இஸ்லாமிய
புரட்சிகள் காவலர் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) தளபதி ஹுசைன் சலாமி,
ஜெனெரல் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்தது தொடர்பாக பேசும்போது
"மத்தியகிழக்கில் அமெரிக்க ஆதரவு தளங்களை தீயால் குளிப்பாட்டுவோம்"
என்று சூளுரைத்தார்.
பாக்தாத்தில் நடந்த அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தியாகியாகிய
ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானியின் சொந்த ஊரான கெர்மனில் உள்ள ஒரு சதுக்கத்தில்,
கூடியிருந்த மில்லியன் கணக்கான மக்கள் முன் ஜெனரல் ஹுசைன் சலாமி
மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.
அவரது சபதம்
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, ஈரானிய உயர் அதிகாரிகளின் மற்றும் இஸ்லாமிய குடியரசு முழுவதுமான மக்களின்
கோரிக்கைகளை பிரதிபலித்தது. மத்திய
கிழக்கு முழுவதும் பதட்டங்களை உருவாக்கிய அமெரிக்காவிற்கு பயங்கரவாத செயலுக்கு ஒரு
தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரினர்.
ஜெனரல் சுலைமானியின் சூட்சுமங்களை ஜெனரல் சலாமி பாராட்டினார். "பாலஸ்தீனிய விடுதலைக்காக போராடும் குழுக்கள், யேமனின் ஹவுதி போராளிகள் மற்றும் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்ட இஸ்லாம் விரோத சக்திகளை வீழ்த்துவதற்கு போராடும் தரப்பினரை பலப்படுத்துவதற்காக அவரின் பங்களிப்பு மகத்தானது", என்றார். "ஒரு தியாகியாகிய பின்னும் கூட, ஜெனரல் சுலைமானி ஈரானின் எதிரிகளுக்கு இன்னும் பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்துவிட்டார்" என்று சலாமி கூறினார்.
ஜெனெரல்
சுலைமானியை கொன்றவர்களை நாம் பழிவாங்காது விடமாட்டோம் என்று -
"அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு
மரணம்" என்ற மக்களின் வானுயர்ந்த கோசத்துக்கு மத்தியில் - சபதம் செய்தார்.
ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்க ஈரான் 13 திட்டங்களை உருவாக்கியுள்ளது என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்தார். அவற்றில் பலவீனமான திட்டம் கூட ஐக்கிய அமெரிக்காவை கதிகளங்கச்செய்யும் என்றும் அவர் கூறினார்.
"அமெரிக்க துருப்புக்கள் எங்கள் பிராந்தியத்தை விட்டு தானாக வெளியேறா விட்டால், எமது செயல்பாடுகள் காரணமாக அவர்களின் உடல்களை கிடைமட்டமாக வெளியே கொண்டு செல்ல நேரும்" என்று ஷம்கானி கூறினார்.
ஈராக் முழுவதும்
உள்ள அமெரிக்க தளங்கள் எமது தீவிர கண்காணிப்பில் உள்ளதாக ஷம்கானி கூறினார்,
ஒவ்வொன்றிலும் எத்தனை பணியாளர்கள் உள்ளனர் மற்றும் எத்தனை
உபகரணங்கள் உள்ளன என்பது ஈரானுக்கு நன்றாகத் தெரியும்.
"எங்கள்
பழிவாங்கலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தங்குமிடங்களில்
ஊர்ந்து கதவுகளை மூடுவோருக்கு இஸ்லாமிய குடியரசு நரகத்திற்கான கதவைத் திறக்கும்
என்பது தெரியாது."
"அனைத்து துருப்புக்களும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்." துருப்புக்கள் பதுங்கி இருக்க நாடினால், ராணுவ தளங்களுடன் சேர்த்து துருப்புகளை அழிப்போம்" என்று அவர் கூறியதாக ஈரானிய செய்தித்தாள் 'ரிஸாலத்' குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் பாராளுமன்றம், பென்டகனில் அமெரிக்க இராணுவத்தின் கட்டளை அமைப்பையும், ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்தவர்களும் அதன் சார்பாக செயல்படுவோரையும் "பயங்கரவாதிகள்" என்றும் அவை ஈரானிய பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டவை" என்ற அவசர மசோதாவை நிறைவேற்றியது.
"இந்த
சக்திகளுக்கு இராணுவம், உளவுத்துறை, நிதி,
தொழில்நுட்பம், சேவை அல்லது தளவாடங்கள்
உள்ளிட்ட எந்தவொரு உதவியும், ஒரு பயங்கரவாத செயலில்
ஒத்துழைப்பாக கருதப்படும்" என்று ஈரானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
குத்ஸ் படைக்கு
இன்னும் 200 மில்லியன் யூரோக்கள் அல்லது சுமார் 224 மில்லியன் டொலர் நிதியளிப்பதை
மஜ்லிஸ் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு
பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தனர்.
ஜெனரல் சுலைமானி படுகொலை தொடர்பாக ஈரான் ஒரு "நொறுக்குதலான பழிவாங்கலை" நிச்சயமாக மேற்கொள்ளும் என்று உறுதியாகக் கூறியுள்ளது.
தாக்குதலை அடுத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எஞ்சியிருப்பதையும் ஈரான் ஏற்கனவே அகற்றிவிட்டது, மேலும் அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் வெளியேற்ற ஈராக் வாக்களித்துள்ளது. இது டிரம்புக்கு ஒரு மாபெரும் தோல்வியாகும்.
பாக்தாத்தில்
உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள பசுமை மண்டலத்திலும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன,
இந்த பகுதி இனி அதிகரித்த தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் சுமார் 5,000 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இன்னும் 500 பேர் சிரியாவில் உள்ளனர். இவர்களின் உயிருக்கு இனி எந்த உத்தரவாதமும் கிடையாது.
லெபனான் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் கூறுகையில், “அனைத்து அமெரிக்க தளங்களும், அனைத்து அமெரிக்க போர்க்கப்பல்களும், பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க சிப்பாயும் இப்போது எமது இலக்கே. இந்த படுகொலையை நடத்தியவர்களுக்கு உண்மையான, நியாயமான பதிலடி என்பது அமெரிக்க ராணுவத்தை இலக்குவைத்தலாகும்" என்று கூறினார். ஜெனரல் சுலைமானி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பெயிரூத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது “அந்த கொலையாளிகள் மற்றும் அந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நாங்கள் ஒரு போரைத் தொடங்குவோம்," என்றும் அவர் சூளுரைத்தார்.
ஈரான், பிராந்தியத்தில் அமெரிக்க உயர்மட்ட தளபதிகளில் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் ஏதேனும் ஒரு "பெரிய" தாக்குதலை ஈரான் நடத்தும் என்று எதிர்பார்க்கிறது என்பதாக ஒரு அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment