Wednesday, June 24, 2020

அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சாவுமணியடிக்கும் பலம் குன்றிய நாடுகள்

Iran, Venezuela, China, Russia should show alternatives to US hegemony

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதை உலகுக்குக் காட்டுவதற்கு ஈரான், வெனிசுலா, அல்லது ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறுவது முக்கியம்,  என்று புவிசார் அரசியல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

அமெரிக்க அச்சறுத்தல்களுக்கு அஞ்சாது, ஈரான் கடந்த மாதம் சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலை வெனிசுலாவுக்கு அனுப்பிய பின்னர், எரிபொருள் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிற்கு பெட்ரோல் ஏற்றுமதியைத் தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எரிபொருள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவை நோக்கி ஈரானிய-கொடி பறக்கும் எண்ணெய்த்தாங்கி கப்பல் தற்போது செல்கிறது. அதேவேளை அதன் செயலற்று முடங்கிக்கிடக்கும் தினசரி 1.3 மில்லியன் பேரல்கள் சுத்திகரிப்பு ஆற்றல் கொண்ட வலையமைப்பை மறுதொடக்கம் செய்ய வும் ஈரான் உதவுகிறது என்று எண்ணெய் தொழில் தரவு வழங்குநர் TankerTrackers.com கூறுகிறது.

மேலும், ஈரானின் இந்த துணிச்சலான நடவடிக்கையைத் தொடர்ந்து, மெக்ஸிகோவும் வெனிசுலாவின் தேவைக்கேற்ப எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது.

சர்வதேச ஒழுங்கில் வாஷிங்டனின் தலையீட்டால் சோர்வடைந்துள்ள அதன் நட்பு நாடுகள் உட்பட - அமெரிக்காவின் ஒற்றை துருவ கொள்கைகளுக்கு எதிரான இத்தகைய தைரியமான நகர்வுகள் - அதன் நீண்டகால மேலாதிக்கத்திலிருந்து விலகிச் செல்வதை விரைவுபடுத்துகின்றன என்பதை காண்கிறோம்.

இந்த விஷயத்தில் மேலும் தெளிவுக்காக, நாங்கள் பாங்காக்கை தளமாகக் கொண்ட அமெரிக்கரான புவிசார் அரசியல் ஆராய்ச்சியாளர் அந்தோனி கார்டலூச்சி (Anthony Cartalucci)யை 'மெஹர்' செய்தி நிறுவனம் அணுகியது.

அவரது நேர்காணலின் முழு விபரம் இங்கே:

இந்த முக்கியமான காலகட்டத்தில் மற்றும் உலக எரிசக்தி விவகாரங்களில் வாஷிங்டனின் தலையீட்டிற்கு மத்தியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிரான இத்தகைய நகர்வுகள்  உலகுக்கு சொல்லும் செய்தி என்ன...?

அமெரிக்கா அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள நிதி, இராணுவ வலிமை மற்றும் வளங்களை கட்டுப்படுத்துவதில் கட்டப்பட்ட ஒரு நவீனகால பேரரசாகும். அமெரிக்காவின் இந்த அவசியமற்ற அதிகார அழுத்தங்களுக்கு நாடுகள் தொடர்ந்தும் அடிபணிய போவதில்லை என்ற செய்தியையே அது உலகுக்கு எடுத்துரைக்கிறது. எல்லா நாடுகளும் அதன் திட்டத்தின் அடியில் பொருந்த வேண்டும் என்ற அமெரிக்காவின் "சர்வதேச ஒழுங்கை" விட தேசிய இறையாண்மையை மதிக்கும் பல்துருவ உலகம் ஒன்றையே நாடுகள் விரும்புகின்றன.

முன்னர் அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணிந்த நாடுகள் உட்பட அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக, நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு பெருகுவதற்கான ஒரு காரணியும் உள்ளது. காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை, அது மாறிக்கொண்டே இருக்கும் என்ற யதார்த்தத்தை அமேரிக்கா உணரவேண்டும். உலக நாடுகளுடனான அதன் உறவுகளை தொடர்ந்தும் பேண வேண்டுமாயின், அமெரிக்கா தன்னுள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தியையும் அது தெரிவிக்கிறது.

ஈரானின் - பின்னர் மெக்ஸிகோவின் - அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத துணிச்சல், சில ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்திற்கான விருப்பத்துடன், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் என்ற ஆயுதத்தை காலப்போக்கில் பலம் இழக்கச்செய்யுமா..?  குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய நாடுகளுக்கான பிரான்ஸின் சமீபத்திய அழைப்பு மற்றும் வாஷிங்டனின் நோர்ட் ஸ்ட்ரீம் 2’ தடை குறித்து ஜெர்மனியின் விமர்சனங்களுக்குப் பிறகு? (நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்பது பால்டிக் கடல் ஊடாக ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் புதிய குழாய் ஆகும்).

ஈரான், மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனி அனைத்தும் அமெரிக்க தலையீட்டிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க மேலாதிக்கத்தை பின்னுக்குத் தள்ளி, அதிகார சமநிலையின் மத்தியில் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவது, தொடர்ச்சியான மற்றும் நீண்ட செயல்முறையின் மற்றொரு படியாகும்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டின் ஆதரவில் தங்கியிருப்பதை குறைப்பதற்காக பிரான்ஸ் அழைப்பு விடுப்பது உலகளாவிய சக்தி சமநிலையை உருவாக்குவதன் ஒரு பகுதியாகும். நாடுகள் சமநிலையை அடையும்போது, அரை நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவரும் வாஷிங்டனின் மேலாதிக்கக் கொள்கைகளுக்கு அவை இரையாகும் வாய்ப்பு குறைவு. அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து வருவதால், அது வெறுமனே மற்றொரு தவறான மேலாதிக்கத்தால் மாற்றீடு செய்யப்படாதிருப்பது முக்கியம். நாடுகளுக்கு இடையிலான அதிகார சமநிலை என்பதே முக்கியமானது.

ஈரானும் வெனிசுலாவும் அமெரிக்காவினால் அன்றி,   சர்வதேசத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகள் அல்ல என்பதாலும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தெஹ்ரானின் அண்மைய பதிலடியின் அடிப்படையில் நோக்குகையில் வாஷிங்டனின் எந்தவொரு விரோத நடவடிக்கைக்கு சாத்தியம் ஏதேனும் உள்ளதா?

இலக்கு வைக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக வாஷிங்டன் வழக்கமாகப் வன்முறையை பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கும்போது எதுவும் நிராகரிக்க முடியாது அல்லது நிராகரிக்கப்படக்கூடாது. வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக - மற்றும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக கூட பலத்தைப் பிரயோகிப்பது தொடர்பாக வாஷிங்டனில் தினசரி உரையாடல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளும், மாதமும், ஒரு வருடமும் கடக்கும்போது, உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க திறன் தற்போது முன்பை விட பலவீனமான நிலையில் உள்ளது.

இருந்தாலும், அமெரிக்கா விரக்தியடைந்த நிலையில், மேலாதிக்க நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. எவ்வாறாயினும், தோல்வியினால் ஏற்படும் பாரிய இழப்பையும் வெற்றியினால் பெறக்கூடிய சிறிய லாபத்தையும் அமெரிக்கா ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஈரான் அல்லது வெனிசுலாவுக்கு எதிராக இராணுவ சக்தியைப் அமெரிக்கா பயன்படுத்துமானால், அது ஒரு சிறிய வெற்றியாகவே அமையும். அதனை அடைய சிறிய நாடுகளை கொடுமைப்படுத்தும் வல்லரசு என்ற இழிசொல்லுக்கு ஆளாகும். இருப்பினும் அது தோல்வியைத் தழுவும் பட்சத்தில் - சிறிய நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட வல்லரசு என்றும் அமெரிக்கா வீழ்ச்சியின் எல்லையில் உள்ளது என்று பலரின் மனதில் பதிந்துவிடும்.

அவ்வாறு நடைபெறுமாயின் அது அமெரிக்காவிற்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்?

ஒரே நேரத்தில் பல முனைகளில் அமெரிக்கா நெருக்கப்படுகிறது. ஈரான்  வெனிசுலா ஆகிய இரு நாடுகளும் அவற்றுக்கு எதிரான அமெரிக்காவின் ஆட்சி மாற்ற முயற்சிகளையும், அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தையும் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஐரோப்பாவிலும் அமெரிக்கா இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, அங்கு அதன் நெருங்கிய "நட்பு நாடுகள்" கூட அதனுடன் ஒத்துழைக்க தயாராய் இல்லை, குறிப்பாக நோர்ட் ஸ்ட்ரீம் 2 எனும் ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் ஊடாக ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் புதிய குழாய் திட்டம் விடயத்தில். மேலும், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை சீனா தொடர்ந்து முறியடித்து வருகிறது என்பது கண்கூடு.

ஈரான், வெனிசுலா, அல்லது ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறுவது முக்கியமாகும்; அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதை அது உலகிற்குக் காட்டுகின்றன, மேலும் இந்த மாற்றுகள் பெருவணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் முதல் சுற்றியுள்ள சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் சிறந்த நன்மை பயக்கும். இது தொடரும் வரை, யுத்தத்தின் மூலம் அதை மாற்றுவதற்கான அமெரிக்க முயற்சிகள் பல துருவமுனைப்புக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும் - அமெரிக்கா திட்டமிட்ட "ஒழுங்கு" இனியும் செல்லுபடியாகாது என்பது மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கு அது ஆபத்து விளைவைக்கக்கூடியது.

உலக சக்திவள ஆற்றலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க பிரயாசைகளை சமீபத்திய முன்னேற்ற நிகழ்வுகள் எவ்வாறு சீர்குலைக்கும்?

அமெரிக்கா தனது "ஷேல் ஆயில்" தொழிற்துறையை ஊக்குவிப்பதன் மூலம் சக்திவள ஆற்றலில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. இருப்பினும், இந்த வகையான சக்திவளங்கள் அகழ்ந்தெடுப்பது என்பது மிகவும் அதிகரித்த செலவைக்கொண்டது, பின்னர் ரஷ்ய இயற்கை எரிவாயு போன்ற பிற ஹைட்ரோகார்பன்களை விட இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான செலவும் அதிகமாகும்.

அமெரிக்காவின் ஷேல் நிறுவனம் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கு, அமெரிக்கா - புதுமைக்குத் திரும்புவதற்குப் பதிலாக - பொருளாதாரத் தடைகள், மோதல்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பிற சீர்குலைக்கும் நடத்தை ஆகியவற்றின் மூலம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நாசப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் - விலைகள் மிக அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், அமெரிக்க ஷேலின் அதிக விலை போட்டித்தன்மையுடன் இருக்கும் என்றும் நம்பியது. நிச்சயமாக, இது தற்காலிக வெற்றியைக் கொடுத்தாலும் அது நிலையானது அல்ல, இதற்காக அமேரிக்கா ஏராளமான நிதியினை ஒதுக்கி இருந்தபோதிலும், அது விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் இந்த திட்டங்களுக்கு எதிராக நிரந்தர தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் நாடுகள் இந்த இடையூறுகளில் இருந்து மீண்டு வரும் வழிகளைக் கண்டுபிடித்திருப்பது அமெரிக்கா எதிர்பாராத ஒன்று. ஆகவே எதிர்காலத்தில் இந்த தந்திரத்தை தொடர இயலாது என்பதையும் அவை உணர்த்தியுள்ளன. ஆகவே இது உலக சக்திவள ஆற்றலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், பொதுவாக அமெரிக்க மேலாதிக்கத்தின் கருத்துக்கு இது மற்றொரு பின்னடைவாகும்.

மெஹர் செய்தி நிறுவனத்துக்காக நேர்காணல்: பேமான் யஸ்தானி மற்றும் முதஸா ரஹ்மானி

https://en.mehrnews.com/news/159907/Iran-Venezuela-China-Russia-should-show-alternatives-to-US

 


No comments:

Post a Comment