படும் ஒரு உலகில், தற்போதைய நிலையை சவால் செய்யும் குரல்களை ஓங்கச்செய்வது அவசியம். காஸா பெண்களின் உதாரணம் ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து மனித கண்ணியத்திற்காக போராடும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

காஸாவின் பெண்கள் தற்போதைய போர் நிறுத்தத்தின் போது தங்கள் முஜாஹிதீன்கள் மற்றும் போராளிகளை கௌரவிப்பதற்காக அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கும்போது, அவர்கள் அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட பொய்களை உடைக்கிறார்கள். ஒரு மேற்கத்திய இரட்சகருக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களாக அல்ல, ஆனால் அவர்களின் அசாதாரண கதையின் விசுவாசமான, கண்ணியமான கதாநாயகிகளாக இந்த பெண்களை உலகம் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

https://english.khamenei.ir/news/11418/Women-of-Gaza-shatter-Western-clich%C3%A9-of-passive-Muslim-woman