Sunday, September 9, 2018

1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுற்றளவை துல்லியமாக அளந்து கூறினார் அல்-பிருனி


Al-Biruni accurately measured the circumference of the earth 1,000 years ago

- தாஹா முஸம்மில் 

"அபு ரைஹான் அல்-பிருனி என்ற பாரசீக அறிஞர் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா இருப்பதை, கொலம்பஸ் அங்கு செல்வதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்"
- எஸ். ஃப்ரெட்ரிக் ஸ்டார்

அபூ ரைஹான் முஹம்மது இபின் அஹ்மத் அல்-பிரூனி, (செப்டம்பர் 4, 973, பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட கொராஸான் மாநிலத்தில் குவாரெஸ்ம் என்ற இடத்தில் பிறந்தார். 79 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த அவர் 1052 ஆம் ஆண்டு கஸ்னா என்ற இடத்தில் உயிர் நீத்தார்.

அல்-பிரூனி முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற வானியலாளர், புவியியலாளர், கணிதவியலாளர், மானுடவியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர் என்று அறியப்பட்டவர்.

அல்-பிரூனி கிழக்கு இஸ்லாமிய உலகில் அசாதாரண அரசியல் கொந்தளிப்பின் போது வாழ்ந்தார். அவர் 6 வெவ்வேறு இளவரசர்கள் கீழ் சேவை செய்தார், அவர்கள் அனைவரும் வாழ்வின் உண்மையான நோக்கம் அறியாது செயல்பட்டதன் காரணமாக, அவர்களில் பலர் வன்முறை மரணங்களையே சந்தித்தனர். அப்படிப்பட்டவர்களின் கீழ் சேவை செய்யினும் கூட, இஸ்லாமிய உலகின் மிகச் சிறந்த பல்துறை அறிஞராக அல்-பிரூனி தன் நிலையை உயர்த்திக்கொண்டார்.

இன்றைய உஸ்பெகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாட்டின் கேத் என்னும் இடத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி கிபி 973 ஆம் ஆண்டு அல் பிரூனி என்று அழைக்கப்படும் அபு ரய்ஹான் முஹம்மது இப்ன் அஹ்மத் அல் பிரூனி பிறந்தார்.

அவரது ஆரம்பகால வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அவ்வளவாகக் காணப்படவில்லை. 'எனது தந்தை யார்? குடும்ப பின்னணி என்ன? போன்ற விடயங்களை நான் அறிய மாட்டேன்' என்று அல்-பிரூனி தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.

இடைக்கால இஸ்லாமிய சகாப்தத்தின் மாபெரும் அறிஞர்களில் ஒருவராக அல்-பிரூனி கருதப்படுகிறார், மேலும் இயற்பியல், கணிதம், வானியல் மற்றும் இயற்கை விஞ்ஞான மேதை மட்டுமல்லாது அவர் ஒரு சரித்திராசிரியர் மற்றும் மொழியியலாளர் என்றும் போற்றப்படுகிறார்.

முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி ஆய்வு செய்து, தொகுத்து வழங்கிய சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் அல் பிரூனி.

சிலகாலம் இந்தியாவிலும் தங்கியுள்ளார். இந்து கலாச்சாரத்தின் நிலை குறித்து இவர் கி.பி. 1080 இல் எழுதிய 'கிதாபுல் ஹிந்த்' மிகப் புகழ் பெற்றதாகும். இந்துக் கலாச்சாரத்தின் நல்ல - தீய அம்சங்களை அவர் அதில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் செய்த இந்த ஆய்வு ஆரம்பகால இந்திய வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

அவர், அநேகமாக, அனைத்து விஞ்ஞான துறையிலும் கற்றுத் தேர்ந்ததோடு, கடுமையான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். அவரின் அபார அறிவுத்திறன்கண்டு அக்கால ஆட்சியாளர்கள் வியந்தனர். அதிகாரத்தில் இருந்தோரும் சமுதாயத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் சில முக்கிய ஆராய்ச்சிகளுக்காக அல்-பிரூனியை நாடி வந்தனர்.

அல்-பிரூனி அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிக்கப்பட்ட இஸ்லாமிய காலத்தில் வாழ்ந்தார். அக்காலகட்டத்தில் சிந்தனை மற்றும் ஆய்வுகள் இஸ்லாமிய வழிமுறைகளுடன் முரன்படாது, கைகோர்த்து சென்றன. வானியல் அறிமுகப்படுத்தப்பட்டு, பல துறைகளில் ஆராய்ச்சி நடத்த, அல்-பிருனி விதவிதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவற்றுக்கு மேலதிகமாக, அவர் தத்துவ ஆய்விலும் நாட்டம் கொண்டார்.

பாரசீகரான அல்-பிரூனி; பன்மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். க்வர்ஸ்மியன், அறபு, சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு மற்றும் சிரியாக் ஆகிய மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவராய் இருந்தார்.

அல்-பிருனி தனது வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகளை குவாரெஸ்மில் கழித்தார். இஸ்லாமிய சட்டவாக்க ஆய்வு, இறையியல், இலக்கணம், கணிதம், வானியல், மருத்துவம், தத்துவம் மற்றும் இயற்பியல் துறையில் மற்றும் பிற அறிவியல் துறைகளில் அவர் அங்கேயே கற்றுத் தேறினார்.

அவர் 995ம் ஆண்டு தனது தாயகத்தைவிட்டு வெளியேறி, புஹாராவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு வாழ்ந்த காலத்தில், பேரறிஞரான அலி இப்னு சீனா அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். இவ்விருவருக்கும் இடையே முக்கிய பல விடயங்களில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அங்கிருந்து அவர் 998 இல், தபரிஸ்தான் சென்றார். அங்கிருந்துதான் அவர் தனது முதல் முக்கிய 'அல்-அதர் பக்கிய்யா அன் அல்-காரூன் அல்-காலியா' کتاب الآثار الباقية عن القرون الخالية (அதாவது 'கடந்த நூற்றாண்டுகளின் மீதமுள்ள தடயங்கள்') என்ற நூலை கி.பி. 1000 ஆம் ஆண்டில் எழுதினார்.

1017ல், ராய் நகர் கஸ்னி மஹ்மூதின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது கஸ்னி மஹ்மூத் அல்-பிருனி உட்பட பெரும்பாலான அறிஞர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அல்-பிருனி அரச ஆலோசகரானார், கஸ்னி மஹ்மூதின் இந்திய படையெடுப்பின் போது அவர் கூட இருந்தார்;. அதன்பின் இந்தியாவிலேயே சில ஆண்டுகாலம் வாழ்ந்துவந்தார். அப்போது அல்-பிருனிக்கு வயது 44 ஆகும்.

இச்சமயத்தில் அல்-பிருனி இந்திய கலாச்சாரத்தை ஆய்வுசெய்தார். இந்துமத வழிபாட்டு முறைகளையும் ஆய்வு செய்த அவர் இந்தியாவுடன் தொடர்புடைய எல்லா விடயங்களையும் ஆராயலானார். இந்தியாவின் நிலப்பகுதி முழுவதும் அவர் அடிக்கடி பயணங்களைப் மேற்கொண்டார். இதன்போது சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டார். தஹ்கீக் மா லில்-ஹிந்த் மின் மகூலாஹ் மகூலாஹ் பி அல்-அக்ல் அவ் மர்தூலாஹ் என்ற புத்தகத்தையும் எழுதினார். இதற்காக அவருக்கு 'இந்தியவியலை நிறுவியவர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. '11ம் நூற்றாண்டு இந்தியா' என்ற அவரது குறிப்பிடத்தக்க விளக்கத்தலைப்பு காரணமாக அவருக்கு 'அல்-உஸ்தாத்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

அதேநேரம் அவரது எழுத்துடன் சேர்ந்து, அல்-பிரூனி மேலும் ஆராய்ச்சிகளில் அறிவியல் விஞ்ஞானத்தை விரிவுபடுத்தினார். அல்-பிருனியினால் எழுதப்பட்ட 146 நூல்களில் 95, கணிதம், வானியல், புவியியல் சம்பந்தமானவையாகும்.


அல்-பிரூனியின் வானியல் படைப்புகளில் நிலாவின் கலைகள்/பிறைகள் தோன்றுவதைக் காட்டும் ஒரு விளக்கப்படம்

புவியின் ஆரம் மற்றும் சுற்றளவு மதிப்பீடு செய்ய அல்-பிருனியினால்  முன்மொழியப்பட்டு, பின்பற்றப்பட்ட ஒரு முறையை விவரிக்கும் வரைபடம்

இஸ்லாத்தினால் கடமையாக்கப்பட்டுள்ள தொழுகை, நோன்பு, ஹஜ், என்பன காலத்தையும் நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. இது முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்து இடங்களுக்குமுரிய அகல, நெடுங்கோடுகளையும் சூரியனின் குத்துயரத்தையும் நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. க'பாவின் திசை நோக்கலும் அவசியம் என்பதால் இவற்றை வானியல், புவியியல் தரவுகளைப் பயன்படுத்தி மட்டுமே துல்லியமாக கண்டறிய முடியும் என்பதாலும் அல்-பிரூனி இவற்றில் கூடிய கவனம் செலுத்தினார்.

விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதற்குத் தூண்டக்கூடிய வகையில் அல்குர்ஆன் சில தெளிவான அறிவுறுத்தல்களை விசுவாசிகளுக்கு வழங்கியிருக்கின்றது. சந்திரனின் பல்வேறு நிலைகள், குறிப்பிட்ட விகிதாசாரத்தில் அனைத்தையும் படைத்திருத்தல், குறிப்பிட்ட வேகத்தில் சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்சி, குறிப்பிட்ட ஒழுங்கிற்கேற்ப அவற்றின் அமைவு, அனைத்தும் சோடி சோடியாகப் படைக்கப்பட்டிருத்தல் என்பன போன்ற பிரபஞ்ச இயற்கைத் தோற்றப்பாடுகள் பற்றி அடிக்கடி பேசும் அல்குர்ஆன் வசனங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான தூண்டுதல்களைத் தருகின்றன.

அவரது விளக்கத்தில் பூமியின் இயக்கம் பற்றிய சமகால விவாதங்களில் குறிப்பிடுகிறார். அவர் சமகால அறிஞரான அலி இப்னு சீனாவுடன் தொடர்பில் இருந்தபோது, சில நேரங்களில் அவர்களுக்;கிடையில் சூடான விவாதங்களும் இடம்பெற்றன. அதன்போது அல்-பிரூனி அரிஸ்டாட்டலின் வானியல் இயற்பியலை கண்டிக்கின்றார்: விண்வெளி சூன்யமாகவே இருக்க வேண்டும் என்று எளிய பரிசோதனை மூலம் வாதிடுகிறார்.

அவரது மகத்தான விண்வெளி ஆய்வு நூலான மஸ்'ஊட் கனன் இல் அல்-பிரூனி தனது ஆய்வு தரவுகளைப் பயன்படுத்தி, தொலமியின் சூரிய குடும்ப கோட்பாட்டை தகர்த்தெறிகின்றார்.

அவர் கோட்பாட்டு ஆராய்ச்சிகளில் மட்டும் ஈடுபடவில்லை, அவை தொடர்பான  ஆழமான பகுப்பாய்வுகள் செய்து, அவற்றுக்கான விளக்கத்தையும் எழுதினார்; அவற்றின் தொழிட்பாட்டு முறை பற்றியும் தெளிவாக குறிப்பிட்டார்.

மேலும் அவருடைய ஆய்வு தரவுகள் பெரியளவில் வானியல் வரலாற்று பதிப்பில் நுழைந்தது மற்றும் பூகோளவியல் மற்றும் வானியல் துறைகளில் இன்றளவிலும்  பயன்படுத்தப்படுகிறது.

அல்-பிரூனி இயந்திரவியல் அறிவியலுக்கான அறிவார்ந்த முறையை அறிமுகப்படுத்தினார், இயக்கவியல் விஞ்ஞானத்தில் புள்ளிவிபரங்களை ஒருங்கிணைத்தார். கடிகாரம், திசைகாட்டிக்கருவி போன்ற பலவற்றை வடிவமைத்தார். பின்னால் தோன்றிய விஞ்ஞானிகள் அவற்றை பூரணப்படுத்தினர்.

அடர்த்தி, எடை, மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றை ஆராய்வதற்காக அவர் பல்வேறு முறைகளை கையாண்டார். அவருடைய புத்தகங்களில் இயற்பியலில் மட்டுமே கவனம் செலுத்தாவிட்டாலும், அவருடைய பல படைப்புகளில் இயற்பியல் ஆய்வு உள்ளது. வெப்பம் மற்றும் ஒளி பற்றிய பல்வேறு கருத்துக்களை அல்-பிரூனி முன்வைத்தார்.

மலையின் உயரத்தை கணிப்பதன் மூலம் பூமியின் ஆரத்தை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையை அல்-பிரூனி கண்டுபிடித்தார். புவியின் செயல்பாடு பற்றி ஆராய்வதில் அவர் அதிக சிரத்தைக் காட்டினார், மேலும் அவரது பல படைப்புகளில் கிரகங்களை பற்றிய ஆய்வுகளும் நிறையவே காணப்பட்டன. புவியின் ஆரை மற்றும் அளவு பற்றிய இன்றைய அறிவு அல்-பிரூனியின் கடினமான ஆராய்ச்சி காரணமாகவே சாத்தியப்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

அவருடைய மஸ்'ஊட் கனன் (1037) நூலில், அல்-பிரூனி ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான மிகப்பெரிய நிலப் பகுதி ஒன்று இருப்பதைக் கணித்தார். பூமியின் சுற்றளவில் ஐந்தில் இரண்டு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஈர்ப்பு விசையின் அடிப்படையில், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான பரந்த கடலில் பாரிய நிலப்பரப்பு இருக்க வேண்டிய கட்டாயத்தை கணித்துணர்ந்தார். அந்த நிலப்பகுதி மனிதர்கள் வாழும் இடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அதுவே இன்றைய வடக்கு, தெற்கு அமேரிக்கா என்று அறியப்படுகிறது.

மருத்துவவியல் மற்றும் கனிமவியல்

பிரூனியின் மிக முக்கியமான நூல்களில் மருத்துவம் தொடர்பான 'கிதாப் அல்-சைதாலா ஃபி அல்-திப்' வும் ஒன்றாகும். அவர் வாழ்ந்த காலத்தில் அறியப்பட்ட  அனைத்து மருந்து வகைகளையும் அதில் விபரித்துள்ளார். இது சிரிய, பாரசீக, கிரேக்க, பலூச்சி, ஆப்கான், குர்தி மற்றும் சில இந்திய மொழிகளில் காணப்படும் மருந்துக்களின் பெயர்களை ஒத்திருக்கின்றன.

அவர் சுயமாக உருவாக்கிய ஒரு கருவியின் மூலம், சில குறிப்பிட்ட உலோகங்கள் மற்றும் கனிமங்களின் ஈர்ப்புத் தன்மையை பிரமிக்கத்தக்க துல்லியத்துடன் அவரால் தீர்மானிக்க முடிந்தது.

வரலாறு மற்றும் காலவரிசை

முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி ஆய்வு செய்து, நூல்கள் வெளியிட்ட மற்றொரு சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் என்று அல்-பிரூனி போற்றப்படுகின்றார். அரசியல் வரலாற்றில் பிரூனியின் முக்கிய கட்டுரை தொகுப்பு, கிதாப் அல்-முஹம்மரா பி அக்பர் கவார்ஸம் (கவார்ஸம் விவகாரங்களில் இரவு நேர உரையாடலின் குறிப்புகள்) புத்தகமாகும். பைஹகி தனது தாரிக்கே மஸ்'ஊட் இல் இதுபற்றி குறிப்பிடுகின்றார்.

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வழிமுறைகளின் பல்வேறு கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, அரசர்களின் பட்டியல்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் அவரது அல்-அதர் பக்கிய்யா அன் அல்-காரூன் அல்-காலியா மற்றும் மஸ்'ஊட் கானூன் நூலிலும் மேலும் ஏனைய ஆக்கங்களிலும் காணக்கூடியதாக உள்ளன. அவரின் வரலாற்றைப் பற்றி ஆய்வுகள் மேற்கூறிய தலைப்பிற்கு மட்டுமல்லாமல், பூமியின் படைப்பினங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியது.

மத வரலாற்றின் அதிகாரமிக்க முஸ்லிம் அதிகாரிகளில் அல்-பிரூனி மிக முக்கியமானவர் ஆவார். அல்-பிரூனி மதத்தை ஒப்பீட்டு ஆய்வு செய்வதில் முன்னோடியாக இருந்தார். அவர் சொரோஸ்திய மதம், யூதம், இந்து மதம், கிறித்துவம், புத்த மதம், இஸ்லாம் மற்றும் பிற மதங்களை மிக ஆழமாக கற்றார். அவர் மாற்று மதங்களைப் தவறாக நிரூபிக்க முயற்சிக்காமல் அவர்களது சொந்த சொற்களில் அவற்றைப் புரிந்துகொள்ள முயன்றார். எல்லா கலாச்சாரங்களும் மனித கட்டமைப்புகளே என்பதால், இவற்றுக்கிடையில் குறைந்தது தூரத்து உறவாவது இருக்கும் என்பது அவரது கொள்கையாக இருந்தது.

அல்-பிரூனியின் அற்புதமான அறிவியல் பங்களிப்பு காரணமாக பல நாடுகள் அவரை கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளன, தபால் முத்திரைகளை அச்சிட்டுள்ளன. சந்திர மேற்பரப்பில் ஓரிடம் அவர் பெயரால் அறியப்படுகிறது.





No comments:

Post a Comment