Wednesday, July 3, 2019

ஈரானுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை மதித்து நடப்பதே சகல தரப்பினருக்கும் சிறந்ததாகும்.


It is best for all parties to respect the agreement 
reached with Iran

அமேரிக்கா வல்லரசு என்பதால் எல்லா நாடுகளும் அதற்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானிடம் பலிக்கவில்லை.
ஈரானின் நவீன வரலாற்றிலிருந்து ஒருவர் எதையும் கற்றுக் கொள்ள முடிந்தால், ஈரானியர்கள் தமது பாதுகாப்புக்கு வல்லரசுகளின்  தங்கியிராமல்  தங்களை நம்பியிருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்வார். இந்த வல்லரசுகள் தங்கள் சொந்த நலனுக்காக ஒரு கணத்தின் அறிவிப்பில் எல்லா வாக்குறுதிகளையும் விற்றுவிடுவார்கள் - ஏமாற்றிவிடுவார்கள் - என்பது ஈரானியர் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
ஏகாதிபத்தியம் உலகில் ஏற்படுத்திய சேதத்தின் பாரிய பங்கை ஈரானும் அனுபவித்தது - கஜார் ஆட்சி காலத்தில் ஈரான் மீது ரஷ்ய மற்றும் பிரிட்டிஷ் கூட்டு கட்டுப்பாடு, பின்னர் 1917-19க்கு இடையில் முதலாம் உலகப் போரில் ஈரானின் நடுநிலைமையை எதிர்த்து, பிரிட்டிஷ் படை ஆக்கிரமிப்பதன் மூலமும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்வதன் மூலமும்  ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தின் காரணமாக ஈரானிய மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் (பாரி ரூபினின் தி மிடில் ஈஸ்ட்: அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்திற்கான வழிகாட்டி, பக். 508)
இதைத் தொடர்ந்து 2ம் உலக யுத்தத்திலும் சதித்திட்டம் நடத்தியது. இந்த யுத்தத்தில் ஈரான் நடுநிலை வகித்தபோது, அப்போதிருந்த ஆட்சியை சதித்திட்டத்தின் மூலம் கவிழ்த்து, முகமது ரிஸா ஷாவை ராஜ்யத்தின் அரியணையில் அமர்த்தியது. ஈரானிய எண்ணெய் தொழிற்துறையை தேசியமயமாக்கியதன் காரணமாக ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்த  முஸத்தேக்  அரசாங்கத்தை கவிழ்த்து, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு, அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு சதியின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை நாம் குறிப்பிட தேவையில்லை.
 வெளிநாட்டு சக்திகளால் முறியடிக்க முடியாது போனது, 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஊடாக மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் ஈரான் வெற்றிபெற்ற அந்த நேரத்திலாகும். அதன்பிறகு கூட, அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள் கூட ஈரானுக்கு எதிராக சதாம் ஹுசைனை தூண்டி, போரில் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தன. அவருக்கு ஆயுதங்கள் மற்றும் ரசாயன ஆயுதங்கள் மற்றும் உளவுத்தகவல்களை வழங்கி சதாம் ஹுசைனை ஊக்குவித்தன.
எச்சரிக்கை நிலையில் பெற்ற ஒரு பாடம்
இந்த வரலாற்று நிகழ்வுகளை (இன்னும் பல நிகழ்வுகளை) கணக்கில் எடுத்துக் கொண்டால், அமெரிக்கா மற்றும் பிற உலகளாவிய சக்திகள், அதாவது காலனித்துவ வரலாற்று சாதனை படைத்தவர்கள் எடுக்கும் எந்தவொரு நகர்வுகளிலும் ஈரானியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. விரிவான கூட்டு செயல் திட்டம் (JCPOA அல்லது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்) ஈரானுடனான உறவுகளில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை, மிகச் சிறப்பான ஒன்றாக சரித்திரத்தில் பதிந்திருக்கக் கூடும், ஆனால் அதற்கு பதிலாக, ஐரோப்பியர்கள் ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறின.
அமெரிக்கர்கள், ட்ரம்பின் ஈரான் கொள்கை காரணமாக ஒப்பந்தத்தை விட்டு விலகினர். அது மட்டுமல்லாமல், ஐரோப்பியர்கள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஈரானிடம் இருந்து இன்னும் பால் கறக்க முயற்சிக்கிறார்கள் - ஈரான் ஏற்கனவே செய்து முடித்த ஒப்பந்தத்திற்கு அதிகமானவற்றை வழங்கினால், அவர்கள் தங்கள் கடமைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதன் பொருள் என்னவென்றால், இராணுவமயமாக்கல் அதிகரித்து இருக்கும் நிலையில், பாரசீக வளைகுடா அரபு முடியாட்சிகளின் நன்மைக்காக, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தில் சலுகைகளைச் சேர்க்குமாறு அவர்கள் கேட்கிறார்கள். இது பிராந்தியத்தின் சமீபத்திய பதட்டங்களுக்கு காரணமாகும்.
அத்தகைய கொந்தளிப்பான சுற்றுப்புறத்திலும் - அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சமீபத்தில் கிழக்கு மற்றும் மேற்கில் அதன் அண்டை நாடுகளை ஆக்கிரமித்து இராணுவ தளங்களை கட்டியுள்ள இடத்தில் - பிராந்தியத்தின் மிகவும் நிலையான நாடான ஈரான், தன்னுடைய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் சலுகைகளை வழங்குவதை விட, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மற்றும் தற்காப்பு திறன்களை நம்பியிருப்பது மிக சிறந்த உத்தியாகும்.
ஏற்கனவே கூறப்பட்ட விடயங்களைப் பார்க்கும்போது, பொய்யுரைக்கும் வரலாற்றைக் கொண்ட, அவர்களின் ஒப்பந்தங்களுக்கு இணங்கவில்லையெனில், பிற மக்களின் இழப்பில் தங்கள் சொந்த பொருளாதார நலன்களை அதிகரித்துக்கொள்ள  போருக்குச் செல்லும் பல நாடுகளை ஈரான் சமாளிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட  பஞ்சத்தை ஒருவர் மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதால் 20 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் செத்து மடிந்தனர். இதைக் குறிப்பிடுகையில் சர்ச்சில்: நான் இந்தியர்களை வெறுக்கிறேன்; அவர்கள் மிருகத்தனமான மதத்தைக் பின்பற்றும் மிருகத்தனமான மக்கள்; முயல்களைப் போல இனப்பெருக்கம் செய்த அவர்களுடைய சொந்த தவறே பஞ்சத்துக்கான காரணம் என்று கூறினார். இந்த வல்லரசுகளின் இயல்பே இதுதான்.
ஈரான் கடைபிடித்த புத்திசாலித்தனமான உத்தி
RQ-4 ஆளில்லா உளவு விமானத்தை (ட்ரோனை) வீழ்த்துவதில் ஈரான் ஒரு புத்திசாலித்தனமான உத்தியை கையாண்டது. அவ்வாறு செய்வதன் மூலம், ஆக்கிரமிப்பாளனுக்கு - அமெரிக்கா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பு அல்லது தேசிய கௌரவம் என்ற விடயங்களில் சமரசம் செய்யத் தயாராக இல்லை - என்று எச்சரிக்கை விடுப்பதில் தெஹ்ரான் வெற்றிகரமாக காய் நகர்த்தியது.
ஈரான் ஒரு யுத்தத்தை விரும்பவில்லை. பொதுவாக, இராணுவ கண்காணிப்பு ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது பதற்றம் அதிகரிக்க வழிவகுக்குமேயன்றி இராணுவ விரிவாக்கத்திற்கு வழிவகுக்காது என்பதை ஈரான் அறியும். (சர்வதேச வான்பரப்பிலேயே தனது விமானம் பறந்தது என்று அமெரிக்கா கூறினாலும் அமெரிக்க மண்ணிலிருந்து 8000 மைல் தொலைவில் அமெரிக்க விமானத்தின் சிதைந்த பகுதிகள் ஈரானிய அதிகாரிகளால் ஈரானிய கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அமேரிக்கா வல்லரசு என்பதால் எல்லா நாடுகளும் அதற்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானிடம் பலிக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.).
இந்த முடிவின் புத்திசாலித்தனம் என்னவென்றால், ஈரான் இராணுவ மோதலுக்கு  வழிவகுக்காது, வழங்கவேண்டிய செய்தியை கச்சிதமாக வழங்கியது. ட்ரோன் உடன் சென்ற, 38 அமெரிக்க ராணுவ வீரர்கள் அடங்கிய விமானத்தை சுட்டு வீழ்த்தியிருந்தால் அது நிலைமையை மோசமாக்கி இருக்கும். ஈரானுக்கு வேண்டப்பட்டதெல்லாம் ஒரு தெளிவான எச்சரிக்கையை ட்ரம்புக்கு வழங்கவேண்டும் என்பதே ஆகும். இது ட்ரம்பிற்கு தெளிவாக கிடைத்துவிட்டது.
ட்ரோனுடன் கூடவே 38 ராணுவ வீரர்களுடன் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்துவதை ஈரான் தவிர்த்தது. அதற்காக ட்ரம்ப் ஈரானிய அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார் .
(இருப்பினும் "சர்வதேச வான்பரப்பில்" பறக்கும் விமானமாக இருந்திருந்தால்  ஈரானிய அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது என்பது இங்கு கவனிக்கத்தக்கது).
அதோடு, ஈரான் தனது எல்லைக்கு அருகில் பறக்கும் எந்தவொரு விமானத்தையும் அடையாளம் காணும் உரிமையைக் கொண்டுள்ளது. ஈரானின் வான் எல்லைக்கு 12 கடல் மைல் வரை அனுமதியற்று பறக்கும் எந்த விமானத்தையோ ட்ரோனையோ சுட்டு வீழ்த்தும் சட்டப்பூர்வ உரிமை ஈரானுக்கு உண்டு. மனித உயிழப்புகளின்றி நடத்தப்பட்ட ட்ரோன் மீதான ஈரானின் தாக்குதல், பதிலடி கொடுக்கும் எந்த சட்டபூர்வ அதிகாரத்தையும்  அமெரிக்காவுக்கு அளிக்காது. (அமெரிக்க வான் எல்லை அதன் நில எல்லையில் இருந்து 200 மைல் வரை நீண்டுள்ளது. தமது எல்லைக்கு இவ்வளவு நெருக்கமாக பறக்கும் அடையாளம் காணப்படாத ட்ரோனை அமெரிக்காவும் அநேகமாக சுட்டு வீழ்த்தியிருக்கும்.)
இன்னும் சொல்வதென்றால், தனது சொந்த திறன்களை நம்பியிருப்பதன் மூலம் சுயாதீனமாக அடைய முடிந்ததை ஈரான் மற்ற நாடுகளுக்கு தெளிவாகக் காட்டியது எனலாம். ஈரான் உலகின் முன்னணி இராணுவ சக்தியின் விமானத்தை அதன் வான்வெளியை மீறியதற்காக தயக்கமின்றி சுட்டு வீழ்த்தியதன் மூலம் அதனது இறையாண்மையை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்ற செய்தியை தெளிவாக உணர்த்தியுள்ளது.
அமேரிக்கா ஈரானை அதன் இராணுவ வலிமை மற்றும் பிராந்திய பிரசன்னத்தைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது என்றாலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களையும், 25,000 அமெரிக்க துருப்புக்களையும் ஈரானின் இலக்கு வரம்பிற்குள் வைத்திருப்பதன் மூலம் அமேரிக்கா அதன் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளது.
ஈரானுடனான ஒரு போர் பிராந்தியத்தில் பேரழிவினை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஈரானுடனோ, ஹிஸ்புல்லாஹ்வுடனோ அல்லது அன்ஸாருல்லாஹ்வுடனோ மேற்கொள்ளப்படும் போர் நிச்சயமாக எவருக்கும் எந்த நன்மையையும் பயக்காது.
ஈரான் தன் வல்லமையை இதுவரை முழுமையாக வெளிக்காட்டவில்லை. சதிகார அரபு முடியாட்சிகளுக்கு ஈரான் எந்த அதிர்ச்சி வைத்தியத்தை வைத்துள்ளது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
இப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக ஈரானுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை மதித்து நடப்பதே சகல தரப்பினருக்கும் சிறந்ததாகும்.
கட்டுரையாளர் கரீம் ஷராரா ஒரு லெபனான் PhD மாணவர், இவர் 2013 முதல் தெஹ்ரானில் வசித்து வருகிறார், ஈரானிய விவகாரங்களை மையமாகக் கொண்டு தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார்.


No comments:

Post a Comment