Sunday, December 6, 2020

ஈரான் மீது சுமத்தப்படும் நியாயமற்ற அழுத்தம் அவர்களை அணு ஆயுதங்களை நாட வழிவகுக்கும்...?

Unjust pressure imposed on Iran may lead them to resort to nuclear weapons - political analysts fear

படுகொலை செய்யப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே 

அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் ராணுவ ஜெனரல்களையும்  படுகொலை செய்வதன் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தடுக்க முடியும் என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் எதிரிகள் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஈரானின் இஸ்லாமிய ஆட்சி முறையை வீழ்த்த கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் ஈரானுக்குள் எத்தனையோ பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்தினார்கள், பல தலைவர்களை கொலை செய்தார்கள், ஆட்சியைக் கவிழ்க்க பல சூழ்ச்சிகளை செய்தார்கள், யுத்தமொன்றைத் திணித்தார்கள், பொருளாதாரத் தடைகளை விதித்தார்கள். இவற்றில் எதனாலும் ஈரானின் முனேற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

பல பொருளாதார சோதனைகளுக்கு மத்தியிலும் ராணுவ ரீதியில் அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றம், பிராந்தியத்தில் ஈரானை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு, அதாவது அதனை ஒரு வல்லரசு என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே கொலைசெய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்ய விஞ்ஞானி வாடிம் கோமென்கோவ் ஒரு அணு விஞ்ஞாணியை கொள்வதால் ஒரு நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தடுக்க முடியும் என்று நினைப்பது முட்டாள்தனமானது; விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவிடயங்கள் எந்த ஒரு நாட்டிலும் தனிநபர்களில் தங்கியிருப்பதில்லை; இந்த படுகொலையானது  ஈரானின் எதிரிகளின் பலவீனத்தின் அடையாளமாகவே நான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய டாடர்ஸ்தான் குடியரசின் அறிவியல் அகாடமியின் துணை இயக்குனரான கோமென்கோவ், சமீபத்திய தசாப்தங்களில் ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வலுவான முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றும், ஈரானின் எதிரிகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இந்த முன்னேற்றம் குறித்து பொறாமையும் கவலையும் கொண்டுள்ளன என்கிறார்.

ஈரான் விஞ்ஞான துறைகளில் முன்னேறுவதைத் தடுக்க ஈரானின் எதிரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பார்கள் என்பதையே பக்ரிஸாதேவின் படுகொலை காட்டியது என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27-11-2020) அன்று தலைநகர் தெஹ்ரானுக்கு வடகிழக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டமவண்ட் மாகாணத்தில் உள்ள அப்சார்ட் என்ற சிறிய நகரத்தின்  நெடுஞ்சாலையில் மொஹ்சென் பக்ரிஸாதே மீது குறிவைக்கப்பட்டது. தாக்குதலின் போது விஞ்ஞானி உயிர் இழந்தார், அதே நேரத்தில் அவரது மெய்க்காப்பாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்த படுகொலைக்குப் பின்னால் கடந்த தசாப்தத்தில் ஈரானிய அணு விஞ்ஞானிகளுக்கு எதிராக படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்ட இஸ்ரேல் மீது ஈரானிய அதிகாரிகள் குற்றம்சாட்டினார். வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை ஒரு ட்வீட்டில் "இஸ்ரேலிய பங்கு பற்றிய தீவிர அறிகுறிகளுடன்" இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறினார்.

பக்ரிஸாதே உடன் கடந்த ஆண்டுகளில் இஸ்ரேல் இன்னும் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகளை படுகொலை செய்துள்ளது. மசூத் அலிமோஹம்மதி, மஜித் ஷாஹ்ரியாரி, தரியூஷ் ரெசய்நஜாத் மற்றும் மொஸ்தபா அஹ்மதி ரோஷன் ஆகியோரைக் கொன்றது. ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவரான ஃபெரெய்தன் அப்பாஸியையும் படுகொலை செய்ய இஸ்ரேல் முயன்றது, ஆனால் அது தோல்வியடைந்தது.

ஐ.நா.உட்பட பல உலக நாடுகளும் அமைப்புகளும் இந்த படுகொலையை வன்மையாக கண்டித்துள்ளன. எப்போதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் சார்பு நிலையை எடுக்கும் மேற்குலக நாடுகள் கூட குறிப்பிட்ட கொலை சம்பவத்தைக் கண்டித்தது மட்டுமல்லாமல் இது ஈரானுடனான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அச்சம் தெரிவித்தும் உள்ளன. அதேவேளை ஈரான் உச்சமட்ட பொறுமையை கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.

https://www.tehrantimes.com/news/455355/Iran-s-enemies-cannot-hamper-its-scientific-progress-says-Russian

ஈரான் ஜூலை 14, 2015 அன்று கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA), அணுசக்தி ஒப்பந்தத்தில், அமேரிக்கா , ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டது.

எவ்வாறாயினும், மே 8, 2018 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறினார். ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்துகொள்ள அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை தெஹ்ரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்தம்” கொள்கையாகவும் மாற்றினார்.

ஈரானின் நிலைப்பாடு என்னவென்றால், பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எட்டப்பட்ட குறிப்பிட்ட இந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைக்குத் திறந்த ஒன்றல்ல. அமேரிக்கா அது ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை அது மதிக்க வேண்டும் என்பதாகும். 

காலத்துக்குக் காலம் அமெரிக்காவில் ஏற்படும் தலைமைத்துவ மாற்றத்துக்கு ஏற்பவோ அல்லது அவர் போடும் தாளத்துக்கு ஆட்டம் போடவோ ஈரான் தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்தி காரியம் சாதிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்காவிற்கு கடமைகள், பொறுப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானமாக 2231 உள்ளது, அதற்கமைய அது நடந்துகொள்ள வேண்டும். பல விட்டுக்கொடுப்புகளை செய்தே ஈரானும் அதை ஏற்றுக்கொண்டு, கையெழுத்திட்டது. அதற்கப்பால் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வேறு எதையும் ஈரானிடம் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.

ஈரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவின் படுகொலையைத் தொடர்ந்து, தம்மை நம்பவைத்து ஏமாற்றுகின்றனரா என்று சந்தேகிக்க நியாயமான காரணங்கள் பல ஈரானுக்கு உள்ளன என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் ஸ்தானிகர் ஜோசப் பொறேல் தெரிவித்தார்.

Josep Borrell

மொஹ்சென் பக்ரிசாதேவின் படுகொலையானது  ஈரானுக்கும் ஏனைய பலம் மிகுந்த நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் உரையாடலைத் தடம் புரட்ட முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பொறேல், “சரி, இந்த கொலையை யார் செய்தாலும் நிச்சயமாக உரையாடலை எளிதாக்க அதைச் செய்யவில்லை என்பது தெளிவு. நிச்சயமாக, இந்த ஒப்பந்தம் தொடரக்கூடாது என்பதில் ஆர்வமுள்ள பல தரப்பினர் இருக்கிறார்கள்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஐரோப்பா குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கொஞ்ச காலம் உறக்க நிலையில் இருந்தாலும் அது இறக்கவில்லை. இப்போது ஈரானியர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் ஈரானியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை எல்லோராலும் உணரக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து ஏமாற்றப்படாதிருக்க அவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்கக் கூடும். அவை என்னவென்று நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார்.

தற்போதைய ஈரானியத் தலைவர்கள் அணு ஆயுதங்களை நோக்கி செல்வதில்லை என்ற தெளிவான உறுதிப்பாட்டுடன் உள்ளனர்; மனித பேரழிவவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரித்தல், இருப்பில் வைத்திருத்தல் மார்க்கத்துக்கு முரணான செயல் என்று என்று அவர்கள் மார்க்கத்தீர்ப்பும் வழங்கியுள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு கொடுக்கப்படும் நியாயமற்ற நெருக்குதல், அவர்கள் மீது விதிக்கப்பபடும் சட்டவிரோத பொருளாதாரத் தடைகள் அவர்களை அணு ஆய்தங்களில் நாட்டம்கொள்ளச் செய்துவிடுமோ என்று அரசியல் ஆய்வாளர்கள் அச்சம்கொண்டுள்ளனர்.

- தாஹா முஸம்மில்


No comments:

Post a Comment