Contributors

Tuesday, April 23, 2019

மாபெரும் பாரசீக கவிஞர் ஸஅதி ஷிராஸி


Abu-Muhammad Muslih al-Din bin Abdullah Shirazi, Saadi Shirazi 

அபு-முஹம்மது முஸ்லிஹ் அல்-தீன் பின் அப்துல்லா ஷிராஸி (ஸஅதி ஷிராஸி). மத்திய காலத்தில் இருந்த முக்கிய பாரசீக கவிஞர்களில் ஸஅதி ஷீராஸியும் ஒருவராவார். அவர் ஷிராஸ் நகரில் 1184 ஆம் ஆண்டில் பிறந்து, 1283 அல்லது 1291 ஆம் ஆண்டில், ஈரானில் உள்ள அதே நகரில் உயிர் நீத்தார். இவரின் பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் எங்கும் பதியப்பட்டுள்ளதாகத்  தெரியவில்லை.    ஆயினும் அவரது கவிதை ஒன்றில் தனது சிறு வயதில், திருவிழாவின் போது தனது தந்தையுடன் வெளியே செல்லும் நினைவுகளை அவர் விவரிக்கிறார். இதிலிருந்து ஸஅதி சிறுவனாய் இருக்கும் போதே தனது தந்தையை இழந்துள்ளார் என்று அறிய முடிகிறது.

ஈரான் மீதான மங்கோலிய படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த, ஸஅதி 30 ஆண்டுகாலமாக நாடுநாடாக சுற்றியலைந்தார். ஸஅதியின் தரமான எழுத்துக்களும் அவருடைய கவிதைகளில் பொதிந்திருந்த ஆழமான சமூக மற்றும் அறநெறி கருத்துக்களும் அவருக்கு ஒரு பெரும் அங்கீகாரத்தை வழங்கியது எனலாம்.

இவரின் கவிதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்லாமல் அவற்றில் சில அதனை  சொந்தம் கொண்டாடவும் செய்கின்றன.

ஸஅதி ஷிராசியின் "குலிஸ்தான்" (மலர் தோட்டம்) மற்றும் "புஸ்தான்"  (பழத்தோட்டம்) ஆகிய படைப்புகள் அவரது ஒழுக்க நெறிமுறை அடிப்படையினை வழங்கும் படைப்புகளில் இரண்டு சிகரங்கள் எனலாம்.

மொங்கோலியா படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த ஸஅதி இஸ்லாமிய உலகின் கற்றல் மையங்களை நாடிச் சென்றார். ஸஅதி,  தன்னிகரற்ற, அற்புதமான கவிதைகளையும் இலக்கியத்தையும் படைத்தார். ஷீராஸை விட்டு வெளியேறிய அவர் முதலில் பாக்தாத்தில், உமர் கய்யாமின் நண்பரான நிஸாம் அல்-முல்க் ஆட்சியாளரினால் அமைக்கப்பட்ட மகத்தான நிஸாமிய்யா, பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியல், சட்டம், ஆட்சி முறைமை, வரலாறு, அரபு இலக்கியம் மற்றும் இஸ்லாமிய இறையியல் ஆகியவற்றை கற்று தேறினார். புஸ்தான் மற்றும் குலிஸ்தான் நூல்களில் ஸஅதி  தனது பயண அனுபவங்களை சுவையாக விபரிக்கின்றார்.

மங்கோலிய படையெடுப்புக்குப் பிறகு ஏற்பட்ட கெடுதலான நிலைமைகள் காரணமாக அவர் முப்பது ஆண்டுகளாக பல நாடுகளுக்கும் விஜயம் செய்தார். அனட்டோலியா (துருக்கியின் ஒரு பகுதி)க்குச் சென்று அதானா துறைமுகம் சென்றதை பற்றியும் கொன்யாவில் சில பிரபுக்களை சந்தித்தது பற்றியும், சிரியாவில் (டமாஸ்கஸில்) அப்போது ஏற்பட்டிருந்த பஞ்சம் பற்றியும், எகிப்தின் இசை, சந்தை, அல்-அஸ்ஹரின் உயர் உலமாக்கள்  மற்றும் உயரதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பு பற்றியும், மற்றும் ஈராக் (பாஸ்ரா) மற்றும் டைக்ரிஸ் ஆற்றின் துறைமுகத்தை பார்வையிட்டது பற்றியும் அவரது எழுத்துக்களில் விவரிக்கிறார்.

ஹலபில், சிலுவை ஆக்கிரமிப்பாளர்களுடன் கடும் சமரில் ஈடுத்திருந்த சூஃபி குழு ஒன்றில் இணைந்து செயலாற்றுகின்றார். இதன் காரணமாக ஸஅதி கைது செய்யப்பட்டு, ஏழாண்டுகள் அடிமையாக நடத்தப்படுகின்றார். இதன் பிறகு மம்லுக் ஆட்சியாளர் முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்காக பணம் செலுத்தியதை தொடர்ந்து ஸஅதியும் விடுதலை ஆகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜெருசலத்துக்கு விஜயம் செய்த ஸஅதி, அங்கிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். இதன்போது அவர் அரேபிய தீபகற்பத்தின் தெற்கே ஓமான் மற்றும் பிற நிலங்களுக்கும் விஜயம் செய்ததாக நம்பப்படுகிறது.

மங்கோலிய ஆக்கிரமிப்புகளின் காரணமாக அவர் தனிமையான இடங்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், அச்சம் கொண்டிருந்த வர்த்தக பரிவாரங்களுடனும் தொடர்புகள்  ஏற்பட்டன.
 
அகதி முகாம்களிலும் காலத்தை கடத்தி வந்த ஸஅதிக்கு இமாம்கள், பெரு செல்வந்தர்களாக இருந்தோர், ராணுவ அதிகாரிகள், அறிவுஜீவிகள் ஆகியோருடன் பொதுமக்களுடன் கலந்திருந்த கொள்ளையர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டன. எனினும், போரினால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுடனேயே ஸஅதி நெருக்கமாக இருந்தார். அஜர்பைஜானில் மங்கோலிய கொள்ளைக்கு பயப்படும் தேன் சேகரிப்பாளர்கள் பற்றியும் ஸஅதி குறிப்பிடுகிறார்.

இரவு நேரங்களில் அவர் தேநீர் விடுதிகளில் தங்கியிருக்கையில்  வியாபாரிகள், விவசாயிகள், மார்க்கப் பிரச்சாரகர்கள், வழிப்போக்கர்கள், திருடர்கள் மற்றும் சூஃபி பக்கீர்மார்கள்  ஆகியோருடன் கருத்துக்களை பரிமாறினார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் கற்றலிலும் மக்களுக்கு நல்லுபதேசம் செய்வதிலும் அறிவுரைகள் வழங்குவதிலும் கடும்  பிரயாசை எடுத்துக்கொண்டார். இவையனைத்தும் அவரது ஞானத்தை பிரதிபலித்தன.

ஸஅதியின்  படைப்புகள் அநேகமாக, மங்கோலிய படையெடுப்புகளின் கொந்தளிப்பான காலங்களில் இடப்பெயர்வு, வேதனை மற்றும் மோதல் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட சாதாரண ஈரானியர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளன.

அவர் இறுதியாக பெர்சியாவிற்குத் திரும்பி, இஸ்பஹானிலும் மற்ற நகரங்களிலும் தனது பிள்ளைப்பருவ நண்பர்களை சந்திக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கும் துக்ரால் எனும் அமீருக்கு இடையில் நட்பு ஏற்படுகிறது. அவருடன் இணைந்து சிந்து நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளும் ஸஅதி பாரசீக பெரும் சூஃபி ஞானியான ஷேய்க் உஸ்மான் மார்வந்தியின் சீடரான பீர் பித்தூர் என்பவரையும் சந்திக்கின்றார்.

ஐரோப்பிய இலக்கியத்தின் மீது ஸஅதியின் செல்வாக்கு கணிசமானது. ஸஅதியின் நூல்கள் பல மேற்கத்திய புராணக்கதைகள் மற்றும் உருவக கதைகளுக்கு ஆதாரமாக விளங்கின. மேற்குலக பண்டைய நூல்கள், குறிப்பாக ஜெர்மனிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அவற்றில் ஸஅதியின் சிந்தனையின் அதிகரித்த செல்வாக்கினை கண்டனர்.

ஸஅதியின் குலிஸ்தான் (மலர் தோட்டம்) பண்டைய பாரசீக காவியங்களையும் சிறுகதைகளையும் குறுங்கவிதைகளையும் கொண்டுள்ளது. இவை, மக்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள ஊக்கப்படுத்துதுவதோடு சக மனிதர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கும் முறையிலும் சிறப்பாக அமைந்துள்ளன.

புஸ்தான் (பழத்தோட்டம்) இசைநயத்துடனான பாரசீக கவிதைகளைக்  கொண்ட ஸஅதியின் படைப்புகளின் மற்றொரு மகத்தான தொகுப்பு ஆகும்.

குலிஸ்தான் பாகம் 1ல் ‘அரசர்களின் நடத்தைகள்’ தொடர்பான 10வது கதையில், மனிதர்களை ஓருடலின் அங்கங்களாக கருதும் படி மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றார்.  அதில் புரிந்துணர்வை மிகவும் அழகான முறையில் விபரிக்கின்றார். ‘ஓருடலின் ஒரு பாகம் காயப்பட்டால், முழு உடலும் வேதனையை அனுபவிப்பது போல், ஒருவனுக்கு ஏற்படும் துன்பம் உலக மாந்தர் அனைவரையும் கவலையுறச் செய்ய வேண்டும்’ என்று தெளிவுபடுத்துகிறார். அவரது மற்றும் சில வரிகளில் "ஐம்பது வருடங்கள் கடந்தும் ஏன் இன்னும் உறக்கம்...?" என்று தன்னை நோக்கியே  கேள்வி எழுப்புகிறார்.

‘புஸ்தான்’ மற்றும் ‘குலிஸ்தான்’ ஆகிய இரண்டு படைப்புகளினதும் மையக்கரு, அன்பு கருணை ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன. புரிந்துணர்வு என்பது ஒரு மனிதனில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான பண்பு என்று ஸஅதி வலியுறுத்துகின்றார். அவர் மக்களை மன்னிக்கும் மனப்பான்மையுடன் சமாதான சகவாழ்வை நோக்கி  அழைக்கின்றார்; தீய மக்கள் கூட நேர்மையாகவும், நல்ல முறையிலும் நடத்தப்படுவார்களேயானால் அவர்களும் நல்லது செய்வதற்கு கற்றுக் கொள்வார்கள் என்று ஸஅதி கருதுகிறார்.

ஆதமின் மக்களே...!

நீங்கள் அனைவரும் ஓருடலின் பாகங்கள் 
படைத்தவனின் ஆத்மாவை சுமந்த  சாரங்கள்.

ஓரங்கம் பாதிக்கப்படின் வலியால்
ஏனைய அங்கம் வேதனையை உணரும்.

அடுத்தவரின் துயரங்களை நீங்கள் உணரவில்லை எனில், 
உங்களை ஒரு மனிதன் என்றழைப்பதில் அர்த்தமில்லை.

இந்த கவிதையில், ஸஅதி  மனிதர்களை "பனீ ஆதம்" எனக் குறிப்பிடுகிறார். இந்த கவிதை சமாதானத்திற்கும் புரிந்துணர்வுக்குமான அவரது பிரகடனமாக அறியப்படுகிறது. கூடுதலாக, இது மனிதநேய பண்புக்கு அடிப்படை அடையாளமாக கருதப்படுகிறது. ஈரானிய மற்றும் உலக இலக்கியங்களில் இந்த கவிதை "பனீ ஆதம்" என்ற தலைப்பில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது.

அடுத்தவர்பற்றிய புரிந்துணர்வற்ற ஒருவரை, "பனீ ஆதம்"மின் ஒரு பகுதியாக கருதுவது பொருத்தமானது அல்ல என்று ஸஅதி  வலியுறுத்துகிறார். பனீ ஆதமின் ஓர் அங்கம் காயம் காயமடைந்தால் (அதாவது, உலகில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால்), மற்ற மற்ற பாகங்கள் அதன் வலியை உணர்ந்துகொள்ளும் (அதாவது, மற்றவர்கள் அதனை உணருவார்கள், காயமடைந்த ஒருவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்) என்று ஸஅதி விவரிக்கிறார். இந்த அழகான மற்றும் சிறந்த கருத்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால ஈரானின் சமாதானத் தூதினை எளிமையாக விளக்கும் ஒன்றாகும்.

மனிதம் தழைக்க அத்தியாவசியமாக மனிதரில் இருக்க வேண்டிய இந்த மனிதாபிமான உணர்வின் பன்முகத்தன்மையை கலைத்துவ இரசனையுடன் வழங்கியதற்காக உலக மாந்தர்கள் அனைவரும் புகழ்பெற்ற ஈரானிய கவிஞரான "ஸஅதி" க்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

Saturday, April 20, 2019

ஈரான் எனும் பழத்தோட்டம்

Fruits of Iran

எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடென்றால் பார்க்கும் இடம் எல்லாம் பாலைவனமும் கட்டாந்தரையுமாக இருக்கும் என்ற எண்ணத்தை பொய்ப்பிக்கும் விதமாக ஈரான் இஸ்லாமிய குடியரசில் விவசாயம் இடம்பெற்று வருகின்றன. சுய தேவையைப் பூர்த்தி செய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அங்கே விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் பழ உற்பத்தியில் 1 வது இடத்தில் உள்ளது ஈரான் இஸ்லாமிய குடியரசாகும். உலகளவிலும் பழ உற்பத்தியில் ஈரான் பல்வேறு ஆண்டுகளில் 8 வது மற்றும் 10 வது இடங்களுக்கு இடையில் உள்ளது. பாரசீக வால்நட், முலாம்பழம், டாங்கரின், சிட்ரஸ் பழங்கள், கிவி பழங்கள், பல்வகை ஈத்தம் பழங்கள், செர்ரி, மாதுளை, பீச், ஆரஞ்சு, அத்தி, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்ற 50க்கும் அதிகமான பழவகைகளை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கிறது. இவைபோக, ஈரானின் பாதாம், பிஸ்தா போன்ற உலர்பழங்களும் உலக பிரசித்தம் வாய்ந்தவையாகும்.

பழ உற்பத்திக்கு சாதகமான காலநிலையுடன் கூடிய பாக்கியம் பெற்ற நாடு ஈரான். காஸ்பியன் கடலின் வடக்குக் கரையோரப் பகுதிகள் சிட்ரஸ் (நாரத்தை) உற்பத்திக்கான சிறந்த சூழலை வழங்குகிறது. உலகளவில் ஈரான் இஸ்லாமிய குடியரசு மாதுளை மற்றும் பிஸ்தா உற்பத்தியில் 1ம் இடத்திலும் ஈத்தம் பழ உற்பத்தியில் 2ம் இடத்திலும் அத்தி மற்றும் செர்ரி உற்பத்தியில் 3ம் இடத்திலும் ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழ உற்பத்தியில் 7ம் இடத்திலும் உள்ளது.

உலகின் இந்த பகுதியில் கிவி பழ உற்பத்தி, ஒப்பீட்டளவில் புதிய செயல்பாடாய் இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த பலனை தந்திருப்பதோடு ஈரானிய கிவி பழம் நாட்டின் விவசாய துறையில் ஒரு பாரிய ஏற்றுமதி பொருளாக ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

ஈரான் இஸ்லாமிய குடியரசில் 2.7 மில்லியன் ஹெக்டயரில் பழமர நடுகை செய்யப்பட்டுள்ளதோடு, கடந்த ஆண்டு 16.5 மில்லியன் டன் பழ அறுவடை செய்யப்பட்டுள்ளது. FAO (ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு)வின் உத்தியோகபூர்வ புள்ளியியல் படி, உலகில் சராசரி தனிநபர் பழ உற்பத்தி வருடத்துக்கு 80 கிலோ என்றிருக்கையில் ஈரானில் அது 200 கிலோவாக உள்ளது.

ஈரானின் புள்ளிவிவர மையம் நடத்திய ஒரு ஆய்வின் படி, ஈரானின் பழ உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 2017-18 மார்ச்) 11.6 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.8% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஆப்பிள் (2.4 மில்லியன் டன்), திராட்சை (1.75 மில்லியன் டன்), ஆரஞ்சு (1.2 மில்லியன் டன்) மற்றும் ஈத்தம்பழம் (1.76 மில்லியன் டன்) ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்துப் பொருட்களின் 61 சதவிகிதமாகும். (Source: financialtribune.com)

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் சுங்க சேவை அறிக்கையின் படி  கடந்த ஈரானிய நிதி ஆண்டின் முதல் பாதியில் ஈரானில் இருந்து 741 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு வகையான பழங்களின் 1.13 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17% அதிகரிப்பாகும். இந்த ஆண்டின் முதல் பாதியில், 438 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1.11 மில்லியன் டன் காய்கறிகளையும் ஈரான்  ஏற்றுமதி செய்திருக்கிறது. (Source: irna.ir)

நாம் இங்கு வட்டக்காய் என்றழைக்கும் பரங்கிக்காயின் விதைகளை அநேகமாக பயன்படுத்துவதில்லை; ஆனால் ஈரானில் அதனை உப்பிட்டு உலர்த்தி, விற்பனை செய்கின்றனர்; ஏற்றுமதியும் செய்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு சீஸனில் பழ விளைச்சல் அபரிமிதமாக இருக்கும். பழங்களை ஆய்வதற்கான கூலி, பழ விலையை விட அதிகரித்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், சில பழத்தோட்ட சொந்தக்காரர்கள், "தமது தோட்டத்தில் இருந்து வேண்டிய அளவு பழங்களை இலவசமாக பறித்துச் செல்லலாம்" என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்வர் என்ற சுவாரஸ்யமான செய்தியை எனது ஈரானிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.


Tuesday, April 16, 2019

ஈரானுக்கு எதிரான கூட்டணி - "அரபு-நேட்டோ" பிறக்குமுன் மரணம்


Premature death for anti-Iran coalition



ஈரான் இஸ்லாமிய குடியரசை எதிர்கொள்ள மத்தியகிழக்கு நாடுகளை இணைத்து, அரபு-நேட்டோ அமைக்கும் அமெரிக்க முயற்சி, எகிப்தின் எதிர்ப்பு காரணமாக ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் எகிப்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பிராந்தியத்தில் ஈரானின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக “அரபு நேட்டோ” என்ற ஒரு கூட்டணியை உருவாக்கும் அமெரிக்க மூலோபாய திட்டம் எகிப்து பின்வாங்கியதால் சுருண்டது என்று நான்கு முக்கிய மூலாதாரங்களின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.  ஆக, இக்கூட்டணி பிறக்குமுன்னரே மரணத்தைத் தழுவியுள்ளது. 

அரபு உலகில் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு எகிப்தாகும். ஈரானுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் இந்தத் திட்டத்தில் இருந்து  எகிப்து வாபஸ்வாங்கி உள்ளதானது, அமெரிக்காவினதும் சவூதி அரேபியாவினதும் திட்டத்துக்கு பெரும் தோல்வியாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு ஒரு கடுமையான தோல்வி என்று நம்புகின்றனர்.

இது தொடர்பாக எகிப்திய 'அல்-மஜ்த்' பத்திரிகையின் கருத்துப்படி, எகிப்து இதிலிருந்து வாபஸ்வாங்க எடுத்த முடிவானது, பொது எதிரி யார் என்பதை அடையாளம் காணுவதில் அரபு கூட்டணி நாடுகளுக்கிடையில் தீவிர கருத்து வேறுபாடு நிலவுவதையே எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

ஞாயிறன்று (ஏப்ரல் 14) ரியாத்தில் நடைபெற்ற ஈரானுக்கு எதிரான 'அரபு-நேட்டோ' கூட்டணி அமைக்கும் திட்டம் ஆரம்ப கூட்டத்திலேயே சரிந்து விழுந்ததது. லெபனானின் அல்-மார்கஸியா நியூஸ் ஏஜென்சி இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் 'புதிய அரபு-நேட்டோ தோல்வி; மரண அடியா?' என்ற தலைப்பில் செய்தி பிரசுரித்தது. அரபு - நேட்டோ திட்டத்தில் இருந்து எகிப்து பின்வாங்கியது கூட்டணி தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஒன்றை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் ட்ரம்பின் தோல்வி பற்றி இந்த கூட்டணியின் உறுப்பினர்கள் கவலைக்கொண்டுள்ளனர். அரபு - நேட்டோ திட்டத்தில் இருந்து எகிப்து பின்வாங்குவது, நிலைமையை மிகவும் சிக்கலானதாக்கி விட்டுள்ளது.

வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியைத் தழுவி, வேறொருவர் அப்பதவியை ஏற்கும் பட்சத்தில், இந்த அரபு-நேட்டோ அமைப்பை புறக்கணித்து, நட்டாற்றில் விட்டுவிடுவாரோ  என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில், வலுவான ஈரானுக்கு முன் இந்த நாடுகள் நலிவடைந்த நிலையில் காணப்படும் என்ற அச்சமும் இவர்களை ஆட்டிப்படைக்கிறது.

அல்-மர்கஸியாவின் கூற்றுப்படி, எகிப்து சூடானில் ஆட்சி கவிழ்ப்பதற்கு ஆதரவு வழங்கியது. எகிப்தின் தற்போதைய தேவை, ஈரானுடன் பகையை வளர்த்துக்கொள்வதல்ல; தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமது அண்டை நாடுகளான லிபியா மற்றும் சூடானின் ஆபத்தான அரசியல் கொந்தளிப்பு நிலையில் கூடிய கவனம் செலுத்துவதாகும்.

அரபு-நேட்டோவிலிருந்து எகிப்தின் பின்வாங்கல் கூட்டணிக்குள் தற்போதிருக்கும் நிலைமையினையும் கூட்டணியின் பலவீனத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது என்று எகிப்திய பத்திரிகை அல்-மஜ்த் அதனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எகிப்து இணையாவிட்டால் அரபு-நேட்டோவிற்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்று கூறலாம், ஏனென்றால் ஏனைய அரபு-நேட்டோ உறுப்பு நாடுகளில் அவசியமான வழிமுறைகளும் இல்லை, உறுதியான ராணுவ கட்டமைப்பும் இல்லை. ஆகவே, எகிப்து இல்லாத கூட்டமைப்பு சாத்தியமில்லாத ஒன்றாகவே அமையும்.

தொடக்கத்தில், அரபு நேட்டோவின் உருவாக்கம் பற்றி இவர்கள் மத்தியில்   நிறைய உற்சாகம் இருந்தது. ஆயினும் காலப்போக்கில், எகிப்து அதில் அக்கறை காட்டாததினால்  அந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எகிப்து இல்லாத அரபு-நேட்டோ கூட்டமைப்பு என்ற ஒன்றுக்கு எந்த உற்சாகமும் காணப்படவில்லை. இந்த கூட்டணியின் பொறுப்பும், பிரதான கடமையும் எகிப்தி மீதே சுமத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது எகிப்து இதனை விட்டு வெளியேறுவதால், கூட்டணிக்கு எந்த அர்த்தமும் இல்லை.


இது சம்பந்தமாக, இராணுவ நிபுணர் கலீல் அல் ஹாலோ, லெபனான் மார்கஸியா செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க மூலோபாயம் நிறைவேறாது என்று கூறினார். ஈரானுக்கு எதிராக இந்த நாடுகளுக்கு இடையேயான அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அரபு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தடையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அப்துல் பாரி அத்வான் என்பவர் ராய் அல்-யவ்ம் பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி சமீபத்தில் சுன்னி-அரபு-நேட்டோ என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கு பாதுகாப்பு-பொருளாதார கூட்டணியிலிருந்து விலகிவிட முடிவு செய்ததும் அமெரிக்கவின் விருப்பத்துக்கு முரணாக, அமெரிக்க தயாரிப்பான  F-16 மற்றும்  F-35 யுத்த விமானங்களுக்கு பதிலாக ரஷ்யாவின் Su-35 யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய எடுத்தத் தீர்மானமும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கையை நிலைகுலையச்செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன ஆய்வாளரின் கருத்தின்படி, அரபு-நேட்டோவில் இருந்து எகிப்து விலகியிருக்க எடுத்திருக்கும் தீர்மானம் உண்மையாயின், அது அமெரிக்கா மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளின் அடிமைப்படுத்தலில் இருந்து கெய்ரோவைக் காப்பாற்றி, அதன் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான தைரியமான முடிவாக இருக்கும்.

எகிப்திய அரசாங்கத்தின் இந்த முடிவுடன் திறந்த மனதுடனான அரசியல் அணுகுமுறை மற்றும் பல்வேறு எகிப்திய அரசியல் அமைப்புக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக் கொள்கைகளை தவிர்ப்பதுடன், மனித உரிமைகளை மதிக்கும் நடவடிக்கையாக அமையுமாயின், பிராந்திய மக்காளால் அது நிச்சயமாக வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

'ஸ்பூட்னிக்' செய்தி நிறுவனத்தின் அரபு பகுதியின் செய்தியின் படி, இந்த பிராந்தியத்தில் ஒரு கூட்டணியை உருவாக்குவது என்பது எளிதானது அல்ல, ஏனெனில் ரஷ்யாவுக்கு அமெரிக்காவுடனும் மற்றும் சில பாரசீக வளைகுடா நாடுகளுடனும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பாக உடன்பாடு கிடையாது. இது தொடர்பாக, ஜோர்தானிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினென்ட் மஹ்மூத் அல்-ராடிசாட் Sputnik செய்தி நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஓர் அரபு-நேட்டோவை உருவாக்கும் திட்டம் நிறைவேற்ற முடியாத ஒன்று; ஏனெனில் அரபுலக்கு ஒரு தெளிவான இலக்கு கிடையாது மேலும் அரபு நாடுகள் மத்தியில் ஒரு ராணுவ கூட்டணியை அமைக்கக்கூடிய மனோ நிலையும் கிடையாது. மாறாக, அரபு உலகு உள்முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கின்றது என்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாடும் சிரியா, லிபியா, யெமென் ஈராக் மற்றும் பாலஸ்தின் பிரச்சினைகளில் சுயநல சிந்தனையுடனேயே செயல் படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜியங்கள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் கட்டார் அரசு உடன்படுவதாய் இல்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கட்டார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடி தீர்க்கப்படாதுள்ளது என்றும் மத்திய கிழக்கில் கூட்டணி அமைக்கும் அமெரிக்க திட்டம் தோல்வியையே தழுவும் என்றும் குறிப்பிட்டார். 

ஜோர்தானிய ஆய்வாளர் கூறுகையில், 'அரபு நாடுகளுக்கிடையில் தீர்க்கப்படாத ஏராளமான பிரச்சினைகள் இருக்கையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயத்திலும் முரண்படும் நாடுகளை ஒன்றிணைத்து, கூட்டணி அமைப்பது முடியாத காரியம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் ஈரான் எதிர்ப்பு அரபு-நேட்டோ அமைக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஆயினும் கட்டார், குவைத் மற்றும் ஓமான் ஈரானுடன் நல்லுறவைப் பேணி வருகின்றன. எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு வளர்ந்துவரும்  ஈரானின் செல்வாக்கைப் பற்றி கவலையில்லை. அவற்றின் முன்னுரிமை வெளியுறவு கொள்கை அரேபிய-இஸ்ரேலிய பிரச்சினையை மையப்படுத்தியதாக உள்ளது.