Contributors

Sunday, March 24, 2024

அணுசக்தி தொழில்நுட்பம் உலகில் ஈரானின் அரசியல் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது: கமல்வந்தி

 Nuclear technology has promoted Iran’s political status in the world: Kamalvandi

Behrouz Kamalvandi

அணுசக்தி ஆராய்ச்சியானது ஈரானிய சமூகத்தின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலகநாடுகள் மத்தியில் ஈரானின் அரசியல் அந்தஸ்தை உயர்த்தியுள்ளதாகவும் ஈரானின் உயர் அணுசக்தி அதிகாரி கூறுகிறார்.

ஈரான் அணுசக்தி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வந்தி கூறுகையில், இப்போது ஈரான் இஸ்லாமிய குடியரசு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவருகிறது. பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறோம். அணுசக்தித் துறையின் முக்கியத்துவத்தின் காரணமாகவே இவை அனைத்திற்கும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது.

ஈரானை பலவீனப்படுத்தும் தங்கள் முயற்சிகளில், குறிப்பாக நாட்டின் அணுசக்தி தொழில்துறையின் முனேற்றப் பாதையில் "தடைகளை" உருவாக்க எதிரிகள் முயன்று வருவதாக கமல்வந்தி கூறுகிறார்.

காதாரத் துறையில் அணுசக்தி தொழில்நுட்பத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, இப்போது ஈரானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் கதிரியக்க மருத்துவத்தைப் பெறுகிறார்கள் என்று அவர் கூறினார்.


கதிரியக்க மருந்துகள் என்பது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படும் வேதியியல் கூறுகளின் கதிரியக்க வடிவங்களைக் கொண்ட மருந்துகள் ஆகும்.

அந்த கதிரியக்க ஐசோடோப்புகள் உருவாக்கும் கதிர்வீச்சு வகையைப் பொறுத்து, அவை பல மருத்துவ நிலைமைகளைக் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க அதனைப் பயன்படுத்தப்படலாம்.

அவற்றின் பயன்பாடுகள் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் எலும்பு போன்ற பல்வேறு உறுப்புகளின் இமேஜிங் முதல் புற்றுநோய் மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்திற்கான சிகிச்சை வரை உள்ளன.

சர்வதேச மற்றும் சட்ட விவகாரங்களுக்கான AEOI துறையின் பொறுப்பாளராகவும் இருக்கும் கமல்வந்தி, அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஈரான் தேர்ச்சி பெறவில்லை என்றால் இப்போது அணு மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் என்று கூறினார்.

ஈரான் இப்போது மற்ற நாடுகளுக்கும் கதிரியக்க மருந்துகளை ஏற்றுமதி செய்து வருவதாக அணுசக்தி அதிகாரி கூறினார்.

பொருளாதாரத் தடைகள் காரணமாக கதிரியக்க மருந்து தயாரிப்பதற்கான அணுசக்தி பொருட்களை இறக்குமதி செய்ய ஈரானின் முன்னேற்றத்தை விரும்பாத நாடுகள் ஈரானை ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"எனவே, இந்த விஷயத்தில் எங்களுக்கு உள்ளக திறன்கள் இல்லையென்றால், நாடு சுகாதாரப் பராமரிப்பில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும்."

உதாரணமாக, உணவு மற்றும் மருந்து மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டவை அல்ல என்ற கூற்றுக்கள் இருந்தபோதிலும், "யதார்த்தம் என்னவென்றால், இந்த இரண்டு பொருட்களின் மீதான பொருளாதாரத் தடைகளின் விளைவுகளை நாங்கள் கண்டுகொண்டுதான் இறுக்கின்றோம்" என்று அவர் கூறினார்.

கமல்வந்தி தனது உரையில் வேறொரு இடத்தில், "பொருளாதாரத் தடைகள் நாட்டிற்கும் அணுசக்தித் துறைக்கும் ஒரு பலமாக மாறியுள்ளன. இந்த நிலைமைகளின் கீழ், நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சித்தோம், இப்போது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டவர்களாக மாறியுள்ளோம், அதேசமயம் பல்வேறு கதிரியக்க மருந்துகளை ஏற்றுமதி செய்வோராகவும் மாறியுள்ளோம்.

விவசாய பொருட்களை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார், பொருளாதாரத் தடைகள் காரணமாக, தொழில்துறை முடுக்கிகள் (Industrial accelerators) ஈரானுக்கு விற்கப்படவில்லை என்றார்.

இருப்பினும், ஈரானால் இப்போது இந்த முடுக்கிகளை உலகளாவிய விலையை விட குறைந்த விலையில் மற்றும் அதிக தரத்துடன் தயாரிக்க முடிகிறது என்று கமல்வந்தி கூறினார்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயை மேற்கோள் காட்டி, "புரட்சியின் உச்சத் தலைவர் குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் தொழில் நாட்டிற்கு மரியாதைக்குரிய ஆதாரமாக உள்ளது மற்றும் நாட்டின் சக்திக்கு பங்களிக்கிறது. இந்தத் தொழில் துறை அரசியல் ரீதியாகவும் நாட்டிற்கு அதிகாரத்தையும் கௌரவத்தையும் தருகிறது.

அணுசக்தி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நாடுகளுக்கு உலகில் சிறப்பு அந்தஸ்து உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தக் காரணத்திற்காகவே, ஈரான் இந்தத் தொழிலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதை மேற்கு விரும்பவில்லை என்று கமல்வந்தி கூறினார்.

"தற்போதைய அரசியல் பிரச்சினைகள் இந்த பிரச்சினையில் இருந்தே உருவாகின்றன, மேலும் சர்வதேச ரீதியில் எங்கள் பணியின் ஒரு பகுதி அவர்கள் (மேற்கு) உருவாக்கிய அரசியல் மற்றும் சட்ட தடைகளை அகற்றுவதாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.tehrantimes.com/news/496389/Nuclear-technology-has-promoted-Iran-s-political-status-in-the

 

Wednesday, March 20, 2024

இயற்கையின் மறுபிறப்பைக் குறிக்கும் நவ்ரூஸ் எனும் பாரசீக புத்தாண்டு

Nowruz, the Persian New Year, symbolizes the rebirth of nature

பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தனஅதிலொன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாளைக் கொண்டாடும் நவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் தனித்துவமான ஈரானிய பாரம்பரியங்களுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

நவ்ரூஸ் திருவிழா ஒரு பழைய ஆண்டின் முடிவையும் ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது பாரம்பரியமாக வசந்த உத்தராயண நாளில் கொண்டாடப்படுகிறது.

வசந்த காலத்தின் முதல் நாளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மிகத்துல்லியமாக கணிப்பிட்டு வைத்துள்ள ஈரானியர்களின் ஆற்றல்விண்ணியலாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

நவ்ரூஸ் (Novruz, Navruz, Nooruz, Nevruz, Nauryz) என்ற சொல்லுக்கு புதிய நாள் என்று பொருள்; அதன் உச்சரிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடலாம்.

இந்த பண்டிகையைக் கொண்டாடும் பல நாடுகளின் முன்முயற்சியின் பேரில்2010 ஆம் ஆண்டின் A / RES / 64/253 என்ற தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இத்தினம் சர்வதேச நவ்ருஸ் தினம்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

சமாதான கலாச்சாரம்” என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், அல்பேனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு, மாசிடோனியா, ஈரான் (இஸ்லாமிய குடியரசு), இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த பரந்த பிராந்தியத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படும் நவ்ருஸ் பண்டிகையின் ஆரம்பகால தோற்றங்கள் சில ஜோராஸ்ட்ரியனிசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இது பண்டைய ஜோராஸ்ட்ரியன் காலண்டரில் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால் "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக ஒரு புராதன பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

பாரசீக மொழியில் 'புதிய நாள்' என்று பொருள்படும் நவ்ரூஸ் ஈரானில் மிக முக்கியமான திருவிழாவாக நிற்கிறது.

இந்த ஈரானிய கொண்டாட்டம் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தெற்காசியா, பால்கன்கள் மற்றும் கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் வியாபித்துள்ள பல்வேறு நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது, நவ்ரூஸ் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பர்யத்தைக் கொண்டுள்ளது.

