Contributors

Sunday, April 7, 2019

அறியாமை எனும் இருள் போக்கி, அறிவுக்கண்ணை திறக்க "ஓதுவீராக" என்ற வசனம் இறங்கிய நாளே "மப்'அஸ்"


Mab'Ath Festival in Iran 

ஈரான் இஸ்லாமிய குடியரசில் பண்டிகைகளுக்கு பஞ்சமில்லை. தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் கலாசார பண்டிகைகள், இஸ்லாமிய சன்மார்க்கத்துடன் தொடர்புபட்ட பண்டிகைகள் என ஏராளமான உயிரோட்டமிக்க பண்டிகைகளை காணலாம்.

சன்மார்க்கத்துடன் தொடர்புபட்ட பண்டிகைகளாக நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், ரசூலுல்லாஹ் பிறந்த தினம், ரசூல் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலீ (ரலி) அவர்களை வலீயாக நியமித்த தினம் மற்றும் மப்'அஸ் தினம். இவற்றில் முதல் மூன்று தினங்களும் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் தினங்களாகும்.

இதற்கு மேலதிகமாக ஷீ'ஆ முஸ்லிம்கள் நபி முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு புனித குர்'ஆனின் முதல் வசனம் அருளப்பட்ட தினத்தையும் இஸ்லாமிய சரித்திரத்தில் முக்கியமான தினமாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தை "மப்'அஸ்" அவர்கள் அழைக்கின்றனர்.

இத்தினத்தை சிலர் பி'ஸாத் என்றும் அழைக்கின்றனர். முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு தூதின் முதலாவது வசனத்தை அருளி, மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் பொறுப்பை ஒப்படைத்த தினமே மப்'அஸ் அல்லது பி'ஸாத் என்றழைக்கப்படுகிறது.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது 40 வயதை அடைகையில், மக்காவுக்கு அருகில் உள்ள ஜபலுன் நூர் மலையின் ஹிரா குகையில் இறை தியானத்தில் அடிக்கடி ஈடுபடுபவராக இருந்தார். அவ்வாறான ஒரு தினத்திலேயே சூரா "அலக்"கின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டன. ஹிஜ்ரத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன் ரஜப் மாதம் 27ம் நாள் இது நிகழ்ந்தது என்பது ஷீ ஆக்களின் நம்பிக்கை.


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சிறுபராயம் முதலே சிலை வழிபாடுகாளை வெறுப்பவராகவே இருந்தார். கூடிய நேரங்களை தனிமையிலும் தியானத்திலும் கடத்தி வந்தார். அவருக்கு வஹீ இறக்கப்படுவதற்கு முன்னரே அதனை சுமக்கும் பக்குவம் அவரில் ஏற்பட்டு இருந்தது.


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் இந்த தூதுத்துவப் பணி  ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த பெரும்பாலானோர் சிலை வணங்கிகளாகவும் மற்றும் சிலர் முன்னைய வேதங்களை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவ பணியை ஆரம்பித்த பின் மக்கள் சிறிது சிறிதாக இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹிஜ்ரி 10ம் ஆண்டளவில் இஸ்லாம் விரிவடைந்து, ஹிஜாஸ் பிரதேசத்தில் இருந்து சிலைவணக்கம் முற்றாகவே ஒழிக்கப்பட்டு, ஏக இறைவணக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.


அனுப்புதல் என்ற அரபு வார்த்தை (ب ع ث)யின் மூலத்தைக் கொண்ட சொல்லே மப்'அஸ் ஆகும். இந்த சொல், குறிப்பாகஅல்லாஹ்வினால், ஒரு தூதர், மக்களுக்கு வழிகாட்டியாக  அனுப்பப்படுவதைக் குறிக்கிறது. முதன்மையாக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. நபித்துவம் ஆரம்பிப்பது முதல் வசனம் அருளப்பட்டதில் இருந்தா அல்லது பகிரங்கமாக இஸ்லாத்தின் பால் அழைப்புவிடுக்கக் கட்டளையிடப்பட்டதில் இருந்தா என்பது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.

இந்த சம்பவமும் இடமும் இஸ்லாமிய சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதன் காரணமாக ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் இந்த இடத்தை தர்சிக்காது திரும்புவதில்லை.

ஜபலுன் நூர் மலையில் அமைத்துள்ள "ஹிரா" குகை; புனித குர் ஆனின் முதலாவது வசனம் அருளப்பட்ட இடம்.


 முதலில் அருளப்பட்ட புனித வசனங்கள்:
"(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. அலக்என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்". (96/1-5)

ஜிபிரீல் (அலை) அவர்கள் மப்'அஸ் தினத்திலேயே றஸூலுல்லாஹ்வின் முன் தோன்றிதூதை முன்வைத்தார்கள். இந்த மாபெரும் பொறுப்பு சுமத்தப்பட்ட றஸூலுல்லாஹ்வின் உடல் நடுக்கம் கண்டது. வீட்டுக்குச் சென்று தனதருமை மனைவி கதீஜா (ச.அ.) அவர்களிடம் "என்னை போர்த்துங்கள்என்னை போர்த்துங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. (74:13)
என்ற வசனம் அருளப்பட்டது.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இந்த செய்தியை முதன் முதலில் தனது மனைவியாரான கதீஜா ஸலாமும் அலைஹா அவர்களிடமும் தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மகனும் தனது உடன்பிறவா சகோதருமான அலீ (அலை) அவர்களிடமும் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அதனை நம்பிக்கைக்கொண்டு, முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, அபூபக்கர் (ரலி) அவர்கள் உட்பட ஒரு சில ஸஹாபாக்கள் றஸூலுல்லாஹ்வின் தூதுத்துவ அந்தஸ்தை ஏற்றுக்கொண்டு, இரகசியமாக மார்க்க நடவடிக்கைகளை செயற்படுத்தி வந்தனர். முதல் மூன்று வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் பொதுமக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கவில்லை.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 
"இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" (26:214) என்ற வசனம் அருளப்படுகிறது.

இதிலிருந்து அவரது அழைப்புப் பணி தனது உறவினர்களை அழைப்பதன் மூலம் ஒரு இன்னுமொரு மைல்கல்லை அடைந்தது.

அதே வருடத்தில்
"எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்!" (15:94) என்ற இறை கட்டளை கிடைக்கப் பெறுகிறது.

இந்த வசனம்  அருளப்பட்ட பின்னர், றஸூலுல்லாஹ்வின் அழைப்புப் பணி பகிரங்கமானது முதன்முறையாக, நபிகளார் (ஸல்) அவர்கள் தனது தெய்வீக அழைப்பை பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த இறைவசனம் தூதுத்துவத்தையும் அதன் ஆன்மீகப் பிணைப்பை வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது. நபி (ஸல்) அவர்களிடம் இறைவனால் வழங்கப்பட்ட ஒரு முழுமையான உறுதிமொழி இந்த செயல்முறையின் விளைவாகும்.

இதனைக் கேட்ட அபு லஹபும் மற்றும் தம்மை உயர் குலத்தார் என்று கருதி வந்த சில அரபிகளும் நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்தனர். றஸூலுல்லாஹ்வின் சிறிய தந்தை அபு தாலிப் நபி (ஸல்) அவர்களுக்குத் துணையாக இருந்து வந்தார்.

அறியாமை எனும் இருள் போக்கி, அறிவுக்கண்ணை திறக்க "ஓதுவீராக" என்ற வசனம் இறங்கிய நாளே "மப்'அஸ்".

நபித்துவத்தின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் உலகையே மாற்றியமைக்கும் உன்னதமான செய்தியினை பெற்ற ஆரம்ப நாளான மப்'அஸ் தினம் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தினமேயாகும்.


No comments:

Post a Comment