The fascinating city of Shiraz
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு பயணம் மேற்கொள்ளும் எவரும்
தவறாது விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் ஷிராஸ் நகரமும் ஒன்றாகும். ஈரானின்
தென்மேற்கில் கோஷ்க் பருவகால ஆற்றின் அருகில், அழகே உருவான இந்த நகரம் அமைந்துள்ளது.
ஷிராஸ் ஒரு மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
பிராந்திய வர்த்தக மையமாகவும் இருந்து வருகிறது.
ஷிராஸ் நகரம் அதன் வரலாற்று, கலாச்சார
முக்கியத்துவம் மற்றும் அதன் தனித்துவமான அழகு காரணமாக ஈரானில் மே 5 ஆம் திகதி ஷிராஸ் தினமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஷிராஸ், உலகப் புகழ்பெற்ற பாரசீக மகா கவிகளான ச'அதி மற்றும் ஹாபிஸின் நகரமாகவும், இந்த மண்ணின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு சிறந்த
பின்னணியைக் கொண்டுள்ளதன் காரணமாகவும் ஈரானியர்களிடையே
ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது.
ஷிராஸ்
கவிஞர்களின், இலக்கிய நகரம், பூக்களின்
நகரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பாரசீக மொழியில் " ஷீர்"
என்ற வார்த்தையின் அர்த்தம் "சிங்கம்", ஆனால்
அதற்கு "பால்" என்றும் பொருள் உண்டு. நகரத்தில் காணக்கூடிய பல
தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் காரணமாக இது ஈரானியர்களால் தோட்டங்களின் நகரமாக
கருதப்படுகிறது.
ஈரானின் வரலாற்று பெருமை மிக்க நகரங்களில் இது
ஒன்றாகும். ஷிராஸ் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு
விருந்தளிக்கும் பல பூங்காக்கள் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு
கண்கவர் நகரம்.
கவிதைகளின் நகரம், ஆரஞ்சு மற்றும்
வாசனைத்திரவியங்களின் நகரம் என்று நன்கு அறியப்பட்ட ஷிராஸ், உலக கைப்பணிப்
பொருட்கள் கவுன்சிலின் மதிப்பீட்டிற்குப் பிறகு, யுனெஸ்கோவின் உலக நகரங்களின் பட்டியலில், கைப்பணிப் பொருட்களின் உலக நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய ஷிராஸ் தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும்
இந்நாளில் ஷிராஸ் நகராட்சியால் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சில
உள்ளூர் இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் மற்றும் பாரம்பரிய
மற்றும் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவார்கள், அந்த வழக்கம் இப்போதெல்லாம் அருகிவிட்டன. கிராமப்புறங்களில்
இருந்து வரும் பெண்கள் சிறப்பு ஆடைகளை அணிந்து பார்வையாளர்களுக்கு பாரம்பரிய
உணவுககளை வழங்குவார்கள்.
இட அமைவு
ஷிராஸ் ஈரானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும் மற்றும் ஃபார்ஸ் மாகாணத்தின்
மையத்தில் உள்ள மிக முக்கியமான நகரமுமாகும். இது ஈரானின் தென்மேற்கில் ஜாக்ரோஸ்
மலைப் பகுதியில் அமைந்துள்ளது, இம்மலைத்தொடர்
ஷிராஸின் மூலோபாய இருப்பிடத்திற்கு மிகவும் முக்கியமான பாதுகாப்பாகும்.
சரித்திர பின்னணி
கிபி 7 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதிக்கு முன்னர் அதன் இருப்பு பற்றிய உறுதியான பதிவு எதுவும் இல்லை, ஆனால் 1933 மற்றும் அதற்கு பிறகு நடத்தப்பட்ட அகழ்வாய்வின் போது சில
தொல்பொருள் கண்டுபிடிப்புகள், மக்கள் ஷிராஸில்
கிமு 6 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியில், இஸ்லாத்திற்கு
முந்தைய காலத்தில், குடியேறியிருக்கலாம்
என்பதைக் குறிக்கிறது.
நவீன நகரம் கி.பி. 693 இல் உமையா ஆட்சி
காலத்தில் நிறுவப்பட்டது அல்லது மீட்டெடுக்கப்பட்டது மற்றும் 9 மற்றும் 10 மற்றும் 11 ஆம்
நூற்றாண்டுகளில் முறையே ஈரானிய ஸபாவித் மற்றும் புயீத் வம்சங்களின் கீழ்
முக்கியத்துவம் பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. 1750 முதல் 1800 வரை ஸாண்ட் வம்ச
ஆட்சியின் போது இது பாரசீகத்தின் தலைநகராக இருந்தது.
பெயர் வந்த பின்னணி
வரலாற்று ஆவணங்களின்படி, கிமு 2000 தேதியிட்ட எலமைட் களிமண் சுவர்களில்
எழுதப்பட்ட எழுத்துக்களால் 'ஷிராஸ்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று
அறியமுடிகிறது. ஷிராஸ் என்ற
பெயர், நகரின் கிழக்கே, கிபி 2ஆம் நூற்றாண்டின் சசானிய ஆட்சிக்கால இடிபாடுகளில் காணப்படும் களிமண்
முத்திரைகளிலும் காணப்படுகிறது. ஷிராஸைச் சேர்ந்த
சில வரலாற்றாசிரியர்கள், ஷிராஸ் என்ற
பெயர், மகா கவிஞர் பிர்தௌஸியினது ஷாஹ்னாமாவின் படி, உலகின் மூன்றாவது ஷா (மன்னர்) தஹ்முராஸின் மகனின் பெயரில்
இருந்து பெறப்பட்டது என்று கருதுகின்றனர்.
காலநிலை
ஷிராஸில் ஆண்டு சராசரி வெப்பநிலை 18°C மற்றும் இந்த நகரத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 337 மிமீ ஆகும். அதன் கோடை காலம் சூடாக இருக்கும், ஆனால் இலையுதிர் மற்றும் குளிர்காலம் அவ்வளவு
குளிராக இருக்காது.
கலாச்சாரம்
ஷிராஸ் ஒரு வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளது. ஈரானில்
கவிஞர்கள் பிறந்த மண் எனவும், இலக்கியம்,
மலர் தோட்ட நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஷிராஸ் என்பது காதல் இலக்கியத்தின் நகரம் மற்றும் பாரசீக தோட்டங்களின் முதல் மாதிரிகளின்
தோற்றம் அதன் மக்களின் விருந்தோம்பல் மற்றும் அரவணைப்புக்கு ஒரு தனித்துவமான
எடுத்துக்காட்டு.
பல பிரபலமான ஈரானிய கவிஞர்கள் மற்றும் தத்துவஞானிகள் ஷிராஸில் பிறந்தவர்கள்
ஆகும், ஷிராஸை பிரபலமாக்குவதில்
அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர், இதில் சா'அதி, ஹஃபீஸ் மற்றும் முல்லா சத்ரா ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும்.
13 ஆம் நூற்றாண்டில், விஞ்ஞானம், கலாச்சாரம்
மற்றும் கலையின் செழிப்பு காரணமாக ஷிராஸ் அறிவியல் நகரம் (தார்-அல் இல்ம்) என்று
அறியப்பட்டது.
மரத்தாலான கைவினைப் பொருட்கள், ஷிராஸில் உள்ள
மற்ற எல்லா கைவினைப் பொருட்களையும் விட மிகவும் பிரபலமானவை, மட்பாண்டங்கள், மொசாயிக் பையான்சு-(அலங்கார மட்பாத்திரம்), பீங்கான் கைவினைப்பொருட்கள், வெள்ளி வேலைப்பாடுகள் மற்றும் சேஸிங் போன்ற உலோக வேலைகள்,
கையால் நெய்த பொருட்கள் மற்றும் பாய் நெசவு,
பாரம்பரிய கண்ணாடி பொருட்கள், மற்றும் சிற்றோவியம் ஆகியவற்றிற்காக ஷிராஸுக்கு
2020 ஆம் ஆண்டில் ஈரானின்
மூன்று நகரங்கள் மற்றும் கிராமங்களுடன் கைவினைப்பொருட்களுக்கான உலக நகரம் என்ற
அந்தஸ்தை வழங்கின.
விஜயம் செய்வதற்கு உகந்த காலம்
ஷிராஸுக்குச் விஜயம் செய்வதற்கு உகந்த காலம் மே மாதம் ஆகும். தெருக்களில்
ஆரஞ்சு, மலர்கள், வாசனை திரவியங்கள் நிறைந்திருக்கும். ஷிராஸின்
காலநிலை பொதுவாக இந்த மாதத்தில் ரம்மியமானதாக இருக்கும். ஈரானின் மிக அழகான
நகரங்களில் ஒன்றான ஷிராஸுக்கு சென்றால், நகரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் ஆராய குறைந்தது மூன்று
அல்லது நான்கு நாட்கள் ஆகும்.
சுற்றுலா தலங்கள்
ஒவ்வொரு ஆண்டும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை
ஈர்க்கும் அழகான மற்றும் அழகிய இடங்களைக் கொண்ட ஈரானின் மிக முக்கியமான சுற்றுலா
மையங்களில் ஒன்றாக ஷிராஸ் கருதப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க நகரமான
ஷிராஸில் நீங்கள் காணக்கூடிய மிகவும் பிரபலமான இடங்களின் பட்டியல் இங்கே.
ஷா செராக்:
ஷா செராக் என்பது ஷிராஸில் உள்ள ஒரு புனித நினைவுச்சின்னமாகும். இது இமாம்
மூசா காசிமின் மற்றும் இமாம் ரெஸாவின் சகோதரர்களான அஹ்மத் மற்றும் முஹம்மது
ஆகியோரின் கல்லறையாகும். இது 12 ஆம் நூற்றாண்டில் ஃபார்ஸின் அடபகானின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.
நரேன்ஜஸ்தான் அல்லது கவாம் தோட்டம்:
இது ஷிராஸில் உள்ள ஒரு பாரம்பரிய மற்றும் வரலாற்று இல்லமாகும், இது கஜர் சகாப்தத்திற்கு முந்தையது. புளிப்பு
ஆரஞ்சு மரங்கள் ஏராளமாக இருப்பதால், இது நரேன்ஜஸ்தான் என்று அழைக்கப்படுகிறது.
ச'அதி கல்லறை
ச'அதி கல்லறை தெற்கு
ஷிராஸில் அமைந்துள்ளது. இது ஈரானின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.
கல்லறை முதன்முதலில் 13 ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்டது. இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டில்
அழிக்கப்பட்ட பிறகு, இன்றைய கட்டிடம் 1950
களில் கட்டப்படும் வரை அது சிதைந்த நிலையிலேயே
இருந்தது. பல பாரசீக கூறுகள் அதன்
கட்டிடக்கலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தேசிய பாரம்பரிய தளமாகவும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும்
இருந்து ஏராளமான இலக்கியவாதிகள் மற்றும் அறிஞர்கள் மகாகவி ச'அதியை நினைவுகூர ஏப்ரல் 20 அன்று இவ்விடத்தில் கூடுகிறார்கள்.
எராம் நந்தவனம்:
இது மத்திய அரசால் அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்பு கஷ்காய் பழங்குடியினரின்
தலைவர்களுக்கு சொந்தமான ஒரு வரலாற்று பாரசீக நந்தவனமாகவும். ஃபார்ஸ் மாகாணத்தில்
உள்ள கோஷ்க் ஆற்றின் வடக்கு கரையில் இது அமைந்துள்ளது.
இது வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருப்பதால் பொதுமக்கள் பார்வைக்காக
திறந்துவிடப்பட்டுள்ளது. இது உலக பாரம்பரிய தளமாகும், ஈரானின் கலாச்சார பாரம்பரிய அமைப்பால்
பாதுகாக்கப்படுகின்றன.
ஹாபிஸ் ஷிராஸியின் கல்லறை:
ஹாபிஸின் கல்லறை, ஈரானின் ஷிராஸின்
வடக்கு விளிம்பில் புகழ்பெற்ற பாரசீக கவிஞர் நினைவாக எழுப்பப்பட்ட இரண்டு நினைவுக்
கட்டிடங்கள் ஆகும்.
கல்லறை, அதன் தோட்டங்கள்,
மற்றும் சுற்றியுள்ள பிற புகழ்மிக்க நபர்களின்
நினைவுச்சின்னங்கள் ஆகியவை ஷிராஸில் சுற்றுலாவின் மையமாக உள்ளன.
கரீம் கான் கோட்டை
ஆர்க் ஏ கரீம் கான் என்பது ஷிராஸ் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். இது
ஜாண்ட் வம்சத்தின் போது கட்டப்பட்டது. இது கரீம் கானின் பெயரிடப்பட்ட இது அவரது
தங்குமிடமாக இருந்தது. இது செவ்வக வடிவத்தில் ஒரு இடைக்கால கோட்டையை
ஒத்திருக்கிறது.
நசீர் அல் முல்க் மஸ்ஜித்:
இது 19 ஆம் நூற்றாண்டின்
இறுதியில் கஜார் வம்சத்தின் போது கட்டப்பட்ட ஷிராஸில் உள்ள மிக அழகான கட்டிடக்கலை
கொண்ட மஸ்ஜித் ஆகும். இது ஈரானின் மிகவும் தனித்துவமான மற்றும் வித்தியாசமான
மஸ்ஜிதுகளில் ஒன்றாகும். இது அதன் வண்ண கண்ணாடிகளுக்கு பிரபலமானது மற்றும் அதன் ஓடுகள்
அவற்றின் வகைகளில் தனித்துவமானது.
பெரும்பாலும் "பிங்க் மசூதி" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் ஓடுகள் இளஞ்சிவப்பு ரோஜா
நிறத்தால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன, இது "வண்ணங்களின் மசூதி", "ரெயின்போ மசூதி" அல்லது "கலிடோஸ்கோப் மசூதி"
என்றும் அழைக்கப்படுகிறது.
அஃபிஃப்-அபாத் தோட்டம்: Afif-Abad Garden:
இது 1863 இல் கட்டப்பட்ட
ஒரு அருங்காட்சியக வளாகமாகும். இது ஒரு முன்னாள் அரச மாளிகை, வரலாற்று ஆயுதங்களின் அருங்காட்சியகம் மற்றும்
ஓர் அழகிய தோட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன.
வாகில் மஸ்ஜித்:
ஜாண்ட் காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் மிக முக்கியமான கலை மற்றும் வரலாற்று
கட்டிடங்களில் ஒன்று வாகில் மஸ்ஜித். சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிக்கிழமை
தொழுகைக்கான இடமாக இது பயன்படுத்தப்பட்டது. இந்த கட்டிடத்தில் உள்ள ஓட்டு
வேலைப்பாடுகள் 12 ஆம் நூற்றாண்டில்
ஈரானிய ஓட்டு தொழிலாளர்கள் மற்றும் ஓவியர்களின் கைவண்ணத்தை வெளிப்படுத்தும் சிறந்த
ஒன்றாகும்.
வாகில் சந்தை:
இது நகரின் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள ஷிராஸின் முக்கிய சந்தை ஆகும். இந்த
சந்தை சுமார் 200 ஆண்டுகளுக்கு
முன்பு கரீம் கான் ஜண்ட் (ஈரானிய மன்னர்) உத்தரவின் பேரில் கட்டப்பட்டது. இது
அழகான முற்றங்கள், வணிகர்கள்,
பொது குளியல் இல்லங்கள் மற்றும் பழைய கடைகள்
ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது அனைத்து
வகையான பாரசீக விரிப்புகள், மசாலாப்
பொருட்கள், செப்பு கைவினைப்
பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்களை வாங்குவதற்கு சிறந்த இடங்களாகக்
கருதப்படுகின்றன.
வாகில் குளியல்:
வாகில் மஸ்ஜிதுக்கு அடுத்துள்ள ஷா சதுக்கத்தில் அவரது உத்தரவின் பேரில்
கட்டப்பட்ட கரீம் கான் ஜண்ட் நினைவுச் சின்னங்களில் ஒன்றான ஷிராஸில் உள்ள மிகவும்
பிரபலமான குளியல் இதுவாகும். இந்த பெரிய குளியலறையில் Zand இன் கட்டிடக்கலையின் மிகவும் மேம்பட்ட கட்டிட அம்சங்கள்
உள்ளன. இந்த குளியலறையின் சுவாரசியமான பகுதிகளில் ஒன்று "ஷாஹ்னேஷின்"
என்ற சிறப்பு இடமாகும், இது மன்னருக்கு
விசேடமாக ஒதுக்கப்பட்ட இடமாகும். வாகில் பாத் ஒரு உணவகமாகவும், பின்னர் ஷிராஸ் மக்களின் கலாச்சாரம் மற்றும்
மரபுகளை அடையாளம் காண, இனவியல்
அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது.
குர்ஆன் வாயில்:
இது நகரின் வடகிழக்கு நுழைவாயிலில், மார்வதாஷ்ட் மற்றும் இஸ்பஹான் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று
வாயில். ஜாண்ட் வம்சத்தின் காலத்தில், அது நிறைய சேதங்களைச் சந்தித்தது, பிறகு அது புனரமைக்கப்பட்டு அதன் மேல் ஒரு சிறிய அறை கட்டப்பட்டது, அதில் சுல்தான் இப்ராஹிம் பின் ஷாருக்கு
ரேகானியின் கையால் எழுதப்பட்ட குர்'ஆன் பிரதி
வைக்கப்பட்டது. வாயில்கள் ஊடாக செல்லும் பயணிகள் ஷிராஸிலிருந்து தங்கள் பயணத்தைத்
தொடங்கும்போது புனித குர்'ஆனின்
ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள் என்று நம்பப்பட்டது.
பாரம்பரிய உணவுகள்
ஈரானில் உள்ள மற்ற நகரங்களைப் போலவே, ஷிராஸிலும் அதன் சொந்த பாரம்பரிய உணவு வகைகள் உள்ளன. 'ஷிராஸி சாலட்' என்பது ஈரான் முழுவதும் கிடைக்கும் ஒரு சுவையான மற்றும் பிரபலமான சாலட் ஆகும், இது வெள்ளரி, தக்காளி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
‘கலம் போலோ ஷிராஸி’
‘கலம் போலோ ஷிராஸி’ என்பது ஷிராஸில் மட்டுமே சமைக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவு. இது அரிசி, மீட்பால்ஸ், நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ் மற்றும் வேறு சில காய்கறிகள் மற்றும் உடன் மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
‘ஆஷே சப்ஜி’
‘ஆஷே சப்ஜி’ என்பது மூலிகைகள், காய்கறிகள் மற்றும் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகையான சூப்.
ஷீர்ஸாயி பாலூதா
‘ஷிராஸி ஃபலூதா’ என்பது ஒரு சர்பத் போன்ற ஒரு பாரம்பரிய ஈரானிய குளிர் பானம் ஆகும். இது சர்க்கரை மற்றும் ரோஸ் வாட்டரைக் கொண்ட அரை-உறைந்த சிரப்பில் மெல்லிய வெர்மிசெல்லி அளவிலான நூடுல்ஸைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஃபலூதா பெரும்பாலும் எலுமிச்சை சாறுடன் பரிமாறப்படுகிறது.
தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment