Contributors

Monday, June 3, 2024

இமாம் கொமைனி எனும் யுக புருஷர்

 Imam Khomeini - the leader of the century      

ஓர் இஸ்லாமிய தலைமைத்துவத்திடம் இருக்க வேண்டிய அனைத்து அடிப்படை பண்புகளையும் கொண்டிருந்தவர்தான் மர்ஹூம் இமாம் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்கள்.

இறையச்சம், அறிவு, தாழ்மை, பொறுமை, வீரம், இலக்கை நோக்கிய உறுதியான போராட்டம், இறைவனைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாமை, வழிகாட்டுதல்களை இறைபோதனையில் இருந்தும் புனித இமாம்களின் வாழ்க்கையில் இருந்தும் பெறுதல், வழிநடத்துதல், சரியான தீர்மானங்களை மேற்கொள்ளுதல், எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் இருத்தல் போன்ற அனைத்து தலைமைத்துவ பண்புகளிலும் சிறந்துவிளங்கியவவர்தான் மர்ஹூம் இமாம் கொமெய்னி.

45 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அரசியல் ஆய்வாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது ஈரான் இஸ்லாமிய புரட்சி. அது ஓர் ஆயுதம் ஏந்திய புரட்சியல்ல, வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்டதுமல்ல; ஓர் இராணுவ சதிபுரட்சியுமல்ல. முழுக்க முழுக்க மக்களின் சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட புரட்சி. அதன் உந்துசக்தியாக இருந்தது இஸ்லாம் மட்டுமே. 1400 வருடங்களுக்கு முன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சிக்குப்பின் அது போன்ற ஒரு புரட்சி ஈரான் இஸ்லாமிய புரட்சியே ஆகும் என்று கூறினால் மிகையாகாது.

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். எமக்கு வேண்டிய விதத்தில் இஸ்லாமிய உலகைத் துண்டாடி, எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லிம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில், மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் இவ்வாறானதொரு புரட்சி ஏற்படுவதென்பது எவரையும் வியக்க வைக்கவே செய்யும்.

'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமொன்றே போதும்; அல்லாஹ்வே மிகப்பெரியவன்' (லா ஷார்க்கிய்யா வலா கர்பிய்யா, இஸ்லாமிய்யா இஸ்லாமிய்யா; அல்லாஹு அக்பர்) என்ற கோஷம் மட்டுமே அவர்களது ஆயுதம். இந்த கோஷத்துக்கு முன்னால் 2500 வருடகால மன்னராட்சி தவிடுபொடியானது.

இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் வெடித்த இந்த இஸ்லாமிய புரட்சி, ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு விடியலை நோக்கிய புரட்சியாக அறிமுகப்படுத்தப் படுகிறது. அதாவது உலகில் நடைமுறையிலுள்ள அரசியல் சித்தாந்தத்துக்கே சவால் விடுகிறது.

அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு ஆள முடியும்? எவ்வாறு நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் அப்போது அவர்கள் கேலி செய்தனர்; இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும், மூன்று வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர். அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 45 ஆண்டுகளை, தலை நிமிர்ந்த நாடாக  கடந்துகொண்டிருக்கிறது.

இஸ்லாமா அல்லது ஈரானா...???

கீழே தரப்படுவது இமாம் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கும் ஆயத்துல்லாஹ் அக்பர் ஹாஷெமி ரப்சஞ்சானி (ரஹ்) அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முக்கியமான உரையாடல்.

ரசூலுல்லாஹ்வின் மனைவியரை இகழ்ந்து, இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் புத்தகம் எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அப்போது ஈரானின் ஜனாதிபதியாக இருந்த ஆயத்துல்லாஹ் ராப்சஞ்சாணி இமாம் கொமெய்னியிடம் சென்று "உங்கள் செயல் சர்வதேச கொள்கைகளுடன் உடன்படுவதாக இல்லை, சல்மான் ருஷ்டி ஒரு பிரித்தானிய பிரஜை, நீங்கள் இங்கிருந்து இவ்வாறான தீர்ப்பை வழங்குவது சரியல்ல; அதனை வாபஸ் பெறுங்கள் அல்லது புத்தக பதிவாக மட்டும் அதனை வைத்திருங்கள்; ஊடகங்கள் மூலம் அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம்" என்று ஆலோசனை கூறினார். 

அது பகிரங்கப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்...? என்று இமாமவர்கள் கேட்டார்கள். 

நாம் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். 

அப்புறம் என்ன நடக்கும்? 

நாம் புறக்கணிப்புகளுக்கு ஆளாவோம்; எம்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பர். 

மேலும் என்ன நடக்கும்...? 

ஈரான் தாக்கப்படக்கூடும். 

இமாம் மீண்டும் கேட்டார்: வேறு என்ன... ? 

அதனால் ஈரான் அழிவுகளை சந்திக்கக் கூடும் என்று ரப்சஞ்சானி பதிலளித்தார். 

பின்னர் இமாம் கொமேனி (ரஹ்) அவர்கள் "நமது நோக்கம் இஸ்லாத்தை தியாகம்செய்து ஈரானை காப்பதல்ல, இஸ்லாம் காக்கப்பட வேண்டும், அது ஈரானின் அழிவிலாயினும் சரியே. ருஷ்டி றஸூலுல்லாஹ்வின் மனைவியரை இகழ்ந்துரைத்துள்ளான், இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியுள்ளான். இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது வாய் மூடி மௌனியாய் இருந்துவிட்டு, ஈரான் தாக்கப்படும்போது மட்டும் பேசச் சொல்கிறீர்களா...? என்று கேள்வியெழுப்பினார்கள். நாம் வணங்குவது இறைனையன்றி ஈரானையல்ல; ஜாஹிலிய்யத்துக்கு மறுபெயரே தேசப்பற்றாகும்; இஸ்லாம் உலகில் வெற்றிபெற்று நிலைபெறுமானால் இந்த நாடு (ஈரான்) எரிந்து சாம்பலானும் பரவாயில்லை, என்று இமாமவர்கள் கூறினார்கள் என்று ஆயத்துல்லாஹ் ரப்சஞ்சானி குறிப்பிட்டார்கள்.

இதுவே இமாமின் கொள்கையாகும்; இதுவே ஆஷூரா கொள்கையுமாகும். ஸையத் அல் ஷுஹாதா இமாம் ஹுசைன் (அலை) போன்றவர்கள் இஸ்லாத்துக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்றால், அனைத்தையும் இழக்கத் தயாரானார்கள் என்றால், இஸ்லாத்துக்கு முன் வேறு எதுவுமே முக்கியமல்ல.  இஸ்லாத்தைக் காப்பதற்கு அவசியமாயின் நாம் அனைத்தையும் தியாகம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். இதுவே இமாம் ஹுஸைன் (அலை) கற்றுத்தரும் கர்பலா பாடமாகும்.

இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றத்தைத் தொடர்ந்து, ஈரானின் சர்வ அதிகாரமும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மரணிக்கும்வரை இந்த அதிகாரம் அவர் வசமே இருந்தது. முன்னைய ஆட்சியாளர்கள் கட்டிய பளிங்கு மாளிகைகள் பல இருந்தும், அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட எளிய வாழ்க்கை முறை, இஸ்லாமிய தலைமைத்துவத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பொறுப்புக்கூறவேண்டும் என்ற இறையச்சம், கர்வமின்மை, டாம்பீகமின்மை, படாடோபமின்மை, தன்னலமின்மைm தன்னடக்கம், ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அதனால்தான் இந்த மகோன்னத மனிதர் மறைந்து 35 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட கோடிக்கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்கிறார்.

ஷீஆ - சுன்னீ ஒற்றுமைக்கான அறைகூவல்

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ஷீஆ-சுன்னி ஒற்றுமையை எப்போதுமே வலியுறுத்தி வந்தார். அவரது உரைகளில் சுன்னிகளை விழித்து பேசுகையில் "சுன்னி சகோதரர்கள்" என்றே அழைப்பார். இந்த ஷீஆ-சுன்னி ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய உலகு எதிர்கொண்டுள்ள அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்பினார்.

ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர்.

வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். 

"உலக முஸ்லிம்கள் (ஷீஆ-சுன்னி) ஒன்றுபட்டு, ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரை இஸ்ரேலின் மீது ஊற்றினாலே போதும், அந்த நாடு இருந்த இடம் தெரியாது அழிந்து போய்விடும்" என்று இமாம் கொமெய்னி அவர்கள் 35 ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள்.

ஆகவே, எம்மத்தியில் உள்ள வேற்றுமையைக் களைந்து செயல்படுவோமேயானால், எம் எதிரியை அழிப்பதற்கு அணுகுண்டு அவசியமில்லை;  ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரே போதும்.

உலகில் ஷீஆ-சுன்னீ ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர்களுள் சுன்னி அறிஞர்களைப் போலவே ஏராளமான ஷீஆ அறிஞர்களும் இருக்கிறார்கள். இமாம் கொமெய்னி, இமாம் காமெனயி, இமாம் சீஸ்தானி, இமாம் பாகிர் ஸத்ர், ஷஹீத் முதஹ்ஹரி இன்னும் பலர்.

அண்மைய காலத்தில் அஷ் ஷஹீத் இப்ராஹிம் ரயீஸி (ரஹ்) ஷீஆ-சுன்னி பிரிவினை கடந்த இஸ்லாமிய ஒற்றுமையை ஏற்படுத்த அரும்பாடுபட்டு செயலாற்றிவந்ததை உலகறியும்.

ஈரான் இஸ்லாமியப் புரட்சியும் கூட, ஷீஆ சுன்னீ ஒற்றுமையின் பயனால் உருவானதே. எனவேதான், அப்போதே இமாம் கொமெய்னி அவர்கள், “ஷீஆவும் வேண்டாம்; சுன்னீயும் வேண்டாம்; இஸ்லாம் மட்டுமே வேண்டும்” என்ற கோஷத்தை ஓங்கி ஒலிக்கச் செய்தார்கள்.

தீர்க்க தரிசனம்

தான் விரும்பும் சிலருக்கு அல்லாஹ் மறைஞானத்தை வழங்குவான்... 

சோவியத் ஒன்றியத் தலைவர் மிக்கேல் கோர்பச்சேவுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு அழைப்பு விடுத்த இமாம் கொமைனி.

1989 ஜனவரி 3ஆம் திகதி ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமைனி அவர்கள் மிக்கேல் கோர்பச்சேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். இக்கடிதத்தை அதே மாதம் 7ஆம் திகதி ஈரானிலிருந்து மஸ்கொ சென்ற விசேட தூதுக்குழு கோர்பச்சேவிடம் கையளித்தது.

இக்கடிதத்தில் இமாம் கொமைனி அவர்கள், கோர்பச்சேவிடம் கொம்யூனிஸத்தையும் மாக்சிஸத்தையும் விட்டுவிட்டு அதற்கு பகரமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். தத்துவ ஞானிகளான இப்னு அரபி, அலி இப்னு சீனா, பராபி (அனைவரும் சுன்னிகள்) ஆகியோரின் ஆக்கங்களைக் கற்குமாறும் இமாம் கொமைனி கேட்டிருந்தார்.

இனிவரும் காலங்களில் கொம்யூனிஸத்தை உலக அரசியல் வரலாற்றின் அருங்காட்சியகங்களில் மட்டுமே காண வேண்டியிருக்கும்; மாக்சிஸத்தினால் மனிதகுலத்தின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டிருந்ததோடு மேலைத்தேய முதலாளித்துவத்தின் மாயை பற்றியும் எச்சரிக்கை செய்திருந்தார்.

இக்கடிதம் ஒப்படைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் துண்டு துண்டாக உடைந்தது.

பத்து ஆண்டுகளின் பின், 1999ம் ஆண்டு இமாம் கொமைனி ஞாபகார்த்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஈரான் சென்றிருந்த கோர்பச்சேவ் இமாம் கொமைனியின் அழைப்பை மதிக்கத் தவறியதையிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

யுத்தநிறுத்தம்

 இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று 18 மாதங்கள் கூட பூர்த்தியாகி இருக்கவில்லை. ஈரானுக்குள் கொம்யூனிஸவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், குண்டு வெடிப்புகளை நடத்திக்கொண்டிருக்கையில், இதனால் இஸ்லாமிய புரட்சியின் பல முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய தூண்டுதலாலும் சூழவுள்ள அரபு நாடுகளின் ஊக்கப்படுத்தலாலும் சதாம் ஹுசைன் திடுதிப் என ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது யுத்தமொன்றைத் திணித்தார்; ஆரம்ப கட்டங்களில் ஈரான் பல இழப்புகளை சந்தித்தது. 

 இமாம் கொஞ்சமும் சளைக்கவில்லை; ஆரம்ப இழப்புகளினால் துவண்டுபோய் விடவுமில்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஆயுதங்கள், அரபிகளின் பணம் எதுவுமே அவரை அச்சம் கொள்ளச் செய்யவில்லை. சதாம் ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்திப் பார்த்தார். எதற்குமே ஈரான் மசியவில்லை. திருப்பி அடித்தார்கள். அடித்த அடி அனைத்தும் இடிபோல் விழுந்தது. கொஞ்ச காலம் தான் சென்றிருக்கும், இழந்த பிரதேசங்கள் அனைத்தையும் மீட்டர்கள். சதாமும் அவரது கூட்டாளிகளும் கண்விழித்துப் பார்க்கையில் ஈரான் இஸ்லாமிய படைகள் ஈராக்குக்குள் புகுந்துவிட்டார்கள். யுத்த நிபுணர்களால் இதனை நம்பமுடியவில்லை. அமெரிக்க ஐரோப்பிய ஆயுதங்களுக்கு முன் இவர்களால் எவ்வாறு தாக்குப்பிடிக்க முடிந்ததது என்று தலையை பிய்த்துக்கொண்டார்கள். சதாமோ கதிகலங்கிப் போனார். சண்டையை நிறுத்தத் சொல்லி கெஞ்சினார். 

  இஸ்லாமிய அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு ஈரான் மீது வேண்டாத யுத்தம் ஒன்றைத் திணித்த சதாம் வீழும்வரை போர் தொடரும் என்று உறுதியாக இருந்த இமாம் கொமெய்னி, திடீரென ஒருநாள் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். பலருக்கு ஆச்சர்யம்; ஈரானியர்களால் கூட இதனை நம்பமுடியவில்லை. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட இமாம், அதன் சூட்சுமத்தை பின்னால் அறிந்துகொள்வீர்கள் என்றும் கூறினார்கள். 

பின்னால் என்ன நடந்தது...? சதாமின் யுத்தத்துக்கு சகல விதத்திலும் உதவிய குவைத் சதாமினால் ஆக்கிரமிக்கப்படுகிறது; பணத்தை வாரி இறைத்த சவூதி அரேபியா தாக்கப்பட்டது; ஈரான் மீது படையெடுக்க சதாமை தூண்டிய எல்லா சக்திகளும் இணைந்து, சதாமின் வீழ்ச்சிக்காக யுத்தத்தில் ஈடுபட்டன. சதாம் வீழ்ந்தார், தூக்கிலடப்பட்டார். ஈராக் ஈரானின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக மாறுகிறது. இதனைத்தான் "யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட சூட்சுமம், பிறகு அறிவீர்கள்" என்று இமாமவர்கள் கூறினார்கள். இமாமின் மறைவுக்குப் பிறகே ஈரானியர்கள் கூட இதனை புரிந்துகொண்டார்கள். அல்லாஹ் தம் உண்மையான அடியார்களுக்கு மறைஞானத்தை வழங்குகிறான்.

அமெரிக்காவே எமது பாதுகாப்பு என்று அரபு ஆட்சியாளர்கள் அவர்களிடம் மண்டியிட்டிருந்த காலகட்டத்தில், இஸ்லாமொன்றே எமக்கு பாதுகாப்பளிக்க வல்லது என்று உறுதியாய் இருந்து, அதனை செயலில் காட்டி, உலக முஸ்லிம்களுக்கு கண்ணியம் சேர்த்த பெருந்தகை, யுகப்புருஷர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள்.

- தாஹா முஸம்மில்

Thursday, May 30, 2024

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிய அரிய செய்தி

 Leader to US students:

You are standing on the right side of history


காஸாவின் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க மனசாட்சி தூண்டிய இளைஞர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அமெரிக்காவின் அன்பான பல்கலைக்கழக மாணவர்களே, இந்தச் செய்தி உங்களுடனான எங்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாகும். வரலாற்றின் சரியான பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள்.

நீங்கள் இப்போது எதிர்ப்பு முன்னணியின் ஒரு கிளையை உருவாக்கி, உங்கள் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற அழுத்தத்தை எதிர்கொண்டு கௌரவமான போராட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள் - இது அபகரிப்பு மற்றும் மிருகத்தனமான சியோனிச ஆட்சியை வெளிப்படையாக ஆதரிக்கும் அரசாங்கம்.

இன்று உங்களுக்கு இருக்கும் அதே புரிதல்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் மாபெரும் எதிர்ப்பு முன்னணி, உங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தில் (ஈரானில்) பல ஆண்டுகளாக இதே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பாலஸ்தீன தேசத்தின் மீது கொடூரமான சியோனிச பயங்கரவாத வலையமைப்பு செலுத்தி வரும் அப்பட்டமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தப் போராட்டத்தின் குறிக்கோள். அவர்களின் நாட்டைக் கைப்பற்றிய பின்னர், சியோனிச ஆட்சி பலஸ்தீன மக்களை மிகக் கடுமையான அழுத்தங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தியுள்ளது.

இனவெறி சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை இன்று பல தசாப்தங்களாக நடந்து வரும் தீவிர அடக்குமுறையின் தொடர்ச்சியாகும். பாலஸ்தீனம் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சுதந்திர நாடு. இது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அடங்கிய தேசம்.

உலகப் போருக்குப் பிறகு, முதலாளித்துவ சியோனிச வலைப்பின்னலானது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியுடன் பல ஆயிரம் பயங்கரவாதிகளை படிப்படியாக இந்த மண்ணில் இறக்குமதி செய்தது. இந்த பயங்கரவாதிகள் நகரங்கள் மற்றும் கிராமங்களைத் தாக்கினர், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர் மற்றும் பல மக்களை அண்டை நாடுகளுக்கு விரட்டினர். அவர்களது வீடுகள், வணிகங்கள் மற்றும் விவசாய நிலங்களைக் கைப்பற்றி, அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் அரசாங்கத்தை உருவாக்கி அதை இஸ்ரேல் என்று அழைத்தனர்.

இங்கிலாந்து வழங்கி வந்த ஆரம்ப உதவிக்குப் பிறகு, அமெரிக்கா இந்த அபகரிப்பு ஆட்சியின் மிகப் பெரிய ஆதரவாளராக ஆனது, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை இடைவிடாமல் வழங்கியது. மன்னிக்க முடியாத பொறுப்பற்ற விதத்தில் அமெரிக்கா (சியோனிச) ஆட்சியின் அணு ஆயுத உற்பத்திக்கு உதவி செய்தது.

சியோனிச ஆட்சியானது ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்தின் பாதுகாப்பற்ற அப்பாவி மக்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்ட கொள்கையைப் பயன்படுத்தியது மற்றும் நாளுக்கு நாள், அனைத்து தார்மீக, மனித மற்றும் மத விழுமியங்களையும் முற்றிலும் புறக்கணித்து அதன் கொடூரம், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறையை தீவிரப்படுத்தியது.

அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் இந்த அரச பயங்கரவாதம் மற்றும் தொடர் அடக்குமுறையைக் கண்டுகொள்ள மறுத்துவிட்டனர். இன்று, காசாவில் நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் சில கருத்துக்கள் உண்மையானதை விட பாசாங்குத்தனமானவை.

இந்த விரக்தியின் இருண்ட சூழலில் இருந்து தான் எதிர்ப்பு முன்னணி வெளிப்பட்டது, மேலும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தை நிறுவியது அதை விரிவுபடுத்தி பலப்படுத்தியது.

உலகளாவிய சியோனிச உயரடுக்கு - பெரும்பாலான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடக நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானது அல்லது நிதி மற்றும் லஞ்சம் மூலம் அவற்றை கட்டுப்படுத்துகிறது - எமது இந்த தைரியமான, மனிதாபிமான எதிர்ப்பு இயக்கத்தை "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தியுள்ளது.

சியோனிஸ்டுகளின் குற்றங்களுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போராடும் மக்களை பயங்கரவாத தேசம் என்று அழைக்க முடியுமா? அநியாயமிழைக்கப்பட்ட தேசத்துக்கு உதவி செய்து அதை வலுப்படுத்துவது பயங்கரவாதச் செயலா?

உலகளாவிய மேலாதிக்கத்தின் அடக்குமுறை தலைவர்கள் மிக அடிப்படையான மனிதக் கருத்துக்களைக் கூட இரக்கமின்றி சிதைக்கின்றனர். இரக்கமற்ற, பயங்கரவாத இஸ்ரேலிய ஆட்சியை தற்காப்புக்காகச் செயல்படுவதாக அவர்கள் சித்தரிக்கின்றனர்.

இன்று சூழ்நிலைகள் மாறி வருகின்றன என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேற்கு ஆசியாவின் முக்கியமான பகுதிக்கு வித்தியாசமான ஒரு விதி காத்திருக்கிறது. உலக அளவில் மக்களின் மனசாட்சி விழித்துக்கொண்டுள்ளது, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும், எதிர்ப்பு முன்னணி வலுவடைந்துள்ளது; மேலும் வலுவடையும்.

மேலும் வரலாறு அதன் புதிய பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறது.

பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களாகிய உங்களுடன், ஏனைய நாடுகளிலும் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன.

உங்கள் பேராசிரியர்களின் ஆதரவும் ஒற்றுமையும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் விளைவான வளர்ச்சியாகும். இது உங்கள் அரசாங்கத்தின் பொலிஸ் மிருகத்தனம் மற்றும் அது உங்கள் மீது செலுத்தும் அழுத்தங்களின் நடுவே ஓரளவு ஆறுதல் அளிக்கும் சங்கதியாகும். இளைஞர்களாகிய உங்களுடன் ஒருமைப்பாட்டை பகிர்ந்து கொண்டவர்களில் நானும் ஒருவன், உங்கள் விடாமுயற்சிக்கு மதிப்பளிக்கிறேன்.

முஸ்லிம்களாகிய எமக்கும், மனிதகுலம் அனைவருக்கும் குர்ஆன் கூறும் பாடம், எது சரியானதோ அதற்காக உறுதியாக நிற்க வேண்டும் என்பதுதான். “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள்”. (11:112).

மனிதர்களிடையேயான உறவுகளுக்கு குர்ஆனின் பாடம் “நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது”. (2:279).

ஒரு விரிவான புரிதல் மற்றும் இதைப் போன்ற பிற நூற்றுக்கணக்கான கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்ப்பு முன்னணி முன்னேறுகிறது - மேலும் இறைவனின் அருளால் வெற்றியை அடையும்.

நீங்கள் குர்ஆனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதே உங்களுக்கான எனது அறிவுரை.

https://en.mehrnews.com/news/215893/You-are-standing-on-the-right-side-of-history