Saturday, January 7, 2023

சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவோம்...!

 Media war against Iran and the social responsibility


கடந்த 16 செப்டம்பர் 2022 அன்று, 22 வயதான ஈரானியப் பெண் மஹ்சா அமினி, கைதுசெய்யப்பட்டு, உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரானில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் வெடித்தன என்பதை நாம் அறிவோம். கலவரங்களை வியாபிக்கச் செய்வதற்கு ஈரானின் எதிர் சக்திகள் பயன்படுத்தியது ஊடகங்களை, குறிப்பாக, சமூக ஊடகங்களை என்பது குறிப்பிடத்தக்கது. மேலை நாட்டவர் ஏனைய நாட்டவர்களுக்கு கற்றுத்தரும் எந்த ஊடக நெறிமுறையும் இதன்போது கடைபிடிக்கப்படவில்லை. ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டிய சமூக ஊடகங்களை ஈரானுக்கு எதிரான, அழிவுக்கான ஆயுதமாகவே அவற்றைப் பயன்படுத்தின என்றால் மிகையாகாது.

நாம் வாழும் இந்த சகாப்தத்தின் முக்கிய அம்சம், தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றம், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் அபார வளர்ச்சி. இக்காலகட்டத்தில் நம் வாழ்வில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான தாக்கம் என்ன? நாம் வாழும் விதம் எவ்வாறு அமைந்துள்ளது? மற்றும் நம் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம்? போன்ற விடயங்களில் முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதன் மூலம் நாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு இணங்க நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் செலவழிப்பதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கம் என்பதை புரிந்துகொள்கிறோம்.

அல்லாஹுத்தஆலா அனைத்தையும் அறிந்தவன் என்பதால், அவன் குர்ஆனை இறக்கி, அதன் நடைமுறைப் பயன்பாட்டை ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் மூலம் நமக்குக் காட்டித் தந்துள்ளான். எனவே, இறுதிக் குறிக்கோளை மறந்துவிடாமல், எந்தப் புதிய முன்னேற்றங்களையும் சமூகம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் கருவிகளுடன் அல்லாஹு தஆலா கடைசி நாள் வரை மானுடர்களை சித்தப்படுத்தியுள்ளான்.

முன்பெல்லாம் ஒரு செய்தி ஒருவனை சென்றடைய நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் காலம் எடுக்கும். இப்போது அவ்வாறல்ல, சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்ற புதிய தகவல்தொடர்பு முறைகளுக்கு வழிவகுத்த இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரவலான பயன்பாடு மனித வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவனுக்கு ஒரு செய்தியை உடனடியாகவே வழங்கக்கூடிய ஆற்றலை இந்த தொழில்நுட்பம் மனிதனுக்கு வழங்கியுள்ளது. இது நமது காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.

சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாசிப்பு மற்றும் எழுதுதலின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தாலும், பெரும்பாலும் அவற்றின் உள்ளடக்கம் மற்றும் தரம் மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. எனவே, இந்த ஊடகங்களின் தீங்கு விளைவிக்கும் அம்சங்களுக்கு இரையாகிவிடாமல் இருக்க ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.

இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் மற்றும் அதுபோன்ற போன்ற சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இது சம்பந்தமாக சில அத்தியாவசிய போதனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், தீங்கிழைக்கும் செயல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும்.


செய்திகளை அனுப்புவதற்கு முன்னெச்சரிக்கை தேவை

ஒரு செய்தி எமக்கு கிடைக்கும் போது செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய எந்த முயற்சியும் எடுக்காது,  சிந்தனையற்ற விதத்தில் Forward பொத்தானை அழுத்துவது ஒரு பொதுவான போக்காக ஆகிவருகிறது. செய்திகளின் உள்ளடக்கத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அனுப்பியவரின் நோக்கத்தை அறியாமல் அல்லது பெறுநர்களில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்புவதில் இருந்து தவிர்ந்து கொள்வோம். இவ்வாறு அனுப்பப்படும் செய்திகள் பலசமயங்களில் தெளிவற்றவையாக, தனிநபர்களை இலக்குவைக்கப்பட்டவையாக இருப்பதை அவதானிப்பீர்கள்; அவற்றின் பின்னணியில் உள்ள உண்மை அரிதாகவே அறியப்படுகிறது.

