Contributors

Sunday, April 7, 2019

அறியாமை எனும் இருள் போக்கி, அறிவுக்கண்ணை திறக்க "ஓதுவீராக" என்ற வசனம் இறங்கிய நாளே "மப்'அஸ்"


Mab'Ath Festival in Iran 

ஈரான் இஸ்லாமிய குடியரசில் பண்டிகைகளுக்கு பஞ்சமில்லை. தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் கலாசார பண்டிகைகள், இஸ்லாமிய சன்மார்க்கத்துடன் தொடர்புபட்ட பண்டிகைகள் என ஏராளமான உயிரோட்டமிக்க பண்டிகைகளை காணலாம்.

சன்மார்க்கத்துடன் தொடர்புபட்ட பண்டிகைகளாக நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், ரசூலுல்லாஹ் பிறந்த தினம், ரசூல் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலீ (ரலி) அவர்களை வலீயாக நியமித்த தினம் மற்றும் மப்'அஸ் தினம். இவற்றில் முதல் மூன்று தினங்களும் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் தினங்களாகும்.

இதற்கு மேலதிகமாக ஷீ'ஆ முஸ்லிம்கள் நபி முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு புனித குர்'ஆனின் முதல் வசனம் அருளப்பட்ட தினத்தையும் இஸ்லாமிய சரித்திரத்தில் முக்கியமான தினமாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தை "மப்'அஸ்" அவர்கள் அழைக்கின்றனர்.

இத்தினத்தை சிலர் பி'ஸாத் என்றும் அழைக்கின்றனர். முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு தூதின் முதலாவது வசனத்தை அருளி, மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும் பொறுப்பை ஒப்படைத்த தினமே மப்'அஸ் அல்லது பி'ஸாத் என்றழைக்கப்படுகிறது.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது 40 வயதை அடைகையில், மக்காவுக்கு அருகில் உள்ள ஜபலுன் நூர் மலையின் ஹிரா குகையில் இறை தியானத்தில் அடிக்கடி ஈடுபடுபவராக இருந்தார். அவ்வாறான ஒரு தினத்திலேயே சூரா "அலக்"கின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டன. ஹிஜ்ரத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன் ரஜப் மாதம் 27ம் நாள் இது நிகழ்ந்தது என்பது ஷீ ஆக்களின் நம்பிக்கை.


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சிறுபராயம் முதலே சிலை வழிபாடுகாளை வெறுப்பவராகவே இருந்தார். கூடிய நேரங்களை தனிமையிலும் தியானத்திலும் கடத்தி வந்தார். அவருக்கு வஹீ இறக்கப்படுவதற்கு முன்னரே அதனை சுமக்கும் பக்குவம் அவரில் ஏற்பட்டு இருந்தது.


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் இந்த தூதுத்துவப் பணி  ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த பெரும்பாலானோர் சிலை வணங்கிகளாகவும் மற்றும் சிலர் முன்னைய வேதங்களை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவ பணியை ஆரம்பித்த பின் மக்கள் சிறிது சிறிதாக இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹிஜ்ரி 10ம் ஆண்டளவில் இஸ்லாம் விரிவடைந்து, ஹிஜாஸ் பிரதேசத்தில் இருந்து சிலைவணக்கம் முற்றாகவே ஒழிக்கப்பட்டு, ஏக இறைவணக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.


அனுப்புதல் என்ற அரபு வார்த்தை (ب ع ث)யின் மூலத்தைக் கொண்ட சொல்லே மப்'அஸ் ஆகும். இந்த சொல், குறிப்பாக, அல்லாஹ்வினால், ஒரு தூதர், மக்களுக்கு வழிகாட்டியாக  அனுப்பப்படுவதைக் குறிக்கிறது. முதன்மையாக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. நபித்துவம் ஆரம்பிப்பது முதல் வசனம் அருளப்பட்டதில் இருந்தா அல்லது பகிரங்கமாக இஸ்லாத்தின் பால் அழைப்புவிடுக்கக் கட்டளையிடப்பட்டதில் இருந்தா என்பது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.

இந்த சம்பவமும் இடமும் இஸ்லாமிய சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளதன் காரணமாக ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் இந்த இடத்தை தர்சிக்காது திரும்புவதில்லை.

ஜபலுன் நூர் மலையில் அமைத்துள்ள "ஹிரா" குகை; புனித குர் ஆனின் முதலாவது வசனம் அருளப்பட்ட இடம்.


 முதலில் அருளப்பட்ட புனித வசனங்கள்:
"(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்". (96/1-5)

ஜிபிரீல் (அலை) அவர்கள் மப்'அஸ் தினத்திலேயே றஸூலுல்லாஹ்வின் முன் தோன்றி, தூதை முன்வைத்தார்கள். இந்த மாபெரும் பொறுப்பு சுமத்தப்பட்ட றஸூலுல்லாஹ்வின் உடல் நடுக்கம் கண்டது. வீட்டுக்குச் சென்று தனதருமை மனைவி கதீஜா (ச.அ.) அவர்களிடம் "என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக. (74:13)
என்ற வசனம் அருளப்பட்டது.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இந்த செய்தியை முதன் முதலில் தனது மனைவியாரான கதீஜா ஸலாமும் அலைஹா அவர்களிடமும் தனது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களின் மகனும் தனது உடன்பிறவா சகோதருமான அலீ (அலை) அவர்களிடமும் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அதனை நம்பிக்கைக்கொண்டு, முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, அபூபக்கர் (ரலி) அவர்கள் உட்பட ஒரு சில ஸஹாபாக்கள் றஸூலுல்லாஹ்வின் தூதுத்துவ அந்தஸ்தை ஏற்றுக்கொண்டு, இரகசியமாக மார்க்க நடவடிக்கைகளை செயற்படுத்தி வந்தனர். முதல் மூன்று வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் பொதுமக்களை இஸ்லாத்தின்பால் அழைக்கவில்லை.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 
"இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" (26:214) என்ற வசனம் அருளப்படுகிறது.

இதிலிருந்து அவரது அழைப்புப் பணி தனது உறவினர்களை அழைப்பதன் மூலம் ஒரு இன்னுமொரு மைல்கல்லை அடைந்தது.

அதே வருடத்தில்
"எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்!" (15:94) என்ற இறை கட்டளை கிடைக்கப் பெறுகிறது.

இந்த வசனம்  அருளப்பட்ட பின்னர், றஸூலுல்லாஹ்வின் அழைப்புப் பணி பகிரங்கமானது முதன்முறையாக, நபிகளார் (ஸல்) அவர்கள் தனது தெய்வீக அழைப்பை பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த இறைவசனம் தூதுத்துவத்தையும் அதன் ஆன்மீகப் பிணைப்பை வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது. நபி (ஸல்) அவர்களிடம் இறைவனால் வழங்கப்பட்ட ஒரு முழுமையான உறுதிமொழி இந்த செயல்முறையின் விளைவாகும்.

இதனைக் கேட்ட அபு லஹபும் மற்றும் தம்மை உயர் குலத்தார் என்று கருதி வந்த சில அரபிகளும் நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்தனர். றஸூலுல்லாஹ்வின் சிறிய தந்தை அபு தாலிப் நபி (ஸல்) அவர்களுக்குத் துணையாக இருந்து வந்தார்.

அறியாமை எனும் இருள் போக்கி, அறிவுக்கண்ணை திறக்க "ஓதுவீராக" என்ற வசனம் இறங்கிய நாளே "மப்'அஸ்".

நபித்துவத்தின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் உலகையே மாற்றியமைக்கும் உன்னதமான செய்தியினை பெற்ற ஆரம்ப நாளான மப்'அஸ் தினம் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தினமேயாகும்.


Wednesday, March 27, 2019

இஸ்லாமிய குடியரசினால் எந்த எதிரியையும் தோற்கடிக்க முடியும் – இமாம் காமனே


Islamic Republic can defeat any enemy - Imam Khamene'i

"அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள் முதல் தர முட்டாள்கள்; அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஈரானிய மக்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி, அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். 2019 ஆம் ஆண்டை தெஹ்ரானில் கொண்டாடுவோம் என்று கிறுக்குத்தனமாக உளறிக் கொட்டினார்கள் அமெரிக்க அதிகாரிகள். ஈரானுக்கு எதிரான திட்டங்கள் அனைத்திலும் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது" என்று கூறினார் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே.
பாரசீக புத்தாண்டையொட்டி இம்மாதம் 21ம் திகதி மஷ்ஹத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இமாம் காமனே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் “இந்த ஆண்டு அச்சுறுத்தல்களுக்கும் சோதனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய ஆண்டு என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.  ஆனால் நான் அவ்வாறு நம்பவில்லை. கடந்த ஆண்டும் இவ்வாறே கூறினர். அது பொய்த்துப் போனது. நிச்சயமாக இவ்வாண்டு வாய்ப்புகளுக்குரிய ஆண்டாகவும் அல்லாஹ்வின் அருளால் உற்பத்தி பெருகி, வெற்றிக்குரிய ஆண்டாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்”, என்று தெரிவித்தார்.

“எதிரிகளின் பிரச்சாரத்தால் பாதிப்புக்கு உள்ளாகி, எதிர்மறையாகப் பேசும் உள்நாட்டவர் சிலரும் இருக்கவே செய்கின்றனர். ஏதோ விபரீதம் நடக்கவுள்ளது போன்று அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ, அவர்கள் எதிரிகளின் பிரச்சாரத்தின் செல்வாக்குக்கு ஆளாகி உள்ளனர். இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான சக்திகள், அவர்கள் செய்யும் மற்ற காரியங்களுக்கு மேலதிகமாக, ஒரு உளவியல் போரிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதான் அவர்களது வழிமுறை. ஈரானிய மக்களை அச்சுறுத்த கடந்த ஆண்டும் இதைத்தான் செய்தனர்”.
“அமெரிக்க கொள்கைவகுப்பாளர்கள் முதல் தர முட்டாள்கள்; அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் ஈரானிய மக்கள் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்கள். 2019ம் ஆண்டை தெஹ்ரானில் கொண்டாடுவோம் என்று கிறுக்குத்தனமாக உளறிக்கொட்டினார்கள் அமெரிக்க அதிகாரிகள். ஈரானுக்கு எதிரான திட்டங்கள் அனைத்திலும் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது”, என்றும் இமாம் காமனே தெரிவித்தார்.

ஈரானின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா அளித்த தவறான பகுப்பாய்வை இமாம் காமனே சுட்டிக்காட்டியதோடு, இந்த மோசமான பகுப்பாய்விற்கு காரணம் பற்றி விரிவாக விளக்கினார்: உண்மையிலேயே பகுப்பாய்வு செய்த அவர்களுக்கு பிராந்தியத்தினதும் எமது நாட்டினதும் நடப்புகள் பற்றிய அறிவில்லையா? இத்தகைய பகுப்பாய்வுகளை அவர்கள் தீவிரமாக கருதுகிறார்களா அல்லது இது அவர்களின் முட்டாள்தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடா? அல்லது இந்த பகுப்பாய்வுகள் உலகளவிலான அவர்களது உளவியல் போரின் ஒரு பகுதியா? அல்லது உலகம் முழுவதுமான அவர்களது இந்த தீய பிரச்சாரம் வன்மத்தின் வெளிப்பாடா? என்பது எனக்குப் புரியவில்லை. இது முட்டாள்தனம் வன்மம் ஆகிய இரண்டாகவும் இருக்கலாம்.
இன்று, இஸ்லாமிய குடியரசினால் எந்த எதிரியையும் எதிர்த்துப் போராடி, அவர்களை தோல்வியுறச் செய்ய முடியும் என்பதை நமது எதிரிகள்  அறிவார்கள்.

இமாமவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக தொடரும்  பொருளாதார மற்றும் உளவியல் போர்களை பற்றி விளக்குகையில்: “இன்று எமது எதிரிகள் எமக்கு எதிராக ஒரு பொருளாதார போரில் ஈடுபட்டிருக்கின்றனர். எதிரிகள் எமக்கு ஏதிராக போர் தொடுத்துள்ளனர் என்பது  இப்போது அனைவருக்கும் தெரியும்; எமது அதிகாரிகளும் அதனை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.  ஆயுதங்களைக் கொண்டுதான் யுத்தங்கள் இடம்பெற வேண்டும் என்பதில்லை. போர் பொருளாதார விவகாரங்களிளிலும்  காணப்படலாம். அறிவார்ந்த மோதலும் ஒரு போர் தான். இந்த வகையான போர் சில நேரங்களில் இராணுவப் போரைவிட ஆபத்தானது. இந்த யுத்தத்தில் எதிரிகளை நாம் தோற்கடிக்க வேண்டும்; அல்லாஹ்வின் கிருபையால் அவர்களை நாம் நிச்சயம் தோற்கடிப்போம். ஆனால் இது போதாது. அரச அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் பொது துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்  எதிரிகளின் சதித்திட்டங்களை தோற்கடிப்பது மட்டுமல்லாது, எதிரிகளை நெருங்கவிடாது விரட்டியடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பர்”, என்றும் தெரிவித்தார்.

“எதிரிகள் எமது நாட்டின் பொருளாதாரத்தைத் சீர்குலைக்க முடியாதவாறு ஈரான் ஒரு தடுப்பு நிலையை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது எம்மால் முடியும். நாம் ராணுவத்துறையில் பலம் பெற்றது போன்று இதுவும் சாத்தியமே. எதிரி எமது நகரங்களை குண்டு வீசி தாக்கும்போது எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது நாம் எமக்கு அவசியமான சாதனங்களை உருவாக்கியுள்ளோம்; எமது எதிரியை இலக்கு தவறாமல், துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை கொண்டுள்ளோம் என்பது எமது எதிரிகளுக்கும் தெரியும்.
“சவுதி அரேபியாவின் நிலை பற்றி குறிப்பிடுகையில் இம்மாமவர்கள் சவுதியைப் போன்ற ஒரு மோசமான அரசு முழு பிராந்தியத்திலும் இருக்க முடியாது; முழு உலகத்திலேயும் இருக்குமா என்பது சந்தேகமே. அது ஒரு கொடுங்கோன்மைமிக்க,  சர்வாதிகார, ஊழல் மிகுந்த ஒட்டுண்ணி அரசு. அந்த அரசுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கப் போகிறார்களாம்; அணு உலை ஒன்றை அமைக்கப் போகிறார்களாம். சவுதி அணு உலை உருவாக்குவது பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை. சவூதி அரசு மிக குறுகிய காலத்தில் வீழ்ச்சிடையும் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் ஏவுகணை உற்பத்தி பிரிவுகளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களது ஆட்சியின் நீட்சியே ஆயுதங்களில் தான் தங்கியுள்ளது. இவை பற்றியெல்லாம் நான் கவலைப்படமாட்டேன், ஏனென்றால் மிக விரைவில் அந்த நாடு, அல்லாஹ்வின் உதவியால், இஸ்லாமிய வீரர்களின் கைகளில் வீழும் என்று எனக்குத் தெரியும்”.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அண்மையில் நியூஸிலண்ட் கிறைஸ்ட்சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட பயங்கவாத தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், மேற்கத்தேய ஊடகங்களின் இரட்டை வேடத்தை கண்டித்தார். “பல முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயலாக இந்த ஊடகங்களுக்குத் தெரியவில்லையா...? என்றும் கேள்வி எழுப்பினார். எந்தவோர் ஐரோப்பிய அரசியல்வாதியும் சரி அவர்களது ஊடகங்களும் சரி இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கூற வில்லை. அவர்கள் அதற்கு பதிலாக அவர்கள் ஓர் ஆயுத தாக்குதல் என்றுதான் குறிப்பிட்டனர். மேற்குலகு ஆதரிக்கும் எவருக்காவது ஏதும் நேர்ந்தால், அதனை எதிர்த்து, பயங்கவாதம், மனித உரிமை என்றெல்லாம் கூக்குரலிடுவார்கள். அவர்கள் இப்படித்தான்” என்றும் தெரிவித்தார் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே.

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் ஐ.நா.பாதுகாப்பது சபை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட அணு செரிவாக்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் அமேரிக்கா வெளியேறியது தொடர்பாக ஐரோப்ப்பிய நாடுகள் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தை மதிக்கவேண்டிய கடமை, ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் இந்த ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கடமையை சரியாகச் செய்ய தவறிவிட்டன என்றும் இமாம் குறிப்பிட்டார். 

Friday, March 22, 2019

இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் பாரசீக புத்தாண்டு "நொவ்ரூஸ்"


International Day of Nowruz


பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தன; அதிலொன்றுதான் வசந்த காலத்தின் முல் நாளைக் கொண்டாடும் நொவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் 'தனித்துவமான ஈரானிய பண்புகளுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன.


மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால்  "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக ஒரு பூர்வீக பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மற்றும்  நாடுகளுக்கு இடையேயான சமாதானம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

featured-image-index un.org

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின் வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள், பசும் புல், கோதுமை பண்டம், சிவப்பு வகை பெர்ரி,  பூண்டு,  விணாகிரி மற்றும் நாணயம் அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர் ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.


"சால்-தஹ்வில்" எனும் புது வருடம் பிறக்கும் உரிய தருணத்தில், ஒன்றுகூடியுள்ள குடும்பத்தவர்கள் இஸ்லாமிய முறைப்படி முசாபஹா (ஆரத்தழுவுதல்) செய்துகொள்வர். வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்வர். மூத்தவர்கள் இளையவர்களுக்கு கைவிசேடமும் பரிசில்களும் கொடுத்து மகிழ்வர்.

புதிய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் கோதுமை அல்லது பயறை புத்தாண்டன்று கழுவி ஒரு தட்டில் உலர்த்த வைப்பர். புது வருடத்தின் 13ம் நாளன்று தட்டில் முளைவிட்டிருக்கும் பயறை முற்றத்தில் கொட்டிவிடுவர். ஒரு சில நேரங்களில் பொன் மீன்கள் (மிக எளிதாக கிடைக்கக்கூடிய விலங்கு) ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும். பண்டிகை கால முடிவில் சிலர் அம்மீன்களை நதியில் விட்டுவிடுவர்; சிலர் அலங்கார மீன் தொட்டிகளில் இட்டு வளர்ப்பர்.



வீட்டு வைபவங்கள் நிறைவடைந்ததும் ஆரம்ப சில நாட்களில்  குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது வீடுகளுக்குச் சென்று அன்பை பரிமாறிக்கொள்வர். வீட்டிலுள்ள சிறுவர்களுக்காக பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து குதூகலிப்பார்கள். சிறப்பு உணவு மற்றும் "ஆஜில்" (திராட்சைகள் பாதாம் பிஸ்தா போன்ற பல்வேறு விதைகள் மற்றும் பிற இனிப்பு பொருட்களை கொண்ட ஒரு கலவை) பரிமாறப்படும். நிறைய பழங்கள் சாப்பிடுவார்கள். மாதுளைக்கு முக்கிய இடமுண்டு.

புத்தாண்டுக்கு முன் இரவில், புகையூட்டிய மற்றும் புதிதாக வறுத்த மீனுடன் பரிமாறப்படும் "சப்ஸி போலோ மஹி" - புதிய மூலிகைகளுடன்  சமைக்கப்படும் சோறு - ஈரானியர்களுக்கு ஒரு சிறப்பு உணவாகும். அது அவர்களின் பாரம்பரியமுமாகும். இடத்துக்கிடம் இந்த பாரம்பரியம் மாறக்கூடும். பிராந்திய வேறுபாடுகளும் உள்ளன. ஆயினும் மிகவும் வண்ணமயமான விழாக்கள் எங்கும் காணப்படும்.


புதிய ஆண்டின் 13 வது நாள் "சிஸ்தாஹ்  பெடார்" என்று அழைக்கப்படுகிறது. ஈரானியர்கள் இத்தினத்தை பெரும்பாலும் வெளிப்புறங்களில் மற்றும் சுற்றுலாக்களில் கழிப்பர். ஒரு உற்சாகமான உல்லாச பொழுதுபோக்குக்காக பூங்காக்களுக்கு அல்லது உள்ளூர் சமவெளிகளில் நாளைக் கழிக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்வார்கள். இயற்கையுடன் காலத்தை செலவழிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.


இந்த சிஸ்தாஹ் பெடாருக்காக, சிறுவர்கள் ஏங்கிக்கிடப்பார்கள். விடுமுறை நாட்களில் மிகவும் பிரபலமான நாள் இந்த நாளாகும். இந்நாளில் சிறுவர்களின் குதூகலத்துக்குக் குறைவே இருக்காது!



- - தாஹா முஸம்மில்