Wednesday, July 17, 2019

யெமன் யுத்தத்தினால் சவூதி அரேபியாவுக்கு பெருத்த அவமானம்...!

Saudi disgraced by war on Yemen 

யெமனின் ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க, சவூதி சார்பு அப்துல் றப்பு மன்சூர் ஹாதி, நாட்டில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்கேடுகள் காரணமாக ஹௌதி போராளிகள் மேற்கொண்ட புரட்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் 2015ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு தப்பியோடினார். அதனால் இப்பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் சவூதி ஆதிக்கம் நிலைகுலையலாயிற்று.
மீண்டும் மன்சூர் ஹாதியை பதவியில் அமர்த்துவதற்காக, சவூதி அரேபியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து ஒன்பது நாடுகளின் கூட்டணியை அமைத்துக்கொண்டு திடுதிப்பென யெமன் மீது தாக்குதலை தொடுத்தது.
சவுதி தலைமையிலான இந்த தாக்குதல், ஆரம்பத்தில் ஹௌதி இலக்குகள் என்று ஆரம்பித்து, மேற்கு யெமனில் பொதுமக்கள் இலக்குகள் வரை விரிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தலைமையிலான தரைப்படைகளை தெற்கில் நிறுத்தியதுடன் பொருளாதாரத் தடை, கப்பல் போக்குவரத்து தடை என்று சவூதி தலைமையிலான கூட்டுப்படை நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது.
சவூதி ஆட்சியாளர்களின் மிருகத்தனத்துக்கு எடுத்துக்காட்டு 
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மன்சூர் ஹாதியை மீண்டும் பதவியில் அமர்த்துவோம் என்று சவூதி அரேபியா சூளுரைத்தது. இப்பிராந்தியத்திலேயே வறிய நாடான யெமன், நவீன அமெரிக்க ஆயுதங்களை வைத்துள்ள சவுதியின் நெருக்குவாரங்களுக்கு அடிபணியும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் சவூதி அரேபியா மட்டுமல்ல உலக வல்லரசுகளே திகைக்கும் அளவுக்கு ஹௌதிகள் திருப்பித் தாக்கினர். 39 நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டும் சவுதியினால் ஹௌதிகளின் உறுதியை தகர்க்க முடிய வில்லை.
சவுதிக்கு இது பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஈரான் ஹௌதிகளின் பின்னணியில் நின்று அவர்களுக்கு உதவி வருவதாக சவூதி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
அதே சமயம், யெமனின் அன்ஸாருல்லாஹ் காவலர்கள் வெற்றி மீது வெற்றிகளை அடுக்குக்கொண்டு செல்கின்றனர். சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய இரு நாடுகளினதும் எல்லா அத்துமீறல்களையும் அனைத்து முனைகளிலும் பின்னுக்குத் தள்ளி வருகின்றனர். சவூதி தலைமையிலான தாக்குதல் நடத்தியவர்களும் அவர்களது கூலிப்படையினரும் யெமனின் தெற்கு முன்னணியில் துவம்சம் செய்யப்படுவது மட்டுமல்லாமல், எஞ்சிய படையினர்  முக்கிய துறைமுக நகரமான ஏடனை நோக்கி விரட்டப்பட்டுள்ளனர்.
வடக்கில், சவுதி எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி, யெமன் ஆயுதப்படைகள் மற்றும் சமூக குழுக்கள் இணைந்து, நஜ்ரான் மற்றும் ஜிஸானின் பெரும் பகுதியை சவுதி கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர். "விடுவித்தல்" என்ற சொல் இங்கே நிச்சயமாக பொருந்தும், ஏனென்றால் மேற்கூறிய இரண்டு மாகாணங்களும் வரைபடத்தில்  சவுதி இராச்சியத்தின் ஒரு பகுதியாக காட்டப்பட்டாலும், அவை, வஹாபி படையினரால் 1934 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்படும் வரை, யெமனின் முக்கிய பகுதியாகவே இருந்து வந்தன என்பதுவே சரித்திரம்.
ஆரம்பத்தில் சவுதிக்கு உதவிய கட்டார் மற்றும் மொராக்கோ அரேபியாவுடனான உறவுகள் மோசமடைந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறின. இப்போது (இந்த மாதம்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமது படைகளை வாபஸ் வாங்கிக்கொண்டுள்ளது.
சவுதியின் முட்டாள் தனமான செயலினால் நான்கு ஆண்களாக தொடரும் யுத்தத்தினால் பல்லாயிரம் யெமன் உயிர்கள் பலியாயின என்பது மட்டுமல்லாமல் சவூதி அரேபியா, உலக நாடுகள் மத்தியில் அவமானப்பட்டுக் கிடக்கிறது என்பதோடு உலக முஸ்லிம்களின் வெறுப்பையும் சம்பாதித்து உள்ளது.
சவூதி அரேபியா, அரேபிய உலகில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய இராணுவத்தைக் கொண்டிருக்கலாம், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றாலும், அவற்றினால், மத்தியகிழக்கில் மிகவும் வறிய நாடான யெமனை தம் இஷ்டப்படி ஆட்டுவிக்க முடியவில்லை. அரேபிய தீபகற்பத்தின் தெற்கில் ஒரு வியட்நாம் போர் சூழ்நிலை உருவாகிவருவதாகத் தெரிகிறது. இங்கே மன உறுதியுடன் அல்லாஹ்வின் மீதான பூரண நம்பிக்கையும் கொண்ட போராளிகளிடம் படையெடுப்பாளர்களின் உலகாயத பொருள் வளம் தோல்வி கண்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக, இறை தூதரினால் ஆசீர்வதிக்கப்பட்ட அரபு பிரதேசம் என்று அழைக்கப்பட்ட நிலத்தின் வீரம் மிக்க  பாதுகாவலர்கள் பாரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி படையெடுப்பை தொடர்ந்த இனப்படுகொலை ஆதரிப்பவர்களால் கூட சவுதியின் அடாவடித்தனத்தை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை.
ஆசிர் மாகாணத்தில், பனீ சவுத் ஆட்சியின் கீழ் உள்ள உள்ள அபா சர்வதேச விமான நிலையம், யெமனியரின் கோபத்தின் விளைவை எடுத்துக்காட்டும் இடமாக காட்சியளிக்கிறது. சவுதியினால் ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தை அன்ஸாருல்லாஹ் படையினர் வழங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அதிகாலையில், சவுதி விமானப்படையால் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த அபா சிவில் விமான நிலையம், யெமன் ஏவுகணைப் படைகளின் துல்லியமான தாக்குதலுக்கு உள்ளானது. யெமன் ஆயுதப் படைகளால் மிகவும் இரகசியமாக உருவாக்கப்பட்ட, முற்றிலும் புதிய மற்றும் அறியப்படாத ஏவுகணை, விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்தை வெடித்து சிதறடித்து, விமான நிலையம் செயற்பட முடியாத நிலையை உருவாக்கியது.
தாக்குதலுக்குப் பிறகு, அபாவின் விமான கால அட்டவணைகள் மாற்றப்பட்ட படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அபாவை நோக்கி வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன. யெமனில் சவுதி வான்வழித் தாக்குதல்களினால் பல பொதுமக்கள் உயிரிழப்பது வழக்கமாயினும் அன்ஸாருல்லாஹ்க்களின் கோபுரத்தின் மீதான தாக்குதலின் துல்லியம் பூஜ்ஜிய இறப்புக்கு காரணமாக அமைந்தது. தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்குள், சவூதி அரச ஊடகங்கள் கூட பதிலடி தாக்குதல் நடந்ததாகவும் விமான நிலையத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டன.
அன்சாருல்லாவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், முஹம்மது அப்துல் சலாம் இதுபற்றி குறிப்பிடுகையில்,  "சவுதியின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, முற்றுகை, சனா விமான நிலையத்தை மூடல், அரசியல் தீர்வை நிராகரித்தல் மற்றும் அமைதியான தேர்வுககளை உதாசீனம் செய்தல் ஆகியவை எம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன" என்று ஏவுகணைத் தாக்குதலுக்கு தெளிவான வார்த்தைகளில் பதிலளித்தார்.
அபா விமான நிலையத்தின் மீதான இந்த ஏவுகணை தாக்குதல் சவுதிக்கு பேரதிர்ச்சியைத் தந்தது மட்டுமல்லாமல் அதனை வெட்கித் தலைகுனிய வைத்தது எனலாம். ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, யெமன் ராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தி, அபா விமான நிலையத்தின் ரேடார் அமைப்பை குறிவைத்து அழித்தது. யெமன் இந்த தாக்குதலுக்கு காசிஃப் -2 கே ரக ட்ரோன்களைப் பயன்படுத்தியது. இந்த ரக ட்ரோன்கள், தம்மைத் தாமே அழித்துக்கொண்டு, எதிரிகளின் இலக்குகள் மீதும் எதிரி படைகள் மீதும் கூராயுதங்களை பொழியும் விதத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். இது ஒப்பீட்டளவில் மலிவான ஆனால் மிகவும் பயனுள்ள கொரில்லா தாக்குதல் தந்திரமாகும், யெமன் இதனை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது. அபா சர்வதேச விமான நிலையம், இப்போது அதன் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார் அமைப்பு இல்லாமல், முற்றிலும் இயங்க இயலாது ஆக்கப்பட்டுள்ளதானது சவூதி ஆட்சியாளர்களுக்கு பெருத்த அவமானமாகும்.
அடுத்த நாள் (ஜூன் 15 அன்று), காசிஃப் -2 கே ட்ரோன்களின் மற்றொரு அலை ஜிசான் மற்றும் அபா விமான நிலையத்தை மீண்டும் ஒரு முறை தாக்கியது. ஜிசான் விமான நிலையத்தில், சவுதி ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) திட்டத்தின் கட்டுப்பாட்டு அறை அழிக்கப்பட்டது, அதேசமயம் அபாவில் யெமன் ட்ரோன்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தை அழித்தன. இரு விமான நிலையங்களும் தற்காலிகமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான வழிசெலுத்தல் கண்காணிப்பு மையங்களால் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
சவூதி ஆட்சியாளர்களின் மிருகத்தனத்துக்கு எடுத்துக்காட்டு 
இன்னும் அனைத்து சவுதி போர் இயந்திரத்தில் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், தாக்குதல்கள் இன்னும் முடிவடையவில்லை. யெமன் ஆயுதப்படைகள் ஜூன் 17 அன்று மீண்டும் தாக்கின. அவர்கள் ஆளில்லா மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாமல், அதே அபா சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் தாக்குவதிலும் வெற்றி பெற்றனர். ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இரண்டு முறை முன்பு நடந்ததைப் போலவே, ஆசிர் மாகாண தலைநகருக்குச் செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக, ஆனால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ஜூன் 19 அன்று, யெமனின் பாதுகாவலர்கள் மற்றொரு  ஏவுகணையை ஏவினர், இந்த முறை ஜிசான் மாகாணத்தின் அல்-ஷாகிக் பகுதியில் ஒரு பெரிய சவுதி மின் நிலையத்தைத் தாக்கியது. ஏவுகணைத் தாக்குதல் மின் நிலையத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, சவுதி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போர்க்குற்றங்களுக்கு மற்றுமொரு பதிலடியாக இது அமைந்தது.
அதே நாளில், நஜ்ரானில் ஒரு இராணுவக் கூட்டத்தின் நடுவே தாக்கிய பத்ர்-எஃப் ஏவுகணைத் தாக்குதலில் டஜன் கணக்கான சவுதி துருப்புக்களும் வெளிநாட்டு கூலிப்படையினரும் கொல்லப்பட்டனர். தாக்குதல் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், டஜன் கணக்கான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 20 அன்று, யேமன் ஆயுதப்படைகளின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ஜிசான் சர்வதேச விமான நிலையம் மீண்டும் யேமன் போர் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக அறிவித்தார். இந்த முறை ஆளில்லா வான்வழி வாகனங்கள் சவுதியின் ஹங்கர் விரிகுடாவை தாக்கியது. யேமனில் பொதுமக்கள் மற்றும் சிவிலியன்  உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்பட்ட அமெரிக்க-சவுதி போர் இயந்திரத்தின் ஒரு பகுதியான, ஒரு காலத்தில் அஞ்சப்பட்ட, ட்ரோன்கள் இப்போது யெமனின் ஒரு புதிய மற்றும் மிகவும் திறமையான ஆளில்லா விமானத்தால் அழிக்கப்படுகின்றன.
நடைபெற்று வரும் மிகவும் திறமையான மற்றும் துல்லியமான யெமன் வான்வழித் தாக்குதல்கள் மூலம், யெமன் புரட்சியின் தலைவர் சயீத் 'அப்துல்-மாலிக் அல்-ஹூதி ஏப்ரல் மாதத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படையெடுப்பாளர்கள் ஹுதைதா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் சவுதி வசதிகள் தாக்கப்படும் என்று அவர் அப்போது சூளுரைத்திருந்தார். இவ்வளவு குறுகிய காலத்தில் அது நடைபெறும் என்று யாரும் எதிர்பாக்கவில்லை.
ஜூன் 20 அன்று, யஹ்யா சாரி இந்த அச்சுறுத்தலை மீண்டும் தெளிவான வகையில் வெளியிட்டார், யெமனின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சவூதி அரேபியாவில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தாக்க முடியும் என்று எச்சரித்திருந்தார். "சவூதி அரேபியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க தயாரிப்புகளாலும் இடைமறிக்கும் உபகரணங்களாலும் சமாளிக்க முடியாத உயர் தொழில்நுட்பங்கள் இப்போது எங்களிடம் உள்ளன; எமது தாக்குதல்கள் வெறும் ஆசிர், நஜ்ரான் அல்லது ஜிசான் ஆகியவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது" என்றும் கூறினார்.
எல்லா முரண்பாடுகளையும் மீறி, யெமன் போரில் அன்ஸாருல்லாஹ் படையினர் வென்று வருகின்றனர் என்பது நிச்சயமாக மிகைப்படுத்தல் அல்ல. இது உலகெங்கிலும் உள்ள பல செய்தி பண்டிதர்களுக்கும் தம்மை ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோருக்கும் ஆச்சரியமாக இருக்கக் கூடும், ஆனால் யெமன் நிச்சயமாக வெற்றி பெறும், இன்ஷாஅல்லாஹ்.
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன். (4/45)


No comments:

Post a Comment