In Israel, Macron endorses Netanyahu’s genocidal war on Gaza
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24, 2023 ஜெருசலேமில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை வரவேற்றார். (ஏபி புகைப்படம்/கிறிஸ்டோப் ஈனா, பூல்)
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து, காஸாவில் பாலஸ்தீனியர்கள்
மீது இஸ்ரேலிய அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் தன்னை உறுதிப்படுத்திக்
கொண்டார். இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு உடனான அவரது கூட்டு
செய்தியாளர் சந்திப்பில், நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு பிரெஞ்சு இராணுவ ஆதரவை
வெளிப்படையாக உறுதியளித்தார்.
மக்ரோன் பேசியது போல, காஸா மீதான சட்டவிரோதமான, 16 ஆண்டுகால இஸ்ரேலிய முற்றுகைக்கு எதிராக அக்டோபர்
6-7 அன்று கிளர்ச்சி செய்ததற்காக பாலஸ்தீனியர்களை தண்டிக்க இஸ்ரேல் பாதுகாப்புப்
படைகள் (IDF) பாலஸ்தீனியர்கள்
மீது ஒரு இனப்படுகொலைப் போரை நடத்தி வருவதால், 7,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
மற்றும் காஸாவின் கட்டிடங்களில் கால் பகுதி தரைமட்டமாக்கப்பட்டது. நெதன்யாகுவுடனான
மூடிய கதவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மக்ரோன் இந்த இரத்தக்களரி தாக்குதலுடன் தனது
"ஒற்றுமையையும் நட்பையும்" உறுதியளிக்க கேமராக்களின் முன் வந்தார்.
பின்னர் மக்ரோன் பிரான்ஸ் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளை மத்திய கிழக்கு
முழுவதும் ஒரு பாரிய விரிவாக்கத்தில் ஈடுபடுத்த அழைப்பு விடுத்தார். "ஈராக்
மற்றும் சிரியாவில் எங்கள் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்திய இஸ்லாமிய
அரசுக்கு எதிரான சர்வதேச கூட்டணியும் ஹமாஸை எதிர்த்துப் போராட வேண்டும்"
என்று அவர் முன்மொழிந்தார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஈரானிய ஆட்சி மற்றும் யேமனில் உள்ள ஹவுத்தி போராளிகள்
காஸாவுக்கு ஆதரவாக ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது ஒரு "பிராந்திய மோதலுக்கு"
வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
மக்ரோன் முன்மொழிந்தது காஸாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அனைத்து முக்கிய
நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டணியால் தொடுக்கப்படும் ஒரு நவகாலனித்துவப்
போர் ஆகும். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, கனடா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகள் இக்கூட்டணியில் இணைந்தன.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் போரின் பின்னணியிலும், 2003-2011 ஈராக்கில்
அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பின் போது அமைக்கப்பட்ட நவகாலனித்துவ ஈராக்கிய
கைப்பாவை ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவும் அது நகரங்கள், சிவிலியன் இலக்குகள் மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்)
போராளிப் பிரிவுகள் மீது குண்டுவீசித் தாக்கியது.
மக்ரோனின் முற்றிலும் பொறுப்பற்ற கருத்துக்கள், நேட்டோ மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு முழு அளவிலான
போரில் இணையும் என்ற உறுதிமொழிக்கு சமமானதாகும். நேட்டோ ஏற்கனவே உக்ரேனில்
ரஷ்யாவுடன் போரில் இருக்கும் நிலையில், இது ஒருபுறம் நேட்டோ கூட்டணிக்கும் மறுபுறம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவிற்கும்
இடையே உலகளாவிய அளவில் ஒரு நேரடி இராணுவ மோதலை விரைவாக தூண்டக்கூடும்.
மக்ரோன் பேசியபோது, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகளுக்கும் வடக்கு இஸ்ரேலில்
ஐ.டி.எஃப் துருப்புக்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைகள் அதிகரித்தன, மேலும் எல்லையின் இருபுறமும்
உள்ள கிராமங்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. ஹிஸ்புல்லா "முழுமையான தயார் நிலையில் உள்ளது" என்றும், அதைத் தடுக்க இரண்டு விமானம் தாங்கி போர்க் குழுக்களை
பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை
அனுமதிக்காது என்றும் அதன் இரண்டாவது தலைமை அதிகாரி நைம் காசிம் கூறினார். ரஷ்ய
மற்றும் ஈரானிய இராணுவப் படைகள் இருக்கும் சிரியாவில் இலக்குகள் மீது ஐ.டி.எஃப்
வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
கடந்த வாரம், ஈரானிய உச்ச தலைவர் ஆயத்துல்லா செய்யிதலி காமனெய், காஸாவுடனான
இனப்படுகொலை இஸ்ரேலிய
போரை தொடர்ந்து தீவிரப்படுத்துவது மத்திய கிழக்கு நாடுகள் போரில் பரந்த அளவில்
நுழைவதைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூறினார்,
"சியோனிச [இஸ்ரேலிய]
ஆட்சியின் குற்றங்கள் தொடர்ந்தால், முஸ்லிம்களும் எதிர்ப்பு சக்திகளும் பொறுமையிழந்து
போவார்கள், அவற்றை
யாராலும் தடுக்க முடியாது ... காஸா மீதான குண்டுவீச்சு உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும்.
கடந்த வாரம், ஐக்கிய
நாடுகள் சபையில், அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன், ஹமாஸை ஆதரிப்பதற்கான எந்தவொரு ஈரானிய இராணுவ
நடவடிக்கைக்கும் எதிராக அமெரிக்க படைகள் "விரைவாகவும் தீர்க்கமாகவும்"
தலையிடும் என்று உறுதியளித்தார். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட
அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் எண்ணெய் தொழில்துறை மீது வான்வழித் தாக்குதல்களை அச்சுறுத்தியுள்ளனர். இது
ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நேட்டோ மோதலுக்கான வாய்ப்பை நேரடியாக அதிகரிக்கிறது, இது 2021 இல் ஈரானுடன் பரஸ்பர இராணுவ உதவியை
உறுதியளிக்கும் ஒரு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது இப்போது சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய
ஆதாரமாகும்.
மக்ரோனுடனான செய்தியாளர் சந்திப்பில், நெதன்யாகு "ஹமாஸ், ஈரான் மற்றும் ஹவுத்திகள்" மற்றும் ஹெஸ்பொல்லா
ஆகியவற்றை உள்ளடக்கிய "தீய அச்சுக்கு" எதிராக போர் தொடுக்கப்போவதாக
அச்சுறுத்தினார். காஸா மீதான ஐ.டி.எஃப் தரைவழி ஆக்கிரமிப்பிற்கு எதிராக
தலையிட்டால் "பயங்கரமான விளைவுகள்" இருக்கும் என்றும்
"ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பேரழிவு கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்"
என்றும் கூறிய அவர், ஐ.டி.எஃப்
பாரிய லெபனான் சிவிலியன் உயிரிழப்புகளை தூண்டும் என்று சுட்டிக்காட்டினார்:
"(ஹிஸ்புல்லா) ஹமாஸ் போன்ற சிவிலியன் மக்களில் தங்களை உட்பொதித்துக்
கொண்டிருப்பதால், நாங்கள்
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்."
மக்ரோன் அரசாங்கமும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளும் ஒட்டுமொத்தமாக அண்மைக்-கிழக்கு
முழுவதிலும் உள்ள மக்களுக்கு எதிராக கூட்டுத் தண்டனைக்கான இனப்படுகொலை முறைகளால்
தொடுக்கப்படும் ஒரு போரை ஆதரிக்கின்றன. ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர்
மற்றும் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு ஆகியவற்றிற்குப் பின்னர், நேட்டோ சக்திகளால்
பிராந்தியத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவகாலனித்துவ போர்களின் இறுதி
விளைபொருளாகும். நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இடைவிடாத
ஆக்கிரமிப்பு, 20 ஆம்
நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர், உலகை ஒரு மூன்றாம் உலகப் போரில் மூழ்கடித்து
வருகிறது.
வெட்கமின்றி பொய் கூறும் மக்ரோன், மத்திய கிழக்கு முழுவதும் இராணுவ விரிவாக்கத்திற்கான தனது அரசாங்கம் மற்றும் நேட்டோ கூட்டணியின் ஆதரவை பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராக சித்தரித்தார். "போராட்டம் இரக்கமின்றி நடத்தப்பட வேண்டுமே தவிர, விதிகள் இல்லாமல் நடத்தப்படக் கூடாது. பயங்கரவாதிகள், போர் விதிகளை மதிக்கும், மனிதாபிமான அணுகலை உறுதி செய்யும் ஜனநாயக நாடுகள் மீது போர் தொடுக்கும் ஜனநாயக நாடுகள் நாம் காஸாவிலோ அல்லது வேறு எங்கும் பொதுமக்களை குறிவைக்காத ஜனநாயக நாடுகள் நாங்கள், என்ற பொய்யை அவிழ்த்துவிட்டார்.
காஸாவிற்கு எதிராக ஒரு "இராணுவ மற்றும் அசைக்க முடியாத பதிலை"
பரிந்துரைக்கும் மக்ரோன், பாலஸ்தீன மக்களுக்கு "ஒரு நிலப்பரப்பையும் ஒரு
அரசையும்" வழங்குவதற்காக "பாலஸ்தீனியர்களுடன் ஒரு அரசியல் முன்னெடுப்பை
ஒரு தீர்க்கமான மறுதொடக்கம்" செய்ய விரும்புவதாகக் கூறினார்.
