Contributors

Monday, February 11, 2019

இஸ்லாத்தினால் ஈரானுக்கு பெருமை ஈரானினால் முஸ்லிம்களுக்கு பெருமை...!!

The Achievements of Islamic Revolution


இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று வெறும் கிரியைகளுக்கும் அனுஷ்டானங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதுமட்டுமே இஸ்லாம் என முஸ்லிம்கள் நம்பவைக்கப்பட்ட காலகட்டத்தில், அல்லாஹ்வின் இறைமை, ஆட்சி அதிகாரம், சட்டமியற்றும் அதிகாரம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவிடாது, அற்பவிடயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிகளில் உலமாக்களை முடக்கிவைத்திருந்த காலகட்டத்தில் வெடித்ததே ஈரானில் இஸ்லாமிய புரட்சி; அதுவும் உலமாக்களின் தலைமையில்.

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். இஸ்லாமிய உலகைத் துண்டாடி, எமக்கு வேண்டிய விதத்தில் எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லிம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில், மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் வெடித்த இந்த புரட்சி ஏகாதிபத்தியவாதிகளை திக்குமுக்காட வைக்கிறது.

'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமொன்றே போதும்; அல்லாஹு அக்பர்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது.


அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு ஆள முடியும்…? நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் முஸ்லிம் ஆட்சியாளர்களே கேலி செய்தனர். இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர்.

அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 40 ஆண்டுகளை கடந்துகொண்டிருக்கிறது. இந்த 40 ஆண்டுகளில் இஸ்லாமிய ஈரான் கண்டுள்ள வளர்ச்சி கண்டு இஸ்லாத்தின் எதிரிகள் மிரண்டுப்போயுள்ளனர்.

இவர்களால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், உள்நாட்டு கலவரங்கள், யுத்தம், பொருளாதாரத்தடை எல்லாவற்றையும் தாண்டி இஸ்லாமிய ஈரான் அடைந்துவரும் முன்னேற்றம் இவர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இஸ்லாமிய புரட்சியினூடாக, வியத்தகு சாதனைகளை படைத்து வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசு.... அதன் மீது யுத்தம் ஒன்று திணிக்கப்படாதிருந்திருந்தால், பொருளாரத்தடை விதிக்கப்படாதிருந்தால், இஸ்லாம் விரோத அரபு ஆட்சியாளர்கள் நெருக்குவாரங்களை கொடுக்காதிருந்திருந்தால்...??? இன்று இஸ்லாமிய ஈரான் எங்கோ சென்றிருக்கும்.

இஸ்லாமிய புரட்சியின் பயனாக ஈரான் பெற்றுள்ள வெற்றிகளில் சில:

பாதுகாப்புத் துறையில் ஈரான் பிராந்தியத்தில் வல்லரசு என்றே கூறுமளவுக்கு வளர்ந்துள்ளது. தனது பாதுகாப்புத் தேவையில் 85% ஈரான் சுயமாக உற்பத்திசெய்கிறது. ஏவுகணைகள், யுத்த விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ரேடார்கள், யுத்த டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் அவசியமான யுத்தத் தளபாடங்கள் அனைத்தையும்  தாமே உற்பத்தி செய்து, தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

இது ஈரான் இஸ்லாமிய குடியரசின் சுய தயாரிப்புகளில் ஒன்று. மூன்று வருடங்களுக்குமுன் காட்சிப்படுத்தப்பட்டது.

கல்வித்துறையில் ஈரான்

கல்வித்துறையில் ஈரான்தான் இப்பிராந்தியத்தில் மத்திய ஸ்தானமாகும். கலை, மருத்துவம், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்குவதால் பிராந்தியத்தில் மாணவர்கள் ஈரானிய பல்கலைக்கழகங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

ரோபோக்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. வாகன உற்பத்தியிலும் ஈரான் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சைக்காக ஈரான் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.




விண்வெளி ஆய்வு

விண்வெளி ஆய்வுத் துறையில் ஈரான் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. தனது முயற்சியில் ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், கொஞ்சமும் தாளராது பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சிலவருடங்களுக்கு முன் ஈரான் குரங்கொன்றை விண்ணுக்கு அனுப்பியும் ஆய்வுகளை நடத்தியது. விண்வெளி ஆய்வுத் துறை உலகில் வல்லமைக் கொண்ட 9 நாடுகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசும் ஒன்று.











அணு ஆய்வு

அணு ஆய்வுத்துறையில் ஈரான் அடைந்துவரும் முன்னேற்றம் வல்லரசுகளையும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் பொறாமைக் கொள்ளச் செய்துள்ளது. அணு சக்திகொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்து பாகிஸ்தான், ஈராக் மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளுக்கும் ஈரான் ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல (ஹராம்) என்று இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் பத்வாவே வழங்கியுள்ளார். 

ஆக, அணு சக்தியை மனித தேவைக்காக மட்டுமே அன்றி, ராணுவ தேவைக்காக பயன்படுத்துவதில்லை என்று ஈரான் மிக உறுதியாக இருக்கிறது.

மருத்துவத் துறை

ஈரான் தமக்கு அவசியமான மருந்து வகைகளில் 90% த்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

ஈரானிய மருத்துவ மனைகளில் சர்வதேச தரத்திலான வைத்திய சேவைகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எந்த ஓர் ஈரானியத் தலைவரும் வைத்தியம் பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை என்பதில் இருந்து இதனை புரிந்துகொள்ளலாம்.

அறிவியல் ரீதியாக இஸ்லாமிய ஈரான் பிராந்தியத்தில் கொடிகட்டிப்பறக்கிறது.  அல்லாஹ் அந்த நாட்டுக்கு இன்னும் இன்னும் அருள்புரியவேண்டும்.




============
தாஹா முஸம்மில் 

Thursday, February 7, 2019

வல்லரசுகளையே அதிரவைத்த "அல்லாஹு அக்பர்" என்ற கோஷம்...! (இஸ்லாமிய புரட்சி - ஒரு சுருக்கமான வரலாறு)


Islamic Revolution in Iran - That shook the world



2500 ஆண்டுகால முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பஹ்லவி ஆட்சியின் 50 ஆண்டுகால கொடுங்கோன்மையை முற்றிலுமாக இல்லாதொழித்து, ஈரானில் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது. இதற்காக ஈரானிய மக்கள் செய்த தியாகம் கொஞ்சமல்ல சுமார் 60,000 பேர் தங்கள் இன்னுயிரை இந்த இஸ்லாமிய போராட்டத்தில் அர்ப்பணித்தனர். அவர்களது நீண்டகால போராட்டம், இறுதியில், இறையருளால் வெற்றிபெற்றது.

மன்னர் ஷா, ஈரானிய மக்களை ஏமாற்ற பல கபட நாடகங்களை ஆடினார். அதிலொன்றுதான் 1962 ஆம் கொண்டுவரப்பட்ட மாநில மற்றும் மாகாண சபைகளுக்கான சட்ட அங்கீகார மசோதா. இதற்கு ரீஸா பாஹலவி, ஷாஹ்வினதும் மக்களினதும் 'வெள்ளைப் புரட்சி' என்று பெயர் வைத்தார். இந்த சட்டத்தின் மூலம் ஷா பல இஸ்லாமிய மரபுகளை மீறினார்;. புனித குர்'ஆனில் சத்தியம் செய்து பதவி ஏற்கும் முறை நீக்கப்பட்டு, இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகள், வெள்ளைப் புரட்சி என்ற பெயரில் சட்டமாக்கப்பட்டது.
ஈரானிய மக்களை இஸ்லாத்தில் இருந்து தூரப்படுத்தும் சதி முயற்சியாக இதனை அறிந்துகொண்ட உலமாக்கள், ஆயத்துல்லாஹ் கொமைனியின் தலைமையில் வெகுண்டெழுந்தனர். வன்மையாக எதிர்த்தனர். 1963 ஆம் ஆண்டு ஈரானிய உலமாக்கள் அவ்வாண்டின் புதுவருடத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க மக்கள் அதற்கு அமோக ஆதரவு வழங்கினார். கும் நகரில் அமைந்துள்ள பாயிஸியே மதரஸாவில் துக்க தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் மீது ஷாவின் சவாக் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் உலமாக்களையும் மக்களையும் மேலும் கொதிப்படையச் செய்தது. அவ்வாண்டு ஜூன் மாத ஆஷூரா நிகழ்ச்சிகளில் உரையாற்றிய இமாம் கொமைனி, ஷாவின் இஸ்லாம் விரோத போக்கைக் கண்டித்தது மட்டுமல்லாமல் ஈரானில் அமெரிக்க மற்றும் இரேலிய தலையீடுகளையும் வண்மையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து 1963 ஜூன் மாதம் 5 ஆம் திகதி இமாமவர்கள் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தி காட்டுத் தீ போன்று ஈரான் முழுவதும் பரவியது. இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஷா தனது இரும்புக்கரம் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்கலானார்; இதனால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர், காயப்பட்டனர். ஈரானில் இஸ்லாமிய இயக்கம் உயிர்பெற்றது இதிலிருந்தான் என்று சொல்லவேண்டும். நாட்டு மக்கள் தொடர்ச்சியாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக இமாம் கொமைனி 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட அவர் ஷாவின் இஸ்லாம் விரோத கொள்கையை இன்னும் அதிகமாக விமர்சித்தார். கும் நகரின் பள்ளிவாயலொன்றில் உரையாற்றிய இமாமவர்கள் நாட்டையும் மக்களையும் அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் சதித்திட்டத்தை வன்மையாகக் கண்டித்தார். இதற்கான ஒரே தீர்வு இறைவனை முன்னிறுத்திய இஸ்லாமிய எழுச்சியே என்றும் குறிப்பிட்டார்.
இமாமவர்களின் தொடர் போராட்டத்தை சமாளிக்க முடியாத ஷா, அவரை மீண்டும் கைது செய்து 1964 நவம்பர் 4, இல் துருக்கியிற்கு நாடு கடத்தினார். சுமார் ஒரு வருடத்துக்கு பிறகு இமாம் கொமைனி நஜாப்பில் இருந்த தன்னுடைய மகன் ஆயத்துல்லாஹ் முஸ்தபா கொமைனியுடன் இணைந்து கொள்கிறார்.
இமாமின் மகன் ஆயத்துல்லாஹ் முஸ்தபா கொமைனி 1977 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஷாவின் கூலிப்படையினால் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து ஈரானிய மக்கள் கொதித்தெழுகின்றனர். நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்ட அலை எழுகிறது. 2500 வருடகால முடியாட்சியினது அஸ்தமனத்தின் ஆரம்பம் அதுவே எனலாம்.
ஈரானிய ஊடகங்களில் இமாமுக்கு எதிரான துர் பிரசாரங்கள், அதிகாரத்தில் உள்ளோரினால் முடுக்கிவிடப்படுகின்றன. 1978 ஜனவரி மாதம் 6ம் திகதி இமாமுக்கு எதிராக, கீழ்த்தரமான முறையில் கட்டுரையொன்று 'இத்திலாஅத்' பத்திரிகையில் பிரசுரமானது. இதனையடுத்து கும் நகரில், உலமாக்களின் தலைமையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கினர்; மக்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
ஷா மன்னர் இதனை தன் இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டார். பல உயிர்கள் பறிக்கப்பட்டன. இருந்தும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஓயவில்லை. நாடு முவதுமாகப் பரவியது. கொல்லப்பட்டவர்களின் 40வது தினத்தை நாடுமுழுவதும் அனுஷ்டிக்குமாறு உலமாக்கள் கோரிக்கை விடுத்தனர். தப்ரிஸ் நகரில் இவ்வாறு அனுஷ்டித்த பலரை ஷாவின் படை 1978 பெப்ரவரி 18ம் திகதி கொண்றுகுவித்தது. அவ்வாண்டும் புதுவருடத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்குமாறு ஈரானிய உலமாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது யஸ்த் நகரில் பலர் கொல்லப்பட்டனர். அரசுக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் அதிகரித்தது.
1978ம் ஆண்டு செப்டம்பர் 4 ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டனர். ஷாவுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டம் மூன்று நாட்களையும் தாண்டி தொடர்ந்தது. இதனையடுத்து ஷாவின் அரசு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தது. இதனை அறியாது வெளியில் வந்த மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இக்காலகட்டத்தில், ஈராக்கில் இருந்த இமாம் கொமைனிக்கு நெருக்குவாரங்கள் அதிகரித்தன் நாட்டில் இருந்து வெளியேறும்படி ஈராக்கிய அரசு உத்தரவிட்டது. அங்கிருந்து இமாம் குவைத்துக்கு சென்றார்... குவைத் எல்லையில் வைத்தே இமாம், அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பியனுப்பப்படுகிறார். இமாமவர்கள் வேறு வழியின்றி, 1978ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி பிரான்ஸின் புறநகரான நௌபெலே ஷட்டோவுக்கு குடிபெயர்கிறார். முழு உலகின் கவனமும் நௌபெலே ஷட்டோ பக்கம் திரும்புகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் அவ்விடம் நோக்கி படையெடுக்கின்றனர்.
ஈரானிய மக்கள் இமாமின் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். ஈரானிய ஊடகங்களில் இமாமின் செய்திகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது. இதனை முறியடிக்கும் விதத்தில், இமாமின் சகாக்கள் ஓர் உத்தியை கையாள்கின்றனர். இமாம் கொமைனியின் செய்திகளை சூட்சுமமான முறையில் பதிவு செய்து, அந்த ஒலிப்பதிவு நாடாக்களை மக்கள் மத்தியில் சென்றடையச் செய்தனர்.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்; எரிபொருள் விநியோகம், தொலைத்தொடர்புகள், வங்கிகள், நீர்வழங்கல் போன்ற அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைகின்றன் தொலைக்காட்சி மற்றும் வானொலியும் இணைந்துகொள்கின்றன... போராட்டம் மேலும் விரிவடைகிறது.
1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஷாவின் அரசு சர்வதேச கண்டங்களுக்கு உள்ளாகிறது.
மன்னராட்சி முறையைப் பாதுகாத்துக்கொண்டு, மக்களை சாந்தப்படுத்தும் முறையில், அதிகார அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இருந்தும் மக்கள் ஏமாற்றவில்லை.
இதற்கிடையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று சில ரஷ்ய சார்பு இடதுசாரி கொள்கையுடையோர் திட்டமிட்டனர். ஆனால் மக்களின் கோஷம் 'லா ஷர்க்கிய்யா, லா கர்பிய்யா, ஜூம்ஹூரிய்யா இஸ்லாமிய்யா' (கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாமிய குடியரசே வேண்டும் என்பதாகவே இருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ஷாவின் ராணுவம் நடுநிலை கடைபிடிக்கப்போவதாக அறிவிக்கின்றது. மன்னராட்சியின் மரணம் நெருங்கிவிட்டது என்று அறிந்த ஷா, 1979 ஜனவரி 16ம் திகதி ஆட்சிப்பொறுப்பை ஷாபூர் பக்தியாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறுகிறார்.
இமாம் கொமைனி நாடு திரும்புவதாக அறிவிக்கின்றார். இதற்கிடையில், இமாம் கொமைனியை ஏற்றிவரும் எந்த விமானத்துக்கும் தரையிறங்க அனுமதி மறுக்கப்படும் என்று பக்தியார் அரசு அறிவிக்கின்றது. இதனால் இமாமின் வருகை ஒரு வார காலம் தடைப்படுகிறது.
1979ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி இமாம் கொமைனி 15 வருடகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு, பிரான்சிலிருந்து நாடு திரும்புகிறார். பல மில்லியன் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இமாமை வரவேற்கின்றனர். 'அல்லாஹு அக்பர்' என்ற கோஷமும் ஸலவாத்தும் வின்னைப் பிழக்கிறது. இமாமவர்கள் விமான நிலையத்தில் இருந்து நேராக பெஹெஸ்த்தி ஸஹ்ரா அடக்கஸ்தலத்துக்கு சென்று, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். அங்கு உரை நிகழ்த்திய இமாமவர்கள் ஷாபூர் பக்தியாரின் ஆட்சி சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்துகிறார்.
அதே பிப்ரவரி மாதம் 5ம் திகதி இமாம் கொமைனியவர்கள் மெஹ்தி பஸர்கான் தலைமையில் தற்காலிக அரசொன்றை நிறுவுகின்றார். 8ம் திகதி விமானப்படையினர் இமாமிடம் விசுவாச பிரமாணம் செய்கின்றனர்.
இவ்வாறிருக்கையில் பிப்ரவரி 10ம் திகதி ராணுவனத்தின் சில பிரிவினர் அதிகாரத்தை தாம் கைப்பற்றியுள்ளதாகவும், ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கின்றனர். இதற்கு இமாமவர்கள், இந்த உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டாம்' வீடுகளில் இருந்து வெளியே வாருங்கள் 'அல்லாஹு அக்பர்' என்று உரத்து கோஷமிடுங்கள் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.
ராணுவ உத்தரவை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ராணுவ முகாம்கள், போலீஸ், வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தையும் மக்கள் சூழ்ந்து கொண்டனர் 'அல்லாஹு அக்பர்' கோஷத்தோடு.


ஷாவினால் அமர்த்தப்பட்ட ஷாபூர் பக்தியார் நாட்டைவிட்டு வெளியேறினார். அடக்குமுறையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளும் வெளியேறினர்.
ஈற்றில் 1979 பிப்ரவரி மாதம் 11ம் திகதி இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றது.
புரட்சியை வழிநடத்திய இமாம் கொமைனியினது நாமம் இஸ்லாமியர் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

வெற்றியின் ரகசியம்:

  • ஓர் உறுதியான கொள்கை 
  • அதில் ஈமான் கொண்ட மக்கள் கூட்டம் 
  • இறைவனையன்றி வேறு எதற்கும் அஞ்சா தலைமைத்துவம் 



- தாஹா முஸம்மில்


Tuesday, January 29, 2019

மேற்கின் அழுத்தங்களால் ஈரானின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது - சீன பேராசிரியர் வூ செங்


West not able to stop Iran: Chinese Prof Wu Cheng

Professor Wu Cheng
"தெஹ்ரான் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உலகுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க முயல்கிறது. மேற்கின் அழுத்தங்களால் ஈரானின் முன்னேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது" என்று  ஈரானியலாளரும்  கிழக்கு சீனாவின் ஹென்னன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பேராசிரியருமான வூ செங்  (Professor Wu Cheng ) தெரிவித்தார்.

"தொடர்ச்சியான நெருக்குவாரங்களும் சவால்களும் இருந்தபோதும் ஈரான் அபிவிருத்தி திட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும்  பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முன்னேற்றத்தில் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது" என ஈரான் இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40 ஆண்டு நிறைவையொட்டி, ஈரான் தேசிய செய்தி நிறுவனமான IRNAவுக்கு வழங்கிய பேட்டியின் போதே பேராசிரியர் வு செங் இவ்வாறு தெரிவித்தார்.

'இஸ்லாமிய ஆட்சி' என்ற புத்தகத்தின் ஆசிரியரான வூ செங் இஸ்லாமிய குடியரசு அதன் கௌரவத்தினதும் வெற்றியினதும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தனது 40 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடப் போவதையிட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இஸ்லாமியப் புரட்சியின் மூலம் இஸ்லாமிய நாகரிகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன; இஸ்லாமிய உலகின் எந்த ஆய்வாளரும் ஈரானை அலட்சியம் செய்ய முடியாது, ஈரானைப் பற்றிய எந்த ஆராய்ச்சியும் இந்த பெரிய மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் நிறைவடையாது. அமேரிக்கா தொடர்பான ஈரானின் கடுமையான எதிர்ப்பு வாஷிங்டனை தோல்வியடையச் செய்துள்ளதுஎன்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவினது சதிகளையும் மீறி, தம் வழி பிசகாமல் ஈரான் அதன் பயணத்தைக் தொடர முடிந்தது; பல நாடுகள் வாஷிங்டனின் அழுத்தத்தையும் பொருட்படுத்தாது ஈரானுடன் நெருக்கமான நல்லுறவைக் கொண்டடுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகம் நிறைய மாறிவிட்டது; நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. எனவே அவை தன்னிச்சைவாதத்துக்கு பதிலாக பன்முகத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள பெருமுயற்சி செய்து வருகின்றன. அதேசமயம் பூகோளமயமாக்கலுடன் தன்னை தகவமைத்துக்கொள்ள ஈரானால் முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

'ஈரான் இந்த நான்கு தசாப்தங்களுகளில் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது; மற்றும் நாளுக்குநாள் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி அது நகர்கிறது. இந்த முன்னேற்றத்தை ஈரானின் எதிரிகளால் எந்த வகையிலும் தடுக்க முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானை 'சுயாதீனமான' மற்றும் 'சுதந்திரம் தேடும்' நாடாக விவரிக்கும் வு செங், 'இஸ்லாமிய குடியரசு பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் பெரும் அபிவிருத்தியைக் கொண்டுவந்துள்ளது.' என்கிறார்.

பேராசிரியர் வு செங் ஈரான் பற்றியும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தந்தை இமாம் கொமெய்னி பற்றியும் ஈராக்கினால் ஈரான் மீது திணிக்கப்பட்ட யுத்தம் பற்றியும் மற்றும் மத்திய கிழக்கில் போர்கள் மற்றும் மோதல்களை உருவாக்கும் அமெரிக்க நோக்கங்கள் பற்றியும் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.