Monday, April 19, 2021

மத்தியகிழக்கை பிரித்தாளும் மேற்குலக கொள்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது ஈரான்-சீன ஒத்துழைப்பு ஒப்பந்தம்

The Iran-China cooperation agreement poses a major challenge to Western world’s divide & rule the Middle East policy

முதலாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பா நேச சக்திகளால் பிரிக்கப்பட்டது. நீண்ட காலமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த உதுமானிய பேரரசு, விரிவாக்கத்தில் நாட்டம் கொண்ட மேற்கத்திய சக்தியால் இறுதியாக சிதைந்தது. இதன் விளைவாக, தேசிய அரசுகள் பிறந்தன, அவற்றின் மக்களுக்கு தங்கள் சொந்த தலைவிதியை நிர்ணயிப்பதில் சிறிதும் உரிமை இருக்கவில்லை.

உண்மையில், நாகரிகமாகத் தோன்றும் ஐரோப்பிய நாடுகள், தவிர்க்க முடியாமல் நாகரிகமற்ற ஆனால் வரலாற்று புகழ்பெற்ற மேற்கு ஆசிய நாடுகளை அபிவிருத்தி மற்றும் செழிப்பு நோக்கி இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை ஊட்டின. காலனித்துவமயமாக்கலுக்கான "அல்-ஐஸ்டீமர்" என்ற சொல் பிராந்தியத்தின் மக்களால் நம்பிக்கையுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் மேற்கத்திய தலையீட்டாளர்கள் இப்பகுதியில் செழிப்பு மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்ததாக அவர்கள் அப்பாவியாக நம்பினார்கள். சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் நீண்ட கால வீழ்ச்சியை அனுபவித்து வந்த ஈரானுக்கும் உதுமானியருக்கும் இந்த நாகரிக படையெடுப்பை எதிர்க்கும் சக்தியோ அல்லது விருப்பமோ இருக்கவில்லை.

மேற்கு ஆசியாவின் சமகால வரலாறு மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் கருத்தாய்வுகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாமல் பிராந்தியத்திற்கான மேற்கத்திய முடிவுகள் என்ற அடிப்படை பண்புடன், ஒப்பந்தங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம், செவ்ரெஸ் ஒப்பந்தம் மற்றும் பால்ஃபோர் பிரகடனம் ஆகியவை இந்த ஒப்பந்தங்களின் மூன்று உறுதியான எடுத்துக்காட்டுகள். இதற்கிடையில், மேற்கு ஆசிய வரலாற்றில் மக்மஹோன்-ஹுசைன் கடித தொடர்பு மற்றொரு நிரூபணமாகும், இது ஒரு தேசியவாத சித்தாந்தத்தை மேற்கத்திய கொள்கையுடன் பிராந்தியத்தில் புகுத்த மேற்கத்திய தலையீட்டாளர் மேற்கொண்ட முயற்சிகளை தெளிவாகக் குறிக்கிறது, இது பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் மற்றும் அவர்களது  நாகரிகத்தில் காணமுடியாத ஒன்றாகும். இந்த திணிக்கப்பட்ட தேசியவாத இயக்கங்கள், இறுதியில் ஷெரீப் ஹுசைனை ஏமாற்றி வெளியேற்றுவதன் மூலம் முடிவடைந்தது, அரேபியர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் இப்பகுதியில் புதிய பிரதேசங்களை உருவாகியது. இந்த நாகரிக தலையீடுகளின் நோக்கம், மேற்கு ஆசிய நாடுகளுக்கிடையிலான தொடர்ச்சியான பிராந்திய மோதல்களின் விதைகளை விதைப்பதாகும். எனவே, மேற்கு ஆசியா எப்படியாவது அடுத்தடுத்த தசாப்தங்களாக உறுதியற்ற தன்மை மற்றும் மோதல்களில் ஈடுபட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவின் இன்றைய நிலை மேற்கத்திய தலையீட்டாளர்கள் பிரித்தாள்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள் என்பதை நிரூபிக்கிறது; குழப்பமான பிராந்திய சூழலில் அவர்களின் நலன்கள் மிகவும் எளிதாக காக்கப்படுகின்றன.


ஆனால் இது மேற்கு ஆசியாவில் மேற்கத்திய தலையீட்டு அபிலாஷைகளின் முடிவு அல்ல. பனிப்போரின் போது, இந்த பகுதி இரண்டு வல்லரசுகளின் சமன்பாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவிற்கும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. ஒருபுறம், அபரிமிதமான எண்ணெய் இருப்புக்களும், மறுபுறம், பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கான சோவியத் முயற்சிகளும், பிராந்திய விவகாரங்களில் அமேரிக்கா மிகவும் தீவிரமாக தலையிட முக்கியமான இரண்டு காரணங்களாக இருந்தன. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன், பனிப்போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை வெளிப்படுத்த பல்வேறு விவாதங்கள் நடந்தன. "வரலாற்றின் முடிவு மற்றும் கடைசி மனிதன்" மற்றும் "நாகரிகங்களின் மோதல்" போன்ற படைப்புகளால் ஒரு மேலாதிக்க ஒழுங்கை உருவாக்க வலுவான குரலாக மாறியது.

இதன் விளைவாக, புதிய உலக ஒழுங்கு மற்றும் மகா மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகள் மூலம் இந்த மூலோபாயத்தை செயல்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்கா, அதன் ஐரோப்பிய முன்னோடிகளைப் போலவே, மேற்கு ஆசியாவில் பிராந்திய ஸ்திரமின்மை மூலம் தனது நலன்களை காக்கிறது, ஆனால் சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதை விட வேறுபட்ட பிராந்திய சூழலில். 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு மற்றும் 2003 ஈராக் படையெடுப்பு ஆகியவை இந்த மூலோபாயத்தின் முதல் வெளிப்பாடுகள். ஆனால், பிராந்தியத்தில் சமூக-அரசியல் இயக்கவியல் குறித்த மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்களின் அறியாமை அவர்களின் மூலோபாயத்தை செயல்படுத்துவதில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, புதிய பிராந்திய இயக்கங்களும் அணிதிரட்டல்களும் தொடங்கின, விரைவில் மேற்கு ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் 2010 களில் பிராந்திய இயக்கங்கள் பரவியது. துனிசியாவில் அரபு எழுச்சியின் ஆரம்ப கட்டங்களிலிருந்து, மேற்கத்திய தலைவர்கள் இந்த இயக்கங்களுக்கு வெவ்வேறு அணுகுமுறைகளை கொடுத்து அவற்றை சரியான முறையில் நிர்வகிக்க முயன்றனர்; இதன்மூலம் பிராந்தியத்தில் நீண்டகால நலன்கள் பாதிக்கப்படுவதைத் அமேரிக்கா தடுக்கிறது. அடுத்த ஆண்டுகளில், அது வகுத்துள்ள புதிய மத்திய கிழக்கு திட்டத்தின் கீழ் வடிவமைக்க, தாம் விரும்பியதை உருவாக்குவதற்காக பல்வேறு அரபு நாடுகளின் முன்னேற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா பல மற்றும் சில நேரங்களில் முரண்பாடான கொள்கைகளைப் பின்பற்றியது.

மொத்தத்தில், மேற்கு ஆசியாவின் சமகால வரலாறு, மேற்கத்திய சக்திகளினால் ஸ்திரமின்மைக்குள்ளான பிராந்தியத்தில் எவ்வாறு தங்கள் நலன்களைப் தக்கவைத்துள்ளது என்பதை விளக்குகிறது. சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம், செவ்ரஸ் ஒப்பந்தம், பால்ஃபோர் பிரகடனம், இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல், ஈரானின் தேசிய ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்ப்பது (1953 பிரிட்டிஷ்-அமெரிக்க ஆட்சிமாற்றம்) மற்றும் பஹ்லவி கொடுங்கோன்மைக்கு முழுமையான ஆதரவு, பிராந்தியத்தில் ஏராளமான சதித்திட்டங்கள் போர், ஏகாதிபத்திய நோக்கங்களுடன் தேசியவாத நீரோட்டங்களை தூண்டி வளர்த்தல், ஈரானுக்கு எதிரான எட்டு ஆண்டு யுத்தத்தின் போது சதாம் உசேனை ஆதரித்தல், 2001 ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு, 2003 ஈராக் மீதான படையெடுப்பு, பிராந்தியத்தில் சக்தி வெற்றிடங்களை உருவாக்குதல் மற்றும் அதன் விளைவாக தீவிரவாத பயங்கரவாத குழுக்கள் தோன்றின அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்., குறுங்குழுவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்தல், நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுதல், அரசாங்க அதிகாரிகளை படுகொலை செய்தல், எதிர் நாடுகளில் கலவரங்கள் மற்றும் பதட்டங்களைத் தூண்டுவதற்காக அவர்களின் பிரதான ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்தல், பொருளாதாரத் தடைகளை விதித்தல், லிபியாவில் 2011 இராணுவத் தலையீடு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிளவுகள், கடந்த ஆறு ஆண்டுகளில் யேமனுக்கு எதிரான பலனற்ற போரில் சவுதி கூட்டணியை ஆதரித்தது யேமனில் பேரழிவுகரமான மனிதாபிமான நெருக்கடி மற்றும் ஜனநாயகமற்ற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு பெரும் ஆயுத விற்பனை ஆகியவை பிராந்தியத்தை உறுதியற்ற நிலையில்  வைத்திருப்பதில் மேற்கத்திய சக்திகள் பெரும் அழிவுகரமான பங்கைக் கொண்டுள்ளன என்று வாதிடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய சில தெளிவான சான்றுகள் ஆகும்.

2010களில் மேற்கு ஆசிய சமூக-அரசியல் முன்னேற்றங்கள், வளர்ந்து வரும் புதிய பிராந்திய ஒழுங்கிற்கு வழிவகுத்தன. இதில் சில முந்தைய ஒழுங்குகளின் பண்புகள் மறைந்துவிட்டன அல்லது மறைந்து போகின்றன, அதே நேரத்தில் புதிய ஒழுங்குகளின் பண்புகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மறுபுறம், உலகளாவிய இயக்கவியல் சர்வதேச ஒழுங்கில் ஒரு மென்மையான மாற்றத்தைக் குறிக்கிறது, இதில் ஆசிய ஜாம்பவான்கள், குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். எவ்வாறாயினும், இஸ்லாமிய குடியரசின் அறிஞர்களின் ஒரு முக்கிய குழு அமெரிக்காவினது பிந்தைய சகாப்தம் தொடங்கிவிட்டதாகவும், உலகளாவிய ஒழுங்கு ஒரு பல்துருவ சர்வதேச ஒழுங்கை நோக்கி நகர்கிறது என்றும் வாதிடுகின்றனர். ஆகையால், உலகளாவிய மற்றும் பிராந்திய இயக்கவியல் மேற்கு ஆசியாவில் ஒரு புதிய பிராந்திய ஒழுங்கின் தோற்றத்தையும் உலகளாவிய அரங்கில் ஒரு பலதுருவ தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறது, அதன் கட்டமைப்புகள் அதையே  வெளிப்படுத்துகின்றன.

கடந்த மார்ச் 27 அன்று, சீனாவும் ஈரானும் 25 ஆண்டுகால மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஐந்து ஆண்டுகளாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன, திரு. வாங் மற்றும் அவரது ஈரானிய சகா ஜவாத் ஸரீஃப் ஆகியோர் இடையே இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஏழு தசாப்தங்களில், அமைதியான சகவாழ்வின் ஐந்து கொள்கைகள் சீனாவை வெவ்வேறு நாடுகளுடன் வழிநடத்தியுள்ளன என்பதை காட்டுகிறது. இந்த நீண்டகால கொள்கைகளில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆக்கிரமிப்பு தவிர்ப்பு, ஒருவருக்கொருவர் உள் விவகாரங்களில் தலையிடாதது, சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவை அடங்கும். பிராந்திய சக்தியாகவும், வளர்ந்து வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும், உலகளாவிய சக்தியாக இருக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மூலோபாய ஒப்பந்தத்தில் புதிய பிராந்திய மற்றும் உலகளாவிய ஒழுங்குகளுக்கு மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் இரு தரப்பினருக்கும் குறிப்பிடத்தக்க மற்றும் பயனுள்ளதாக இருக்கும். வளர்ந்து வரும் கிழக்கு சக்திகளாக, சீன-ஈரானிய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதானது காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகுமுறையைக் கொண்ட இரு நாடுகளுக்கும் பல குறுகிய மற்றும் நீண்டகால நன்மைகளைத் தரும்.