அதன் நீண்ட வரலாறு முழுவதும், இந்த நாள் தனித்துவமான பழக்கவழக்கங்களை பராமரிக்கின்ற அதே நேரத்தில் புதியவற்றையும் இணைக்கின்றன.

எங்கு கொண்டாடப்பட்டாலும், நவ்ரூஸின் சாராம்சம் புத்துணர்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களின் நினைவுகூரலாக உள்ளது.

நவ்ரூஸ் மரபுகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் சில விடயங்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவை. புத்தாண்டுக்கான தயாரிப்பில் புதுப்பித்தல் மற்றும் வசந்த காலத்தைக் குறிக்கும் ஏழு பொருட்கள் (ஹஃப்ட்-சீனின்) கட்டாயம் அடங்கும். அதன் மையப்பகுதி சப்ஸே எனப்படும் ஒரு முளைக்கும் தாவரமாகும், இது மறுபிறப்பைக் குறிக்கிறது.

பிரதேசங்களுக்கு ஏற்றபடி, விழாக்களில் நெருப்பு, விருந்துகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், கவிதை வாசிப்பு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற கலாச்சார கொண்டாட்டங்கள் ஆகியவை அடங்கும்.

நவ்ரூஸ் என்பது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வசந்த காலமாக மாறும் நாள், இது ஒரு புதிய தொடக்கமாக உணர்கிறது. ஈரானில், அதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பொது விடுமுறைகள் உள்ளன, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகின்றன.

ஏராளமான மக்களால் அனுசரிக்கப்படும் கலாச்சார பாரம்பரியமாக மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் 2009 இல் பொறிக்கப்பட்டுள்ளது, நவ்ரூஸ் என்பது வசந்த காலத்தின் முதல் நாள் மற்றும் இயற்கையின் புதுப்பித்தல் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு மூதாதையர் பண்டிகையாகும்.

இது தலைமுறைகளுக்கிடையேயும், குடும்பங்களுக்கிடையேயும் அமைதி மற்றும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மற்றும் அண்டை நாடுகளின் மதிப்புகளை ஊக்குவிக்கிறது, இதனால் மக்கள் மற்றும் பல்வேறு சமூகங்களிடையே கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நட்புக்கு பங்களிக்கிறது.

நவ்ரூஸின் போது, மக்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் விருந்துகள், இசை, நடனம் மற்றும் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளுடன் கொண்டாடுகிறார்கள்.

மக்கள் தங்கள் வீடுகளில் ஒரு சிறப்பு அட்டவணையை தயார் செய்கிறார்கள், அங்கு அவர்கள் ஏழு அடையாள உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களை வைத்திருக்கும் சிறிய உணவுகளை வைக்கிறார்கள். இந்த உணவுகளின் பெயர்கள் அனைத்தும் பாரசீக மொழியில் 's' என்ற எழுத்தில் தொடங்குகின்றன, நவ்ரூஸின் முக்கிய மரபுகளில் ஒன்று ஹாஃப்ட்-சீன் அட்டவணை அமைப்பதாகும், இதில் பாரசீக எழுத்தான "س" ('சீன்' என உச்சரிக்கப்படுகிறது) தொடங்கி ஏழு குறியீட்டு பொருட்கள் அடங்கும்.  பீன் முளைகள் (சப்ஸ்), வினிகர் (செர்கே), ஆப்பிள்கள் (சீப்), பூண்டு (சீர்), கோதுமை சார்ந்த புடிங் (சாமானு), சிவப்பு மசாலா (சுமாக்) மற்றும் செஞ்சட் எனப்படும், ஒரு வகையான காட்டு ஆலிவ் ஆகியன அடங்கும்.

மக்கள் பல வாரங்களுக்கு முன்பே கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். குடும்ப அங்கத்தவர் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் வீடுகளை, தரைவிரிப்புகள் முதல் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகள் வரை முழுமையாக சுத்தம் செய்வார்கள், சேதமடைந்த பொருட்கள் சரி செய்யப்படுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன, மேலும் வீடு பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. இவை அனைத்து ஒரு சடங்காகவே செய்யப்படுகிறது. இந்த வசந்த கால துப்புரவு சடங்கின் மூலம், அவர்கள் கடந்த ஆண்டிலிருந்த எதிர்மறையை அகற்றி, வரவிருக்கும் புத்தாண்டில் நேர்மறையை வரவேற்கிறார்கள்.

மொஸ்கோவில் நவ்ரூஸ் பண்டிகையின் போது 

மற்ற குறியீட்டு பொருட்களில் பொன்மீன், வர்ணம் பூசப்பட்ட முட்டைகள், மெழுகுவர்த்திகள் மற்றும் ஒரு கண்ணாடி ஆகியவை அடங்கும். ஏழு பொருட்கள் வாழ்க்கை, அன்பு, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன.

கொண்டாட்டங்களில் நெருப்பு ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் நவ்ரூஸுக்கு முந்தைய வாரங்களில் நான்கு செவ்வாய்க்கிழமைகளுக்கு தெருக்களில் மரக்குச்சிகள் கட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. கடைசி செவ்வாய்க்கிழமை, மக்கள் நெருப்பு திருவிழாவை (சஹர்ஷன்பே சூரி) அனுசரிக்கிறார்கள், இது இந்த நெருப்பின் மீது குதிப்பதை உள்ளடக்கியது, இது புத்தாண்டில் ஆரோக்கியத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

ஈரானியர்கள் தங்கள் குடும்பத்துடன் நவ்ரூஸ் இரவைக் கழிக்கிறார்கள். பாரம்பரிய புத்தாண்டு இரவு உணவு அரிசி மற்றும் மூலிகைகள் கொண்ட வெள்ளை மீன் ஆகும். பல குடும்பங்கள் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் குழந்தைகளுக்கு பணப் பரிசை (ஈதி - பெருநாள் சந்தோசம்) என்று அழைக்கப்படுகிறது) வழங்குகின்றனர். மக்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் சென்று எப்போதும் பாரம்பரிய பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.

பாரம்பரிய கவிதை, பாடல் மற்றும் நடனம் ஆகியவை கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் மக்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் பங்கேற்கவும் தெருக்களை நிரப்புகிறார்கள். பாரம்பரிய விளையாட்டுகளும் பிரபலமாக உள்ளன. அவை பெரும்பாலும் குதிரை சவாரி அல்லது மல்யுத்தத்தை உள்ளடக்கியது.

நவ்ரூஸுக்குப் பிறகு பதின்மூன்றாவது நாளில் பண்டிகைகள் முடிவடைகின்றன, அப்போது மக்கள் பாரம்பரியமாக வெளியே பிக்னிக் செய்கிறார்கள். கிராமப்புறங்களில் குடும்பங்கள் ஒன்றாக உணவு உண்பது, பாடுவது மற்றும் விடுமுறையின் கடைசி நாளை அனுபவிப்பது ஆகியவை நிறைந்துள்ளன.

நவ்ரூஸைக் கொண்டாடுவது என்பது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துதல், ஆக்கபூர்வமான உழைப்புக்கும் இயற்கையான புதுப்பித்தல் சுழற்சிக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பைப் பற்றிய விழிப்புணர்வு, மற்றும் இயற்கை வாழ்க்கை ஆதாரங்கள் மீது அக்கறையுடனும் மரியாதையுடனும் இருக்கும் மனப்பான்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.

https://en.mehrnews.com/news/212974/Iranians-celebrate-Nowruz-rebirth-of-nature

 


Sunday, March 17, 2024

காஸா கடல் பகுதியில் 1 ட்ரில்லியன் கன அடி எரிவாயு - கொள்ளையடிப்பதற்கான திட்டமே தற்காலிக துறைமுகம்

The temporary port is a plan to exploit 1 trillion cubic feet of gas in the Gaza Strip

Source: Al Mayadeen English

காஸா பகுதியில் ஒரு "தற்காலிக" துறைமுகத்தை உருவாக்க அமெரிக்கப் படைகள் முயற்சி எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில், அறிவித்தார். வெள்ளை மாளிகையின் கருத்துப்படி, இந்த துறைமுகம் முற்றுகையிடப்பட்ட மற்றும் குண்டுவீச்சுக்கு உள்ளான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பாத்திரத்தை வகிக்கும் என்பதாகும்.

காஸாவில் "இஸ்ரேலின்" தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு மத்தியில் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க உறுதுணை என்பது முழு உலகுமே அறிந்த விடயம். இவ்வாறான ஒரு நிலையில் அமெரிக்கா அத்தகைய உள்கட்டமைப்பை முற்றிலும் காஸா மக்கள் மீது கொண்ட கருணையினால் கட்டமைக்கும் என்ற முடிவை எடுக்கும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது, நிச்சயமாக, அத்தகைய துறைமுகத்தின் நோக்கம் "இஸ்ரேல்" அப்பிராந்தியத்தை ஏற்கனவே கடற்படை முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது என்ற யதார்த்தத்திலிருந்து கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறது என்றாலும், அமெரிக்கா அத்தகைய துறைமுகத்தை கட்டமைக்கும் முடிவுக்குப் பின்னால் மற்றொரு நிகழ்ச்சி நிரல் விளையாடுகிறது.

அதிகாரிகள் என்ன கூறினாலும், காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்கவும் "இஸ்ரேலுக்கு" நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதன் மூலம், சட்டபூர்வ உரிமைகளின்படி, பாலஸ்தீன அரசுக்கு சொந்தமான கடல் பகுதியில் காணப்படும் இயற்கை எரிவாயு வளங்கள் மீது "டெல் அவிவ்" க்கு கட்டுப்பாட்டை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. "காஸா மரைன்" என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் 1 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு வளங்கள் உள்ளன என்பது 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும்  பாலஸ்தீனிய அரசு இதை அணுகுவதற்கு இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, அதேபோல், காஸா கடல் பகுதி நீண்ட காலமாக இஸ்ரேலின் பொருளாதார முற்றுகையின் கீழ் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்றுவரும் சில உலக நிகழ்வுகள் இயற்கை எரிவாயுவின் மூலோபாய மதிப்பை கணிசமாக பெருக்கியுள்ளன. அதாவது, உக்ரைனில் நடந்துவரும் போர், மாஸ்கோவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மாற்று எரிசக்தி வளங்களுக்காகப் போராடுவதற்கு மேற்கத்திய நாடுகளை நிர்ப்பந்தித்தது, குறிப்பாக அமெரிக்காவின் மூலோபாய இலக்குகளை அடைவதற்கான திட்டத்தில் "நட்பு" நாடுகளும் அதனுடன் இணைந்துள்ளன. உலகின் எரிபொருள் வளங்கள் யாவும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் பேராசையே இப்பிராந்தியத்தில் எப்போதும் யுத்தம் சூழ்ந்திருப்பதற்கான காரணம் என்பது பகிரங்க ரகசியம். இந்த நோக்கத்திற்காக, காஸா கடல்பகுதியில் இவர்களது அரசியல் ஆர்வம் அதிகரித்தது.

எவ்வாறாயினும், காஸா மீதான இஸ்ரேலியப் போர் வெடித்ததைத் தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு தெளிவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வில், பெஞ்சமின் நெதன்யாகு காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் படையெடுப்பதற்கான அரசியல் முடிவை எடுத்தார். பாலஸ்தீனம் முழுமையாக "இஸ்ரேலின் முழு பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது" என்று கோரினார். இதன் பொருள், காஸாவின் பொருளாதாரம் மற்றும் வளங்களின் மீது "இஸ்ரேல்" முழுக் கட்டுப்பாட்டையும் தனதாக்கிக்கொள்ளும் என்பதாகும். எனவே இயற்கை எரிவாயு வளங்களை பயன்படுத்த எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஹமாஸ் அமைப்பை இணை தரப்பாக கருத வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய அதிகார சபை நிலத்தால் சூழப்பட்ட பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது என்பதால், சட்டப்பூர்வமாக பலஸ்தீனத்துக்கு சொந்தமான கடல் பகுதியில் உள்ளஇயற்கை எரிவாயு வளங்களைக் கட்டுப்படுத்த எந்த சக்தியும் அதற்கு இல்லை.

இந்த அடிப்படையில் நோக்குகையில், குறிப்பிட்ட "தற்காலிக மனிதாபிமான" துறைமுகத்தை காஸாவில் உருவாக்க அமெரிக்கா ஏன் தீர்மானிக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அமெரிக்காவின் இலக்கு நிச்சயமாக மனிதாபிமான உதவியை வழங்குவதல்ல என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம். நிவாரண உதவி வழங்குதல் என்ற குறுகிய கால முயற்சிக்காக எவராவது ஒரு துறைமுகத்தையே நிர்மானிப்பார்களா என்று சிந்திக்க வேண்டும். மேலும், அமெரிக்கா இஸ்ரேலிய பயங்கவாதத்திற்கு தொடர்ந்து பச்சை விளக்கு காட்டி, உட்ச்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மற்றும் பிரதேசத்தில் கண்மூடித்தனமான இஸ்ரேலிய குண்டுவீச்சை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காதிருக்கும் நிலையில்,  துறைமுகம் அமைத்து உதவி வழங்கப்போகிறோம் என்ற உறுதிமொழி உண்மையில் எவ்வளவு வேடிக்கையானது. மாறாக, முழு இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாக மூலோபாய ரீதியாக காஸா பகுதியை முழுமையாக அடைய உதவுவதே உண்மையான நீண்ட கால நோக்கமாகும். இதை பைடன் நிர்வாகமும் மற்றவர்களும் எதிர்ப்பதாகக் கூறினாலும் அதற்கு முரணாகவே காரியமாற்றி வந்துள்ளனர் என்பது வெளிப்படை.

ஜோர்டானிய இராணுவ மற்றும் மூலோபாய விவகார நிபுணரான ஹிஷாம் கிரேசாட், துருக்கியின் அனடோலு ஏஜென்சியிடம், அத்தகைய துறைமுகத்தை நிர்மாணிப்பதற்குப் பின்னால் "மறைக்கப்பட்ட நோக்கங்கள்" இருப்பதாகவும், அது "காஸா மக்கள் ஐரோப்பாவிற்கு தன்னார்வமாக குடியேறுவதை மறைக்கும் மனிதாபிமான முகப்பு" என்றும் கூறியுள்ளார். "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "காஸா மக்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அவர்கள் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல" இந்த துறைமுகம் பயன்படுத்தப்படும். இன்னும் கூறுவதானால், காஸா பகுதியின் ஒவ்வொரு நுழைவுப் புள்ளியையும் "இஸ்ரேல்" கட்டுப்படுத்தும், மேலும் "இஸ்ரேல்" நகரத்தை ஆக்கிரமிக்கும் போது, எகிப்துடனான ரஃபா வழியை இறுதியில் மூடிவிடும், இதன் மூலம் பாலஸ்தீனிய இறையாண்மையை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் காஸாவின் எல்லைகளில் 100% கட்டுப்பாட்டை இஸ்ரேல்  கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

உள்நாட்டு மட்டத்தில், பைடன் நிர்வாகம் மீதுள்ள விமர்சனங்களைத் திசைதிருப்ப அது ஏதோ செய்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்த அனுமதிப்பதும், நெதன்யாகுவை தெற்கு நோக்கித் தள்ளி ரஃபாவை ஆக்கிரமித்து, எதிர்ப்பின்றி தனது திட்டங்களைத் தொடர அனுமதிப்பதும் ஒரு மக்கள் தொடர்பு ஸ்டண்ட் ஆகும்.

எனவே, மனிதாபிமான கருணையின் செயலாக உலகிற்குச் சித்தரிக்கும் அதே வேளையில், உண்மையில், இந்த "தற்காலிக துறைமுக" நிர்மானமானது, "இஸ்ரேல்" காஸாவின் இயற்கை எரிவாயு வளங்களைக் கைப்பற்றுவதற்கு வழிவகுத்து காஸா பகுதி மீதான பாலஸ்தீனிய இறையாண்மையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த அமெரிக்க மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தமிழில்: தாஹா முஸம்மில்