Wednesday, September 28, 2022

மீலாதுன் நபியும் உலக முஸ்லிம்களும்

Miladun Nabi and Muslims of the world

சர்வவல்லமையுள்ள படைப்பாளன் மனிதகுலத்திற்கு இப்படித்தான் தனது கடைசி மற்றும் சிறந்த தூதரை அறிமுகப்படுத்துகிறான், அவர் சமாதானத்தின் செய்தியை நிறுவனமயமாக்கவும் உலகளாவிய ரீதியிலும் ஸ்திரப்படுத்துவதற்கும் இறைவனால் வழிநடத்தப்பட்டார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அடிபணியாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை. இவை அனைத்தும் அரபு மொழியில் "இஸ்லாம்" என்று பொருள்படும்.


لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏ 

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21.

இன்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழியும் இந்த உலகத்தை விட்டு வெளியேறும் முன், சிலர் அதை இஸ்லாத்தின் பெயராலேயே சிதைக்க முயற்சித்த போதிலும் கூட, அவருடைய அழியாத மரபு அவரது வாரிசுகளால் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பார்க்கின்றோம்.

"நான் சிறந்த ஒழுக்கத்தை பூரணப்படுத்த அனுப்பப்பட்டேன்" என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

ஏகத்துவ கொள்கை கொண்ட பெற்றோர்களான அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் மற்றும் ஆமினா பின்த் வஹ்ப் ஆகியோரின் மகனான, நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்த குறைஷிகளின் ஹாஷிமி குலத்தின் வாரிசுமான அவர், மனிதகுலத்தை உயர்ந்த ஒழுக்கத்துடன் அறிவூட்டுவதற்கான எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை.

மனிதாபிமான விழுமியங்களின் மகத்துவமிக்க முன்னுதாரணமான அவர் தனது 23 ஆண்டுகால பணியின் போது, அரேபியாவின் சகோதரப் பழங்குடியினரை இஸ்லாத்தின் சகோதரத்துவப் பதாகையின் கீழ் ஒன்றிணைத்தார், அபிசீனியர்கள், பாரசீகர்கள் மற்றும் ரோமானியர்களை (பிலால், சல்மான், சுஹைப்) ஈர்ப்பதன் மூலம் உலகளாவிய சகோதரத்துவத்தைப் போதித்தார்.

நாகரீகம் என்று கூறப்பட்ட நாடுகளின் தலைவர்கள் இறைவனின் பாதைக்கு திரும்புவதன் மூலம் அரச பயங்கரவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அவரது வேதத்தில் இப்ராஹீம் (அலை), தவ்ராத் வேதத்தில் மூஸா (அலை) வேதாகமத்தில் ஈஸா (அலை) உட்பட கடந்த காலத்தின் அனைத்து தீர்க்கதரிசிகளாலும் தீர்க்கதரிசனம் கூறப்பட்டவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள். அதே போல் ஜோராஸ்ட்ரியர்கள் மற்றும் இந்துக்களின் புனித புத்தகங்களில் அவரது உலகளாவிய ஏகத்துவ பணி பற்றிய செய்திகள் உள்ளன.

அதுபோல ரசூல் நாயகம் (ஸல்) அவர்களும் தனக்குப் பின் உலக முஸ்லிம்கள் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக அறிவுரைகளை விட்டுச் சென்றார்கள்.

அவரது அமைதிச் செய்தியின் தொடர்ச்சியாக பசுமையான தூய்மையை உறுதி செய்வதற்காக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களால் தெளிவான வார்த்தைகளில் மீண்டும் வலியுறுத்தப்பட்ட பிரபால்யமான ஹதீஸ் 'தக்கலைன்' ஆகும்: 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்கள் மத்தியில் இரு பெறுமதியான விடயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். முதலாவது அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன், இரண்டாவது எனது குடும்பத்தினரான அஹ்லுல்பைத். நிச்சயமாக இவ்விரண்டும் மறுமையில் ஹவ்ழுல் கவ்ஸரில் என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியமாட்டா”

(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம், சுனனுத் திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்)

 ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட இவ்விரு பொக்கிஷங்களில் இருந்தும் உலக முஸ்லிம்கள் எந்தளவு தூரப்பட்டுள்ளனர் என்பதை இங்கு விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. உலக நடப்புகள் இன்று அதற்கு சான்றாக உள்ளன.

இருந்தாலும் எம்மிடமுள்ள இந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே இஸ்லாத்தின் எதிரிகள் எமக்கெதிரான சத்திட்டங்களைத் தீட்டுகின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

இஸ்லாமிய தூதை சுமந்த நபி (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்களான நாம் மற்றும் விசுவாசிகள் அனைவரும் செய்ய வேண்டிய கடமை என்ன? 

ஒன்று இஸ்லாத்தை சம்பூரணமாக செயல்படுத்துவது, மற்றொன்று முஸ்லிம் உம்மாவை ஒன்றுபடுத்துவது ஆகும். இந்த இரண்டு விடயங்களும் நம் வாழ் நாளின் மிக முக்கியமான விடயங்களாகும்.

ரசூல் (ஸல்) அவர்கள் பிறந்த புனித தினம் எம்மை நெருங்கி வருகிறது; இந்தப் புனிதத்தினமாது மனித வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக விளங்க வேண்டும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்து மனிதகுலத்தின் படைப்பு முழுவதும் தனித்துவமானது. மகத்துவமிக்க இறைவன், புனித குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் புனித இதயத்திற்கு வெளிப்படுத்தினான், அதை அவரது தூய நாவால் ஒப்புவித்தார்கள், எல்லாம் வல்ல இறைவன் மனிதகுலத்தின் சிறப்புக்கான இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரை றஸூலாக நியமித்தான்.

எனினும், உலகாயத சக்திகளோ இஸ்லாத்தை பிரத்தியேக செயல்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுப்படுத்த வலியுறுத்துகின்றன. மேலும் அவர்களது இந்த நம்பிக்கையை மக்களிடையே திணிக்கவும் முயற்சிக்கின்றனர். இந்த சக்திகளின் பார்வையில், வாழ்க்கை மற்றும் சமூக உறவுகளின் முக்கிய பகுதிகள் இஸ்லாத்தின் தலையீட்டிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இவர்களை பொறுத்தவரை, மனித நாகரீகத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாத்திற்கு எந்தப் பங்கும் இல்லை, அதற்கு எந்தக் கடமையும் இல்லை, உலகில் இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வை வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயமாகும் என்ற கருத்து முஸ்லிம்கள் மனதில் புகுத்தப்பட்டுள்ளதால், அதற்கான எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

இஸ்லாத்தை சமூக மற்றும் அரசியல் துறைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற இத்தகைய வலியுறுத்தலுக்கான காரணம் உலகில் உள்ள பெரிய அரசியல் சக்திகளின் இஸ்லாம் விரோத மனப்பான்மை ஆகும். இஸ்லாம் மீண்டும் ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாறிவிடக் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவ்விடயம் அவர்களின் இலக்குகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால் ரசூல் (ஸல்) அவர்களின் வாழ்க்கையானது இந்த மார்க்கத்தின் குறிக்கோள்கள் அனைத்தும், மனித உணர்வுகள் முதல் சமூக, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் வரை, மனித வாழ்க்கையின் அனைத்து துறைக்குமான வழிகாட்டல் ஆகும். மனிதகுலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இதில் அடங்கும். இதை நாம் தான் செய்து காட்ட வேண்டும்.

இஸ்லாத்தின் இந்த உன்னத இலக்கை அடைவதற்கு உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை அவசியமாகும்.

ஈமான் கொண்ட முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்று குர்'ஆனும் ஹதீஸும் எமக்குக் கற்றுத் தருகின்றன. எமது முன்னோர்கள் அதனடிப்படையில் தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டிய சரித்திரமும் எம்மிடமுண்டு.

முஸ்லிம்களாகிய நாம் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை எமது எதிரிகளிடமிருந்து எதிர்பார்த்ததன் விளைவைத் தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இஸ்லாத்தின் எதிரிகள் என்று அறிந்து கொண்டே, எமது பாதுகாப்புக்காக, அல்லாஹ்வின் கட்டளையையும் மீறி, அவர்களிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறோம்.

எதிரிகள் எமக்கு நல்லது செய்வர் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம். அதைத் தான் அரபுலகத் தலைவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஸூரத்துல் மாயிதா வசனங்கள் 51-54

முஃமின்களே! யஹூதிகளையும், நஸாறாக்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். 

எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள். 

(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர். 

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

எமது நிலையை நாமே மாற்றிக்கொள்ள முயற்சிக்காத வரை அல்லாஹ்வும் அதனை மாற்றமாட்டான்.

- தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment