Saturday, June 20, 2020

COVID-19 - அலீ இப்னு சீனாவின் பக்கம் திரும்பியுள்ள நவீன மருத்துவ உலகின் கவனம்

COVID-19 - Modern medical world's focus has been turned towards Ali Ibn-Sina

மருத்துவத் துறையில் ஆழமான அறிவையும் மற்றும் நீடித்த செல்வாக்கையும் கொண்டிருந்த ஈரானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம்  விஞ்ஞானி அலீ இப்னு சினா (980-1037)

நவீன மருத்துவத்தின் தந்தை அவிசென்னா என்று மேற்கில் அறியப்பட்ட ஈரானிய முஸ்லிம் விஞ்ஞானி அபு ‘அலி அல்-ஹுசைன் இப்னு சினா (980-1037) “தனிமைப்படுத்தல்” முறையை வகுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, சில நோய்கள் நுண்ணுயிரிகளால் பரவுகின்றன என்று அவர் சந்தேகித்தார், மேலும் நோய் (தொற்று) நபருக்கு நபர் பரவுவதைத் தடுக்க, 40 நாட்களுக்கு மக்களை தனிமைப்படுத்தும் முறையை அவர் வகுத்தார். அவர் இந்த முறையை அல்-அர்பஈனியா (“நாற்பது - நாற்பது நாட்கள்“) என்று அழைத்தார்.

COVID-19 வெடித்ததிலிருந்து, அவிசென்னா அல்லது முஸ்லிம் உலகில் அறியப்பட்ட அலீ இப்னு சினா (980-1037) மீது உலகின் கவனம் திரும்பியுள்ளதை பார்க்கிறோம். அலீ இப்னு சினா ஈரானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானி, மருத்துவத் துறையில் ஓர் ஆழமான அறிவை மற்றும் நீடித்த செல்வாக்கைக் கொண்டிருந்தார்.

அவரது ஆரம்பகால படைப்பான, "அல்-கானுன்", மருத்துவ இலக்கியம் மற்றும் கல்வித் திட்டங்களின் வளர்ச்சியில் முக்கியமானது மற்றும் மருத்துவ வரலாற்றில் ஒரு மூலக்கல்லாக இருந்தது. அலீ இப்னு சினாவின் படைப்புகள் அவர் மரணித்து 600 வருடங்கள் கடந்தும் முஸ்லிம்  உலகிலும் ஐரோப்பாவிலும் மருத்துவ வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன என்று வரலாற்றாசிரியர் ஜமால் மூசவி குறிப்பிடுகிறார்.

அலீ இப்னு சினாவின் மருத்துவ படைப்பு உலகெங்கிலும் உள்ள தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுகிறது என்பதை இன்று முஸ்லிம்கள் பெருமையுடன் உலகுக்கு நினைவுபடுத்துகிறார்கள். "ஒரு நுண்ணிய வைரஸை எதிர்த்துப் போராட, ஆரம்பகால நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் பாரசீக முஸ்லிம், பல்துறை விற்பன்னர் இப்னு சினாவினது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பரிந்துரைகளின் பால் உலகின் கவனம்  திரும்பியுள்ளது" என்று ஓர் எழுத்தாளர் கூறுகின்றார்.

அலீ இப்னு சினாவின் மருத்துவ விஞ்ஞானப் பணிகளில் தனிமைப்படுத்தலின் யோசனை எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், "அவரது ஐந்து தொகுதி மருத்துவ கலைக்களஞ்சியமான "அல்-கானுன்" [The Canon], மருத்துவத்தில் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தலை வலியுறுத்தினார். "அல்-கானுன்" முதலில் 1025 ஆம் ஆண்டில், அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டது".

அவிசென்னா ஒரு மருத்துவ விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு உயர்ந்த தத்துவஞானியும் கூட என்பது நினைவுகூரத்தக்கது.

அலீ இப்னு சினாவின் வாழ்நாள் சாதனைகளைப் பற்றிய ஒரு கூர்மையான பார்வை, அவரை அறிவியல் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளுக்குள் மட்டும் அடக்கி விடாது; பலதரப்பட்ட விடயங்களில் அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஐரோப்பிய நவீனத்துவத்தினால் இதுவரை முறியடிக்கப்படாத ஒரு அறிவுசார் முன்னறிவிப்பாக அவரது ஆக்கங்கள் வெளிப்பட்டது.

அலி இப்னு சீனா தர்க்கவியல், மனோதத்துவவியல் மற்றும் ஆன்மிகம், உளவியல் மற்றும் இசை, கணிதம் ஆகியவற்றுடன் மருத்துவம் குறித்தும் எழுதினார் - மேலும் அவர் ஆழ்ந்த கற்றறிந்த மற்றும் பண்பட்ட மற்றும் தத்துவ மனதின் உறுதியிலிருந்து அவ்வாறு செய்தார். அவரது தலைசிறந்த ஆன்மீக நூலான அல்-இஷரத் வ அல்-தன்பிஹாத் (குறிப்புகள் மற்றும் அறிவுரைகள்) க்கு அடுத்ததாக அவரது தத்துவ மற்றும் விஞ்ஞான அறிவியலை நாம் வைத்து நோக்குவோமாயின், அவருடைய உள்ளுணர்வின் வரைபடத்தை முழுமையாக காணலாம்.

அல்-இஷரத் என்பது அலி இப்னு சினாவின் முதிர்ச்சியடைந்த சிந்தனையின் உருவகம் என்று போற்றப்படும் அதேவேளை அதன் விசித்திரமான உரைநடை பல அறிஞர்களை பிரமிக்கச் செய்துள்ளது. இந்த புத்தகம் எந்தவொரு விஞ்ஞானத்திற்கும் அல்லது தத்துவத்திற்கும் பொருந்தாது, ஏனெனில் அதன் தர்க்கம் மற்றும் ஒன்றின் இருப்பு தொடர்பான ஆய்வு,  தத்துவ இன்பங்கள் மற்றும் தத்துவார்த்த ஆத்ம அறிவு பற்றிய விவாதங்களுக்கு வழிவகுக்கிறது.

இஸ்லாமிய கற்றல் வரலாற்றில் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் இணைத்த ஒரே நபர் அலி இப்னு சீனா மட்டுமல்ல. மற்றுமொரு ஈரானிய  அறிஞரான நசீர் அல்-தின் அல்-துசி (1201-1274). அலி இப்னு சீனாவைப் போலவே விஞ்ஞானம், வானியல் மற்றும் தத்துவத்தில் சிறந்துவிளங்கினார்.

இவ்வளவுக்கும் அலி இப்னு சீனா ஒரு தொழில்முறை மருத்துவர் அல்ல, தத்துவ பேராசிரியராகவும் இருந்ததில்லை. மிகவும் மாறுபட்ட சிந்தனையின் ஊடாக  தார்மீக கற்பனைக்கு வந்த ஒரு தனித்துவமான கல்வி கற்றலின் ஆழத்திலிருந்து அவர் எழுதினார்.

உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் வியக்கத்தக்க விஞ்ஞான சாதனைகளை நிராகரிப்பதோ அல்லது ஏனையோரின் தத்துவ சிந்தனையை குறைத்து மதிப்பிடுவதோ இங்கு நோக்கமல்ல.

கோவிட்-19 என்ற இந்த தொற்றுநோயின் பயங்கரமான பரம்பலுக்குப் பிறகு உலகத்தின் மாறிவரும் சூழலுடன் இணங்குவதும், நமது உலகத்தைப் பற்றிய நமது சுய சிந்தனையின் அடிப்படையில் நாம் ஒரு புதிய அறிவியல்பூர்வமான முன்னேற்றகாரமான கட்டத்தில் இருக்கிறோமா என்று ஆராய்வது இதன் முக்கிய நோக்கமாகும். நாம் எங்கு நிற்கிறோம், என்ன செய்ய வேண்டும், எந்த வகையான அறிவு மற்றும் சுய விழிப்புணர்வு மனிதகுலத்தை இதனிடமிருந்து காப்பாற்ற முடியும்?

நியூயார்க்கில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு, நாங்கள் எங்கள் பல்கனிகளில் அல்லது முன் கதவுகளுக்கு அருகில் நின்றுகொண்டு கையில் கிடைக்கும் வீட்டுப் பாவனைப் பொருட்களைக்கொண்டு ஒலி எழுப்புகிறோம் மற்றும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்து குணப்படுத்த தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பொது சுகாதார ஊழியர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராணுவ வன்பொருட்களுக்காக உயிக்கொல்லும் பயங்கர ஆயுதங்களுக்காகவும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிக்கும் ஒரு இராணுவ கலாச்சாரத்தின் காரணமாக மோசமாகியுள்ள மருத்துவ சூழலில், உயிர் காக்கும் முயற்சியில் சளைக்காது, குறைந்த வசதிகளுடன் கடுமையாக பணியாற்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையினருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அறிவு மற்றும் உயிரியல் மருத்துவ முன்னேற்றங்களை வழங்க உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் செய்யும் பணிகளையும் அதே நேரத்தில் வைரஸை கட்டுப்படுத்த என்னென்ன கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அரசாங்கங்களுக்கு அவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி வருவதையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

அமெரிக்கா, பிரேசில், அல்லது இந்தியா போன்ற செயலற்ற மற்றும் தோல்வியுற்ற மாநிலங்களின் நிழலில் மற்றும் அவர்களின் திறமையற்ற தலைவர்கள் - டொனால்ட் டிரம்ப், ஜெய்ர் போல்சனாரோ மற்றும் நரேந்திர மோடி - மக்கள் ஆரோக்கியத்தை விட அவர்கள் பொருளாதார மற்றும் கருத்தியல் குழுக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டவர்களாய் இருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு (WHO) டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் மற்றும் அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தேசிய இயக்குனர் அந்தோனி பவ்சி போன்றவர்கள், குழப்பங்களுக்கு மத்தியில், போற்றத்தக்க நபர்களாக வெளிவந்துள்ளனர்.

உண்மையில், மருத்துவ ஊழியர்களும் விஞ்ஞானிகளும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தயக்கமில்லாத ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர்.

அறிவியல் போராட்டங்கள்

இத்துறையில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சாதனை படைப்பதில் மிகவும் புகழ்பெற்ற பாத்திரங்களாக, ஒருவித மீட்பராக கருத்தப்பட்ட போதும் விஞ்ஞானம் அதன் சொந்த சவால்களை எதிர்கொள்ளவே செய்கிறது.

தொற்றுநோய்களுக்கு மத்தியில், விஞ்ஞான சமூகங்கள் நல்ல அறிவியலுக்கும் மோசமான அறிவியலுக்கும் இடையில் வேறுபாடு காண போராடுகின்றன. "விஞ்ஞானம் ஒரு அசிங்கமான, சிக்கலான இருண்ட பக்கத்தைக் கொண்டுள்ளது" என்று Mother Jones பத்திரிகையின் சமீபத்திய கட்டுரையில் ஜாக்கி ஃபிளின் மொகென்சன் எழுதியுள்ளார், "கொரோனா வைரஸ் அதையே வெளியே கொண்டு வருகிறது. இங்கே அவரது வாதம் என்னவென்றால்: "ஒரு காலத்தில் ஓட்டப்பந்தயம் போல்: முடிவுகளை வழங்க ஆராய்ச்சியாளர்களும், கல்வி சஞ்சிகைகளும் முந்திக்கொண்டு பொதுமக்களுக்கு புதிய தகவல்களைக் கொண்டுவருவதற்காக செயற்பட்டுக் கொண்டு இருக்கையில் ஊடகங்களும் மக்களை அச்சுறுத்த போட்டாபோட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றன.

இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வது யார்? மருத்துவர்களா? விஞ்ஞானிகளா? அல்லது தார்மீக தத்துவவாதிகளா? விமர்சன சிந்தனையாளர்களா? அல்லது எவரும்  இல்லையா? என்ற கேள்விகளுடன் மருத்துவத் துறையும் அறிவியலும் சவாலுக்கு முகம்கொடுக்க தயாராக இல்லையா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

இத்தகைய சிக்கல்கள் விஞ்ஞான சமூகவியல் துறையில் பல தலைமுறை அறிஞர்களின் ஆய்வுக்கு உட்பட்டவையாகும். எந்தவொரு விஞ்ஞான விசாரணையோ அல்லது விஞ்ஞான முறையோ சமூக மற்றும் அரசியல் காரணிகளிலிருந்தும் மத போதனைகளில்  இருந்தும் முற்றிலும் விடுபட்ட சுயாதீனமானதும் அல்ல.

நிச்சயமாக பிரச்சினை மிகவும் தீவிரமானது. அறிவியலுக்கும் மனிதநேயத்திற்கும் இடையிலான தற்போதைய பிளவுகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் ஆழமான முதலாளித்துவ வேர்களைக் கொண்டுள்ளன.

இவை தத்துவ சிக்கல்களைப் போலவே விஞ்ஞான சிக்கல்கள் நிறைந்தவை. சிக்கல்களில் இருந்து விடுபட புதிதாக ஓர் அலி இப்னு சினா தோன்றுவாரா...?

(இது, 2020 ஜூன் மாதம் 16ம் திகதி அல்-ஜஸீரா இணையதளத்தில் பிரசுரமான ஹாமித் தபாஷி அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது).

https://www.aljazeera.com/indepth/opinion/avicenna-teach-time-coronavirus-


No comments:

Post a Comment