முடிவில், கடந்த நூற்றாண்டில், மேற்கத்திய சக்திகளின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் மேற்கு ஆசிய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வந்துள்ளது.. அதுமட்டுமல்லாமல், அவற்றின் நோக்கங்கள் பலதரப்பு நன்மைகளை விட சுயநலத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.. ஆனால் சர்வதேச உறவுகளுக்கான சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், மேற்கு ஆசியாவில் சீனாவின் வெளியுறவுக் கொள்கையானது, பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையைக் காட்டிலும் பிராந்திய ஸ்திரத்தன்மையில் சீனா தனது நலன்களை வரையறுக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது.. எனவே, மேற்கத்திய சக்திகளைப் போலல்லாமல், சீனா மேற்கு ஆசிய நாடுகளின் நலன்களுடன் தனது தேசிய நலன்களையும் பின்தொடர்கிறது.

சுருக்கமாக கூறின், மேற்கு ஆசியாவின் உறுதியற்ற தன்மையில் மேற்கத்திய சக்திகள் தங்கள் நலன்களை வரையறுத்துள்ளன, மேலும் இந்த நடைமுறை ஆரம்பகாலத்திலிருந்தே தொடரப்பட்டது, அதே நேரத்தில் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையில் சீனா தனது நலன்களை வரையறுத்துள்ளது. உதாரணமாக, இந்த முன்முயற்சி ஒரு நிலையான பிராந்தியத்திலும் அமைதியான சகவாழ்வின் ஐந்து கொள்கைகளின் கீழும் மட்டுமே தொடர முடியும். மேற்கு ஆசியாவில் பிராந்திய வளர்ச்சிக்கு ஸ்திரத்தன்மை ஒரு முன்நிபந்தனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மேற்கத்திய சக்திகள் இந்த உண்மையை நீண்ட காலமாக அறிந்திருக்கின்றன. எனவே, மேற்கத்திய சக்திகள் சீனாவுடனான ஈரானின் பங்காளித்துவத்தை தங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச நலன்களுக்கு கடுமையான சவாலாக இயல்பாகவே கருதுகின்றன.

இங்கே, ஒரு முக்கிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: மேற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையை நாடுகின்ற இரண்டு வளர்ந்து வரும் கிழக்கு சக்திகள், பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்குள்ளான காரணிகளை (பெரும்பாலும் மேற்கத்திய தோற்றம் கொண்ட) எவ்வாறு சமாளிக்க போகின்றன...? வெளிப்படையாக, அமெரிக்காவும் அதன் பிராந்திய நேச நாடுகளும் மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகளும் தங்கள் நலன்களுக்கு அப்பாற்பட்ட பிராந்திய ஸ்திரத்தன்மையையும் புதிய ஏற்பாடுகளையும் தொடர அவ்வளவு எளிதில் அனுமதிக்கமாட்டா.

இந்த கட்டுரையின் ஆசிரியர் அமீர் முகமது இஸ்மாயிலி ஈரானிய ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் ஷாங்காய் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் பொது விவகாரங்களில் முதுமாணிக்கான வேட்பாளர். அரசியல் அறிவியல் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளில் முதலிடம் பெற்ற இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

https://www.tehrantimes.com/news/459505/Strategic-cooperation-of-emerging-powers-Beyond-regional-instability

தமிழாக்கம்: தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment