Contributors

Tuesday, April 16, 2019

ஈரானுக்கு எதிரான கூட்டணி - "அரபு-நேட்டோ" பிறக்குமுன் மரணம்


Premature death for anti-Iran coalition



ஈரான் இஸ்லாமிய குடியரசை எதிர்கொள்ள மத்தியகிழக்கு நாடுகளை இணைத்து, அரபு-நேட்டோ அமைக்கும் அமெரிக்க முயற்சி, எகிப்தின் எதிர்ப்பு காரணமாக ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் எகிப்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பிராந்தியத்தில் ஈரானின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரபு நேட்டோ என்ற ஒரு கூட்டணியை உருவாக்கும் அமெரிக்க மூலோபாய திட்டம் எகிப்து பின்வாங்கியதால் சுருண்டது என்று நான்கு முக்கிய மூலாதாரங்களின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.  ஆக, இக்கூட்டணி பிறக்குமுன்னரே மரணத்தைத் தழுவியுள்ளது. 

அரபு உலகில் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு எகிப்தாகும். ஈரானுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் இந்தத் திட்டத்தில் இருந்து  எகிப்து வாபஸ்வாங்கி உள்ளதானது, அமெரிக்காவினதும் சவூதி அரேபியாவினதும் திட்டத்துக்கு பெரும் தோல்வியாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு ஒரு கடுமையான தோல்வி என்று நம்புகின்றனர்.

இது தொடர்பாக எகிப்திய 'அல்-மஜ்த்' பத்திரிகையின் கருத்துப்படி, எகிப்து இதிலிருந்து வாபஸ்வாங்க எடுத்த முடிவானது, பொது எதிரி யார் என்பதை அடையாளம் காணுவதில் அரபு கூட்டணி நாடுகளுக்கிடையில் தீவிர கருத்து வேறுபாடு நிலவுவதையே எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

ஞாயிறன்று (ஏப்ரல் 14) ரியாத்தில் நடைபெற்ற ஈரானுக்கு எதிரான 'அரபு-நேட்டோ' கூட்டணி அமைக்கும் திட்டம் ஆரம்ப கூட்டத்திலேயே சரிந்து விழுந்ததது. லெபனானின் அல்-மார்கஸியா நியூஸ் ஏஜென்சி இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் 'புதிய அரபு-நேட்டோ தோல்வி; மரண அடியா?' என்ற தலைப்பில் செய்தி பிரசுரித்தது. அரபு - நேட்டோ திட்டத்தில் இருந்து எகிப்து பின்வாங்கியது கூட்டணி தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஒன்றை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் ட்ரம்பின் தோல்வி பற்றி இந்த கூட்டணியின் உறுப்பினர்கள் கவலைக்கொண்டுள்ளனர். அரபு - நேட்டோ திட்டத்தில் இருந்து எகிப்து பின்வாங்குவது, நிலைமையை மிகவும் சிக்கலானதாக்கி விட்டுள்ளது.

வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியைத் தழுவி, வேறொருவர் அப்பதவியை ஏற்கும் பட்சத்தில், இந்த அரபு-நேட்டோ அமைப்பை புறக்கணித்து, நட்டாற்றில் விட்டுவிடுவாரோ  என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில், வலுவான ஈரானுக்கு முன் இந்த நாடுகள் நலிவடைந்த நிலையில் காணப்படும் என்ற அச்சமும் இவர்களை ஆட்டிப்படைக்கிறது.

அல்-மர்கஸியாவின் கூற்றுப்படி, எகிப்து சூடானில் ஆட்சி கவிழ்ப்பதற்கு ஆதரவு வழங்கியது. எகிப்தின் தற்போதைய தேவை, ஈரானுடன் பகையை வளர்த்துக்கொள்வதல்ல; தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமது அண்டை நாடுகளான லிபியா மற்றும் சூடானின் ஆபத்தான அரசியல் கொந்தளிப்பு நிலையில் கூடிய கவனம் செலுத்துவதாகும்.

அரபு-நேட்டோவிலிருந்து எகிப்தின் பின்வாங்கல் கூட்டணிக்குள் தற்போதிருக்கும் நிலைமையினையும் கூட்டணியின் பலவீனத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது என்று எகிப்திய பத்திரிகை அல்-மஜ்த் அதனது  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எகிப்து இணையாவிட்டால் அரபு-நேட்டோவிற்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்று கூறலாம், ஏனென்றால் ஏனைய அரபு-நேட்டோ உறுப்பு நாடுகளில் அவசியமான வழிமுறைகளும் இல்லை, உறுதியான ராணுவ கட்டமைப்பும் இல்லை. ஆகவே, எகிப்து இல்லாத கூட்டமைப்பு சாத்தியமில்லாத ஒன்றாகவே அமையும்.

தொடக்கத்தில், அரபு நேட்டோவின் உருவாக்கம் பற்றி இவர்கள் மத்தியில்   நிறைய உற்சாகம் இருந்தது. ஆயினும் காலப்போக்கில், எகிப்து அதில் அக்கறை காட்டாததினால்  அந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எகிப்து இல்லாத அரபு-நேட்டோ கூட்டமைப்பு என்ற ஒன்றுக்கு எந்த உற்சாகமும் காணப்படவில்லை. இந்த கூட்டணியின் பொறுப்பும், பிரதான கடமையும் எகிப்தி மீதே சுமத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது எகிப்து இதனை விட்டு வெளியேறுவதால், கூட்டணிக்கு எந்த அர்த்தமும் இல்லை.


இது சம்பந்தமாக, இராணுவ நிபுணர் கலீல் அல் ஹாலோ, லெபனான் மார்கஸியா செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க மூலோபாயம் நிறைவேறாது என்று கூறினார். ஈரானுக்கு எதிராக இந்த நாடுகளுக்கு இடையேயான அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அரபு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தடையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அப்துல் பாரி அத்வான் என்பவர் ராய் அல்-யவ்ம் பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி சமீபத்தில் சுன்னி-அரபு-நேட்டோ என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கு பாதுகாப்பு-பொருளாதார கூட்டணியிலிருந்து விலகிவிட முடிவு செய்ததும் அமெரிக்கவின் விருப்பத்துக்கு முரணாக, அமெரிக்க தயாரிப்பான  F-16 மற்றும்  F-35 யுத்த விமானங்களுக்கு பதிலாக ரஷ்யாவின் Su-35 யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய எடுத்தத் தீர்மானமும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கையை நிலைகுலையச்செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன ஆய்வாளரின் கருத்தின்படி, அரபு-நேட்டோவில் இருந்து எகிப்து விலகியிருக்க எடுத்திருக்கும் தீர்மானம் உண்மையாயின், அது அமெரிக்கா மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளின் அடிமைப்படுத்தலில் இருந்து கெய்ரோவைக் காப்பாற்றி, அதன் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான தைரியமான முடிவாக இருக்கும்.

எகிப்திய அரசாங்கத்தின் இந்த முடிவுடன் திறந்த மனதுடனான அரசியல் அணுகுமுறை மற்றும் பல்வேறு எகிப்திய அரசியல் அமைப்புக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக் கொள்கைகளை தவிர்ப்பதுடன், மனித உரிமைகளை மதிக்கும் நடவடிக்கையாக அமையுமாயின், பிராந்திய மக்காளால் அது நிச்சயமாக வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

'ஸ்பூட்னிக்' செய்தி நிறுவனத்தின் அரபு பகுதியின் செய்தியின் படி, இந்த பிராந்தியத்தில் ஒரு கூட்டணியை உருவாக்குவது என்பது எளிதானது அல்ல, ஏனெனில் ரஷ்யாவுக்கு அமெரிக்காவுடனும் மற்றும் சில பாரசீக வளைகுடா நாடுகளுடனும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பாக உடன்பாடு கிடையாது. இது தொடர்பாக, ஜோர்தானிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினென்ட் மஹ்மூத் அல்-ராடிசாட் Sputnik செய்தி நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஓர் அரபு-நேட்டோவை உருவாக்கும் திட்டம் நிறைவேற்ற முடியாத ஒன்று; ஏனெனில் அரபுலக்கு ஒரு தெளிவான இலக்கு கிடையாது மேலும் அரபு நாடுகள் மத்தியில் ஒரு ராணுவ கூட்டணியை அமைக்கக்கூடிய மனோ நிலையும் கிடையாது. மாறாக, அரபு உலகு உள்முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கின்றது என்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாடும் சிரியா, லிபியா, யெமென் ஈராக் மற்றும் பாலஸ்தின் பிரச்சினைகளில் சுயநல சிந்தனையுடனேயே செயல் படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜியங்கள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் கட்டார் அரசு உடன்படுவதாய் இல்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கட்டார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடி தீர்க்கப்படாதுள்ளது என்றும் மத்திய கிழக்கில் கூட்டணி அமைக்கும் அமெரிக்க திட்டம் தோல்வியையே தழுவும் என்றும் குறிப்பிட்டார். 

ஜோர்தானிய ஆய்வாளர் கூறுகையில், 'அரபு நாடுகளுக்கிடையில் தீர்க்கப்படாத ஏராளமான பிரச்சினைகள் இருக்கையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயத்திலும் முரண்படும் நாடுகளை ஒன்றிணைத்து, கூட்டணி அமைப்பது முடியாத காரியம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் ஈரான் எதிர்ப்பு அரபு-நேட்டோ அமைக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஆயினும் கட்டார், குவைத் மற்றும் ஓமான் ஈரானுடன் நல்லுறவைப் பேணி வருகின்றன. எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு வளர்ந்துவரும்  ஈரானின் செல்வாக்கைப் பற்றி கவலையில்லை. அவற்றின் முன்னுரிமை வெளியுறவு கொள்கை அரேபிய-இஸ்ரேலிய பிரச்சினையை மையப்படுத்தியதாக உள்ளது.


Wednesday, April 10, 2019

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் அமெரிக்காவை புதைகுழிக்குள் தள்ளிவிடும் - ஈரான் வெளிவிகார அமைச்சர்

Iran Declares U.S. Centcom a ‘Terrorist Group’


அமெரிக்க அரசு பயங்கரவாதத்தை போஷிக்கும் அரசு என்றும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவை (Centcom) பயங்கரவாத அமைப்பாகவும் ஈரான் இஸ்லாமிய குடியரசு பிரகடனப்படுத்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தியத்தைத் தொடர்ந்து, ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிநாட்டமைச்சர் ஜவாத் ஸரீப் அவர்களால் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் முன்மொழியப்பட்டதை ஏற்று இஸ்லாமிய குடியரசின் அதி உயர் தேசிய பாதுகாப்பு சபை இந்த பிரகடனத்தை செய்துள்ளது.


பிராந்தியத்தில் பயங்கரவாத குழுக்களுக்கு அமெரிக்க இராணுவப் படைகள் இரகசிய ஆதரவு வழங்கி வருவதையும் பயங்கரவாத செயல்களில் நேரடியாக ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டி, அமேரிக்க ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் நடவடிக்கைகளையும் வெளிநாட்டமைச்சர் ஸரீப் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். 

அமெரிக்க பொருளாதாரத் தடைக்கு பதிலளிக்கும் முகமாக இஸ்லாமிய குடியரசின் மஜ்லிஸ், 2017ம் ஆண்டு ஈரானின் ஏவுகணை திட்டத்துக்கும் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பாதுகாப்பு பொறிமுறைக்கும் அமோக ஆதரவை வழங்கியது.

கடந்த ஞாயிறன்று (7/04/2019) ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், வாஷிங்டன் இஸ்லாமிய புரட்சிக் காவலர்களை பயங்கரவாதிகள் என பிரகடனப்படுத்தினால், ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக அதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


"எமது காவல்படையினருக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் தகுந்த விடையளிப்போம்" என்று உறுதிப்படைக் கூறினர். "இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளை உருவாக்குவதும் அவர்களுக்கு துணை போகிறவர்களும் அமெரிக்க தலைவர்களே; அவர்களது முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்காக நிச்சயமாக அவர்கள் வருந்துவர்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் பாதுகாப்புப் படையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரையிடும் முதல் முட்டாள்தனத்தை டிரம்ப் செய்துள்ளார். கடந்த ஆண்டு 2015 செய்துகொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டு ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சியின் பின்னர் நிறுவப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ஐ.ஆர்.ஜி.சியின் நிதிச் சொத்துக்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நீதித்துறைத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யத் இப்ராஹிம் ரயீஸி, இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக அமெரிக்காவினால் முன்னர் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் போலவே இதுவும் தோல்வியடையும் என்று குறிப்பிட்டார்.

"உலகில் பயங்கவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பதோடு ஆயுத கலாசாரத்தை உருவாக்கும் ஒரு நாடு, மக்களுக்கு உதவுவதற்கும் இஸ்லாமிய இயக்கங்களை பாதுகாப்பதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கின்ற பிறிதொரு நாட்டின் அதிகாரபூர்வமான ஆயுதப்படையை பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிடுகின்றது. உலக நாடுகள் மத்தியில், அரசுகளின் பார்வையில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு மதிப்பும் கிடையாது" என்றும் இப்ராஹிம் ரயீஸி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் இரத்தக் கறைபடிந்த சரித்திரத்தை நன்கு அறிந்திருக்கும் உலக மக்கள் எமது உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் பதில் நடவடிக்கையினை நிச்சயமாக ஏற்றுக்கொள்வர் என்றும் ஆயத்துல்லாஹ் ரயீஸி கூறினார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்போ மற்றும் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதியின் உள்வட்டத்தில் இணையுமுன்னரே ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துவந்துள்ளனர். இவர்கள் இஸ்லாமிய ஈரானின் எதிரிகள் என்பது தெளிவு.

"உண்மையில், அவர்கள் அமெரிக்காவை ஒரு புதை குழிக்குள் தள்ளிவிட முற்படுகின்றனர். இதனால் ஏற்படும் பேரழிவை ட்ரம்பம் நன்றாக அறிந்திருக்க வேண்டும்" என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஸரீப் ஞாயிறன்று தனது ட்வீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் எம்மை "பயங்கரவாத அமைப்பு" என்று பெயரிட்டால் எமது செயல்திட்டத்தில் அதுபோன்ற மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஆர்.ஜி.சி யின் தலைமைத் தளபதி ஞாயிறன்று எச்சரித்தார்.

"அமெரிக்கர்கள் இத்தகைய மட்டரக நடவடிக்கைகளை எடுத்தால், நமது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்றால், ஈரானின் இஸ்லாமிய நடைமுறைக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்." என்று மேஜர் ஜெனரல் முஹம்மத் அலி ஜபரி கூறினார்.

ஈரானிய ஆயுதப் படைகளின் ஒரு பிரிவான ஐ.ஆர்.ஜி.சி 1980-1988 ஆண்டுகளில் சத்தாமினால் திணிக்கப்பட்ட யுத்தத்தில் நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்கைக் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு தசாப்தங்களாக, ஐ.ஆர்.ஜி.சி இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான, எதிரிகளால் உந்தப்பட்ட சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அது கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கூட தீவிர பங்களிப்பை செய்துவருகிறது.

ஈரானில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் முக்கிய அமைப்பாக IRGCயின் குத்ஸ் படைப்பிரிவு இருந்து வருகிறது.  ஈராக் மற்றும் சிரியாவில் தாயெஸ் மற்றும் ஏனைய பயங்கரவாதிகளை ஒழிப்பதிலும் அது முக்கிய பங்கு வகித்தது.

பல அரசியல் ஆய்வாளர்களின் பார்வையாளர்கள் தக்பீரி பயங்கரவாதிகள் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகிறார்கள்; இது முஸ்லீம் நாடுகளை பலவீனப்படுத்தி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியின் நலன்களை காக்கும் அமைப்பாகும்.

ஐ.ஆர்.ஜி.சி இந்த பிராந்தியத்தில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பு என்பதை நிரூபித்துள்ளது. இதனை முன்னுதாரமாகக் கொண்டு, பல பிரபலமான போராளி குழுக்கள் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பிரசன்னத்துக்கும் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் எதிராக உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 7, 2019

அறியாமை எனும் இருள் போக்கி, அறிவுக்கண்ணை திறக்க "ஓதுவீராக" என்ற வசனம் இறங்கிய நாளே "மப்'அஸ்"


Mab'Ath Festival in Iran 

ஈரான் இஸ்லாமிய குடியரசில் பண்டிகைகளுக்கு பஞ்சமில்லை. தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் கலாசார பண்டிகைகள், இஸ்லாமிய சன்மார்க்கத்துடன் தொடர்புபட்ட பண்டிகைகள் என ஏராளமான உயிரோட்டமிக்க பண்டிகைகளை காணலாம்.

சன்மார்க்கத்துடன் தொடர்புபட்ட பண்டிகைகளாக நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், ரசூலுல்லாஹ் பிறந்த தினம், ரசூல் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலீ (ரலி) அவர்களை வலீயாக நியமித்த தினம் மற்றும் மப்'அஸ் தினம். இவற்றில் முதல் மூன்று தினங்களும் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் தினங்களாகும்.

இதற்கு மேலதிகமாக ஷீ'ஆ முஸ்லிம்கள் நபி முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு புனித குர்'ஆனின் முதல் வசனம் அருளப்பட்ட தினத்தையும் இஸ்லாமிய சரித்திரத்தில் முக்கியமான தினமாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தை "மப்'அஸ்" அவர்கள் அழைக்கின்றனர்.

இத்தினத்தை சிலர் பி'ஸாத் என்றும் அழைக்கின்றனர். முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு தூதின் முதலாவது வசனத்தை அருளி, மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் பொறுப்பை ஒப்படைத்த தினமே மப்'அஸ் அல்லது பி'ஸாத் என்றழைக்கப்படுகிறது.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது 40 வயதை அடைகையில், மக்காவுக்கு அருகில் உள்ள ஜபலுன் நூர் மலையின் ஹிரா குகையில் இறை தியானத்தில் அடிக்கடி ஈடுபடுபவராக இருந்தார். அவ்வாறான ஒரு தினத்திலேயே சூரா "அலக்"கின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டன. ஹிஜ்ரத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன் ரஜப் மாதம் 27ம் நாள் இது நிகழ்ந்தது என்பது ஷீ ஆக்களின் நம்பிக்கை.


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சிறுபராயம் முதலே சிலை வழிபாடுகாளை வெறுப்பவராகவே இருந்தார். கூடிய நேரங்களை தனிமையிலும் தியானத்திலும் கடத்தி வந்தார். அவருக்கு வஹீ இறக்கப்படுவதற்கு முன்னரே அதனை சுமக்கும் பக்குவம் அவரில் ஏற்பட்டு இருந்தது.


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் இந்த தூதுத்துவப் பணி  ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த பெரும்பாலானோர் சிலை வணங்கிகளாகவும் மற்றும் சிலர் முன்னைய வேதங்களை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவ பணியை ஆரம்பித்த பின் மக்கள் சிறிது சிறிதாக இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹிஜ்ரி 10ம் ஆண்டளவில் இஸ்லாம் விரிவடைந்து, ஹிஜாஸ் பிரதேசத்தில் இருந்து சிலைவணக்கம் முற்றாகவே ஒழிக்கப்பட்டு, ஏக இறைவணக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.


அனுப்புதல் என்ற அரபு வார்த்தை (ب ع ث)யின் மூலத்தைக் கொண்ட சொல்லே மப்'அஸ் ஆகும். இந்த சொல், குறிப்பாகஅல்லாஹ்வினால், ஒரு தூதர், மக்களுக்கு வழிகாட்டியாக  அனுப்பப்படுவதைக் குறிக்கிறது. முதன்மையாக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. நபித்துவம் ஆரம்பிப்பது முதல் வசனம் அருளப்பட்டதில் இருந்தா அல்லது பகிரங்கமாக இஸ்லாத்தின் பால் அழைப்புவிடுக்கக் கட்டளையிடப்பட்டதில் இருந்தா என்பது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.

இந்த சம்பவமும் இடமும் இஸ்லாமிய சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதன் காரணமாக ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் இந்த இடத்தை தர்சிக்காது திரும்புவதில்லை.

ஜபலுன் நூர் மலையில் அமைத்துள்ள "ஹிரா" குகை; புனித குர் ஆனின் முதலாவது வசனம் அருளப்பட்ட இடம்.


 முதலில் அருளப்பட்ட புனித வசனங்கள்:
"(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. அலக்என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்". (96/1-5)

ஜிபிரீல் (அலை) அவர்கள் மப்'அஸ் தினத்திலேயே றஸூலுல்லாஹ்வின் முன் தோன்றிதூதை முன்வைத்தார்கள். இந்த மாபெரும் பொறுப்பு சுமத்தப்பட்ட றஸூலுல்லாஹ்வின் உடல் நடுக்கம் கண்டது. வீட்டுக்குச் சென்று தனதருமை மனைவி கதீஜா (ச.அ.) அவர்களிடம் "என்னை போர்த்துங்கள்என்னை போர்த்துங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. (74:13)
என்ற வசனம் அருளப்பட்டது.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இந்த செய்தியை முதன் முதலில் தனது மனைவியாரான கதீஜா ஸலாமும் அலைஹா அவர்களிடமும் தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மகனும் தனது உடன்பிறவா சகோதருமான அலீ (அலை) அவர்களிடமும் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அதனை நம்பிக்கைக்கொண்டு, முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, அபூபக்கர் (ரலி) அவர்கள் உட்பட ஒரு சில ஸஹாபாக்கள் றஸூலுல்லாஹ்வின் தூதுத்துவ அந்தஸ்தை ஏற்றுக்கொண்டு, இரகசியமாக மார்க்க நடவடிக்கைகளை செயற்படுத்தி வந்தனர். முதல் மூன்று வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் பொதுமக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கவில்லை.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 
"இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" (26:214) என்ற வசனம் அருளப்படுகிறது.

இதிலிருந்து அவரது அழைப்புப் பணி தனது உறவினர்களை அழைப்பதன் மூலம் ஒரு இன்னுமொரு மைல்கல்லை அடைந்தது.

அதே வருடத்தில்
"எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்!" (15:94) என்ற இறை கட்டளை கிடைக்கப் பெறுகிறது.

இந்த வசனம்  அருளப்பட்ட பின்னர், றஸூலுல்லாஹ்வின் அழைப்புப் பணி பகிரங்கமானது முதன்முறையாக, நபிகளார் (ஸல்) அவர்கள் தனது தெய்வீக அழைப்பை பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த இறைவசனம் தூதுத்துவத்தையும் அதன் ஆன்மீகப் பிணைப்பை வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது. நபி (ஸல்) அவர்களிடம் இறைவனால் வழங்கப்பட்ட ஒரு முழுமையான உறுதிமொழி இந்த செயல்முறையின் விளைவாகும்.

இதனைக் கேட்ட அபு லஹபும் மற்றும் தம்மை உயர் குலத்தார் என்று கருதி வந்த சில அரபிகளும் நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்தனர். றஸூலுல்லாஹ்வின் சிறிய தந்தை அபு தாலிப் நபி (ஸல்) அவர்களுக்குத் துணையாக இருந்து வந்தார்.

அறியாமை எனும் இருள் போக்கி, அறிவுக்கண்ணை திறக்க "ஓதுவீராக" என்ற வசனம் இறங்கிய நாளே "மப்'அஸ்".

நபித்துவத்தின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் உலகையே மாற்றியமைக்கும் உன்னதமான செய்தியினை பெற்ற ஆரம்ப நாளான மப்'அஸ் தினம் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தினமேயாகும்.