உண்மையில், மக்ரோன் காஸாவின்
ஒடுக்கப்பட்ட, பெரும்பாலும்
பாதுகாப்பற்ற மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு போரை பாராட்டினார். இஸ்ரேல் 2007
முதல் அதன் முற்றுகை சட்டவிரோதமானது என்ற ஐ.நா.வின் தீர்ப்புகளை மீறி காஸாவை
முற்றுகையிட்டுள்ளதுடன், மோதலின் முதல் இரண்டு வாரங்களில், வறிய பகுதிகளுக்கான அனைத்து நீர், உணவு மற்றும் எரிபொருள்
ஆகியவற்றையும் தடுத்தது. கடந்த வாரம் அஹ்லி அரபு மருத்துவமனை மீது இஸ்ரேலிய
குண்டுவீச்சு, நூற்றுக்கணக்கான
பொதுமக்களின் உயிர்களை பலி வாங்கியது, காஸா மீதான போரின் காட்டுமிராண்டித்தனமான தன்மையை
அம்பலப்படுத்துகிறது.
காஸாவின் 35 மருத்துவமனைகளில் 12 மருத்துவமனைகள் உட்பட, அதன் 72 சுகாதார வசதிகளில் மூன்றில் இரண்டு பங்கு
மின்சாரம் இல்லாததால் சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாக உலக சுகாதார
அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) நேற்று தெரிவித்தது. இன்குபேட்டர்களில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டால் குறைப்பிரசவக் குழந்தைகள் உயிரிழக்கும் மருத்துவமனைகள்
உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிகபட்சம் ஒரு நாள் மின்சாரம்
மிச்சமிருக்கிறது.
மக்ரோனே இந்த உண்மையை சுருக்கமாக ஒப்புக்கொண்டார், அவரும் நெதன்யாகுவும் "நீண்ட நேரம் பேசினார்கள் மருத்துவமனைகளில் மின்சார விநியோகத்தை மீண்டும் நிறுவுவது பற்றி, அதை போருக்கு பயன்படுத்த
முடியாது."
எவ்வாறெனினும், அத்தகைய
அறிக்கைகள், நெதன்யாகுவை
ஆதரிப்பதால், அவர்
பொதுமக்கள் மீது போர் தொடுக்கிறார் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச்
செய்கிறார் என்பதை பிரெஞ்சு அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது என்பதை மட்டுமே
தெளிவுபடுத்துகிறது. IDF போர் விதிகளை மதிக்கிறது மற்றும் காஸாவிற்கு மனிதாபிமான
அணுகலை வழங்குகிறது என்று மக்ரோன் வலியுறுத்தும் நிலையில், அவர் உண்மையில் பிரான்ஸ் மற்றும் உலக மக்களுக்கு
வேண்டுமென்றே பொய் சொல்கிறார்.
காஸாவில் வசிக்கும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு
வெளியேற சட்டவிரோத உத்தரவை பிறப்பித்துள்ள நெதன்யாகுவை அங்கீகரிப்பதன் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதியை
விரும்புவதாக மக்ரோனின் கூற்று அபத்தமானது. உண்மையில், 20 ஆம் நூற்றாண்டின்
ஐரோப்பாவின் பாசிச
அரசாங்கங்கள் எளிதில் புரிந்துகொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலை மற்றும்
இனச்சுத்திகரிப்பு முறைகள் மூலம் பாலஸ்தீனிய பிரச்சினையை "தீர்க்கும்"
ஒரு முயற்சியை அவர் பாதுகாக்கிறார்.
இது அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும்
சர்வதேச அளவில் காஸா போருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களின் அலையைத் தூண்டியுள்ளது. காஸாவிற்கு
எதிரான கொடூரமான தாக்குதலை நிறுத்துவதற்கும், மூன்றாம் உலகப் போரில் ஏகாதிபத்திய சக்திகளின்
கீழ்நோக்கிய சுழலைத் தடுப்பதற்கும் ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ
அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது
அவசியமாகும்.
இதில், "செல்வந்தர்களின் ஜனாதிபதி" என்று பரவலாக வெறுக்கப்படும் ஒரு வங்கியாளரான
மக்ரோனுடன் எந்த அரசியல் சமரசங்களும் இருக்க முடியாது. இந்த வசந்தகாலத்தில் அவரது
பெரிதும் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள்
மற்றும் வேலைநிறுத்தங்களைத் தாக்குவதற்கு தனது கலகக் காவல்துறையை அனுப்பியதன்
மூலம் அவர் வெளிப்படுத்தியபடி, மக்ரோன் அரசாங்கம் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவும்
நனவுடனும் ஆட்சி செய்கிறது. சமூக செல்வத்தை தொடர்ந்து போர் செலவினங்களுக்கு
திருப்பிவிடுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஒரு பேரழிவுகரமான உலகளாவிய போரை நிறுத்துவதற்கும், அவரது அரசாங்கத்தை கவிழ்க்க
தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.
https://www.wsws.org/en/articles/2023/10/25/ikfo-o25.html
(தமிழில்:
தாஹா முஸம்மில்)
No comments:
Post a Comment