Enhancing mental strength through physical strength - Pahlevani and Zourkhaneh Iranian cultures
உடல் வலிமை மூலம் உள வலிமையை மேம்படுத்தும் ஈரானிய பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே கலாச்சாரம்
ஏழாயிரம் ஆண்டுகள் பழமையான
வரலாற்றை கொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசின் பண்டைய வேர்களின்
ஒன்றான பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே (Pahlevani and Zourkhaneh) என்று
அறியப்படுகின்ற சடங்குகள் ஓர் பாரம்பரிய மல்யுத்தத்திற்கு
ஒப்பான வீர விளையாட்டுகளாகும். ஈரானில் போர்வீரர்களைப் பயிற்றுவிக்க
பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய தடகள அமைப்பு மற்றும் தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமாக
இச்சடங்குகள் கருதப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் (UNESCO) மனிதகுலத்தின் அரிதான
கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்ட பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே
சடங்குகள் என்பது பண்டைய பாரசீக விளையாட்டான வர்சேஷ்-இ-பஸ்தானி (Warzeŝe Bāstāni) என்று அறியப்படுகிறது, இது "பண்டைய விளையாட்டு" என்று பொருள்படுகிறது.
தற்காப்புக் கலைகள், வலிமைப் பயிற்சிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்ற
இவ்விளையாட்டு, ஈரானின் இஸ்லாமிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு
முன்னரே பிரபல்யமடைந்திருந்ததாக வரலாறு கூறுகிறது. பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே
எனும் இக்கலாச்சார பாரம்பரியம் இன்றளவிலும் ஈரானில் தொடர்கிறது. பஹ்லேவானி எனும் இவ்விளையாட்டு
வீரர்கள் வாள்கள்,
கேடயங்கள் மற்றும்
வில் போன்ற புராதன ஆயுதங்களுக்கு ஒத்த கருவிகளைப்
பயன்படுத்துகிறார்கள்.
மேலும் பஹ்லேவானிகள் தங்கள் அறிவு மற்றும் திறன்களைப் பயிற்சி செய்வதோடு இக்கலையை அடுத்த தலைமுறையினருக்கும் பயிற்றுவிக்கின்றனர்.
1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து, புதிய ஆட்சி இஸ்லாமியத்திற்கு முன்னைய, பிறமதத்துடன் தொடர்புடைய எதையும் ஊக்கப்படுத்தாததால், பாரம்பரியமான இக்கலை அதன் பிரபலத்தை இழந்தது, இதில் ஸூர்க்கனே எனும் ஜிம்னாஸ்டிக் கலையும் அடங்கும்.
இருப்பினும், இஸ்லாமிய குடியரசு
இறுதியில் ஈரானிய பெருமை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக வர்சேஷ்-இ-பஸ்தானியை
ஊக்குவித்ததால் இக்கலை மீண்டும்
வலிமைப்பெற்றது.
பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே
ஆகிய இச்சடங்குகள் சூஃபி நடைமுறைகள்
மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கின்றன. இதில் உள்ள
நெறிமுறைகளும் சூஃபி கொள்கைகளைப் போல் இதயத் தூய்மையை வலியுறுத்துகின்றன. இச் சடங்குகளின் ஒவ்வொரு அமர்வும்
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்)
அவர்கள் மீதும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
மீதும் ஸலாத்துடனும் புகழுடனும் தொடங்குகிறது.
பண்டைய பாரசீக
மக்கள் உடல் மற்றும் மன வலிமையின் வளர்ச்சி ஆன்மீகத்தை மேம்படுத்தும் என்று நம்பினர். ஆகவே பாரம்பரியமாக இவ் விளையாட்டு உடல் வலிமை மூலம் உள வலிமையை மேம்படுத்துவதற்கான
ஒரு வழியாக நம்பப்பட்டது. இக் கலை கருணை மற்றும்
பணிவை ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது. பஹ்லவான்களின் உளத்தூய்மை,
உண்மைத்தன்மை, மற்றும் நற் குணங்கள் ஆகியவை கருத்தில்
கொள்ளப்பட்ட பின்னரே உடல் வலிமை எதிர்பார்க்கப்படுகிறது.
வர்சேஷ்-இ-பஸ்தானி அல்லது வர்சேஷ்-இ பஹ்லவானி எனும் இப் பண்டைய வீர விளையாட்டை உலக அளவில்
ஊக்குவிப்பதற்காக சர்வதேச ஸூர்க்கனே விளையாட்டு கூட்டமைப்பு (IZSF) அக்டோபர் 10,
2004 அன்று
நிறுவப்பட்டது. பஹ்லேவானிக்கான
விதிகளை ஒழுங்குபடுத்துதல், தரப்படுத்துதல்
மற்றும் சர்வதேச போட்டிகளை ஏற்பாடு
செய்வதை இவ்வமைப்பு (IZSF)
நோக்கமாகக்
கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளி
வீரர்களுக்கான பரா-ஸூர்க்கனே போட்டிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஏற்பாடு செய்வதையும் ஆரம்பித்தது. தற்போது 72 நாடுகள் IZSF
இல் உறுப்பினர்களாக
உள்ளன.
பிரபலமான
கலாச்சாரம், நாட்டுப்புற நிகழ்வுகள் மற்றும் வெளிப்புற
கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பஹ்லேவானி மற்றும் ஸூர்க்கனே கலாச்சாரம், பாரசீகத்தில் உள்ள
சமூகங்களுக்கு வலுவான அடையாள உணர்வை வழங்குவதோடு, பல ஆண்டுகளாக பஹ்லேவானிகள்
உறுதிப்பாட்டின் அடையாளமாக, சமூக ஒற்றுமையை
ஊக்குவிக்கின்ற மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
Pahlevani and zoorkhaneh rituals - Wikipedia
https://www.visitouriran.com/blog/pahlevani-and-zourkhaneh-rituals/