Sunday, March 17, 2024

காஸா கடல் பகுதியில் 1 ட்ரில்லியன் கன அடி எரிவாயு - கொள்ளையடிப்பதற்கான திட்டமே தற்காலிக துறைமுகம்

The temporary port is a plan to exploit 1 trillion cubic feet of gas in the Gaza Strip

Source: Al Mayadeen English

காஸா பகுதியில் ஒரு "தற்காலிக" துறைமுகத்தை உருவாக்க அமெரிக்கப் படைகள் முயற்சி எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில், அறிவித்தார். வெள்ளை மாளிகையின் கருத்துப்படி, இந்த துறைமுகம் முற்றுகையிடப்பட்ட மற்றும் குண்டுவீச்சுக்கு உள்ளான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பாத்திரத்தை வகிக்கும் என்பதாகும்.

காஸாவில் "இஸ்ரேலின்" தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு மத்தியில் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க உறுதுணை என்பது முழு உலகுமே அறிந்த விடயம். இவ்வாறான ஒரு நிலையில் அமெரிக்கா அத்தகைய உள்கட்டமைப்பை முற்றிலும் காஸா மக்கள் மீது கொண்ட கருணையினால் கட்டமைக்கும் என்ற முடிவை எடுக்கும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது, நிச்சயமாக, அத்தகைய துறைமுகத்தின் நோக்கம் "இஸ்ரேல்" அப்பிராந்தியத்தை ஏற்கனவே கடற்படை முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது என்ற யதார்த்தத்திலிருந்து கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறது என்றாலும், அமெரிக்கா அத்தகைய துறைமுகத்தை கட்டமைக்கும் முடிவுக்குப் பின்னால் மற்றொரு நிகழ்ச்சி நிரல் விளையாடுகிறது.

அதிகாரிகள் என்ன கூறினாலும், காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்கவும் "இஸ்ரேலுக்கு" நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதன் மூலம், சட்டபூர்வ உரிமைகளின்படி, பாலஸ்தீன அரசுக்கு சொந்தமான கடல் பகுதியில் காணப்படும் இயற்கை எரிவாயு வளங்கள் மீது "டெல் அவிவ்" க்கு கட்டுப்பாட்டை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. "காஸா மரைன்" என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் 1 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு வளங்கள் உள்ளன என்பது 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும்  பாலஸ்தீனிய அரசு இதை அணுகுவதற்கு இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, அதேபோல், காஸா கடல் பகுதி நீண்ட காலமாக இஸ்ரேலின் பொருளாதார முற்றுகையின் கீழ் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்றுவரும் சில உலக நிகழ்வுகள் இயற்கை எரிவாயுவின் மூலோபாய மதிப்பை கணிசமாக பெருக்கியுள்ளன. அதாவது, உக்ரைனில் நடந்துவரும் போர், மாஸ்கோவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மாற்று எரிசக்தி வளங்களுக்காகப் போராடுவதற்கு மேற்கத்திய நாடுகளை நிர்ப்பந்தித்தது, குறிப்பாக அமெரிக்காவின் மூலோபாய இலக்குகளை அடைவதற்கான திட்டத்தில் "நட்பு" நாடுகளும் அதனுடன் இணைந்துள்ளன. உலகின் எரிபொருள் வளங்கள் யாவும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் பேராசையே இப்பிராந்தியத்தில் எப்போதும் யுத்தம் சூழ்ந்திருப்பதற்கான காரணம் என்பது பகிரங்க ரகசியம். இந்த நோக்கத்திற்காக, காஸா கடல்பகுதியில் இவர்களது அரசியல் ஆர்வம் அதிகரித்தது.

எவ்வாறாயினும், காஸா மீதான இஸ்ரேலியப் போர் வெடித்ததைத் தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு தெளிவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வில், பெஞ்சமின் நெதன்யாகு காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் படையெடுப்பதற்கான அரசியல் முடிவை எடுத்தார். பாலஸ்தீனம் முழுமையாக "இஸ்ரேலின் முழு பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது" என்று கோரினார். இதன் பொருள், காஸாவின் பொருளாதாரம் மற்றும் வளங்களின் மீது "இஸ்ரேல்" முழுக் கட்டுப்பாட்டையும் தனதாக்கிக்கொள்ளும் என்பதாகும். எனவே இயற்கை எரிவாயு வளங்களை பயன்படுத்த எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஹமாஸ் அமைப்பை இணை தரப்பாக கருத வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய அதிகார சபை நிலத்தால் சூழப்பட்ட பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளது என்பதால், சட்டப்பூர்வமாக பலஸ்தீனத்துக்கு சொந்தமான கடல் பகுதியில் உள்ளஇயற்கை எரிவாயு வளங்களைக் கட்டுப்படுத்த எந்த சக்தியும் அதற்கு இல்லை.

இந்த அடிப்படையில் நோக்குகையில், குறிப்பிட்ட "தற்காலிக மனிதாபிமான" துறைமுகத்தை காஸாவில் உருவாக்க அமெரிக்கா ஏன் தீர்மானிக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அமெரிக்காவின் இலக்கு நிச்சயமாக மனிதாபிமான உதவியை வழங்குவதல்ல என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம். நிவாரண உதவி வழங்குதல் என்ற குறுகிய கால முயற்சிக்காக எவராவது ஒரு துறைமுகத்தையே நிர்மானிப்பார்களா என்று சிந்திக்க வேண்டும். மேலும், அமெரிக்கா இஸ்ரேலிய பயங்கவாதத்திற்கு தொடர்ந்து பச்சை விளக்கு காட்டி, உட்ச்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மற்றும் பிரதேசத்தில் கண்மூடித்தனமான இஸ்ரேலிய குண்டுவீச்சை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்காதிருக்கும் நிலையில்,  துறைமுகம் அமைத்து உதவி வழங்கப்போகிறோம் என்ற உறுதிமொழி உண்மையில் எவ்வளவு வேடிக்கையானது. மாறாக, முழு இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாக மூலோபாய ரீதியாக காஸா பகுதியை முழுமையாக அடைய உதவுவதே உண்மையான நீண்ட கால நோக்கமாகும். இதை பைடன் நிர்வாகமும் மற்றவர்களும் எதிர்ப்பதாகக் கூறினாலும் அதற்கு முரணாகவே காரியமாற்றி வந்துள்ளனர் என்பது வெளிப்படை.

ஜோர்டானிய இராணுவ மற்றும் மூலோபாய விவகார நிபுணரான ஹிஷாம் கிரேசாட், துருக்கியின் அனடோலு ஏஜென்சியிடம், அத்தகைய துறைமுகத்தை நிர்மாணிப்பதற்குப் பின்னால் "மறைக்கப்பட்ட நோக்கங்கள்" இருப்பதாகவும், அது "காஸா மக்கள் ஐரோப்பாவிற்கு தன்னார்வமாக குடியேறுவதை மறைக்கும் மனிதாபிமான முகப்பு" என்றும் கூறியுள்ளார். "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "காஸா மக்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அவர்கள் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல" இந்த துறைமுகம் பயன்படுத்தப்படும். இன்னும் கூறுவதானால், காஸா பகுதியின் ஒவ்வொரு நுழைவுப் புள்ளியையும் "இஸ்ரேல்" கட்டுப்படுத்தும், மேலும் "இஸ்ரேல்" நகரத்தை ஆக்கிரமிக்கும் போது, எகிப்துடனான ரஃபா வழியை இறுதியில் மூடிவிடும், இதன் மூலம் பாலஸ்தீனிய இறையாண்மையை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் காஸாவின் எல்லைகளில் 100% கட்டுப்பாட்டை இஸ்ரேல்  கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

உள்நாட்டு மட்டத்தில், பைடன் நிர்வாகம் மீதுள்ள விமர்சனங்களைத் திசைதிருப்ப அது ஏதோ செய்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்த அனுமதிப்பதும், நெதன்யாகுவை தெற்கு நோக்கித் தள்ளி ரஃபாவை ஆக்கிரமித்து, எதிர்ப்பின்றி தனது திட்டங்களைத் தொடர அனுமதிப்பதும் ஒரு மக்கள் தொடர்பு ஸ்டண்ட் ஆகும்.

எனவே, மனிதாபிமான கருணையின் செயலாக உலகிற்குச் சித்தரிக்கும் அதே வேளையில், உண்மையில், இந்த "தற்காலிக துறைமுக" நிர்மானமானது, "இஸ்ரேல்" காஸாவின் இயற்கை எரிவாயு வளங்களைக் கைப்பற்றுவதற்கு வழிவகுத்து காஸா பகுதி மீதான பாலஸ்தீனிய இறையாண்மையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த அமெரிக்க மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தமிழில்: தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment