US imperialism is responsible for the current instability in the world
லெபனானின் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லாஹ்
அமைப்பின் பொதுச் செயலாளர் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு மற்றும்
இராணுவ பிரசன்னம் பாதுகாப்பின்மை, நெருக்கடிகள் மற்றும் கொந்தளிப்புக்கு முக்கிய
காரணம் என்று கண்டித்தார்.
லெபனான் தலைநகர்
பெய்ரூட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை நேரலையாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
போது சையத் ஹசன் நஸ்ரல்லா, மறைந்த முஸ்லிம் அறிஞர் ஷேக் அஃபிஃப் அல்-நபுல்சியின்
நினைவாக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"அமெரிக்காவின் தலையீட்டுக் கொள்கைகள் காரணமாக வாஷிங்டன்
அனைத்து விவகாரங்களிலும் அப்பட்டமாக தலையிட முயல்வதுதான் பிராந்திய துயரங்களுக்கு
மூல காரணம். அமெரிக்க மேலாதிக்க கலாச்சாரம் பிரச்சினையை மேலும்
அதிகரித்துள்ளது" என்றார்.
பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போன்ற
நாடுகளில் அதன் தலையீடு காரணமாக ஏற்பட்ட பாரிய அழிவுகளை உலகு நன்கு அறியும்.
சிரியாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய
கூட்டாளிகளும் ஒருதலைப்பட்சமாக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை கண்டனம் செய்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர், சிரியாவின் மறுசீரமைப்பு
முயற்சிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்ற எந்தவொரு தனிநபரையும் வணிகத்தையும்
குறிவைக்கும் சீசர் சட்டம் 2019 இல் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால் டமாஸ்கஸ்
அரசாங்கத்திற்கு வெளிநாட்டு மனிதாபிமான உதவி தேவைப்பட்டிருக்காது என்று
வலியுறுத்தினார்.
சமூக ஆர்வலரும் அரசியல்
விமர்சகருமான மசூத் ஷட்ஜாரே, மேற்கு ஆசியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தற்போதைய ஸ்திரமின்மைக்கு அமெரிக்காவே முக்கிய காரணமாக உள்ளது
என்று அண்மையில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
"கூடுதலாக, அமெரிக்க
ஆக்கிரமிப்பு படைகள் சிரிய அரசாங்கத்தை யூப்ரடீஸ் ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள
நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை அடைவதைத்
தடுத்து, இப்பகுதியில் உள்ள எரிசக்தி வளங்களை தீவிரமாக
சூறையாடுகின்றன" என்று நஸ்ரல்லா குற்றம்சாட்டினார்.
யேமன் மக்களின்
துன்பங்களுக்கு அமெரிக்காவே நேரடிப் பொறுப்பு என்றும், மோதலால்
பாதிக்கப்பட்ட அந்த வறிய அரபு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த்துவதை நோக்கமாகக் கொண்ட
எந்தவொரு முன்முயற்சியையும் அது தடுத்து வருகிறது என்றும் நஸ்ரல்லா
குறிப்பிட்டார்.
ஈராக்கை
ஆக்கிரமித்து அடித்தள கட்டுமானம் அனைத்தையும் அழித்து துவம்சம் செய்தது.
இந்நிலையில் ஈராக்கிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான இயற்கை எரிவாயு மற்றும்
மின்சாரம் போன்றவற்றை ஈரானே கடன் அடிப்படையில் வழங்கி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. இவ் இறக்குமதி தொடர்பாக ஈரானுக்கு ஈராக் செலுத்த வேண்டியுள்ள
பல பில்லியன் டாலர் கடனை செலுத்த அனுமதிக்காது அமெரிக்கா தடுத்துவருகிறது.
"பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் லெபனான் உள்விவகாரங்களில் அனாவசியமாக தலையிட்டு அதிகாரிகளை சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ள அல்லது கைவிடுமாறு கட்டாயப்படுத்துகிறது. லெபனான் அரசாங்கம் முதலில் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க அழுத்தத்தை எதிர்க்க வேண்டும்," என்று ஹிஸ்புல்லாஹ் தலைவர் கூறினார்.
2020 பெய்ரூட் துறைமுகம் வெடிப்பு
ஆகஸ்ட் 4, 2020
அன்று பெய்ரூட்
துறைமுக களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு லெபனானின் தலைநகரில் பெரும் அழிவை
ஏற்படுத்தியது. இதில் 218 பேர் கொல்லப்பட்டனர், 7,000 பேர் காயமடைந்தனர் மற்றும் சுமார் 300,000
பேர்
இடம்பெயர்ந்தனர். குண்டுவெடிப்பின் முதல் கணங்களில் இருந்தே, சில ஊடகங்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மீது பழியை சுமத்த முயன்றன. மேற்கத்தேய
ஊடகங்கள் மற்றும் மேற்கிற்கு அடிமைப்பட்ட உள்நாட்டு ஊடகங்களும் உண்மையை வெளிக்கொண்டு
வராமல் இந்த வழக்கை அரசியலாக்கின..
"வெடிப்பைச் சூழ்ந்துள்ள அனைத்து சூழ்நிலைகளும்
கண்டறியப்படாததற்கான உண்மையான காரணம், சில தரப்பினர்
இந்த விஷயத்தை பிராந்திய அரசியல் நிகழ்வுகளுடன் இணைக்க முயன்றதாகும்" என்று
நஸ்ரல்லா கூறினார்.
தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் மோதல்
ஒரு காலத்தில், பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த
குண்டுவெடிப்புக்கு ஹிஸ்புல்லாவை குற்றம் சாட்டிய ஊடகங்கள் இப்போது தெற்கு லெபனான்
துறைமுக நகரமான சிதோனுக்கு அருகிலுள்ள பாலஸ்தீன அய்ன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில்
கொடிய மோதல்கள் வெடித்ததற்கு ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் மீது
குற்றம் சாட்டுகின்றன என்பதையும் நஸ்ரல்லா எடுத்துக்காட்டினார்.
"முகாமில் நடந்த சண்டைக்கு நாங்கள் பொறுப்பல்ல. அதற்கும்
எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நடக்கும் மோதல்களை நாங்கள் கடுமையாக
எதிர்க்கிறோம், இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்க்க எம்மால் முடிந்த
அனைத்தையும் செய்கிறோம்" என்று ஹிஸ்புல்லா தலைவர் கூறினார்.
பாலஸ்தீன முகாமில் எதிரெதிர் பிரிவுகளுக்கு இடையிலான
மோதல்கள் சுமார் 12,000 குழந்தைகள் உட்பட 20,000 குடியிருப்பாளர்களை
இடம்பெயர்த்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் (Save the
Children) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள பாலஸ்தீன
அகதிகள் முகாமில் பயங்கர சண்டை நடந்து வரும் நிலையில், எதிரெதிர் பிரிவினர்
நாட்டினதும் மக்களினதும் நண்மைக்கருதி சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று
ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
அய்ன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் சனிக்கிழமை பிரதான
பிரிவான ஃபத்தாவைச் சேர்ந்த போராளிகளுக்கும் பிற பாலஸ்தீனிய குழுக்களின்
உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருந்து குறைந்தது 13 பேர்
கொல்லப்பட்டதாக முகாமில் உள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
புதன்கிழமை இரவு இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து ஒரு பலவீனமான போர்நிறுத்தம் நீடிக்கிறது என்று பாதுகாப்பு வட்டாரங்கள்
தெரிவித்தன.
ஈரானின் வெளியுறவு
அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, அதிக மக்கள் தொகை
கொண்ட அகதிகள் முகாமில் போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தியுள்ளார், அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு கட்டுப்பட
வேண்டும் என்று கூறினார்.
"பாலஸ்தீனத்திற்கு
முன்னெப்போதையும் விட போராட்ட அணிகளுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தேவை, பாலஸ்தீனிய
குழுக்கள் விழிப்புடன் இருப்பதும், பாலஸ்தீன மக்களுக்கு அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக
இருக்கும் சியோனிச எதிரிக்கு எதிராக போராடுவதற்கு தங்கள் சக்தியையும் வளங்களையும்
பயன்படுத்துவதும் அவசியம்" என்று கனானி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும், இஸ்ரேல் அதன்
ஆக்கிரமிப்பை முற்றிலுமாக கைவிடுவதற்கும், அனைத்து அகதிகளையும் அவர்களின் பூர்வீக நிலங்களில்
மீள்குடியேற்றுவதற்கும், அல்-குத்ஸை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான, ஒருங்கிணைந்த
பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கும் தேவையான நிலைமைகளை உருவாக்குமாறு கனானி
பாலஸ்தீனியர்களை வலியுறுத்தினார்.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment