Sunday, September 2, 2018

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - அலி ரஜாய் மற்றும் பஹோனர்

Ali Rajai and Javad Bahonar

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - 
அலி ரஜாய் மற்றும் பஹோனர்

முஹம்மது அலி ராஜாய் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 30 ஆம் திகதி வரை ஈரானின் இரண்டாவது ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்தவர். அதற்கு முன் அவர் ஈரானின் பிரதமராக பணியாற்றினார். அவர் பிரதமராக இருந்த அதேசமயத்தில் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி பிரதம மந்திரியாக இருந்த முஹம்மத் ஜவாத் பஹோனருடன் இவரும்; பயங்கரவாதியின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை 

முகம்மது-அலி ரஜாய் ஜூன் 15, 1933 இல் ஈரானின் கஸ்வின் நகரில் பிறந்தார். அவரது தந்தை அப்துல்ஸமத் ஆவார். அலி ரஜாய் 4 வயதை கடக்கும்போது தந்தையை இழந்தார். அதன்பிறகு அவர் தனது தாயோடும் சகோதரனுடனும் வாழ்ந்து வந்தார். கஸ்வினில் வளர்ந்த அலி ரஜாய் 1946 ஆம் ஆண்டில் தெஹ்ரானுக்கு குடிபெயர்ந்தார். தெஹ்ரானுக்கு சென்ற பிறகு ஷா எதிர்ப்பு குழுக்களுடனும் கட்சிகளுடனும் அவர் நெருக்கமான வளர்த்துக்கொண்டார். ஆயதுல்லாஹ் மஹ்மூத் தலகானி அவர்களுடன் நெருக்கமாக செயல்பட்ட அவர் 1958 ஆம் ஆண்டில் தர்பிய்யத் மு'அல்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஷாவின் படைகள் அவரது எதிர்த்தரப்பு நடவடிக்கைகளுக்காக மூன்று முறை கைது செய்தன. இறுதியாக அலி ராஜாய் 1974 மே மாதத்தில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார்.

இஸ்லாமிய புரட்சிக்கு முன்

தெஹ்ரானுக்குப் பயணித்த அவர் விமானப்படையில் இணைந்து பணியாற்றினார். ஒரு வருடம் கழித்து அவர் விமானப்படையில் இருந்து ராஜினாமா செய்தார். அக்காலகட்டத்தில் அவர் ஆயதுல்லா தலகானி அவர்களுடன் நெருங்கி செயல்பட்டார். 1955 ஆம் ஆண்டில் பிஜார் நகரில் கணித ஆசிரியராக சேவையாற்றினார்.  அதன் பின் அவர் தெஹ்ரானில் மேற் படிப்பைத் தொடர்ந்தார், 1959 இல் கணிதத்தில் தனது கல்வியை நிறைவு செய்தார். அதன்போது அவர் மெஹ்தி பஸர்கான் மற்றும் சஹாபி ஆகிய முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களுடன் நன்கு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அவர் தெஹ்ரானில் கல்விப் பணியாற்றிய அதேவேளை புள்ளியியல் துறையில் முதுமாணி பட்டத்துக்காக கல்வியையும் தொடர்ந்தார். 1962 இல் ஈரான் சுதந்திர இயக்கத்தின் உறுப்பினராக இணைந்த அவர் 1962 ல் கைது செய்யப்பட்டார் மற்றும் ஷாவின் 'சவாக்' ரகசிய படையினால் ஐம்பது நாட்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார். 

சிறையிலிருந்து விடுதலையான பிறகு, முஹம்மத் ஜவாத் பஹோனார் மற்றும் ஜலாலுத்தீன் அல் பார்ஸி ஆகியோருடன் சேர்ந்து, அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் கூடுதல் அக்கறை காட்டினார். ஷா எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக அவர் மீண்டும் 1972 ஆம் ஆண்டு  கைதுசெய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். இறுதியாக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, 1979 ல் ஈரானிய இஸ்லாமிய புரட்சி வெற்றிபெறும் தருவாயில் விடுவிக்கப்பட்டார். 

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு

அவர் இஸ்லாமிய புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலாசார தாக்கங்களின் பாதிப்பை ஈரானிய பல்கலைக்கழகங்களிலிருந்து  அகற்றுவதற்கான இயக்கத்தில் ஒரு தலைவராக செயல்பட்டார், அது பின்னர் கலாச்சாரப் புரட்சி என்று அழைக்கப்பட்டது.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் பின்வரும் முக்கியமான பதவிகளுக்கு ராஜாய் நியமிக்கப்பட்டார்.

  • கல்வி அமைச்சர் 
  • இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் வேட்பாளர் 
  • பிரதம மந்திரி
  • ஜனாதிபதி

கல்வி அமைச்சு

மெஹ்தி பசர்க்கன் தலைமையிலான புரட்சிகர இடைக்கால அரசாங்கத்தில் ரஜாய் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்போது அவர் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார். இஸ்லாத்தை முன்னிலைப் படுத்தி பாடத்திட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்தார். ஆசிரிய கல்வி மையங்களை சீர்திருத்துதல், முஸ்லீம் சமுதாயத்திற்கான பொருத்தமான ஆசிரியர் கல்வி முறை ஒன்றை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இஸ்லாமிய நெறிமுறைகளை வளர்த்தல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உருவாக்குதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான உறவை வளர்த்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினார். இந்த இலக்குகள் ராஜாயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பட்டன.  அவற்றை அடைந்துகொள்ள பெரும் முயற்சிகளில் அர்ப்பணத்துடன் செயற்பட்டார். பஸர்கானின் அமைச்சரவை ராஜினாமா செய்யும் வரை அவர் ஒன்பது மாதங்களுக்கு கல்வி அமைச்சரக இருந்தார்.

பிரதமராக நியமனம்.

பஸர்கனின் அமைச்சரவையின் ராஜினாமாவைத் தொடர்ந்து அலி ரஜாய் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டார். இவரது இந்த பதவியின் போதே சதாம் ஹீசைன், அமெரிக்காவினதும் அறபு நாடுகளினதும் தூண்டுதலின் பேரில் ஈரான் மீது பாரிய ஆக்கிரமிப்பு யுத்தமொன்றைத் தொடுத்தார். ஈரானிய அரசின் கவனம் முழுமையாக யுத்தத்தின் பக்கம்  திருப்பப்பட்டது.  நாட்டின் பாதுகாப்பு முன்னுரிமைப் பெற்றது. இவ்வாறிருக்கையிலேயே நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், உண்மையில் ஒரு சீ.ஐ.ஏ. உளவாளி என்பது கண்டறியப்பட்டடு, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

(ஈரானில் ஏற்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில், ஈரானிய மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ராஜதந்திரிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த காலம் அது. தூதரகத்தில் இருந்த ஆவணங்களை பரிசீலித்த மாணவர்கள், அமெரிக்காவின் சூழ்ச்சியை மட்டுமல்லாது, நாட்டில் ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், உண்மையில் ஒரு சீ.ஐ.ஏ. உளவாளி என்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பனீஸத்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பெண் வேடமணிந்து, நாட்டைவிட்டு தப்பித்து சென்றார்.)

இதனைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக நிர்வாக சபைக்கு ஆயத்துல்லாஹ் பெஹெஷ்தி தலைமையில் 6 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் அலி ராஜாயியும் ஒருவர். இதன் பிறகு 1981 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அலி ரஜாய் 91 சதவிகித மக்கள் வாக்குகளால் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அத்தோடு அவர் முஹம்மத் ஜவாத் பஹோனரை பிரதமராக நியமித்தார். இந்த நியமனத்தை ஈரானிய நாடாளுமன்றமும் உறுதி செய்ததைத் தொடர்ந்து ஒரு புதிய அரசாங்கம் உருவானது.

படுகொலை

1981 ஆகஸ்ட் 30 அன்று, ஜனாதிபதி ரஜாய் மற்றும் பிரதம மந்திரி முகமது ஜவாத் பஹோனருடன் ஈரானின் உச்ச பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கையில் ஒரு நம்பகமான உதவியாளர் மாநாட்டிற்குள் பெட்டி ஒன்றைக் கொண்டுவந்து, இரண்டு தலைவர்களுக்குமிடையில் வைத்துவிட்டுச் சென்றார் என்று சாட்சியாளர்கள் பின்னர் குறிப்பிட்டனர்;.

சிறிது நேரத்தில் அப்பெட்டியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்;பட இன்னும் சிலரும் ஷஹீதாகினார். இச்சம்பவம் இடம்பெறுகையில், இவர்கள் இருவரும் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. இந்த பயங்கர செயலைச் செய்தவன் முனாஃபிக்கீன்கள் என்று ஈரானிய மக்களால் அறியப்பட்ட முஜாஹிதீன் கல்க் அமைப்பை சேர்ந்த  மசூத் காஷ்மீரி என்பவனாகும் என்று விசாரணையின் மூலம் தெரியவந்தது. 

ஷஹீதானோரின் உடல்கள் பெஹெஸ்த்தி ஸஹ்ராவில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

========================================================

முஹம்மத் ஜவாத் பஹோனர்

முஹம்மத் ஜவாத் பஹோனர் ஒரு ஈரானிய இறையியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் பிரதமராக ஆகஸ்ட் 1981 இல் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்துக்கே பணியாற்றினார். பஹோனார் மற்றும் முகம்மது-அலி ரஜாயின் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முனாபிகீன்கள் என்று அடைக்கப்பட்ட முஜாகிதீன்-இ-கல்க் இயக்கத்தினரால் 1981 ஆம் ஆண்டு ஆகஸட் மாதம் 30ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

ஆரம்ப வாழ்க்கை 

முகமது ஜவாத் பஹோனர் செப்டம்பர் 3, 1933 அன்று ஈரான், கெர்மான் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு எளிமையான வியாபாரி, கெர்மானில் சிறிய கடை ஒன்றை நடத்திவந்தார். அவரது ஒன்பது பிள்ளைகளில் பஹோனர் இரண்டாவது பிள்ளையாகும். அவரது குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருந்தது. பஹோனர் சிறுவனாக இருக்கையில்  உள்ளூர் பெண் ஒருவர் மூலம் புனித குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டார். அதேவேளை அங்கேயே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். அதன் பின் ஆயதுல்லாஹ் ஹகீகியின் வழிநடத்தலில் ம'சூமா சன்மார்க்கப் பள்ளியில் ஆரம்ப கல்வியை நிறைவு செய்தார். 1953 ஆம் ஆண்டில் அவர் 'கும'; சன்மார்க்கக் கல்விக்கூடத்தில் சேர்ந்த  இஸ்லாமிய புரட்சியின் தலைவரான றூஹுல்லாஹ் கொமெய்னி அவர்களின் வகுப்பில் சேர்ந்து கற்கலானார். அதன் பிறகு தெஹ்ரானின் பல்கலைக்கழகத்தில் இறையியலில் டாக்டர் பட்டம் பெற்றார். மேலும், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய குழாம் உறுப்பினராக இருந்த அவர் இறையியல் கற்பித்தும் வந்தார்.

இஸ்லாமிய புரட்சிக்கு முன் பஹானர் பஹ்லவி பரம்பரை ஆட்சிக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டதுடன் 1963 ஆம் ஆண்டு ஷாவின் 'வெண்புரட்சி' என்ற கண்துடைப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். இமாம் கொமெய்னி ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்த காலகட்டத்தில், அவரைப் பின்பற்றுவோரில் செல்வாக்கு மிகுந்தவராக பஹோனர் காணப்பட்டார். இவரின் உரையென்றால் {ஹஸைனியே இர்ஷாத் மண்டபம் மாணவர்களால் நிறைந்து காணப்படும் அளவுக்கு ஆக்ரோஷமாக உரையாற்றுவார்.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் 

புரட்சிக்குப் பிறகு பஹோனார் இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும் ஈரான் புரட்சியின் கவுன்சிலின் ஆரம்பகால உறுப்பினராகவும் ஆனார். 1981 மார்ச்சில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் வல்லுநர்களின் கவுன்சிலின் உறுப்பினராகவும்
இருந்தார். பஹோனார், முஹம்மத் அலி ரஜாய் அவர்களுடன் இணைந்து ஈரானிய பல்கலைக்கழகங்களை மேற்கத்திய கலாச்சார பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து காக்கும் பணியில் அயராது உழைத்தார். 1981 ஜூன் 28 இல் ஆயத்துல்லாஹ் முகம்மது பெஹெஷ்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவர் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், மார்ச் 1981 முதல் ஆகஸ்ட் 1981 வரை முகமட் அலி ரஜாயின் பிரதம அமைச்சரின் கீழ் பஹோனார் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டலின் அமைச்சராகவும் பணியாற்றினார். 1981 ஆகஸ்ட் 5 இல் ரஜாய் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் பஹோனரை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுத்தார்.

படுகொலை

1981 ஆகஸ்ட் 30 ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள இஸலாமிய குடியரசு கட்சியின் அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, ராஜாய் மற்றும் பஹோனர் உடன் இஸ்லாமிய குடியரசுக் கட்சியினர் இதர உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்து குண்டுவெடிப்பு, இஸ்லாமிய குடியரசுக் கட்சியில் ஒரு பாதுகாப்பு அதிகாரியாய்  இருந்த  மாஸூத் கஷ்மிரி என்பவனால்  நடத்தப்பட்டது. 

ராஜாயி அவரது அமைச்சரவையை இமாம் கொமெய்னிக்கு அறிமுகப்படுத்த வந்தபோது இந்த கஷ்மிரி என்பவன் பாதுகாப்பு அதிகாரியாக கூடவந்துள்ளான் என்றும் அவன் ஒரு சூட்கேஸை கையில் கொண்டுவந்ததன் காரணமா உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் இமாம் கொமெய்னியின் மகனான அஹ்மத் கொமெய்னி பிறகு குறிப்பிட்டார். சதாம் ஹூசேன் ஈரான் மீது யுத்தம் தொடுத்திருந்த காலமது. இந்த காஷ்மிரி என்பவன் சதாம் ஹூசேனின் கைக்கூலியாக செயற்பட்டு வந்துள்ளான் என்ற சங்கதி பிறகு அறியவந்தது.


No comments:

Post a Comment