எனவே, ஒரு செய்தியை அதன் உள்ளடக்கத்தை நிரூபிக்காமல் பரப்புவது மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பாவத்திற்கு வழிவகுக்கும்; ஒரு பொய்யைப் பரப்புவதும் அதற்கு ஆதரவாக இருப்பதும் பாவமான செயல் ஆகும். உள்ளடக்கம் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை செய்திகளைப் பகிரக்கூடாது. எந்தவொரு விஷயத்திலும் தவறான செய்திகள் அல்லது தவறான தகவல்கள் மற்றவர்களுக்கு தேவையற்ற கவலையையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும், மேலும் இது பொய்யைப் பரப்புவதற்கு சமமாக இருக்கும். நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒரு நபர் ஒரு பொய்யர் என்று கருதப்படுவதற்கு தாம் கேட்டதை எந்த ஆய்வுமின்றி மற்றவரிடம் கூறுவது போதுமானது. (முஸ்லிம்)

'இஸ்லாம்' தொடர்பான செய்திகளை பகிரும்போது அதிக முன்னெச்சரிக்கை அவசியம்

இஸ்லாமிய இயல்புடைய செய்திகள் இன்னும் கூடுதலான முன்னெச்சரிக்கையை வேண்டி நிற்கின்றன. அல்குர்ஆனின் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் அவற்றின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் (தமது கொள்கைகளுக்கு ஏற்றவிதத்தில்) செய்யப்பட்டு தவறான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன, சில சமயங்களில் அவை சுத்தப் பொய்யானவையாக இருப்பதையும் காண்கிறோம்; இதற்காக இவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதையும் பார்க்கிறோம்.

எந்த அடிப்படையுமற்ற, புனையப்பட்ட நன்மைகளை உறுதியளிக்கும் போலி செயல்கள் தொடர்பான செய்திகள், பலருக்கு முன்னனுப்புவதற்கான தலைப்புடன் பகிரப்படுகின்றன. சில சமயங்களில் 'இந்தச் செய்தியை குறைந்தபட்சம் இவ்வளவு  நபர்களுக்கு நீங்கள் அனுப்பவில்லை என்றால், உங்களுக்கு இது போன்ற தீயது நடக்கும்' என்ற எமோஷனல் பிளாக்மெயில் மற்றும் தவறான மிரட்டல்களும் அத்துடன் சேர்க்கப்படுகின்றன; இயற்கையாகவே இதுபோன்ற அனைத்து செய்திகளும் ஒரு முழு ஏமாற்று வேலை என்பதை புரிந்துகொள்வோம்.

செய்திகளின் நம்பகத்தன்மையை முழுமையாக உறுதி செய்யாமல், வெளித்தோற்றத்தில் இஸ்லாமிய போதனைகள் கொண்ட செய்திகளை அனுப்பும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆதாரப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள் கூட சிந்தனையுடன் பகிரப்பட வேண்டும்.

இன்னொருவரின் ஆக்கத்தைத் திருடாதிருப்போம்

சமூக ஊடகங்களில் நாம் அவதானிக்கும் இன்னுமொரு மோசமான செயல் என்னவென்றால் பிறரின் ஆக்கமொன்றை தன்னுடைய ஆக்கமாக காட்டி, தனது பெயரில் வெளிடுவதாகும். இது மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும். ஓர் ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால், பொது நண்மைக்கருதி அதை மற்றவர்களுக்கும் அறியச்செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஆக்கத்திற்கு உரியவரின் பெயரிலேயே அதை பதிவிடுங்கள். அதனால் நீங்கள் குறைந்துபோய் விட மாட்டீர்கள்.

பகிர்வதற்கான அனுமதி?

சில நேரங்களில், செய்திகள் தனிப்பட்ட இயல்புடையவையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது ஒரு நாட்டைப் பற்றிய தகவல் அல்லது செய்தியாகவும் இருக்கலாம். அனுப்பியவர் அந்தத் தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள சம்மதிப்பாரா என்பதை பகிர்வதற்கு முன் ஒருவர் சிந்திக்க வேண்டும். செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள குறிப்பிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்க்கொள்ள வேண்டும்; இல்லையெனில், பகிர்வது முற்றிலும் நெறிமுறையற்றது. ஒருவரின் தனிப்பட்ட கருத்தை எவ்வித மாற்றமும் செய்யாது பகிர்ந்தாலும் கூட,  நாமும் அதற்கு பொறுப்புதாரியாவோம்.

ஒரு பயனுள்ள செய்தி என்பதை உறுதி செய்தல்

நாம் விலகி நின்று புறநிலையாக சிந்தித்துப் பார்த்தால், சமூக ஊடகப் பயன்பாடுகளில் பெறப்படும் செய்திகளில் பெரும்பாலானவை பயனற்ற இயல்புடையவை என்ற முடிவுக்கே வருவோம். நல்ல செயல்களில் ஈடுபட கிடைக்கும் சந்தர்ப்பத்தை, பயனற்ற அல்லது சில சந்தர்ப்பங்களில் தீங்கு விளைவிக்கும் முயற்சியிலும் எமது விலைமதிப்பற்ற நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பதில் இருந்து நாம் தவிர்ந்துகொள்வோம்.

எந்தவொரு செய்தியையும் எழுதுவதற்கு அல்லது அனுப்புவதற்கு முன், “அந்த செய்தியால் இவ்வுலகில் யாருக்காவது ஏதேனும் நன்மை உண்டா?” என்று ஒருவர் சிந்திக்க வேண்டும். இல்லையாயின், இது ஒரு பயனற்ற செயலாகும், இவ்வாறான செயலை சகலரும் தவிர்க்க வேண்டும். பயனற்ற செயல் என்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதாகும்.

ஒரு பயனற்ற செயல் தான் என்றாலும், அது அனுமதிக்கப்பட்டதாயின் என்ன தீங்கு என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம்; வெளிப்படையான தீங்கு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அடையக்கூடிய பயன் ஏதும் இல்லை என்றால், அதனால் உண்மையில் ஏற்பட்டது இழப்பேயாகும். பயனற்ற தன்மை ஒருவரை தவறின் எல்லைக்குக் கொண்டு வந்துவிடுகிறது, எனவே அதைத் தவிர்ப்பது சிறந்தது,

ஒரு தெளிவான செய்தி?

மேலே உள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்பட்டாலும் கூட, ஒரு செய்தி அதைப் பெறுபவர்களிடையே ஏதேனும் தவறான புரிதலை அல்லது தவறான எண்ணத்தை ஏற்படுத்துமா என்பதை ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும்? இறுதியாகக் தகவல்களைப் பகிர்வது தவறான புரிதலை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதா? சமூகங்களுக்கிடையே பிரச்சனைகளைத் தோற்றுவிக்குமா என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட செய்தி தவறான புரிதலை ஏற்படுத்துமா என்று ஒருவருக்கு உறுதியாக தெரியவில்லை என்றால் அல்லது சிறிய சந்தேகம் இருந்தால், அதை பகிரவோ அல்லது பிரசுரிக்கவோ கூடாது. இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் சமூகத்தில் பிரச்சனை ஏற்படாதிருக்க பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவது கொலையை விட கொடியது என்று இறைவன் எம்மை எச்சரிக்கின்றான்.

அனுமதியின்றி வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்தல் அல்லது எடுத்தல்

மக்களின் தனிப்பட்ட உரையாடல்களை அவர்களின் அனுமதியின்றி பதிவு செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஊடக தர்மத்திற்கு எதிரானது; அது ஒரு நம்பிக்கை துரோகமும் கூட. ஒரு நபர் தனது நெருங்கிய நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது பொதுவாக விவாதிக்கப்படும் தலைப்புகள் ஒரு குறிப்பிட்ட சூழலில் மற்றும் அங்கு இருப்பவர்களுடன் தொடர்புடைய பின்னணியுடனானதாக இருக்கும். அத்தகைய உரையாடல்களில் இருந்து சில பகுதிகள் பகிரப்பட்டால், அது மிகப்பெரிய தவறான புரிதலை ஏற்படுத்தும் மற்றும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் தனிப்பட்ட சூழலில் இருக்கும்போது அவரின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் மற்றும் தெளிவான அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே அவரின் குரலை பதிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட அல்லது முறைசாரா கூட்டமொன்றில் புகைப்படம் எடுப்பதற்கும் அல்லது வீடியோ எடுப்பதற்கும் இதே கொள்கை பொருந்தும்.

ஊடகத் துறையில் பொறுப்புக்கூறல்

தாம் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்புக்கூறும்  தார்மீக பொறுப்பு எந்த ஓர் எழுத்தானுக்கும் உண்டு என்பதை மனதில் ஆழமாக பதித்துக்கொள்ள வேண்டும். இன்றில்லையாயினும்என்றாவது ஒரு நாள் நீங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டி வரலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். டிஜிட்டல் துறையில் நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் அழியா இடம்பெறுகின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆக, சமூக ஊடகத் தளங்களை உலக சமானத்திற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, தேசிய அபிவிருத்திக்காக மக்கள் நலனுக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம்.

- தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment